பதின்பருவம் மர்ம விளையாட்டல்ல
நன்றி – குமுதம்
09/09/2014
ஒரு மூன்று வருடங்கள் இருக்கும். வார நாள் ஒன்றின் களைத்துப்போன இரவு. படப்பிடிப்பை முடித்துவிட்டு வழக்கம்போல நடுநிசி நெருக்கத்தில் வீடு திரும்பினேன். நான் அப்போது வசித்துக்கொண்டிருந்தது ஒரு மத்திய தர குடியிருப்பு. தாறுமாறாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் கோணங்களில் மனித மனங்களின் அன்றாட அலுப்பும் சோர்வும் தெரிந்தது. மல்லுக்கட்டி என் ஸ்கூட்டிக்கு ஒரு இடம்பிடித்து நிறுத்திவிட்டு இரண்டாம் மாடியில் இருந்த என் ஃபிளாட்டிற்கு படியேறிக் கொண்டிருந்தபோது என் மூச்சே எனக்கு பலமாக கேட்டது போல இருந்தது. கொஞ்சம் நிதானித்துப் பார்த்ததில், வேக வேகமாக இரையும் வேறு மூச்சுகளின் சத்தம். இருளை விலக்கி சற்று முற்றும் பார்த்ததில் படிகளின் தாழ்வாரத்தில் இரண்டு உருவங்கள் ஆவேசமாக முத்தமிட்டுக்கொண்டிருந்தன. சில நொடிகளில் வெளிச்சம் பழகியதில் சுவரில் சாத்தப்பட்டிருந்த பெண் என் எதிர் ஃபிளாட் பெண் போல இருந்தாள். பையன் யாரென தெரியவில்லை. அல்லது மேலும் உற்றுப்பார்க்க லஜ்ஜையாக இருந்தது. அடுத்த அடி எடுத்து வைக்கும்போது, என் ஹை ஹீல்ஸ் செருப்பு சத்தம் அவர்களுக்கு தொந்தரவாக இருக்குமோ என்று யோசித்துகொண்டே செருப்புகள் இரண்டையும் கழட்டி கையில் எடுத்துக்கொண்டு மிச்சமிருக்கும் படிகளைக் கடந்தேன். க்ரில் கேட்டைக் கூட சத்தமில்லாமல் திறந்து மூடிவிட்டு வெகு நேரமாக தூக்கத்திற்கு அழைத்துக்கொண்டிருந்த உடலைக் கட்டிலில் சாத்தினேன்.
காலையில் டம் டம் எனக் கதவு தட்டும் சத்தம், என் தலையணையை இடித்தது. காலிங் பெல்லுக்கு நான் முழித்திருக்கவில்லை. கீழ்வீட்டுப் பையன் ஃ ப்ளாட் அசோஷியேஷன் அவசர மீட்டிங் அறிவிப்பை சொல்லிவிட்டு, இன்னும் அரை மணி நேரத்தில் செக்ரட்டரி வீட்டுக்கு வர வேண்டும் என்றான். நான் ஒரு காஃபியை குடித்துவிட்டு செல்வதற்குள் செக்ரட்டரி வீட்டில் குடியிருப்புவாசிகள் எல்லாம் கூட்டமாக கூடிருந்தார்கள். ஒரு ஓரமாக இரவில் முத்தமிட்டுக்கொண்டிருந்த பெண்ணும் அருகில் ஒரு ஒடிசலான பையனும் குனிந்த தலையுடன் நின்றிருந்தார்கள். எத்தனை யோசித்தாலும் அந்தப் பையனை, 34 ஃப்ளாட்டுகள் கொண்ட என் குடியிருப்பில் நான் பார்த்த நினைவு வரவில்லை. ஆனால் குற்றவாளிகள் போல நின்றிருந்த அவர்களைப் பார்க்க அதிர்ச்சியாக இருந்தது. காலை பரபரப்பில் அலுவலகம் செல்லும் ஆயுத்தங்களில் அரை மனமாக பெரும்பாலோர் , அடுப்பில் பாதி சமையலும் அள்ளி முடித்த