படைப்பும் தடையும்
25/04/2017
லீனா மணிமேகலை, அந்திமழை
ஆங்கிலேயர் காலத்தில் இருந்த தணிக்கை முறைகளின் நீட்சி தான் சுதந்தர இந்தியாவில் சென்சார்போர்டு என்ற வடிவில் தொடர்ந்தது. எண்பதுகளின் பிற்பகுதியில்தான் சென்சார் போர்டு எதையும் தணிக்கை செய்யக்கூடாது, படங்களில் எந்த வெட்டும் கொடுக்கக்கூடாது என்று விதிமுறையில் மாற்றம் செய்தார்கள். அது வெறும் சான்றிதழ் மட்டுமே தரக்கூடிய அமைப்பாக மாற்றப்பட்டது. சட்டப்படி கலைஞர்களுக்கு கருத்துரிமை வழங்கப்படுகிறது. அத்துடன் பார்வையாளர்களுக்கு தணிக்கை இன்றி படங்கள் பார்க்கும் உரிமையும் பாதுகாக்கப்படவேண்டும். அதனால்தான் இப்போது சென்ஸார் போர்டை எதிர்த்து நீதிமன்றம் செல்லும் எல்லா இயக்குநர்களுமே வெற்றிபெறமுடிகிறது. அரசியல்சாசனத்தின் 19 ஆம் சட்டப்பிரிவு இதற்கு வழிவகுக்கிறது. ஆனால் என்ன நடக்கிறது? ஆட்சிகள் மாறும்போது பிராந்திய சென்சார் போர்டுகளில் அரசியல்ரீதியில் நியமனங்கள் நடைபெறுகின்றன. இவர்களுக்கும் சினிமாவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. மத்திய சென்சார்போர்ட் தலைவர் பங்கஜ் நிஹ்லானி நேரடியாக மோடியின் கையாள் என்று தன்னைச் சொல்லிக்கொண்டார். அனைவருமே தங்கள் அரசியல் மாஸ்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக செயல்படுகிறார்கள். இதில் யாருமே படைப்பாளியைப் புரிந்துகொண்டவர்கள் கிடையாது. இது ஏன் பூதாகரமாக வெடிக்கவில்லை என்றால் நமது திரைப்பட உலகம் வணிகப் படங்களால் நிறைந்திருக்கிறது. அவர்கள் வெளியீட்டுக்கு நேரம் குறித்துவிட்டு தணிக்கைச் சான்றிதழ் பெறச் செல்லும்போது, பல இடங்களில் வெட்டச் சொல்கிறார்கள். இதில் ஊழல், பேரங்கள் நடைபெறுகின்றன. வணிகப்படம் எடுத்தவர்கள் தணிக்கைச் சான்றிதழ் பெறுவதையே பெரிய சாதனையாக எண்ணி விளம்பரங்கள் கொடுப்பதையும் நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். இந்தமாதிரி போக்கு இருக்கும் ஆட்கள்தான் சினிமாவில் இருக்கிறார்கள். அறுபது வெட்டுகள் கொடுப்பதும் கொஞ்ச காசு உள்ளே போனதும் அது நாற்பதாகக் குறைவதும் நடக்கிறது. இல்லையெனில் கபாலி போன்ற படத்துக்கு யு சான்றிதழ் வாங்க முடியுமா? அமெரிக்காவிலேயே அது யு/ஏ தான்.
இந்த சமயத்தில் சந்தைக்காக படம் எடுக்காத, சுதந்தரமான திரைக்கலைஞர்களும் இதே சென்சார் போர்டைத்தான் எதிர்கொள்ளவேண்டி இருக்கிறது. என்னுடைய எல்லா படங்களுமே பிரச்னையைத்தான் எதிர்கொண்டன. சண்டை போட்டுத்தான் சான்றிதழ் பெறவேண்டி இருக்கிறது. செங்கடல், இப்போது எடுத்த ஈஸ் இட் டூமச் டு ஆஸ்க் வரைக்கும் பிரச்னைதான். இந்த படத்தில் திருநங்கைதான் பாத்திரங்கள். சென்சார் ஆட்கள் இது அவனா அவளா என்றே தெரியவில்லை. இதை எப்படி குழந்தைகள் பார்க்க முடியும் என்று கேட்டார்கள். அவ்வளவுதான் அவர்களின் புரிதல். தரமான பாலின புரிந்துணர்வு அவர்களுக்கு இருந்திருக்குமேயானால் இன்றைக்கு ஒரு படமும் கூட வெளிவந்திருக்காது. கிட்டத்தட்ட எல்லா படமுமே பெண்களை இழிவு படுத்துவதாகத்தானே இருக்கின்றன?
எந்த சென்ஸிடிவிட்டியும் இல்லாத ஆட்களிடம் தான் நாம் முட்டிமோத வேண்டியிருக்கிறது. நான் முதல்முதலில் என்னுடைய பறை படத்தை சென்ஸாருக்கு எடுத்துச் சென்றேன். இதற்கு முன்னால் நான் எந்த சான்றிதழும் வாங்கியது கிடையாது. ஏன் போனேன் என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது.
முன்பெல்லாம் திரைப்பட விழாக்கள், பிலிம் சொசைட்டிகளில் படம் திரையிடலுக்கு எந்த சென்சாரும் வேண்டியதில்லை. ஆனால் பாஜக முதல்முதலில் ஆட்சிக்கு வந்த காலத்தில் திரைப்பட விழாக்களில் கலந்துகொள்ளும் படங்களுக்கு சென்ஸார் தேவை என்று அறிமுகப்படுத்தப்பட்டது. திரைப்படவிழாக்கள் என்பவை படைப்பு சுதந்தரத்துக்கானவை. அங்கும் தணிக்கையா என்று 300க்கும் மேற்பட்ட சுதந்தர படைப்பாளிகள் ஒன்று சேர்ந்து இந்த விதிக்கு எதிராகப் போராடி, இந்த விதியை எடுக்க வைத்தார்கள். ஆனால் இன்றும் தணிக்கைச் சான்றிதழ் இல்லாவிட்டால் இந்தியன் பனோரமாவுக்கு, தேசிய விருதுக்குப் படம் அனுப்ப முடியாது. இந்தியன் பனோரமாவில் தேர்வானால் தேசிய திரைப்பட ஆவணக்காப்பகத்தில் பாதுகாக்கப்படும். அவற்றை அரசுத் தொலைக்காட்சி வாங்கிக்கொள்ளும். இதெல்லாம் திரைப்படக் கலைஞர்களுக்கு பொருளாதார ரீதியில் மிக முக்கியமான அம்சங்கள். ஒரு கட்டம் வரை இந்தியன் பனோரமா தான் தேர்வான படங்களை வெளிநாடுகளில் நடக்கும் விழாக்களுக்கு அனுப்பி வைப்பார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை. இயக்குநர்களே நேரடியாக அனுப்பிக்கொள்ளலாம். இணைய வசதி அவ்வளவு மாற்றங்களை உருவாக்கி உள்ளது. ஐந்தாண்டுகளுக்கு முன் செங்கடல் எடுத்தபோதுமே கூட நான் கொரியர்தான் அனுப்பிக்கொண்டிருந்தேன். இப்போது இணையம் மூலம் அனுப்பினால் போதும். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் பனோராமா மிக முக்கியமானதாக இருந்தது. அதற்கும் படம் அனுப்ப சான்றிதழ் கேட்டார்கள். அதாவது சுதந்தரமான படைப்பாளியாக இயங்கமுடியாமல் இப்படி கட்டுப்பாடுகள் விதித்து வைத்திருந்தார்கள். அப்புறம் இன்றுவரை 35 எம் எம் பிரிண்டை வெளிநாட்டுக்கு அனுப்பவேண்டும் என்றால் சென்ஸார் சான்றிதழ் இல்லாமல் அனுப்பமுடியாது என்ற அபத்தமான விதி உள்ளது. ஆனால் இப்போது இணையம் மூலமாக முழுப்படத்தையும் வெளியே அனுப்பலாம். இந்த சான்றிதழ்கள் எதுவும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நமது நாட்டுக்குள் உங்களுக்கு அங்கீகாரம் வேண்டும் என்றால் உங்களுக்கு சான்றிதழ் முக்கியம்.
இதுவரைக்கும் தேசிய விருதுக்கு என்னுடைய ஒரு படத்தையும் அனுப்பவில்லை. என்னுடைய Goddesses படம் மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் தங்கப்பதக்கம் வாங்கியது. அதைக்கூட நான் அனுப்பவில்லை. ஏனெனில் சான்றிதழ் வாங்கவேண்டும். செங்கடலுக்கு வாங்கியும் கூட அந்த சான்றிதழ் தயாரிப்பாளர் பெயரில் வாங்கினோம். தயாரிப்பாளர் அதை அனுப்பவே இல்லை!
மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் சான்றிதழ் தேவையில்லை என்று போராடி வெற்றி பெற்றதால் அதற்கு அனுப்ப முடிந்தது.
படம் சென்ஸார் போர்டுக்குப் போனால் அதில் பல வெட்டுகள் கொடுப்பார்கள். அதைச் செய்யமுடியாது என்றால் மறுபரிசீலனை. அதற்கு நாம்தான் பணம் கட்டவேண்டும். இவர்களின் கோமாளித்தனத்துக்கு நாம் செலவழிக்கவேண்டும். இங்கிருந்து மத்திய டிரிபியூனல் போகலாம். அங்கே வழக்கறிஞருக்கு நாம்தான் பணம் கொடுத்து வாதாடவேண்டும். ஆனந்த பட்வர்த்தன் பொன்றவர்கள் இப்படித்தான் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த ட்ரிபியூனலில் ஜெயிக்கவில்லை என்றால் உச்சநீதிமன்றத்தில் போய் வாதாடவேண்டும். செங்கடல் படத்துக்கு முதலில் இங்கே தடை கொடுத்துவிட்டார்கள். எங்கேயும் திரையிட முடியாது. நான் இங்கே மறுபரிசீலனைக் குழுவுக்கெல்லாம் போகவில்லை. அதற்கே 25000 ரூபாய் செலவாகிறமாதிரி இருந்தது. எனவே நேரடியாக ட்ரிபியூனலுக்கே சென்று வழக்காடினோம். ட்ரிபியூனலில் சென்ஸார் போர்டுக்கு டைரக்ஷன் கொடுத்தார்கள். இதை எடுத்துக்கொண்டு திரும்ப சென்னைக்கு வந்து, டிரைபியூனல் கொடுத்த விதிகள் படி அமைக்கப்படும் சிறப்புக் குழுவுக்கு போட்டுக் காண்பித்துதான் சான்றிதழ் வாங்க முடியும். இது பெரிய வேலை. அப்படித்தான் செங்கடலுக்கு வாங்க முடிந்தது.
இப்போதைக்கு நாங்கள் சொல்வது என்னவென்றால் சென்ஸார் போர்ட் என்பது குப்பையில் தூக்கிப்போடவேண்டிய அமைப்பு என்பதுதான். சுதந்தரமான ஓர் அமைப்பு, அரசால் கட்டுப்படுத்தமுடியாத ஓர் அமைப்பு சான்றிதழ் கொடுக்கலாம். இந்த சான்றிதழ் விவகாரத்திலும் ஒரு சிக்கல் உள்ளது. செங்கடலுக்கு ஏ கொடுத்தார்கள். ஏனெனில் அந்த படத்தில் கருணாநிதி, ஜெயலலிதா போன்ற வாழும் தலைவர்களின் பெயர்கள் சொல்லப்படுகின்றன என்று காரணம் சொன்னார்கள். நான் இதையும் எதிர்க்கலாம். அதற்கெல்லாம் எனக்கு சக்தி இல்லை என்பதால் விட்டுவிட்டேன்.ஏன் இந்த சான்றிதழ் முக்கியம் என்றால் ஏ சான்றிதழ் இருக்கும் படங்களை பனோரமாவுக்கு தேர்வானாலும் தூர்தர்ஷனில் வாங்க மாட்டார்கள். தூர்தர்ஷன் கொடுக்கும் பணம், அதற்கு இருக்கும் பார்வையாளர் எண்ணிக்கை ஒரு கலைஞருக்கு மிக முக்கியம்.
முதல் உலக நாடுகளில் இங்கிருப்பது போல் சென்ஸார் இல்லை. ஒரு சுதந்தரமான கலைஞனின் படத்தில் கடுமையான சொற்பிரயோகம் இருக்குமெனில் அதை வெட்ட மாட்டார்கள். இதில் இப்படி இருக்கிறது என்று டிஸ்கிளைமர் போடுவார்கள். அவ்வளவுதான். ஒரு படைப்பாளி தன் படத்தில் வெட்டுவிழுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. நீங்கள் ஒரு நாவல் எழுதுகிறீர்கள். பதிப்பாளர் அதை வெட்டிவிட்டுத்தான் பதிப்பிப்பேன் என்றால் ஏற்றுக்கொள்ள முடியுமா? அதேதான். ஆனால் இந்த தார்மீகக் கோபமே இங்கிருக்கும் படைப்பாளிகளுக்கு இல்லையே..
Lipstick Under My Burkha என்று ஒரு படத்துக்கு தடை கொடுத்தபோது நீதிபதி, ‘ ஏன் இப்படி நடந்துகிறீங்க.. உங்கள் வேலை ஏ வா யு வான்னு சான்றிதழ் கொடுக்கிறதுதானே.. ஏன் இப்படி தலைவலி கொடுக்கிறீங்கன்னு’’ வெளிப்படையாகவே கேட்டிருக்கிறார்.
இதுவரை நாம் பேசியது சட்டத்துக்கு உட்பட்ட தணிக்கை. இதை எதிர்த்துப்போராட நமக்கு வழிகள் உள்ளன. நம் உரிமைகளுக்கு சட்டப்பாதுகாப்பு இருக்கிறது. உச்சநீதிமன்றம் வரை போகலாம்.ஆனால் இதற்கு வெளியே கும்பல் தலையிட்டுச் செய்யும் தணிக்கை என்று ஒன்று இருக்கிறது. இதில் யாரையும் எதிர்த்துப் போராட முடியாது. யாரை எதிர்க்கிறோம் என்றே தெரியாமல் போராடவேண்டியிருக்கிறது. இடதுசாரி அமைப்புகளும் அப்படித்தான். ஸ்டாலினியவாதிகளாக இருப்பதால் இவர்களுக்கும் புரிவதில்லை. தணிக்கை என்பது ஓர் அச்சுறுத்தல் அதை எதிர்க்கவேண்டும் என்று இவர்கள் நினைப்பதில்லை.
