கூட்டறிக்கை: சென்னைப் பல்கலைக் கழகத்தில் நிகழ்ந்த வன்முறையை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
வெளியிடப்பட்ட தேதி – 12.ஜனவரி 2014
2014 ஜனவரி 34 ம்தேதிகளில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் இலக்கியத் துறையும் பெண்கள் சந்திப்பும் (சென்னை) இணைந்துநடந்திய பெண்ணிய உரையாடல்கள் அரங்கு நிகழ்ந்தேறியது. இருநாட்களும் காலை 9 மணி – மாலை 4 மணிவரைவரையறுக்கப்பட்ட பங்கேற்பாளர்களிற்காக நிகழ்ந்த அந்த அரங்கு, இருநாட்களும்மாலை 5 மணி – 6.30 மணிவரைஅனைவருக்குமான பொது அரங்காக அமைக்கப்பட்டிருந்தது. பொது அரங்குக்கான அழைப்புகள் இணையங்களில் வெளியிடப்பட்டிருந்தன. அனைவரையும் அழைக்கிறோம் என அழைப்பிதழில் குறிப்புமிருந்தது.
3ம் தேதி மாலை 5 மணிக்குபொது அரங்கு ஊடறு இணையத்தள ஆசிரியர் ரஞ்சி (சுவிஸ்) தலைமையில் நடந்தது. அப்போதுஅரங்கினுள் ‘வெள்ளை வேன் கதைகள்‘ ஆவணப்படத்தின்இயக்குனர் லீனா மணிமேகலையும் ஒளிப்பதிவாளர் அரவிந்தும் படத்தொகுப்பாளர் தங்கராஜும், ஊடறு இணையத்தள ஆசிரியர் ‘வெள்ளைவேன் கதைகள்‘ குறித்தும்இயக்குனர் குறித்தும் ஊடறு இணையத்தளத்தில் அவதூறுகளை வெளியிட்டிருக்கிறார் என்றும் ஊடறு அந்த அவதூறுகளைத் திரும்பப்பெறவேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். ஓர் எதிர்ப்புத் தட்டியை இயக்குநர் வைத்துக்கொண்டு தரையில் உட்கார்ந்திருக்க மற்றைய இருவரும் துண்டறிக்கையை அரங்கில் விநியோகித்துள்ளனர். துண்டறிக்கை விநியோகிக்கப்படுவது பேராசிரியர் வீ. அரசுவால் தடுக்கப்பட்டது. ஆட்களை வைத்து கலாட்டா செய்கிறாயா எனவும் வீ. அரசு கேட்டுள்ளார். விவாதத்தின் பின்பு வீ. அரசுவே துண்டுப் பிரசுரங்களைப் பெற்று விநியோகித்துள்ளார். எனினும் வெள்ளை வேன் படக் குழுவினர் ஊடறு ஆசிரியரை நோக்கி எழுப்பிய கேள்விக்கு எந்தப் பதிலும் வழங்கப்படவில்லை. மாறாக அ. மங்கை, தனிநபர்களுக்கிடையேயான பிரச்சினை இது என்று சொல்லியுள்ளார். பொது இணையத்தில் பிரசுரிக்கப்பட்ட அவதூறு அறிக்கை தனிநபர் பிரச்சினை ஆகாது என படக்குழுவினர் பதிலளித்தனர். நீதி கிடைக்காததால் நாளைய அரங்கிலும் வந்து எனது கோரிக்கையை வைப்பேன் என லீனா மணிமேகலை சொல்லியிருக்கிறார்.
அன்றிரவேபேராசிரியர் வீ. அரசு தொலைபேசியில் லீனா மணிமேகலையை அழைத்து “நாளை அரங்கத்திற்கு வந்தால், செய்யவேண்டியதை செய்வேன்” என எச்சரித்துள்ளார். அதை உடனேயே லீனா மணிமேகலை முகப்புத்தகத்தில் பதிவும் செய்துள்ளார். எனவே மறுநாள் நடந்தேறிய வன்முறை நன்கு திட்டமிடப்பட்ட வன்முறையே என எங்களால் ஊகிக்க முடிகிறது.
