அச்சம் தவிர். ஆண்மை இகழ்
நன்றி – அந்திமழை மாத இதழ்
01/01/2013
சென்ற வாரம் டெல்லியில், இருபத்து மூன்று வயது பெண் மாணவி மீது, ஓடும் பேருந்தில் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைப் பெயரிட தமிழில் ஒரு சொல்லைத் தேடிக்கொண்டிருக்கிறேன். தமிழில் எழுதும் சிந்திக்கும் பெண்ணுயிரான எனக்கு இது ஒரு அவமானகரமான தருணம். என் முன்னே குவிந்திருக்கும் தினசரி செய்திகளிலும், கட்டுரைகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கும் “கற்பழிப்பு” என்ற வார்த்தை என் முகத்தில் அமிலத்தை எறிகிறது. கற்பழிப்பு என்பதை பகுபதப்படுத்தினால் ஒரு ஆணுக்கு அல்லது குடும்பத்திற்கு அல்லது சமூகத்திற்கு அடிமையாக இருக்கும் தகுதியை இழப்பது என்ற அர்த்தம் வருகிறதென்கிறார் தந்தை பெரியார். தமிழில் வள்ளுவம் தொடங்கி தினத்தந்தி வரை ”கற்பழிப்பு” என்ற சொல் வழக்கில் இருக்கிறது என்பதை சிந்தித்துப் பார்த்தாலே தமிழ்ச்சமூகம் இன்னும் எப்படி ஆணாதிக்க, நிலபிரபுத்துவ சாக்கடையில் சிக்கியிருக்கிறது என்பதை புரிந்துக்கொள்ளலாம். ”வன்புணர்ச்சி”, ”வல்லுறவு”, ”வல்லாங்கு” என்ற தமிழ்ப்பதங்களும் பெண்ணுக்கு இழைக்கப்படும் உச்சபட்சக் கொடுமையை அர்த்தப்படுத்தத் திணறுகின்றன. ”பாலியல் சித்ரவதை” என்ற சொல் மொழியை சற்று தன் அதிகாரத்திலிருந்து கீழிறங்கி பெண்ணுக்கு சற்று அருகே நிற்க வைக்கின்றது.
இன்னும் உயிருக்குப்போராடிக் கொண்டிருக்கும் பலாத்காரத்தால் சிதைக்கப்பட்ட அந்த மாணவிக்காக டில்லியை ஸ்தம்பிக்க வைத்த ஆயிரக்கணக்கான மாணவர்களோடும் மாணவிகளோடும் நானும் கை கோர்க்கிறேன். பாலியல் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்ட எம்.எல்.ஏக்களையும், எம்.பிக்களையும் கொண்ட அரசாங்கமும் அதன் போலீஸ் குண்டர்களும் ஏவும் கண்ணீர் மற்றும் புகை குண்டுகளையும், லத்தி அடிகளையும் மீறி சமூக நீதி கேட்டு இந்த மாணவர்களோடு அணி சேர்கிறேன். ஆனால் கூடவே சாதியின் பெயரால் தலித் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகளுக்கு எதிராக, குடும்ப உறவுகளில் -திருமணங்களில் நடக்கும் வல்லுறவுகளுக்கு எதிராக, மதவெறிக் கும்பல் ஒவ்வொரு கலவரத்திலும் பெண்களைக் குறிவைக்கும் ஈனத்தனத்திற்கெதிராக, ஆதிவாசிப் பெண்களை மானபங்கப்படுத்தும் “வளர்ச்சி”த் திட்டங்களுக்கெதிராக, தேசப்பாதுகாப்பு என்ற போர்வையில் ஈழத்திலும், காஷ்மீரத்திலும், வட கிழக்கிலும், நடந்துக்கொண்டிருக்கும் பாலியல் பலாத்காரங்களுக்கெதிராக, சீருடை காமுகர்களுக்கெதிராக அணிசேரவும் இதே மாணவர்களை வலியுறுத்துவேன். அரசாங்கத்தை கிஞ்சித்தும் அசைத்துவிட முடியாத 9 டூ 6 உண்ணாநிலைப் போராட்டங்கள், வெறும் சடங்காக மாறிப்போன கடையடைப்புகள், அடையாள அட்டை பகிஷ்கரிப்புகள் போன்ற காலாவதி எதிர்ப்பு முறைகளைத் தவிர்த்து, அதிகாரத்தை அம்மணமாக்கும் போராட்டங்களை சிந்தித்து சாத்தியப்படுத்துமாறு கேட்டுக் கொள்வேன். இந்திய தேசம் ஏ.டி.எம் மெசின்கள் இயக்கும் வெறும் மத்தியதர வர்க்கத்தினரால் ஆனதல்ல என்று அவர்களின் மனசாட்சியை உறுத்துவேன்.
ஒரு வாரமாக சமூக வலைத்தளங்களும், இ மெயில்களும் ஆன்லைன் பெட்டிஷன்களால் நிறைந்திருக்கின்றன. குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையையும், ஆணுறுப்பு அறுப்பையும் வலியுறுத்தி கையெழுத்துக் கேட்கின்றன. கையெழுத்துப் போடாதவர்களை குற்றவாளிகளாக்கி விடும் வேகத்தில் குவியும் இந்தப் பெட்டிஷன்கள் சமூக உணர்வையும் சந்தைப்படுத்தி விட்ட இந்தக் காலகட்டத்தின் அவமானச் சான்றுகள். மனித சமூகம் ”அதிகாரம்” என்ற போதையைக் கண்டுபிடித்த போது தூக்கு தண்டனையையும் கூடவே கண்டுபிடிக்கிறது. குற்றவாளியைத் தூக்கிலிடும்போது ஒரு போதும் குற்றம் சாவதில்லை என்ற உண்மையை அதிகாரம் என்ற போதையைக் கலைத்தால் மட்டுமே உணரமுடியும். ”ஆணுறுப்பு அறுத்தல்” என்ற தண்டனைமுறை கோருபவர்கள் பெண்ணுறுப்பில் நுழையும் போத்தல்களையும், இரும்புக் கம்பிகளையும், துப்பாக்கிகளையும், என்ன செய்யப்போகிறார்கள். மேலும் ”பாலியல் சித்ரவதை”யை வெறும் பெண்ணுறுப்பில் நுழையும் ஆணுறுப்பு என்பதாக மட்டும் புரிந்துக்கொள்வது எத்தனை ஆபத்தானது. திருநங்கைகளையும், திருநம்பிகளையும், ஒரு பாலீர்ப்பு கொண்டவர்களையும் “திருத்துவதற்கு” பலாத்காரத்தைப் பயன்படுத்தும் குற்றங்களை எவ்வகைப்படுத்துவது? தன் உடையை, துணையை, வேலையை, கொள்கையை, நம்பிக்கைகளை, பாலினத்தை தேர்வு செய்யும் பெண்ணுக்கு ”பாடம் புகட்டுதல்”, ”அகெளரவப்படுத்துதல்”, ”தண்டித்தல்”, “துன்புறுத்துதல்” என்ற பெயரில் நடக்கும் பாலியல் அத்துமீறல்களை பண்பாட்டு ரீதியாக அனுமதிக்கும் மோசமான மனோபாவத்தின் வெளிப்பாடாக “ஆணுறுப்பு” சுற்றி எழுப்பபடும் தண்டனை கோஷங்களைப் பார்க்கிறேன்.
நடைமுறையில் இருக்கும் பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகளைச் சரியாகவும், விரைவாகவும், அறத்துடனும் பயன்படுத்துவதற்கு காவல் துறையும், நீதி துறையும் தயாராக இருக்கிறதா என்பது தான் நம்முன் நிற்கும் தீர்க்கமான கேள்வி. இதை எழுதிக்கொண்டிருக்கும் போது, நான் வாசிக்க நேர்ந்த செய்தி, நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி பாலியல் சித்ரவதைக்கு உட்படுத்தப்பட்டது தொடர்பாகக் காவல்துறையினர் இந்திய குற்றவியல் சட்டத்தின் 450 (குற்ற நோக்கத்துடன் வீட்டுக்குள் அத்துதுமீறிப் புகுதல்). 376 (வன்புணர்ச்சி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர். இந்திய குற்றவியல் சட்டத்தில் குழந்தைகளைக் கையாள்வதற்கேற்ற விதிகள் இல்லை என்பதாலேயே, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான சட்டம் நவம்பர் மாதத்திலிருந்து நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இந்த சிறப்புச் சட்டத்தின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள்தான் தாங்கள் குற்றம் செய்யவில்லை என்பதை நிரூபித்தாக வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தையின் மருத்துவச் செலவு, வழக்குச் செலவு அனைத்தையும் அரசாங்கமே ஏற்க வேண்டும். அது மட்டுமல்ல. இந்த சட்டத்தின் கீழ் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் குழந்தை நல அலுவலர் இருக்க வேண்டும். ஆனால் இது எதுவுமே தலைஞாயிறில் நடக்கவில்லை என்பது தான் அவலம். காவலர், வழக்கை சிறப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யாமல் வழக்கமான சட்டத்தின் கீழ் பதிவு செய்திருக்கிறார். சட்டம் தெரியாத காவல் அதிகாரிகளுக்கும், புகார் கொடுக்க வரும் பெண்களிடம் அத்துமீறும், பெண் சிறைக்கைதிகளைச் சூறையாடும் காவல் துறைக்கும் தான் நம் வரிப்பணம் சம்பளமாகத் தரப்படுகின்றது என்ற நிலையில் நீதிக்கான உரிமைக்குரலை எங்கு தொடங்குவது? எதில் முடிப்பது?
