ரத்த நினைவுகள்
நன்றி - சிலேட் இலக்கிய இதழ்
என் முதல் மாதவிடாய் எனக்கு நன்றாக நினைவிருக்கின்றது. சாரண சாரணியர் சேவைக்காக எனக்கு ஜனாதிபதி விருது வழங்கப்பட்ட நாள். நாள் முழுதும் கொளுத்தும் வெயிலில் அணிவகுப்பு செய்துவிட்டு, நீலக் கலர் சாரணியர் சீருடையில் ரத்தக்கறையோடு வீடு திரும்பினேன். அம்மா ஊரில் இல்லை. வீட்டில் இருந்த அப்பாவிடம் ” என் ஜட்டி முழுக்க ரத்தம், எனக்கு ரத்த நோய் வந்துவிட்டது, என்னைக் காப்பாற்றுங்கள்” என்று ஒரே அழுகை. என் உடலில் அங்கங்கு முளைத்துக்கொண்டிருந்த பூனை முடியும், புதிதாக மொட்டுவிட்டிருந்த முலைகளும் அசூயையும் குழப்பத்தையும் உண்டாக்கி கொண்டிருந்த வயது. காயமே ஏற்படாமல் ஒழுகும் ரத்தமும் சேர்ந்துகொண்டதால் ஒரு புதுவித நோய் என்னை ஆட்கொண்டுவிட்டதாகவே நம்பினேன். அப்பா என் அழுகையைப் பொறுமையாக கேட்டுவிட்டு “வாழ்த்துக்கள் மகளே” என்று மட்டும் சொன்னார்.புதுவகை நோயிற்காகவா, வாங்கி வந்த சாரணியர் மெடலுக்காகவா, எதற்கு அப்பா வாழ்த்து சொல்கிறார் என்று எனக்கு குழப்பம். என் பக்கத்து வீட்டு முஸ்லிம் அத்தை வந்து, ஒரு உள்பாவாடையில் இருந்து கிழித்த பகுதியை சதுரமாக மடித்து ஜட்டிக்குள் வைத்துக் கொள்ள சொல்லிக் கொடுத்தார். பாயை விரித்து நான் அதில் மட்டுமே படுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி விட்டு கழிவறையை வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ள்லாம் என தாராள மனதுடன் அனுமதி தந்தார். “ஏன் அத்தை, நீங்கள் நான் ஜட்டிக்குள் வைத்துக் கொள்ள தந்த துணி ரத்தத்தை உறிஞ்சாதா என்ன? வீட்டுக்குள் சிந்தாத பட்சத்தில் நான் ஏன் பாயில் படுக்க வேண்டும்” என்று கேட்டதற்கு , “இனி நீ “பெரிய” பெண், கேள்விகளைக் குறைத்துக்கொண்டு கீழ்ப்படிய கற்றுக்கொள்ள வேண்டும்” என்று புன்னகைத்தார். அம்மா அடுத்த நாள் மொத்த குடும்பத்தையும் தன்னோடு அழைத்து வந்து மகள் பூப்படைதல் விழாவை அறிவித்தார். இடதுசாரி அரசியல் சார்பு குடும்பமாக இருந்ததால், நல்லவேளை பெரிய ஆடம்பர விழாவில் இருந்து தப்பித்தேன். ஆனாலும், குடும்பமும், நட்பும், சுற்றமும் என் மீது மஞ்சள் நீரை ஊற்றி என்னைப் புனிதப்படுத்திவிட்டு சென்றார்கள். புது ப்ராவும், பட்டுத் தாவணியும், ‘இனி சும்மா பசங்களோட திரியக்கூடாது’ என்ற அறிவுரையும் கிடைத்ததை தவிர அந்த விழாவால் பயன்தரக்கூடிய விளைவுகள் எதுவும் இருந்ததாக நினைவில்லை. ஒவ்வொரு மாதமும் ரத்தம் சிந்தி தான் மாதவிடாய் குறித்த புதிர்களை மெல்ல மெல்ல விடுவித்துக் கொள்ள முடிந்தது. உள்ளாடைக்குள் பொழுதுக்கும் ஈரமாகி கொண்டிருக்கும் ஒரு பந்து துணியை வைத்துக் கொண்டு எப்படி இயல்பாக நடப்பது, பள்ளிக்கூட வகுப்பிலோ, பேருந்திலோ, விளையாடிக் கொண்டிருக்கும்போதோ, உடையில் ரத்தக்கறை பட்டுவிட்டால், அவமானத்தில் இருந்து என்னை நானே எப்படி காப்பாற்றிக் கொள்வது, மாதவிடாய் வருவதற்கு முன் மன அழுத்தங்களும், கோபமும், படபடப்புமாய் இருப்பதற்கு காரணமென்ன, ரத்த ஒழுக்கின் போது உடலின் வியர்வையிலும், மூச்சிலும் வித்தியாசமான வாசம் ஏன் வருகிறது, அதை எப்படி அணுகுவது, எப்படி சுத்தமாக வைத்துக் கொள்வது போன்ற பல விஷயங்களை பெற்ற தாய் கூட மகளிடம் பேசுவதற்கான பொருளாக இல்லாமல் இருப்பதால், பெண் பட்டு பட்டு தான் தெரிந்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
மருந்துக்கடைக் காரரிடம் நாப்கின் வாங்கும்போது, ஏற்கெனவே ப்ளாஸ்டிக் கவரால் மூடப்பட்ட பாக்கெட்டை மேலும் ஒரு ந்யூஸ் பேப்பரால் மூடி சரடு சுற்றி தர தேவையில்லை என்று பதின்ம வயதிலேயே சண்டை போட்டிருக்கிறேன். கடைக்காரர் யாருடைய மானத்தைக் காக்கிறார் என்று நினைக்கும்போதெல்லாம் கோபம் தலைக்கேறும். ரோடு சைட் ரோமியோஸ் சீட்டியடிப்பது, சினிமா பாட்டு பாடுவது தவிர, ஒரு நாள் நான் வாங்கிக்கொண்டு போகும் நாபகின் பாக்கெட் ‘பிரட் பாக்கெட்டா’ என்று கிண்டலாக கேட்க , எனக்குள் இருந்த 15 வயது ரௌத்திரக்காரி, ‘வீடு வரைக்கும் வா, ஜாம் வச்சு தரேன், சாப்பிடுவியா’ என்று சொல்லியிருக்கிறாள். காலங்கள் மாறியிருக்கின்றன தான். ஆனாலும் பெண்ணை கேலிக்குரியளாக்க, அவமானப்படுத்த மாதவிடாய் ஒரு எளிய ஆயுதமாகத் தான் இன்று வரை இருக்கிறது.
எனக்கு ஒரு படம் எடுக்கவேண்டும் எனப் பல நாட்களாக திட்டம். ஒரு எக்ஸ்ட்ரா லார்ஜ் நாப்கினை ரத்தத்தில் தோய்த்து ஆணின் பந்துகளுக்கு கீழே வைத்து அவனை நடமாடவிட்டு காமிராவை ஓட விட வேண்டும். உள்ளுறுப்புகளை எந்த வெட்கமும் இல்லாமல் வெட்டவெளியில் சொறிந்துவிட்டுக் கொள்ளும், தெருவோரங்களில் பலர் அறிய ஒன்னுக்கடிக்கும் வெகு நாகரீகமான ஆண்களுக்கு மாத விடாயை மட்டும் இயற்கை பரிசளித்திருந்தால் என்ன நடந்திருக்கும் என கற்பனை செய்துப் பார்த்திருக்கிறேன். அகிலமெங்கும் அலுவலகங்களில் அந்த மூன்று நாட்களுக்கு ஆண்களுக்கு சிறப்பு பணி விடுமுறை கிடைத்திருக்கும். ரத்த ஒழுக்கின் அடர்த்தி மற்றும் ஓட்டத்தை வைத்து ஆண்மையின் வீர்யம் விதந்தோதப்பட்டிருக்கும். சிறப்பு மருத்துவமனைப் பிரிவுகள் முளைத்திருக்கும். ஆண் கடவுளர்களின் ரத்த ஒழுக்கு தரிசனங்களுக்கு வரிசையில் மக்கள் கூடுவார்கள். எழுதும் போதே கிலி பிடிக்கிறது.
என் ‘பலிபீடம்’ ஆவணப்படத்திற்காக கம்பளத்து நாயக்கர்கள் சமூகத்தோடு வேலை செய்தபோது , அச்சமூக பெண்கள், மாதவிடாயின் போது கிராமத்திற்கு வெளியே கருவேலங்காட்டில் அமர்த்தப்பட்டிருந்தார்கள். மற்ற சமூகங்களில் வீட்டுக்குள்ளேயே தனியாக பெண்களை உட்கார வைப்பார்கள் பார்த்திருக்கிறேன். அவர்கள் சாப்பிடும் சாமான்கள் எல்லாம் தனியாக கவிழ்த்தப்பட்டிருக்க,கிராமத்திலிருந்து நடக்கும் தூரத்தில் தனியே பெண்களைக் குத்தவைத்திருந்தது எனக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. மாதவிடாய் பெண்களை தீண்டத்தகாதவர்களாக நடத்தும் சமூகம், மாதவிடாய் – கருவுறுதல் – பிள்ளை பெறுதல் போன்ற பெரும்பேறுகள் எதுவும் இல்லாத ஆண்களை அல்லவா தகுதி குறைந்தவர்களாக பார்க்க வேண்டும்! அந்தக் கேள்வியை பலிபீடம் படத்திலும் எழுப்பியிருந்தேன்.
தீட்டுத்துணியை மிகவும் கவனமாக அகற்ற வேண்டும் என்று அம்மா என் சிறுவயதில் சொல்லிக்கொண்டே இருப்பார். கோழி கொத்தினாலோ , நாய் நக்கினாலோ என் அழகெல்லாம் போய்விடும் என்று மிரட்டுவார். அதை நினைத்து மட்டும் பலநாள் என் தூக்கம் தொலைந்திருக்கிறது. ஒவ்வொரு தடவை தீட்டுத்துணியை மாற்றும் போதும், மிக கவனமாக ந்யூஸ் பேப்பர் சுற்றி, அதற்கு மேல் பிளாஸ்டிக் கவர் போர்த்தி, துண்டுக்கு கீழே மறைத்து யாருக்கும் தெரியாமல் பின்கட்டுக்கு எடுத்து சென்று, மண்ணைத் தோண்டி ஆழமாக புதைத்து வைப்பேன். ஆனாலும் நடு இரவில், தூக்கம் இழந்து, பின்கட்டுக்கு வந்து புதைத்த இடத்தை தோண்டிப் பார்த்து, நாய் எதுவும் இழுத்து செல்லவில்லையே என்று சோதித்து பார்த்துக் கொள்வேன். அப்படி எதுவும் நடந்து, காலையில், கோர முகத்துடன் நான் எழுந்துவிடக்கூடும் என்ற பயம் பதின்ம வயது முழுவதும் என்னைத் துரத்திக்கொண்டிருந்தது. ஒரு சமயம் ஆடி மாசத் திருவிழாவில் எங்கள் கிராமத்துப் பண்டாரம் பூசைகளின் போது சாமியை தன் மீது இறங்கவிட்டு ஒருவித மிருகத்தின் உடலசைவோடு ஊரெங்கும் தீட்டுத் துணிக்காக தேடித் திரிவதையும் அதை சாமிக்குப் படைப்பதையும் காணும் வாய்ப்பு கிடைத்தது . தீட்டுத்துணியை தின்றுவிட்டு சாமியே நல்லாயிருக்கும்போது, நாயும் கோழியும் நம்மை என்ன செய்துவிட முடியும் என்று தோன்றியது. என் பயம் கலைந்தது அப்படித்தான். மாதவிடாயின் போது, செய்யக்கூடாது என்று சொன்ன எல்லா விஷயங்களையும் நான் செய்துப்பார்த்திருக்கிறேன். கோயிலுக்குப் போயிருக்கிறேன், துளசி செடிகளைத் தொட்டிருக்கிறேன், சாமிக்கு படையல் செய்யும் பதார்த்தங்களை சாப்பிட்டு இருக்கிறேன், ஏன் கலவி கூட செய்திருக்கிறேன். இதுவரையிலும் என் கண்களை எந்த சாமியும் குத்தவில்லை
என் ஆவணப்படங்க்களுக்காக ஊர் ஊராக சுற்றித் திரிய ஆரம்பித்தபோது, நான் ஆய்வுசெய்த ஆவணப்படுத்திய சமூகத்துப் பெண்களிடம் அவர்களின் மாதவிடாய் சுகாதாரம் பற்றி பேசிப் பார்த்திருக்கிறேன். நாப்கின் வாங்கும் திறன் இல்லாத சூழலில் அவர்கள் பழைய துணிகளை பயன்படுத்துவதையே வழக்கமாக கொண்டிருந்தார்கள். சில வீடுகளில் ஒரு குடும்பத்துப் பெண்கள் எல்லோரும் அதே துணியை துவைத்து மறுசுழற்சி செய்வதையும் பார்த்திருக்கிறேன். வீட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவற்றைப் பத்திரப்படுத்தி வைப்பதும், அதைக்குறித்த உரையாடல்களில் சிமிக்ஞைகளைப பயன்படுத்தி பெண்கள் குறிப்புணர்த்திக் கொள்வதும் சுவாரஸ்யமானவை. எல்லோரும் பயன்படுத்தும் வகையில் பருத்தி சானிடரி நாப்கின்கள் குறைந்த விலைக்கு கிடைக்க செய்யும் நாள் எப்போது வரும் என்று ஆயாசமாக இருக்கும் . கூடவே என்னைப் போன்ற மத்தியதர குடும்பத்து பெண்கள் , நவீனம் என்ற பெயரில் பயன்படுத்தும் சானிடரி நாப்கின் ஒரு பக்கம் பிளாஸ்டிக் கழிவை அதிகப்படுத்திக்கொண்டிருக்க, வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் பெண்களின் பயன்பாட்டுமுறை இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத வகையிலும், செலவில்லாமலும் இருப்பதைக் குறித்து ஆச்சர்யமாகவும் இருக்கும் . ஒரு வகையில், பழைய துணியை மறுசுழற்சி செய்யும் முறை குடும்பத்துப் பெண்களிடையே அன்னியோனியத்தை ஏற்படுத்துவதாக எனக்கு தோன்றியது. “என்ன இந்த மாசம் மச்சான் சீக்கிரம் வந்துட்டாரு போலிருக்கு” என்று குறிப்பு சொற்களால் மாதவிடாய் குறித்து கிராமத்துப் பெண்கள் பேசிக்கொள்வதும் அதையொட்டி ஒருவரை ஒருவர் சீண்டி விளையாடுவதும் அப்பெண்களுக்கு மட்டுமே அந்தரங்கமான அழகான உலகம். 2004-5 இல் சுனாமி நிவாரணப்பணிக்காக சில தன்னார்வ அமைப்புகளுடன் சுற்றுப்பயணம் செய்து, மக்களுக்குத் தேவையான சேலை துணிமணி, போர்வைகள், லுங்கிகள், குழந்தைகளுக்கான உடைகள் என்று விநியோகம் செய்துக்கொண்டிருந்தோம்.அப்போது பெண்கள் ‘எங்களுக்கு யார் நாப்கின் தருவாங்க’ என்று கேட்டபோது பொட்டில் அடித்தாற்போல இருந்தது. பெண்களின் அடிப்படை தேவையான நாப்கினை எவ்வளவு வசதியாக எல்லோரும் மறந்துவிடுகிறோம் என்று வெட்கமாக இருந்தது. நூற்றுக்கணக்கான நாப்கின் பாக்கெட்டுகளை ஏற்பாடு செய்துக்கொடுத்த போது நன்றியோடு பார்த்த நாகப்பட்டினப் பெண்களின் கண்கள் என் நினைவுகளிலிருந்து நீங்காதவை.