மறுநாள்மாலை நிகழ்ந்த பொது அரங்கில் எழுத்தாளர் பாமா அவர்கள் உரையாற்ற வந்தபோது இடையீடு செய்த லீனா மணிமேகலை தன்னுடைய நேற்றைய கோரிக்கை இந்த அரங்கால் நிராகரிக்கப்பட்டதால் அதைக் குறித்துப் பேசுவதற்கு ஐந்து நிமிடங்களைத் தனக்கு வழங்குமாறு கேட்டிருக்கிறார். அரங்கிற்குத் தலைமை வகித்துக்கொண்டிருந்த எழுத்தாளர் புதிய மாதவி அவர்களும் அரங்கு நிறைவுற்றதும் பேசுவதற்கு நேரம் தருவதாகச் சொல்லியுள்ளார். அப்போது இடையே புகுந்து ‘மைக்‘கைக் கைப்பற்றிக் கொண்ட வீ.அரசு, இது விளம்பரத்திற்கான உத்தி என்றும் உன்னதமான படைப்பாளிகளின் அரங்கில் லீனா மணிமேகலை தகராறு செய்கிறார் என்றும் சொல்லியுள்ளார். நான் உன்னதமற்ற படைப்பாளி என்றாலும் எனது கோரிக்கைக்குப் பதில் வேண்டும் என லீனா மணிமேகலை சொல்லியுள்ளார். அப்போது வீ. அரசு அரங்கிலிருந்த தனது மாணவர்களிடம் “இவள தூக்கி வெளியில போடுங்கடா” எனக் கட்டளையிட்டுள்ளார். தொடர்ந்து மாணவர்கள் லீனா மணிமேகலையையும் அவரது தோழர்களையும் உடல்ரீதியான வன்முறை உபயாகித்து அரங்கிலிருந்து வெளியேற்றியுள்ளார்கள். அங்கே புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த ஒருவர் வீ. அரசுவால் அடிக்கப்பட்டு அவரது காமெராவும் அரசுவால் பிடுங்கப்பட்டது. எடுக்கப்பட்ட புகைப்படங்களை அழித்ததற்குப் பின்பாக காமெரா திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது. அரங்குக்கு வெளியே வந்த வீ.அரசு “இது உங்களது இடம் நீங்கள் எது வேண்டுமானாலும் செய்யலாம்” என மாணவர்களை மீண்டும் தூண்டிவிட அரங்குக்கு வெளியே இருந்த லீனா மணிமேகலையும் அவரது தோழர்களும் பல்கலைக் கழக வளாகத்திலிருந்தே மாணவர்களால் வன்முறையாக வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
பொதுஇலக்கிய அரங்கொன்றில் ஒருவரோ ஒரு குழுவோ இடையீடு செய்து தங்களது கோரிக்கையை வைப்பதையோ பேசுவதற்கு ஐந்து நிமிடங்கள் கேட்பதையோ ஜனநாய நெறிமுறைகளுக்கு எதிரான செயலாகவோ பொறுப்பற்ற கலாட்டாவாகவோ நாங்கள் கருதவில்லை. இத்தகைய இடையீடுகள் நமது இலக்கிய அரங்குகளிற்கு மிகப் பழக்கமானவையே. எழுப்பப்படும் கேள்விகளிற்கும் கண்டனங்களிற்கும் இடமளித்தும் பதிலளித்தும் தகுதியான இலக்கிய அரங்குகள் ஜனநாயக விழுமியங்களைப் பேணியுள்ளன. தவிரவும் அரங்கில் வீற்றிருந்த அ.மங்கை, சுகிர்தராணி , ரஞ்சி போன்ற ஆளுமைகள் இத்தகைய இடையீடுகளையும் கண்டனக்குரல்களையும் இலக்கிய அரங்குகளில் ஏற்கனவே எழுப்பியவர்களே. இத்தகைய ஜனநாயக மரபும் கருத்துச் சுதந்திரமும் பேராசிரியர் வீ.அரசு அவர்களால் உதாசீனம் செய்யப்பட்டிருக்கிறது. இலக்கிய அரங்குகளில் கருத்துகளிற்கு வன்முறையால் பதிலளிக்கும் மரபை அவர் தொடக்கிவைத்துள்ளார். அவரது மாணவர்களை வன்முறை அடியாட்களாக அவர் உருமாற்றியிருக்கிறார். இந்த வன்முறை நிகழ்ந்தேறியபோது அரங்கிலிருந்த முக்கியமான பெண்ணிய ஆளுமைகள் மவுனமாக இருந்து வன்முறைக்குத் துணைபோனது மிகவும் வருத்தத்திற்குரியது.
வன்முறையைத்தூண்டி நடத்திவைத்த பேராசிரியர் வீ.அரசுவையும், மவுனமாக இருந்து வன்முறைக்குத் துணைநின்றவர்களையும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். நடந்தவற்றுக்குப் பொறுப்பேற்று பகிரங்க வருத்தம் தெரிவிக்க வேண்டுமென பேராசிரியர் வீ. அரசு அவர்களைக் கேட்டுக்கொள்கிறோம். “நீ சொல்லும் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை எனினும் அதைச் சொல்வதற்கான உனது உரிமையைக் காப்பாற்ற எனது உயிரைக் கொடுத்தும் போராடுவேன்” என்ற வால்டேயரின் சொற்களை அவர் முன்னே வைக்கிறோம்.
தோழமையுடன்
எழுத்தாளர் கோணங்கி
முனைவர்.கே.ஏ.குணசேகரன்
ரமேஷ் பிரேதன் – கவிஞர்
ரேசல் வால்டேர் – மாநிலத்துணை செயலாளர் – விடுதலை சிறுத்தைகள் கட்சி
லஷ்மி மணிவண்ணன் – கவிஞர், சிலேட் ஆசிரியர்