பாதிக்கப்பட்ட பெண்களை மேலும் அச்சுறுத்தும் குடும்ப, சமூக, அமைப்புகள், சுதந்திரத்திற்கான விலையாக மானத்தையே கேட்கின்றன. போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையைவிட குடும்ப வன்முறையில் இறந்த பெண்களின் எண்ணிக்கை அதிகமென ஒரு புள்ளிவிவரத்தை எளிதாக யாரும் கடந்துவிடமுடியாது. நாம் ஒவ்வொருவரும் ஒரு பெண்ணை இரண்டு முலைகள் – ஒரு யோனி கொண்ட பண்டமாகப் பார்ப்பதை கைவிடும்போதும், கருவுற்றிருக்கும் பெண்ணை ஸ்கேன் செண்டருக்கு அழைத்து செல்லாமல் இருக்கும்போதும், பிறக்கும் பெண்ணுக்கும், ஆணுக்கும் சரிவிகித வாய்ப்புகளையும் உரிமைகளையும் பெற்றோர் வழங்கும்போதும், வரதட்சிணை மாதிரியான இழிவுகள் முற்றிலுமாக ஒழியும்போதும், எப்பாலினராக இருந்தாலும் உழைப்புக்கேற்ற ஊதியம் சமமாக வழங்கப்படும்போதும், பாலியல் சுதந்திரம் பெண்ணுக்கான சுதந்திரமாகவும் கருதப்படும்போதும், ”மறுப்பு” சொல்லும் பெண்ணிடம் இருந்து மரியாதையாக விலகிச்செல்லும் மனப்பான்மையைப் பயிற்சி செய்யும் உறுதியை எடுக்கும்போதும், பால்-பாலின இழிவை வியாபாரமாக்கும் ஊடகங்களை கண்டித்து தனிமைப்படுத்தும் போதும், பெண்ணிற்கெதிரான அநீதிகள் ஒவ்வொன்றுக்கும் பெண்ணையே பொறுப்பாக்கும் அயோக்கியத்தனத்திலிருந்து விழித்தெழும்போதும் மட்டுமே காலகாலத்திற்கும் நடந்துவரும் பெண்ணுக்கெதிரான இந்த அதிகாரத்தின் போரை தடுத்து நிறுத்த முடியும்.
லீனா மணிமேகலை
நேர்காணல் – தேவதை ஆவணப்படத்தை முன்வைத்து ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலையுடன்
http://www.pesaamoli.com/thodar_interview_1.php
ஜெயச்சந்திரன் ஹஸ்மி
தேவதைகள் – நமது கனவுலகத்திலும் கற்பனைகளிலும் சினிமாக்களிலும் வெள்ளை உடை உடுத்திக் கொண்டு, அழகாக, கவலைகள் இல்லாமல், பாடிச் சுற்றிக்கொண்டிருக்கும் தேவதைகளை பார்த்திருப்போம். ஆனால், நிஜ வாழ்வின் தேவதைகளை அடையாளப்படுத்துகிறது ஒரு ஆவணப்படம். ஆம், இந்த தேவதைகள் உழைத்து உண்பவர்கள். வியர்வை சிந்தி சம்பாதிப்பவர்கள். ஆண் பெண் பேதங்களை உடைத்தவர்கள். உழைப்புக்கு ‘பால்’ ஒரு வரையறை இல்லை என்று உணர்த்தியவர்கள். எல்லாவற்றிற்கும் மேல் இவர்கள் பெண்ணைப் பற்றி சமூகம் கொண்டிருக்கும் உள்ளீடுகளை உடைத்தெறிந்தவர்கள். நம்மைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். கனவு காணும் கண்களை கசக்கி, நம் சமூகத்தை ஆழ்ந்து கவனித்தால், தெருவுக்குத் தெரு இதுபோன்ற தேவதைகளை காணலாம். இவர்கள் நிஜ தேவதைகள். லீனா மணிமேகலை இயக்கத்தில் வந்துள்ள ‘தேவதைகள்’ ஆவணப்படம் உலகத்தோடு நிமிடத்துக்கு நிமிடம் போராடும் மூன்று பெண்களைப் பற்றி பேசுகிறது. இயக்குனர் லீனா மணிமேகலையோடு கலந்துரையாடியதிலிருந்து….
1. முதலில் இந்த தேவதைகள் ஆவணப்படத்திற்கான அடிப்படைக் கரு எங்கிருந்து வந்தது?
தோழர் பவா செல்லதுரையின் வழி ஒப்பாரி கலைஞர் லஷ்மி அம்மாவின் தொடர்பு கிடைத்தது. வசியம் வைக்கப்பட்ட ஒரு ஆடு போல அவர் பின்னாடி சுற்றிக்கொண்டிருந்தேன். மணிமேகலை என்று அறிமுகம் செய்துக்கொண்ட அடுத்த நொடி, மணிமேகலைக்கு ஒரு பாடல் என்று இட்டுக்கட்டி பாடத்தொடங்கிவிட்டார். ஒரு முழுமையான மனுஷி அவர். அவரைப்பற்றி மேலும் பலர் தெரிந்துக்கொள்வதற்கு ஏதுவாக கேமிராவில் ஆவணப்படுத்தலாமா என்று கேட்டேன். உனக்கு எது மகிழ்ச்சியோ அதை செய்துக்கொள் என்றார். தேவதைகளின் விதை அந்த உரையாடல் தான்.
இவரைப்போன்றே அசாதாரணமான வாழ்க்கையை எந்த புகாருமில்லாமல் வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஆன்மாக்கள் யாரும் இருக்கிறார்களா என்ற தேடலில், விகடன் சரண் மூலம் சேதுராக்கம்மாவையும், பாண்டிச்சேரி சுகுமாரன் மூலம் கிருஷ்ணவேணியம்மாவையும் தொடர்பு கொண்டேன். தேவதைகள் சாத்தியமானது.
2. நான் பார்த்து, ஆவணப்பட திரை முறையில் இது ஒரு வித்தியாச முயற்சியாக பட்டது. மூன்று பெண்களின் கதையை இணைத்து இப்படம் எடுக்க நினைத்தது ஏன்? இப்படத்தின் தன்மைக்கு அது எந்த அளவிற்கு உதவியது ?
என்னிடம் எழுதப்பட்ட ஸ்கிரிப்ட் எதுவும் இல்லை. குறிப்புகள் மட்டுமே இருந்தன. லஷ்மி அம்மா, கிருஷண்வேணியம்மா, சேதுராக்கம்மா என்ற மூன்று பெண்களோடு எனக்கிருந்த உறவும், அன்பும், நாங்கள் ஒருவரையொருவர் அணைத்துக்கொண்டதும் அதன் தாக்கமும் பிம்பங்களாக மாற்றம் பெற்றன. எதையும் திட்டமிடவில்லை. என் ஒளிப்பதிவாளர் சன்னி ஜோசப், ஒலிப்பதிவாளர் நம்பி இருவரும் ஆண்களாக இருந்தாலும், அவர்கள் ஆன்மரீதியாக என் தோழிகள். முடிவுகள் எதையும் எடுத்துவிட தேவையற்ற ஒரு அன்பு எங்களிடையே இருந்தது. அதை மடைமாற்றம் மட்டுமே செய்ய வேண்டியிருந்தது.
3. இந்த மூன்று பெண்களுக்கும் சில பொதுத்தன்மைகள் உள்ளது. பெண்ணியம் சார்ந்த சமூகத்தின் பொதுக்கோட்பாடுகளை உடைத்து, சுயமாக வாழ்பவர்கள் இவர்கள். இவர்கள் மூவரும் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்தித்தவர்களா இல்லை இப்படத்திற்காக தேடியவர்களா?
பெண்ணியம் என்பதை, பால், பாலின ஏற்றத்தாழ்வுகளை அழித்து சமத்துவத்தைக்கோரும் ஒரு கருத்தியலாகவே நான் நம்புகிறேன்.தேவதைகளின் மூன்று பெண்களும் ஆணுக்கென்றே பணிக்கப்பட்ட உலகங்களை தங்கள் ஆளுமையால் கைப்பற்றியவர்கள். தங்களை ஒடுக்கும் ஆண்களையும் பேரன்பு கொண்டு அணைத்துக்கொள்பவர்கள். யாரளிக்கும் தீர்ப்புகளையும் பொருட்படுத்தாது வாழ்க்கையை ஒரு தீராத வேட்கையோடு வாழ்ந்து தீர்ப்பவர்கள். வெட்டிவிட்ட பாதையல்லாது, தங்களுக்கென்று புதிய பாதைகளை வகுத்துக்கொண்டவர்கள். உண்மையான கதாநாயகர்கள்.
எனக்கு நான் தேடிக்கொண்ட ஆசிரியர்கள். கலையின் போதாமைகளை இவர்களைப்போன்ற ஆளுமைகள் எனக்கு அவ்வப்போது அறிவுறுத்திக்கொண்டே இருப்பார்கள்.
4. இந்த படத்தை பார்த்த என் நண்பன் என்னிடம் கேட்ட கேள்வி இது. ‘இந்த மாதிரி லாம் பொம்பளைங்க இருக்காங்களா டா????’. இது போன்று தான் வாழும் சமூகத்தில் தான் பார்க்கும் பெண்களை வைத்தே பெண்ணினத்தை மதிப்பிடும் சமூகத்தில் இவற்றிலிலுந்து முற்றிலும் மாறுபட்ட பெண்களை படமெடுக்க நினைத்தது ஏன்?