மாதவிடாயால் மாசுபட்டவளாகப் பெண் கருதப்படுவதால் வழி வழியாக பெண்கள் மீன்பிடித் தொழிலுக்கு அனுமதிக்கப்படுவதில்லை. தேவதைகள் ஆவணப்படத்திற்காக ராமேஸ்வரத்தில் மீன் பிடித்தொழில் செய்யும் சேதுராக்கு அம்மாவை நேர்காணல் செய்தபோது அதைக் குறித்தக் கேள்வியை முன்வைத்தேன். அவர் தீர்மானமாக, நான் வழிபடும் கடவுள் தன்னிடம் தான் மாசுப்படவள் என்று சொல்லவில்லை என்றும், மற்றவர்கள் என்ன பேசுவார்கள் என்பதைக் குறித்த கவலை தனக்கோ, பசிக்கும் தன் வயிற்றுக்கோ இல்லை என்றும் பதில் அளித்தார். மாதவிடாயின் போதும் கூட வலைகளைத் தொடுவதும், சுத்தம் செய்வதும், மீன் பிடிப்பதுமாய்த் தான் இருப்பதாகவும், அதன் காரணமாக தான் ஒன்றும் அழிந்துப் போய்விட வில்லை யென்றும் சொல்லிக் காட்டினார். அவர் சமைத்த மீன்களை நானும் உண்டேன், அவரின் குடும்பமும், ராமேஸ்வர மக்களும் அவர் பிடித்துவரும் மீன்களை தினந்தோறும் உண்கின்றனர். நாங்கள் யாரும் அதனால் சாகவில்லை. புனிதம், புனிதமற்றது என்ற கதையாடல்கள் எவ்வளவு அபத்தமானவை என்பதை சேதுராக்குகள் இந்த செவிட்டு உலகத்திற்கு அறிவித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
மீனவப் பெண்களுடன் செங்கடல் திரைப்பட வேலையாக பல மாதங்கள் தங்கியிருந்தபோது நான் கற்றுக்கொண்ட வார்த்தைகள் இரண்டு. தூமையைக் குடிக்கி, சாண்டையக் குடிக்கி. ஆண்களுக்கு நிகராக கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசும் மீனவப் பெண்களின் துடுக்கும் அழகும் என் மனதை அள்ளும் விஷயங்கள். காமம் சற்று தூக்கலாக தெரியும் இந்த வார்த்தைகள் “கெட்ட” வார்த்தைகளாக ஆனது துரதிருஷ்டம் தான் என்று ஒரு சந்தர்ப்பத்தில் நான் சொன்னபோது அவர்கள் ரகசியமாக சிரித்துக்கொண்டார்கள். மர்ஃபத் மரபை பின்பற்றும் சூஃபி ஃபக்கிர்கள் தங்கள் பெண் துணைகளின் மூன்றாம் நாள் மாதவிடாய் ரத்தத்தை அருந்தி அவர்களின் காதலை ஏற்றுக்கொள்ள சொல்வது வழக்கமாம். இந்த சடங்கு பெண்களோடு தங்களை சமமாக்கி கொள்ள உதவுகிறது என்பது சூஃபி ஃபக்கிர்களின் நம்பிக்கை. பெண்கள் தங்கள் காதலர்களுக்கு இச்சடங்கை பரிந்துரைக்கலாம். தன்னையும், தன் உடலையும், தற்காதலையும் சரியான அர்த்தத்தில் தன்னுணரும் பெண் மட்டுமே ஆணுக்கும் அவற்றை சரியாக உணர்த்த முடியும். என் காதலன் ஒருவனுக்கு நான் அளித்த ஒப்பற்ற பரிசு என் மாதவிடாய் ரத்தத்தில் நான் வரைந்து தந்த ஓவியங்கள் தாம்.
உலகின் அழகிய முதல் பெண் தொகுப்பிற்காக, தீவிரப்பெண்ணிய அரசியல் பேசும் கவிதைகளைப் பிரத்யேகமாக உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்த போது, நிரலில் முன் நின்றது மாதவிடாய் குறித்த கவிதைகள் தான். தன்னிரக்கம் தொனிக்காத கொண்டாட்டக் கவிதைகளாகவும், ஃபேண்டஸியாகவும், இன்னும் வானவியல்-மானுடவியல்-உயிரியல் என்று பல கோணங்களில் எழுதிப் பார்க்கவேண்டுமெனவும் முடிவு செய்தேன். பெண் உடலை எழுத மொழியில் போதாமை இருப்பதாக எனக்குப் பட்டது அந்தக் காலகட்டத்தில் தான். நிகண்டுகளைப் புரட்டுவதும் அகராதிகளை நோண்டுவதுமாய் திரிந்ததில் தூமை என்ற சொல் தட்டுப்பட்டது. சித்தர் பாடல்களில் இவ்வார்த்தை பயன்பட்டிருப்பதும் கவனத்திற்கு வந்தது. சிவவாக்கியர் பாடல் ஒன்று.
தூமை தூமை என்றுளே துவண்டலையும் ஏழைகாள்
தூமையான பெண்ணிருக்க தூமை போனதெவ்விடம்?
ஆமைபோல முழுகி வந்து அனேக வேதம் ஓதுறீர்
தூமையும் திரண்டுருண்டு சொற்குருக்கள் ஆனதே !
தரையினில் கிடந்தபோது அன்று தூமை என்றிலீர்!
துறையறிந்து நீர் குளித்ததன்று தூமை என்றிலீர் !
பறையறிந்து நீர் பிறந்த அன்று தூமை என்றிலீர்!
புரையிலாத வீசரோடு பொருந்துமாற தெங்கனே?
சொற்குருக்கள் ஆனதும் சோதி மேனியானதும்
மெய்க்குருக்கள் ஆனதும் வேண பூசை செய்வதும்
சற்குருக்கள் ஆனதும் சத்திரங்கள் சொல்வதும்
மெய்க்குருக்கள் ஆனதும் திரண்டுருண்ட தூமையே !ஒரு நிகண்டு, தூமைக்கு ‘தூய’ ‘மை’ என்று அர்த்தம் தந்திருந்தது. நிந்தனைச் சொல்லாக வழக்கத்தில் இருக்கும் தூமையின் வேர் தெரிந்தபின் அதைக் கைப்பற்றும் வெறி வந்தது. அந்த வெறியில் எழுதியது தான் தொகுப்பில் இருக்கும் தூமைக் கவிதைகள். தூமை ரத்த ஆற்றின் கரையோரத்தில் சம்மணமிட்டு அமர்ந்து வரலாற்றையும் வேட்கையையும் எழுதிப்பார்த்த கவிதைகள். அக்கவிதைகளின் மூலம் தூமா என்ற காதலனை உருவாக்கி, தூமத்திப்பூ சோலைகளை உருவாக்கி, தூமை ரத்தத்தில் ஓவியம் பழகி, தூமை வாசம் துலங்கும் பலகாரங்கள் செய்து தின்னக்கொடுத்து, மாதந்திர வசந்தமாக தூமையை கொண்டாட அழைத்தேன். தூமை கசியும் யோனியில், கோப்ரோ கேமிராவை நுழைத்துப்பார்த்து என் உடலின் மாயத்தைக் கவிதையின் மூலம் அறிந்துக் கொள்ள முயற்சித்தேன். தூமை மட்டுமல்ல, கிளிட்டோரியஸ், ஜி-ஸ்பாட், ஆர்கசம் என பெண்ணின் வேட்கையை எழுத தமிழில் நிகர்சொற்களை புதிதாக உருவாக்கித் தான் எழுத வேண்டியிருந்தது. Women should occupy desire – பெண்கள் வேட்கையை ஆக்கிரமிக்க வேண்டும். பெண் தன் வேட்கையை தானே நிர்மாணிக்கும் பொறுப்பை ஏற்க வைக்க கவிதையால், கலையால் மட்டுமே முடியும் என்பது என் நம்பிக்கை.
(என் தூமைக் கவிதையொன்று )
தூமையின் வயது பதின்மூன்று
என் தூமையின் வயது பதின்மூன்று
உடல் என்ற மந்திரவாதி
வேட்கையின் கணிதத்தை
மாத அட்டவணைக்குள்
கூட்டிக் கழிக்கத்
தொடங்கி
பதின்மூன்று வருடங்களாகிறது
என் பௌதீக தேசத்தில்
முலைகள் அமைச்சாகி
அல்குல் அரியணையேறுவதற்குரிய
தளவாடங்கள்
பருவ சாதகத்தின்
சட்டங்களில்
பயிற்சி பெற்றுவிட்டன
என் தாயின்
தாயின் தாயின் தாயின்
உப்பு திரவியமாக்கி என்னை
மிதக்க வைத்ததில்
மொழியின் துடுப்புகளும்
வயதிற்கு வந்திருந்தன
பனுவல் அகப்பட்டதும்
நினைவுப் பதிவாகப் பெட்டியென
மனதை அடைந்ததும்
வேட்டையின் சங்கேதங்கள்
புலப்பட்டதும்
தூமையைக் குடித்துப் பழகிய
நாட்களில் தான்
நீரகமாக
குடுவையில் நிறைவதும்
உயிரகமாக
ஆகாயத்தில் கலப்பதும்
கரிமமாக
பாறையில் உறைவதுமாய்
தூமத்தியாகி என்னை
வினையாற்றுகிறது வயது
– லீனா மணிமேகலை
சதா பிரதியின் ஜட்டியைக் கழட்டிப் பார்க்கும் அறிவுலகில் என்ன உரையாடுவது – பறை நேர்காணல்
பறை இதழில் வந்த நேர்காணல் நன்றி – நவீன், பாலமுருகன்
17/11/2014
கவிஞர், இயக்குனர், களப்பணியாளர் என இடையறாது இயங்கிக்கொண்டிருப்பவர் லீனா மணிமேகலை. கடந்த பத்து வருடங்களாக மாற்று சினிமாக்களையும் ஆவணப்படங்களையும் உருவாக்கி வருபவர். எளிய மக்களின் பங்களிப்பைக்கொண்டே அதன் உச்சமான சாத்தியங்களில் மக்கள் பங்கேற்பு சினிமாக்களை உருவாக்குபவர். இடதுசாரிக் குடும்பச் சூழலில் வளர்ந்த லீனா இன்று பெரியாரியம், அம்பேத்காரியம், க்யுயர்(Queer) பெண்ணியம், என தனது பார்வைகளை வளர்த்தெடுத்து முன்னே செல்பவர். தனது கருத்துகளை எழுத்தின் மூலமும் காட்சி ஊடகங்களின் வழியேயும் வெளிப்படுத்தி வருகிறார். ‘செங்கடல்‘ என்ற முழு நீள திரைப்படத்தையும், வெள்ளை வேன் கதைகள், தேவதைகள், பெண்ணாடி, பலிபீடம் என பத்திற்கும் மேற்பட்ட ஆவணப் படங்களையும், நான்கு கவிதை தொகுப்புகளையும் வெளியிட்டிருக்கிறார். சிகாகோ பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைப் பேராசிரியர் ஸாஷா எபிலிங்கால் இவரின் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு புத்தகமாக வெளிவரவிருக்கின்றது. “கூத்திச்சிகளோட ராணி” என்ற தலைப்பில் மலையாளத்திலும் இவரின் கவிதைகள் வெளிவந்திருக்கின்றன.
உங்களின் கலை வெளிப்பாட்டிற்கான முதல் தருணத்தை நினைவு கூற முடியுமா?
லீனா மணிமேகலை: வயதுக்கு வந்த நேரம். என் அம்மா அருகில் இல்லை. கிராமத்திற்கு ஏதோ காது குத்திற்குப் போயிருந்தார். அப்பாவிடம் கிலி பிடித்த குரலில், “பாவாடையெல்லாம் ஒரே ரத்தம்,” என்று சொன்னேன். ‘வெரிகுட்‘ என்றவர் அம்மாவுக்குத் தொலைபேச மொத்தக் குடும்பமும் பரபரப்பாக கிளம்பி வந்து கேட்ட ஒரே கேள்வி, ‘நீ ரத்தத்தை முதன்முதலாக எப்ப பார்த்தாய், சரியான நேரத்தை சொல்லு, சாத்திரம் எழுதனும்’ என்பதுதான். இன்று வரை இதற்கு என்னிடம் பதிலில்லை. அப்புறம் அவர்களாகவே என் அப்பாவிடம் சொன்ன நேரத்தை வைத்து ஏதோ கணித்து ஜோசியருக்கு நோட்டு எழுதினார்கள். உங்கள் கேள்வி இதைத்தான் நினைவுக்கு கொண்டு வருகிறது.
உங்களின் தொடக்ககால எழுத்தின் வகை என்னவாக இருந்தது? இன்றைய மனநிலையில் அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
லீனா மணிமேகலை: பெரும்பாலும் முதல் காதல், அந்த காதல் தந்த முத்தம், ஆண் பெண் உறவு, இருப்பு குறித்தானவை குழந்தைப் பருவ வாசம் கூடியவை. என் சதுரகிரி மலை போல, அத்தியாறுபோல, புன்னை மரம் போல, மாவூத்து போல நூற்றாண்டுகள் கடந்து நிற்கும் ஒரு சொல்லை எழுதிவிட வேண்டும் என்ற வேட்கை கூடிய முயற்சி. அந்தந்த காலக்கட்டங்களின் சாட்சிதானே எழுத்தும். ஒருவித தூய நம்பிக்கைகள் நிறைந்தது என் தொடக்ககாலம் என்று இப்போது நினைத்துப் பார்த்தால் தோன்றுகிறது.
பெரும்பாலும் ஆண்களே இயங்கிக் கொண்டிருக்கும் இலக்கியத்திலும் திரையிலும் நீங்கள் மிகத் தீவிரமாகவே இயங்கி வருகிறீர்கள். தொடக்கத்தில் அதன் சவால்கள் எத்தகையதாக இருந்தன?
லீனா மணிமேகலை: பிறந்த குழந்தையை ஆணா, பெண்ணா என்பதை இடுப்புத் துணியை விலக்கிப் பார்த்து தெரிந்து கொள்வார்கள். அதே மனநிலைதான் இலக்கியத்திலும், கலைத்துறையிலும் நீடிக்கிறது. சதா பிரதியின் ஜட்டியைக் கழட்டிப் பார்க்கும் அறிவுலகில் என்ன உரையாடுவது, எங்கிருந்து உள்ளேறுவது, எப்படி இயங்குவது என்பதை துப்புத் துலக்கி கொண்டிருக்கிறேன். கிடைத்தால் சொல்கிறேன். மற்றபடி ஆண் பெண் இருமை எதிர்வுகள் அடிப்படையில் இனியும் படைப்புலகம் இயங்குவது அபத்தமானது. ஆபத்தானது. ஆண் மையப் பார்வை பாலின சிறுபான்மையினரை மறுதலிக்கும் பார்வையும் கூட.