லிவிங் ஸ்மைல் வித்யா – கவிஞர், நாடகவியலாளர்
ஓவியர் விஸ்வம்
ஓவியர் இளங்கோவன்
ஹரிக்கிருஷ்ணன் – எழுத்தாளர், மணல்வீடு ஆசிரியர்
கருணாகரன் – கவிஞர் (இலங்கை)
யவனிகா ஸ்ரீராம் – கவிஞர்
யாழன் ஆதி – கவிஞர்
செல்மா ப்ரியதர்ஷன் – கவிஞர்
ரியாஸ் குரானா – கவிஞர் (இலங்கை)
ஹெச் பீர் முகம்மது – எழுத்தாளர்
வெளி ரங்கராஜன் – நாடகவியலாளர்
அபிலாஷ் சந்திரன் – எழுத்தாளர்
இந்திரா காந்தி அலங்காரம் – எழுத்தாளர்
சாகிப்கிரான் – கவிஞர், தக்கை ஆசிரியர்
இளங்கோ கிருஷ்ணன் – கவிஞர்
லக்ஷ்மி சரவணக்குமார் – எழுத்தாளர்
ஓவியர் மணிவண்ணன்
வேல்குமார் – ஆய்வாளர்
அகநாழிகை பொன்வாசுதேவன் – எழுத்தாளர் – பதிப்பாளர்
மீரான் மைதீன் – எழுத்தாளர்
ரிஷான் ஷெரீஃப் – கவிஞர் (இலங்கை)
பழ. றிச்சர்ட் – அரசியற் செயற்பாட்டாளர் (இலங்கை)
புதுவிசை பெரியசாமி – கவிஞர்
பாலசுப்ரணியன் பொன்ராஜ் – எழுத்தாளர்
தங்கராஜ் – படத்தொகுப்பாளர்
மதியழகன் சுப்பையா – கவிஞர், திரைப்பட இயக்குநர்
ரஃபீக் இஸ்மாயில் – திரைப்பட இணை இயக்குநர்
அருண் தமிழ் ஸ்டூடியோ
ஓவியர் சீனிவாசன்
ஜெயச்சந்திரன் ஹஸ்மி – ஆவணப்பட இயக்குநர்
சுபா தேசிகன் – பத்திரிகையாளர்
ரேவதி – வெள்ளை மொழி
சுஜாதா – செயற்பாட்டாளர்
கார்த்திக் முத்துவளி – புகைப்படக் கலைஞர்
கவின் – கவிஞர்
சி.ஜெரால்டு – இயக்குநர்
ஜோஷுவா ஐசக் – இணைய செயற்பாட்டாளர் – விடுதலை சிறுத்தைகள் கட்சி
மகிழ்நன் – பத்திரிகையாளர்
ஜயசந்திரன் ஹஸ்மி – குறும்பட இயக்குநர்
நிரோஜன் – குறும்பட இயக்குநர் (இலங்கை)
கோபி ஷங்கர் – சிருஷ்டி மாணவர் இயக்கம்
ஜான் மார்ஷல் – சிருஷ்டி மாணவர் இயக்கம்
தினகரன் ரத்னசபாபதி – செயற்பாட்டாளர்
இளங்கோ ரகுபதி – தொலைக்காட்சி இயக்குநர்
முஷ்டாக் அஹமத் – வழக்கறிஞர்
செந்தூரன் ஈஸ்வரநாதன் – பத்திரிகையாளர்
பிரஸாந்தி சேகரம் – எழுத்தாளர்
நிலவுமொழி செந்தாமரை – வழக்கறிஞர்
அருண் பகத் – குறும்பட இயக்குநர்
லூசிஃபர் ஜெ வயலட்- எழுத்தாளர்
அரவிந்த் யுவராஜ் – பத்திரிகையாளர்
ஆர்த்தி – பத்திரிகையாளர்
இளவேனில் அ பள்ளிப்பட்டி – பதிப்பாளர்
ஒவியர் கார்த்திக் மேகா
இளவேனில் – பத்திரிகையாளர்
சுந்தரலிங்கம் கண்ணன் – மீடியா
சு.பாரதி – பத்திரிகையாளர்
கார்த்திக் ஆனந்த் – துணை இயக்குநர்
ஷீலா சக்திவேல் – பத்திரிகையாளர்
கார்கி மனோகரன் – கவிஞர்
கார்த்திகேயன் – பத்திரிகையாளர்
ப்ரீத்தி – பத்திரிகையாளர்
புதிய பரிதி – பத்திரிகையாளர்
ஸ்ரீநிதி வாசுதேவன் – மாணவர்
அன்றில் யாழினி – பள்ளி ஆசிரியர்
அருந்ததி – கவிஞர், திரைப்பட இயக்குநர் (ஃபிரான்ஸ்)
உமா ஷனிகா – செயற்பாட்டாளர் (ஜெர்மனி)
ராகவன் – செயற்பாட்டாளர் (லண்டன்)
சத்தியசீலன் நடேசன் – செயற்பாட்டாளர் (சுவிஸ்)
தர்மினி – கவிஞர் (ஃபிரான்ஸ் )
சயந்தன் கதிர் – எழுத்தாளர் (ஸ்விஸ்)
தேவா – எழுத்தாளர் (ஜெர்மனி)
விஜி – செயற்பாட்டாளர் (ஃபிரான்ஸ்)
எம்.ஆர்.ஸ்டாலின் – செயற்பாட்டாளர்(ஃபிரான்ஸ்)
ஜீவமுரளி-எழுத்தாளர்(ஜெர்மனி )
விஜயன் – நாடகவியலாளர் (ஸ்விஸ்)
தனுஜா – செயற்பாட்டாளர்(ஸ்விஸ்)
தமயந்தி- கவிஞர் (நோர்வே)
பானுபாரதி – கவிஞர் (நோர்வே)
ஷோபாசக்தி – எழுத்தாளர் (ஃபிரான்ஸ்)
பத்மநாதன் நல்லையா – செயற்பாட்டாளர் (நார்வே)
ம.நவீன் – வல்லினம் ஆசிரியர் (மலேசியா)
மணிமொழி- வல்லினம் (மலேசியா)
சிவா பெரியண்ணன்ழி- வல்லினம் (மலேசியா)
கே.பாலமுருகன்- கவிஞர் (மலேசியா)
ஹரி ராஜலட்சுமி – எழுத்தாளர் (லண்டன்)
ஃபதீக் அசீரீரி- கவிஞர்(லண்டன்)
ராக்கி ராகவ் – ஆய்வு மாணவர் (லண்டன்)
மாலதி மைத்ரியின் பன்மெய் கட்டுரை? – எதிர்வினை என்ற இற்றுப்போன சூயிங்கம்!
08/01/2014
மாலதியின் கட்டுரைக்கு எதிர்வினையாற்றுவது, அவரிடம் ஏராளமாக இருக்கும் வன்மத்தையும், காழ்ப்பையும், பொறாமையையும், சூயிங்கம்மை கசப்பு வெளியேறும் வரை மெல்லுவது போன்ற அனுபவம் தான்.