உங்கள் நண்பரை அவரின் தாயாரை, அவர் வீட்டுப் பெண்களை, அன்றாடம் சந்திக்கும் பெண்களை சற்று உற்று கவனிக்க சொல்லுங்கள். நம் பெண்களை பெறுமதியாகப் பார்க்க சொல்லித்தர தவறிய சமூகம் நம் சமூகம். எனக்கு என் தாய் ரமா, பாட்டிகள் ராஜேஸ்வரி, வீரலஷ்மி, பூட்டி நாகம்மா என என் வீடு நிறைய ஹீரோக்கள். பெண்களால் ஆனது என் உலகம். இன்னும் என் தொப்புள் கொடியை அறுத்துக் கொள்ளும் துணிவு வரவில்லை. என் எல்லா புரிதல்களும் அங்கிருந்தே தொடங்குகின்றன. தேவதைகள் கதாபாத்திரங்களின் தன்மைகள் நாமறிந்த பெண்களிலும் நிச்சயம் படிந்திருக்கும். கவனிப்பதும், அதை ஆராதிப்பதும் தான் நமது பாடு.
5. இதில் காட்டப்படும் மூன்று பெண்களின் வாழ்க்கையும் எங்கே இணைகிறது என்று நினைக்கிறீர்கள்?
வாழ்க்கைக்கான வேட்கையில் இணைகிறது. இறப்புக்கு முன்னும் பின்னும் எதிருமான அந்த விநாடியில் இணைகிறது.
6. தனியாக வாழும் போதும், இப்பெண்கள் சில ஆணாதிக்கக் கருத்துக்களுக்கு பழக்கப்பட்டு இருப்பதாகத் தோன்றுகிறதே. ஆண்கள் தான் கடலுக்கு செல்ல வேண்டும், ஆண்கள் தான் வேலைக்கு போக வேண்டும் போன்ற கருத்துக்களை சொல்கிறார்கள். இத்தகைய போக்குகள் இப்பெண்களிடத்தே கூட இன்னும் மாறவில்லையா?
யாவும் அவள் தொழிலாம் என்ற கருத்து அவர்களின் மூலம் நிரூபணமாகிறது.
நமது கலாசாரம், தூமையின் பொருட்டு பெண்களை தூய்மையற்றவர்களாய் கருதும் கலாசாரம். மீனவப்பெண்கள் மீன் தொழிலுக்கு அனுமதிக்கப்படுவதில்லை. சேதுராக்கு தான் நம்பும் கடவுள், அப்படி தனக்கு சொல்லவில்லை என்கிறார்.
வெட்டியான் என்பதற்கு பெண்பதம் நம் மொழியில் இல்லை. கிருஷ்ணவேணி அனாதைப் பிணங்களை புதைப்பதும் எரிப்பதுமான பணியை சமூக, குடும்ப பகிஷ்கரிப்பைத் தாண்டி செய்து காட்டுகிறார். வெட்டியாள் என்ற சொல்லை தமிழுக்கு தருகிறார்.
சாவு நடக்கும் வீட்டில், தாரை தப்பட்டையோடு ஆடும் பெண்களை நாம் யாரும் பார்த்திருக்க மாட்டோம். லக்ஷ்மி அதையும் போற்றுதலுக்குரிய தொழிலாக மாற்றி கம்பீரமாக செய்து வருகிறார். 5000 வார்த்தைகளைப்பேசி 550 ரூபாய் சம்பளம் பெறுவதாக தன்னம்பிக்கையோடு கூறுகிறார்.
இவர்கள் தங்கள் அளவில் ரோச லக்சம்பர்க்குகள் தாம்.
7. இதில் ஒப்பாரி பாடல் பார்க்கும் பெண் பேசும் ஒரு ஷாட்டில்(04.11) கேமரா தூரத்தில் இருந்து அவர் தனியே பேசிக்கொண்டிருப்பது போல காட்டுமே. அது ஆவணப்பட மொழிக்குள் அடங்குமா? அங்கே அவர் யாரிடமும் பேசுவது போல் இல்லாமல், கேமராவிடம் பேசுவது போலவும் இல்லாமல் இருக்கிறதே?
அவர் ஒரு கதைசொல்லி. தூரத்தில், கிட்டத்தில், ஓரத்தில் இருப்பதெல்லாம் கேமிராவின் போதாமைகளே!
8. இறந்த அநாதை உடல்களை புதைக்கும் பெண்மணி அதிர்ச்சியளிக்கிறார். அவரது இந்த வாழ்க்கையின் ஆரம்பத்தில், சுடுகாட்டுக்குள் செல்வது குறித்த அவரது குடும்பத்தினரின் எதிர்வினை எப்படி இருந்தது?
அவர் குடும்பம் அவரைத் தள்ளி வைத்திருக்கிறது. இல்லை, அவர் தன் குடும்பத்திலிருந்து தள்ளியிருக்கிறார். இல்லை அவர் செய்யும் தொழில் அவரை எல்லாவற்றிலிருந்து தள்ளி வைத்திருக்கிறது. எப்படி வேண்டுமானாலும் புரிந்துக் கொள்ளலாம். ஆனால் தான் நம்புவதை துணிந்து செய்துக்கொண்டு தந்தையில்லாத தன் குழந்தைகளைப் பேணுகிறார். சுடுகாடு அவருக்கு சோறு போடும் தெய்வமென சொல்கிறார். பிணங்களே தன் உற்ற துணை எனக் கருதுகிறார்.
அவர் முகத்திலிருக்கும் கருணைக்கு இந்த சமூகம் என்ன கைமாறு செய்துவிட முடியும்.
9. இப்படம் பார்க்கும்போது, ஒரு சிறிய கேள்வி தோன்றியது. இந்த மூன்று பெண்களையும் அவர்கள் சார்ந்த சமூகம் எப்படி பார்க்கிறது என்பதையும் பதிவு செய்திருக்கலாமே?
அதை அவர்கள் போதுமான அளவுக்கு படத்தில் சொல்லியிருக்கிறார்கள் என்றே கருதுகிறேன். மற்றபடி பிரதிக்கு கோனார் உரையெல்லாம் என்னால் எழுத முடியாது.
10. இவர்கள் மேற்கொண்ட தொழிலில் ஒரு பெண்ணாக இருப்பதினால் தொழில் ரீதியாக அல்லாமல் இவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்னென்ன?
பெண் பிறக்கும் போதே இச்சமூகத்தில் “ஆயா” தொழிலோடு தான் பிறக்கிறாள். அதைத் தவிர பெண்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு தொழிலும் கூடுதல் சேவை தான். இச்சமூகத்தின் மன உயரங்கள் மட்டுமே பெண் சந்திக்கும் அன்றாட சிக்கல்கள்.
11. உண்மையில் இந்த படம் எங்கே தொடங்குகிறது என்று நினைக்கிறீர்கள்?
லஷ்மி அம்மாவின் ஒற்றைக்கண்ணிலிருந்து தொடங்குகிறது,
12. ஒரு சமூகத்தில் ஆவணப்படங்களில் பங்கு, முக்கியத்துவம் என்ன?
சமூகத்தின் மனசாட்சியைத் தொடர்ந்து தொந்தரவு செய்வது தான் கலையின் தலையாயப் பணி என்று நான் நம்புகிறேன். திரைப்படம், கவிதை என கலையின் எல்லா வடிவங்களும் “எல்லாம் சரியாகத் தான் போய்க்கொண்டிருக்கிறது” என்று நமக்கு சொல்லப்படும் போலியான அமைதியை கெடுக்கிற கலைஞனின் அரசியல் நடவடிக்கைகள் தாம்.
13. இன்றும் நம் சமூகத்தில் ஆவணப்படங்களில் முக்கியத்துவம் உணரப்படாமல் இருப்பது ஏன்?
தேவதூதனுக்கு மயிர் சிரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
14. இப்பெண்கள் மூவரும் மரணத்தையோ, மரணம் சார்ந்த விஷயங்களையோ மிக அருகில் இருந்து பார்க்கிறார்கள். அது அவர்கள் உளவியலையும் சமூகப்பார்வையையும் மாற்றியிருக்கிறதா?
சித்தர் மரபை பற்றி வாசித்திருக்கிறீர்களா? தேவதைகளின் கதாபாத்திரங்கள் சித்தர்கள். மரணத்தோடு தினமும் உரையாடுவது, அவர்களுக்கு வாழ்க்கையை தள்ளி நின்றுக்கொண்டு தாமே பார்த்துக்கொள்ளும் அவதானித்துக்கொள்ளும் கலையை கற்றுத்தந்திருக்கின்றது.
15. இறுதியில் மீனவப் பெண்மணி பேசும் வார்த்தைகள் தான், ஒரு உழைப்பாளி அரசாங்கத்தின் விடும் அறிக்கை என்று எனக்கு தோன்றியது. நம் முன் பேசியவர்கள், தங்களை அரசாங்கம் சுரண்டுகிறது என்று உணர்கிறார்களா? அதை எதிர்க்கிறார்களா? இவரே கூட ஏன் அரசாங்கம் எங்களை காலி செய்கிறது என்று தெரியவில்லை என்று சொல்கிறார். அங்கு நடக்கும் அடக்குமுறைகளுக்கு எதிராக இப்பெண்களின் எதிர்வினை என்ன?
நாம் திணைவாழ் மக்கள். திணையை, அதாவது நிலப்பரப்பை நம்மிடமிருந்து துண்டித்துவிட்டால், நாம் சொந்த மண்ணில் அகதிகள் தாம். கடலை, மலையை, விளைநிலங்களை, காடுகளை நம்மிடமிருந்து பறித்து தான் நாடுகள் உருவாக்கப்படுகின்றன. அதற்கு அரசாங்கங்களைத் தேர்ந்தெடுக்கும் அடிமைகளாக நம்மை மாற்றிவிட்டார்கள்.
மிச்சமிருக்கும் ஆதிவாசி சமூகங்கள் தாம் மனித நாகரிகங்களின் எச்சங்கள். சேதுராக்கம்மாவின் குரல் ஒரு கடல் ஆதிவாசியின் கூக்குரல். யாரடா அவன் அரசாங்கம்? எங்கள் கடல் எங்களுக்கு சொந்தம் என அவர் கேட்பது கூடங்குளத்தின், பிளாச்சிமாடாவின், நர்மதை அணை மக்களின், ஜார்கண்ட்-ஒரிசா-வடகிழக்கு மாகாணங்களின் கேள்வியும் கூட தான்.
