உலகின் அழகிய முதல் பெண் – லீனா மணிமேகலையின் கவிதை முகம்
சமயவேல்
நன்றி தாமரை 14/10/2010
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மேற்குத் தொடர்ச்சி மலைகளில், ஒரு பள்ளத்தாக்கின் சரிவில் பார்த்த ஆதி மனிதர்களின் குடியிருப்பில் அந்தப் பாறைகளைப் போன்றே, அந்த மரங்களைப் போன்றே வெகு இயற்கையான அந்த மனிதர்களின் அ-கலாச்சார வாழ்முறையைக் கண்டு, அது ஓர் அதிசயம் என நினைத்தேன். இயற்கையிலிருந்து ஒரு சிறிதும் பிரியாத அவர்களை, தொல்குடியினர் என்றும் பழங்குடியினர் என்றும் நாம் எழுப்பும் சொல்லாடல்களில் ஒரு அர்த்தமும் இல்லை. நம் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களை பழங்குடியினர் என்று ஏன் அழைக்க வேண்டும்? ஆதி மனிதர்களின் மனசாட்சியாக வாழ்ந்தும் எழுதியும் வந்த லெவி ஸ்ட்ராஸ் கலாச்சாரத்தை இயற்கைக்கு எதிரிடையாக வைத்தார். ஒரு நொடியில் ஒரு நாட்டையே அழித்துவிட எத்தனித்திருக்கும் அணுக்கால மனிதர்களாகிய நாம், குகை வாழ்வைத் தாண்டி பல நூற்றாண்டுகளாக பூமி முழுதும் திரண்டிருக்கிற பல்வகை பண்பாட்டுச் சமூகங்களும் குறுக்கு மறுக்காக கட்டி எழுப்பியிருக்கும் கலாச்சாரச் சுவர்களை இடித்துத் தள்ளிவிட்டு, ஆதிவாழ்வின் அ-கலாச்சார மெய்மைகளை எப்படி மீட்கப் போகிறோம்?
லீனா மணிமேகலை, குகை ஓவியத்தையும் கவிதையையும் ஒரு நேர்கோட்டில் வைத்துப் பார்த்திருப்பது அவரது அ-கலாச்சாரத்தை அடைவதற்கான பெருவிருப்பத்தின் அடையாளமாகவே இருக்கிறது. இயல்புகளின் இயல்புகளுக்குள் பொதிந்த ஆதிப் பெண்ணின் குரல், லீனாவின் கவிதைகளில் பெரும் உக்கிரத்துடனும் கொண்டாட்டத்துடனும் பதிவு செய்யப்படிருப்பதை முதலில் நாம் அவதானிக்கிறோம். எல்லாவிதமான சுதந்திரங்களையும் சுவீகரித்துக் கொள்கிற கவி மனத்தின் கட்டற்ற போக்கில், கவிதையின் வழியாக பெரும் கலாச்சாரத்தின், பாலியல் முகத்தின் கரும் புள்ளிகளை, வெடிவைத்துத் தகர்த்துவிடுகிறார். பலரது கண்டனங்களையும், முகச் சுழிப்புகளையும் கிளப்பிய இவரது தூமத்திக் கவிதைகளை பெரும் கலாச்சாரத்துக்கு எதிரான ஒரு சொல்லியல் நிகழ்த்துப் போராட்டமாக கருதிவிட்டு இவரது கொந்தளிப்பு மிக்க கவிதைகளுக்குள் நுழைந்துவிடலாம். சமீபத்தில் ந.முத்துசாமியின் ‘பாஞ்சாலி’ என்ற சிறுகதையைப் படித்த பொழுது இன்று வரையிலும் பாரத கண்டமே பாஞ்சாலியின் தூமையில் நனைந்து கொண்டிருப்பதையும், அவள் துகிலுரியப்பட்ட நிகழ்வு இந்தியர்களின் கூட்டு நனவிலியில் ஆறாத புண்ணாகப் புரையோடியிருப்பதையும் அவதானிக்க முடிந்தது. லீனாவின் கவிதையிலோ தூமை, ஒரு எதிர்-அழகியல், தகர்ப்பு-மொழிப்பாடாக இயங்குவதை எவரும் வெகு எளிதில் புரிந்து கொள்ளமுடியும்.
கட்டற்ற காமத்தின் களிப்பைக் கொண்டாடும் லீனாவின் கவிதைகள் நவீன தமிழ்க் கவிதையின் புதுமொழியில், விதம் விதமான பாலியல் பித்தத்தையும், கொதிப்புகளையும் பெரும் உக்கிரத்துடன் வீசி எறிகின்றன. சங்ககால அகப் பாடல்களில் உள்ளுறையாகவும், திருக்குறளின் காமத்துப்பாலில் மெல்லிய கீற்றுகளாகவும், ஆண்டாளில் உடலை ஆன்மீக வெளிக்குக் கடத்தும் ஏக்கங்களாகவும் தொடரும் தமிழ்ப்பாலியல் கவிதைகளின் தொடர்ச்சியாக லீனா மணிமேகலையின் கவிதைகளும் அமைகின்றன. என் கள்வனின் நாக்கில்/ ஊறுகிறது/ விநோதத்தின் சாவிகள் என்ற வரிகளில் பெண் உச்சமடைகிற ரகசியத்தை, மிக அழகாக, சற்று சாய்ந்திருக்கும் மச்சத்தையும் சேர்த்து என்று கோர்க்கிறார். இந்தக் கடைசி மூன்று வரிகள் என்றைக்குமான அழகியலோடு இருக்க, முந்தைய வரிகள் இன்றைய அழகியலோடு இன்றைய மொழிப்புதுமையோடு ஒரு பின்னலான பாலியல் கவிதை ஆகிவிடுகிறது. இதே போல சாம்பன் கவிதையிலும் கலவியின் பிறிதொரு சித்திரம். “தொய்கிற வேளையெல்லம்/ காம்புகளில் ஏவுகிறது” என பாலியலின் நுண்ணிய அலகுகள் வழியாக, உச்சத்தில் பெண் அடையும் “கலவிகூர்புனல்” என வெளிப்படையான உரத்ததொரு பாலியல் மொழித்தொடரை உருவாக்குகிறார். கடைசி ஆறு வரிகளில் கவிதை திரள்கிறது. உடல்களை புராணிகத்துக்குக் கடத்தும் ரகசியத்தை இக் கவிதை மெல்ல அம்பலப்படுத்திவிடுகிறது. நா மீறிய கடல் கவிதையிலும் “ஈரத்தால் தீ மூட்டியவன்/ தன்/ நாக்கையும் விட்டுவிட்டுப் போய்விட்டான்/..”. என்று விளையாட்டு தொடர்கிறது. வேட்டை மறந்தவன் கவிதையில் யோனிக்காட்டில் புதுக்குகையைக் கட்டிக் கொண்டிருக்கும் ஆதிப் பெண்ணின் தங்கக் கிளிஞ்சல்கள் புதிய ரொமாண்டிசிச சொல்லடுக்குகளை உருவாக்குகிறது. ஒரு நீலப் பரவசக் கவிதையில் “கருவுறுகிறேன் தீவை” என்று இரண்டு சொற்களில் கவிதையை நட்டு வைக்கிறார். நிலவின் துரு, உனக்கு என்ன வேண்டும், மிதக்கும் பாடல், நீ பரப்பு நான் துண்டு ஆகிய கவிதைகள், காதலும் காமமும் மயங்கிய அழகியல் சொல்லாடல்களால் புதிய அகப்பாடல்களாகி விடுகின்றன. “நம்மிடையே ஒரு பிரேதம் கிடக்கிறது” என கொடூரமான பிரிவையும் ஒரு கவிதை பதிவு செய்கிறது. “அன்பொழிந்தவுடன்/ தலைகளைக் கொய்துவிடும் திடம்/ வாய்க்கப் பெறுவதில்லை/” என உறவுகள் அறுந்த கவிதையில் வெண்ணிப்பறந்தலை ஆக முயல்கிறார்