இலக்கியத்திற்கான அல்லது திரைப்படத்திற்கான உங்கள் தொடக்ககால ஆயத்தங்கள் அல்லது பயிற்சிகள் பற்றி கூறுங்கள்?
லீனா மணிமேகலை: உரையாடலில் எனக்கு தீவிர மோகம். அதுவே என் இன்றைய எல்லா ஆயத்தங்களின் அடிப்படையும். பலவிதமாக, பல்வேறு உயிர்களிடம், என்னை சுற்றியுள்ள இருப்புடனும், இன்மையுடனும், உரையாடும் முயற்சியாக எழுத்து, பிம்பம், எண்ணம், செயல், கருத்து, அரசியல், வாசிப்பு, பிரக்ஞை, இன்ன பிறவையையும் பார்க்கிறேன். சினிமாவுக்கென்ன நூற்று சொச்சம் வயதுதானே ஆகிறது. எழுத்துக்கு வயது சில ஆயிரங்கள் சொச்சம். மனித வாழ்வுக்கு நாற்பதாயிரம், ஐம்பதாயிரம் வயதென்கிறார்கள். தொழில்நுட்பம் எதுவும் வசப்படாதபோதும் உரையாடிக்கொண்டுதானே இருந்தோம். புதிய சொல்லென்பதோ, பிம்பமென்பதோ ஏதுமில்லை. நினைவோடையின் ஒரு கூழாங்கல்லைப் பொறுக்கியதோடு, அதைக்கொண்டே என் கண்ணாடியை அடித்து உடைக்காத வரை ஒரு புதிய உரையாடலை தொடங்கியபடி இருப்பேன்.
தொடக்ககால ஆயத்தங்கள் என்று சொல்லப் போனால், என் பள்ளிப் பருவத்தில் கம்யூனிஸ்ட் மேடைகளில் இயக்கப் பாடல்கள் பாடிக்கொண்டிருந்த காலகட்டத்தில், பாடியே புரட்சியை கொண்டு வந்துவிடலாம் என்று தீவிரமாக நம்பியிருக்கிறேன். மணிக்கணக்கில் தலைவர்கள் பேசி மக்களை கலைக்கிறார்கள், என் பாடலில் மக்களைத் திரட்டி ஒன்றுபட வைக்க முடியும் என்ற உறுதியோடுதான் சொற்களைப் போட்டு எழுதி பாடித் திரிவேன். தோழர்கள் கே.ஏ.குணசேகரனும், எம்.பி.சீனிவாசனும் தான் புரட்சிகர இந்தியாவை சாத்தியமாக்கக் கூடியவர்கள் என்று தோன்றும். சொற்களின் மீதும், இசையின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கையை ஏற்படுத்தியது என் பள்ளி பருவ இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கலை இலக்கியப் பெருமன்ற மேடைப் பாடல்கள்தாம். பாரதி, பாரதிதாசன் போன்று மக்கள் கவியாக வேண்டும் என்ற கனவுமிருந்தது. அவையில் பேச்சாளியாய், என் முன்னே கூடியிருக்கும் பார்வையாளர்களுக்கு முன் “அறிவை விரிவு செய், அகண்டமாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை” என்று பாரதிதாசனாய் உறுமும் போது கவிதையில் கட்டுண்டிருந்தது என் குழந்தை மனம்.
பொறியியல் கல்லூரி காலங்களிலும் தமிழ்த்துறை மாணவி போல போய் வா கடலலையே என்று கவிதை எழுதிக்கொண்டு கவியரங்கங்களில் பங்குகொண்டு அலைவதை வகுப்புத் தோழர்கள் கேலியும் கிண்டலும் செய்வார்கள். தொழில்முறை படிப்பென்பதால் கடுமையான கெடுபிடிகள் இருக்கும். வகுப்புகளை, செயல்முறை பட்டறைகளை நண்பன் ஒருவனுக்கு கவித்துவமான காதல் கடிதம் எழுதுவதற்காகத் தியாகம் செய்திருக்கிறேன். பின்னாளில் இலக்கியத்தைத் தேர்வு செய்தது, கவிதையைத் தீவிரமாகப் பயற்சி செய்ய வேண்டிய துறையாகவும் மேற்கொண்டது, என்பதெற்கெல்லாம் வித்தாக என் பதின்மபருவ ஆர்வங்களும் நம்பிக்கைகளும் இருந்திருக்க முடியும்.
கி.மு, கி.பி என்பதுபோல எனக்கும் அப்பாவிற்கு முன், அப்பாவிற்குப் பின் என்ற காலகட்டங்கள் உண்டு. என் அப்பா தமிழ்ப்பேராசிரியர். இயக்குனர் பாரதிராஜாவின் திரைப்படங்களில் முனைவர் பட்டம் பெற்றவர். எங்கள் வீட்டு வி.சி.பியில் சதா பதினாறு வயதினிலேயும், நிழல்களும், கிழக்கே போகும் ரயிலும் ஓடிக் கொண்டே இருக்கும், ஃபிலிம் சொசைட்டி திரையிடல்களில் அப்பா மடியில் தூங்கியது போக பார்த்த படங்களும் நிழல் நினைவுகள். சினிமாக் கட்டுரைகளை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்துத் தரச்சொல்லுவார் அப்பா. திக்கித் திணறி அகராதியைக் கிழித்து தோராயமாக செய்து தருவேன். வாயில் நுழைய முடியாத சினிமா சொல்லாடல்கள் மனதில் சும்மா பெயருக்காவது பதிந்தது அப்போது. மற்றபடி அப்பா தேர்வு செய்யும் படங்களைதான் நான் திரையரங்குகளில், அதுவும் அவரோடுதான் போய் பார்க்க முடியும். வளர்ப்பில் அவர் ரொம்ப கறார்.
கல்லூரிக் காலங்களில் மாணவர் இயக்கங்களோடு இணைந்து கிராமங்களில் தெரு நாடகங்கள் போட்ட அனுபவமும் அது தந்த பாடங்களும்தான் மக்கள் சினிமாவை நோக்கி என்னைத் தள்ளியது எனலாம். பின்னர் வெகுஜன சினிமாவில் இயக்குனர்கள் பாரதிராஜாவோடும், சேரனோடும் கூட பெரிதும் ஒவ்வாமல் தொடர்ந்து வேலை செய்ய முடியாமல் போனது கூட தற்செயலானதல்ல. நானறிந்த சமூகமாக சினிமா இல்லை என்பதும் ஒரு நிலப்பிரபுத்துவ அமைப்பாக சினிமா துறை எனக்கு தெரிந்ததும், எனக்கான தனியான சினிமா பயணத்தைத் தொடங்கினேன்.
எது உங்களின் சிந்தனை பரிணாமத்திற்குக் காரணமாக இருந்தது?
லீனா மணிமேகலை: எம் சமூகத்தில் ஏன் சிலருக்கு மட்டும் உணவு கிடைக்கிறது? ஏன் பலரின் உயிருக்கு மதிப்பில்லை? ஏன் ஒரு சாரார் மட்டும் சமமாக நடத்தப்படுவதில்லை? ஏன் ஒடுக்கப்படுகிறார்கள்? இந்த ஏற்றத்தாழ்வின் திட்டங்களை யார் தீட்டுகிறார்கள்? என்ற கேள்விதான் நம் எல்லோருடைய சிந்தனைக்கும் வித்தாக இருக்க முடியும் என்று நம்புகிறேன். பெரிய தத்துவங்கள்,கருத்தியல்கள், வரலாறுகள் எல்லாம் அடிமை என்றொருவர் இருப்பதால்தானே இருக்கின்றன.
இலக்கியத்தில் அல்லது இயக்கத்தில் யாரை முன் மாதிரியாகக் கொள்கிறீர்கள்?
லீனா மணிமேகலை: கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையும், பெண் ஏன் அடிமையானாள் புத்தகமும் படிக்க கிடைக்காமலிருந்திருந்தால் இவ்வளவு இறுமாப்போடு உங்களோடு உரையாடிக் கொண்டிருக்கமாட்டேன். பெரியார் என்ற கிழவன் இல்லையென்றால், பெண் என்பவளுக்கு இருப்பு மட்டுமல்ல, நினைவே மறுக்கப்பட்ட ஒரு சமூகத்தில் அவ்வையாரையும், வெள்ளிவீதியாரையும், காரைக்கால் அம்மையையும், ஆண்டாளையும், முத்துப்பழநியையும், இன்னும் என் மூதாய்களை தேடிப் பகுத்து அறிந்துகொண்டிருக்க மாட்டேன். என் முன்னோரை தெரிவு செய்யும் வாய்ப்பு இல்லையென்றாலும், என் முன்னோடியாகப் பெரியாரை தெரிவு செய்திருக்கிறேன்.
இடதுசாரி குடும்ப பின்னணி என்பதால் கார்க்கியின் தாய் நாவல்தான் நான் வாசித்த முதல் இலக்கியப் பிரதி. புரட்சியில் இளைஞர்கள், ஜமீலா, முதல் ஆசிரியன், செம்மணி வளையல் போன்ற சோவியத் இலக்கியமும், தாமரையும், பாரதி –பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனாரும் என் தந்தை எனக்கு அறிமுகப்படுத்திவை. கல்கியும், சாண்டில்யனும், பாலகுமாரனும், ரமணிசந்திரனும் என் அம்மாவின் அலமாரியில் திருடியவை. சுயதேர்வு வந்த பிறகு ஜெயகாந்தனும்,அம்பையும்தான் என் ஆதர்ச எழுத்தாளுமகள். சந்திக்கிற ஆண்களில் ஹென்றியைத் தேடும் நோய் பிடித்து ஆட்டிய காலம் என் பதின்ம பருவம். அம்பையின் சிறகுகள் முறியும் படித்துவிட்டு நிம்மதியில்லாமல் வெறிபிடித்து அலைந்த இரவுகள் அநேகம். சிறுகதையில் மாண்டோ பெரியவனா, கடவுள் பெரியவனா என வியந்ததுண்டு. கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், புதுமைப்பித்தன், ஜி.நாகராஜன், அசோகமித்திரன், லா.ச.ரா,வண்ணநிலவன், வண்ணதாசன், ஆதவன், சுந்தர ராமசாமி போன்றோரை முறையாக வாசித்தது ஜெரால்டோடு கூடிய நட்பு காலத்தில்தான். தமிழ் மாணவரென்பதால் ஜெரால்டு காதல் நிமித்தம் என் நூலகராகவும் உதவி செய்தார்.
கவிதையில் பிரமிள், கலாப்ரியா, ஆத்மநாம், சி. மணி, நகுலன், பிரம்மராஜனின் மொழி பெயர்ப்புகள், சுகுமாரன், மனுஷ்யபுத்திரன், யவனிகா ஸ்ரீராம், ஹெச்.ஜி, ரசூல், ரிஷி, சுகந்தி சுப்ரணியன் என்று ஒரு வாசிப்பு தடம் எனக்குண்டு.
ஈழ இலக்கியத்தில் புனைவில் ஷோபா சக்தியும், யோ.கர்ணனும், கவிதையில் சேரன், கருணாகரன் வ.ஐச.ஜெயபாலன், சிவரமணியும், கட்டுரைகளில் அ.முத்துலிங்கமும் மொழியியலில் நுஃமானும் எனக்கு நெருக்கமானவர்கள்.
ஆங்கிலம் வழி தாஸ்தாவெஸ்கி, டாட்ஸ்டாய், பாமுக், மார்குவெஸ், கமலா தாஸ், மஹாஸ்வேதாதேவி, அருந்ததி ராய், அமிதவ் கோஷ், ருஷ்டி, கிரண் தேசாய், காலத் ஹுஸைனி, சில்வியா பிளாத், செக்ஸ்டன், சிக்சூ, உல்ஃப், கேதெ ஆக்கர், அக்மதோவா, கொலண்டாய், ட்ரின் மின்ஹா,காஃப்கா, ஜெர்மைன் க்ரீர், ஜூன் ஜோர்டன், மாயா ஏஞ்சலோ, அனாய்ஸ் நின், அலைஸ் முன்ரோ,அலைஸ் வாக்கர், நபகோவ், பாமுக்,முராகாமி, அமெரிக்க பீட்ஸ் தலைமுறை எழுத்தாளர்கள் ஆகியவர்களையும் தரிசித்ததுண்டு.
சம காலத்தில், நான் மிக நேசிக்கும் கவிஞர்கள் லஷ்மி மணிவண்ணன், பாலை நிலவன், கண்டராதித்தன், செல்மா ப்ரியதர்ஷன், இசை, இளங்கோ கிருஷ்ணன், தூரன் குணா, சபரி, வெயில்,நரன், சிறுகதை எழுத்தாளர்கள் அசதா, அழகிய பெரியவன், ஆதவன் தீட்சண்யா, பாலா, நாவலாசிரியர்கள் பாமா, ஜோ.டி.குரூஸ், ஜாகிர் ராஜா.
திறனாய்வில் பிரம்மராஜனும், எஸ்.சண்முகமும், சி.மோகனும் நான் கவனமாக வாசிப்பவர்கள். அ.மார்க்ஸின் கட்டுரைகள் என்றென்றைக்கும் என்னை ஒரு கலகத்திற்கு தயார்படுத்திக்கொண்டேயிருக்கும் உந்துசக்தி. சாஹிப் கிரான் சுயத்தை இழந்து அன்பிற்காக நிற்கும் என் இலக்கிய தோழமை.
இப்படி எல்லோரும், எல்லாமும் என்னை ஏதோ வகையில் தொடர்ந்து இயங்க வைக்கும் முன்மாதிரிகள் தாம்.
இயக்குனர் அல்லது கவிஞர் எனும் ஆளுமைகளைத் தவிர்த்து வேறெந்த மாதிரியான செயல்பாடுகளில் ஈடுபடுகிறீர்கள்?
லீனா மணிமேகலை: இலக்கியம் மற்றும் சினிமா வாசிப்பும், பயணமும், கலை–கோட்பாடு குறித்த உரையாடல்களில் ஒரு மாணவியாகப் பங்கேற்பதும், திரைப்பட விழாக்களுக்கு செல்வதும், அரசியல் கட்டுரைகளை தமிழிலும், ஆங்கிலத்திலும் தேடி விரும்பி படிப்பதும் தவிர மிச்ச நேரத்தில்தான் எழுதுவதும், திரைப்படங்கள் உருவாக்குவதிலும் செலவிடுகிறேன். மாற்று சினிமா களத்தில் இந்தியா முழுவதும் தீவிரமாக பயணம் செய்து, சுவாதீன மற்றும் ஆவணப்பட இயக்குனர்களோடு கொண்டுள்ள நட்பும், அவர்களோடு தணிக்கைக்கெதிரான, கருத்துச் சுதந்திரத்திற்கான போராட்டங்களில் இணைந்து செயல்படுவதும் எனக்கு உத்வேகம் அளிப்பவை. பெண்ணிய உரையாடல்களிலும் கேரள, வங்காள கன்னடத் தோழமைகளோடு பங்குபெற்றிருக்கிறேன். தமிழகத்திலும் மற்ற மாநிலங்களிலும் இருக்கும் பல்கலைகழகங்களுக்கு, கல்லூரிகளுக்கு, பள்ளிகளுக்குத் தொடர்ந்து பயணித்து ஆவணப்பட திரையிடல்களும், சாதி–பெண்ணியம்– கலாசார அரசியல்–சுற்றுப்புறச்சூழல் குறித்த கலந்துரையாடல்களும் செய்ததில் நான் கற்றுக்கொண்டது ஏராளம்.