16. பிணங்களை புதைக்கும் பெண், தன் கஷ்டங்கள் பிணங்களிடம் சொல்வது, இச்சமூகத்தின் சாபம் அல்லவா?
சாபத்தை தலை வணங்கி ஏற்றுக் கொள்வோம். தெருவுக்கு தெரு காளி கோயில்கள் இருக்கும் இந்த ஊரில் தானே பெண்சிசுக்கள் கொல்லப்படுகிறார்கள்?
17. ஏதோ ஒரு வகையில் ஒடுக்கப்பட்டிருக்கும் இப்பெண்களுக்கு அரசாங்கம் சார்ந்த உதவிகள் ஏதாவது வருகிறதா? இவர்கள் வாழும் சமூகம் சார்ந்த இளைப்பாறுதல்கள் ஏதும் கிடைக்கிறதா?
இப்பெண்கள் அரசாங்கங்களுக்கு வெளியே வாழ்பவர்கள். அல்லது அரசாங்கத்தின் கெஸட்டுகளில் இவர்களின் பெயர்கள் இல்லை. அதற்கு அவர்கள் பொறுப்பாக மாட்டார்கள்.
18. முதலில் ஒரு பெண் படைப்பாளியாக உங்களுக்கு இச்சமூகத்தில் வரவேற்பு எப்படி இருக்கிறது. இப்போதை விட, ஆரம்ப கட்டங்களில் எப்படி இருந்தது?
வெகு மக்கள் என்னை எப்போதும் அரவணைத்துக்கொள்கிறார்கள். அது ஒன்று தான் எனக்கு ஊக்க சக்தி. திரைப்பட உருவாக்கத்திலும் சரி, திரையிடல்களிலும் சரி, எம்மக்களின் நேசம் தான் என்னை வழிநடத்துகிறது.
தமிழில் ’சிவில்’ சமூகம் என்று ஒன்று சொல்லப்படுகிறதே, அச்சமூகம் எனக்கு அளிப்பதெல்லாம் வெறுப்பொன்று மட்டுமே! அவர்கள் என் தற்கொலையை விரும்புபவர்கள். அதை தள்ளிப்போட்டு அவர்களைப் பதற அடித்துக் கொண்டிருக்கிறேன்.
19. இவர்கள் இருக்கும் ஊர்கள் மத ரீதியாக, சாதி ரீதியாக ஆட்பட்ட ஊர்கள் போல் தெரிகிறது. இது சார்ந்த பிரச்சினைகள் ஏதேனும் இப்பெண்களுக்கு வருகிறதா?
நீங்கள் கேட்கும் கேள்விகள் ஏதோ இப்பெண்கள் யாருமற்ற தீவுகளில் இருப்பது போல கருதி கேட்கப்படுவது போலிருக்கின்றன. தேவதைகளின் கதாபாத்திரங்கள் வாழ்வென்பது சாதி-மதம்-வர்க்கம-பால்-பாலின ஏற்றத்தாழ்வுகள் பீடித்திருக்கும் இக்கேடு கெட்ட சமூகத்தின் விளைவே! அனைத்து வகையிலும் விளிம்பின் விளிம்பில் வாழும் பெண்கள் அவர்கள்.
20. மதமும், சாதியும் தலைதூக்கி இருக்கும் ஊர்களில் இயல்பாக பெண்ணடிமைத்தனங்கள் இருக்கும் அப்போது, இவர்கள் இதுபோன்ற வேலைகளுக்கு செல்கையில், இவர்களில் பால் sex சார்ந்த எதிர்ப்புகள் என்னென்ன வருகிறது?
அடிமைத்தனத்தில் ஆதியானது பெண்ணடிமைத்தனம். சாதியும் ,மதமும், வர்க்கமும், “வளர்ச்சியும்”, தேச உருவாக்கங்களும், போர்களும் அவ்வடிமைத்தனத்தை பன் தன்மை மிக்கதாக மாற்றியிருக்கின்றனவே தவிர ஒழிக்கவில்லை. இதுவரை உருவான தத்துவங்களும், கருத்தியல்களும் கூட அதை கிஞ்சித்தும் மாற்றவில்லை என்பதே உண்மை. தேவதைகளின் பெண்களுக்கு வரும் அனைத்துவகை எதிர்ப்புகளின் அடிப்படையும் இதுதான்.
21. ஆவணப்படங்களை ஒரு பெரும் மெயின்ஸ்ட்ரீம் ஊடகமாக மாறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
ஆவணப்படம் வெகுசன ரசனைக்கானதாகத் தான் என்றும் இருக்கிறது. கிராமங்களில் என் திரையிடல்களுக்கு கூடும் கூட்டம் அளப்பரியது. ஆவணப்படங்களை எடுத்துச் செல்ல வெகுசன ஊடகம் இல்லை என்று சொல்ல வேண்டும். நுகர்வு கலாசாரத்தில் புரையோடிப்போயிருக்கும் வெகுசன ஊடகங்களுக்கும் ஆவணப்படங்கள் பயன்படாது.
Paradox என்னவென்றால் 2009 ல், NDTV தேவதைகளை கோகோ கோலாவின் விளம்பரத்தோடு தான் திரையிட்டது. ஜார்கண்ட் ஆதிவாசிகளின் நிலமீட்பு போராட்டங்களைப் பற்றிய என் சமீபத்திய ஆவணப்படமான Ballad of Resistance என்ற படத்தை ரியல் எஸ்டேட் விளம்பரங்களின் ஊடாகத் தான் NDTV ஒளிபரப்பியது.
22. எந்த ஒரு கலைப்படைப்புக்கும் டார்கெட் ஆடியன்ஸ் என்று ஒன்று உண்டு. ஆனால் ஆவணப்படங்களுக்கு டார்கெட் ஆடியன்ஸ் இல்லாதும், அதன் வளர்ச்சியின்மைக்கு ஒரு காரணமா?
ஆவணப்படங்கள் என்ன ஃபேர் அண்ட் லவ்லியா? டார்கெட் ஆடியன்ஸை பிக்ஸ் செய்துவிட்டு எடுப்பதற்கு?
23. ஆவணப்படங்களில் மொழி வேறு. திரைப்படங்களின் மொழி வேறு. இந்த வேறுபாடுகளை நீங்கள் திரைப்படம் எடுக்கும் போது எப்படி சமாளித்தீர்கள்?
ஆவணப்படம், கதைப்படம், கவிதைப்படம் என எல்லா வகைப்படங்களும் திரைப்படங்கள் தாம். கதை, ஹீரோ, ஹீரோயின், சண்டை, பாடல், குத்து நடனம் எல்லாம் இருந்தால் தான் அது திரைப்படம் என்பது புரிதலின் குறைபாடே! நீங்க திரைப்பட இயக்குநர் இல்லையே? ஆவணப்பட இயக்குநர் தானே என்று கேட்கும்போது சிரித்துக்கொள்வேன். செங்கடலை தொழில் முறை நடிகர்கள் அல்லாது கதைமாந்தர்களையே கொண்டு திரைப்படுத்தியிருந்ததால், கதைப்படமாக அது இருந்தாலும், ஆவணப்படமெனவே இங்கு அடையாளப்படுத்தபடுகிறது. எனக்கு அதில் மகிழ்ச்சியே. ஆவணப்படத்தின் சத்தியம் கதைப்படத்திலும் உணரப்படுவது நிறைவைத் தரக்கூடிய விசயம் தான். சினிமாவிற்கென்று மொழி இருகின்றது. அதன் அலகு ஷாட்ஸ். ஒரு ஷாட்டை ஒரு வார்த்தை எனக்கொண்டால் கவிதைக்கும், சினிமாவுக்குமான தொடர்பு விளங்கும்.
24. ஆவணப்பட உலகமும், இச்சமூகமும், ஆவணப்பட படைப்பாளிகளுக்கு போதுமான பொருளாதாரத்தை வழங்க வல்லதா?
நான் ஒரு பிச்சைக்காரி, கொள்ளைக்காரி, திருடி, வேசி, 420. இது எல்லாமுமாக இருந்தால் தான் இச்சமூகத்தில் நான் நினைக்கும் திரைப்படங்களை நானே செய்துக்கொள்ள முடியும்.
25. இது போன்ற ஆவணப்படங்களுக்கான தயாரிப்பாளர்கள் கிடைக்கிறார்களா? அதற்கு என்ன செய்கிறீர்கள்?
ஏமாற்றுவேன். பல சாகசங்களை செய்து பணம் வைத்திருப்பவர்களை ஏமாற்றி அவர்களை தயாரிப்பாளர்களாக மாற்றுவேன்.
26. ஆவணப்படங்களை பொருந்த வரையில் சந்தைப் படுத்துதல் என்பது இருக்கிறதா? அதற்கு என்ன செய்ய வேண்டும்?
ஆவணப்படங்கள், கவிதை தொகுப்புகள், இவற்றை இலவசமாக மட்டுமே பெற்றுக்கொள்ள இச்சமூகம் விரும்புகிறது. இதை மீறி விற்றால் எம்மை கலை வியாபாரி, அறிவு விபசாரி என இச்சமூகம் சுட்டும். கலைஞன் காற்றை சாப்பிட்டு வயிற்றை நிரப்பிக்கொள்ள வேண்டியது தான். தெருவில் அனாமத்தாக விழுந்துக் கிடக்கும் நாணயங்களைக்கூட பொறுக்க தகுதியற்றவன் கலைஞன்.
27. இப்படம் ஏற்படுத்திய எதிர்வினைகளை சொல்லுங்களேன்?