இந்த கட்டுரையைப் பொருத்தவரை அவருடைய ஆண்டை, அடிமை பிரயோகங்கள், விளக்கங்கள் சுத்த பேத்தல். பிறப்பாலே ஒருவர் போராளியாகவிட முடியும் என்று எழுதுவது, பிறப்பாலே ஒருவர் “பிராமணன்” என்று நம்புவதற்கு நிகரானது. மனுதர்மத்தை நான் மூர்க்கமாக மறுப்பவள்.
தேஜஸ்வினி படம் குறித்த அவர் தர்க்கங்கள், தான் வேலை செய்த தன்னார்வ நிறுவனங்கள், கார்பரேட் சி.எஸ்.ஆர் பிராஜக்ட் எல்லாம் எவ்வளவு உத்தமம் தெரியுமா? டாட்டா அளவுக்கு மோசமில்லை என்கிற ரேஞ்சில் தான் இருக்கிறது. சுயாதீன சினிமா வட்டாரங்களில் ஒரு பேச்சு வழக்கு உண்டு. கூலி படப்பிடிப்பா? இண்டிபெண்டெண்ட் படப்பிடிப்பா? என்று. தொலைபேசியில் என்ன ஷூட்டிங் என்று கேட்டுக்கொள்ளும்போது, அந்த குறிச்சொற்களை பயன்படுத்துவோம். கூலிக்கு வேலை செய்து எங்களுக்கு பிடித்த சினிமாவை அதன் சேமிப்பில் எடுப்பது என்பதில் எனக்கு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை. அதை யாரும் ஏற்படுத்திவிடவும் முடியாது. எத்தனை காலச்சுவடு, எத்தனை வினவு, எத்தனை மாலதி மைத்ரிகள் வந்து தூய்மைவாதம் பேசினாலும் இது தான் யதார்த்தம். சத்யஜித் ரேவே விளம்பரப் படங்கள் எடுத்து தான் தன் அன்றாட செலவுகளை பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஒரு கடைந்தெடுத்த பார்ப்பனீய கார்பரேட் காலச்சுவடு கண்ணனால் அறிமுகப்படுத்தப்பட்டதை நியாயப்படுத்தும் மாலதியின் தூய்மைவாதம் ஒரு அழுகினி ஜோக்.
ஈழத்தமிழர் தோழமைக் குரல் குறித்த அபாண்டங்களுக்கு லீனா மணிமேகலை மைனஸ் 99 பேர் தான் பதில் சொல்ல வேண்டும். என்னை அசிங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், படைப்பாளிகள், மாணவர்கள், மீனவர்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமை போராளிகள் என்று எல்லோரையும் ஏதோ நான் அழைத்து சென்ற செம்மறி ஆடுகள் போல சித்தரித்திருப்பத்தை என்னால் கண்டிக்க மட்டுமே முடியும். நெட்டும் கையுமாக இருந்தேன் என்றால், எனக்கு தரப்பட்ட வேலை மீடியா ஒருங்கிணைப்பு என்பதால் அதை முடிந்தவரை செய்தேன். ஏன் கொடுத்த வேலையை செய்யவில்லை என்று கேட்டால் பதில் சொல்லலாம். ஏன் செய்தாய் என்றால் அதற்கு எப்படி பதில் சொல்வது? புகைப்படங்களை கவிஞர் நரன் எடுத்தார் என்பது சரி. அதில் ஜெரால்ட் போட்டோ எடுத்தார் என்ற வாக்கியம் ஏன் வருகிறது. அவருக்கும் ஈழத்தமிழர் தோழமைக் குரலுக்கும் என்ன சம்மந்தம். அவர் தனிப்பட்ட முறையில் என் நலன் கருதி, ஒரு நாள் டில்லி வந்து என்னுடன் துணைக்கு நின்றுவிட்டு சென்றார். அதில் மாலதிக்கு என்ன பிரச்சினை? திடீரென எந்தப் பொருத்தமும் இல்லாமல் ஷோபா சக்தியின் பெயரும் கட்டுரையில் வருகிறது. நம்பகத்தன்மைக்காக வேறு ஏதாவது தந்திரங்களை மாலதி முயற்சி செய்யலாம். மற்றபடி இந்த பெயர்களைப் பயன்படுத்தும் முயற்சிகளில் படுதொல்வியடைகிறார். என் போராட்ட உணர்வை பற்றி பேசும் மாலதி, தமிழின் மூத்த படைப்பாளிகளாக அறியப்பட்ட தானும், பிரேமும் சபையில் நடந்துக்கொண்டதையும், மாலதி அழைத்து வந்த மீனவப் பெண்களே சந்தி சிரித்ததையும் நினைவுப்படுத்தி கொள்வது நல்லது. நினைவில் இல்லையென்றால், அதையும் தனியாக கட்டுரையாக எழுதலாம். என்ன எழுதுவதற்கு கைகள் கொஞ்சம் கூசும். பரவாயில்லை. தேரை இழுத்து தெருவில் விட்டபின் அதை நகர்த்த தானே வேண்டும்.