என் ஆவணப்படங்களைத் திரையிடுவதற்காக தமிழகத்தின் கிராமங்கள் தோறும் சென்றதும் மக்களை சந்தித்து உரையாடியது, விவாதித்தது, அவர்களின் கவலைகளை, நம்பிக்கைகளை, அனுபவங்களை, கோபங்களை, ஆதங்கங்களைப் பகிர்ந்துகொண்டதும் நான் கற்ற சிறந்த கல்வி. பள்ளி, பொறியியல் கல்லூரி படிப்பைவிட என் சமூகம் பற்றிய புரிந்துணர்வை ஆவணப்படங்கள் மூலம் மக்களோடு உரையாடியதன் வழியேதான் பெற முடிந்தது. கருத்தியல் ரீதியாகவும், மார்க்சியம், தலித்தியம், பெண்ணியம் போன்றவற்றை கோட்பாடாக படிப்பதைவிட மக்களின் அன்றாடப் போராட்டங்களின்வழி ஊடாடிப் பார்ப்பது வேறு படிப்பினைகளைத் தருகிறஅனுபவம்.
இது தவிர்த்து என் நேரத்தை பெரிதும் நிரப்புவது இசைதான். இசை என்னை சதா குணப்படுத்தும் மாய சக்தி. இளையராஜா, ரஹ்மான் என்று வெகுஜன தமிழிசையில் தொடங்கி, ஹிந்துஸ்தானி, சூஃபி, ஜாஸ், ப்ளூஸ், வெஸ்டர்ன் கிளாசிக்கல், பாப், ராப், ஹிப்ஹாப் என்று என் பயண வாழ்வு இசையின் ரசிக வெளியை விரிவுபடுத்தியிருக்கிறது.
உலகம் முழுதும் பல நாடுகளுக்குச் சென்று உங்கள் ஆவணப்படங்களையும் குறும்படங்களையும் மக்களிடம் அறிமுகப்படுத்தி வந்துள்ளீர்கள். அது குறித்தான அனுபவங்களைக் கூற இயலுமா?
லீனா மணிமேகலை: ஐரோப்பிய ஒன்றிய ஃபெலோஷிப்பில் இந்தோ ஜெர்மன் கலாச்சாரப் பகிர்வின்பால் ஆவணப்படப் பயிற்சிப் பட்டறையில் கார்டிஃப்பின் தாம்சன் மீடியா பவுண்டேஷனிலும் (Thomson MediaFoundation), திரைப்படங்களின் மூலம் சமூக சிக்கல்களை அணுகுவது பற்றிய ஃபின்லேண்டில் உள்ள டாம்பரே(Tampere) பல்கலைகழகத்திலும், புதுதில்லி இன்ஸ்டிடியூட்டின் தயாரிப்பு மேற்பார்வையில் பங்கேற்று ‘கனெக்டிங் லைன்ஸ்‘(Connecting Lines) என்ற மாணவர் அரசியலைக் குறித்த ஆவணப்படத்தை என் ஜெர்மானிய இயக்குனர் தோழி மிக்கேலாவுடன் எடுத்தது என்னை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றது. அந்த ஃபெலோஷிப்பில் ஐரோப்பா வந்திருந்த தருணத்தில்தான் லண்டனில், ஃபிரான்ஸில், ஜெர்மனியில், சுவிஸ்ஸில் ஈழத்து நண்பர்களின் அழைப்பில் என் ஆரம்ப கால ஆவணப் படங்களைத் திரையிட்டேன். ஒற்றையிலையென கவிதை நூலைப் பற்றிய விமர்சனக் கூட்டங்களும் நடந்தன. அவர்களுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.
சிகாகோ சர்வதேச பெண் இயக்குநர்கள் திரைப்பட விழாவுக்காக அமெரிக்கா சென்றிருந்தபோது, அமெரிக்க தமிழ்ச் சங்க தோழமைகள் பல்வேறு திரையிடல்களையும், விவாதங்களையும், சந்திப்புகளையும் ஒழுங்குபடுத்தினார்கள். சங்கரபாண்டி, விஸ்வநாதன் போன்ற சிறந்த தோழர்களையும், பல்வேறு பல்கலைக்கழக இந்திய அமெரிக்க நண்பர்களையும்,செயல்பாட்டாளர்களையும், ஃபிரண்ட்ஸ் ஆஃப் சவுத் ஆசியா தோழர்களையும் அமெரிக்கப் பயணம் பரிசளித்தது.
சர்வதேச பெண் ஊடகவியலாளர்களின் அமைப்பில் செயலாற்றியதால் அமெரிக்காவிற்கு சர்வதேச மாநாட்டு வேலைகளுக்கு சென்ற தருணங்களில் மீண்டும் தமிழ்ச்சங்க நண்பர்கள் மூலம் என்னுடைய அப்போதைய புதிய படங்களின் திரையிடல்களும், சந்திப்புகளும் நடந்தன. அந்த சமயம் கனடாவிலும் ஈழத் தோழமைகள் சேரன், சுமதி ரூபன் உதவியால் படங்களைத் திரையிடும் வாய்ப்பு கிடைத்தது. மலேசியாவிற்கு ஆசியத் திரைப்பட விழாவிற்கு நடுவராக வந்த அனுபவமும் வாய்த்தது.மலேசிய தமிழ் நண்பர்களின் முயற்சியில் மலேசியத்தமிழ்ச் சங்கத்திலும், சிங்கை தமிழ் நண்பர்களின் அன்பின் பேரில் சிங்கப்பூர் நூலகத்திலும் ஆவணப்படங்களைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பும் பெற்றேன்.
அகில உலக சோஷலிஸ்ட் இளைஞர்கள் மாநாட்டிற்காக வெனிசுவலா சென்றது மிக அரிய அனுபவம். மிலிட்டரி மேன்ஷனில் தங்கியதும், பொருட்களைத் திருடு கொடுத்ததும், வேளைக்கு ஒரு பிரட்டும், கால் கோழியும், அரை வாழைப்பழமும் ரேஷனில் சாப்பிட்டதும், லத்தீன் அமெரிக்கா பற்றிய என் படிமங்களை மாற்றிப்போட்ட பயணமது. சேவெசின் 11 மணி நேர உரையையும் ஒரு எழுத்து ஸ்பானிஷ்கூட தெரியாமல், புல் தரையில் அமர்ந்து கேட்டது பசுமரத்தாணி போல நினைவிலாடுகிறது. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஊடகச் செயல்பாடுகளைப் பற்றிய கட்டுரைகள் வாசித்ததும், ஆவணப்படங்களை திரையிட்டதும், பார்த்ததும், இன்னும் மாநாட்டின் இறுதி தீர்மானங்களின்போது இடதுசாரி தோழர்களோடு ஈழம் குறித்த பலத்த உரையாடல்களை மேற்கொண்டதும், இலங்கை ஜே.வி.பி,மற்றும் இந்திய மார்க்ஸிஸ்டுகளோடு கடுமையாக வேறுபட்டு சர்வதேச அரங்கில் ஈழம் குறித்த சரியான சித்திரத்தை வழங்கப் போராடியதுமாய் மிகத்துடிப்பான நாட்கள் அவை.
தேவதைகள் ஆவணப்பட முயற்சியில், சர்வதேச அரங்கில் மிக முக்கியமான ஆவணப்பட இயக்குனராக என்னை நிலைநிறுத்தியது. பெர்லின் திரைப்பட விழா, கென்யாவின் சர்வதேச பெண் திரைப்பட விழா, முனிச் சர்வதேச திரைப்பட விழாவில் ஹாரிசான் விருதுக்காக போட்டியிட்டது, மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் தங்கச் சங்கு விருது வாங்கியது, ரோம் திரைப்பட விழாவில் பங்கு பெற்றது, இன்னும் பெல்போர்ன், பெல்கிரேட், சவுத் ஆப்பிரிக்கா என்று சர்வதேசத்தில் பரந்துபட்டு என்னை திரைப்படைப்பாளியாய் கொண்டு சென்றது தேவதைகள் தான்.
சார்லஸ் வாலஸ் ஸ்காலர்ஷிப்பில் லண்டன் பல்கலைகழகத்தில் மானுடவியல்–சமூகவியல் சினிமா குறித்த ஆறு மாத ஆராய்ச்சி படிப்பு என்னை பரீசிலித்து கொள்ளவும், படைப்புலக சுற்றளவை விரித்துக்கொள்ளவும், கலை–காட்சி – தொழில்நுட்பம் வராலாற்றை பரிச்சயம் செய்துக்கொள்ளவும் உதவியது.
காமன்வெல்த் ஃபெலொஷிப்பில் லண்டன் வந்திருந்தபோதுதான் ஷோபா சக்தியோடு நட்பு வலுத்தது. ஃபிரான்ஸிலும், இந்தியாவிலும் சம்பிரதாயமாக சந்தித்திருந்தாலும், லண்டன் சந்திப்பு இடைவெளிகளை அன்பால், உரையாடலால், புரிதலால் நிரப்பி, சேர்ந்து பணி செய்யும் இடத்திற்கு நகர்த்தியது.
அகில உலகளவில் நடக்கும் முப்பதிற்கும் மேற்பட்ட மிக முக்கியமான சர்வதேச திரைப்பட விழாக்களில் செங்கடல் பங்கேற்றதால், தொடர்பயணியானேன். செங்கடல் திரைப்படத்திற்கான விநியோகத்தை Crowd Funding – நேரடி பார்வையாளர்கள் பங்கேற்பு திட்டத்தின் மூலம் ஐரோப்பா – அமெரிக்கா கண்டங்களில் ஏறக்குறைய ஐம்பதுக்கும் மேலான திரையிடல்களை ஒழுங்கு செய்யமுடிந்தது. உரையாடல் வெளியை மொழி கடந்து, பிராந்திய தேச கலாசார எல்லைகள் கடந்து, கலை மிக வீர்யமாக முன் நகர்த்தும் என்ற நம்பிக்கையை என் திரைபயணங்கள் உறுதி செய்த வண்ணம் இருக்கின்றன.
உங்கள் குறும்படங்கள் சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டுவர காரணியாக இருந்துள்ளதா?
லீனா மணிமேகலை: ஒரு திரைப்படத்தால் சமூகத்தில் மாற்றம் வந்துவிடும் என்பது அதீத நம்பிக்கை. ஆனால் உறுதியாக ஒரு வலுவான உரையாடலை நிகழ்த்த முடியும். இடையீட்டைக் கோர முடியும். ஒரு துண்டு வீடியோ, மக்களிடம் தீயாய் பற்றி ஒரு மக்கள் இயக்கமாக மாறியதை நான் நேரடியாகப் பார்த்திருக்கிறேன். மாத்தம்மா, பறை, பலிபீடம் போன்ற என் முயற்சிகள் அத்தகையவையே! அரசாங்கத்தின் இடையீட்டைக் கோரிப் பெற்றதில் இப்படங்கள் வெற்றி பெற்றன.
ஆரம்ப கட்டங்களில் அரிய திரைப்படைப்புகளைத் தந்துவிட வேண்டும் என்ற உந்துதலெல்லாம் எனக்கில்லை. எனக்கு தொழில்நுட்பம் கைவருகிறது, மக்கள் பிரச்சினையை ஏதாவதொரு வகையில் வெளிக் கொண்டு வர வேண்டும், சரி, படமெடுப்போம் என்ற வகையிலேயே நான் இயங்கத் தொடங்கினேன். ஒரு மீடியா ஆக்டிவிஸ்டாகத்தான் என்னை வரித்துக்கொண்டேன். கிராமங்கள் தோறும் தெருமுனைகளில், பள்ளிக்கூடங்களில், கல்யாண மகால்களில், தேரடியில், நூலகங்களில், பஞ்சாயத்து அலுவலகங்களில், மாட்டுக் கொட்டில்களில்கூட படங்களைத் திரையிட்டிருக்கிறேன். நிழல் திரைப்பட இயக்கம், அமுதனின் மறுபக்கம் திரைப்பட இயக்கம், இடதுசாரிகளின் இளைஞர்–பெண்கள்–பண்பாட்டு இயக்கங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், என்.ஜி.ஓக்கள், பல்கலைகழகங்கள் என்று என் படங்களை கிராமங்கள் தோறும் கொண்டு செல்வதற்குப் பின் ஒரு பெரிய படை இருக்கின்றது. ஒவ்வொரு திரையாக்கமும், ஒவ்வொரு திரையிடலும் எனக்கு சமூகம் பற்றிய புதிய பாடங்களை கற்றுத் தந்தன.
என் படங்கள் சில கேள்விகளை, எளிய நம்பிக்கைகளை, சுய விமர்சனங்களை, இடையீடுகளை, உறுதிமொழிகளை ஒரு கூட்டு மனசாட்சியின் நடவடிக்கையாக ஓரளவு நிகழ்த்தியுள்ளன என்று நான் நிச்சயமாக கூற முடியும்.
பெரியாரியம் பற்றி பேசினீர்கள். திருமணம் பற்றியும் குடும்ப அமைப்பு பற்றியும் உங்க பார்வை என்ன?
லீனா மணிமேகலை: திருமணம், குடும்ப அமைப்பு நிச்சயம் பெண்ணை இரண்டாம்பட்ச நிலைக்குத் தள்ளுபவைதான். இன்று போரினால் கொல்லப்படும் மக்களை விட, வறுமையால் இறக்கும் மக்களைவிட, குடும்ப வன்முறையால் சாகும் பெண்களின் எண்ணிக்கை அதிகம் என்று புள்ளிவிபரங்கள் சொல்கின்றன.
உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் போன்றவற்றால் பெண்கள் பெருவாரியாக படிக்கிறார்கள், வேலைக்கு வந்துவிட்டார்கள் என்றெல்லாம் உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் பெண்களுக்கு இரட்டைச் சுமைதான் எஞ்சியுள்ளது. குடும்பங்களில் ஆண் பெண் வேலைப்பகிர்வு என்பது எல்லாவகையிலும் சனநாயகப்படுத்தப்படவில்லையென்றால், பெண்கள் அழுத்தத்தில் தற்கொலை செய்துகொள்வதையும், மனப்பிறழ்வடைவதையும், வெளியேறுவதையும் தடுக்க முடியாது. குடும்பங்களில் பெண்கள் செய்யும் சமையல், துப்பரவு, குழந்தை வளர்ப்பு, வீட்டு நிர்வாகம் போன்ற வேலைகளுக்கு ஊதிய மதிப்பை கணக்கிட்டுப் பார்த்தால் புரியும், குடும்பம் எத்தகைய சுரண்டல் அமைப்பென்று!