விருதுகளைப்பற்றி சொன்னால் அது தற்பெருமை. திரையிடல்களைப்பற்றி சொன்னால், அது சுய சொரிதல்.
தனிப்பட்ட முறையில் இது எனக்கு 500 திரைகளைத் தாண்டிய ஒரு பெருவெளிப்பயணம்.
28. உங்களின் அடுத்த திரை முயற்சிகள்…
முயற்சிகள் நடந்துக் கொண்டிருக்கின்றன.
தெருவுக்குத்தெரு இத்தேவதைகள் வியாபித்திருக்கிறார்கள். இனியாவது, நம் கனா உலகத்தில் ஆடும் தேவதைகளுக்கு செலவிடும் நேரத்தில் ஒரு பகுதியையாவது, இது போன்ற உயிர்ப்பான ஆன்மாக்கள் நிரம்பிய தேவதைகளோடு செலவிடுவோம்.
தேவதைகள் ஸ்கிரிப்ட் மற்றும் டிவிடியை கனவுப்பட்டறை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.
இணையத்திலும் விற்பனைக்கு டிவிடி கிடைக்கிறது,
முகவரி-http://www.magiclanternfoundation.org/uc_filmdetails.php?FilmID=206
இனத்துரோகி என்னும் பட்டத்தை ஏற்கத் தயார் – லீனா மணிமேகலை நேர்காணல்
மாற்று சினிமா என்பது நெருப்பு ஆறு. இங்கே யாருக்கும் அதன் அருகில் போகத் துணிச்சல் இல்லை. லீனா அந்த நெருப்பாற்றை நீந்திக் கடந்து கொடியை நாட்டியவர்.
சர்வதேச அளவில் இந்தியாவை பிரதிநிதித்துவப் படுத்தும் சில இயக்குனர்களில் ஒருவர்.
ராமேஸ்வரம் கடல் பரப்பில் இன்று விழும் ஒவ்வொரு பிணத்தையும் மருத்துவ அறிவைக் கொண்டல்ல; சர்வதேச அரசியல் அறிவைக் கொண்டு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை தன்னுடைய செங்கடல் படம் மூலம் உருவாக்கிக் கொண்டிருப்பவர்.
சமீபத்தில் “இளங் கலைஞர்களுக்கான சார்ல்ஸ் வாலஸ் விருது” பெற்று லண்டன் பல்கலைக் கழகத்தில் Visiting Scholar ஆக UK விற்குப் பறந்து சென்றவரை தரையிறங்கும் முன் ஒரு நேர்காணலுக்காகப் பிடித்தோம்.
எப்போதும் உரையாடலுக்குத் தயாராக இருப்பது லீனாவின் பெருமைகளில் ஒன்று.
இனி நேர்காணல்
செங்கடல் என்னும் இந்தக் கதை களத்தை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்? உலகத்திற்கு என்ன சொல்ல வேண்டும் என்று நினைத்தீர்கள்?
செங்கடல், சாட்சியாகவும், கதைசொல்லியாகவும் நான் நிற்கும் இடம். தனுஷ்கோடி என்பது ஒரு அசுரத்தனமான மணல் காடு. அங்கு ஓயாமல் சுழன்றடிக்கும் காற்றில் தங்கிவிட்ட ஓலமும், முகத்திலப்பும் மணல் துகள்களின் கதைகளும் தான் என்னை செங்கடலுக்கு இழுத்து சென்றது.
மார்ச் 2009லிருந்து தனுஷ்கோடி நோக்கிய என் பயணமும் தேடலும் இன்றும், என்றும் முடியுமா தெரியவில்லை. புயல் அழித்த நகரத்தின் சிதிலங்களை வீடாக கொண்ட தனுஷ்கோடி கம்பிப் பாடு கிராம மீனவர்களின் குசினிகளில் உண்ட மீனும் நண்டும் இன்னும் என் கைகளில் வாசனையாய் மணக்கிறது. சராசரி ஒவ்வொரு மூன்று மீனவக் குடும்பங்களிலும் ஒரு விதவையையாவது, அல்லது மகனை இழந்த தாயையாவது பார்க்க நேர்ந்தது தான் செங்கடலை எழுத தூண்டியது. தமிழ் என்ற மொழியை பேசுவதாலும், கறுப்பாய் இருப்பதாலும் மட்டுமே அடித்து நொறுக்கப்பட்ட, கொல்லப்பட்ட, கொள்ளையடிக்கப்பட்ட, துன்புறுத்தப்பட்ட, சிறையிலடைக்கப்பட்ட இந்திய மீனவர்களின் கதைகளை நான் கேட்டு வெறும் மௌன சாட்சியாகி போகாமல், பல ஆயிரம் செவிகளுக்கும், கண்களுக்கும், மனசாட்சிகளுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற வேட்கையே செங்கடலை திரைப்படமாக்க தூண்டியது.
நீங்கள் எதைச் செய்தாலும் தமிழரங்கில் அது சர்ச்சையை உண்டாக்கும். ஷோபா சக்தி என்ன செய்தாலும் சர்வதேச தமிழ் அரங்கில் அது சர்ச்சையை உண்டாக்கும். இருவரும் சேரும்போது சர்ச்சை அதிகமாகுமே? எந்த எண்ணத்தில் சேர்ந்து செயல்படலாம் என்று முடிவு செய்தீர்கள்?
சர்ச்சைகளால் நட்பு உருவாகுமா என்ன? தமிழ் சூழலில் ஒரு நோய்த்தன்மை உண்டு. மொத்தத்துவப்படுத்துவது, அல்லது தனிமைப்படுத்துவது. செயற்பாட்டாளர்களை ஏதாவது முத்திரை குத்தி அவரவர்களுக்கான வசதியான பைகளில் போட்டு வைத்துக் கொள்வதென்பது அவதூறோ, தனிநபர் தாக்குதல்களோ, ஒழுக்கவாத குற்றச்சாட்டுகளோ செய்வதற்கு வசதியாகவும், ஏதுவாகவும் இருக்கிறது. மற்றபடி எனக்கும் ஷோபாவுக்கும் இருக்கும் ஒற்றுமை அரசியல் பிராணிகளாக இருப்பது தான் என்று நினைக்கிறேன். எங்களிடையே அன்பும், அக்கறையும் தோழமையும், நிரம்ப மரியாதையும், கூடவே வேறுபாடுகளும் முரண்களும் நிச்சயம் உண்டு. இணைவும், பிரிவும் கண்ணாடியும் கல்லும் போன்றது தான் என்பதையும் தெரிந்தே வைத்திருக்கிறோம்.
செங்கடலில் இணைந்து பணியாற்றினோம், சாத்தியமற்ற சிலவற்றை செய்து பார்ப்பதற்கு அந்த இணைவின் ஆற்றல் கை கொடுத்தது. இது தொடருமென்றே நம்புகிறேன். மூன்று வருட நட்பு, பணியும் பயணங்களுமாய் நீடித்தாலும் அவரிடம் கற்க வேண்டியது இன்னும் ஏராளம் இருக்கிறது.
திரைக் கதையில் ஷோபாசக்தியுடன் இணைந்து பணியாற்றியது எவ்வகையில் சரியாக இருந்தது?
ஒரு வருடமாக இந்த மக்களோடு அலைந்து திரிந்து, தரவுகளை சேகரித்து, மணிக்கணக்காய் நேர்காணல்கள் செய்து, சமைத்து, உண்டு, குடித்து, உறங்கி, வாழ்ந்து தான் கதையை எழுதி முடித்தேன். படத்தின் ஒவ்வொரு பிரேமும் அம்மக்களின் வாழ்வும் நினைவும் தான். திரைக்கதையாக உருவாக்க நினைத்த் போது ஜெரால்டிடம் உதவி கேட்டேன். சினிமாவைப் பொறுத்தவரை எனக்கு ஆசிரியத் தோழன் ஜெரால்டு. அவர் ஒரு டிராப்ட் எழுதினார். நான் அதை திரும்ப மறுபிரதியாக்கம் செய்தேன். திரைப்படத்தின் பிண்ணனி ஈழ அரசியல் என்பதுவும், அகதிகள் கதாபாத்திரங்கள் உருவாக்கம் மற்றும் ஈழத்தமிழ் வசனங்கள் இவற்றில் ஒரு ஈழ எழுத்தாளரின் பங்கு இருக்கவேண்டும் என்ற எண்ணமும் தான் எங்களை சோபசக்தியிடம் சென்று சேர்த்தது. தற்கால தமிழ் இலக்கியத்தின் ஆகச் சிறந்த கதைசொல்லி ஷோபாசக்தி என்பது என் அபிப்ராயம். இப்படி ஜெரால்ட், ஷோபா, மற்றும் நான் என மூவரும் இணைந்து பிரதியை மாறி மாறி எழுதிப் பார்த்து உருவாக்கப்பட்டது தான் செங்கடல் திரைக்கதை.
திரைப்படத்தில் சூரி என்ற அகதி கதாபாத்திரம், ஷோபா சக்தியில்லை என்றால் சாத்தியப்பட்டிருக்காது. ஒரு சமூகத்தில் உக்கிரமான போர்ச்சூழல் ஏற்படுத்தியிருக்கும் மனப்பிறழ்வின் குறியீடு சூரி. தனுஷ்கோடி மீனவர்களையும், மண்டபம் அகதிகளையும் அவரவர் வாழ்வில் ஏற்றிருக்கும் கதாபாத்திரங்களையே, திரையிலும் ஏற்க வைத்ததனால் பல பயிற்சி பட்டறைகள் நடத்த வேண்டியிருந்தது. மக்கள் வாழ்வு திரைக்கதையாவதும், திரைக்குழு – மீனவர்களும், அகதிகளுமாவதும் என்று கூடு விட்டு கூடு பாய்ந்து தான் செங்கடல் என்ற ரசவாதம் நடந்தேறியது.