“ஒரு குவளைக் கள்” கவிதையில் “இடுப்பின் கீழ் இறுக்கிக் கட்டப்பட்ட/ என்/ கன்னிமையின் வெற்றிடம்/ யாரும் அறிய முடியாதது/” என்று எழுதுகிறார். கன்னிமை என்பது உடலின் வரலாற்றில் ஒரு கால் புள்ளி. அவ்வளவு தான். ஒவ்வொரு கலவிக்கு முன்பும் பின்பும் எல்லாப் பெண்களுமே கன்னிகள் தான். பெண்களின் இடுப்புகளில் பூட்டு மாட்டும் ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பின் பொய்ப் புனிதங்களில் ஒன்றுதான் கன்னிமை. எனவே தான் “என் கற்பின் கட்டியங்காரி/ நான்/” என திட்டவட்டமாக அறிவித்துவிடுகிறார். “கசியும் சொல்” கவிதையில் துர்வாடையைப் பரப்பும் துரோகத்தின் ஆடைகளைத் தூக்கி எறிந்துவிட இவரது பறவைகளின் அலகுகளில் ஒரு புதிய சொல் தொற்றிக் கொள்கிறது. புதிய சொல் உள்ளவரை லீனா மணிமேகலை புதிய பெண்தான். “நாடோடி” கவிதையில் யாதொருவரும் தங்கள் தடையங்களைக் களைந்துவிட்டு புத்துயிர் பெறும் வழியை சொல்லித் தருகிறார். நாம் நமது கலாச்சாரத்தின் எல்லாத் தடையங்களையும் அழித்துவிட்டு நிர்வாணிகளாக மட்டுமே காம வெளிக்குள் நுழைய முடியும். கலவியின் ஒற்றைக் கணத்தில் ஆணும் பெண்ணும் அடைகிற மெய்மையை, ஆன்மீகத்தை, பிரக்ஞைக்குள் செலுத்தி,சமூகவெளி முழுமைக்கும் நாம் வழங்க முடியுமா? உலகின் பாலியல் இலக்கியங்கள் எல்லாம் இந்தப் புள்ளியில்தான், வியப்பின் வினாக்களோடு நிற்கின்றன.
இவரது இன்னொரு முக்கிய முகம் தன்னைத் தானே கொண்டாடிக் கொள்கிறது. பெண்ணிய உடல் மொழியின் முக்கியத்துவத்தை முற்றிலும் புதிய கோணத்தில் பேசும் இந்தக் கவிதைகளை ஒவ்வொரு பெண்ணும் தன்னைப் பற்றிய கவிதைகளாக எடுத்துக் கொள்ளலாம். ஆண் கவிகள் கூட இந்த அளவுக்கு பெண்ணுடலைக் கொண்டாடியதில்லை. “உடல்=பிரதி=உடல்” கவிதையில் ஒரு வசீகரமான மொழியில் உடலைப் பிரதியாக்கி விடுகிறார். “கனவு நினைவு கனவு” என்ற கவிதையில் ஒரு வெகு விநோதமான கொஞ்சுதலைக் காண்கிறோம். “குலவையிட்ட” என்ற ஒரே சொல் மூலம் இந்தக் கவிதை தன் நடனத்தை நிறைவேற்றி விடுகிறது.இந்தக் கொண்டாட்டம் தவளையின் பாடல் கவிதையில் வேறு வேறு வகையான அழிப்புகளோடு உள்-இணைப் பிரதியாக பெரும் அதிர்ச்சியூட்டும் கவிதையாகிவிடுகிறது.
இந்தத் தொகுப்பில் சாம்பல் மரம் என்ற கவிதை ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறது. கூடு திரும்ப முடியாத பறவையின் இந்தப் பாடலை வாசிக்கிற எல்லாத் தந்தையரின் கணுக்களிலும் பதித்து விடுகிறார். தந்தையரைக் கொல்ல வேண்டும் என்ற குரல்களின் மத்தியில் இந்தக் கவிதை தனித்து நிற்கிறது. என் மகளே எழுதிய கவிதை போல உணர்ந்தேன்.
ஆனால் லீனா மணிமேகலையின் பிரதான கவிதைமுகம் விலக்கப்பட்ட குருதியில் நனைந்த ஆதிமுகமாக இருக்கிறது. புத்தகம் முழுதும் குருதி கொட்டி சிவப்பேறிக் கிடக்கிறது. இந்தக் கவிதைகள் ஒரு பழைய நிகழ்வை ஞாபகமூட்டியது. எனது கல்லூரி நாட்களில் ஒரு விடுமுறை சமயத்தில் வீட்டில் தனியாக உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தேன். ஏதோ வாசலில் நிழலாடியது. இரண்டு பள்ளிச் சிறுமிகள் தயங்கியபடி நின்றிருந்தார்கள். ஒருத்தி ஜோதி. உறவுக்காரப் பெண். இன்னொருவள் அவளது தோழி. “அண்ணே ஜோதியைக் கொண்டு போய் அவங்க வீட்ல விட்ருங்கண்ணே, மேத்ஸ் மிஸ் சொல்லிவிட்டாங்க.” என்றாள். ஜோதி அழுதபடி கன்னமெல்லாம் உப்பிப் போய் இருந்தது. ஜோதியின் வீடு எங்களூர் கண்மாயின் அக்கரையில் உள்ள முள்காடுகளைத் தாண்டி பனைமரக் கூட்டங்களுக்குள் இருந்தது. அந்தப் பெண் எனக்குப் பக்கத்தில் வந்து மெதுவாக “ஜோதி சடங்காயிட்டாண்ணே அதான்”. என்று கூறிவிட்டு ஓடிவிட்டாள். எனக்கும் திகைப்பாகிவிட்டது. சட்டையைப் போட்டுக் கொண்டு கிளம்பினேன். கதவைப் பூட்டப் போனபோது “இருங்க” என்று என்னைத் தாண்டி கதவைத் தள்ளிக்கொண்டு அடுப்பங்கரைக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டாள். அடுப்பங்கரையில்தான் அங்கணம் இருக்கிறது. அங்கணத்தில் அவள் கழுவுக்கொள்கிற சப்தம் கேட்டது. அவளைக் கூட்டிக் கொண்டு வற்றிய கண்மாய் வழியாக நடந்தபொழுது அவளது உடையில் படிந்திருந்த இரத்தத்தைப் பார்த்ததும் எனக்கும் அழுகை வந்தது. பெண்களுக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு துயரம் வர வேண்டும் என்று பலவாறாக யோசித்தபடி நடந்துகொண்டிருந்தேன். இயற்கையின் புரியாத புதிர், அன்றே என்னை ஒரு பெண்ணியப் பிரக்ஞை உள்ளவனாக மாற்றி இருந்தது. காலத்தின் சுழற்சியோடு உடல்ரீதியாக பெண் ஒவ்வொரு மாதமும் இயற்கையைத் தொட்டுக் கழுவுகிறாள். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு தனியான காலச்சுழற்சி இருப்பதால் அவள் ஒரு விண்கோளுக்கு ஒப்பாகிவிடுகிறாள். தான் ஒரு விண்மீன் என்றும் பெருஞ்சக்தியைக் கொண்டவள் என்றும் விலக்கப்பட்ட குருதிமூலம் அவள் உணர்ந்துவிடுகிறாள்.