மாடுபிடிக்கும் வேலைபோல சொந்த சாதியில் பெண்களை விலைபேசி விற்கும் இழிவு இந்த நூற்றாண்டிலும் நம் சமூகத்தில்தான் நடந்துக் கொண்டிருக்கிறது. கேவலம் பிடித்த மேட்ரிமோனியல் அறிவிப்புகள் நம் சமூகத்தின் அவமானச் சின்னம். பெண்ணிற்கு சுய தேர்வை மறுக்கும் கெளரவக் கொலைகள் குடும்பம் மற்றும் சாதியின் கொடூர வன் முகங்கள்.
ஜெரால்டு என்ற என் தோழனை நான் கைப்பற்றியபோது, திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ எங்கள் குடும்பங்கள் அனுமதிக்கவில்லை. என் குடும்ப வரலாற்றிலேயே, முதன் முதலாக சாதி–மத-சடங்கு மறுப்பு திருமணத்திற்காக வெளியேறியவள் நான். ஏன் தாலியில்லை என்ற கேள்விக்கு பதில் சொன்ன காலம் கடந்து, இன்று விவாக மறுப்பு காலம் வரை வந்துவிட்டேன். வலி நிறைந்த வாழ்க்கைப் போராட்டம். நம்பும் கொள்கைகளை சொந்த வாழ்க்கையிலாவது கடைப்பிடிக்க வேண்டும், நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற என் பிடிவாதத்திற்கு நான் கொடுத்த விலை அதிகம். என் அன்புக்குரியவர்களைக் கொடூரமாக மனக்காயப் படுத்தியிருக்கிறேன் என்று எண்ணி இரவிரவாக சில சமயங்களில் அழ நேர்ந்தாலும், வேறு வழி தெரியவில்லை. சொந்த சாதியில் சீர் செனத்தி, நில பாகங்களோடு திருமணம் செய்திருந்தால் என்னைப் புதைத்த இடத்தில் புல் முளைத்திருக்கும். குடும்ப அமைப்பை சனநாயகப்படுத்துதல், பெண்ணின் சுயதேர்வு, ஆண்-பெண் வேலை பகிர்வு, வரதட்சணை ஒழிப்பு, பெண்ணுக்குச் சொத்துரிமை, சாதி மறுப்பு திருமணங்கள், காதல் வாழ்வில் சேர்ந்திருப்பது, குடும்பமின்மையைத்தேர்வு செய்வது, மண விலக்கிற்கான பூரண சுதந்திரம் என்று பல புள்ளிகளில் சீரமைப்பு தேவையாய் இருக்கின்றது.
வர்ஜீனியா வுல்ஃப் சொன்னது போல் Room of my own முப்பத்திரண்டு வயதில் தான் எனக்கு சாத்தியமானது. ஒரு பெண் தனக்கென்று ஒரு வீட்டை ஏற்படுத்திக்கொள்வது, வாழ்வது என்பதை இன்னும் இந்த குடும்ப அமைப்பு அடாத செயலாக, ஒழுங்கு மீறலாக, நடத்தை கெட்ட தனமாகத்தான் பார்க்கிறது. எப்படி தனியாக இருக்கிறீர்கள் என்ற இந்த சமூகத்தின் கேள்விக்கு என் காதுகள் செவிடாகக் கடவதாக!
தங்கள் இதழியல் அனுபவம் குறித்துக் கூறுங்கள்?
லீனா மணிமேகலை: பள்ளிக்கூட காலங்களில் பூந்தளிர் சிறுவர் குழு அமைத்து தினமணி சிறுவர் பகுதியில் எங்கள் குழு நடத்தும் நிகழ்ச்சிகள் குறித்து தொடர்ந்து எழுதியதில் தொடங்கியது என் இதழியல் ஆர்வம். என்னுடைய 13 வயதில், ஓவியப் போட்டியில் வென்று சோவியத் யோனியனுக்கு ஒரு மாதம் பயணம் செய்தேன். சரவ்தேச ஆர்தெக் குழந்தைகள் முகாமில் பங்கெடுத்த அனுபவத்தை ஏழு வாரம் “ஜனசக்தியில்” தொடராக எழுதினேன். பொறியியல் கல்லூரி காலங்களில் “சிறகுகள்” என்ற கையெழுத்துப்பிரதி எடிட் செய்தேன். அந்த காலகட்டத்தில் ஆனந்த விகடன் அறிமுகம் செய்த “மாணவர் எடிட்டர்” திட்டத்தில் பங்கு பெற்றதில், சிறகுகளில் எழுதியிருந்த சிவகாசி குழந்தை தொழிலாளர்கள் பற்றிய கட்டுரை விகடனில் வெளியானது. அப்போது நான் அடைந்த மகிழ்ச்சியைப் பார்த்து, என் தாத்தா (அ.வெங்கடசாமி) பொறியியல் படிப்பை விட்டுவிட்டு நான் ஏன் ஜர்னலிசம் படிக்க கூடாது என்று கேட்டார். என் அப்பா(இரா. இரகுபதி) கட்டோடு மறுத்துவிட்டார். விகடன் தந்த உற்சாகத்தில், தினமணிக்கு கூட நடுப்பக்க கட்டுரை எழுதினேன். தாத்தா அதை ஃபிரேம் செய்து வைத்திருந்தார். அதில் அவருக்கு ஒரே பெருமை.
திருமணத்திற்குப் பிறகு, திரைப்பட ஆர்வலர்களாக நானும் ஜெரால்டும் ‘திரை‘ பத்திரிகை என்ற சிறு முயற்சியை செய்தோம். ஏழு இதழ்களுக்கு மேலாக பொருளாதார நெருக்கடி மற்றும் விநியோகம் சந்தை குறித்த போதாமைகளால் தொடர்ந்து நடத்த முடியாமல் நிறுத்திவிட்டோம். ஒரு இலக்கிய வாசகியாக, லும்பினி தோழமையோடு இணைந்து நிறப்பிரிகையின் பதின்மூன்று இதழ்களையும் சேகரித்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்த முயற்சி மனதுக்கு மிகவும் நெருக்கமான தருணம். நிறப்பிரிகை தமிழ் நவீன இலக்கியத்தில் ஒரு அழியா சுனை.
உங்கள் கவிதைகளின் சொல் மற்றும் வரிகளின் அடுக்குகள் அவற்றுக்கென தனிச் சிறப்புடன் ஓர் இடத்தில் அமர்கின்றன. பிரக்ஞையோடு அவற்றை அடுக்குகிறீர்களா? அவை எவ்வகையில் கவிதைக்கு அவசியமாகின்றன?
லீனா மணிமேகலை: கவிதையில் இயங்கும் வார்த்தைகள் அதற்கெனவே கொடுக்கப்பட்ட இடங்களில் வாகாகச் சென்று அமர்வதில்லை. ஒழுங்கு குலைந்த அடுக்குகளில்தான் இடம்பெறுகிறது. அவை வாசிப்பவரின் அர்த்தம் கோரும் நேர்க்கோட்டுத்தன்மையை விட உணர்வுத் தளங்களை அதிகம் கோருகின்றன. வெறும் உணர்ச்சிக் கோர்வைகளா என்று கேட்டுவிட வேண்டியதில்லை. ஆணின் அத்தனை பிரதிகளிலும் உணர்ச்சியற்ற இடத்தில்தானே பெண் வைக்கப்பட்டிருக்கிறாள்? அதனாலேயே கவிதையில் உணர்வுத் தளம் என்பதும் ஒழுங்கற்ற அரசியலாகவே இருக்கின்றது.
ஆமாம், நான் பிரக்ஞையோடுதான் வார்த்தைகள், அடுக்குகள், வடிவங்கள் வழியாகக் கவிதைகளைத் தயாரிக்கிறேன். அதிக ரொட்டிகளைத் தயாரிப்பதாலேயே என் பெயர் அவற்றில் பொறிக்கப்பட வேண்டியதில்லை என்ற பிரெக்டின் (Brecht) குறிப்பொன்று கூடவே நினைவுக்கு வருகிறது.
எழுதுவதால் அதிகம் விமர்சிக்கப்படுகிறீர்கள். இதை எவ்வாறு எடுத்துக்கொள்கிறீர்கள்?
லீனா மணிமேகலை: ஆசிரியர் இறந்து விட்டார் என்பதை ஏற்கெனவே முன்மொழியப்பட்ட கருத்துருவங்கள் இறந்துவிட்டதாகத்தான் நான் எடுத்துக்கொள்கிறேன். அவ்வகையில் உலகத்தின் மொத்த மூல ஆசிரியப் பிரதிகளும் இறந்துவிட்டன என்று சொல்லலாம் எனக் கருதுகிறேன். கடவுள் உட்பட.
இப்பொழுது எழுதப்படுவது வாசக மறுபடைப்பு பிரதிகள்.
வாசகர் படைப்பாளியாகக் கோரவில்லை. அவர் தன் அரசியல் உரிமையை மீட்டெடுக்கிறார். அவ்வளவில் பிரதி மீதான ஆசிரிய ஆதிக்கம் இல்லாமல் போகிறது. வாசக மறுபதிப்பு பிரதிகளை அடித்தளப் படைப்புகளாகப் புரிந்து கொள்ளும் பட்சத்தில், மூலப்பிரதி என்பது எப்படி எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக, வழிமொழிவதாக இருக்கிறதோ, வாசக மறுபடைப்பு பிரதி எல்லாவற்றிலிருந்தும் வெளியேறி இருப்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம். அந்தப் பாதையில் எனக்கென்ற உலகைப் புதியதாகக் கட்ட முயன்ற அளவில் என் மீதான விமர்சனங்களைப் பொருட்படுத்தியும், கடந்தும் செல்ல எத்தனிக்கிறேன்.
உங்கள் கவிதைக்கான ஆரோக்கியமான விமர்சனங்கள், உரையாடல்கள் தமிழ் சூழலில் நிகழ்ந்துள்ளதா?
லீனா மணிமேகலை: இல்லை.நடந்த உரையாடல்களும் சமூகத்தின் ஆரோக்கியமின்மையையும்,நொய்மையையும் காட்டின. அது குறித்து எனக்கு வருத்தம்தான். சமூகம் என்பது ஒரு புனைவு. அதை நீண்ட காலமாக பழக்கப்படுத்திக் கொண்டவர்கள் ஒழுக்கவாதிகளாக இருக்கிறார்கள். பெண் தன் உடலை, உலகை எழுதும்போது பரத்தமை கால செவ்வியல் பண்புகளில் ஒருவித பதற்றம் ஏற்படுகிறது. இங்கே மத அடிப்படைவாதிகள் வைக்கும் அதே குற்றச்சாட்டைத்தான் மார்க்சியவாதிகளும் வைக்கிறார்கள், எல்லா இசவாதிகளும் வைக்கிறார்கள். பெரும்பாலும் பொறுக்கிகளின் கூடாரமாக இயங்கும் தமிழ் இணையம் அதற்கொரு சாட்சி.
பெண்ணை நிலைகுலைய செய்ய வைக்கும் வார்த்தைகள் இன்னும் ஏராளமாகச் சமூகத்தின் கையிருப்பில் இருக்கின்றன. ஆனால் பொதுவாக அத்தகைய ‘சமூக‘ ஆரோக்கியம் குறித்து நான் கவலைப்படுவதில்லை.
தனுஷ்கோடி கம்பிப்பாடு கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வின் துயரத்தைக் கண்டும், அதிகாரத்தால் சுரண்டப்பட்ட கொடூரத்தை கண்டும், சராசரியாக மூன்று மீனவக் குடும்பங்களில் ஒரு விதவையாவது இருப்பதை உணர்ந்தபோதும், செங்கடலை எழுதத் துவங்கினேன் எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். ஒட்டுமொத்த யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பெரும் கூட்டத்தில் நீங்கள் தொட்டிருப்பது மீனவ சமூகத்தை மட்டும் என்பதால் அவர்களின் துயரத்தை நெருக்கமாக உணரும்போது, ஈழம்/யுத்தம் குறித்த உங்களின் மனநிலை எப்படி மாறுபட்டது?
லீனா மணிமேகலை: யுத்தம் என்பது தேசிய அரசாங்கங்களின் பிரச்சினை. தேசியத்திற்கு எதிரான புரட்சி என்பது மக்கள் பிரச்சினை. இடையில் தேசிய வரைவெல்லைகளில் மக்கள் பலியாவார்கள். வளர்ந்த நாடுகளில் குடியமர வேண்டி முன்றாம் உலக நாடுகளிலிருந்து தப்பி எல்லை தாண்ட முயற்சிக்கும் லட்சக்கணக்கான மக்கள் உலகெங்கும் கொடூரமாகக் கொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். சிறிமாவோ பண்டாரநாயக்கா காலத்தில் சிறிமாவோ –லால் பகதூர் சாத்திரி ஒப்பந்தத்தால் லட்சக்கணக்கான மலையக மக்களை இந்தியா திருப்ப பெற்றுக்கொண்டதும் , இந்திரா காந்தி கச்சத் தீவை விட்டுக்கொடுத்ததும் இனப்போருக்கு முன்தானே நிகழ்ந்தது.
இலங்கை என்கிற தீவினுடைய சர்வதேச மதிப்பு பன்னாட்டு கம்பெனிகளுக்கு நன்றாகத் தெரியும்பன்னாட்டுக் கம்பெனிகளுக்குத் தன்னைத் திறந்து விடும் சிங்கள அரசாங்கம் அதை ஏற்று வாழாத, அல்லது எதிர்வினை செய்கிறவர்களை அழித்தது. ஜே.வி.பி. முன்னெடுத்த எழுச்சியின்போது பெரும்பான்மை இனமான சிங்களர்களிலேயே ஒரு லட்சம் மக்களை கொன்றது. பிறகு இன உள்முரண்களை ஊதி சிங்கள தமிழ் இனங்களைப் பிரித்தாண்டு சிறுபான்மை தேசிய இனத்தை ஒழித்தது.
சந்தை மதிப்பு மிக்க மனிதர்கள் தவிர ஒரு நாட்டின் எல்லைக்குள் அதன் சொந்த வருமானத்திற்குப் பயன்படாத அன்னியர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஒரு வேளை மீனவர்கள் வரி கட்டுபவர்களாக, அந்நியச் செலாவணியில் பங்கு கொள்கிறவர்களாக இருந்தால், அரசாங்கங்கள் பதில் சொல்லும். ஆனால், எல்லை தாண்டும் “சர்வதேச குற்றவாளிகளை ” காப்பாற்றுமா என்றால் செய்யாது. பாரம்பரியமாக மீன் பிடிப்பவர்களுக்கு சர்வதேச எல்லைகள் கிடையாது என்பதை தேசிய அரசாங்கங்கள் கையெழுத்துப் போட்டு ஒத்துக்கொள்ளும். ஆனால் நடைமுறையில் எல்லைகளில் கொலைகாரர்களை நிறுத்தும்.ஆகவே மீனவர் பிரச்சினையை மனிதாபிமான பிரச்சினையாகப் பார்க்க முடியாது. அது அரசியல் பிரச்சினை.