தலையுமாய் பெண்கள் , விஸ்தாரமான பேச்சொன்றின் முஸ்தீபுகளில் ரிட்டையரான பெரிசுகள் , அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்த நண்டு சிண்டுகள் என கலவையாக கூடியிருந்த கூட்டத்தில் ஒருவரையொருவர் பார்த்து ஹலோ சொல்லிக் கொள்ளகூட முடியாத இறுக்கம். பிள்ளைகள் அமெரிக்காவில் செட்டில் ஆகியும், ஃபிளாட் ஒனர்களிலேயே சீனியராகவும் இருந்த செக்ரட்டரி என்பவர் சற்று ஓங்கிய குரலில், “இந்தக் குடியிருப்புக்குன்னு ஒரு ஒழுக்கம் இருக்கு, இது டீசன்டான குடும்பங்கள் வாழற இடம்” என்று எதேதோ சொல்லிக்கொண்டு போனார். எனக்கு கடும் எரிச்சல் மூண்டது. அந்தப்பெண் கண்ணீர் விட்டுக் கொண்டும், பையன் அவமானத்தில் குறுகிப் போயும் நின்றார்கள். பெண்ணின் அம்மா இழவு விழுந்தது போல அரற்றிக்கொண்டிருந்தார். நைட்டியும் மேலே ஷால் போட்டுக் கொண்டும் நின்ற மற்ற அம்மாக்களும் முணுமுணுத்துக் கொண்டு நின்றார்கள். நாம் ஏன் ஃ பிளாட்டின் பொது ஏரியாவில் சிசி டிவி வைக்க கூடாது என்ற ரேஜ்சில் போய்க்கொண்டிருந்த விவாதத்தில் எனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச பொறுமையும் போய்க்கொண்டிருந்தது. இடைமறித்து “இப்ப இந்தப்பசங்க என்ன செஞ்சிட்டாங்கன்னு இப்படி பஞ்சாயத்தை கூட்டியிருக்கீங்க செக்ரட்டரி சார்” என்றேன். எல்லோரும் அதிர்ச்சியில் சட்டென அமைதியானார்கள். ” உங்களுக்கெல்லாம் என்னங்க இதுல பிரச்சினை? காலேஜ் போற வயசுல இந்த நாட்டை யாரு ஆளனும்னு ஓட்டுப் போட முடிவெடுக்கிறவங்க, யாருக்கு முத்தம் கொடுக்கணும்னு முடிவெடுக்க கூடாதா? இந்தப் பசங்களோட ப்ரைவசியில் தலையிடற உங்களைத் தான் இப்ப தண்டிக்கனும்” என்றவுடன், ஒரு அப்பா காரர் “நீ என்னமா பேசற, ஒரு ஒழுக்கம் வேணாம், பொது இடத்தில இப்படியா பண்றது?” என்று நியாயம் கேட்டார். “பொது இடத்தில் இவங்க என்ன கொலையா பண்ணாங்க, கிஸ் தான பண்ணாங்க? வீட்டிலயும் கெடுபிடி, ஸ்கூல் காலேஜ்லயும் கேர்ல்ஸ், பாய்ஸ்னு பிரிச்சு வைக்கிறீங்க, தப்பித் தவறி கோ எஜுகேஷனல சேர்த்தா ஆண் பெண் சாதாரணமா பேசினாலே பெனால்டி கட்ட சொல்றீங்க, விலக்கி வச்சு ஒருத்தரை ஒருத்தர் ஆணும் பெண்ணும் வெறிச்சு வெறிச்சு பார்க்க வைக்கிற உங்க போலித்தனமான ஒழுக்கம், கிடைச்சா பாய வைக்குது”. கூட்டத்தில் சுத்தமாக முணுமுணுப்பு அடங்கியது. அந்த பெண்ணின் அம்மாவின் அழுகை கூட அடங்கியிருந்தது.. “ஏம்மா இன்னைக்கு இதை செஞ்சவங்க நாளைக்கு இன்னும் வரம்பு மீறிப் போனா என்னமா பண்றது, அத அத அப்பப்ப கண்டிக்கனும்மா” என்றார் செக்ரட்டரி. ” பசங்களுக்கு