ஈழத்தமிழர் தோழமைக் குரலின் நிதிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இயக்கத்தின் பொருளாளர் சுகிர்தராணி. பொருளாளர் அறிக்கையை கொடுக்கவில்லை ஆதலால் அவர் ஆட்டையைப் போட்டுவிட்டார் என்று நான் எழுதப் போவதில்லை. ஏனெனில், சென்னை திரும்பும்போது ரயிலில் வாங்கிவந்த சாப்பாடு ஊசிப்போக, யாரிடமும் காசில்லாமல், வழியில் ஆந்திராவில் இருந்த நண்பர்களிடம் சாப்பாடு பார்சல்கள் வாங்கி வரச் சொல்லி சாப்பிட்ட நிலைமையில் தான் எல்லோரும் இருந்தோம். திரும்பும் போது, மாலதி எங்களுடன் வராமல், விமானத்தில் சென்னைக்கு திரும்பியதால், அவருக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
செங்கடல் பிரச்சினைக்கு வருவோம். காலச்சுவடு, சுகிர்தராணி, மாலதி மைத்ரி மூவரும் ஒரு குரலில் சொல்வதென்ன வென்றால், செங்கடலில் பயன்படுத்தப்பட்ட அந்த 30 நொடி போராட்ட ஃ புட்டெஜுக்காகத் (Footage) நடத்தப்பட்ட படப்பிடிப்பு தான் ஈழத்தமிழர் தோழமைக் குரல். சரி, அபத்த இலக்கியத்திற்கு எப்போதும் ஒரு இடமுண்டு தானே. அந்த வகையில், முத்துக்குமரன் தீக்குளித்தது, கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தது, ஜெயலலிதா ஈழத்தாயானது, சீமான் உள்ளிட்ட திரைப்பட கலைஞர்கள் போராட்டம், முள்ளிவாய்க்காலில் குண்டுகள் வீசப்பட்டது, இனப்படுகொலை காட்சிகள், பி.பி,.சியின் போர்ச்செய்திகள் . சிதம்பரத்தை பத்திரிக்கையாளர் செருப்பால் அடித்தது, நெடுமாறன்-நல்லக்கண்ணு- வை கோ – என்று தலைவர்களின் முழக்கங்கள், அந்த காலக் கட்டத்தில் தடைசெய்யப்பட்ட சேனல் ஃபோர் வெளியிட்ட சிங்கள படையினர், நிர்வாணமாக கைகள் கட்டப்பட்ட நிலையில் புலிகளை சுட்ட மொபைல் துண்டு காட்சி என்று செங்கடலில் ஆவணப்பட இயக்குனர் கதாபாத்திரம் மூலம் போலீஸ் கமிஷனர் கைப்பற்றும் டேப்புகளில் ஓடும் செய்திக்கோர்வைகள் எல்லாமும் செங்கடலுக்காக நிகழ்த்தப்பட்டவை என்று முடிவுக்கு வரலாம். இவை எதுவும் மாலதி ஏற்பாடு செய்த டில்லி போராட்ட விடீயோகிராஃபர் எனக்கு தந்தவை அல்ல, ஈழத்தமிழர் தோழமைக் குரல் காட்சிகள் உட்பட எல்லாமும் நான் யூ-ட்யூபில் (You tube )இருந்து டவுன்லோட் செய்தவையே! ஓபன் சோர்ஸ் (Open Source ) காலத்தில், இதையெல்லாம் விளக்கமாக எழுதிக்கொண்டிருக்க வேண்டிய தமிழ்ச் சூழலும், படைப்பாளிகளின் வன்மம் வெளிபடுத்தும் அறியாமையும் வெட்கக்கேடானது. செங்கடல் பிரதியைப் பார்த்தவர்கள் அதைப்பற்றி பிரதிரீதியாக வைக்கும் விமர்சனங்களுக்கு நான் விளக்கங்கள் தருவதில்லை. பிரதியை உருவாக்கியபின், அதற்கு வெளியே பேசுவதற்கு, ஒரு படைப்பாளியாய் என்னிடம் ஏதுமில்லை என்று நம்புபவள் நான்.
என் மற்ற படங்களை பற்றிய குற்றச்சாட்டுகளையும் நான் முற்றிலும் நிராகரிக்கிறேன். என் படங்களில் பங்கு பெற்ற கதாபாத்திரங்கள் என்னிடம் நேரடியாக தொடர்பிலிருப்பவர்கள். அவர்களுக்கு முறைப்பாடுகள் இருப்பின் என்னுடன் அவர்கள் தீர்த்துக்கொள்வார்கள். அவர்களுக்கும் எனக்கும் இடையே மாலதி, ஊடறு.காம் போன்ற அவதூறாளர் களின் மத்தியஸ்தமும் அதிகாரமும் அனுமதிக்க முடியாதவை. மற்றபடி உன் திரைப்படத்தை அங்கு திரையிட்டாயா? இவர்களுக்கு காண்பித்தாயா? என்ற கேள்விகள், சிறுபிள்ளைத் தனமானவை.
கூடங்குளத்தைப் பற்றிய கவிதையை அந்த மக்களின் வாசித்துக் காண்பித்தாயா? சிரியா பற்றி எழுதினாயே, அந்த மக்களுக்கு அனுப்பினாயா? உடலுறவு பற்றி எழுதியதை சம்பந்தப்பட்டவரிடம் அனுமதி வாங்கினாயா, இப்படி கவிதைகள் எழுதிவிட்டு அதை புக் போட்டு எப்படி விற்கலாம், வீடு வாங்கலாம், கார் வாங்கலாம் என்று யாரும் கேட்பதில்லை. அதில் லாஜிக்கும் இல்லை. ஏதோ பொருமுகிறார்கள் பாவம் என்று விட வேண்டியது தான்.
இதை எழுதும் நேரத்தில் மாலதியை மனநோய் மருத்துவரிடம் அழைத்து செல்வது உருப்படியான காரியமாக இருக்கும். ஆனாலும் நாம் எப்போதும் உருப்படியான காரியங்களை செய்வதில்லையே!
பின்னிணைப்பு :
1.சிற்பி விருது பற்றிய நான் இதுவரை அறியாத தகவலை எழுதியிருக்கிறார் மாலதி. சிற்பி இலக்கிய விருது குறித்த தகவலை எனக்கு முதலில் தெரிவித்ததும் சம்மதம் வாங்கியதும் நண்பருமான எழுத்தாளருமான இந்திரன். அவரிடம் மாலதி எழுதியதை வாசித்துக் காட்டினேன். “விடும்மா ரப்பிஷ்(Rubbish )” என்று ஒரே வார்த்தையில் முடித்துக்கொண்டார்.