யாராக இருந்தாலும் உதாரணத்துக்கு ஜோ டி குரூஸ் நூலுக்கும் ஆதரவாக இருக்கவேண்டும். பெருமாள் முருகன் நூலுக்கும் ஆதரவாக நிற்கவேண்டும். ஆனால் தன்னுடைய கொள்கைக்கு ஆதரவாக இல்லாதவர்களைக் கைவிட்டுவிடும் போக்குதான் நிலவுகிறது. இடதுசாரி எழுத்தாளர்களுக்கு மிகவலிமையாக ஆதரவு தெரிவிக்கும் இயக்கங்கள், வலதுசாரி எழுத்தாளனை அம்போவென விட்டுவிடுவார்கள். அவனது படைப்புரிமைக்கும் குரல் கொடுக்கவேண்டும். அதுதான் உண்மையான படைப்புச் சுதந்தரம். தமிழ் தேசிய, ஈழ ஆதரவாளர்களிடமும் இதே கருத்துரிமை எதிர்ப்பு மனநிலைதான் உள்ளது.
விஸ்வரூபம் படத்தில் உங்களுக்குப் பிரச்னை என்றால் அதை விமர்சனத்தின் மூலம் அணுகுங்கள். டேம் 999 படத்தில் பிரச்னை என்றாலும் அப்படித்தான் அணுகவேண்டும்.
படைப்பாளிகளுக்கு அரசு தடை விதித்தால் சட்டப்பாதுகாப்பு பெறலாம். போராடலாம். ஒரு இயக்கம் அந்தப் படத்தைப் போடக்கூடாது என்றால் தியேட்டர்களில் போடமாட்டார்கள். இதையாரும் எதிர்கொள்ள முடியாது. வித் யூ வித்தவுட் யூ சிங்களப் படம் வந்தபோது, சிங்கள முன்னாள் ராணுவவீரன் தமிழ்ப்பெண்ணை திருமணம் செய்வதாக எப்படி படம் எடுக்கலாம் என்று இரண்டு திரை இயக்குநர்கள் சீமானும் வ. கௌதமனும்தான் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அந்த படத்தை திரையிட அனுமதிக்கவில்லை.
என்னுடைய ‘ஒயிட் வேன் ஸ்டோரீஸ்’ படத்துக்கும் இதேதான் நிலை. போலியான பெயரில் அதற்கு எதிராக அறிக்கை வெளியிட வைத்தார்கள். வதந்திகளைப் பரப்பினார்கள். உங்களுக்கு உகந்த கருத்துகளைச் சொல்லவில்லையென்றால் அந்த படைப்பாளியைக் காலி செய்துவிடுவார்கள். அந்த படத்தை ஏழு முறை திரையிடவிடாமல் தடுத்தார்கள். நான் வெறுத்துப்போய்விட்டேன். தமிழ் தேசியம் பேசுகிறவர்கள், முற்போக்கு இயக்கங்கள் எல்லோருக்குள்ளும் தணிக்கைவாதிகள் இருக்கின்றனர். அதைக் களையாமல் இங்கு வீரியமான படங்கள் வரவே முடியாது. இன்றுவரை யூதர்கள் படுகொலை பற்றி படங்களில் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் லட்சக்கணக்கான தமிழர்கள் இடம் பெயர்ந்திருக்கிறார்கள். கடைசிப்போரில் லட்சம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த துயரம் பற்றி எத்தனைப் படங்கள் வந்திருக்கவேண்டும்? ஆனால் என்ன வந்திருக்கிறது? ஒரு வீரியமான படைப்புமே இல்லை. எதுவுமே வரவில்லை. இதற்கான மொத்த பாராட்டுமே தமிழ்த் தேசியவாதிகளையே சாரும். இவர்களின் ‘கும்பல்’ நாயகமே காரணம்!இவர்கள் இந்தப் படங்களைப் பார்க்கவே மாட்டார்கள். பார்க்காமலேயே எதிர்ப்பார்கள். அப்படியே கும்பலாகச் செயல்பட்டு அந்த படங்களை திரையிடவிடாமல், அதைப் பற்றி எழுதவிடாமல் தடுத்து சத்தமே இல்லாமல் அழித்துவிடுவார்கள்.! எப்போதுமே ஒரு படைப்பாளி பாதுகாப்பு மனநிலையிலேயே இருக்கவேண்டும் என்று ஒரு சமூகம் வைத்திருக்கிறது என்றால் அது என்ன சமூகம்? வானத்திலிருந்து எந்த படைப்பாளியும் குதிக்க முடியாது. இந்த சமூகத்திலிருந்துதான் வர முடியும்.
https://youtu.be/aeDjbLOrP6M?si=DDQGjuoBOjWM1slK
சுதந்தரமான படைப்பாளிகளைப் பாதுகாப்பதும் சமூகத்தின் பொறுப்பும்தான். அப்படி ஒவ்வொரு படைப்பாளியுடனும் கொள்கை சார்பு பார்க்காமல் நிற்கவேண்டும். இதுவே படைப்பியக்கத்துக்கு முக்கியமானது.
கமலா தாஸ் வாழ்க்கை திரைப்படமாகிறது – ஜன்னல் நேர்காணல்
பிரபல மலையாளக்கவிஞர் கமலா தாஸின் கதையை,படமாக எடுக்கும் எண்
கமலா தாஸ் என்னை மிகவும் பாதித்த கவிஞர். என் ஆதர்சம். அவருடைய Summer in Calcutta என் கைப்பையில் எப்போதும் வைத்திருப்பேன். “என் கதை” என்ற அவரது சுயசரிதை நூல் சந்திக்காத சர்ச்சைகளே இல்லை. எழுபதுகளில் அவர் எழுத துணிந்த விசயங்கள் இன்று எழுதிக் கொண்டிருக்கும் பெண்கள் கூட எழுத தயங்குபவை. அவரைப்போல துணிச்சலாக தன் ஆன்மாவை எழுத்தில் பதித்த எழுத்தாளர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
கனடிய எழுத்தாளர் “மெரிலி வீஸ்பர்க்” கமலா தாஸின் இறுதி நாட்களில் அவரோடு இருந்து எழுதிய “Love Queen of Malabar” என்ற புத்தகம் படித்தபோது அவருடைய வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கலாம் என்று பொறி தட்டியது. முரண்பாடுகளின் குவியலாய், ஒரு கவி மனதின் அத்தனை அலைக்கழிப்புகளும் கூடியதாய் அவருடைய வாழ்வு, அன்புக்கு ஏங்கி தவிக்கும் அவரின் ஆன்மா என கமலா தாஸ் அழியாத சித்திரமாக பதியப்பட வேண்டியவர். என் படம் அதை நிறைவேற்றும்.
ஏன் கமலா தாஸ் பற்றிய கதை இப்
கமலா தாஸின் தேவை எக்காலத்துக்கும் இருந்துக்கொண்டே தான் இருக்கும் என்பது என் கணிப்பு. வாழ நினைக்கும் வாழ்வு ஒன்றாகவும், சமூகம் நிர்ப்பந்திக்கும் வாழ்வு ஒன்றாகவும் இருக்க சற்று சுதந்திரமாக மூச்சுவிடுவதற்காக எழுத்தை நாடும் ஒவ்வொரு பெண்ணிலும் கமலா தாஸ் ஆழமான ரேகைளாக பதிந்திருக்கிறார். அப்படி அவர் என்னுள் பதிந்திருக்கும் ரேகைகளில் ஒளியையும் ஒலியையும் பாய்ச்சிப் பார்க்க போகிறேன்.
கமலா தாஸை பலரும் விமர்சிக்க,
ஒரு ஆண் தன் உறவுகளைக் குறித்து எழுதும்போது அந்தப் பிரதி பொதுப்பிரதியாக பார்க்கப்படுகிறது. அதுவே ஒரு பெண் எழுதும்போது அவரின் தனிப்பிரதியாக பார்க்கப்படுகிறது. பெண் எழுத்தின் மீதான சாவித்துளை பார்வைகளும், ஒழுக்கம் குறித்தான தீர்ப்புகளும் சதா அவரை சர்ச்சைக் குள்ளாக்கின. அவரை பல பெயர்களிட்டு அழைத்தன. சமூகத்தின் இரட்டை நிலைப்பாடுகளுக்கும் போலித்தனங்களுக்கும் அவரின் எழுத்து அச்சுறுத்தலாக இருந்தது. அதனாலேயே சமூகம் அவரைப் பல வகையில் தண்டித்தது. அவருடைய வாழ்வும் எழுத்தும் அதற்கு அவர் சந்தித்த எதிர்ப்புகளும் அவரைப் பிரதிபலித்தது என்பதை விட அவர் வாழ்ந்த சமூகத்தையும் காலத்தையும் தான் மிகத் துல்லியமாக பிரதிபலித்தது என்பேன்
தமிழில் கமலா தாஸ் பெரிய அளவி
ஜெயமோகனிடம் இதைக்குறித்து நேரிடையாகவே விவாதித்திருக்கறேன். அவர் பெண் எழுத்தை, எழுத்தாளர்களை மஞ்சக்காமாலை கண்களுடன் பார்ப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். கமலா தாஸைப் பற்றி சக்கரியா எழுதியிருப்பதைப் படியுங்கள். என்.எஸ். மாதவன் எழுதியிருப்பதைப் படியுங்கள். ஜெயமோகன் எழுதும் தீர்ப்புகளை விட அவர் எழுதும் புனைவுகளைப் பொருட்படுத்த விரும்புகிறேன்.
தமிழில் என்ன மாதிரியான தாக்
நான் தமிழ் மார்க்கெட்டுக்காகவோ, மலையாள மார்க்கெட்டுக்காகவோ படங்கள் செய்வதில்லை. நான் இதுவரை செய்துவரும் இன்டபென்டண்ட் சினிமா மொழியில் தான் கமலாதாஸ் செதுக்கப்படுவார்.
கமலா தாஸ் படம் தேவையில்லாத ம
சினிமா கண்டுபிடிக்கப்பட்டு நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை எந்த சினிமாவாலும் மதக்கலவரங்கள் ஏற்பட்டதாக சரித்திரம் இல்லை.
படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்த வித்யாபாலன் மற்றும் மஞ்
தன் திறமை மேல் நம்பிக்கையுள்ள கலைஞர்கள், அரசியல் சில்லுண்டிகள் – தங்களை, தங்கள் முடிவுகளை தீர்மானிக்க அனுமதிக்க மாட்டார்கள்.
பிரபலங்கள் யாரும் கமலாதாஸ்
கமலாதாஸாக நான் நடிப்பதாக இருக்கும் ஏற்பாட்டில் மாற்றம் இல்லை. “என் கதை” எழுதும் போது முப்பதுகளில் இருந்த கமலா தாஸின் பாத்திரத்தை நான் ஏற்று நடிக்கிறேன். சிறுமி கமலாதாஸ் மற்றும் பதின்பருவ கமலா தாஸ் கதாபாத்திரங்களுக்கு நடிகர்கள் தேர்வு நடந்துக்கொண்டிருக்கிறது.
மலையாள இயக்குனர் கமல் பார்
கமல் அப்படி சொல்லித்தான் என் முயற்சிகளை மூன்று வருடங்களாக நிறுத்திவைத்திருந்தார். கமர்சியல் இயக்குநர்களிடம் நேர்மையை எதிர்பார்த்தது என் முட்டாள்தனம் தான். வியாபார நிர்ப்பந்தங்களுக்கு முன் கவிஞரின் ஆன்மா எப்போதும் செல்லாக்காசு தான்.
கமல் போன்ற பெரிய கமர்சியல்
கமலா தாஸை சந்தைக்கு ஏற்றவாறு பினாயில் போட்டுக் கழுவிக் கொடுப்பாராயிருக்கும். அது அவர் பாடு.
கமர்சியல் படமாக எடுக்கத் தி
என்ன மாதிரியான கேள்வி இது? எனக்குத் தெரிந்த சினிமாவாக எடுப்பேன்.
படம் தொடர்பான அடுத்த கட்ட
ஸ்கிரிப்டை இன்னும் ஆழமாக உழுதுக் கொண்டிருக்கிறேன். அதற்குப்பின் Indo Canadian Co-Production – ஆக படம் ஆங்கிலத்தில் தயாரிக்கப்படும். கேரளா, மும்பை, கொல்கத்தா, பூனா மற்றும் கனடாவில் படப்பிடிப்பு நடைபெறும். 2018 -ல் படம் களம் காணும்.
20/04/2017
ஆண்பால் பெண்பால்
நன்றி – ஆனந்த விகடன் 20/12/2016
வயது 36, சிங்கிள். திரைப்படத்துறையில இயக்குநரா இருக்கேன். கவிதைகள் எழுதுவேன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு கை குலுக்கினால், குலுக்கலில் நெளியும் கைகளில் ஆயிரம் கேள்விகள். இந்த சமூகத்தில் ஒரு பெண்ணுக்கு எந்த தயக்கமும் இல்லாமல் கைகுலுக்க கூட ஆளில்லாத போது, வாடகைக்கு வீடு கிடைக்கும் என்பது எவ்வளவு பெரிய பகல் கனவு.பிராமின்ஸ் ஒன்லி, ஃபேமிலி ஒன்லி, ஐடி ப்ரொபெஷனல்ஸ் ஒன்லியைத் தாண்டி நாளிதழ் களில் வெளியாகும் வாடகை வீட்டுக்கான விளம்பரங்கள் ஒன்றிரண்டை குறித்துக் கொண்டு வீட்டு உரிமையாளர்களிடம் பேசிப் பார்த்தால் புரிந்து விடும். தமிழில் “வீடு” என்றால் “ஆண்பால்” என்று. ஹை ஸ்கூல் படிக்கும்போது ஹிந்தியை தனியாக படித்து பிராத்மிக், ராஷ்ட்ரபாஷா, பிரவீன் வரை பரீட்சை எழுதியிருக்கிறேன். ஆனாலும் அந்த மொழியில் மேசை – நாற்காலி – கட்டில் – கத்தி என்று சடப் பொருட்களுக்கும் பால்விகுதி வருவது கடைசி வரை குழப்பமாயிருக்கும். தமிழ் மொழியில் அந்த சிக்கல் இல்லையென்றாலும் தமிழ் சமூகத்திற்கு “பால்” பெரும் சிக்கல் தான். “கல்யாணம் ஆகலையா? ஏன்? ஓ விவாகரத்தா? எதனால விவாகரத்து ஆச்சு? வேற கல்யாணம் ஏதும் பண்ணலையா? அப்பா என்ன செய்றாரு? என்ன இறந்துட்டாரா? ஆச்சச்சோ பாவம். எங்க வேலை செய்றீங்க? படம் எடுக்கிறீங்களா? என்ன படம்?” எனத் துளைத்தெடுக்கும் கேள்விகளுக்கும் வாடகை வீட்டிற்கும் இடையே பல மைல்கள் கடக்க வேண்டியிருக்கும். கடந்த ஐந்து வருடத்தில், ஆறு வாடகை வீடுகள் மாறிய என் அனுபவங்களை ஒரு நீண்ட நாவலே எழுதலாம். தனித்து வாழும் பெண் தமிழ் சமூகத்தில் இன்னும் தீண்டப்படாத ஜந்து தான். ஓராயிரம் சுட்டுவிரல்கள் அவளிருக்கும் திசை நோக்கி நீண்டுக் கொண்டே இருக்கும். தந்தை, சகோதரன், கணவன் என குடும்ப ஆண்களின் துணையில்லாது, தன் சொந்த சம்பாத்தியத்தில் தனியே ஒரு பெண் நேர்மையாக வாழ முடியும் என்பதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இன்னும் இந்த சமூகத்திற்கு வாய்க்கவில்லை.