ஏகாதிபத்தியத்தின் சர்வதேசிய வல்லாதிக்கத்தினை ஏற்றுக்கொள்ளாத எந்த நாடும் தனித்து வாழ முடியாது. அதன் வெளிப்படையான முரண்பாடுதான் யுத்தம். மக்களை சதா சாமானியர்களாக்கி அச்சுறுத்துவதுதான் யுத்தத்தின் வெற்றி. அதற்காகத்தான் அரசாங்கங்கள் தங்கள் ராணுவத் தளவாடங்களில் இரவு பகலாகக் கருவிகளை உற்பத்தி செய்கின்றன.
இதுவே செங்கடல் அனுபவம் எனக்கு கற்றுக் கொடுத்த பாடம்.
தனுஷ்கோடி, ராமேஷ்வரம் மீனவர்களின் வாழ்க்கையை சினிமாவின் (செங்கடல்) மூலம் மீளுருவாக்கம் செய்யும் பணியில் அவர்களின் ஒத்துழைப்பு எப்படி இருந்தது? சினிமாவின் வழி அவர்களின் வாழ்வைப் பதிவாக்கும் முயற்சியில் அவர்களிடம் பழகிய கணங்களில் உங்களுக்குள் ஏற்பட்ட பதிவுகள் பற்றி சொல்லுங்கள்.
லீனா மணிமேகலை: எப்படிக் கடற்கோள் ஒரு நகரத்தை அழிக்கும் என்ற பீதியை ஏற்படுத்தும் காட்சிப் பொருளாக, நாடெங்கிலுமிருந்து பேரழிவின் சின்னத்தைப் பார்த்துவிட்டு போய்விடலாம்என்ற சாடிசத்தோடு வரும் டூரிஸ்டுகளின் வடிகாலாக, பூணூல் போட்ட அய்யர் சாமிகள் இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும் வங்காள வரிகுடாவும் – இந்தியப்பெருங்கடலும் சங்கமிக்கும் புனிதத் தலமாக தனுஷ்கோடி இதுவரை அறியப்பட்டிருக்கிறது. எனக்கு அது ஒரு பராரி நிலம். நடந்து செல்லும் மணல் மேட்டிற்கு கீழே புதைக்கப்பட்டிருக்கும் சடலங்களைக் குறித்த கதைகள் துரத்தும் காடு. உயிர் வாழ்தலை மட்டுமே செய்துகொண்டிருக்கிற அந்த மீனவ சமூகம் என் அலைவுறுதலையும் தன் பாடோடு இனம் கண்டது. குறைந்தபட்ச வாழ்வாதாரங்களோடு தங்கள் இருப்பை நீட்டித்துக்கொண்டிருக்கும் அவர்களை அதிகாரம் குற்றவாளிகளாகப் பார்ப்பதை முறையிட்டது. அதை வெளி உலகத்திற்கு எடுத்துக்காட்டி தங்கள் வாழ்வுரிமைக்கான எளிய நம்பிக்கையை செங்கடல் பெற்றுத் தரும் என்று நம்பியது. அரசாங்கங்களுக்கு எல்லைகள் குறித்தான பிரக்ஞை இருப்பது போல மக்கள் குறித்தான பிரக்ஞை இல்லை. அந்தச் சமூகத்திற்கு நற்செய்தி சொல்லிவிடும் வல்லமை எனக்கில்லை என்பது எனக்கு தெரியும். ஆனால் பொது நீதிக்கும், தன்னிலைக்குமிடையே அவர்கள் படும் போராட்டத்தை மிக நேர்மையாக, உண்மைக்கு நெருக்கமாக என்னால் செங்கடல் மூலம் எடுத்துச் சொல்ல முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. அதை எந்தப் பழுதுமில்லாமல் செய்திருக்கிறேன்.
ராணுவம், காவல் துறை, சுங்க வரித்துறை, உளவுத்துறை என்று அதிகாரம் நசுக்கும் தனுஷ்கோடியின் மீனவ வாழ்வியல் மிக மிக ஆதாரமான உரிமையையே கோருகின்றது. ஆனால் நானும் கூட இரண்டு நாடுகளுக்கான சட்டங்களுக்கு அவர்களைக் கையளித்து விட்டே திரும்ப வேண்டியிருந்தது. அவர்களின் ஆதாரமான வாழ்வின் தோல்வியே என் கலையின் தோல்வியாக இருக்கிறது.என்று நினைக்கிறேன். படம் முடக்கப்பட்ட நிலையில் சட்டங்களை மீறி கூட மீனவர்கள் வாழத்தான் செய்வார்கள் என்ற உணர்வே எனக்குமான உணர்வாக இருக்கிறது.ஆனால், இப்படிப்பட்ட நிலங்களைத்தான் ஒரு காட்சிக் கலைஞராக நான் வாழ்நாள் முழுதும் தேடி கண்டடைவேன் என்ற உறுதி மட்டும் என்னுடன் திண்ணமாக மிஞ்சியிருக்கிறது.
தங்களின் முந்தைய படைப்புகளின் (குறும்படங்கள், ஆவணப்படங்கள்) மீது உங்களுக்கு அவ்வளவு பெரிய ஈர்ப்பு இல்லாததாக ஒருமுறை சொல்லியிருந்தீர்கள். உங்களுடைய முந்தைய குறும்படங்கள், ஆவணப்படங்களின் அடைவுநிலையை எப்படி மீள்பார்வை செய்கிறீர்கள்?
லீனா மணிமேகலை: ஆரம்ப கால படைப்புகளைப் பற்றி யார் கேட்டாலும் எனக்கு நினைவுக்கு வருவது நபகோவின் மேற்கோள் ஒன்று.
“யாராவது தன்னுடைய கோழையையே தட்டில் வைத்து சுற்றுக்கு விடுவார்களா?”
செங்கடலை விட்டே நான் வெளியேறி விட்டேன். நிம்மதி என்பது ஆன்மாவிற்கு இழிவாம் நவீன்.
வெள்ளை வேன் கதைகள் என்ற ஆவணப்படம் உருவான விதம் குறித்து கூறுங்கள்?
லீனா மணிமேகலை: நான் இலங்கைக்கு யாழ்ப்பாண இலக்கிய சந்திப்புக்காக சென்றபோது, படம் எடுக்கும் எந்த தயாரிப்புகளுமற்றுதான் சென்றேன். ராணுவத்தின் பிடியில் இருக்கும் வடக்க மக்களின் ஒவ்வொரு அசைவையும், கண்காணிக்கும் உளவுத்துறையால் நிறைந்த பகுதி. சி.ஐ.டி என்ற வார்த்தை இரண்டு பேர் சந்தித்துப் பேசினாலே சில தடவைகளாவது உச்சரிக்கப்பட்டு விடும். என் பாஸ்போர்ட் விபரங்கள் ஒரு பத்து தடவையாவது வெவ்வேறு செக் போஸ்டில் பதியப்பட்டிருந்தன . இதில் படமெடுப்பதை பற்றி எல்லாம் கிஞ்சிற்றும் எண்ணம் வருவதற்கு வாய்ப்பில்லாமல் இருந்தது.
ஜூலையில் மன்னாரில் இருந்தபோது, நவிப்பிள்ளை ஆகஸ்ட் மாதம் வருவதை முன்னிட்டு காணாமல் போன உறவுகளை, போராட்டத்திற்காக இணைத்துக்கொண்டிருந்த இயக்கத்தோடு நட்பு கிடைத்தது. மன்னாரில் இருந்து முல்லைத் தீவு வரை மறுபடியும் இரகசியமான ஒரு நீண்ட பயணம். கிட்டத்தட்ட 25 கிராமங்களில்,500குடும்பங்களை நேரில் சந்தித்து உரையாடிய அந்த ஆன்ம பயணம் தான் இந்தப் படத்திற்கு உரம்.தன்னார்வளராக ஒளிப்பதிவு பணியை செய்ததோட,சிங்கள மனித உரிமை ஆர்வளர்களும் எங்களுடன் பயணித்ததால், மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினேன். என்னையும், என் ஒளிப்பதிவாளர் அரவிந்தையும் பாதுகாத்து, உணவளித்து, இடமளித்து தங்கள் குடும்பம் போல பார்த்துக்கொண்ட நண்பர்கள் தொடர்ந்து களத்தில் வேலைசெய்துகொண்டிருப்பதால், அவர்களின்பெயர்களைக் குறிப்பிட்டு நன்றி சொல்ல முடியாத துரதிருஷ்டசாலியாக நிற்கிறேன்.
வெள்ளை வேன் கதைகள் என்று சுயாதீனமாக படம் எடுக்க வேண்டும் என்ற பொறி இரணபாலையில் ஜெயா அக்காவை சந்தித்தபோது தான் தட்டியது. இரணபாலை போரால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதி. ஷெல் விழாத இடம் இல்லாததால், பொத்தல் நிலமாக காட்சியளித்த அந்த ஊரில் கூடுதலாக சில நாட்கள் தங்கி ஜெயா அக்காவின் கதையை ஆவணப்படுத்தலாம் என்று முடிவு செய்தேன். காணாமல் போன குடும்பங்களின் நம்பிக்கையும், பேரினவாத அரசாங்கத்தை விடாமல் சவால் விட்டுக்கொண்டிருக்கும் அஞ்சாநெஞ்சமும் என்னையும் தொற்றிக்கொண்டது. இரண்டாவது நாளே ராணுவத்தால் பிடிக்கப்பட்டோம். குண்டடிகளால் துளைக்கப்பட்ட ஒரு ஐஸ் க்ரீம் வண்டியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை ஒரு புதரில் மறைந்து படமெடுத்துக்கொண்டிருந்த எங்களை வசமாகப் பிடித்துக்கொண்டார்கள். மூன்று மணி நேரம் யார் யாரோ வந்தார்கள் விசாரித்தார்கள். உடனடியாக இலங்கையை விட்டு வெளியேற வேண்டும் என்று மட்டும் இறுதியாக உத்தரவு வந்தது. அடுத்த அரை மணி நேரத்தில் கொழும்பு பஸ்ஸில் ஏறி, இந்தியா வந்து சேர்ந்தோம்.
எங்களுக்கு பாதுகாப்பாக இருந்த இலங்கை நண்பர்கள் எல்லோரும் மிகப் பதற்றமாகி விட்டார்கள். இந்தியா வந்தும் எங்களுக்கு இருப்பு கொள்ளவில்லை. நானும் அரவிந்தும் ஒரு வாரம் குமைந்து தீர்த்தோம். மறுபடியும் விசா அப்ளை செய்து பார்த்தோம். கிடைத்தது. நவிப்பிள்ளை வருவதையொட்டி மீடியா நடமாட்டமும் சற்று நெகிழ்ச்சியும் இருந்த காலகட்டம். யாழ்ப்பாணம், கொழும்பு நகரங்களில் நடந்த வரலாற்று சிறப்புமிக்க, காணாமல் போனவர்களின் கவன ஈர்ப்பு போராட்டங்களை ஆவணப்படுத்தினோம். புத்தளம், மன்னார், கிளிநொச்சி, ஹோமாகாமா, நீர்கொழுப்பு, திரிகோணமலை என்று பூகோள ரீதியாகவும் இன ரீதியாகவும் பிரித்தாளப் படுகின்ற மக்களின் வாழ்க்கையை கேமிரா கொண்டு இணைக்க முயற்சி செய்தோம். காணாமல் போன குடும்பங்கள் போர்க்குற்றவாளி ராஜபக்சேவிற்கு தீராத தலைவலியை கொடுத்துக் கொண்டிருப்பவர்கள். சர்வதேச அரங்கில் மிக மோசமான அழுத்தத்தை ராஜபக்சே அரசாங்கம் காணாமல் போனவர்களின் விவகாரத்தில் சந்தித்து வருகிறது. வெள்ளை வேன் கதைகள் காணாமல் போன உறவுகளின் விஷுவல் ஆயுதம்.
குறைந்த வசதி, இராணுவ மிரட்டல் இவற்றுக்கு மத்தியில் உங்களால் எப்படி சவால் மிகுந்த கருத்தை முன்வைக்கும் ஓர் ஆவணப்படத்தை எடுக்க சாத்தியமானது? உங்கள் அனுபவதைக் கூறுங்கள்?
லீனா மணிமேகலை: பாதுகாப்பு காரணமாக நாங்கள் லாட்ஜில் எல்லாம் தங்க முடியவில்லை. சில நாட்கள் ராணுவத் தடுப்புகளை வீடியோ எடுப்பதற்காக டாக்சி எடுத்தோமே தவிர, பெரும்பாலும் டவுன் பஸ்ஸில் தான் பயணம் செய்தோம். டேப்புகளைப் பறிமுதல் செய்தல், பல மணி நேரம் விசாரித்தல், படம் எடுக்க விடாமல் தடுத்தல் எல்லாமும்தான் நடந்தது. எப்படியெல்லாம் சமாளித்தோம் என்ற தந்திரங்களை எல்லாம் எழுதினால், நாங்கள் எப்படி மறுபடியும் படமெடுப்பது. ஆட்களையே இராணுவம் ஸ்கேன் பண்ணும்போது கேமிராவை அனுமதிக்குமா என்ன? எப்படியெல்லாம் அதிகாரத்தை ஏமாற்றலாம் என்பதை படத்தைப் பார்ப்பவர்கள் தெரிந்துகொள்ளலாம். இன்று நேற்றல்ல வரலாறு முழுக்க அரசாங்கங்களின் கண்ணில் விரல் விட்டே ஆட்டியிருக்கிறார்கள் கலைஞர்கள்.
வெள்ளை வேன் கதைகள் படத்தின் தற்போதைய பிரதி, ஸ்வீடிஷ் திரைப்படப் பள்ளியின் உதவியோடு ஈழத் தமிழ் போராட்டத்தின் முழு போராட்ட வரலாற்றுப் படமாக உருவெடுக்கவிருக்கின்றது. அதனால் திரையிடல் பணிகள் மட்டுப்படுத்தப்பட்டு பிரதி மறுஉருவாக்கப் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன.
அடுத்தடுத்த படைப்புகள் குறித்த திட்டங்கள் ஏதும் இருக்கின்றனவா?
லீனா மணிமேகலை:Rape Nation என்ற பெண்களுக்கான எதிராக நடக்கும் பாலியல் கொடும்போரைக் குறித்த முழுநீள ஆவணப்படத்தின் படப்படிப்பில் தற்போது ஈடுபட்டிருக்கின்றேன். சட்டிஸ்கர், மணிப்பூர் படப்படிப்பு முடிந்திருக்கும் நிலையில், காஷ்மீர், டில்லி, மும்பை, குஜராத், ஹைத்ராபாத், கயர்லாஞ்சி பகுதிகளில் இந்த ஆண்டு முடியும் வரை படப்பிடிப்பு நடக்கவிருக்கின்றது. அடுத்த வருட ஏப்ரலில் முடிவடையும் என நம்புகிறேன்.
அது தவிர, மலையாளக் கவிஞர் கமலா தாஸ் வாழ்வையும் பிரதிகளையும் மூலமாக வைத்து தயாரிக்கப்படவிருக்கும் மலையாள/ஆங்கில திரைப்படத்தின் எழுத்து வேலைகளை முடித்து தந்திருக்கிறேன். நடிக்கவும் அழைக்கப்பட்டிருக்கிறேன்.