லீனா மணிமேகலையும் விலக்கப்பட்ட குருதியால் ஒரு பிரளயத்தையே உண்டாக்கிவிடுகிறார். வாழ்த்துக்கள்.
ஒரு பெட்டை நாயின் கூச்சல்
http://www.lumpini.in/a_punaivu-005.html
மகாஸ்வேதா தேவியின் “திரெளபதி” என்ற கதையில் வரும் காட்சியில் ராணுவ அதிகாரி முன் திரெளபதி நிர்வாணமாக நிற்கிறாள். அவள் தொடைகளிலும், முலைகளிலும், அல்குல்லிலும் உறைந்துப் போன ரத்தம். “இவ துணியெல்லாம் எங்க? “என்ற ராணுவ அதிகாரியின் கேள்விக்கு “உடுத்த மாட்டேங்கிறா சார், கிழிச்சுப் போட்டுட்டா” என்கிறார்கள்.மேலும் அதிகாரியின் அருகில் வரும் திரெளபதியின் கரிய உடல் குலுங்க ஆவேசமாக சிரிக்கிறாள். அவளின் குதறப்பட்ட உதடுகளிலிருந்தும் ரத்தம். “துணி என்ன துணி? யாருக்கு வேணும் துணி? என்னை நிர்வாண்மாக்க உன்னால் முடியும், ஆனால் என்னை திரும்ப உடுத்த வைக்க முடியுமா? சீ.. நீ ஒரு ஆம்பளையா?” என்று கேட்டுவிட்டு ராணுவ அதிகாரியின் தூய வெள்ளை சட்டையில் “தூ” என்று துப்பிகிறாள். “நான் பார்த்து வெட்கப்பட வேண்டிய ஆம்பளை இங்க யாருமில்ல, என்மேல் துணியைப் போட எவனையும் விட மாட்டேன். என்ன செய்வே? வா என்னை என்கெளண்ட்டர் பண்ணு” என்று சிதைக்கப்பட்ட முலைகளோடு தன்னை நெருங்கும் நிராயுதபாணியான டார்கெட் முன்னால் அதிகாரி பயப்படுகிறார். அது ஒரு அமானுஷ்ய பயம்.அந்த பயம் தான் ‘பெண் கவிஞர்கள் தம்மை திடுக்கிட்டு திரும்பிப் பார்க்க வேண்டுமென்பதற்காக ஆடையை அவிழ்த்தெறிகிறார்கள்’ என்ற விமர்சனத்தின் அடிப்படையும் காரணமுமாக இருக்க முடியும்.
தமிழ்ப் பெண் கவிதையின் தொப்புள் கொடியை சங்க காலத்தின் ரேகைகளிலிருந்து எடுக்கிறார்கள் பெண்ணியல் ஆய்வாளர்கள். பின், சமணம், பெளத்தம் என்று பெருமத காலங்களில் மடிந்து, பக்தி காலங்களில் சைவத்திற்கொரு காரைக்கால் அம்மையார்,வைணவத்திற்கொரு ஆண்டாள் என்று புனிதத்தில் தட்டுப்பட்டு, ஒரு நீண்ட தலைமறைவு காலத்தைக் கடந்து, 1970 களில் அரசல் புரசலாகத் தெரிந்து, 90களில் எழுச்சி பெறுகிறது. இது எழுச்சி அல்ல, சுழற்சி என்று சொல்பவர்கள் உண்டு. நிகழ்கால நோக்கில், பழங்கால இலக்கியங்களை ஆராயும் ஆய்வுகள் அடிக்கருத்தியல் மட்டும் சார்ந்தவையா என்ற கேள்வியும் கூடவே எழுகிறது.சங்ககால பெண்பாற் புலவர்களின் பாடல்களிலிருந்து, அக்காலத்துப் பெண்களின் காதல், பொருளாதார சார்புத்தன்மை, வீடே “வெளியாக” இருத்தல், பரத்தையிடம் சென்று வரும் கணவனையும் ‘கற்பு’ நெறியோடு ஏர்றுக் கொள்ளுதல், உடன் கட்டை ஏறுதல், கைம்மை, காதலனை கையகப்படுத்தும் முயற்சிகள் என்பது போன்ற கருப்பொருள்களை சங்க காலப் பெண்பாற் புலவர்களின் பிரதிகளில் காண முடிகிறது. காமத்தை வெளிப்படுத்துதல், காதல் துணையை தேடிக் கொள்வதில் இருக்கும் தேர்வுரிமை, களவொழுக்கம், போன்றவற்றை சுட்டிக் காட்டி, சங்க காலத்தில் ஆண் பெண் சமத்துவம் நிலவியது போல சில விமர்சகர்கள் குறிப்பிட்டாலும், சங்ககாலச் சூழல் தாய்வழி சமூகத்தின் மிச்ச சொச்சங்களையும், தந்தை வழி சமூகம் வேரூன்ற ஆரம்பித்த காலகட்டைத்தையும் கொண்டிருந்ததாக கணக்கிலெடுக்க முடியும்.
பக்தி இயக்கம் தந்த கவி ஆளுமைகளான ஆண்டாளும், காரைக்கால் அம்மையாரும் புனிதப்படுத்தப்பட்ட பிம்பங்கள். அன்றாட வாழ்வின் பெண் இருப்புக்கும், அவர்களின் பனுவல்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. கருத்து ரீதியில் சமய நம்பிக்கையுடன் தன்னை அடையாளப் படுத்தும் அம்மையாரின் குரலில் மரபு வழிப்பட்ட பார்வையே பொதிந்துள்ளது. வேட்கை, விழைவு, இச்சை என்பனவற்றை முறைப்படுத்தி ஒருவித ஒடுங்கிய மன அமைப்பைத் தோற்றுவிக்கும் பக்தி உணர்வை காம விழைவாக எழுதிய ஆண்டாள் தனித்துவமிக்கவராகத் தெரிகிறார். ஆனால் கடவுளைக் காமுறுதல் என்ற “சலுகையினாலேயே” அவருடைய துய்ப்பும், திளைப்பும், மறுக்கப்படாமல் பெருக்கப் படுகின்றன, சிவனும், திருமாலும் பாலியல் பிரதிமைகளாக(Sexual Icons) மாறி பக்தைகளைப் பித்தாக மாற்றுவதும் லிங்கமையவாதத்தையே நிலை நிறுத்துகிறது.