நடிகர்கள் தேர்வு செய்திருக்கிற விதமும் அவர்களிடம் மிகச் சிறந்த நடிப்பை பெற்றிருப்பதும் இந்தப் படத்தின் முக்கிய பலமாக இருக்கிறது. நடிகர்கள் தேர்வு குறித்து என்ன முடிவு செய்திருந்தீர்கள்? என்னென்ன முயற்சிகளுக்குப் பின் இது சாத்தியமானது?
ஒரு சில கதாபாத்திரங்கள் தவிர இதில் நடித்த எல்லோரும் தனுஷ்கோடி, ராமேஸ்வர மக்களும், மண்டபம் அகதிகளும் தான். ஒவ்வொரு முறையும் அகதிகளை மண்டபத்திலிருந்து, நேவி போலிஸ் கெடுபிடிகள் தாண்டி தனுஷ்கோடி அழைத்து சென்று படப்பிடிப்பு நடத்துவதென்பது ஒரு மிஷன் இம்பாசிபில் போல தான் நடந்தேறும். படத்தில் போலீஸ் கதாபாத்திரங்கள் ஏற்ற பாதி பேர் ராமநாதபுர மாவட்டத்தில் போலீஸ் ஆகும் கனவோடு தினமும் கர்லாக் கட்டை தூக்கி பயிற்சி செய்துக் கொண்டிருந்த இளைஞர்கள், மற்றும் கிடாத்திருக்கை கிராமத்து தெருக்கூத்துக் கலைஞர்கள். மற்றும் திரைப்படக்குழுவின் சமையல்காரர், வாகன ஓட்டுனர்கள் என இறுதி உறுப்பினர்கள் வரை எல்லோரும் படத்தில் நடித்திருக்கிறார்கள். கடுமையான சவால்கள் நிறைந்த தேர்விது. இன்னொரு படத்தை இப்படியான முறையில் என்னால் செய்ய முடியுமா என்று தெரியாது. ஒரு நூறு அகதிகளை சந்தித்து பேசி, புகைப்படமெடுத்து, வீடியோ எடுத்து, அவர்களுக்கு அதை காட்டி திருத்தங்கள் செய்து, ஸ்க்ரிப்டை சொல்லி, பட்டறைகளை நடத்தி, ஒரு ஐந்து பேரை தேர்வு செய்திருப்போம், ஆனால் படப்பிடிப்பின் போது அந்த ஐந்து பேரில் மூன்று பேர் தான் வந்து சேர்வார்கள். மற்ற இருவரை பிறகு கண்டே பிடிக்க முடியாது. களவாய் ஆஸ்திரேலியா போய் விட்டார் ஒருவர் என்பார்கள். இன்னொருவர் வேறு வேலை கிடைக்காததால் சும்மா வந்தார், மற்றபடி அவருக்கு வேறு வேலை கிடைத்துவிட்டதென்பார்கள். படப்பிடிப்பு நடக்கும்போதே என் பொண்டாட்டியை எப்படி வேறொருவனின் மனைவியாக நடிக்க வைக்கலாம் என சண்டை நடந்திருக்கிறது. குழந்தையாக நடித்த சிறுமி வயதுக்கு வந்துவிட்டதால், இனி வர மாட்டாள் என்று புதிய பிரசினை வரும். தலைவலிக்கிறது என்றொரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் மீனவர் நடுவே தலைமுடியை வெட்டிக் கொண்டு வந்துவிடுவார். அவருக்கு முடி வளரும்வரை காட்சி காத்திருக்கும். மனைவிக்குப் பிடிக்கவில்லை என்று சட்டைகளை மாற்றிப் போட்டுக் கொண்டு வருவார்கள் மீனவர்கள். காட்சியை கைவிட வேண்டியிருக்கும். வசனங்களை ஒரே போல வேறு கோணங்களுக்காக மக்களை பேச வைக்க முடியாது. ஷாட் டிவிஷனை நினைத்த மாதிரி எப்போதும் எடுக்க முடிந்ததில்லை. மிஸ் ஆன் சீன் என்று சொல்லப்படும் காட்சியாக்கம் மக்கள் போக்கில் தான் எடுக்க வேண்டியிருக்கும். கன்டினியுட்டி பஞ்சாயத்துகளால் உதவி இயக்குனர்கள் வேலையை விட்டே ஓடியிருக்கிறார்கள்.
மக்கள் பங்கேற்பு சினிமா என்பது ஒரு எளிய விஷயமில்லை. கேமிரா கோணத்திலிருந்து, பேசும் வசனத்திலிருந்து, உச்சரிப்பு, பாவனை, கலை, என்று படமாக்கலின் ஒவ்வொரு நுணுக்கமும் திரைக்குழுவும், மக்களும் எடுக்கும் கூட்டு முடிவாகத் தான் இருக்க முடியும். இது ஆசிரியப் பிரதியல்ல. இதை கேமிராமேனும், லைவ் சவுண்ட் பதிவுக் கலைஞரும், இயக்குனரும், இணைந்த ஆசிரியக் குழு மனமொட்டி முடிவெடுத்து மக்கள் போக்கில் தொழில்நுட்பத்தை, கலையை பிரதியாக்கம் செய்தால் மட்டுமே செங்கடல் போன்ற ஆக்கங்களை சாத்தியப்படுத்த முடியும்.
இந்தப் பட வேலைகளை துவங்கிய நாளிலிருந்து நிறைய இக்கட்டுகளைச் சந்தித்து வந்தீர்கள்? ஏன் இவைகளெல்லாம் நடக்கிறது? இவைகளைப் பற்றி இப்பொழுது என்ன நினைக்கிறீர்கள்?
நான் செய்வது எதுவும் சந்தைக்கான பொருளல்ல. நான் “பிலிம் இண்டஸ்ட்ரியை” சேர்ந்தவளுமல்ல. மந்தைக்கு தப்பின ஆட்டுக்கு மேய்ப்பனும் இல்லை, வேலியும் இல்லை. பலி கொடுக்கப்படாமல் ஒரு ஆடு தப்புவதை சமூகம் பார்த்துக் கொண்டிருக்குமா என்ன?
திரைக்கதை இல்லாமல் படப்பிடிப்பு நடத்தி, ஆனால் நேர்த்தியான திரைக்கதையைக் கொண்டு உருவாக்கிய படத்தைப் போன்ற தோற்றத்தை கொண்டு வந்து சேர்த்திருக்கிறீர்கள்? இது எப்படி சாத்தியமானது? இந்த வடிவ நேர்த்தி எப்படி சாத்தியமானது?
இந்த படத்தை சுற்றி அது ஆவணப்படமா? கதைப்படமா? படமே இல்லையா? என்றெல்லாம் விவாதங்கள், ஏற்புகள், நிராகரிப்புகள் எல்லாம் நடக்கின்றன. வடிவம் என்பது ஒரு கலைஞனின் கையிலிருக்கும் ஒரு கோல் தான். அதுவே நிர்ப்பந்தமாக முடியாது. சொல்ல நினைத்ததை நேர்மையாகவும் விட்டுகொடுத்தலில்லாமலும் சொல்வதற்கு் எந்த வடிவம் கை கொடுக்கிறதோ அதைக் கையாள்வது தான் சரியாக இருக்க முடியும். டாக்குமெண்டிங் பிக்சன் என்பார்கள். செங்கடலுக்கு அந்த உத்தியே சரியென நம்பினேன். செய்தேன். ஒரு ஆத்தராக இந்த படைப்பில் யாரையும் நான் பிரதிநிதிப்படுத்தவில்லை. எடுத்துக் கொண்ட வாழ்வோடு உணர்வு பரிமாற்றம் செய்ய தலைப்பட்டேன் என சொல்லலாம்.
நீங்கள் நிறைய ஆவணப்படங்களை இயக்கியிருக்கிறீர்கள்? இந்தப் படம் இயக்கும் போது புதிதாக என்ன பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது?
இதுவரை நான் செய்த ஆவணப்படங்களும் பல சிக்கலகளுக்கு நடுவில் தான் உருப்பெற்றன. ஆனால் அவை மிக குறைந்த செலவில் செய்யப்பட்டவை. ரேடியோ ஜாக்கி, தொலைக்காட்சி துறை வேலைகள் செய்வது, தனியார் திரைப்படக் கல்லூரிகளில் பாடம் எடுப்பது போன்ற வேலைகளைப் பார்த்து வரும் ஊதியத்தில் சேமித்தே அதையெல்லாம் பார்த்துக் கொள்ளலாம். திரைப்பட விழாக்களுக்கு செல்வது எப்போதும் அந்தந்த விழாக்குழுவின் பொறுப்பென்பதால் பெரிய சுமை இருக்காது. ஆனால் செங்கடல் முழுநீள கதைப்படம். முதலீடு அதிகம். போட்டியும் அதிகம். முழுநீள திரைப்பட சர்க்கியூட்டில் தாக்குப் பிடிக்க குறைந்தபட்ச பின்புலமாவது அவசியப்படுகிறது. மொத்த பட்ஜெட்டில், முப்பது சதவிகிதமாவது படத்தை பரவலாக கொண்டு செல்வதற்கு அவசியப்படுகிறது.சரியான தயாரிப்பு பின்புலம் இல்லாமல் இத்தகைய முயற்சிகளில் இறங்குவதென்பது நம் சூழலில் தற்கொலைக்கு சமம். எந்த வகையிலும் உயிர் தப்பிவிடக் கூடாதென்று எல்லா சக்திகளும் நெட்டித் தள்ளும். ஊதியம் இல்லாமல் வேலை பார்க்கலாம். ஆனால் நம்பிக்கை துரோகம், அவமானம், ஒவ்வொன்றுக்கும் பிச்சை எடுக்காத குறை என்று வெறும் அவநம்பிக்கையை மட்டுமே சந்தித்த காலம் செங்கடல். எனக்கிருந்த ஒரு சில மிகச்சிறந்த நட்புறவுகள் தோள் கொடுக்கவில்லையென்றால் இந்தப்படம் சாத்தியப்பட்டிருக்காது. ஒரு சிங்கிள் மதரின் போராட்டமாக கூட இந்தப் படத்தை பார்க்கலாம். குழந்தை தங்காதென்பார்கள், அபார்ட் செய்யென்பார்கள், குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு ஆகாதென்பார்கள். குழந்தை பிறந்தால் தாய் செத்துவிடுவாள் என்பார்கள். பிறந்தவுடன், இது பெண்குழந்தை, கொன்றுவிடென்பார்கள். ஆனாலும் அந்த குழந்தையை தாய் மட்டுமே நம்பி, போராடி வளர்ப்பார். செங்கடலை எல்லோரும் கைவிட்டார்கள். நான் எப்போதும் விடவில்லை.