சுயதேர்வுடன், அமைப்புகளுக்கு வெளியே வாழும் பெண்களை சதா சந்தேகத்துடனும் கண்காணிப்புடனும் தான் பொதுச் சமூகம் அணுகுகிறது. தனித்த பெண் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் ஒரு ஒழுங்குப் போலீஸ்தான். உடுக்கும் உடை, பேசும் மொழி, செய்யும் வேலை, மேற்கொள்ளும் பயணங்கள், கூட இருக்கும் நண்பர்கள், உறவுகள் எல்லாவற்றையும் எடைபோட்டுக் கொண்டே இருக்கும் கூட்டம், ஒரு சின்ன சரிவு ஏற்பட்டாலும் “அவளுக்கு இது தேவை தான்” என்று பழிக்க தயாராக இருக்கும். போறவன், வர்றவன், பெயர் தெரிஞ்சவன், தெரியாதவன்,ஆம்பள, பொம்பள, கம்பியூனிஸ்ட், பெரியாரிஸ்ட், பெமினிஸ்ட் என வகை தொகை தாண்டி எல்லோரிடமும், “ஆண் துணை இல்லாத பெண்ணைக்” குறித்த ஒரு மரியாதைக் குறைவு இருப்பது தான் கசப்பான உண்மை. கற்கள் எறிவதற்குரிய எளிய திசையாக தனித்து வாழும் பெண் எப்போதும் இருக்கிறாள்.
“Personal is Political” என்றொரு வாசகம் உண்டு. சரி என்று நான் நம்பும் விஷயத்திற்கும் வாழ்வுக்கும் நடுவே பெரிய இடைவெளியில்லாமல் வாழ தலைப்படுவதுண்டு. என் குடும்பக்கண்ணியில் இருந்து விலகி முதன்முதலாக சாதி மீறி, மதம் மீறி, தாலி போன்ற சடங்குகள் மறுத்து திருமணம் செய்தேன். பின் கணவனிடமிருந்தும் மணவிலக்கு வாங்கினேன். குடும்பம், திருமணம், சாதி, மதம், சட்டம் என்று நடப்பில் இருக்கும் எந்த அமைப்பும் சுதந்திரமாக வாழ விரும்பும் பெண்ணுக்கானதல்ல என்று அனுபவப் பூர்வமாக உணர்ந்ததால் இவை எல்லாவற்றுக்கும் வெளியில் ஒரு வாழ்க்கையை சாத்தியமாக்க முயற்சி செய்துக்கொண்டே இருக்கிறேன். நீயென்ன “அனார்கிஸ்டா”(Anarchist) என்று பலர் கேட்பதுண்டு. இல்லை, ஒரு பறவை போல, புழு பூச்சி போல, காட்டுச்செடி போல, ஆட்டுக்குட்டி போல தன்னியல்பாக வாழ நினைக்கும் உயிரி என்று நான் பதில் சொல்வதுமுண்டு.
பொம்பள புள்ளயா தலையப் பின்னாம விரிச்சு போட்டு அலையறா, பொம்பளப்புள்ளயா கால்கள சேர்த்து உக்காராம பப்பரப்பான்னு விரிக்கிறா, பொம்பளப்புள்ளயா அடக்கமா இருக்காம இடி இடின்னு சிரிக்கறா, பொம்பளப் புள்ளயா பொழுது சாயறதுக்குள்ள வீடு சேராம ஊர் மேயறா, பொம்பள புள்ளயா சட்டி பான தேய்க்காம ஓயாம விளையாட்டு புத்தி, பொம்பள புள்ளயா ஒரு இடத்தில குந்தாம கால்ல சுடுதண்ணி ஊத்திட்டு திரியறா, பொம்பளப்புள்ளயா வாயடக்கம் இல்லாம எதுத்து எதுத்துப் பேசறா என்று வளரும் பருவத்தில் என் தன்னியல்பான நடத்தைகள் எல்லாம் குற்றமாக்கப்பட்டன. இவ ஆம்பள மாதிரி கேள்வி கேக்கறா, இவ ஆம்பள மாதிரி அக்கரைக்கு இக்கரை நீச்சல் அடிக்கிறா, இவ ஆம்பள மாதிரி சுவரேறி குதிக்கிறா, இவ ஆம்பள மாதிரி மரத்துக்கு மரம் தாவறா, இவ ஆம்பள மாதிரி பைக் ஓட்றா, இவ ஆம்பள மாதிரி தெருவில சண்டைக்கு இழுக்கிறா என்று என் மேல் தரப்பட்ட பிராதுகள் ஒவ்வொன்றும் நான் விரும்பி செய்தவை எல்லாம் “பால்” மீறிய செயல்களாய் கருதப்பட்டதின் அடிப்படையிலானவை.
பால் அடையாளம் பெரும் லஜ்ஜையாக, முட்டுக்கட்டையாக, கைவிலங்காக பதின்பருவத்திலேயே எனக்கு தோன்ற ஆரம்பித்து விட்ட தால், “பெண்ணாகப் பிறந்து விட்டதால் நீ இதை செய்ய முடியாது” என்று சொன்னதையெல்லாம் செய்துப் பார்ப்பது எனக்கு பிடித்த விளையாட்டானது.செய் என்று சொன்னால் செய்யாமல் ஏய்ப்பதும், செய்யாதே என்று சொன்னால் செய்துப் பார்த்துவிடும் பிடிவாதமும், தேவையில்லாத கட்டுப்பாடுகள் வளர்த்துவிடும் குணங்கள் தானே.
பதினெட்டு வயதில் திருமணம் செய்துக்கொண்டுப் பின் எதுவானாலும் படி என்று கட்டாயப்படுத்திய பெற்றோரை மீறி படித்தேன். பொறியியல் படிப்பில் பெண்கள் தேர்வு செய்ய தயங்கும் இன்ஸ்ட்ருமென் டேஷன் அண்ட் கண்ட்ரோல் துறையை தேர்ந்தெடுத்துப் படித்து டிஷ்டிங்கஷனில் பட்டம் வாங்கினேன். கல்லூரி இறுதியாண்டில், மேற்படிப்புக்கு வெளிநாடு செல்லலாம் என்று பரீட்சைகளை எழுதி தள்ளிக்கொண்டிருந்த காலத்தில், தற்செயலாய் கிடைத்த சினிமா அனுபவம் எனக்குள் இருக்கும் கலைஞியை கண்டெடுக்க உதவியது . அப்பா தமிழாசிரியர் ரகுபதி கற்றுக்கொடுத்திருந்த தமிழ் என்னுள் ஊறி தினெவெடுத்திருந்தது. அம்மா ரமாவின் கம்யூனிஸ்ட் குடும்ப பின்புலம் தந்திருந்த துணிச்சல் கை கொடுத்தது. என் கல்லூரித் தோழர்கள் எல்லாம் அமெரிக்காவில் செட்டில் ஆனபோது, நான் எழுத்தும் சினிமாவும் தான் வாழ்க்கை என முடிவெடுத்தேன். ஒழுக்கம் கெட்ட பெண்கள் தான் கலைத்துறையைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று வீடும் சுற்றமும் கடுமையாக எதிர்த்தது. பிரம்மாண்டமான ஆண்குறியாக இறுகி தடித்திருந்த சினிமா – கலை – இலக்கிய – அரசியல் துறைகள் தந்த சவால்கள் எனக்குரிய பரந்த ஆடுகளத்தை தந்தன. தெருவில் என்னையே தூக்கி எறிந்துக் கொண்டேன். உண்மையான கற்றல் அந்தப் புள்ளியில் தான் தொடங்கியது. கற்றல் என்பது ஏற்கனவே தவறாக கற்றுக்கொடுக்கப்பட்டதைக் கைவிடுதலும் தானே!
தமிழ் சினிமா ஆணின் உலகம். பெண்ணின் உடலைக் காட்சிப் பொருளாக்குவதை தவிர பெண்ணுக்கு வேறெதையும் செய்துவிடும் பிரயத்தனமும் அதற்கில்லை. பழைய பண்ணையார் மனப்பான்மையோடும் வீங்கிய ஆண் ஈகோ வோடும் வலம் வரும் இயக்குனர்கள், சரிசமமாக அவர்கள் முன் அமர்ந்து விவாதம் செய்யும் பெண்ணை, அவளின் அறிவை வெறும் திமிராக மட்டுமே பார்க்கும் இயலாமை நிறைந்தவர்கள்.மிகக் குறைந்த காலமே உதவி இயக்குனராக வேலை செய்தேன். டைரக்டர் சார் ஸ்பாட்ல நிற்கும் போது வேற யாரும் உட்காரக் கூடாது, பேசக்கூடாது போன்ற சர்வாதிகார சட்டங்களுக்கும் கலைக்கும் என்ன சம்பந்தம் என்று கேள்விகள் ஒவ்வொன்றாய் குடைய ஆரம்பித்தது. எடுக்கும் படம் நல்ல படமா என்பதை தாண்டி, கொஞ்சம் கூட ஜனநாயகம் இல்லாத வேலைச் சூழல் அலர்ஜியாய் இருந்தது.சுற்றிலும் போலி பம்மாத்துகள். நான் வேலை செய்த யூனிட்களில், டெக்னீஷியனாக ஒரே ஒரு பெண்ணாக நான் மட்டும் வேலை செய்தேன். லொகேஷனில் என்னை நடிகையா என்று தான் பார்ப்பவர்கள் கேட்பார்கள். இல்லை, நான் அசிஸ்டென்ட் டைரக்டர் என்றால் மேலும் கீழும் வினோதமாக பார்ப்பார்கள். தலையை இறுக்க கட்டி தொப்பி மாட்டி தொள தொள டிஷர்ட் ஜீன்ஸ் போட்டுக்கொண்டு நின்றாலும் “நீ அழகா இருக்க” என்ற வாசகத்தின் குறுக்குவாசல் வழியாக நட்பு கோரும் மக்கு ஆண்களோடு ஒரு காவியமும் படைத்துவிட முடியாதென்பதால், சுயாதீன சினிமாவை தேர்ந்தெடுத்தேன். சரியோ தப்போ நாமே செய்துப் பார்த்துவிடுவோம் என்கிற நம்பிக்கையில் சிறிய காமிராவோடும், காலரில் மாட்டிய மைக்ரோஃபோனோடும், தோள்பையில் தொங்கும் மேக்புக்கோடும், 2002-ம் ஆண்டு சினிமா எடுக்க கிளம்பினேன். இன்று வரை சிறிதும் பெரிதுமாக ஒரு டஜன் படங்கள், திரையிடல்கள், விவாதங்கள் என 300 கிராமங்கள், 30 நாடுகள், 3000 இரவுகள் என பயணம் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. பெண்ணாய் பிறந்ததால், என் தந்தை மரணமடைந்தபோது அவரை வழியனுப்ப என்னை சுடுகாட்டிற்குள் அனுமதிக்கவில்லை. ஆனால், என் “தேவதைகள்” படத்திற்காக புதுவையில் அனாதைப் பிணங்களை அடக்கம் செய்யும் கிருஷ்ண வேணியம்மாவை படம்பிடிக்க முதன்முதலில் கேமிராவோடு இடுகாட்டில் நுழைந்தேன். என் பாட்டி ராஜேஸ்வரிக்கு பதினோரு வயதிலும், என் அம்மா ரமாவுக்கு பதினைந்து வயதிலும் திருமணம் செய்து வைத்ததை கேள்வி கேட்க நான் பிறந்திருக்கவில்லை. ஆனால், என் “பலிபீடம்” படம் மூலமாக குழந்தை திருமணங்களை ஆவணப்படுத்தி விவாதங்களை எழுப்பினேன். பெண்கள் சாதியாகவும் பாலினமாகவும் இரண்டடுக்குகளில் ஒடுக்கப்படுவதை தட்டிக்கேட்க என் படங்களை பயன்படுத்தினேன். மீனவர்களை, ஆதிவாசிகளை, அகதிகளை, போர் தின்ற மனிதர்களை சந்தித்து, புரிந்துக்கொண்டு அரவணைக்கும் வாய்ப்பை எனக்கு கேமிரா தான் வழங்கியது. அந்தப்பயணங்களும், பயணங்களில் சந்தித்த மனிதர்களும், அவர்களின் வாழ்க்கையும், மொழி, தேசம், நிறம் என்ற அடையாளங்களைக் கடந்த, குறிப்பாக பால் அடையாளத்தை கடந்த உயிரியாக என்னை மாற்றி விட்டன. எனக்கு நான் தேடிக் கொண்ட ஆசிரியர்கள் பயணங்களிலும் படப்பிடிப்புகளிலும் சந்தித்த மனிதர்கள் தாம் .