2003 ல் எழுத வந்த எனக்கு முன் ஒரு நீண்ட பட்டியல் இருந்தாலும், வித்தியாசப்படுத்துதல் என்ற திசை நோக்கிய பயணம் 1990 களுக்குப் பிறகே பெண் கவிதைக்கு சாத்தியப்பட்டிருக்கிறது.
பாலினம் கடந்த எழுத்தை எழுதிவிட வேண்டும், பெண் எழுத்து என்பது மாதிரியான சொல்லாடலைக் கடுமையாக எதிர்க்க வேண்டும், பார்ப்பனியப் பெண்ணெழுத்து, பார்ப்பனியரல்லாதப் பெண்ணெழுத்து, தலித் பெண்ணெழுத்து என்றெல்லாம் பார்க்க கூடாது போன்ற அடையாள மறுப்பு அரசியலில் ஆர்வமும், குறிக்கோள்களும் மிகுந்தாலும், கடுமையான சிக்கல்கள் இருக்கின்றன.சாதி, மத, பாலின, வர்க்க வேறுபாடுகளும், ஏற்றத்தாழ்வுகளும் புரையோடிப் போயிருக்கும் சமூகத்தில், ஒரு தன்னிலை இவை எல்லாவற்றையும் கடந்துவிடும் இருப்பை அடைந்துவிட முடியுமா? அப்படியொரு இருப்பு சாத்தியமாகாதப் பட்சத்தில் எல்லாவற்றையும் கடந்தப் பிரதி மட்டும் எப்படி சாத்தியம் என்ற நெருக்கடி உண்டாகிறது.
உடலுக்கு வெளியே, கலாசாரத்திற்கு வெளியே, நிறுவனங்களுக்கு வெளியே, எல்லைகளுக்கு வெளியே, தேசங்களுக்கு வெளியே தன்னை நிறுத்திக் கொள்ளும் முயற்சியாகத் தான் ஆணும் சரி, பெண்ணும் சரி எழுத வருகிறார்கள். ஆனால் நடைமுறையில் அற்பமாகவும், வரலாற்றில் ஒடுக்கப்பட்டவர்களாகவும் இருக்கும் தன்னிலைகளுக்கு கூடுதல் காரணங்கள் இருக்கின்றன என்பதை ஒத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இனத்தில், வர்க்கத்தில், பாலினத்தில், சாதியில் படிநிலையில் “மேலிருப்பவர்கள்” மீது சந்தேகமும், எச்சரிக்கையும், சுயமரியாதையும் கொண்டிருப்பதும், “கீழிருப்பவர்கள்” முன் குற்ற உணர்ச்சியும், “படிநிலை நீக்கம்” செய்ய விழையும் முனைப்பும், பழியையும் அதற்குரிய தண்டனையையும் கூட ஏற்றுக் கொள்வதுமாகத் தான் “இருப்பை” புரிந்துக் கொள்ள முடிகிறது.கலைச் செயல்பாடும் அதிலிருந்தே தொடங்க முடிகிறது. அந்த வகையில் சலனங்களை ஏற்படுத்தியவை, பொதுப் புத்தியை தொந்தரவு செய்தவை, நிறுவனங்களைக் கேள்வி கேட்பவை, சுரண்டல்களிலிருந்து இருப்பை விடுவிக்க நினைப்பவை, அசலான வித்தியாசங்களின் மீது வினை புரிந்தவை, ‘பெண்மை’ மேலானது – ‘பெண்’ இழிவானவள் அன்ற முரண்பாட்டைத் திருகியவை என்ற வகைகளில் பெண்ணெழுத்து கடந்தப் பத்தாண்டுகளில் தான் வினை புரிந்திருக்கின்றது.
“பெண்ணுடல் என்ற நிலத்தின் மீதே தந்தை வழி சமூகம் நிறுவப்பட்டது. பெண் தன்னிடம் சிதறிக் கிடக்கும் மன ஆற்றல்களையும், உடல் வல்லமையினையும் நோக்கு நிலையினையும் ஒன்றிணைக்க வேண்டுமானால் அவள் சிந்திப்பது உடலினூடாக நிகழ வேண்டும்” என்கிறார் பெண்ணியலாளர் அட்ரியன் ரிச். பெண் பெயரில் கையெழுத்துப் போட்டால் மட்டும் பெண்ணெழுத்து ஆகிவிட முடியாது.பாலின விழிப்புடன் எழுதும் சில ஆண் பிரதிகளிலும் பெண்ணெழுத்து நிகழ்ந்துவிடும் வாய்ப்புகளையும் மறுக்க முடியாது.
90களுக்குப் பிறகானப் பெண்கவிகள் முரணும் உடன்பாடுமாய் வெவ்வேறு தளங்களைத் தொட்டுச் சென்றிருந்தாலும், அவர்களின் பிரதிகளில் இருக்கும் “பிரதானப் போக்குகளை” அவதானிக்கலாம்.பெண் எழுத வந்ததே அரசியல் செயல்பாடு, மறுக்கப்பட்ட குரல்களின் வெளிப்பாடு, எதிர்ப்பின் தடயங்கள் என்ற அடிப்படையில் எழுத வந்த எல்லா பெண் கவிஞர்களையும் பொருட்படுத்த வேண்டும் என்றாலும், ஆணின், அதிகாரத்தின், நிறுவனத்தின் மொழியையே மறுபதிப்பு செய்யும் பிரதிகளை நிராகரித்து விடலாம்.அரசியல் மற்றும் கவித்துவத்தைக் கூட்டுவித்து வாசிப்பாளரை நுகர்வோராக மாற்றாமல் செயலூக்கமுள்ள பங்கேற்பாளராக மாற்றும் குறிக்கோளை ஓரளவு அடைந்திருக்கும் பிரதிகளாய் சிலவற்றை அடையாளங் காணலாம்.