நீங்களே இந்தக் கதையில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறீர்கள். உங்களையே நீங்கள் தேர்வு செய்து கொண்டதன் காரணம் என்ன?
செங்கடலின் மெடா பிக்ஷன், படம் நெடுக வரும் ஒரு ஆவணப்பட இயக்குனரின் பகுதி. அந்த கதாபாத்திரத்தை நானே செய்வது சரியென மனதில் பட்டது. செய்தேன். ஆனால் அது மணிமேகலை கதாபாத்திரம் தானே தவிர, நான் அல்ல.
டெல்லியில் இலங்கைத் தூதரகத்திற்கு முன்னால் ஒரு பெரிய போராட்டம் நடத்தினீர்கள். அதை படம் பிடித்து வைத்திருந்து செங்கடலில் சேர்த்திருக்கிறீர்கள். டெல்லி போராட்டம் இதற்காகவே திட்டமிட்டு நடத்தப் பட்ட நாடகம் என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்திருக்கிறதே. இதற்கு உங்கள் விளக்கம் என்ன?
டெல்லிப் போராட்டம் மிகச் சாதாரண ஒளிப்பதிவுக் கருவியால் திரைப்பட ஒளிப்பதிவாளரல்லாத ஒருவரால் ஒளிப்பதிவு செய்யப்பட்டது. படத்தில் இணைக்கும் போது இத்தகைய காட்சிகள் தொழில்நுட்ப ரீதியாக குறைபாடுள்ளவையாகவே இருக்கும். 500 துணைநடிகர்களை வைத்து செட் போட்டுக் கூட இந்தக் காட்சியை எடுத்துப் படத்தில் தொழில்நுட்பக் குறைபாடில்லாமல் இணைத்திருக்கலாம். கலைஞருக்கும் ஜெயலலிதாவுக்கும் டூப் போட்டு எடுப்பதுதான் சிரமம் எழுத்தாளர்களை டூப் போட்டு எடுப்பது ஒன்றும் சிரமமல்லவே. ஆனால் முடிந்தளவு உண்மையான காட்சிகளையே பயன்படுத்த செங்கடல் விரும்பியது. அரசியல் இயக்கங்களின் போராட்டங்கள், கலைஞர் உண்ணாவிரதம், நடிகர் சங்க போராட்டம், முத்துக்குமாரின் இறுதி ஊர்வலம் என. போர் நிறுத்தம் கோரிப் போராடிய உலகம் தழுவிய எல்லா எதிர்ப்பு இயக்கங்களையும் செங்கடல் பதிவு செய்கிறது. அதில் 30 நொடிகள் வந்து செல்கிறது டெல்லி போராட்டம். டெல்லி போராட்டக் குழுவில் இருந்த அநேகம் பேர் திரைப்படத்தைப் பார்த்து இதுவரை தங்கள் சாலிடாரிட்டியையே தெரிவித்திருக்கிறார்கள்.
நாலு பேர் சேர்ந்து ஏதாவது செய்தாலே, அங்கு குண்டு வைத்துவிட்டு ஓடி ஒளியும் நாசகார கும்பல் காலச்சுவடு. அதன் ஆள்காட்டி விரலை வெட்டியும், ஆணவம் அடங்கவில்லையென்றால், அதன் பின் நிற்கும் முதுகெலும்பில்லாத எழுத்தாளர்கள் தான் காரணம், திரைப்படம் தொடங்குவது, போர்க்காலங்களில், மொபைல் போனில் எடுக்கப்பட்ட போர்க்குற்றக் காட்சிகளோடு! இன்று இலங்கை அரசை சர்வதேச மனித உரிமை ஆணைய நீதிமன்றத்தில் நிற்க வைத்திருக்கும் ஃபுட்டேஜ். நீங்கள் பார்த்தீர்கள் தானே? ராணுவத்திடம் குண்டடி படுபவர்களிடமும், போர்க்குற்றம் புரியும் இலங்கை ராணுவத்திடமும் அனுமதி பெற்றீர்களா என்று காசு கண்ணன் கேட்டாலும் கேட்கக் கூடும்.
உங்கள் தனியறை காட்சி அவசியமா. ஒரு அரசியல் திரைப்படத்தில் நீங்கள் அப்படி தோன்றியிருப்பது பல்வேறு விமர்சனங்களை உண்டாக்கியிருக்கிறது. ஏன் அதைச் செய்தீர்கள்?
ஏங்க, இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சூரி, படம் முழுக்க அரை நிர்வாண்மாகத் தான வருவார். ஏதாவது கேள்வி வந்ததா? இலங்கை நேவி என்கவுண்டர் காட்சிகளில் ஆணுறுப்பு தெரியும் வகையில் நிர்வாணக் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. தேவை கருதி தானே வைத்திருக்கிறோம், ஒரு பெண் கதாபாத்திரம், தன் தனியறையில் இருக்கும்போது உள்ளாடையோடு கண்ணாடியில் பார்த்தபடி யோசித்துக் கொண்டிருக்கிறார். இதில் ஏன் எல்லாருக்கும் பிரச்சினை வருகிறது. அரசியல் படமென்பதால், பெண் கதாபாத்திரங்கள் எல்லாம் பர்தா போட்டு கொண்டு வரவேண்டுமா?
சர்வதேச அளவில் இந்தப் படம் என்ன விளைவுகளை உண்டாக்கியிருக்கிறது?
டர்பன், டோக்கியோ, மாண்ட்ரியல், மும்பை சர்வதேச திரைப்பட விழாக்களில் போட்டிப்பிரிவில் பங்கு பெற்றது. டோக்கியோவில் சிறந்த ஆசியப் பெண் திரைப்பட விருதை வாங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக சியோல், தாய்பெய், பீஜிங். இஸ்ரேல் நாடுகளில் பங்கேற்கிறது. டர்பன் திரைப்படவிழாவில் செங்கடல் படத்தை பார்த்த ஐ. நா. சபையின் மனித உரிமை ஆணையாளர் திருமிகு. நவி பிள்ளை ”ராமேஸ்வரம், தனுஷ்கோடி ஆகிய கடலோர எல்லைப் பகுதியில் இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் மனித உரிமை மீறலுக்கான ஒரு சாட்சியமாக, சமரசமற்ற குரலாக செங்கடல் ஒலிக்கிறது” எனக் குறிப்பிட்டார். இலங்கை அரசின் தமிழினப் படுகொலைகள் மீதான ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையத்தின் விசாரணையோடு இந்திய மீனவர்களின் படுகொலை மீதான தலையீட்டிற்கும் ஆவன செய்வதாகவும் உறுதியளித்தார்.
சென்னைத் திரைப்பட விழாவில் உங்கள் படத்தை திரையிட அனுமதிக்கவில்லை. நீங்கள் போராடியே அனுமதி பெற வேண்டியிருந்தது? இது ஏன் நிகழ்கிறது? தொடர்ந்து இப்படி போராடிக்கொண்டே இருப்பது சோர்வைத் தரவில்லையா?
திரைப்பட விழாக்கள் முற்போக்கு மரபுவழி வந்தவை. அவற்றில் தணிக்கை என்ற பேச்சுக்கே இடமில்லை. கருத்துச் சுதந்திரம் தான் ஒரு திரைப்பட விழாவின் ஆன்மா. அந்த பண்பாட்டை சீரழிக்க இடமளிக்க முடியாது. அங்கே படைப்பையும், படைப்பாளரையும் அவமதித்து விட்டு அதிகாரத்திற்கு என்ன வேலை? இந்த வருட இந்தியன் பனோரமாவில் தேர்வான ஒரே தமிழ்ப்படம் செங்கடல். ஆனால் விழாக்குழுவினர் இந்தியன் பனோரமாவில் தேர்வான மற்ற மொழிப்படங்களையெல்லாம் திரையிடும்போது, செங்கடலை விலக்கியது அப்பட்டமான தணிக்கை. தணிக்கையை சட்டப்போராட்டத்தில் வென்ற பின்னும், பனோரமா அங்கீகாரம் பெற்ற பின்னும், பண்பாட்டு வெளியில் தணிக்கை செய்வதென்பது எவ்வளவு மோசடி? அரசியல் விவாதத்திற்கு அஞ்சுபவர்கள் திரைப்பட விழா நடத்த வேண்டிய தேவையென்ன? மந்திரி விழா, முதல் மந்திரி ஆசி பெற்ற விழா, தயாரிப்பாளர்கள் சங்கமே கூடியிருக்கிற விழா அதனால் அவமதிக்க கூடாது என்று விழாக்குழுவுனர் சார்பாக சரத்குமார், சுகாசினி எல்லாம் பேசினார்கள். அதிகாரம் கையையும் வாயையும் கட்டிக் கொண்டு நிற்கும் இடம் தான் கலை. இதை இந்த சந்தை முதலைகளுக்கு நாம் கூப்பாடு போட்டுத் தான் சொல்ல வேண்டியிருக்கிறது.