பால் கடந்த அன்பும் நட்பும் சாத்தியமா என்றால் சாத்தியம் என்று அடித்து சொல்வேன். பரஸ்பர மதிப்பும் மரியாதையும் அதை சாத்தியப்படுத்தும். சினிமா ஒரு கூட்டு முயற்சி. அதில் பால் சார்ந்த உயர்வு தாழ்வு மனப்பான்மைகள் இருந்தால் இணைந்து வேலை செய்து படைப்புகளை உருவாக்க முடியாது. என்னுடன் பதினைந்து வருடங்களாகத் தொடர்ந்து பணியாற்றும் எடிட்டர் தங்கராஜ் என் ஆத்ம நண்பர். அவர் பயாலஜிகலாக ஆணுடலுடன் இருக்கிறார் என்பதும் நான் பயாலஜிகலாக பெண்ணுடலுடன் இருக்கிறேன் என்பதும் எங்கள் நட்புக்கோ வேலைகளுக்கோ ஒரு பொருட்டாக இருந்ததே இல்லை. படைப்பாற்றல் வெளியில் பால் அடையாளங்கள் மறக்கடிக்கப்படுவதும், பால் பேதங்கள் அடித்துச் செல்லப்படுவதையும் நான் திரைப்பட உருவாக்கப் பணிகளில் அனுபவித்திருக்கிறேன். பல சமயங்களில் படப்பிடிப்புக் குழுவுடன் காடுகளிலும் மலைகளிலும் கடற்கரைகளிலும் ஒன்றாக தங்கி உறங்கி உடைமாற்றி வேலை செய்யும் சூழல் தான் இருக்கும். படைப்பு தான் நாங்கள் காணும் கூட்டுக் கனவு. பால் படிநிலைகள் அங்கு குறுக்கே வர அனுமதியே இல்லை. ஒளிப்பதிவாளர்கள் சன்னி ஜோசப், ரமணி, ரதீஷ் ரவீந்தரன், தனேஷ், அரவிந்த் என்று என் நண்பர்கள் பால் கடந்த ஆன்மாக்கள். எங்கள் உறவிலும் பரிவர்த்தனைகளிலும் அன்பிலும் பால் உறுத்தியதே இல்லை. இன்னும் சரியாக சொன்னால் என்னை பெண்பால் என நினைவுறுத்தும் யாரிடமும் என்னால் தொடர்ந்து நட்பு பாராட்டவோ, இணைந்து வேலை செய்யவோ முடிந்ததல்லை. வாழ்விலும் தாழ்விலும் அரவணைக்கும் என் சகோதரன் இளங்கோ, நிபந்தனையற்று நேசிக்கும் என் இணையும் சிற்பியுமான எஸ்வந், சித்தப்பா என்று நான் உரிமையுடன் அழைக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான டி.ராஜா, ஓவியர் மணிவண்ணன், கவிஞர் சாகிப், வாசகராயிருந்து நண்பரான தீரா, என் மொழிபெயர்ப்பாளரும் உயிர் நண்பருமான பாலக்காடு ரவி, நிழற்படக்கலைஞர் விஜயசேகர் என்று என் எல்லா மேட்னெஸ்ஸையும் பொறுத்துக் கொள்ளும் ஆண்பால் வட்டம் இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் என்னைப் புதைத்த இடத்தில் புல் முளைத்திருக்கும். என் காலஞ்சென்ற தந்தை ரகுபதி நேசித்ததைப் போல் யாரும் இன்னும் என்னை நேசிக்கவில்லை. “கண்ணம்மா, நீ என்ன துறையைத் தேர்ந்தெடுத்தாலும் தமிழை மறக்க கூடாது. விடாது உழைக்கனும். உழைப்பு ஒன்று தான் நம் சொத்து. பெண்ணுக்கு முக்கியம் பொருளாதார தற்சார்பு. மற்றதெல்லாம் உன் தேர்வு தான்” என்று அவர் என் கைகளை அவர் கைகளில் பொதித்துக் கொண்டு சொன்ன ஈரம் இன்னும் காயவில்லை. அவர் என்னை திடீரென விட்டுச்சென்றதாலோ என்னவோ, நான் நேசிப்பவர்களும் என்னை விட்டுச் சென்றுவிடுவார்கள் என்ற பதட்டம் எப்போதும் என்னை வாட்டும். ஆணோ, பெண்ணோ, உறவுகளில், “என்றென்றும்” என்ற நிலைத்த உணர்வு சாத்தியமில்லை என்றே நம்புகிறேன்.
மொழி எனது எதிரி என்று எழுதியிருப்பேன். பாலின ஏற்றத்தாழ்வுகளின் ஊற்று மொழி. சங்க காலத்தில் எழுதியதாக சொல்லப்படும் ஒளவையார், வெள்ளிவீதியார் போன்ற கவிஞர்கள் தவிர, ஆறாம் நூற்றாண்டின் காரைக்கால் அம்மையார், எட்டாம் நூற்றாண்டின் ஆண்டாள் தாண்டி தமிழில் பெண்கள் எழுதிய வரலாறு இல்லை. 2000ம் ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் பெண்கள் எழுதுகிறார்கள். அல்லது, ஆண் மைய மொழியை அடித்து, நிமிர்த்தி, வளைத்து தமதாக்கி கொண்டிருக்கிறார்கள் என சொல்லலாம். மொழிக்குப் பாலினம் இல்லை. ஆனால் பெண்கள் இந்த இந்த சொற்களை பயன்படுத்துவது ஆபாசம். மொழிக்கு பாலினம் இல்லை. ஆனால் பெண்கள் அந்த அந்த விஷயங்களை வெளிப்படையாக எழுதுவது அசிங்கம். மொழிக்கு பாலினம் இல்லை. ஆனால் நமக்கென்று மரபு இருக்கு, அதை எப்படி பெண்கள் மீறலாம் . மொழிக்குப் பாலினம் இல்லை. ஆனால் பெண்களாக இருப்பதாலேயே கவனம் பெற்று விடுகிறார்கள் என்று பலவாறு காமெடி பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். என்னுடைய முதல் கவிதை தொகுப்பு “ஒற்றையில்லையென” புத்தக அட்டையில் ஒரு நிர்வாணப் பெண்ணின் ஓவியம் இருக்கும்.வந்தவாசியில் நடந்த முதல் விமர்சனக் கூட்டத்தில் விமர்சகர் அந்தப் புத்தகத்திற்கு பிரவுன் கவர் போட்டு எடுத்து வந்திருந்தார். அவர் நம்மூர் கோவில்களுக்கெல்லாம் கண்ணைக் கட்டிக்கொண்டு போவார் போலிருக்கிறது. அங்கு தொடங்கி இன்று வரை சர்ச்சைகளுக்கு குறைவில்லை. பெண்களின் “இருப்பை” சதா சர்ச்சைக்குள்ளாக்குவதால் அவர்களின் வீர்யமான படைப்புகள் சரியான வாசக கவனமோ, விமர்சனமோ பெற முடிவதில்லை என்பது தான் துயரம். தமிழ் இலக்கிய உலகம் விசித்திரமானது. தங்கள் கருத்தியல்களை வாசலில் செருப்பைக் கழற்றி வைப்பது போல வைத்துவிட்டு, “ஏய் என்னடி சமையல்” என்று கேட்டுக்கொண்டே வீட்டுக்குள் நுழையும் ஆண்கள் தான் அதன் நாயகர்கள். தெருவில் சீட்டியடிக்கிறவனிடம் கூட ஒரு நேர்மையிருக்கும்.ஆனால் புரட்சி பேசுபவர்கள், முற்போக்காளர்கள், எழுத்தாளர்கள் என்று சொல்லிக்கொள்கிறவர்களில் பெரும்பாலானவர்கள், எழுதும் பெண்ணை, வாசகிகளை வெறும் செக்ஸுவல் ஆப்ஜெக்ட்டாக பார்ப்பதில் கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல. என்னோடு பயணம் வருவாயா? சரிக்கு சரி சிகரெட் சரக்கு அடிப்பாயா? இரவிரவாக விவாதம் புரிவாயா? என்று கட்டபொம்மன் மாதிரி நம்ம இலக்கியவாதிகள் சவால் விடுவதோடு சரி. ஒரு “No” சொல்லும் பெண்ணை எதிர்கொள்ளும் மன உயரம் கூட இல்லாமல் தான் இருக்கிறார்கள். இவர்களின் மன விகாரங்களுக்கு இப்போது ஃபேஸ்புக் வேறு புதிய மேடையை அமைத்துக் கொடுத்திருக்கிறது. பெண்ணின் படைப்புகளை விட பெண்ணைகுறித்த பேச்சுக்கு அடிமையான இலக்கிய உலகத்தில் தான் நானும் இயங்கி கொண்டிருக்கிறேன் என்பது சமயங்களில் ஆயாசமாக இருக்கும். இலக்கியக் கூட்டத்திற்குப் போய், பலநாள் இரவு பகலாக முழித்திருந்து எழுதிய கட்டுரையை வாசித்திருப்பேன். ஆனால் அடுத்த நாள் நான் அணிந்திருந்த ப்ளவுஸ் குறித்த சலசலப்பு தான் ஓடிக்கொண்டிருக்கும். நான்பியூட்டி பார்லருக்குப் போறேன், வெள்ளைக் கார்ல வரேன், ஜீன்ஸ் போடறேன் என்பதெல்லாம் கூட விமர்சனமாக எழுதப்பட்டிருக்கிறது. அதை எழுதியதும் கூட ஒரு பெண் தான் என்பது நகைமுரண். பெண் பொருளாதார தற்சார்போடு தொடர்ந்து இயங்குவதையும், ரசனையாக வாழ்வதையும் , தன்னை அழகாக வைத்துக்கொளவதையும் கூட ஒழுங்குப் பிரச்சினையாகப் பார்த்து பெண்கள் தான் கடுமையாக விமர்சிக்கிறார்கள். ஆதிக்க சமூகம் பெண்களுக்கு ஏற்படுத்தும் கடும் உளவியல் சிக்கலிது. பெண்ணிய சிந்தனைகளுக்கும் ஆணின் அங்கீகாரத்தை வேண்டி நிற்கும் இந்த சிக்கலில் சக பெண் எதிரியாகிறாள். தந்தைவழி சமூகம் பெண்ணையும் பெண்ணையும் பிரித்து வைத்து தானே இத்தனை மாமாங்கமாய் கோலோச்சுகிறது.இந்த சூழலில் ஏன் தொடர்ந்து எழுத வேண்டும் என்று இதை வாசிக்கும் நீங்கள் கேட்கலாம். எல்லாவற்றையும் எழுதிக் கடக்கும் போது என்னை நானே சோர்விலிருந்தும் அவநம்பிக்கைகளிலுமிருந்தும் விடுவித்துக்கொள்ளவும் முடிகிறது. மனதில் வெறுப்பை மண்ட விடாமல், முரண்களைத் தாண்டி, காயங்களை மறந்து ஒரு முத்தத்தால் சட்டென எல்லோரையும் அரவணைத்துக் கொள்ள முடிகிற பித்து நிலையை வரம் வேண்டி தொடர்ந்து எழுதுகிறேன், இயங்குகிறேன்.
தரப்பட்ட மத அடையாளத்திலிருந்து விடுவித்துக் கொள்வது போல, சாதி அடையாளத்தை நிராகரிப்பதைப்போல, பால் அடையாளத்தையும் கட்டுடைக்கும் தேவை இருக்கிறது. ஆண் பெண் என்ற இருமை எதிர்வுகளுக்கு வெளியே பாலினத்தை ஒரு நிறப்பிரிகையாக, திரவமாக புரிந்துக்கொள்ளும் புள்ளிக்கு நகர்ந்து வந்திருக்கிறேன். திருநங்கை, திருநம்பி, இடையிலிங்கர், நடுநர், இருநர், முழுநர் என்று ஆண் – பெண் பைனரிக்கு(binary) வெளியே விளிம்பில் நிற்கும் பால் புதுமையரின்( gender queer) பக்கம் நின்று வரலாற்றை கலை – இலக்கியம் வழி திருப்பி எழுத விரும்புகிறேன். யாரும் யாருக்கும் மேலானவர்களும் இல்லை, கீழானவர்களும் இல்லை. வேறானவர்கள் என்பதை முழுமனதாக ஏற்றுக்கொண்டு அந்த வேற்றுமையை மதிக்க கற்றுக்கொள்வது பேதங்களை கடக்க உதவும். பால் வெறும் பண்பாட்டு அலகு தானே? அன்பே உலக நாகரீகம்.
– லீனா மணிமேகலை
அன்பின் பெருங்கோபக் காளி – மாஹாஸ்வேதா தேவி
நன்றி – விகடன் தடம்
2014-ம் ஆண்டு, ஒரு மழைக்கால மாலையில், கொல்கத்தா மாநகரின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பொன்றில் மஹாஸ்வேதா தேவியை சந்தித்த தருணம் அலாதியானது. “ரேப் நேஷன்”(Rape Nation) என்ற என் ஆவணப்படத்திற்காக அவரை நேர்காணல் செய்வதுதான் திட்டம். அவர் அமர்ந்து எழுதும் நாற்காலி, புத்தகங்கள் குவிந்திருக்கும் மேசை, குறிப்புகள் எடுத்து வைத்திருக்கும் நோட்டுப் புத்தகங்கள், இங்க் பேனாக்கள், அவர் பேசும்போது சுருங்கி விரியும் முகரேகைகள், கண்களின் மாறா ஒளி, கையசைவுகள் என அவரின் தரிசனத்தை நொடி நழுவாது வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்ததில், கேமிரா இத்யாதிகளை எடுத்துச் சென்றதையும், என் குழுவினரையம் சுத்தமாக மறந்துவிட்டேன். அவருடைய “திரௌபதி” சிறுகதையை மணிப்பூரின் ஆகச்சிறந்த நாடக ஆளுமைகள் கன்ஹையாலாலும் சாவித்திரியும் மேடையேற்றியதைப் பார்த்த அதே பரவசத்துடன் அந்தக் கதையை அவர் எழுதிய சந்தர்ப்பம் குறித்துக் கேட்டேன். உடனே அவர் அந்த சிறுகதை இருந்த தொகுப்பை அருகில் இருந்த அலமாரியிலிருந்து தேடி எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். “துணி என்ன துணி? யாருக்கு வேணும் துணி? என்னை நிர்வாணமாக்க உன்னால் முடியும், ஆனால் என்னை திரும்ப உடுத்த வைக்க முடியுமா? சீ… நீ ஒரு ஆம்பளையா?” என்று மஹாஸ்வேதா தேவியின் திரௌபதி தன் சிதைக்கப்பட்ட முலைகளோடு நின்று ராணுவ அதிகாரியைக் கேள்வி கேட்பதையும் “நான் பார்த்து வெட்கப்பட வேண்டிய ஆம்பளை இங்க யாருமில்ல, என்மேல் துணியைப் போட எவனையும் விட மாட்டேன். என்ன செய்வே? வா என்னை என்கெளன்ட்டர் பண்ணு” என்று ரத்தம் ஒழுகும் தன் குதறப்பட்ட உதடுகளால் அதிகாரியின் முகத்தில் துப்புவதையும் சிறுகதையின் காட்சிகளாக அவர் வங்காள மொழியில் வாசித்துக்காட்ட, அது மணிப்பூர், ஈழம், காஷ்மீர், போஸ்னியா, காங்கோ, சிரியா என உலகமெங்கும் அதிகாரத்தால் வேட்டையாடப்படும் பெண்ணுடல்களின் ஒட்டுமொத்த அசரீரியாக ஒலித்தது. 2004-ல் மணிப்பூரில் தங்ஜம் மனோரமா ராணுவத்தால் மானபங்கப்பட்டு கொல்லப்பட்டபோது, தாய்மார்கள் ஒன்றுகூடி திரௌபதிகளாக மாறி நிர்வாணப் போராட்டம் நடத்தியபோது மஹாஸ்வேதா தேவியின் வார்த்தைகளைத்தான் தங்கள் குரலாயுதங்களாகவும் கொடிகளாகவும் பயன்படுத்தினர் என்பதை நான் நினைவுறுத்தியபோது அவர் கண்கள் பனித்தன. “வேறெதற்காக எழுதுகிறோம்” என்று மெல்லிய ஆனால் தீர்க்கமான குரலில் அவர் கேட்டபோது ஒரு செவ்வியல் ஓவியம் போல என் மனதில் ஆழப்பதிந்து விட்டார். தமிழில் நான் எழுதிவருகிறேன் என்றும், 1998-ல் ஒரு கல்லூரி மாணவியாக, இயக்குநர் கோவிந்த நிகலானியின் “ஹசார் சௌரசி கி மா” திரைப்படத்தை ஒரு ஃபிலிம் சொஸைட்டி திரையிடலில் பார்த்த கணத்திலிருந்து, அவரைப் பற்றிய தேடல் தொடங்கியது என்றும் மெல்ல என்னை அறிமுகப்படுத்திக் கொண்டபோது அவரின் கைகள் என்னைப் பற்றிக்கொண்டிருந்தன. “ஆங்கில மொழிபெயர்ப்பிருந்தால் உன் கவிதைகளை எனக்கு அனுப்பிவை” என்று ஒரு சீனியரின் அக்கறையோடு கேட்டபோதுதான், ஆதர்சங்களை சந்திக்கும் கனவொன்றின் வெளியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த நான் சகஜமாகி நிஜ உலகத்திற்குத் திரும்பினேன். வந்த வேலையைப் பற்றிய பிரக்ஞை தட்ட படக்குழுவினரைத் தேடிய வேளை, அந்தி சாய்ந்து இரவு படரத் தொடங்கியிருந்தது. படப்பிடிப்பை அடுத்த நாள் வைத்துக் கொள்ள அனுமதி கேட்டபோதும் அவர் முகத்தில் அதே புன்னகை.