சேஃப் செக்ஸ் சொல்லிக்கொடுத்து காண்டம் வாங்கிக்க சொல்லிப் பழக்காம கட்டப்பஞ்சாயத்து பண்ணினா தான் ஆபத்து. நீங்க இப்படி கூட்டம் கூடி இந்தப் பிள்ளைங்கள க்ரிமினல்ஸ் மாதிரி அவமானப்படுத்தறது பத்தாம்பசலித்தனம், திருந்த வேண்டியது அவங்க இல்லை, நீங்க தான் ” என்று சொல்லிவிட்டு அந்த கூட்டத்தில் இருந்து வெளியேறி விட்டேன். நம்ம பாரம்பர்யம் என்னாவாவது கலாச்சாரம் என்னவாவது என்ற வகையில் ஆளாளுக்குப் பேசிவிட்டு முத்தம் கொடுத்த அந்த பெண்ணின் “வகையறா லிஸ்டில்” என்னையும் சேர்த்துக் கண்டனங்களை தெரிவித்து விட்டு அந்தக் கூட்டம் களைந்ததாக பின்னர் கேள்விப் பட்டேன். வழியில் பார்க்கும்போதெல்லாம் எதிர்வீட்டுப் பெண் மட்டும் நன்றியுடன் பார்ப்பாள்.
நினைத்து பார்த்தால் ஆயாசமாக இருக்கிறது. எதற்கெடுத்தாலும், இந்தக்காலத்து பிள்ளைங்க சரியில்ல, ஒழுக்கம் இல்ல, கீழ்ப்படிதல் இல்ல, விளங்காத தலைமுறை, நாங்க எல்லாம் இந்த வயசில எப்படியிருந்தோம், எந்தப்பொண்ணை யாவது/பையனை யாவது ஏறெடுத்துப் பார்த்திருக்கிறோமா என்று பெற்றொர்கள் புலம்புவதும் அலுத்துக்கொள்வதும் அறியாமை என்று தான் சொல்ல வேண்டும். என் பதின்பருவத்தில் மொபைல் ஃபோன் இல்லை, இன்டர்நெட் இல்லை, வாட்ஸ் ஆப் இல்லை. ஆனாலும் செய்திகள் பரிமாறிக்கொண்டோம், முத்தமிட்டுக்கொண்டோம், காதலித்தோம். முத்தமிட்டவர்களையெல்லாம் காதலிக்கவும் இல்லை. காதலித்தவர்களோடு எல்லாம் பிள்ளைத்தாச்சியாகவும் இல்லை. திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்தபோது ஓடிப்போகவும் இல்லை. அப்போதும் பெற்றொர்கள் இதையே தான் புலம்பினார்கள். பெற்றோர்களாக இருப்பவர்கள் அவர்களுடைய டீன் ஏஜில் அவர்களுக்கிருந்த வாய்ப்புகளிலும் நிச்சயமாக பொதுவாக சொல்லப்படுகிற எல்லா வரம்புகளையும் மீறி இருப்பார்கள். வசையும் வாங்கித் தான் இருப்பார்கள். நிற்க. அப்புறம் எதற்காக ஆணையும் பெண்ணையும் மறைபொருளாக்கி மர்மப் படுத்தி வைத்திருக்க வேண்டும். அவரவர் சொத்தையும், சாதியையும், மதத்தையும் காப்பாற்றிக்கொள்ள அறிய வேண்டிய வயதில் இருக்கும் வயதில் இருக்கும் ஆணையும் பெண்ணையும் கௌரவம் / கலாசாரம் என்று பேசி பிரித்து வைப்பதற்கு பெயர் தலைமுறை இடைவெளியல்ல. அதிகார துஷ்பிரோயகம். பிள்ளைகள் உங்கள் வழியாக இந்த உலகத்திற்கு வந்திருக்கிறார்கள், ஆனால் அவர்கள் உங்கள் உடைமைகள் அல்ல என்பார் கலீல் கிப்ரான். வளரும் பருவத்தில், முக்கியமாக பதின்பருவங்களில் ஏற்படும் உடல் மாற்றங்களையும் உள்ளக்கிடக்கைகளையும் குறுகுறுப்புகளையும் அனுபவித்துக் கடக்கும் உரிமைகள் பிள்ளைகளுக்குரியது. மாறாக அவர்களை யங் அடல்ட்ஸ் (Young adults) ஆகப் பார்க்காமல் கொட்டகையில் கட்டிவைத்திருக்கும் ஆடு மாடுகள் போல பார்ப்பதால் வரும் நோய் தான் இளைய தலைமுறையை குறை சொல்லும் புலம்பல்.