“என் உடலுடன்
நான் உறங்க வேண்டும்
இடது கரத்தால் சிவனைப்
பிய்த்தெறிந்து விட்டு”
என்ற மாலதி மைத்ரியின் கவிதை, பெண்ணின் நினைவு உலகத்தை தன் கட்டுக்குள் கொண்டு வரும் ஆணின் உச்சக்கட்ட அடக்குமுறையை சிதைக்கிறது. ஆணை, அதன் வழியே அதிகாரத்தை வெளியே நிறுத்தும் துணிச்சலை அவர் பிரதிகள் செய்கின்றன. தாய்மை வழியாக குடும்ப அமைப்பை கையகப்படுத்தி சமூகத்தையும் கையகப்படுத்துவதன் மூலம் அதிகாரத்தை தாயை நோக்கி திரட்டிக் கொள்ளும் அரசியலை முன் வைக்கிறார்.மறு உற்பத்தி பெண்ணின் விடுதலைக்கு தடையாய் இருக்கிறது என்பதை மறுத்து தாய் – சேய் உறவை உயிரியல் அம்சமாகப் பார்க்கிறார். ஆண் – பெண் இணை முரணைத் தலைகீழாக மாற்றிப் போட்டு பெண் – ஆண் என்று பெண்ணை முதன்மைப் படுத்தும் செயல்பாடுகளை மாலதியின் கவிதைகள் செய்துப் பார்க்கின்றன.ஆனால் அந்த இணை முரணை, முரண்களாகவே நிறுத்திவிடாமல், சிதைத்துக் கலவையாக்கி விடும் எழுத்துமுறையை, பன்மைத்துவத்தை எழுதிப் பார்க்கும் சவாலை விட்டுவிடுகின்றன. பெண்ணை தனிமைப்படுத்தும் மாலதியின் கவிதைகள், அவளின் சுதந்திர இருப்பிற்கான மாற்று வழிகளை சொல்லத் தவறுகின்றன.
பெண் துறவை வழிமொழியும் ரிஷி, பெண் இருப்பையே வலியாகவும், மனப்பிறழ்வாகவும் வரிக்கும் சுகந்தி சுப்ரமணியன், மத்தியதர வாழ்க்கை, பணியிடம், குழந்தைகள் என்பது போன்ற “நல்ல” கச்சாவை மட்டும் கவிதையாக்கும் வெண்ணிலா, உழைக்கும் பெண்களைக் காட்சிப்படுத்தும் இளம்பிறை, காழ்ப்பையும் கழிவிரக்கத்தையும் அழகியலாக்கும் உமா மகேஸ்வரி என்று பெண்கவிகள் தங்களுக்கென்று அலாதியான உலகங்களை உருவாக்கிக் கொண்டு எழுதி வருகிறார்கள் என்றாலும் சமநிலையை குலைத்துப் போடும் பொறிகளே காலத்தின் தேவையாய் இருக்கின்றன.
பிரமிளிடமிருந்து படிமங்களையும், தேவ தேவனிடமிருந்து ஆன்மிகத்தையும், கோணங்கியிடமிருந்து இடுகுறி சொற்களையும் எடுத்துக் கொண்டு எழுதும் குட்டி ரேவதி, ஆண் மையங்களை குலைக்காமல் அதன் எச்சங்களையே அடுக்குகிறார். ஆணை அறியாதவனாக்கி ” நான் வேறொரு உலகத்தைக் காட்டுகிறேன் வா” என்ற பெண்ணின் அழைப்பை கவிதைகளாக்குகிறார். அதன் மூலம் தன் ஆளுமையை கட்டமைக்கிறார். ஆணின் ஒடிபஸ் காம்ப்ளெக்ஸிற்கு வடிகாலாய் இருக்கின்றன இவரின் பிரதிகள்.அதிகார வடிவங்களை அப்படியே வைத்துக்கொண்டு உள்ளடக்கங்களை மட்டும் மாற்றிவிடுவது, அரசியலாக உடலை முன் வைக்காமல் வெறும் பேச்சாக அதைப் பெருக்குகிறது. அதனாலேயே தயாரிக்கப்பட்ட உடல்களை எப்படி வீழ்த்துவது என்ற கேள்வியை கேள்வியாகவே விட்டுச்செல்கின்றன.
“ரயில் நிலையத்தின் இரு மருங்கையும்
அணைத்துக்கொண்டிருந்த இரவின்
பால்வாசனையுடைய மேனியைத் தீண்டிய் ரயில்
வேகமெடுத்தது
மரத்தின் ரசத்தை உறிஞ்சி ஆடிய இலையொன்று
தன்னைக் கடந்த பருவத்தின் வேகம் நோக்கி
பழுத்து வீழ்ந்தது
முன்பின் பருவங்களின் நினைவுச் சின்னமாய்ப்
பூவின் மகரந்தங்கள் பெருக்கிய உடலை
மரம் சுமந்து நிற்கிறது
பொன்துகள் உதிரும் பலரியின் அழகை
நீயும் காணவேண்டுமென ஏங்குகிறேன்.
கிழவியின் உடலுக்குள் நீந்திய உடலில்
பைத்தியத்தின் குழப்பமற்ற கண்களுடன் தோன்றிய அவனோ
ஏழுகடல்கள் தாண்டி கூடு கட்டிய
மந்திரக்கிளியின் உயிர்தேடிச் சென்றிருக்கிறான்”
என்பது போன்ற இவரின் படிமமொழி தந்திரங்கள் வாசிப்பவரைக் களைப்படையச் செய்பவை.
“எல்லா அறிதல்களுடன்
விரிகிறதென் யோனி”
என்றெழுதும் சல்மாவின் வரிகள் ஒரு சராசரிப் பெண்ணின் எதிர்வினையை மட்டுமே ஆற்றுகின்றன.ஆணின் வஞ்சகத்தைக் காட்டிக் கொடுத்தாலும், அவனிடமே தன்னை ஒப்புக் கொடுத்துவிடும் இயலாமையாய் எஞ்சுகின்றன. ஆணின் விசாரணைக்குள்ளேயே இருந்துக் கொண்டு ஒரு பெண் தன்னை யார் என்று கண்டுபிடித்துவிட முடியாது என்பதை உணர்த்தும் பிரதிகள் இவருடையது. ஆனால் உடைமைவாதிகளான ஆண்களின் “எங்கே பறிமுதல் செய்யப்பட்டு விடுவோமா? எங்கே அடையாளமிழந்துப் போவோமா? ” என்ற பயங்களை மிக நுணுக்கமாக வெளிப்படுத்த சல்மா தவறவில்லை.
“எலி கீறிய காலில் குருதி கசிகிறது
கரப்பான் எகிறிப் பறக்கின்றன
முதுகில் நடந்து சென்ற புலியின் சுவடுகளை
எப்படி பார்ப்பது”
என்ற சுகிர்தராணியின் எழுத்தில் இருக்கும் களிப்பு ஒரு தாய்வழி சமூகப் பெண்ணிற்கே உரிய மூர்க்கத்திலிருந்து வருவது.போலி ஒழுக்கங்களுக்கு கட்டுப்படாத கச்சாவான எதிர் அழகியலை உருவாக்கியதில் சுகிர்தராணி முக்கியமானப் பங்காற்றுகிறார்..
பண்பாடுxஇயற்கை எதிர்வுகளில் இயற்கையோடு பெண்ணைப் பொருத்திப் பார்ப்பது, கொற்றவை, நீலி, பத்ரகாளி எனத் தொன்மத் தெய்வங்களோடு உருவகப்படுத்திக் கொள்வது, பெருங்கதையாடல்களை புறந்தள்ளி ஒருவித பேகனிஸ்ட்(Paganist) கலகத்தை செய்தாலும், உயர்வு நவிற்சிகள் விட்டில் பூச்சிகள் போல திரும்ப திரும்ப லிங்கமய அழகியலுக்குள்ளேயே விழவைக்கிறது என்ற அபாயத்தைப் புறந்தள்ள முடியாது.