2. இதற்கு வினையாற்றும் எந்த கட்டுரைக்கும் ம்றுமொழியாற்றும் ஆர்வமும் எனக்கில்லை. இந்திரனின் “விடும்மா ரப்பிஷ்(Rubbish )” என்ற விளிப்பை என் தரப்பிலும் வழிமொழிந்து என் முன் குவிந்திருக்கும் வேலைகளில் கவனம் செலுத்தும் முடிவில் இருக்கிறேன். கருத்து ரீதியான விவாதங்கள் தனி மனித தாக்குதலாகவும், அவதூறுகளாகவும் மாறும்போது சற்று விலகி நிற்பதே தொடர்ந்து இயங்குவதற்கு வழிவகுக்கும் என்பதால் இந்த முடிவு.
3.அரசாங்க எதிர்ப்பு, யுத்த எதிர்ப்பு, பேச்சுவார்த்தைக்கு வலியுறுத்துதல், சுயநிர்ணய உரிமை என்ற அரசியல் கோரிக்கைகளை முன்னிறுத்தி கவிஞர்கள், படைப்பாளிகள், மாணவர் இயக்கங்கள், மீனவர் இயக்கங்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், அரவாணிகள், பெண்கள் அமைப்பினர் என்ற பல ஜனநாயக அமைப்புகள் என்று ஒருங்கிணைத்து உருவானது தான ஈழத்தமிழர்தோழமைக் குரல்(voiceforeelamtamil
4. எவ்வளவு குழந்தமையுடனும், எவ்வளவு தீவிரத்துடனும், வேட்கையுடனும், அப்பழுக்கற்ற நோக்குடனும் தலைநகர் சென்றோம். இழப்பதற்கு ஏதுமில்லை என்ற மனப்பாங்கு மட்டுமே ஈழத் தமிழர் தோழமைக் குரல் இயக்கத்தில் எல்லோரையும் ஒரு இறங்க மறுக்காத ஆவி போல இயக்கியது என்று நம்பினேன், இயங்கினேன் . அத்தனையையும் தனிமனித பகைக்கு பலி கொடுப்பது தாள முடியாத துயராய் என்னுள் இறங்குகிறது. சரி இதையும் கடக்கலாம்.
தொடர்புடைய சுட்டிகள் : http://panmey.com/content/?p=
லீனா மணிமேகலை
அதிகாரத்தின் துர்வாசனை.
ஜனவரி 3, 4 தேதிகளில் சென்னை பல்கலைகழகமும் பெண்கள் சந்திப்பும் இணைந்து நடத்திய பெண்ணிய உரையாடலின் அழைப்பிதழ் எனக்கு கிடைத்தது. அதன் கவிதைக்கான பொது நிகழ்வில் ஊடறு.காம் றஞ்சி தலைமையில், ஆழியாளின் கவிதைத்தொகுதியை மதுசூதனன் வெளியிட சுகிர்தராணி பெற்றுக்கொள்வதான நிகழ்வின் அறிவிப்பும் இருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன் தான் அண்மையில், இலங்கையில் காணாமல் போனவர்கள் பற்றி நான் எடுத்த White Van Stories குறித்த பொய்யான அறிக்கையை ஊடறு.காம் வெளியிட்டிருந்தது. அந்தப் பொய் அறிக்கையை அம்பலப்படுத்தி எழுதிய எதிர்வினைக்கு எந்த பதிலும் ஊடறுவின் தரப்பில் இல்லாமல் இருந்ததால், என் எதிர்ப்பை பதிவு செய்யலாம் என்று நான் “பெண்ணிய உரையாடல் அரங்கிற்கு” சென்றேன்.எந்த அதிகாரத்தின் பின்புலமுமில்லாத உதிரி படைப்பாளியை அவதூறு கொண்டு காயடிப்பதை எதிர்த்து எழுதுவதும், பேசுவதையும் தவிர வேறு என்ன தான் வழியிருக்கிறது?
ஊடறு.காம் ஆசிரியர் றஞ்சி, ஊடறு.காமின் ஆசிரியர் குழுவில் இருக்கும் ஆழியாள் மற்றும் பெண்ணியவாதிகள் வ,கீதா, அ.மங்கை, புதிய மாதவி, சுகிர்தராணி, பிரேமா ரேவதி, வள்ளி, என தோழிகள் நிறைந்திருந்த அரங்கும் என் தந்தையின் நண்பரும், இருபது வருடங்களாக என்னை குழந்தைப்பருவத்திலிருந்து அறிந்த குடும்ப நண்பருமான பேராசிரியர் வீ அரசின் இருப்பும் என் எதிர்ப்பை அந்த சபையில் பதிவு செய்யும் நம்பிக்கையை எனக்கு அளித்தது. ஊடறு றஞ்சி, சந்தியா இஸ்மாயில் என்ற முகமூடியில் ஒளிந்துக்கொண்டு எழுதிய பொய்களையே அங்கே திரும்ப திரும்ப பரப்பிக்கொண்டிருந்ததை, அந்த அரங்கின் மற்ற பங்கேற்பாளர்கள் எனக்கு தெரிவித்ததும் மனக்கொதிப்பாக இருந்தது. இந்தப் பொய்ப் பரப்புரைகள் என்னையும், என் படக்குழுவையும் பாதிப்பதை விட அந்தப்படத்தில் பங்கெடுத்த பாதிக்கப்பட்ட ஈழத்து தாய்மார்களையும் குடும்பங்களையுமே பாதிக்கும் என்பதை எடுத்து சொல்லி நியாயம் கேட்கலாம் என்று தான் அந்த சபைக்கு சென்றேன். துண்டறிக்கைகளையும் கையோடு எடுத்து சென்றிருந்தேன். படத்தின் எடிட்டர் தங்கராஜும், கேமிரா மேன் அரவிந்தும் நானும் மட்டுமே அங்கு சென்றோம். ஊடறு.