படம் எடுக்க செலவிடும் ஆற்றலைவிட பல மடங்கு ஆக்டிவிசத்தில் தான் கழிகிறது. சோர்வு ஏற்படாமல் எல்லாம் இல்லை. ஒரு மூன்றாம் உலக, மேல் சாதியல்லாத, பணபலம்-ஆள் பலம்-அரசியல் பலம் எல்லாம் இல்லாத கறுப்பு பெண் சுயாதீன திரைப்பட இயக்குநராவதென்றால், எளிதாக நடந்துவிடுமா என்ன?
விடுதலைப் புலிகளுக்கு எதிரானது இந்தத் திரைப்படம் என்ற குற்றச்சாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?
விடுதலைப்புலிகள் எந்த மக்களுக்காக ஆயுதம் ஏந்தினார்களோ, அந்த மக்களையே மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தினார்கள் என்பதை பாதிக்கப்பட்ட மக்களின் வாய்மொழியாக கேட்டவள் நான். தமிழீழம் என்ற கனவு கொடூரமாக கலைக்கப்பட்டதற்கு இனவாத இலங்கை அரசாங்கமும், பிராந்திய அரசான இந்திய அரசாங்கமும் எவ்வளவு காரணமோ, அவ்வளவு காரணம் புலிகளும் தான். இந்த உண்மையை வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மக்கள் செங்கடல் மூலம் சொல்கிறார்கள். இதற்கு தார்மீகமான ஊடகமாக இருந்ததற்காக இனத்துரோகி, தேசத்துரோகி இன்னும் எல்லா பட்டங்களையும் ஏற்க நான் தயார். ஏனெனில் அனாவசியமாக ஒரு மனித உயிர் சாவதைக் கூட என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அடித்தட்டு மக்களின் வாழ்வாதைகளுக்கும், இங்கு நடக்கும் அரசியலுக்கும், அது பாடும் போர்ப்பரணிகளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை சொல்ல எடுத்த முயற்சியே செங்கடல்.
சென்னைத் திரைப்பட விழாவில் உங்கள் படம் மட்டுமே அரங்கு நிறைந்த காட்சியாக நிகழ்ந்தது.. இது உங்களுக்கு என்ன உணர்வைத் தருகிறது?
மகிழ்ச்சி. செங்கடல் இன்னும் தமிழக திரையரங்குகள் தோறும் வினியோகிக்கப்பட்டு, அரங்குகள் நிறைந்தால் இன்னும் மகிழ்வேன். கடுமையான சென்சார் போராட்டத்தை அரச அதிகாரத்தோடு, சட்டத்தின் உதவி கொண்டு தொடுக்க முடிந்தது. ஒரு வெட்டு கூட இல்லாமல், திரைப்படத்தின் ஆன்மா கெடாமல் வெளியே கொண்டு வர முடிந்தது. ஆனால் சந்தை என்ற அசுர சக்தி ஆளையே தடயமில்லாமல் அழிக்கவல்லது. ஆனாலும் பின்வாங்குவதாக இல்லை. கிரவுட் ஃபன்டிங் (crowd funding) மூலம் கழைக்கூத்தாடியின் உண்டியலை கையிலெடுக்கிறேன். என் பார்வையாளர்களை பவர் புரோக்கர்ஸின் உதவி இல்லாமல் நேரடியாக இன்டர்நெட்டில் சந்திக்கிறேன். மக்களே படத்தின் விநியோகத்தைக் கையிலெடுத்து செய்வதற்குரிய ஏற்பாடுகளை செய்துக் கொண்டிருக்கிறேன். அறிவிப்புச்செயதி கூடிய விரைவில் வரும்.
Sengadal the Dead Sea / செங்கடல்– Journey
Warm Greetings.
Sengadal the Dead Sea happens to be the only Tamil film chosen for Indian Panorama , 2011.
This people participatory film dealing Tamil fishermen issue will be presented at IFFI, Goa (Nov 23 to Dec 3) and will be travelling to all prestigious film festivals across the world as Indian Panorama Package.And certainly, it is a moment to celebrate freedom of expression as the film had suffered the worst censorship struggles for several months, for its political critique until the Appellate Tribunal’s intervention in July 2011. After winning its months-long legal battle with the Regional Central Board of Film Certification and the Appellate Tribunal Authorities over the ban on public exhibition, Sengadal the Dead Sea emerged with an “A” certification, without any cuts, on July 20, 2011. The film was then officially selected in the competition sections of 32nd Durban International Film Festival, 35th World Montreal Film festival, and in 13th International Mumbai Film Festival respectively. And it has won NAWFF Award at Tokyo as the best Asian Woman film of the year 2011. Ms. Navi Pillai, United Nations High Commissioner for Human Rights, who watched the film at Durban appreciated the uncompromising voice of the film and took it as a witness of the human rights violations committed by the Sri Lankan Navy on the Indian Fishermen at the international maritime border off the shores of Rameswaram and Dhanushkodi. She has committed necessary intervention along with her UN Investigations on the genocide committed on Lankan Tamils by Sri Lankan Government.Sengadal the Dead Sea is enacted by the real fishermen and refugees from Dhanushkodi and Rameshwaram Mandapam camp. All the supporting artistes are from Kidathirukai Therukoothu team and the film captures the fragments of their simple lives beaten by three decade long ethnic war in Sri Lanka. Produced by Tholpaavai Theatres, Sengadal the Dead Sea was one of the recipients of Production Grant by Global Film Initiative (GFI) for the year 2010.
Warmly
Sengadal team
வணக்கம்.
2011 ம் ஆண்டிற்கான இந்தியன் பனோரமாவிற்கு, செங்கடல் திரைப்படம் ஒரே தகுதி பெற்ற தமிழ்ப்படமாகத் தேர்வாகியுள்ளது. கோவா சர்வதேச திரைப்பட விழாவில்(ந்வம்பர் 23 – டிசம்பர் 3) பெருமையுடன் பங்குபெறும் செங்கடல் தமிழ் மீனவர்களின் வாழ்க்கையை மக்களின் பங்களிப்பைக் கொண்டே உருவாக்கப்பட்ட திரைப்படம். 2011 ஆண்டு முழுவதும் உலகமெங்கிலும் நடைபெறும் முக்கியமான சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு இந்தியன் பனோரமாவின் சார்பாக பங்குபெறும் வாய்ப்பையும் செங்கடல் இதன் மூலம் பெறுகிறது.
பல மாத சட்டப் போராட்டத்திற்குப் பிறகு சென்ஸார் தடையிலிருந்து மீண்ட செங்கடலின் இந்த வெற்றி கருத்துச் சுதந்திரத்தில் அக்கறையுள்ளவர்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. மத்திய தணிக்கைக் குழு செங்கடலை, அதன் அரசியல் விமர்சனுங்களுக்காக பொது இடங்களில் திரையிட தடை விதித்திருந்தது. பலமாதகால சட்டப் போராட்டத்திற்குப் பின் எந்த வெட்டும் இல்லாமல் மேல்முறையீட்டு ஆணையத்தின் தலையீட்டால் ‘A ‘ சான்றிதழை ஜூலை 20-ல் பெற்றது. அதன் பிறகு, 32ஆவது டர்பன் (தென் ஆஃபிரிக்கா) சர்வதேச திரைப் பட விழாவிலும், 35ஆவது மாண்ட்ரியல் (கனடா) உலகத் திரைப்பட விழாவிலும், 13 வது சர்வதேச மும்பை திரைப்பட விழாவிலும் சர்வதேசப் போட்டிப் பிரிவில் தேர்வு பெற்று பங்கேற்றது. இந்த மாதம் டோக்கியோவில், சிறந்த ஆசியப் பெண் திரைப்படமாக NAWFF விருது பெற்றுள்ளது .
டர்பன் திரைப்படவிழாவில் செங்கடல் படத்தை பார்த்த ஐ. நா சபையின் மனித உரிமை ஆணையாளர் திருமிகு. நவி பிள்ளை ”ராமேஸ்வரம் , தனுஷ்கோடி ஆகிய கடலோர எல்லைப் பகுதியில் இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் மனித உரிமை மீறலுக்கான ஒரு சாட்சியமாக ,சமரசமற்ற குரலாக செங்கடல் ஒலிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.இலங்கை அரசின் தமிழினப் படுகொலைகள் மீதான ஐ. நா சபையின் மனித உரிமை ஆணையத்தின் விசாரணையோடு இந்திய மீனவர்களின் படுகொலை மீதான தலையீட்டிற்கும் ஆவன செய்வதாகவும் உறுதியளித்தார்.
தனுஷ்கோடி மீனவர்களையும், மண்டபம் அகதிகளையும் நடிகர்களாக கொண்டே செங்கடல் படமாக்கப்பட்டுள்ளது. இந்திய இலங்கை எல்லைக் கிராமமான, எப்போதும் வாழ்வும் மரணமும் கண்கட்டி விளையாடும் தனுஷ்கோடியை, இலங்கையின் முப்பதாண்டுகால இனப்போரால் சிதறடிக்கப்பட்ட அதன் எளிய மக்களின் வாழ்வுக் கூறுகளை, மிக நுணுக்கமாக கையாளுகிறது இத்திரைப்படம் . தோல்பாவை தியேட்டர்ஸ் தயாரிப்பான செங்கடல்,அமெரிக்காவின் க்ளோபல் பிலிம் இனிஷியேடிவின் (GFI) 2010 – ஆம் ஆண்டிற்கான தயாரிப்பு ஊக்குவிப்பு வெகுமதியையும் பெற்றுள்ளது.
—
நன்றி
செங்கடல் திரைப்படக் குழு