ஒட்டுமொத்தமாகத் தொகுத்துப் பார்த்தால் ஏற்கெனவே கட்டமைக்கப்பட்டப் புனிதங்களின் மீது சந்தேகங்களும் அவற்றின் மேலான ஒரு ரண சிகிச்சையும் பெண்கவிதை உளவியலாக மேற்கொண்டிருக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளலாம்.கலாசார அரசியலில் இது ஒரு குறிப்பிடத்தகுந்த சலனம் என்றாலும் இன்னும் செய்ய வேண்டியவை ஏராளம் இருக்கின்றன.
சமகாலத்தில் ஒற்றையிலையென, உலகின் அழகிய முதல் பெண் என்று இரண்டு தொகுப்புகளை எழுதியவள் என்ற அடிப்படையில், பெண் எழுத்து எம்மிடம் கோரி நிற்பவை எவை என்பதை உரையாடலாக வைக்கிறேன்.இந்த கட்டுரையில் நான் சொல்ல விழைவதெல்லாம் முற்றும் முதலான முடிவுகளல்ல. நான் ‘சொல்வதெல்லாம் சரி’ என்று நிறுவ நான் நிறுவனமும் அல்ல. விவாதங்களுக்கான வாசல்களுடன் தான் என் கருத்துக்களையும் விமர்சனங்களையும் வைக்கிறேன்.
மரபிலி பிரதிகளைக் கண்காணிக்கும் அதிகார எந்திரம் தன் ஒழுங்கு நடவடிக்கைகளை பிரதியாளரின் மீது நீட்டித்து தாசி, தேவடியாள், அவிசாரி, பைத்தியக்காரி, முண்டை, வேசி, விபசாரி என்று பெயர்களிட்டுப் பாலியல் ரீதியாக ஒடுக்குவது. பெண் படைப்பாளியை திமிர் பிடித்தவள் என்றும் அவளைப் பலரும் புணர்ந்து தான் ஒடுக்க வேண்டும், யோனி வழியாக மட்டுமன்றி வாய்/குதம் வழியாகவும் புணர்ந்து ஒடுக்க வேண்டும் என்று குரலிடுவது, எழுதுவது போன்ற வன்முறைகளை செய்பவர்களின் மீது பகையை அறிவிக்க வேண்டும். அப்படிப்பட்ட சக்திகளோடு “பெண்” விசயத்தில் தானே அவர்கள் அப்படியிருக்கிறார்கள், மற்ற விசயங்களில் சேர்ந்து செயல்படலாம் என்று உடன்படும் பரந்த மனதுக்காரர்களின் இரட்டை வேடங்களை எழுத்தளவிலாவது தொடர்ந்து தோலுரிக்க வேண்டும். சாதி திமிரோடு இருக்கும் சக்திகளோடு எப்படி சகிப்புத் தன்மையைக் காட்ட முடியாதோ, அதே போல பாலினத் திமிரோடு இருக்கும் சக்திகளோடும் வேறு விசயங்களுக்கான கூட்டு நடவடிக்கைகளையும் மறுக்க வேண்டும். பாலின விழிப்பை முன் நிபந்தனையாக வைத்து பிரதிகளுக்குள்ளும், பிரதிகளுக்கு வெளியேயும் கறாராக இயங்க வேண்டும்.பெண்ணாக இருந்தும் ஆண்நிலைவாதக் குப்பைகளை எழுதுபவர்களும், அவர்களின் பிரதிகளும் இதில் விதிவிலக்கல்ல.
நடைமுறையில் பெண்வெளிக்கான , சுதந்திர இருப்புக்கான மாற்றுப் புனைவுகளை எழுதும்போது, நாம் வாழ்வதும் புனைவுகளுக்கு மத்தியில் தான் என்று உணரத் தலைப்பட வேண்டும். உண்மைகளையும், யதார்த்தத்தையும் திட்டமிட்டு குழப்பவேண்டும். மானுட சித்தாந்தங்கள் சந்தர்ப்பவசமாக ஏன் ஆண்களாலேயே எழுதப் படுகின்றன என்ற கேள்வியும், அவற்றின் மீது தீராத சந்தேகமும், அதிகார மறுப்பையும் பிரதிகளில் அச்சமில்லாமல் வைக்க வேண்டும்.
ஆண் பெண் ஏற்றத்தாழ்வை இதுவரை வந்துப் போன எந்த சித்தாந்தமும், தத்துவமும், கோட்பாடுகளும், தீர்த்ததாய் வரலாறோ, நிதர்சனமோ இல்லை. பெண்ணினத்தின் மீது ஒரு அறிவிக்கப் படாத போர் நடந்துக் கொண்டே தான் இருக்கிறது என்பதை அரூபமாகவோ, நேரிடையாகவோ பிரதிகளில் வைப்பதை தவறவிடக் கூடாது.
அனுமதிக்கப் பட்ட வெளியில் மட்டுமே பயணிக்கக் கூடிய அபத்தங்களை பெண்மொழி தாண்டிவிட்டதாக கருதினாலும், பெண்ணிய அனுபவங்களை மானுட அனுபவங்களாக மாற்றுவதற்குரிய புத்தொளிகளை, சமூகத் தணிக்கை, அரசுத் தணிக்கை, சந்தைத் தணிக்கை, சுயத் தணிக்கை யெல்லாம் தாண்டி இன்னும் இன்னும் பெண்ணியப் பார்வைப் படாத தளங்களில் பாய்ச்ச வேண்டும்.
ஆணுக்குப் பெண் மேலானவளும் அல்ல, கீழானவளும் அல்ல, வேறானவள் என்ற புள்ளிக்கு பெண்கவிதை நகர்ந்து வந்திருக்கிறது. ஆனால் அந்த வேறானவள் என்பதைப் பன்மைப் படுத்திப் பார்ப்பது அவசியம்.இன்னும் கவிதை தரிசிக்காத பெண் உலகங்களை, அனுபவங்களைக் கண்டெடுக்க வேண்டும்.
நுகர்வு, சந்தை நவீனங்கள் ஏற்படுத்தியிருக்கும் கொடூரமான பொய்மை, ஏமாற்று, ஏற்றத்தாழ்வு, அதிகாரத்துவம் போன்றவையின் நுண் அத்துமீறல்களை, அதன் வடிவங்களை எதிர்க்க சொற்களைப் பழக்கலாம், அல்லது புதிய சொற்களை உருவாக்கலாம்.
வடிவம், கூற்றுவகை, உத்தி, அமைதி, போன்ற ஒழுங்குகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்ற கெட்டி தட்டிப் போன மதிப்புரையாளர்களின் அதிகாரங்களைத் தாண்டி பென்ணெழுத்துக்கான விமர்சனத்திற்கென புதிய உபகரணங்களைக்(tools) கோர வேண்டும்.