சமூகத்தில் ஜனநாயகம் வேண்டும் , குடும்பத்திற்குள் நான் ஹிட்லர் என்று சொல்லும் பெற்றோர் தாங்கள் நியாயவான்கள் தானா என்பதை பரிசீலிக்க வேண்டும். சரிபாதி சதவிகித தொகையில் ஜனிக்கும் ஆணும் பெண்ணும் வாழ்க்கையை பகிர்ந்து புரிந்து எதிர்கொண்டு வாழ்ந்து தானே ஆக வேண்டியிருக்கிறது. பாலியலை, உடலை, வேட்கையை கற்றுத் தராமல் தடுத்து, மூடி, கட்டுப்படுத்தி ஒடுக்கி வைப்பது எவ்வளவு பெரிய ஆரோக்கிய கேடு?
ஒரு மாற்றத்திற்கு, சுதந்திரமாக பிள்ளைகளை விட்டுப்பாருங்கள். அறிய வேண்டியதை அறிந்து கொண்டு வீடு வந்து சேர்வார்கள். கட்டுப்படுத்தி வைப்பதில் வளரும் வன்முறையும், குரோதமும், பொய்யும், புரட்டும் அகன்று விடும். ஈவ் டீசிங் இருக்காது. பேருந்துகளிலும், பொது இடங்களிலும், பெண்களை ஏதோ ஜூவில் (zoo) பார்ப்பது போல பார்த்துக்கொண்டு விசில் அடிப்பதும் சீட்டியடிப்பதுமாய் ஆண்பிள்ளைகள் நிற்க மாட்டார்கள். பாலியல் அத்துமீறல் நிச்சயம் குறையும். ஆணுக்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் மரியாதையாக இருக்கும் சமூகம் உருவாகும். அன்பு, காதல், நட்பு, காமம், எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவருக்கொருவர் மரியாதையாக இருப்பது தானே மனித நேயத்தின் அடிப்படை. சில வருடங்களுக்கு முன் கேரளத்து வயநாட்டில் “கனவு” என்ற ஆதிவாசி பள்ளிக்கு சென்றிருந்தேன். பேபி என்ற நாவலாசியர் தான் அந்த பள்ளியை நடத்திக்கொண்டிருந்தார். ஆண் குழந்தைகளும், பெண் குழந்தைகளும், ஆசிரியர்களுமாய் எல்லோரும் மிக சுதந்திரமாக சமத்துவமாக சனநாயகபூர்வமாக ஒரு கம்யூன் போல வாழும் பள்ளியது. அறிவென்பது அதிகாரம் அல்ல என்பதை சுளீரெனப் புரியவைத்த அனுபவம் அது. எல்லோரும் வட்டமாக அமர்ந்து கலந்துப் பேசிக் கொண்டிருந்த போது, இப்படி எல்லோரும் ஒரு இடத்தில் இருப்பதில் எசகு பிசகாக நடந்து பெண் குழந்தைகள் கர்ப்பமாகி விட்டால் என்ன நடக்கும் என்ற கேள்வி வந்தது. அதற்கு பேபி, அதில் எசகு பிசகு என்று எதுவும் இல்லை, அதுவும் இயற்கையின் அழைப்பு தான், பிறக்கும் பிள்ளை எங்கள் எல்லோருக்கும் பிள்ளை தான் என்றார். மனித நாகரீகத்தைப் கற்றுக்கொள்ள நாம் ஆதிவாசி கிராமங்களுக்கு தான் திரும்ப வேண்டும்.