எழுத்து மட்டுமே ஒருவரை எழுத்தாளராக்கிவிட முடியாது என்ற என் நம்பிக்கையின் உயிர்வடிவம் மஹாஸ்வேதா தேவி என்பதை அவரை வாசிக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே உணர்ந்திருக்கிறேன். வெறும் பிரசார எழுத்து, மானுடவியல் ஆய்வுக்குறிப்புகள் என்றெல்லாம் அவரின் எழுத்துக்களை இலக்கியத்திலிருந்து சதா வெளியே தள்ளிக்கொண்டிருந்த விமர்சனங்களும் வாசிக்கக்கிடைத்தன. ‘1084 இன் அம்மா’, ‘காட்டின் உரிமை’ இரண்டு நாவல்களும் சாகித்ய அகாதெமியின் வெளியீடுகளாக சு.கிருஷ்ணமூர்த்தியின் மொழிபெயர்ப்பில் வந்திருந்தாலும், தமிழில் பொதுவாக வெளிவரும் இப்படியான மொழிபெயர்ப்பு நூல்களின் வாசிப்புத்தன்மைக்கு அஞ்சி, Breast Stories, Imaginary Maps, Old women, Outcast போன்ற அவரின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களின் உதவியை நாடினேன். எனக்கு மிகவும் பிடித்த இலக்கிய வகை (Genre) ஆவணப்புனைவு( Docu-fiction) என்பதால் மஹாஸ்வேதா தேவி விரைவில் என் ஆதர்சமானார். கடுமையாகச் சுரண்டப்படுபவர்கள், தோல்வியை ஏற்க மறுப்பவர்கள் , அதிகாரம் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்த விளிம்புநிலை ஜீவன்கள்தான் மஹாஸ்வேதா தேவியின் நாயகர்கள். நூறு நாவல்கள், இருபது சிறுகதைத் தொகுதிகள் என மனுஷி ‘காட்டு’த்தனமாக உழைத்திருப்பதைக் கண்டு மலைத்துப் போனேன். காதல் முறிவுகள், விவாகரத்து, போராட்ட வாழ்வின் தொய்வுகள், கைவிட்டுப் போன நட்புகள், தன் மகனுடனான சிக்கலான உறவு, அன்பின் போதாமைகள், தனிமை, விரக்தி என எல்லாவற்றையும் எழுதி எழுதியே கடந்தார். ஒவ்வொரு நாளும் ஒரு சத்திய வேட்கை போல சராசரி 15 மணி நேரம் எழுதிய மஹாஸ்வேதா தேவி, “என் எழுத்துக்களை நான் நாள்தோறும் சந்தித்த எளிய மனிதர்களே எழுதினார்கள்” என்று சொல்வதின் மாண்புக்கு முன் அவருக்குத் தரப்பட்ட பத்ம, ஞானபீட, மகசேசே விருதுகளும், நோபல் பரிசுக்கான பரிந்துரையும் மிகச் சாதாரணமானவையே.
இது நினைவுகள் என்னை பரிகசிக்கும் காலம்
ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழாவில் மஹாஸ்வேதா தேவியின் உரை
(மொழிபெயர்ப்பு)
“நேற்றென்பது ஆயிரத்தியொரு சாத்தியங்கள் நிரம்பியிருந்த நாளல்லவா? அதுதானே வாழ்க்கை. ஒன்றும் மாறிவிட வில்லையே? பின்பு எதற்காக, அவ்வளவு பலவீனமாகவும், சுவாரஸ்யமற்றும், அதிபயங்கரமான வெறுமையுணர்வோடும், மலேரியா காய்ச்சல்போல இந்த நாள் பரவ வேண்டும்? ஏனெனில் எல்லாவற்றையும்விட மோசமானது தனிமை”
மீள வாழ்தல்
வார்த்தைகள். வேதனையில் இருக்கும் எழுத்தாளரிடமிருந்து பிறந்தவையா என எனக்குத் தெரியாது, ஆனால் அறிவேன். என்னுடைய தொண்ணூறாவது வயதில், மீள வாழ வேண்டும் என்ற எனது வேட்கை விஷமமானது. அதிசயங்களின் வலைகளில் சிக்கிய பட்டாம்பூச்சிகள் என்ற பாடல் வரியைப் போன்று எனது ஆயுளும் ஒரு விருப்ப வேட்கைதான். இது ஒரு பக்கம் இருக்க, எதிர்பார்த்ததைவிட அளவுக்கு அதிகமான நாட்கள் வாழ்வதின் பேரில், எவ்வளவு சேதங்களை ஏற்படுத்தியிருக்கிறேன் என்று சற்று நினைத்துப்பார்க்கிறேன். எண்பத்தியேழு வயதில், என் முன்னெடுப்புகள் அநேகமும் நிழல்களை நாடிய பின்வாங்கல்கள்தாம். அபூர்வமாகவே சூரிய தரிசனம். இளம் வயதுப் பெண்ணாக, தாயாக, நான் ஒருபோதும் முதுமைக்குப் பின்வாங்கியதில்லை. சில சமயங்களில் முதியவளாக, பார்வை மங்கியவளாக, காது சரியாகக் கேளாதவளாக நடித்துக்காட்டி என் மகனைச் சிரிக்க வைத்ததுண்டு. கண் கட்டி ஆடும் விளையாட்டென, காற்றில் கைகளைத் துழாவி நினைவுகளைப் பரிகசித்திருக்கிறேன். கண நேரத்திற்குள், அதிமுக்கியமான விஷயங்களை மறந்திருக்கிறேன். அன்றைய வேடிக்கைகளிலிருந்து இன்றைக்கு இங்கு நகர்ந்துவந்திருக்கிறேன். வாழ்க்கை ஒரு மீள் செயல். நான் என்னை மீட்டுக்கொள்கிறேன். நடந்தவைகளில் இருந்து, நடந்திருக்கக் கூடியவையிலிருந்து, நடக்காததிலிருந்து என்னை மீட்டெடுத்துக்கொள்கிறேன்.
இது நினைவுகள் என்னைப் பரிகசிக்கும் காலம்
பல எழுத்தாளர்கள், என் கதைமாந்தர்கள், நான் நேசித்து, கூடியிருந்து, இழந்த மனிதர்கள் எல்லோரும் ஆவிகளாக எனக்குள் தங்கி வாழ்கிறார்கள். குடியிருப்பவர்களின் அந்தரங்க உரையாடல்களைச் சதா கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு பழைய வீட்டைப்போல சில சமயங்களில் என்னை உணர்கிறேன். அது ஒன்றும் பெரிய பாக்கியமல்ல.
ஆனால் ஒருவர், வலிமையின் இறுதியில் தான் நிற்பதாய் உணரும்போது என்ன நடக்கும்? வலிமையின் இறுதியென்பதோ என்றும் முற்றுப்புள்ளியல்ல. ரயிலில் இருந்து இறங்க வேண்டிய கடைசி நிறுத்தமுமல்ல. சற்று வேகம் தாழ்த்துதல் என்று வேண்டுமானால் சொல்லலாம்; உயிர் ததும்பிநிற்கும் தருணம் அது; “நீ தனிமையில் இருக்கிறாய்” என்ற அசரீரி.
நான் பிறந்து வளர்ந்த சூழலில், இன்றைய என் பரிணாம வளர்ச்சியை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். நான் வீட்டிலேயே மூத்தவள். அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த மற்றவர்களுக்கு எப்படி என்று தெரியவில்லை. என் முதல் பாலியல் அனுபவத்தை என் குடும்பத்திற்குள்தான் பெற்றேன். இளம்பிராயத்தில் இருந்தே நான் பாலியல் வசீகரத்தோடு இருந்தேன். மற்றவர்கள் சொல்வது ஒருபுறம் இருக்க, நானும் அப்படித்தான் என்னை உணர்ந்தேன். தாகூரால் மிகவும் ஈர்க்கப்பட்ட காலங்கள். சாந்திநிகேதனில் படிக்கும்போது காதலில் விழுவதும் எழுவதுமான ஆர்வத்துடிப்பு நிறைந்தவளாய் இருந்தேன். பதின்மூன்று வயதில் இருந்து பதினெட்டு வயதுவரை என் தூரத்து உறவுப் பையன் ஒருவனைத் தீவிரமாகக் காதலித்தேன். தற்கொலை மனோபாவம் கூடிய குடும்பப் பின்னணியில் வந்ததால் அவனும் தற்கொலை செய்து இறந்துபோனான். ஆனால் எல்லோரும் என்னைத்தான் குற்றம் சாட்டினார்கள். நான் அவன் அன்பை மறுதலித்ததால் தன்னுயிரை மாய்த்துக்கொண்டான் என்று சொல்லிக் காட்டினார்கள். ஆனால் அது உண்மையல்ல. அப்போது நான் கம்யூனிஸ்ட் கட்சியோடு நெருக்கமாக இணைந்து வேலை செய்துகொண்டிருந்தேன். நேசித்தவன் வீணாகத் தன் உயிரைப் போக்கிக்கொண்டது என்னுள் மரணஅடியாக இறங்கியது. மொத்தக் குடும்பத்தின் சுட்டுவிரலும் என்னை நோக்கி நீண்டிருந்தது. பதின்வயதுகளில் தன் உடலின் கவர்ச்சியைக் குறித்த எந்தக் கவனமும் இல்லாத இந்தப் பெண்ணை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று என் பெற்றோர்களும் உறவினர்களும் மனம் கசந்தனர்.
எல்லாமும் ஏதோ ஒரு வகையில் அழுந்தப்பட்டிருக்கும் நடுத்தர வர்க்கத்தின் ஒழுக்க நெறிகள் பெரும் மோசடியானவை.
எழுத்துதான் என் நிஜமான உலகம். நான் முன்னும், பின்னுமாக வாழ்வதும், மீள்வதும் அங்குதான். நான் எழுதும்முறை விசித்திரமானது. எழுதுவதற்கு முன் எக்கச்சக்கமாகச் சிந்திப்பேன். குழம்பித் தவிப்பேன். மூளையில் படிகம் போல தெளிவாக எழுத்து உருவாகும்வரை அதனுடன் மல்லுக்கட்டுவேன். ஓயாது ஆய்வுகள் செய்வேன். மக்களைச் சந்திப்பேன், பேசுவேன், குறிப்புகள் எடுத்துக்கொள்வேன். முடிச்சுகள் ஒவ்வொன்றாய் அவிழ சேகரித்தவற்றையெல்லாம் விரித்து எழுதுவேன். அதற்குப்பின் பெரும்பாலும் நான் நிறுத்துவதில்லை. நான் வாசித்ததும், நேரடி அனுபவங்களும், ஞாபகங்களும், தேடிப்பெற்ற தகவல்களும் எழுதும்போது கைக்கொடுக்கும். எங்கு சென்றாலும், என் மனம் எழுத்தையே திட்டமிட்டுக் கொண்டிருக்கும். கூடவே மறதியும் உண்டு. உண்மையில் நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன். யாருக்கும் நான் கடமைப்பட்டவளில்லை. சமூகத்தின் எந்த சட்டதிட்டங்களும் என்னைக் கட்டுப்படுத்த முடியாது. நான் விரும்பியதைச் செய்தும், வேண்டியதை எழுதியும், நினைத்த இடங்களுக்குச் சுற்றியும் வந்திருக்கிறேன்.
நான் சுவாசிக்கும் காற்று வார்த்தைகளால் நிறைந்தது.
எடுத்துக்காட்டாக, ‘பர்னானர்’ என்ற வார்த்தை பலாசு மரத்தால் ஆனது. இது ஒரு வினோதமான சடங்குமுறையைக் குறிக்கும் சொல். ஒரு மனிதன் ரயில் விபத்தில் இறந்துவிட்டால், சடலத்தை வீட்டுக்குக் கொண்டுவர முடியாத சூழலில், அவனது உடலைப் பலாசு மரத்தின் இலைகளால் செய்து ஈமச்சடங்குகளை முடிக்கிறார்கள்.
’பாப் புருஷ்’ கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது ஒரு நாட்டுப்புற நம்பிக்கையைக் குறிக்கும் சொல். நித்திய ஜீவனாக சபிக்கப்பட்ட அவன், மறைவான், தோன்றுவான். மற்றவர்களின் பாவங்களைக் கண்காணிப்பான். சின்னச் சின்ன மீறல்களையும் கணக்கு வைத்துத் தண்டிப்பான். ஒரு ஆட்டுக்குட்டியைக்கூட கொளுத்தும் வெயிலில் கம்பு ஒன்றில் கட்டிப்போட்டு தண்ணீரோ தீவனமோ காட்டாது தண்டிப்பான். உண்மையில் பாப் புருஷ் என்பவர் ஒரு நபராக இருக்க முடியாது. அச்சொல் ஒரு குறியீடுதான்.
வங்காள மொழியில்தான் எவ்வளவு அழகழகான சொற்கள். ‘சோரத்’ என்றால் பலகை என்று பொருள். தக் சங்கராந்தி. தக் என்றால் சதா விழிப்புநிலையில் இருப்பது. மனம் விழித்திருப்பவர்களுக்கு மட்டும்தான் ஒரு குரல் கேட்குமாம். ‘இன்று புதியதொரு நாள், என்ன செய்ய காத்திருக்கிறாய், செய்ய வேண்டியவற்றை எல்லாம் செய்து முடித்தாயா’ என்றெல்லாம் அந்தக் குரல் கேள்வி கேட்குமாம்.
‘கர்பா தான்’ என்ற சொல் மிக சுவார்ஸமானது. கர்ப்பமாக இருக்கும் பெண்ணின் கருவிடம், ‘நீ பெண் குழந்தையாகப் பிறந்தால் இந்தந்தப் பரிசுகளைத் தருவேன்’ ‘நீ ஆண் குழந்தையாகப் பிறந்தால் அந்தந்த பரிசுகளைப் பெறுவாய்” என்று உறுதி கூறுவதைத்தான் ‘கர்பா தான்’ என்று குறிப்பிடுகிறார்கள். கருவில் இருக்கும் குழந்தை இதைக் கேட்டுக்கொண்டு இருப்பதாகவும், பிறந்ததும் பரிசளிப்பதாகச் சொன்னவர்களைத் தேடி அதற்குரியவற்றை கேட்டு வாங்கிக்கொள்ளும் என்றும் மக்கள் மத்தியில் நம்பிக்கை இருக்கிறது .