மார்க்ஸியத்திற்கு உழைப்பு எப்படியோ அப்படித்தான் பெண்ணியத்திற்கு பாலியல்பு என்றார் காதரீன் மக்கின்னென்.உழைப்பை மூலதனமாகக் கொண்ட தொழிலாளர்களை அமைப்பு ரீதியாகச் சுரண்டும் அமைப்பில் வர்க்க வேறுபாடு தொழிற்படுகிறது. அதே போல பெண்ணின் பாலியல்பை அமைப்பு ரீதியாக சுரண்டும் அமைப்பில் பாலின வேறுபாடு தொழிற்படுகிறது. பாலியல்பு குறித்த விவாதம் பெண்ணிய அரசியலின் மையப்புள்ளியாக பெண்ணடிமைத் தனத்தைக் கருதவில்லை. இருபாலருக்குமான பாலியல்பு சுதந்திரத்தைக் கொண்டாடுவது, உடல் வேட்கையைக் கொண்டாடுவதை அங்கீகரிப்பது, இருபாலியல்பு, ஓரினச் சேர்க்கை ஆகியவற்றை தந்தைமை சமூகத்திற்கு சவால் விடும் கண்ணிகளாக அங்கீகரிக்கும் அரசியலைப் பெண்ணெழுத்து முன்னெடுப்பது முக்கியம்.
பெண்களை இணைந்து வேலை செய்ய விடாமல் செய்யும் தந்தைமை ஆதிக்க மதிப்பீடுகளில் உள்ளார்ந்த காலனியத்திற்கு அடிமைப்படாமல், ஆண்களின், ஆண்கள் நடத்தும் நிறுவனங்களின் ஏற்புக்காக நடக்கும் போட்டா போட்டியில் பெண்கள் ஒருவருக் கொருவர் வெறுப்பும், பகையும், பொறாமையும் விட்டொழித்து கவிதா செயல்பாடுகளில், அரசியல் நடவடிக்கைகளில், பொது எதிரிக்கு முன்னாவது இணைவது உத்தமம்.
உண்மையில்,பாட்டாளிகளை விடவும், தலித்துகளை விடவும் பெண் தான் தோல்விகளையே நீண்ட கால அனுபவங்களாக, போராட்ட வரலாறாகப் பெற்றவள். தலித்துகளுக்கு சோசலிச நிர்மாண வழியோ, அல்லது இன்றுள்ள முதலாளியப் பாதையோ திறந்திருக்கின்றன. பாட்டாளி மக்களுக்கு பொதுவுடைமை மார்க்கம் ஒரு இலட்சியமாகக் காட்டப்பட்டிருக்கிறது.ஆனால் விடுதலை பெற விரும்புகிற பெண்ணுக்கு மாற்றுவழி என்ன?
கவிதை சந்தேகமின்றி அதன் பயன்பாட்டு மதிப்புக்காக ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய ஒன்றாக இருத்தல் வேண்டும். எல்லாப் பெரும் கவிதைகளும் ஒரு சரித்திரப் பூர்வமான சாட்சீய மதிப்பீடைக் கொண்டிருக்கின்றன என்கிறார் பிரெக்ட்.
பன்னெடுங்காலங்களாக மானுடத்திற்கான ரொட்டிகளை தயாரிக்கும் பெண்ணுக்கு கவிதைகள் எம்மாத்திரம்.
லீனா மணிமேகலை
(நாகை மாவட்ட “கலை இலக்கியப் பெருமன்றத்தின்” முட்டம் முகாமில் வாசிக்கப்பட்ட கட்டுரை. 16.05.10)
பிரசுரத்திலிருந்து நிறுத்தப்பட்ட குமுதம் நேர்காணல்
4.12.2009 அன்று நிருபர் தேனி கண்ணன் அவர்களும், குமுதம் ஆசிரியர் பிரியா கல்யாணராமனும் எடுத்த நேர்காணல்
செங்கடல் என்ற திரைப்படத்தை உருவாக்கி கொண்டிருக்கிறேன். இயக்குநர் சமுத்திரக்கனி தயாரிக்கிறார். இயக்குநர் ஜெரால்டும், எழுத்தாளர் ஷோபா சக்தியும் திரைக்கதை வசனமெழுதுகிறார்கள். நான் நடித்து இயக்குகிறேன். பரிசோதனை முயற்சி தான். முடியட்டும். விரிவாகப் பேசுவோம்.
உங்கள் சமீபத்திய “உலகின் அழகிய முதல் பெண்” கவிதைத் தொகுப்பில், இருபால் இயல்புடையவள் என்று முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறீர்கள்? ஓரினச்சேர்க்கையை நீங்கள் அதரிக்கிறீர்களா?
என் கவிதைகளில் உடல்களை எழுதியிருக்கிறேன். ஆணுடல், பெண்ணுடல் என்பதை எதிரானதாக என்னால் பார்க்க முடியவில்லை. அடிப்படையில் உடல்கள் தனித்தனி சிறைக்கூடங்களாக இருக்கிறது. அந்த உடல்களை விடுவிக்கும் வழிமுறையாகத்தான் பாலியல் விடுதலையை எழுதுகிறேன்.
உறுதியாக ஒரினச்சேர்க்கையை ஆதரிக்கிறேன்.
இந்தியத் தண்டனைச் சட்ட்ம் 377ஐ நீக்கி டில்லி உயர்நீதிமன்றம் கடந்த ஜூலையில் பதினெட்டு வயது வந்தவர்கள் பரஸ்பரம் சம்மதத்துடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடத் தடையில்லை என்று தீர்ப்பை வழங்கியிருக்கிறது. சட்டம் இப்போது தான் தன் தூக்கத்திலிருந்து விழித்திருக்கிறது.
மனிதர்கள், விலங்குகள் என்று ஜீவராசிகளெல்லாம் பிறக்கும்போது பாலியல் பன்மைத்தன்மையோடு தான் பிறக்கிறார்கள். ஓரினச்சேர்க்கை, எதிர்ப்பாலுறவு, சுயப் புணர்ச்சி, இருபாலுமை எல்லாமே எல்லா காலங்களிலும் இருக்கத் தான் செய்கிறது. நம்ம கோயில் கோபுரங்கள், குளங்கள், தேர்களில் இருக்கிற சிற்பங்களையும், ஓவியங்களையும் கொஞ்சம் நின்று பார்த்தால், நம்ம முன்னோர்கள் எப்படி பாலியல் சுதந்திரத்துடன் வாழ்ந்தார்கள் என்று புரிந்துக் கொள்ளலாம். நமது பெண்கள் விலங்குகளுடன் வைத்திருக்கும் புணர்ச்சி குறித்த சிற்பங்கள், நம்ம சீரங்கம் கோவில் மண்டபத்திலேயே இருக்கிறது.
அப்ப, நடுவில தான் கோளாறு நடந்திருக்கிறது.பெருமதங்கள் ஆணாதிக்கத்தை கொண்டுவருகின்றன, ஆணாதிக்கம் கலாசாரம் என்ற ஆயுதத்தைக் கையிலெடுக்கிறது. பெண்களை காலனைஸ் செய்து, குழந்தைகள் பெற்றுக் கொடுக்கும் மெஷினாக மாற்றி வாரிசு, சொத்து,சாதி என்று ஜாம்ஜாமென்று வாழ்கிறது ஆணுலகம்.