தமிழிலும் அடுத்த படத்திற்கு தயாரிப்பு பணிகள் நடந்துக்கொண்டிருக்கின்றன. அது ஒரு அழகான பீரியட் படம். 2015 இறுதிக்குள் அதை வெளியிடும் வாய்ப்புகள் இருக்கின்றது.
நேர்காணல் : ம. நவீன், கே. பாலமுருகன்
பின்பனிக்கால கவிதைகள்
உன்னைக் கொன்ற கத்தியை
நேற்று தான் கண்டெடுத்தேன்
அதில் என் கைரேகைகள் இல்லை
ஆனால் அத்தனை சிறிய கைரேகை
கனவுக்கும் இல்லை
வேறு யாருடையதாக இருக்கும்
உயிருடன் நீ அகப்பட்டப் பிறகும்
இந்தக் கேள்விக்கு என்ன அர்த்தம்
*
உன் சட்டை நுனியை
இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறேன்
கடந்துவிடப் போகும் இறுதி மேகத்தையும்
இழுத்துக் கொண்டிருப்பதைப் போல
பெருமழையை நிறுத்தி விடுபவள் போல
கிளைகளிலிருந்து பறவைகளை
ஒருபோதும் தப்ப விடாதவள் போல
கனன்றுக் கொண்டிருக்கும் தீயின் நீலத்தைப் போல
*
எனது வார்த்தைகளை
உனக்கு இளைப்பாறத் தருகிறேன்
அதில் டால்ஸ்டாய் எங்கே எனக் கேட்காதே
சற்றுப் பொறுமையாகப் பார்
மாங்கன்றுகளை நட்டிருக்கிறேன்
கூடு வைக்க தூக்கணாங்குருவிகளை
அழைத்திருக்கிறேன்
சிறிதுகாலம் கு. அழகிரிசாமி
இளைப்பாறியிருந்தார் தெரியுமா
அப்போதெல்லாம் அவர் கனவில்
கமலாதாஸ் வந்ததாகவும் சொல்லிக்கொண்டிருந்தார்
தன்னுடைய வார்த்தைகளாக மாற்றிக்கொள்ள முடியாததால்
பிரமிள் கோபித்துக்கொண்டு வெளியேறிவிட்டார்
உனக்குப் பிடித்த வார்த்தைகளில் ஊஞ்சலைக் கட்டிவிடுகிறேன்
நித்திரை வை
சிறுவயதில் நீ கடலில் பிடித்து விட்ட நண்டுகள்
திரும்பி வரலாம்
ஃப்ரீடா போல நீ ஆசை ஆசையை வரைந்துப் பார்த்த
முதல் காதலி புன்னகைக்கலாம்
அணைத்துக் கொள்
வார்த்தைகள் உனதாகலாம்
*
நினைவு ஒரு கறுப்பு வெள்ளைப் புகைப்படம்
அதில் வண்ணமடித்துப் பார்க்கிறேன்
மாசாகப் படிகின்றது
சட்டத்திற்குள் அடித்தால்
திரவமாக கசிந்து வெளியேறுகிறது
பரிசாக கைமாற்றினால் காணாமல் போகிறது
பிரதி செய்தால் உருவம் கலைகிறது
பாரம் தாங்காமல் ஒரு பறவையிடம் தந்தேன்
அது
காலமற்ற நிலத்தில்
அதை தவறவிட்டுவிட்டதாக அறிகிறேன்
*
காதல் வேண்டும்
காதலின் முதல் பருவத்துக்
காதல் வேண்டும் குடித்து முடித்தும் தளும்பிக் கொண்டிருக்கும்
திராட்சை ரசம் போல
*
நாம் பயணம் செய்த படகை உனக்கு நினைவிருக்கிறதா
அதன் ஓட்டையை திறந்து விடுவதும்
நீரை இறைத்து வெளியே
ஊற்றுவதுமாய் மாறிமாறி
நாம் விளையாடிக் கொண்டது நினைவிருக்கிறதா
நேற்று கடல் சொல்லிக்காட்டியது
*
காபூலின் மாதுளம்பழக் காடுகளில்
நடந்துக் கொண்டிருக்கும் போது
உனக்கு முத்தமிட்டதாக கனவு கண்டேன்.
அப்போதும் மேற்கு தொடர்ச்சி மலைகளில்
மேய்ந்துக் கொண்டிருந்த வரையாட்டின் கண்கள்
நம்மைப் பார்த்துக் கொண்டிருந்தன
*
சுள்ளென அடிக்கும் வெயில் நமது காதல்
அதில் கறுத்து மின்னும் தென்னங்கீற்று நம் உடல்
*
என் ஆன்மாவின் அடிவாரத்தில்
திரவமாக ஓடிக்கொண்டிருக்கிறாய்
உரையாடும் கணம்தோறும்
அதில் சுழியும் வட்டங்களில்
கெண்டை மீ ன்களாக
உன் கண்கள் துள்ளுகின்றன
*
நான் எழுதுவதையெல்லாம்
வாசித்துக் கொண்டிருக்கிறாய்
எனத் தெரியும்
இதோ நான் உண்ணும் வெண்பூசணியின்
துண்டொன்று உனக்கு
அதன் கடித்த வடிவம் உன் நினைவு
*
என் இதயத்தின் கிணறுகளில் சிலவற்றை
நல்மழை கொண்டு நிரப்பினாய்
மற்றவை அதனினும் ஆழமானவை
ஆனாலும் உன் வானம் பார்த்தே கிடக்கிறது என்னுடல்
*
குறிப்பாக
உன்னைப் போதுமான அளவு
முத்தமிடவில்லையென்ற
புகாரில்லாமல்
இறக்க விரும்புகிறேன்
*
நான் தொலைவு
நான் மறதி
நான் பிளந்த மௌனம்
நான் கைவிடல்
குகையின் குறுக்குவெட்டைப் போன்ற
என் மோனம் கண்ணீர் அற்றது
எதிரொலி தொலைத்தது
*
அந்த ஆற்றுப் படுகையில்
என் காதல்களைப் புதைத்து வைத்திருக்கிறேன்
உன் கைகளில் அகப்படும் மண்
உன்னுடையது
நம்முடையது
*
என் பொறாமையைக் கண்டு விசனம் வேண்டாம்
அது பசி தாளாமல் அழும் குழந்தை போன்றது
-லீனா மணிமேகலை
(நன்றி ஆனந்த விகடன், இன்மை டாட் காம்)
21/10/2014
அந்த நெருப்பின் வயது பத்தாண்டுகள்!
நன்றி ரீ சிவக்குமார், ஆனந்த விகடன்
(“அந்த நாள்” தொடர் )
15.07.2004 – மணிப்பூர் அன்னியர்களின் நிர்வாணப்போராட்டம்
அந்த நெருப்பின் வயது பத்தாண்டுகள்!
15.07.2004 – மணிப்பூர் வரலாற்றில் மறக்கமுடியாத நாள். அதிகாரத்தின் வன்முறைக்கு எதிராகத் தங்கள் உடலை ஆயுதமாக்க முடியும் என்று 12 தாய்மார்கள் நிரூபித்த நாள். தங்கள் தாய் நிலத்தை ஆக்கிரமித்த இந்திய ராணுவத்தின் முகத்தில் நிர்வாணத்தை விசிறியடித்தார்கள் அந்தப் பெண்கள். அதற்கு நான்கு நாட்களுக்கு முன்புதான் 2004, ஜூலை 11 அன்று 17வது அசாம் ரைஃபிள்ஸ் ராணுவப்படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் தங்ஜம் மனோரமா என்ற 34 வயதான இளம்பெண்ணின் வீட்டுக்குள் அடாவடியாக நுழைந்தார்கள். ’ராணுவத்தை எதிர்த்துப் போராடும் ஆயுதக்குழுக்களுக்கும் மனோரமாவுக்கும் தொடர்பு இருக்கிறது’ என்பது ராணுவத்தின் குற்றச்சாட்டு. மனோரமாவை கட்டிலில் இருந்து கீழே இழுத்துத் தள்ளினார்கள். வீட்டில் இருந்த பணத்தைக் கொள்ளையடித்தார்கள். தாய் மற்றும் சகோதரர்கள் முன்னிலையில் மனோரமாவைத் தாக்கினார்கள். அதற்குப் பிறகும், ரத்தச்சுவை கண்ட ராணுவத்தினர் மனோரமாவை விசாரிக்கவேண்டும் என்று அழைத்து சென்றனர். அன்று மாலை, அரைகுறை ஆடையுடன், காயங்கள் சுமந்தபடி, பலரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டபின் கொலை செய்யப்பட்ட மனோரமாவின் உடல் வீதியோரம் கிடந்தது. கொதித்துப்போன மணிப்பூர் போராட்டத்தில் இறங்கியது. அதுதான் அந்தத் தாய்மார்களையும் போராட்டம் நடத்தும் முடிவை எடுக்கவைத்தது. அசாம் ரைஃபிள்ஸ் படைப்பிரிவினர் தங்கியிருந்த காங்களா கோட்டையின் இரும்புக் கதவுகளுக்கு முன்பு 12 தாய்மார்கள் திரண்டனர். திடீரென்று தங்கள் ஆடைகளைக் களைந்தவர்கள், ” இந்திய ராணுவமே, உனக்குத் தேவை பெண்களின் உடல்தானே? இதோ எடுத்துக்கொள், எங்களை மானபங்கப்படுத்து! எங்கள் மகள்களை விட்டுவிடு” என்ற பதாகையைக் கையில் பிடித்தவாறு நிர்வாணமாக நின்றனர். அதிர்ச்சியில் உறைந்த ராணுவமும், போலீசும் குனிந்த தலை நிமிராமல் அவர்களின் மீது போர்வைகளைப் போர்த்தி கைது செய்தது. போராட்டம் நடந்தது என்னவோ சிலமணித்துளிகள்தான். ஆனால், அந்த நெருப்பின் கங்கு இன்னும் கனன்றுகொண்டிருக்கிறது.
சரியாகப் பத்து வருடங்கள் கடந்தும், மனோரமாவின் கொலையாளிகளுக்கும் தண்டனை கிடைக்கவில்லை, தொடர்ந்து மணிப்பூரின் பெண்களை பாலியல் வல்லுறவு செய்வதற்கான அதிகாரத்தை வழங்கிக் கொண்டிருக்கும் அஃப்ஸ்பா( AFSPA) என்றழைக்கப்படும் ஆயுதப்படையினரின் சிறப்பு அதிகாரச் சட்டமும் நீக்கப்படவில்லை. இந்தியா முழுவதும் தனிநபர்களாலும் அதிகார நிறுவனங்களாலும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கையை ‘ரேப் நேஷன்’(Rape Nation) என்ற பெயரில் ஆவணப்படமாக எடுத்துக்கொண்டிருக்கும் கவிஞர் லீனா மணிமேகலை நிர்வாணப் போராட்டத்தில் பங்கேற்ற தாய்மார்களை அதே காங்களா கேட்டின் முன் வரவழைத்து அவர்களின் நினைவுகளைப் படமாக்கியுள்ளார்.
’காங்க்ளா வாயில் நிர்வாணப் போராட்டம் நடத்திய 12 தாய்மார்களில் ஒருவரான லியோடெம் இபெதாம்பி இறந்துவிட்டார். மற்றவர்களிடம் பேசினேன். சிலர் வயது காரணமாகவும் தொடர்ச்சியான செயல்பாடுகள் காரணமாகவும் முதுமையிலும் நோய்வாய்ப்பட்டும் இருந்தனர். ஆயினும் அவர்களது குடும்பத்தார் வீல் சேரிலும் சிறப்பு வாகனங்களிலும் கைத்தாங்கலாக அழைத்து வந்திருந்தனர். எந்த இடத்தில் அறவுணர்வும் ஆவேசமும் ததும்ப போராட்டம் நடத்தினார்களோ அதே காங்களா வாயிலில் பத்து வருடங்களுக்குப் பின் குழுமிய அவர்கள், உணர்வு மேலோங்கக் கதறி விட்டனர். பூக்கள், ரூபாய் நோட்டுகள், மெழுகுவர்த்திகள் ஆகியவற்றை வைத்து சில நொடிகளில் காங்களா கேட்டை வழிபாட்டுத் தலமாய் மாற்றிவிட்டார்கள். தங்கள் மீது சன்னதம் வந்து போராடச் சொன்னது தங்கள் மூதாதையர்கள் தான் என்று அவர்கள் உறுதியாக நம்புகின்றனர். அதனாலேயே அந்தப் போராட்டக் களம் அவர்களுக்கு வழிபாட்டிடமாக மாறியதில் ஆச்சர்யமில்லை. ஒவ்வொருவரும் தங்கள் பேட்டியில் மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொன்ன கோரிக்கைகள் *அஃ ப்ஸ்பா(AFSPA) என்றழைக்கப்படும் ஆயுதப்படையினரின் சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்கவேண்டும்,* மணிப்பூரில் நிரந்தரமாகத் தங்கியிருக்கும் ராணுவம் விலக்கிக்கொள்ளப்படவேண்டும்’ என்பவை தான். தங்கள் மண்ணைச் சேர்ந்த பெண்கள் சுதந்திரத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ வேண்டுமென்றால் ராணுவத் தலையீடு இருக்கக்கூடாது என்பதுதான் அவர்களின் தொடர்ந்த நிலைப்பாடு. “எங்கள் மகள்களை ஆடையில்லாமல் தெருவில் இறந்த உடலாய் பார்த்தபின் எங்களுக்கு இழப்பதற்கு எதுவுமிருக்கிறதா என்ன? இனி பிறக்கப் போகும் எங்கள் மகள்களின் மானத்திற்கு உத்தரவாதம் என்ன?” என்ற கேள்விகளே இந்தப்போராட்டத்திற்கு அவர்கள் ஒவ்வொருவரையும் தூண்டியுள்ளன. போராட்டத்தின் விளைவாக அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் அகற்றப்பட்டு காங்களா கேட் வளாகம் பூங்காவாக மாற்றப்பட்டு விட்டது. ஆனாலும் மணிப்பூரின் பிற பகுதிகளில் இன்னும் ராணுவம் நிலைகொண்டிருக்கிறது. அதையும் முற்றாக நீக்கவேண்டும் என்பது அந்தப் பெண்களின் கோரிக்கை. மேலும் கொலைகாரச் சட்டம் அஃ ப்ஸ்பா(AFSPA) நீக்கப்படும் வரை ஓயமாட்டோம் என்று அந்தத் தாய்மார்கள் இணைந்து ‘இமா(தாய்) மூவ்மெண்ட்’ என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். தொடர்ச்சியான சமூகச் செயல்பாட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். தொடர்ந்து நடந்துவரும் உள்நாட்டுப் போரால் கொல்லப்பட்டவர்களில், காணாமல் போனவர்களில், ஆயுதப் போராட்டத்தில் இணைந்ததில் ஆண்களின் எண்ணிக்கை அதிகம். பெண் தலைமையில் தான் மணிப்பூரின் பெரும்பாலான குடும்பங்கள் நடக்கின்றன. மணிப்பூரின் அடையாளமாக மாறிப்போன “இமா(அன்னை) மார்க்கெட்’ அதற்கொரு சாட்சி. இயல்பாகவே மணிப்பூர் மக்களின் போராட்டத்தில் பெருமளவு பெண்கள் பங்கெடுப்பதன் காரணத்திற்கான அடிப்படையும் இது தான். .