நமது நாட்டில் சுவையான கதைகளுக்கும் சொற்களுக்கும் பஞ்சமே இல்லை. மகாராஷ்டிராவின் பார்தி பழங்குடிகளை எடுத்துக்கொள்ளுங்கள். பார்தி சமூகத்தில் பெண்குழந்தைக்கு ஆக வரவேற்பு. கருவுற்றிருக்கும் பெண்ணின் கணவன், பிறக்கப்போகும் குழந்தை பெண் என்றால் இவ்வளவு விலை என்று ஏலம் விடுவது நடைமுறையில் இருக்கிறது. பேட் கி பாஜி என்பார்கள். கருவின் கனியை ஏலம் விடுவதை, நிலம் கோரே டிச்சே என்று அழைக்கிறார்கள்.நரகத்திற்கு நிறையப் பெயர்கள் இருக்கின்றன. ‘ஓஷி பத்ரா பென்’ என்ற பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும். ஓஷி என்றால் வாள். பத்ரா என்றால் வாள்போன்ற இலைகள். இறந்துபோன ஆன்மா, தான் செய்த பாவங்களுக்காக, வாள் இலைகள் நிறைந்த காட்டுக்குள் கிழியக் கிழிய நடந்துபோகவேண்டும் என்ற மொத்த அர்த்தத்தையும் ‘ஓஷி பத்ரா பென்’ தனக்குள் தேக்கி வைத்திருக்கிறது.என்னைப் பாதிக்கும் சொற்களைக் கடக்கும்போதெல்லாம், அவற்றைக் குறித்துவைத்துக்கொள்வேன். எத்தனை எத்தனை நோட்டுப் புத்தகங்கள். கோட்டோ கதா. எண்ணிலடங்கா வார்த்தைகள், எண்ணிலடங்கா ஒலிகள். நான் வார்த்தைகளைக் கர்மசிரத்தையாகச் சேகரிப்பவள்.
கனவு காணும் உரிமை
நீண்ட காலமாக ஒன்றைக் குறித்து எழுத வேண்டும் என்று சிந்தித்து வருகிறேன். உலகமயமாக்கலின் கோரங்களை எப்படிச் சமாளிப்பது? ஒரு மையமான இடத்தில் துண்டு நிலத்தைக் கைப்பற்றி, புற்களால் அதை மூடி அங்கு ஒரு ஒற்றை மரத்தை நடலாம். அதில் உங்கள் மகனின் சைக்கிள் ஒன்றைக் கிடத்தலாம். ஒரு ஏழைக் குழந்தை அங்கு வந்து சுதந்திரமாக விளையாடட்டும். அந்த மரத்தின் கிளைகளில் பறவைகள் வந்தமரட்டும். சின்ன ஆசைகள்; சின்ன கனவுகள். நம் எல்லோருக்கும் உண்டு தானே?
எப்போதும் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வை, பண்பாடுகளை எழுதிவருவதாக பேசுகிறேன். அதில் எவ்வளவு உண்மை, அல்லது பொய் அல்லது அதிகப்படி என்று எனக்குத் தெரியவில்லை. மேலும் மேலும் சிந்தித்து எதையும் விளக்குவதற்கு முற்படுகையில் திண்டாடிப்போகிறேன். தயக்கமும் தடுமாற்றமும் என்னை ஆட்கொள்கின்றன. நம்மைப் போன்ற தொன்மையான மூத்தப் பண்பாடுகள் நிறைந்த சமூகத்தில், எனது நம்பிக்கை என்பது ஒன்றே ஒன்றுதான். அது மனிதநேயம் மட்டும்தான். பரஸ்பர உரிமைகளை ஒருவருக்கொருவர் கண்ணியத்தோடு ஏற்றுக்கொள்ளும் மாண்பு.
மனிதர்களுக்குக் காண வேண்டியவற்றைக் காண்பதற்குக் கண்கள் இல்லை. ஆனால் வாழ்நாள் முழுவதும் எளிய மனிதர்களின் மிக எளிய கனவுகளை நான் கண்டுவருகிறேன். அவர்கள் தங்கள் கனவுகளை எல்லாம் பத்திரமாகப் பூட்டி வைத்திருக்கிறார்களோ எனத் தோன்றும். ஆனால், அவற்றில் சில தப்பித்திருக்க வேண்டும். சிறைக் கம்பிகளை உடைத்து வெளியேறியிருக்க வேண்டும். பதேர் பாஞ்சாலி நாவலில், ஓடும் ரயிலை கண்கள் விரிக்கப் பார்த்துக்கொண்டிருக்கும் துர்கா. தூக்கத்திற்காக ஏங்கும் ஒரு முதிய பெண். நீண்ட காத்திருப்புக்குப் பின் தனக்குரிய பென்ஷன் பணத்தைப் பெற்றுவிடும் ஓய்வுபெற்றவர். காட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் எங்கு செல்வார்கள்? அவர்களின் போக்கிடம் என்ன? நக்சலைட்டுகள் செய்த குற்றம் என்ன? அவர்கள் கனவு காணத் துணிந்தவர்கள். அவர்களின் கனவுகளிலிருந்து அவர்களை விலக்குவதற்கும் அனுமதிப்பதற்கும் நாம் யார்? இப்படிப்பட்ட சாதாரணர்களின் சாதாரண அபிலாஷைகள்தான் எனக்கு முக்கியம்.
கனவு காணும் உரிமையே அடிப்படையானதென பல வருடங்களாக, தொடர்ச்சியாக, அழுத்தம் திருத்தமாக நான் சொல்லிவருகிறேன்.
கனவு காண்பதற்கான உரிமை! வாழ்விலும் இலக்கியத்திலும், இதுவே என் முழுமுதல் போராட்டம்.
சதா பிரதியின் ஜட்டியைக் கழட்டிப் பார்க்கும் அறிவுலகில் என்ன உரையாடுவது – பறை நேர்காணல்
பறை இதழில் வந்த நேர்காணல் நன்றி – நவீன், பாலமுருகன்
17/11/2014
கவிஞர், இயக்குனர், களப்பணியாளர் என இடையறாது இயங்கிக்கொண்டிருப்பவர் லீனா மணிமேகலை. கடந்த பத்து வருடங்களாக மாற்று சினிமாக்களையும் ஆவணப்படங்களையும் உருவாக்கி வருபவர். எளிய மக்களின் பங்களிப்பைக்கொண்டே அதன் உச்சமான சாத்தியங்களில் மக்கள் பங்கேற்பு சினிமாக்களை உருவாக்குபவர். இடதுசாரிக் குடும்பச் சூழலில் வளர்ந்த லீனா இன்று பெரியாரியம், அம்பேத்காரியம், க்யுயர்(Queer) பெண்ணியம், என தனது பார்வைகளை வளர்த்தெடுத்து முன்னே செல்பவர். தனது கருத்துகளை எழுத்தின் மூலமும் காட்சி ஊடகங்களின் வழியேயும் வெளிப்படுத்தி வருகிறார். ‘செங்கடல்‘ என்ற முழு நீள திரைப்படத்தையும், வெள்ளை வேன் கதைகள், தேவதைகள், பெண்ணாடி, பலிபீடம் என பத்திற்கும் மேற்பட்ட ஆவணப் படங்களையும், நான்கு கவிதை தொகுப்புகளையும் வெளியிட்டிருக்கிறார். சிகாகோ பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைப் பேராசிரியர் ஸாஷா எபிலிங்கால் இவரின் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு புத்தகமாக வெளிவரவிருக்கின்றது. “கூத்திச்சிகளோட ராணி” என்ற தலைப்பில் மலையாளத்திலும் இவரின் கவிதைகள் வெளிவந்திருக்கின்றன.
உங்களின் கலை வெளிப்பாட்டிற்கான முதல் தருணத்தை நினைவு கூற முடியுமா?
லீனா மணிமேகலை: வயதுக்கு வந்த நேரம். என் அம்மா அருகில் இல்லை. கிராமத்திற்கு ஏதோ காது குத்திற்குப் போயிருந்தார். அப்பாவிடம் கிலி பிடித்த குரலில், “பாவாடையெல்லாம் ஒரே ரத்தம்,” என்று சொன்னேன். ‘வெரிகுட்‘ என்றவர் அம்மாவுக்குத் தொலைபேச மொத்தக் குடும்பமும் பரபரப்பாக கிளம்பி வந்து கேட்ட ஒரே கேள்வி, ‘நீ ரத்தத்தை முதன்முதலாக எப்ப பார்த்தாய், சரியான நேரத்தை சொல்லு, சாத்திரம் எழுதனும்’ என்பதுதான். இன்று வரை இதற்கு என்னிடம் பதிலில்லை. அப்புறம் அவர்களாகவே என் அப்பாவிடம் சொன்ன நேரத்தை வைத்து ஏதோ கணித்து ஜோசியருக்கு நோட்டு எழுதினார்கள். உங்கள் கேள்வி இதைத்தான் நினைவுக்கு கொண்டு வருகிறது.
உங்களின் தொடக்ககால எழுத்தின் வகை என்னவாக இருந்தது? இன்றைய மனநிலையில் அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
லீனா மணிமேகலை: பெரும்பாலும் முதல் காதல், அந்த காதல் தந்த முத்தம், ஆண் பெண் உறவு, இருப்பு குறித்தானவை குழந்தைப் பருவ வாசம் கூடியவை. என் சதுரகிரி மலை போல, அத்தியாறுபோல, புன்னை மரம் போல, மாவூத்து போல நூற்றாண்டுகள் கடந்து நிற்கும் ஒரு சொல்லை எழுதிவிட வேண்டும் என்ற வேட்கை கூடிய முயற்சி. அந்தந்த காலக்கட்டங்களின் சாட்சிதானே எழுத்தும். ஒருவித தூய நம்பிக்கைகள் நிறைந்தது என் தொடக்ககாலம் என்று இப்போது நினைத்துப் பார்த்தால் தோன்றுகிறது.
பெரும்பாலும் ஆண்களே இயங்கிக் கொண்டிருக்கும் இலக்கியத்திலும் திரையிலும் நீங்கள் மிகத் தீவிரமாகவே இயங்கி வருகிறீர்கள். தொடக்கத்தில் அதன் சவால்கள் எத்தகையதாக இருந்தன?
லீனா மணிமேகலை: பிறந்த குழந்தையை ஆணா, பெண்ணா என்பதை இடுப்புத் துணியை விலக்கிப் பார்த்து தெரிந்து கொள்வார்கள். அதே மனநிலைதான் இலக்கியத்திலும், கலைத்துறையிலும் நீடிக்கிறது. சதா பிரதியின் ஜட்டியைக் கழட்டிப் பார்க்கும் அறிவுலகில் என்ன உரையாடுவது, எங்கிருந்து உள்ளேறுவது, எப்படி இயங்குவது என்பதை துப்புத் துலக்கி கொண்டிருக்கிறேன். கிடைத்தால் சொல்கிறேன். மற்றபடி ஆண் பெண் இருமை எதிர்வுகள் அடிப்படையில் இனியும் படைப்புலகம் இயங்குவது அபத்தமானது. ஆபத்தானது. ஆண் மையப் பார்வை பாலின சிறுபான்மையினரை மறுதலிக்கும் பார்வையும் கூட.
இலக்கியத்திற்கான அல்லது திரைப்படத்திற்கான உங்கள் தொடக்ககால ஆயத்தங்கள் அல்லது பயிற்சிகள் பற்றி கூறுங்கள்?
லீனா மணிமேகலை: உரையாடலில் எனக்கு தீவிர மோகம். அதுவே என் இன்றைய எல்லா ஆயத்தங்களின் அடிப்படையும். பலவிதமாக, பல்வேறு உயிர்களிடம், என்னை சுற்றியுள்ள இருப்புடனும், இன்மையுடனும், உரையாடும் முயற்சியாக எழுத்து, பிம்பம், எண்ணம், செயல், கருத்து, அரசியல், வாசிப்பு, பிரக்ஞை, இன்ன பிறவையையும் பார்க்கிறேன். சினிமாவுக்கென்ன நூற்று சொச்சம் வயதுதானே ஆகிறது. எழுத்துக்கு வயது சில ஆயிரங்கள் சொச்சம். மனித வாழ்வுக்கு நாற்பதாயிரம், ஐம்பதாயிரம் வயதென்கிறார்கள். தொழில்நுட்பம் எதுவும் வசப்படாதபோதும் உரையாடிக்கொண்டுதானே இருந்தோம். புதிய சொல்லென்பதோ, பிம்பமென்பதோ ஏதுமில்லை. நினைவோடையின் ஒரு கூழாங்கல்லைப் பொறுக்கியதோடு, அதைக்கொண்டே என் கண்ணாடியை அடித்து உடைக்காத வரை ஒரு புதிய உரையாடலை தொடங்கியபடி இருப்பேன்.
தொடக்ககால ஆயத்தங்கள் என்று சொல்லப் போனால், என் பள்ளிப் பருவத்தில் கம்யூனிஸ்ட் மேடைகளில் இயக்கப் பாடல்கள் பாடிக்கொண்டிருந்த காலகட்டத்தில், பாடியே புரட்சியை கொண்டு வந்துவிடலாம் என்று தீவிரமாக நம்பியிருக்கிறேன். மணிக்கணக்கில் தலைவர்கள் பேசி மக்களை கலைக்கிறார்கள், என் பாடலில் மக்களைத் திரட்டி ஒன்றுபட வைக்க முடியும் என்ற உறுதியோடுதான் சொற்களைப் போட்டு எழுதி பாடித் திரிவேன். தோழர்கள் கே.ஏ.குணசேகரனும், எம்.பி.சீனிவாசனும் தான் புரட்சிகர இந்தியாவை சாத்தியமாக்கக் கூடியவர்கள் என்று தோன்றும். சொற்களின் மீதும், இசையின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கையை ஏற்படுத்தியது என் பள்ளி பருவ இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கலை இலக்கியப் பெருமன்ற மேடைப் பாடல்கள்தாம். பாரதி, பாரதிதாசன் போன்று மக்கள் கவியாக வேண்டும் என்ற கனவுமிருந்தது. அவையில் பேச்சாளியாய், என் முன்னே கூடியிருக்கும் பார்வையாளர்களுக்கு முன் “அறிவை விரிவு செய், அகண்டமாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை” என்று பாரதிதாசனாய் உறுமும் போது கவிதையில் கட்டுண்டிருந்தது என் குழந்தை மனம்.