“வீட்டுக்கொரு அடுப்பங்கரை, ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு பெண்” என்பது ஒழிக்கப்படனும் என்கிறார் தந்தை பெரியார். கலாச்சாரத்தைக் கொட்டிக் கவிழ்க்கனும்கிற பெரியாரின் வழியே நம்ம எல்லோருடைய விடுதலைக்கான வழி.
பாரம்பர்யமான குடும்ப கட்டமைப்பு கொண்ட நாடு நம் நாடு ஓரினச்சேர்க்கையை ஆதரிக்காதபோது, நீங்கள் அது பற்றி எப்படி தைரியமாகப் பேசுகிறீர்கள்?
கணவன் இறந்தவுடன் மனைவியைத் தூக்கி நெருப்பில் போடுவது தான் நமது பாரமபர்யம். ஆனால் அதை எவ்வளவு அநீதியானது என்பதை இப்போது நாம் உண்ர்ந்திருக்கிறோம். குடும்பம் என்பது ஆணையும், பெண்ணையும் குழந்தைகளையும் “சமமாக” ஏற்று வாழ்கிற அமைப்பாக மாறுகிற வரை சீர்திருத்தங்கள் செய்து தான் ஆக வேண்டும், நானும் குடும்பத்திலிருந்து வந்தவள் தான், குடும்பத்தில் வாழ்பவள் தான். நம் நாடு ஓரினச்சேர்க்கையை ஆதரிக்கவில்லை என்பதை உறுதியாக சொல்லிவிட முடியாது. நாடு என்பது பாராளுமன்றம் மட்டும் அல்ல. உச்ச நீதிமன்றம் ஓரினச்சேர்க்கையை தன் குற்றப்பிரிவிலிருந்து நீக்கியிருக்கிறது அரசிடம் அது கருத்து கேட்டிருக்கிறது. பிரதமரோ, மந்திரி சபையோ அதிகாரப்பூர்வமாக ஓரினச்சேர்க்கைக்கு எதிராக கருத்து கூறவில்லை.
அப்புறம் நியாயத்தைப் பேசுறதுல என்னங்க பயம்?ஆடு, மாடு,கோழி, சொத்து, தங்கம், பெண், வாரிசு என்ற அடிமை ஃபார்முலாவை உருவாக்கி வச்சிருக்கிற ஆணாதிக்கம், அதை வழிமொழியற சாதி, மதம் எல்லாத்தோட ஆதாரம் பாலியல் கட்டுப்பாடு தான். பெண்ணை அடிமைப்படுத்தற ஆண் தன்னைப் பேரடிமைன்னு உண்ர்ந்திட்டான்னா, கலாச்சாரம் என் கிற வார்த்தையையே அழிச்சிடலாம். ஆண்xபெண் என்ற கடுமையான முரண் அதனால உருவாகியிருக்கிற சுரண்டல் அமைப்பு,திருநங்கைகளையும் கீழ்மைப் படுத்தி வைத்திருக்கிறது.பெண்கள் திருநங்கைகளோட நெருக்கமாகனும். அங்கீகரிக்கப்படனும். அதுக்கு ஆண்மை ஒழிக்கப்பட வேண்டும்.
மனைவி, குழந்தை என்கிற குடும்ப உறவுக்கு ஓரினச்சேர்க்கை எதிராக உள்ளதே?
ஓரினச்சேர்க்கை குடும்பத்திற்கு எதிரானதல்ல. அது மனைவி, கணவன், குழந்தைகள், தெரு, கிராமம், நகரம், சட்டசபை, பாராளுமன்றம் எதற்குமே எதிரானதல்ல. நுட்பமாக யோசித்தால், அது மிகவும் இணக்கமானது, குற்றங்களை குறைப்பது. ஒருவேளை ஒரு ஆணும், ஆணும் யாருக்கும் தொந்தரவில்லாமல் தங்கள் பாலியல் தேவைகளைத் தீர்த்துக் கொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம், பெண்ணின் மீதான பாலியல் வன்முறகள் குறையத்தான் செய்யும். இங்கு ஆணும் பெண்ணும் குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்காக மட்டும் தான் உடலுறவு வைத்துக் கொள்கிறார்களா? அது உண்மையாக இருந்தால் தேவையான் குழந்தைகளைப் பெற்றுக் கொணடபின், பாலியல் உறுப்புகளை நீக்கம் செய்துவிடலாமே? குழந்தை பிறப்பு என்பது உடலுறவின் உப விளைவு அவ்வளவு தான்.
ஓரினச்சேர்க்கை இயற்கைக்கு விரோதமானது இல்லையா?
ஆண் என்பதும், பெண் என்பதும், ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்வது என்பதும் இயற்கையின் நியதி என நாம் நம்புவதெல்லாம் ஒருவகையான மனப் பழக்கமே. நமது “பாரம்பர்யமான குடும்பத்தில்” ஆணுக்கான உடை, பெண்ணுக்கான உடை, வேலைமுறை, சகாயங்கள், கட்டுப்பாடுகள் இவை தான் ஒருவரை ஆணாகவோ, பெண்ணாகவோ உருவாக்குகிறது. எல்லா உடல்களும் இயற்கையின் கொடைகளே. ஒரு ஆற்றின் போக்கைத் திருப்பி அணை கட்டுவதைவிட, ஒரு மரத்தை வெட்டுவதை விட ஓரினச்சேர்க்கை இயற்கைக்கு எதிரானது அல்ல,. அது இயற்கையின் மற்றொரு தேர்வு, மாற்று நீதி.
இதைப் பற்றி பேசும்போது உங்களைச் சுற்றியுள்ள்வர்கள் தவறாகப் நினைப்பார்களே
போற்றுவார் போற்றட்டும், புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும்.
நீங்கள் ஓரினச்சேர்க்கையாளர் என்பதை வெளிப்படையாக ஒத்துக் கொள்கிறீர்களா?
.ஆணும் பெண்ணுமோ, ஆணும் ஆணுமோ, பெண்ணும் பெண்ணுமோ தங்கள் உடல் தேவைகளை நிறைவு செய்வதற்கான தேர்வுகள் மீது தலையிடவோ, தடை செய்யவோ யாருக்கும் உரிமையில்லை, தனிமனிதரோ, சட்டமோ, அதை தடை செய்தால், அது மனித உரிமை மீறல், ஆதலால், நான் ஓரினச்சேர்க்கையை ஆதரிக்கிறேன். அதை தடை செய்தால் அதையும் எதிர்ப்பேன்.
ஓரினச்சேர்க்கையை ஆதரிக்கும் நான் ஓரினச்சேர்க்கையாளராக இருக்க வேண்டிய கட்டாயமில்லை. என்னுடைய பாலியல் ரீதியான் தேர்வு முறைகள் என்னுடைய விருப்பம் சார்ந்தது. அந்தரங்கமானது. பொது சமூகத்திற்கு அறிவிப்பது அரசியல் தேவையென்றால், என் கவிதைத்தொகுப்பில் சொன்னது போல, ஆணுடல், பெண்ணுடல் என்ற பேதம் எனக்கு இல்லை. நான் இருபால் விருப்பமுடையவள்