இமா இயக்கத்தின் தலைமையில் நடந்த மனோரமாவின் 10ஆம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலிக்கூட்டத்தையும் படமாக்கினேன். அந்த நிகழ்ச்சிக்கு மனோரமாவின் அம்மா தங்ஜம் குமன்லேய் வந்திருந்தார். அவர் கையில் மலர்கள் இருந்தன. அது மணிப்பூரில் பிரசித்த பெற்ற லெய்ஹோ மலர். அவை மனோராமாவால் நடப்பட்ட செடியில் பூத்த பூக்களாம். அதை சொல்லி வெடித்துக் கதறியழுதார் அந்தத் தாய். மேற்கொண்டு எதையும் பேசும் நிலையில் அவர் இல்லை. பிறகு, ராணுவத்தின் நெருக்கடிகளுக்கு இடையில் இரோம் சர்மிளாவை சிறைச்சாலை மருத்துவமனையில் சந்தித்தேன். ஒடிசலான உருவம். நாமறிந்த தேவதைக் கதைகளில் இருந்து வழி தவறி வந்த தேவதையைப் போல்தான் சர்மிளா இருந்தார். கட்டிலின் ஒருபக்கம் முழுக்க பொம்மைகள் அடுக்கப்பட்டிருந்தன. மறுபக்கம் உலகின் எல்லா மூலைகளிலிருந்தும் பரிசாக வந்து குவிந்திருந்த புத்தகங்கள். மொத்தம் 20 நிமிடங்கள்தான் ஆயுதமேந்திய ராணுவ வீரர்கள் எங்களுக்கு தந்த அவகாசம் . சன்னமான குரலில், ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் இடையில் நீண்ட இடைவெளிகளுடன் பேசினார். உணவும் அருந்துவதில்லை; தண்ணீரும் அருந்துவதில்லை. எச்சிலைக்கூட விழுங்கக்கூடாது என்று அவ்வப்போது பஞ்சைக்கொண்டு உதடுகளைத் துடைத்துக் கொள்கிறார். அவரது மூக்கின்வழியாக 13 செ.மீ. குழாயை நுழைத்து, உணவைத் திணித்துவருகிறது மணிப்பூர் அரசு. உண்மையில் அது வெறுமனே பைப் இல்லை, 13 செ.மீ அரசாங்கம்தான்” என்கிறார் லீனா மணிமேகலை.
1947க்கு முன்புவரை மணிப்பூர் சுதேச சமஸ்தானமாக இருந்தது. 1949ஆம் ஆண்டு மணிப்பூரின் அரசர் புதசந்திரா மணிப்பூரை இந்தியாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஆனால் மணிப்பூர் மக்களில் பெரும்பாலானவர்கள் இந்தக் கட்டாய இணைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. மணிப்பூர் சுயாட்சி பெற்ற சுதந்திரபூமியாக இருக்கவேண்டும் என்றே விரும்புகிறார்கள். அரசர் புதசந்திராவே மிரட்டப்பட்டுத்தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் என்றும் சொல்லப்படுகிறது. மணிப்பூர் விடுதலை அடைய வேண்டும் என்று அமைதிவழியில் ஆரம்பித்த போராட்டங்கள். ஈழம் தொடங்கி உலகின் பல பகுதிகளில் நடந்ததைப் போல ஆயுதப்போராட்டத்தில் முடிந்தது. பல்வேறு ஆயுதக்குழுக்கள் மணிப்பூரில் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்தன. இந்தப் போராட்டங்களை ஒடுக்குவதற்காகவும் மணிப்பூரில் ‘அமைதி’யை நிலைநாட்டுகிறோம் என்ற பெயரிலும் ராணுவம் மணிப்பூரில் குவிக்கப்பட்டது. மக்கள் திரும்பும் திசையெங்கும் ராணுவம். செக்போஸ்ட்கள், சோதனைகள். பல இடங்களில் ராணுவத்தின் அத்துமீறல்கள் தொடர்ந்தன. உலகின் எல்லா இடங்களிலும் ராணுவம் என்ன செய்யுமோ, மணிப்பூரிலும் ராணுவம் அதையே செய்தது, தாங்கள் சந்தேகப்படுபவர்களை எல்லாம் விசாரிப்பது என்ற பெயரில் வன்முறையை ஏவிவிடுவது, பெண்கள் என்றால் கூடுதலாகப் பாலியல் வன்முறையை ஏவிவிடுவது என்று அத்துமீறலைத் தொடர்ந்தது. இதற்கு ராணுவத்துக்கு உதவியாக இருந்தது தான் ஆயுதப்படையினரின் சிறப்பு அதிகாரச் சட்டம் AFSPA . இந்தச் சட்டத்தின்படி கைது வாரண்ட் இல்லாமல் யாரையும் ராணுவம் கைது செய்யலாம், சிட்டுக்குருவிகளைப் போல சுட்டுக்கொல்லலாம். உண்மையில் இந்தக் கொடுமையான சட்டம் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வெள்ளைக்காரர்களால் கொண்டுவரப்பட்ட சட்டம்.‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் ஈடுபட்டவர்களை ஒடுக்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டம். வெள்ளையனே வெளியேறியபிறகும் இந்த சட்டம் வெளியேறவில்லை.
இந்த சட்டத்தை நீக்க சொல்லி, தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடந்தாலும் அதன் உச்சகட்டம் 2000ம் ஆண்டு தொடங்கியது. இம்பாலுக்கு அருகில் உள்ள மலோம் என்னும் கிராமத்தில் பேருந்து நிலையத்தில் காத்திருந்த பத்து பேரை பாதுகாப்புப் படையினர் எந்தவித முன்னறிவிப்பும் கொடுக்காமல் சுட்டுக்கொன்றார்கள். ராணுவத்துக்குக் கொல்வதற்கு ஆட்கள் தேவையே தவிர காரணங்கள் தேவையில்லை. அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்துதான் இரோம் சர்மிளா தன் போராட்டத்தைத் தொடங்கினார். மைலமா விருது, ஆசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வாழ்நாள் சாதனை விருது என பல விருதுகள் சர்மிளாவைத் தேடி வந்துவிட்டன. ஆனால் அவரது போராட்டத்துக்கான தீர்வு மட்டும் கண்ணுக்கெட்டாத தூரத்தில் ஓர் எரிநட்சத்திரத்தைப் போல கண்சிமிட்டிக்கொண்டிருக்கிறது.
”இந்தியாவை ஆக்கிரமிக்கும் நாடாகத்தான் மணிப்பூர் மக்கள் பார்க்கிறார்கள். அதிலும் குறிப்பாக இந்தி மொழி என்றாலே அதை நெருடலோடும் அந்நியத்தோடும் பார்க்கிறார்கள். தென்னிந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் என்றால் தனிப் பிரியத்தோடும் மரியாதையோடும் நடத்துகிறார்கள். நம்முடைய இந்தி எதிர்ப்பு போராட்டம் அங்கு பிரசித்தி. ஈழப்பிரச்னை குறித்த ‘செங்கடல்’ படத்தை மணிப்பூரில் திரையிட்டுக் காண்பித்தேன். பொதுவாக தமிழர்கள் அல்லாத மற்றவர்களுக்கு ஈழப்பிரச்னை குறித்து விரிவாக விளக்கவேண்டும். ஆனால் மணிப்பூர் மக்களுக்கு ஈழப்பிரச்னை குறித்து ஓரளவு புரிதல் இருக்கிறது. விடுதலைப்புலிகளுக்கு அங்கிருக்கும் ஆயுதக்குழுக்களோடு நெருக்கம் இருந்ததாலும், தனிநாடு போராட்டங்களைக் குறித்த சகோதரத்துவப் புரிதல் இருப்பதாலும் ஈழப்பிரச்னை குறித்து அவர்கள் அறிந்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். மணிப்பூர் மக்களில் கணிசமான பேர் இப்போது தமிழகத்தில் வந்து வேலைபார்ப்பதற்கும் வட இந்தியாவின் மீது அவர்களிருக்கும் ஆதார வெறுப்பும் காரணம்” என்று தன் நேரடி அனுபவங்களைப் பகிர்கிறார் லீனா.
2013ல் .ஐக்கிய நாடுகளின் பிரதிநிதி ரஷீதா மன்ச்சூ மனோரமாவின் தாயைச் சந்தித்துப் பேசினார். மனோரமாவின் வீட்டை விட்டு வெளியில் வந்த அவர், ஊடகங்களிடம் கதறியழுதார். ஆனாலும் இந்தக் கதறல்களையும் அலறல்களையும் மத்திய அரசோ ராணுவமோ ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. இரோம் சர்மிளா தன் போராட்டத்தை ஆரம்பித்து 14 ஆண்டுகள் ஆகின்றன. மனோரமா சிதைக்கப்பட்டு 10 ஆண்டுகள் முடிகின்றன. இதற்கெல்லாம் கோரமான மௌனத்தையே இந்திய “ஜனநாயக” அரசாங்கம் தன் பதிலாக தந்துக்கொண்டிருக்கிறது.
“இனப்படுகொலை, ராணுவ அத்துமீறல், சாதிக்கலவரம், மத மோதல்கள் என வன்முறை நிகழும் இடங்களில் எல்லாம் முதலில் பாதிக்கப்படுவது பெண்கள்தான். பாலியல் பலாத்காரம் என்பது வெறுமனே உடல் சார்ந்த தினவு மட்டுமில்லை. தாங்கள் வெற்றிபெற்றுவிட்டதை, தங்கள் அதிகாரம் நிலைநாட்டப்பட்டதை எழுதுவதற்கான இடமாகத்தான் பெண்ணுடல் பயன்படுத்தப்படுகிறது. அப்படி அத்துமீறும் ராணுவம் மணிப்பூரிலும் பெண்களைப் பாலியல்ரீதியாகச் சீண்டுவதும் வல்லுறவுக்கு உள்ளாக்குவதும் தொடர்கதை. அதன் ஓர் அத்தியாயமே மனோரமா சிதைக்கப்பட்ட சம்பவம். எந்தப் பெண்ணுடலை ஒடுக்குமுறைக்கான களமாக ஆக்கினார்களோ, அதே பெண்ணுடலைப் போராட்டத்திற்கான கருவியாக மாற்றமுடியும் என்று நிரூபித்த போராட்டம்தான் மணிப்பூர் பெண்கள் நிர்வாணப் போராட்டம். சாதி, இன, வர்க்க வேறுபாடுகள் தாண்டி இந்திய இறையாண்மையும் பெண்களின் மானத்தையும், உடலையும் காவு கேட்கிறது. இந்த நீதி செத்த நாட்டில் நாங்கள் வாழ மாட்டோம் என்று எல்லாப் பெண்களும் முடிவெடுத்துவிட்டால் என்ன செய்யும் இந்த அரசாங்கம்?‘’ என்ற லீனாவின் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லிவிட முடியும்?
“தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி” என்ற வாக்கியத்தை ஒரு மந்திர உச்சாடனம் போல் அடிக்கடி உச்சரிக்கிறோம். ஆனால் ஆளும் வர்க்கமும் அதிகார நிறுவனங்களும் அந்த வாக்கியத்தை ஏளனச் சிரிப்புடன் கடந்துபோகின்றன.
***********************************************************************************
கழுவாய்
நன்றி மணல்வீடு – இதழ் 22
Illustration by Chiara Bautista
1.
கைவிடப்பட்ட ஆன்மாக்களையெல்லாம்
அள்ளிப் போட்டுக் கொண்டு
கொளுத்திப் போட்ட கடலில்
துடுப்பை இழுக்கிறாள்
கால்களைத் துறந்த தேவதை
அவளின் பிரகாசமான இறக்கைகளால்
நீலத்தின் உப்பு, சாம்பல் தீவுகளாய் திரண்டது
அத்தீவுகள் பெயர் தெரியாத மிருகங்களின்
உருவங்களாய்
வாய் பிளந்து தெரிந்தன
தீர்ப்பு நாட்களை ஒத்திப் போடும்படி
கடவுளர்களின் பெயர்களை
உச்சரிக்கப் பணித்தாள் தேவதை
பதிலுக்கு அவரவர் காதலர்களின் பெயரை
முணுமுணுத்த
ஆன்மாக்களை மன்னிக்க மறுத்தாள்
நடப்பதையும் நம்பியதையும் விரும்பியதையும்
இழந்ததையும்
அறிந்துக் கொண்ட
அலைகளின் சன்னதம்
படகை கவிழ்த்தது
கிழிந்த நங்கூரங்கள் சடசடக்க
நாளையற்ற
உலகை குறித்தப் பாடலொன்றை
தேவதை பெருங்குரலெடுத்துப் பாடினாள்
நித்தியத்தை நோக்கிய இந்தப் பயணத்திற்கு
அனுமதி மறுக்கப்பட்ட
’அன்பால் செத்த உடல்கள்’
கரைகளை காவல் காத்தன
Illustration by Chaira Bautista
2.
சாலையின் நடுவில் நிற்கிறோம்
நாமிருவரும் இனி
சேர்ந்துப் படுத்துறங்க முடியாதபடி
வியர்வை மூழ்கடித்த
இடத்திற்கு
குறுக்கு சால் ஓடும்
சாலை அது
கறுத்த பூதங்களையும்
பாம்புகளையும்
நம்மீது நாமே
விரும்பி ஏவிக் கொண்ட
காட்சியின் ஆகச்சிறந்த
நடிகர்கள் நாம்
சற்று அசந்த நேரங்களில்
ஊர் பூசிய சேற்றையும்
தின்று பசியாறினோம்
நிழல் தந்த மரம்
நாம் கண்ணீர் சிந்த மறுத்ததால்
பட்டுப்போன இந்த
நாளில்
விடைபெறுவோம்
நாம் எழுதியதை நிறுத்திக் கொண்ட
ஏடுகளில் ஒரு பக்கத்தை நீ எடுத்துக் கொள்
மறுபக்கத்தை நான் பத்திரப்படுத்துகிறேன்
பார்
நாம் ஒருவரையொருவர்
விடுவித்துக் கொண்டதும்
இரு பக்கமும் கோள் காட்டுகிறான்
சூரியன்
Illustration by Chaira Bautista
3.
இறுதி அத்தியாயத்தை எரித்துவிடலாம் என்றால்
இன்னும் பச்சையத்தில் கவிதைகள்
அழித்ததாய் நினைத்திருந்த விதைகள்
முளைவிட்டு ஆற்றில் இறங்கி
கடவுளையும் தேர்ந்தெடுத்து
தம் பாடல்களை தாமே பாடி
முப்போகம் விளைகின்றன
வேட்கை ஊறிய தோல்
உரித்தாலும் உப்பிட்டாலும்
உடலினும் பெரிதாய் வளர்ந்து
தங்கள் மதகுகள் திறந்து
கிரகணங்களை கிளர்த்துகின்றன
ஒரு கொலை நிகழ்ந்தாலொழிய
ரத்தம் உறையாது
வாக்குறுதியையோ, கனவையோ,
வெறும் வார்த்தைகளென
உதிர்க்க நினைக்கும் உடல்களை
பலி கேட்கிறது பிரிவு
லீனா மணிமேகலை