பொறியியல் கல்லூரி காலங்களிலும் தமிழ்த்துறை மாணவி போல போய் வா கடலலையே என்று கவிதை எழுதிக்கொண்டு கவியரங்கங்களில் பங்குகொண்டு அலைவதை வகுப்புத் தோழர்கள் கேலியும் கிண்டலும் செய்வார்கள். தொழில்முறை படிப்பென்பதால் கடுமையான கெடுபிடிகள் இருக்கும். வகுப்புகளை, செயல்முறை பட்டறைகளை நண்பன் ஒருவனுக்கு கவித்துவமான காதல் கடிதம் எழுதுவதற்காகத் தியாகம் செய்திருக்கிறேன். பின்னாளில் இலக்கியத்தைத் தேர்வு செய்தது, கவிதையைத் தீவிரமாகப் பயற்சி செய்ய வேண்டிய துறையாகவும் மேற்கொண்டது, என்பதெற்கெல்லாம் வித்தாக என் பதின்மபருவ ஆர்வங்களும் நம்பிக்கைகளும் இருந்திருக்க முடியும்.
கி.மு, கி.பி என்பதுபோல எனக்கும் அப்பாவிற்கு முன், அப்பாவிற்குப் பின் என்ற காலகட்டங்கள் உண்டு. என் அப்பா தமிழ்ப்பேராசிரியர். இயக்குனர் பாரதிராஜாவின் திரைப்படங்களில் முனைவர் பட்டம் பெற்றவர். எங்கள் வீட்டு வி.சி.பியில் சதா பதினாறு வயதினிலேயும், நிழல்களும், கிழக்கே போகும் ரயிலும் ஓடிக் கொண்டே இருக்கும், ஃபிலிம் சொசைட்டி திரையிடல்களில் அப்பா மடியில் தூங்கியது போக பார்த்த படங்களும் நிழல் நினைவுகள். சினிமாக் கட்டுரைகளை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்துத் தரச்சொல்லுவார் அப்பா. திக்கித் திணறி அகராதியைக் கிழித்து தோராயமாக செய்து தருவேன். வாயில் நுழைய முடியாத சினிமா சொல்லாடல்கள் மனதில் சும்மா பெயருக்காவது பதிந்தது அப்போது. மற்றபடி அப்பா தேர்வு செய்யும் படங்களைதான் நான் திரையரங்குகளில், அதுவும் அவரோடுதான் போய் பார்க்க முடியும். வளர்ப்பில் அவர் ரொம்ப கறார்.
கல்லூரிக் காலங்களில் மாணவர் இயக்கங்களோடு இணைந்து கிராமங்களில் தெரு நாடகங்கள் போட்ட அனுபவமும் அது தந்த பாடங்களும்தான் மக்கள் சினிமாவை நோக்கி என்னைத் தள்ளியது எனலாம். பின்னர் வெகுஜன சினிமாவில் இயக்குனர்கள் பாரதிராஜாவோடும், சேரனோடும் கூட பெரிதும் ஒவ்வாமல் தொடர்ந்து வேலை செய்ய முடியாமல் போனது கூட தற்செயலானதல்ல. நானறிந்த சமூகமாக சினிமா இல்லை என்பதும் ஒரு நிலப்பிரபுத்துவ அமைப்பாக சினிமா துறை எனக்கு தெரிந்ததும், எனக்கான தனியான சினிமா பயணத்தைத் தொடங்கினேன்.
எது உங்களின் சிந்தனை பரிணாமத்திற்குக் காரணமாக இருந்தது?
லீனா மணிமேகலை: எம் சமூகத்தில் ஏன் சிலருக்கு மட்டும் உணவு கிடைக்கிறது? ஏன் பலரின் உயிருக்கு மதிப்பில்லை? ஏன் ஒரு சாரார் மட்டும் சமமாக நடத்தப்படுவதில்லை? ஏன் ஒடுக்கப்படுகிறார்கள்? இந்த ஏற்றத்தாழ்வின் திட்டங்களை யார் தீட்டுகிறார்கள்? என்ற கேள்விதான் நம் எல்லோருடைய சிந்தனைக்கும் வித்தாக இருக்க முடியும் என்று நம்புகிறேன். பெரிய தத்துவங்கள்,கருத்தியல்கள், வரலாறுகள் எல்லாம் அடிமை என்றொருவர் இருப்பதால்தானே இருக்கின்றன.
இலக்கியத்தில் அல்லது இயக்கத்தில் யாரை முன் மாதிரியாகக் கொள்கிறீர்கள்?
லீனா மணிமேகலை: கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையும், பெண் ஏன் அடிமையானாள் புத்தகமும் படிக்க கிடைக்காமலிருந்திருந்தால் இவ்வளவு இறுமாப்போடு உங்களோடு உரையாடிக் கொண்டிருக்கமாட்டேன். பெரியார் என்ற கிழவன் இல்லையென்றால், பெண் என்பவளுக்கு இருப்பு மட்டுமல்ல, நினைவே மறுக்கப்பட்ட ஒரு சமூகத்தில் அவ்வையாரையும், வெள்ளிவீதியாரையும், காரைக்கால் அம்மையையும், ஆண்டாளையும், முத்துப்பழநியையும், இன்னும் என் மூதாய்களை தேடிப் பகுத்து அறிந்துகொண்டிருக்க மாட்டேன். என் முன்னோரை தெரிவு செய்யும் வாய்ப்பு இல்லையென்றாலும், என் முன்னோடியாகப் பெரியாரை தெரிவு செய்திருக்கிறேன்.
இடதுசாரி குடும்ப பின்னணி என்பதால் கார்க்கியின் தாய் நாவல்தான் நான் வாசித்த முதல் இலக்கியப் பிரதி. புரட்சியில் இளைஞர்கள், ஜமீலா, முதல் ஆசிரியன், செம்மணி வளையல் போன்ற சோவியத் இலக்கியமும், தாமரையும், பாரதி –பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனாரும் என் தந்தை எனக்கு அறிமுகப்படுத்திவை. கல்கியும், சாண்டில்யனும், பாலகுமாரனும், ரமணிசந்திரனும் என் அம்மாவின் அலமாரியில் திருடியவை. சுயதேர்வு வந்த பிறகு ஜெயகாந்தனும்,அம்பையும்தான் என் ஆதர்ச எழுத்தாளுமகள். சந்திக்கிற ஆண்களில் ஹென்றியைத் தேடும் நோய் பிடித்து ஆட்டிய காலம் என் பதின்ம பருவம். அம்பையின் சிறகுகள் முறியும் படித்துவிட்டு நிம்மதியில்லாமல் வெறிபிடித்து அலைந்த இரவுகள் அநேகம். சிறுகதையில் மாண்டோ பெரியவனா, கடவுள் பெரியவனா என வியந்ததுண்டு. கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், புதுமைப்பித்தன், ஜி.நாகராஜன், அசோகமித்திரன், லா.ச.ரா,வண்ணநிலவன், வண்ணதாசன், ஆதவன், சுந்தர ராமசாமி போன்றோரை முறையாக வாசித்தது ஜெரால்டோடு கூடிய நட்பு காலத்தில்தான். தமிழ் மாணவரென்பதால் ஜெரால்டு காதல் நிமித்தம் என் நூலகராகவும் உதவி செய்தார்.
கவிதையில் பிரமிள், கலாப்ரியா, ஆத்மநாம், சி. மணி, நகுலன், பிரம்மராஜனின் மொழி பெயர்ப்புகள், சுகுமாரன், மனுஷ்யபுத்திரன், யவனிகா ஸ்ரீராம், ஹெச்.ஜி, ரசூல், ரிஷி, சுகந்தி சுப்ரணியன் என்று ஒரு வாசிப்பு தடம் எனக்குண்டு.
ஈழ இலக்கியத்தில் புனைவில் ஷோபா சக்தியும், யோ.கர்ணனும், கவிதையில் சேரன், கருணாகரன் வ.ஐச.ஜெயபாலன், சிவரமணியும், கட்டுரைகளில் அ.முத்துலிங்கமும் மொழியியலில் நுஃமானும் எனக்கு நெருக்கமானவர்கள்.
ஆங்கிலம் வழி தாஸ்தாவெஸ்கி, டாட்ஸ்டாய், பாமுக், மார்குவெஸ், கமலா தாஸ், மஹாஸ்வேதாதேவி, அருந்ததி ராய், அமிதவ் கோஷ், ருஷ்டி, கிரண் தேசாய், காலத் ஹுஸைனி, சில்வியா பிளாத், செக்ஸ்டன், சிக்சூ, உல்ஃப், கேதெ ஆக்கர், அக்மதோவா, கொலண்டாய், ட்ரின் மின்ஹா,காஃப்கா, ஜெர்மைன் க்ரீர், ஜூன் ஜோர்டன், மாயா ஏஞ்சலோ, அனாய்ஸ் நின், அலைஸ் முன்ரோ,அலைஸ் வாக்கர், நபகோவ், பாமுக்,முராகாமி, அமெரிக்க பீட்ஸ் தலைமுறை எழுத்தாளர்கள் ஆகியவர்களையும் தரிசித்ததுண்டு.
சம காலத்தில், நான் மிக நேசிக்கும் கவிஞர்கள் லஷ்மி மணிவண்ணன், பாலை நிலவன், கண்டராதித்தன், செல்மா ப்ரியதர்ஷன், இசை, இளங்கோ கிருஷ்ணன், தூரன் குணா, சபரி, வெயில்,நரன், சிறுகதை எழுத்தாளர்கள் அசதா, அழகிய பெரியவன், ஆதவன் தீட்சண்யா, பாலா, நாவலாசிரியர்கள் பாமா, ஜோ.டி.குரூஸ், ஜாகிர் ராஜா.
திறனாய்வில் பிரம்மராஜனும், எஸ்.சண்முகமும், சி.மோகனும் நான் கவனமாக வாசிப்பவர்கள். அ.மார்க்ஸின் கட்டுரைகள் என்றென்றைக்கும் என்னை ஒரு கலகத்திற்கு தயார்படுத்திக்கொண்டேயிருக்கும் உந்துசக்தி. சாஹிப் கிரான் சுயத்தை இழந்து அன்பிற்காக நிற்கும் என் இலக்கிய தோழமை.
இப்படி எல்லோரும், எல்லாமும் என்னை ஏதோ வகையில் தொடர்ந்து இயங்க வைக்கும் முன்மாதிரிகள் தாம்.
இயக்குனர் அல்லது கவிஞர் எனும் ஆளுமைகளைத் தவிர்த்து வேறெந்த மாதிரியான செயல்பாடுகளில் ஈடுபடுகிறீர்கள்?
லீனா மணிமேகலை: இலக்கியம் மற்றும் சினிமா வாசிப்பும், பயணமும், கலை–கோட்பாடு குறித்த உரையாடல்களில் ஒரு மாணவியாகப் பங்கேற்பதும், திரைப்பட விழாக்களுக்கு செல்வதும், அரசியல் கட்டுரைகளை தமிழிலும், ஆங்கிலத்திலும் தேடி விரும்பி படிப்பதும் தவிர மிச்ச நேரத்தில்தான் எழுதுவதும், திரைப்படங்கள் உருவாக்குவதிலும் செலவிடுகிறேன். மாற்று சினிமா களத்தில் இந்தியா முழுவதும் தீவிரமாக பயணம் செய்து, சுவாதீன மற்றும் ஆவணப்பட இயக்குனர்களோடு கொண்டுள்ள நட்பும், அவர்களோடு தணிக்கைக்கெதிரான, கருத்துச் சுதந்திரத்திற்கான போராட்டங்களில் இணைந்து செயல்படுவதும் எனக்கு உத்வேகம் அளிப்பவை. பெண்ணிய உரையாடல்களிலும் கேரள, வங்காள கன்னடத் தோழமைகளோடு பங்குபெற்றிருக்கிறேன். தமிழகத்திலும் மற்ற மாநிலங்களிலும் இருக்கும் பல்கலைகழகங்களுக்கு, கல்லூரிகளுக்கு, பள்ளிகளுக்குத் தொடர்ந்து பயணித்து ஆவணப்பட திரையிடல்களும், சாதி–பெண்ணியம்– கலாசார அரசியல்–சுற்றுப்புறச்சூழல் குறித்த கலந்துரையாடல்களும் செய்ததில் நான் கற்றுக்கொண்டது ஏராளம்.
என் ஆவணப்படங்களைத் திரையிடுவதற்காக தமிழகத்தின் கிராமங்கள் தோறும் சென்றதும் மக்களை சந்தித்து உரையாடியது, விவாதித்தது, அவர்களின் கவலைகளை, நம்பிக்கைகளை, அனுபவங்களை, கோபங்களை, ஆதங்கங்களைப் பகிர்ந்துகொண்டதும் நான் கற்ற சிறந்த கல்வி. பள்ளி, பொறியியல் கல்லூரி படிப்பைவிட என் சமூகம் பற்றிய புரிந்துணர்வை ஆவணப்படங்கள் மூலம் மக்களோடு உரையாடியதன் வழியேதான் பெற முடிந்தது. கருத்தியல் ரீதியாகவும், மார்க்சியம், தலித்தியம், பெண்ணியம் போன்றவற்றை கோட்பாடாக படிப்பதைவிட மக்களின் அன்றாடப் போராட்டங்களின்வழி ஊடாடிப் பார்ப்பது வேறு படிப்பினைகளைத் தருகிறஅனுபவம்.
இது தவிர்த்து என் நேரத்தை பெரிதும் நிரப்புவது இசைதான். இசை என்னை சதா குணப்படுத்தும் மாய சக்தி. இளையராஜா, ரஹ்மான் என்று வெகுஜன தமிழிசையில் தொடங்கி, ஹிந்துஸ்தானி, சூஃபி, ஜாஸ், ப்ளூஸ், வெஸ்டர்ன் கிளாசிக்கல், பாப், ராப், ஹிப்ஹாப் என்று என் பயண வாழ்வு இசையின் ரசிக வெளியை விரிவுபடுத்தியிருக்கிறது.
உலகம் முழுதும் பல நாடுகளுக்குச் சென்று உங்கள் ஆவணப்படங்களையும் குறும்படங்களையும் மக்களிடம் அறிமுகப்படுத்தி வந்துள்ளீர்கள். அது குறித்தான அனுபவங்களைக் கூற இயலுமா?
லீனா மணிமேகலை: ஐரோப்பிய ஒன்றிய ஃபெலோஷிப்பில் இந்தோ ஜெர்மன் கலாச்சாரப் பகிர்வின்பால் ஆவணப்படப் பயிற்சிப் பட்டறையில் கார்டிஃப்பின் தாம்சன் மீடியா பவுண்டேஷனிலும் (Thomson MediaFoundation), திரைப்படங்களின் மூலம் சமூக சிக்கல்களை அணுகுவது பற்றிய ஃபின்லேண்டில் உள்ள டாம்பரே(Tampere) பல்கலைகழகத்திலும், புதுதில்லி இன்ஸ்டிடியூட்டின் தயாரிப்பு மேற்பார்வையில் பங்கேற்று ‘கனெக்டிங் லைன்ஸ்‘(Connecting Lines) என்ற மாணவர் அரசியலைக் குறித்த ஆவணப்படத்தை என் ஜெர்மானிய இயக்குனர் தோழி மிக்கேலாவுடன் எடுத்தது என்னை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றது. அந்த ஃபெலோஷிப்பில் ஐரோப்பா வந்திருந்த தருணத்தில்தான் லண்டனில், ஃபிரான்ஸில், ஜெர்மனியில், சுவிஸ்ஸில் ஈழத்து நண்பர்களின் அழைப்பில் என் ஆரம்ப கால ஆவணப் படங்களைத் திரையிட்டேன். ஒற்றையிலையென கவிதை நூலைப் பற்றிய விமர்சனக் கூட்டங்களும் நடந்தன. அவர்களுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.