லீனா மணிமேகலை
കൂത്തച്ചികളുടെ റാണി
A collection of fifty poems of Leena Manimekalai, in Malayalam translation, was brought out by the foremost publisher in Kerala, DC Books, in September, 2014, titled Koothachikalude Rani ( കൂത്തച്ചികളുടെ റാണി). Bhaskaran Bara, well known illustrator/painter in Kerala did the cover for Koothachikalude Rani. N. Ravi Shanker did the translations for കൂത്തച്ചികളുടെ റാണി. He is a poet in his own right in English having brought out a collection ‘Architecture of Flesh’ in 2015. He is also known for his translation of the Tamil dalit writer Bama’s short stories in English, published as ‘Harum ScarumSaar and Other Stories’ by Women Unlimited, New Delhi. His translations from Tamil also appear in Oxford University Press’s Anthology of Tamil Dalit literature and Penguin’s Anthology of South Indian Dalit literature.
കൂത്തച്ചികളുടെ റാണി
A collection of fifty poems of Leena Manimekalai, in Malayalam translation, was brought out by the foremost publisher in Kerala, DC Books, in September, 2014, titled Koothachikalude Rani ( കൂത്തച്ചികളുടെ റാണി). Bhaskaran Bara, well known illustrator/painter in Kerala did the cover for Koothachikalude Rani. N. Ravi Shanker did the translations for കൂത്തച്ചികളുടെ റാണി. He is a poet in his own right in English having brought out a collection ‘Architecture of Flesh’ in 2015. He is also known for his translation of the Tamil dalit writer Bama’s short stories in English, published as ‘Harum ScarumSaar and Other Stories’ by Women Unlimited, New Delhi. His translations from Tamil also appear in Oxford University Press’s Anthology of Tamil Dalit literature and Penguin’s Anthology of South Indian Dalit literature.
இரோம் ஷர்மிளா-மணிப்பூரின் அழிக்க முடியாத கவிதை!
நன்றி – புதிய தலைமுறை
“இன்னும் என்னை மரணம் விரும்பாததால்
நான் பிறந்த மண் கங்க்லாய்
சிவந்த மையில் எழுதப்பட்ட புதிய வரலாற்றுப் பக்கமாய்
என் கண்களுக்குள் விரிகிறது
அமைதியின் நறுமணமாய்
கங்க்லாயிலிருந்து
பிரபஞ்சமெங்கும் நான் பரவுவேன்
வரப்போகும் நூற்றாண்டுகளுக்கும் “
– கவிஞர் இரோம் ஷர்மிளா, தன் கவிதைகளில் மரணம் என்ற வார்த்தையை திரும்ப திரும்ப பயன்படுத்துகிறார். ஆனால் சென்ற மாதம் “ரேப் நேஷன் ” (Rape Nation) என்ற என் திரைப்படத்திற்காக மணிப்பூரில் அவரை நேர்காணல் செய்தபோது வாழ்வு குறித்த அவரது தீராத வேட்கையை தரிசித்த உணர்வு தான் கிடைத்தது. இறையாண்மை என்ற பெயரால் மணிப்பூர் மக்களை வகை தொகையில்லாமல் ராணுவம் மூலம் வேட்டையாடும் இந்திய அரசாங்கத்தின் Armed Forces Special Power Act (AFSPA) என்ற கொடிய சட்டத்தை எதிர்த்து பதினான்கு ஆண்டுகளாக வாய்வழி உணவோ, நீரோ அருந்தாமல் உண்ணா நோன்பு மேற்கொண்டு வரும் இந்த போராளி தேவதை பேசும்போது ஒவ்வொரு சொல்லும் மின்னல் துண்டுகளாக விழுகின்றன. வாஞ்சையும் புன்னகையுமாய் வரவேற்கும் அவரின் முகம், தீர்க்கமான கண்கள், சுருள் முடி, வெளுத்த மெல்லிய தேகம், நீள நீளமான நகங்கள், மூக்கில் சொருகப்பட்ட அரசாங்கத்தின் சிரிஞ்ச் என்ற விவரணைகள் இரோமை வரையறுத்துவிட முடியாது. மறுக்க முடியாத, வலிமையான எதிர்ப்பின் பாடலாய், அஹிம்சையின் குறியீடாய் அவரின் இருப்பு வியாபித்திருக்கிறது.