காம் தன் பொய்யான அறிக்கையைத் திரும்ப பெற வேண்டும் என்றும், ஊடறுவின் அநியாயப் பரப்புரையால் நடந்த பாதிப்புகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தட்டியைப்பிடித்துக்கொண்டு அமைதியாக தரையில் அமர்ந்து என் எதிர்ப்பை பதிவு செய்தேன். துண்டறிக்கையை வினியோகிக்க கூடாது என்றும் அந்த அரங்கத்தின் புனிதத்தை கலைக்க கூடாது எனவும் தடை விதித்தார் வீ.அரசு. என் படத்தின் எடிட்டரையும், கேமிராமேனையும் பார்த்து, ’என்ன ஆள் வைத்து கலாட்டா செய்கிறாயா’ என்று வசைபாடி துண்டறிக்கைகளையும் பறித்துக்கொண்டு, பின் தட்டி கேட்டபின், சிலருக்கு தானே வினியோகித்தார். அ.மங்கை ”என்ன நினைத்ததை செய்கிறாயா” என்று சத்தம் போட்டார். அமைதியாக தட்டிப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்த நான், ”சீப்பான அரசியல் செய்கிறாய்” என்று வீ.அரசு சொன்னதற்கு மட்டும், ’இல்லை அங்கிள், நியாயத்தைக் கேட்கிறேன், பதில் சொல்லுங்கள்’ என்று மட்டும் பதலளித்தேன். றஞ்சியும், ஆழியாளும் ஒரு மணி நேரம் நான் பிடித்து நின்ற என் பதாகை வாசகங்களுக்கோ, வினியோகித்த துண்டறிக்கைக்கோ பதில் சொல்லவில்லை. ஒரு மணி நேரமும் நிகழ்வு நடந்து முடிந்தது. யாரும் எதுவும் பேசவில்லை. நான் எதிர்ப்பு தட்டியோடு அமர்ந்திருக்க, பெண்ணியவாதிகளின் செருப்புகள் என் மேல் தூசியெறிய கடந்து சென்றன.நாங்களும் வீடு திரும்பினோம். உலகப் பெண்களுக்கெல்லாம் நீதி பேசிய அரங்கு சமகாலத்தில் மாற்று சினிமா களத்தில் இயங்கும் எனக்கு அநீதி இழைக்கிறார்களே என்பதை அன்றிரவே சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தேன்.
இன்று(4 ஜனவரி) மாலை புதியமாதவி தலைமையில், பாமா, தமிழ்ச்செல்வி, யாழினிவரன், சுகிரதராணி ”படைப்பும் வாழ்வும்” என்ற தலைப்பில் பேசும் நிகழ்வுக்கு சென்றேன். பாமா பேசியபின், நேற்றைய போராட்டத்திற்கு எந்த பதிலும் றஞ்சியும், ஆழியாளும் எனக்கு தராததால், அரங்கமும் என்னை அலட்சியப்படுத்தியதால் பேசுவதற்கு நேரம் கோரினேன். புதிய மாதவி அரங்கம் முடிந்தபின் பேசுவதற்கு நேரம் தருவதாக சொல்லிக்கொண்டிருக்கும் போதே, பேராசிரியர் வீ.அரசு மைக்கிற்கு வந்தார். நான் செய்ததெல்லாம் படத்திற்கான விளம்பர ஸ்டண்ட் என்றார். படத்திற்கு, சேனல் ஃபோர் ஒளிபரப்பை விட எந்த விளம்பரத்தை இந்த பெண்ணிய உரையாடல் தரும் என்பதை வீ.அரசு விளக்கினால் புரிந்துக்கொள்வேன் என சொன்னேன்.உன்னதமான படைபபாளிகள் பேசும்போது நான் தகராறு செய்கிறேன் என்றார். உன்னதமற்ற படைப்பாளியாகவே நான் இருந்துவிட்டுப் போகிறேன்! எனக்கு நீதி பெற தகுதியில்லையா? எனக் கேட்டேன். அ.மார்க்ஸ், ம.க.இ.கவினரை தனியாக கூட்டம் வைத்துக்கொள்ள சொன்னது போல என்னை தனியாக கூட்டம் வைத்துக்கொள்ள
அரசு கட்டளையிட்டார். ம.க.இ.க தோழர்களுக்கு பேச அனுமதித்தப் பின், அவர்கள் “லீனா மணிமேகலைக்கு தெரிந்த மார்க்ஸிய ஆண்குறிகளின் வகைமாதிரிகளை எங்களுக்கு சொல்ல வேண்டும்” என்று பேசியதால் தான் மார்க்ஸ் அவர்களை வெளியேறச் சொன்னார், அப்படியும் அதே அளவுகோள் வைக்க ’நான் கட்சியில்லையே, தனி ஆள் தானே, பேசுவதற்கும் அனுமதிக்கவில்லையே’ என்று கேட்டேன்.
பொறுமையிழந்த அவர், ”இவளை தூக்கி வெளியில போடுங்க” என்று கர்ஜித்தார். திரண்டு வந்த மாணவர்கள் விசில் சத்தம் கேட்ட கான்ஸ்டபிள்கள் போல என்னை இழுத்து சபையில் இருந்து வெளியேற்றினார்கள். எனக்கு ஆதரவாக பேசிய நண்பர்களையும், மாணவர்களை ஏவியே வெளியே தள்ளினார் வீ.அரசு. என்னுடன் வந்ததாக கருதிய பேராசிரியர் வீ.அரசு ,புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்த யாரோ ஒரு இளைஞனையும் அடித்து, அவர் கேமிராவைப் பிடுங்கி கொண்டார். சென்னை பல்கலைகழக மாணவர்களை ஏவல் அடிமைகளாக பார்த்தது, என்னை சிறிது நேரம் White Van Stories படத்தையும், அவதூறாளர் றஞ்சியையும் கூட மறக்க வைத்தது.