மைதி மொழியில் இச்செ என்றால் சகோதரி. போலீஸ் அதிகாரிகளால் கூட அன்பும் மரியாதையுமாக இச்செ என்றழைக்கப்படும் இரோமை ஒவ்வொரு மணிப்பூரியும் வாழும் சிறுதெய்வமாகத் தான் நேசிக்கிறார்கள். அரசு மருத்துவமனையின் ஒரு பகுதியை பூட்டிய அறையாக மாற்றி ஆயுதமேந்திய காவலர்களை சுற்றிலும் நிறுத்தி மணிப்பூர் அரசாங்கம் இரோம் ஷர்மிளாவை சிறை வைத்திருக்கிறது. சிறைச்சாலை கமிஷனரிடம் ஒரு வாரத்திற்கு முன் எழுதி விண்ணப்பித்து, விளக்கங்கள் சொல்லி, குறிப்பிட்ட வார நாட்களில், இருபது நிமிட சந்திப்பிற்கான அனுமதியை பெற்றேன் . விதவிதமான Teddy Bear மென்பொம்மைகளும், சர்வ தேசங்களிலிருந்தும் வந்திருந்த வாழ்த்து அட்டைகளும், புத்தகங்களும் பரிசுகளும் இறைந்துக் கிடந்த அறையில், மென்மையான ஆனால் திடமான பறவைக் குஞ்சு போல அமர்ந்திருந்த இரோமிடம், ஆயுதமேந்திய ஒரு காவலர் அருகிருந்து கண்காணிக்க உரையாடியது ‘இந்தியா’ என்ற அபத்த நாடகத்தின் காட்சி போல இருந்தது. சந்தித்த அந்தக் குறுகிய நேரத்தில், “ஒருவர் விடாமல் நான் வீர மரணம் (Matryrdom) எய்தவேண்டும் என்று நினைக்கிறார்கள், ஆனால் நான் சாவதற்காக போராடவில்லை, நீதி நிலைத்த வாழ்விற்காக போராடுகிறேன்” என்றார். “ராணுவத்தால் மானபங்கப் படுத்தப்பட்டு, கொலைசெய்யப்பட்ட மனோரமா தொடங்கி எண்ணற்ற பெண்களுக்கும், தன் போராட்டத்திற்கு காரணமான மலோம் சம்பவம் போல வகை தொகையில்லாமல் சுடப்பட்டு இறந்த அப்பாவி மக்களுக்கும், இதற்கான எதேச்சதிகாரத்தை ராணுவத்திற்கு வழங்கியிருக்கும் AFSPA என்ற கொலைகார சட்டத்தை திரும்ப பெறக் கேட்டு தீக்குளித்த சித்தரஞ்சன் போன்ற போராளிகளுக்கும் நீதி கிடைக்க வேண்டும் , அதற்கு உண்மையான ஜனநாயகம் திரும்ப வேண்டும்” என்றும் ஆங்கிலத்திலும் தன தாய்மொழி மைதியிலும் அசைக்க முடியாத உறுதியுடன் பேட்டியளித்தார். என் படங்களைக் குறித்து விவரங்கள் கேட்டுக்கொண்ட அவர், இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளுக்கு தன் கண்டனங்களை தெரிவித்துக் கொண்டு, ஈழத் தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையைப் பெற்றுத் தர வேண்டுமென்றார். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குத் தான் ஆதரவுக் கடிதம் எழுதியதை நினைவு கூர்ந்தார். நேரக்கெடு நெருங்க விடைபெறுகிறேன் என்றதும், தன் காதலர் டெஸ்மாண்டின் புகைப்படத்தை ஒரு குழந்தை போல எடுத்துவந்து ஆதுரத்துடன் காண்பித்தார்.