சபைக்கு திரும்பிய பெண்ணியவாதிகள் சமூக நீதிக்கான தங்கள் அரங்கை தொடர்ந்து நடத்தினார்கள். வேடிக்கை பார்த்தவர்கள், மெளனம் சாதித்தவர்கள் ’உன்னத படைப்பாளிகளின்’ அறத்தில் பங்கேற்க திரும்பினார்கள். எல்லாவற்றிலும் மேலாக கதவுக்கு வெளியே காவலுக்கு ஏவப்பட்டு நின்றுக்கொண்டிருந்த மாணவர்களின் முகங்கள் என்னை அலைக்கழித்தது. என்னோடு வெளியேறிய நண்பர்களின் முகங்கள் பேயறைந்திருந்தது. சில
மீட்டர்கள் தள்ளியிருந்த தமிழக அரசின் தலைமைச் செயலக கூட்டத்திற்கு வந்த இடத்தில் தாக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது போல உணர்ந்ததாக ஒரு நண்பர் மனம் வெதும்பினார்.
வெளி வாசலில் கிடத்தப்பட்ட புத்தக கடைகளை நின்று சற்று வெறித்துப்பார்த்துவிட்டு கடற்கரை சாலையில் வெளியேறி நடந்தபோது அதிகாரத்தின் துர்வாசனை அடித்தது.
லீனா மணிமேகலை
தொடர்பு சுட்டிகள்
வெள்ளை வேன் கதைகளும் வேடிக்கை மனிதர்களும் : http://www.shobasakthi.com/shobasakthi/?p=1087
பெண்ணிய உரையாடல் அரங்கு
தேவதைகள்
சிறந்த சர்வதேச ஆவணப்படத்திற்கான தங்கச்சங்கு விருது, சிறந்த எதிர் சினிமாவிற்கான ஜான் ஆபிரஹாம் விருது, கென்யாவின் “Women Building Peace” ஜூரி விருது, ஜெர்மனியின் மூனிக் சர்வதேச விழாவில் Horizon விருதுக்கான பரிந்துரை, ஆஸ்திரேலியாவின் ஆசிய பசிபிக் ஸ்கிரீன் விருதுக்கான முன்தேர்வு, சென்னை தேசிய ஆவணப்பட விழாவில் One Billion Eyes விருது, ஆகிய சர்வதேச அங்கீகாரங்களைப் பெற்ற ஆவணப்படத்தின் திரைக்கதை வடிவம் இந்தப் புத்தகம்.
மும்பை சர்வதேச திரைப்பட விழாவின் தங்கச்சங்கு விருதின் பாராட்டு பத்திரத்திலிருந்து சில வரிகள்…”தமிழ்க் கலாசாரத்தின் கட்டுகளிலிருந்து தங்களைத் தாங்களே விடுவித்துக்கொண்ட மூன்று அசாதாரணப் பெண்களை தேவதைகளாக வரிக்கிறார் இளம் படைப்பாளி லீனா மணிமேகலை. இந்த மூன்று பெண்களும் முன்மாதிரிகளிலிருந்து விலகி தங்களின் முழு சக்தியையும் ஆற்றலையும் வெளிப்படுத்தும்படி அவர்களுடையதேயான செயற்கைத்தன்மையற்ற நம்பகத்தன்மைமிக்க படைப்புத்தளத்தை உருவாக்கி காட்டியுள்ளார் இயக்குனர்”
கனவுப்பட்டறை பதிப்பகம்
விலை 300 (DVD இணைப்புடன்)
தேவதைகள்
சிறந்த சர்வதேச ஆவணப்படத்திற்கான தங்கச்சங்கு விருது, சிறந்த எதிர் சினிமாவிற்கான ஜான் ஆபிரஹாம் விருது, கென்யாவின் “Women Building Peace” ஜூரி விருது, ஜெர்மனியின் மூனிக் சர்வதேச விழாவில் Horizon விருதுக்கான பரிந்துரை, ஆஸ்திரேலியாவின் ஆசிய பசிபிக் ஸ்கிரீன் விருதுக்கான முன்தேர்வு, சென்னை தேசிய ஆவணப்பட விழாவில் One Billion Eyes விருது, ஆகிய சர்வதேச அங்கீகாரங்களைப் பெற்ற ஆவணப்படத்தின் திரைக்கதை வடிவம் இந்தப் புத்தகம்.
மும்பை சர்வதேச திரைப்பட விழாவின் தங்கச்சங்கு விருதின் பாராட்டு பத்திரத்திலிருந்து சில வரிகள்…”தமிழ்க் கலாசாரத்தின் கட்டுகளிலிருந்து தங்களைத் தாங்களே விடுவித்துக்கொண்ட மூன்று அசாதாரணப் பெண்களை தேவதைகளாக வரிக்கிறார் இளம் படைப்பாளி லீனா மணிமேகலை. இந்த மூன்று பெண்களும் முன்மாதிரிகளிலிருந்து விலகி தங்களின் முழு சக்தியையும் ஆற்றலையும் வெளிப்படுத்தும்படி அவர்களுடையதேயான செயற்கைத்தன்மையற்ற நம்பகத்தன்மைமிக்க படைப்புத்தளத்தை உருவாக்கி காட்டியுள்ளார் இயக்குனர்”
கனவுப்பட்டறை பதிப்பகம்
விலை 300 (DVD இணைப்புடன்)