அவர் வாழ்க்கையையும், போராட்டத்தையும், காதலையும் அடிப்படையாக வைத்து தோழனும் எழுத்தாளருமாகிய ஷோபாசக்தி எழுதிய திரைக்கதையைப் பற்றி பகிர்ந்துக் கொண்ட போது மகிழ்ந்துப் போனார். காதல் தன் போராட்ட குணத்திற்கு மேலும் வலு சேர்க்கிறதே தவிர சோடை போக வைக்கவில்லை என்ற நம்பிக்கையை தெரிவித்து விட்டு ஆர்வமாக என் கண்களைப் பார்த்தார் . ஆமோதித்தவுடன் கைகளை இன்னும் இறுக்கிப் பிடித்துக்கொண்டார். நெகிழ்வில் உடல் சிலிர்க்க, பாதம் வியர்க்க, பூமி நழுவ, தடுமாறிப் போனது என் நெஞ்சம். அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் என்ற திருக்குறளை தமிழ்க் கவிதையென எடுத்து சொல்லி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுதி தர, பத்திரப்படுத்திக் கொண்டார் . நானும் கவிதை எழுதும் பெண் தான் என்ற நினைவு குறுக்கிட்டது. ஒன்றும் சொல்லாமல் மெளனமாக வாளாவிருந்தேன். கவிதையின் மீதான சாத்தியங்களை மொழியிலிருந்து அசாதரணமான இருப்பிற்கும் எதிர்ப்பிற்கும் கடத்தியிருந்த இரோமின் உடலுக்கும் உறுதிக்கும் முன் வார்த்தைகள் எனக்கு வசப்படவில்லை.
க்வெண்டானமா(Guantanamo)கைதிகளுக்கு அமெரிக்க அரசாங்கம் செய்வது போல உண்ணாவிரத போராட்டத்தை கையிலெடுக்கும் போராளிகளுக்கு பலவந்தமாக சிரிஞ்ச் மூலம் உணவளித்து கொடுமை செய்யும் இந்திய அரசாங்கம், அவரை அவ்வப்போது விடுவித்து பின் கைது செய்யும் வழக்கமான சடங்கு, சென்ற வாரமும் நடந்ததை செய்தித் தாள்களில் படித்துவிட்டு மணிப்பூர் நண்பர்களிடம் தொலைபேசினேன். இமா (மைதி மொழியில் தாய்) மார்க்கெட் என்றழைக்கப்படும் பெண்களால் நடத்தப்படும் சந்தைக்கு, விடுதலை செய்யப்பட்ட அந்த குறுகிய நேரத்தில் இரோம் சென்றதாகவும், ஆயிரமாயிரம் மக்கள் கூடி அவரை வாழ்த்தியதாகவும் தகவல் சொன்னார்கள். அதைக் காண சகியாத அதிகாரம் குண்டுகட்டாக இரோம் ஷர்மிளாவை தூக்கிக்கொண்டு போய் சிறையில் அடைத்தது எனவும் செய்திகள் மூலம் கேள்விப்பட்டேன். இந்தியா ஒரு தேசமாக தன்னைக் கட்டமைத்துக் கொள்வதற்காக வடகிழக்கு மக்களுக்கு வரலாறு முழுக்க செய்த அநீதிகளுக்கும், இன்னும் தொடர்ந்துக் கொண்டிருக்கும் கொடூரங்களுக்கும் காயாத ரணமாக மணிப்பூர் சாட்சி சொல்லி நிற்கிறது. ஒரு துளி நீர் கூட வாய்க்குள் விழுந்துவிடக்கூடாது என்பதற்காக ஈரப் பஞ்சு வைத்து காய்ந்துப் போன தன உதடுகளை துடைத்துக் கொண்டு வாழும், போராடும் இரோம் ஷர்மிளாவிற்கு முன் அதிகாரம் ஒரு நாள் மண்டியிடும். அப்போது இதுவரை வரலாற்றில் எழுதப்பட்ட கவிதைகள் அனைத்தும் அர்த்தம் பெறும்.
லீனா மணிமேகலை
இன்மை.காம் இணைய இலக்கிய இதழில் வந்த கவிதைகள்
நன்றி – இன்மை.காம் , அபிலாஷ்
பலி
பக்தி நால்வர் என கருதப்பட்டவர்கள்
நேற்றும் இல்லை
நாளையும் இல்லை
நாங்களே கடவுள்
என அறிவித்துக்கொண்டனர்
எழுதப்பட்ட கவிதைகள்
அரசாணைகளாகி விட்டதால்
புத்தகங்களை கடல் கொண்டு போய் விட்டது
உடைக்க ஒரு தேங்காய் கூட வாய்க்காத
கொடுமணல் நிலத்தில்
லிங்கம் முளைத்த அவர்களது உடல்
ஒவ்வொரு புதிய பக்தரையும்
பலி கேட்டது
சதா உதிரம் பெருக்கிக் கொண்டிருந்ததால்
தீட்டென ஒதுக்கப்பட்டவள் மட்டும்
ஊரின் ஒதுக்குப்புறத்தில்
ஆலய மறுப்பு பாடலொன்றை
சுதி தப்பாமல் பாடிக்கொண்டே இருந்தாள்
கழு மேடைகள்
அந்த ஒற்றைக் குரலுக்குமுன்
தோற்றுக் கொண்டிருந்தன
கண்ணன் ராதை
நீ கண்ணனும் இல்லை
நான் ராதையும் இல்லை
நீ என் கவிதைப் புத்தகத்தை
பதிப்பிக்க வேண்டாம்
நீ கண்ணனும் இல்லை
நான் ராதையும் இல்லை
உன் பெண்ணிய நாடகத்தில்
நான் நடிகையாகவும் வேண்டாம்
நீ கண்ணனும் இல்லை
நான் ராதையும் இல்லை
அம்பேத்காருக்கு பூணூலும் வேண்டாம்
பெரியாருக்கு நாமமும் வேண்டாம்
நீ கண்ணனும் இல்லை
நான் ராதையும் இல்லை
போலீஸ் கான்ஸ்டபிள் துப்பறியும்
ஒப்பந்தங்கள் நமக்குள் வேண்டாம்
நீ கண்ணனும் இல்லை
நான் ராதையும் இல்லை
விமர்சனமும் வேண்டாம்
வக்கீல் நோட்டீசும் வேண்டாம்
நீ கண்ணனும் இல்லை
நான் ராதையும் இல்லை
நீ காத்தவராயன்
நான் இசக்கி
நாம் காதல் செய்வோம்
கூடி கலவி கொள்வோம்
கேள்வி பதில் நிகழ்ச்சி
நீங்கள் அங்கையற்கரசு தானே?
….
இருவரா ஒருவரா
ஷ்ஷ்
ஆணா பெண்ணா
ஷ்ஷ்
கேள்வி கேட்டால்
வெளியே தூக்கி எறிவேன்
புகைப்படங்களை வெளியிடுவேன்
அவற்றை அழித்து விட்டேன்
அப்படியென்றால் எழுதுவேன்
என் கையை முறித்தாய் என சொல்வேன்
உங்கள் கைகள் நன்றாகத் தானே இருக்கின்றன
நீ முறித்தது பெண்ணியக் கைகள்
அப்படியென்றால்
நீ பிய்த்தது தலித் நகங்கள்
அய்யய்யோ
நீ சிந்தவைத்தது மார்க்சிய ரத்தம்
எனக்கு கருத்தெல்லாம் புரியவில்லை
சுதந்திரம் வேண்டும்
தவறான முகவரி
நீங்கள் அங்கையற்கரசு தானே?