சிகாகோ சர்வதேச பெண் இயக்குநர்கள் திரைப்பட விழாவுக்காக அமெரிக்கா சென்றிருந்தபோது, அமெரிக்க தமிழ்ச் சங்க தோழமைகள் பல்வேறு திரையிடல்களையும், விவாதங்களையும், சந்திப்புகளையும் ஒழுங்குபடுத்தினார்கள். சங்கரபாண்டி, விஸ்வநாதன் போன்ற சிறந்த தோழர்களையும், பல்வேறு பல்கலைக்கழக இந்திய அமெரிக்க நண்பர்களையும்,செயல்பாட்டாளர்களையும், ஃபிரண்ட்ஸ் ஆஃப் சவுத் ஆசியா தோழர்களையும் அமெரிக்கப் பயணம் பரிசளித்தது.
சர்வதேச பெண் ஊடகவியலாளர்களின் அமைப்பில் செயலாற்றியதால் அமெரிக்காவிற்கு சர்வதேச மாநாட்டு வேலைகளுக்கு சென்ற தருணங்களில் மீண்டும் தமிழ்ச்சங்க நண்பர்கள் மூலம் என்னுடைய அப்போதைய புதிய படங்களின் திரையிடல்களும், சந்திப்புகளும் நடந்தன. அந்த சமயம் கனடாவிலும் ஈழத் தோழமைகள் சேரன், சுமதி ரூபன் உதவியால் படங்களைத் திரையிடும் வாய்ப்பு கிடைத்தது. மலேசியாவிற்கு ஆசியத் திரைப்பட விழாவிற்கு நடுவராக வந்த அனுபவமும் வாய்த்தது.மலேசிய தமிழ் நண்பர்களின் முயற்சியில் மலேசியத்தமிழ்ச் சங்கத்திலும், சிங்கை தமிழ் நண்பர்களின் அன்பின் பேரில் சிங்கப்பூர் நூலகத்திலும் ஆவணப்படங்களைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பும் பெற்றேன்.
அகில உலக சோஷலிஸ்ட் இளைஞர்கள் மாநாட்டிற்காக வெனிசுவலா சென்றது மிக அரிய அனுபவம். மிலிட்டரி மேன்ஷனில் தங்கியதும், பொருட்களைத் திருடு கொடுத்ததும், வேளைக்கு ஒரு பிரட்டும், கால் கோழியும், அரை வாழைப்பழமும் ரேஷனில் சாப்பிட்டதும், லத்தீன் அமெரிக்கா பற்றிய என் படிமங்களை மாற்றிப்போட்ட பயணமது. சேவெசின் 11 மணி நேர உரையையும் ஒரு எழுத்து ஸ்பானிஷ்கூட தெரியாமல், புல் தரையில் அமர்ந்து கேட்டது பசுமரத்தாணி போல நினைவிலாடுகிறது. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஊடகச் செயல்பாடுகளைப் பற்றிய கட்டுரைகள் வாசித்ததும், ஆவணப்படங்களை திரையிட்டதும், பார்த்ததும், இன்னும் மாநாட்டின் இறுதி தீர்மானங்களின்போது இடதுசாரி தோழர்களோடு ஈழம் குறித்த பலத்த உரையாடல்களை மேற்கொண்டதும், இலங்கை ஜே.வி.பி,மற்றும் இந்திய மார்க்ஸிஸ்டுகளோடு கடுமையாக வேறுபட்டு சர்வதேச அரங்கில் ஈழம் குறித்த சரியான சித்திரத்தை வழங்கப் போராடியதுமாய் மிகத்துடிப்பான நாட்கள் அவை.
தேவதைகள் ஆவணப்பட முயற்சியில், சர்வதேச அரங்கில் மிக முக்கியமான ஆவணப்பட இயக்குனராக என்னை நிலைநிறுத்தியது. பெர்லின் திரைப்பட விழா, கென்யாவின் சர்வதேச பெண் திரைப்பட விழா, முனிச் சர்வதேச திரைப்பட விழாவில் ஹாரிசான் விருதுக்காக போட்டியிட்டது, மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் தங்கச் சங்கு விருது வாங்கியது, ரோம் திரைப்பட விழாவில் பங்கு பெற்றது, இன்னும் பெல்போர்ன், பெல்கிரேட், சவுத் ஆப்பிரிக்கா என்று சர்வதேசத்தில் பரந்துபட்டு என்னை திரைப்படைப்பாளியாய் கொண்டு சென்றது தேவதைகள் தான்.
சார்லஸ் வாலஸ் ஸ்காலர்ஷிப்பில் லண்டன் பல்கலைகழகத்தில் மானுடவியல்–சமூகவியல் சினிமா குறித்த ஆறு மாத ஆராய்ச்சி படிப்பு என்னை பரீசிலித்து கொள்ளவும், படைப்புலக சுற்றளவை விரித்துக்கொள்ளவும், கலை–காட்சி – தொழில்நுட்பம் வராலாற்றை பரிச்சயம் செய்துக்கொள்ளவும் உதவியது.
காமன்வெல்த் ஃபெலொஷிப்பில் லண்டன் வந்திருந்தபோதுதான் ஷோபா சக்தியோடு நட்பு வலுத்தது. ஃபிரான்ஸிலும், இந்தியாவிலும் சம்பிரதாயமாக சந்தித்திருந்தாலும், லண்டன் சந்திப்பு இடைவெளிகளை அன்பால், உரையாடலால், புரிதலால் நிரப்பி, சேர்ந்து பணி செய்யும் இடத்திற்கு நகர்த்தியது.
அகில உலகளவில் நடக்கும் முப்பதிற்கும் மேற்பட்ட மிக முக்கியமான சர்வதேச திரைப்பட விழாக்களில் செங்கடல் பங்கேற்றதால், தொடர்பயணியானேன். செங்கடல் திரைப்படத்திற்கான விநியோகத்தை Crowd Funding – நேரடி பார்வையாளர்கள் பங்கேற்பு திட்டத்தின் மூலம் ஐரோப்பா – அமெரிக்கா கண்டங்களில் ஏறக்குறைய ஐம்பதுக்கும் மேலான திரையிடல்களை ஒழுங்கு செய்யமுடிந்தது. உரையாடல் வெளியை மொழி கடந்து, பிராந்திய தேச கலாசார எல்லைகள் கடந்து, கலை மிக வீர்யமாக முன் நகர்த்தும் என்ற நம்பிக்கையை என் திரைபயணங்கள் உறுதி செய்த வண்ணம் இருக்கின்றன.
உங்கள் குறும்படங்கள் சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டுவர காரணியாக இருந்துள்ளதா?
லீனா மணிமேகலை: ஒரு திரைப்படத்தால் சமூகத்தில் மாற்றம் வந்துவிடும் என்பது அதீத நம்பிக்கை. ஆனால் உறுதியாக ஒரு வலுவான உரையாடலை நிகழ்த்த முடியும். இடையீட்டைக் கோர முடியும். ஒரு துண்டு வீடியோ, மக்களிடம் தீயாய் பற்றி ஒரு மக்கள் இயக்கமாக மாறியதை நான் நேரடியாகப் பார்த்திருக்கிறேன். மாத்தம்மா, பறை, பலிபீடம் போன்ற என் முயற்சிகள் அத்தகையவையே! அரசாங்கத்தின் இடையீட்டைக் கோரிப் பெற்றதில் இப்படங்கள் வெற்றி பெற்றன.
ஆரம்ப கட்டங்களில் அரிய திரைப்படைப்புகளைத் தந்துவிட வேண்டும் என்ற உந்துதலெல்லாம் எனக்கில்லை. எனக்கு தொழில்நுட்பம் கைவருகிறது, மக்கள் பிரச்சினையை ஏதாவதொரு வகையில் வெளிக் கொண்டு வர வேண்டும், சரி, படமெடுப்போம் என்ற வகையிலேயே நான் இயங்கத் தொடங்கினேன். ஒரு மீடியா ஆக்டிவிஸ்டாகத்தான் என்னை வரித்துக்கொண்டேன். கிராமங்கள் தோறும் தெருமுனைகளில், பள்ளிக்கூடங்களில், கல்யாண மகால்களில், தேரடியில், நூலகங்களில், பஞ்சாயத்து அலுவலகங்களில், மாட்டுக் கொட்டில்களில்கூட படங்களைத் திரையிட்டிருக்கிறேன். நிழல் திரைப்பட இயக்கம், அமுதனின் மறுபக்கம் திரைப்பட இயக்கம், இடதுசாரிகளின் இளைஞர்–பெண்கள்–பண்பாட்டு இயக்கங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், என்.ஜி.ஓக்கள், பல்கலைகழகங்கள் என்று என் படங்களை கிராமங்கள் தோறும் கொண்டு செல்வதற்குப் பின் ஒரு பெரிய படை இருக்கின்றது. ஒவ்வொரு திரையாக்கமும், ஒவ்வொரு திரையிடலும் எனக்கு சமூகம் பற்றிய புதிய பாடங்களை கற்றுத் தந்தன.
என் படங்கள் சில கேள்விகளை, எளிய நம்பிக்கைகளை, சுய விமர்சனங்களை, இடையீடுகளை, உறுதிமொழிகளை ஒரு கூட்டு மனசாட்சியின் நடவடிக்கையாக ஓரளவு நிகழ்த்தியுள்ளன என்று நான் நிச்சயமாக கூற முடியும்.
பெரியாரியம் பற்றி பேசினீர்கள். திருமணம் பற்றியும் குடும்ப அமைப்பு பற்றியும் உங்க பார்வை என்ன?
லீனா மணிமேகலை: திருமணம், குடும்ப அமைப்பு நிச்சயம் பெண்ணை இரண்டாம்பட்ச நிலைக்குத் தள்ளுபவைதான். இன்று போரினால் கொல்லப்படும் மக்களை விட, வறுமையால் இறக்கும் மக்களைவிட, குடும்ப வன்முறையால் சாகும் பெண்களின் எண்ணிக்கை அதிகம் என்று புள்ளிவிபரங்கள் சொல்கின்றன.
உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் போன்றவற்றால் பெண்கள் பெருவாரியாக படிக்கிறார்கள், வேலைக்கு வந்துவிட்டார்கள் என்றெல்லாம் உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் பெண்களுக்கு இரட்டைச் சுமைதான் எஞ்சியுள்ளது. குடும்பங்களில் ஆண் பெண் வேலைப்பகிர்வு என்பது எல்லாவகையிலும் சனநாயகப்படுத்தப்படவில்லையென்றால், பெண்கள் அழுத்தத்தில் தற்கொலை செய்துகொள்வதையும், மனப்பிறழ்வடைவதையும், வெளியேறுவதையும் தடுக்க முடியாது. குடும்பங்களில் பெண்கள் செய்யும் சமையல், துப்பரவு, குழந்தை வளர்ப்பு, வீட்டு நிர்வாகம் போன்ற வேலைகளுக்கு ஊதிய மதிப்பை கணக்கிட்டுப் பார்த்தால் புரியும், குடும்பம் எத்தகைய சுரண்டல் அமைப்பென்று!
மாடுபிடிக்கும் வேலைபோல சொந்த சாதியில் பெண்களை விலைபேசி விற்கும் இழிவு இந்த நூற்றாண்டிலும் நம் சமூகத்தில்தான் நடந்துக் கொண்டிருக்கிறது. கேவலம் பிடித்த மேட்ரிமோனியல் அறிவிப்புகள் நம் சமூகத்தின் அவமானச் சின்னம். பெண்ணிற்கு சுய தேர்வை மறுக்கும் கெளரவக் கொலைகள் குடும்பம் மற்றும் சாதியின் கொடூர வன் முகங்கள்.
ஜெரால்டு என்ற என் தோழனை நான் கைப்பற்றியபோது, திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ எங்கள் குடும்பங்கள் அனுமதிக்கவில்லை. என் குடும்ப வரலாற்றிலேயே, முதன் முதலாக சாதி–மத-சடங்கு மறுப்பு திருமணத்திற்காக வெளியேறியவள் நான். ஏன் தாலியில்லை என்ற கேள்விக்கு பதில் சொன்ன காலம் கடந்து, இன்று விவாக மறுப்பு காலம் வரை வந்துவிட்டேன். வலி நிறைந்த வாழ்க்கைப் போராட்டம். நம்பும் கொள்கைகளை சொந்த வாழ்க்கையிலாவது கடைப்பிடிக்க வேண்டும், நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற என் பிடிவாதத்திற்கு நான் கொடுத்த விலை அதிகம். என் அன்புக்குரியவர்களைக் கொடூரமாக மனக்காயப் படுத்தியிருக்கிறேன் என்று எண்ணி இரவிரவாக சில சமயங்களில் அழ நேர்ந்தாலும், வேறு வழி தெரியவில்லை. சொந்த சாதியில் சீர் செனத்தி, நில பாகங்களோடு திருமணம் செய்திருந்தால் என்னைப் புதைத்த இடத்தில் புல் முளைத்திருக்கும். குடும்ப அமைப்பை சனநாயகப்படுத்துதல், பெண்ணின் சுயதேர்வு, ஆண்-பெண் வேலை பகிர்வு, வரதட்சணை ஒழிப்பு, பெண்ணுக்குச் சொத்துரிமை, சாதி மறுப்பு திருமணங்கள், காதல் வாழ்வில் சேர்ந்திருப்பது, குடும்பமின்மையைத்தேர்வு செய்வது, மண விலக்கிற்கான பூரண சுதந்திரம் என்று பல புள்ளிகளில் சீரமைப்பு தேவையாய் இருக்கின்றது.
வர்ஜீனியா வுல்ஃப் சொன்னது போல் Room of my own முப்பத்திரண்டு வயதில் தான் எனக்கு சாத்தியமானது. ஒரு பெண் தனக்கென்று ஒரு வீட்டை ஏற்படுத்திக்கொள்வது, வாழ்வது என்பதை இன்னும் இந்த குடும்ப அமைப்பு அடாத செயலாக, ஒழுங்கு மீறலாக, நடத்தை கெட்ட தனமாகத்தான் பார்க்கிறது. எப்படி தனியாக இருக்கிறீர்கள் என்ற இந்த சமூகத்தின் கேள்விக்கு என் காதுகள் செவிடாகக் கடவதாக!
தங்கள் இதழியல் அனுபவம் குறித்துக் கூறுங்கள்?
லீனா மணிமேகலை: பள்ளிக்கூட காலங்களில் பூந்தளிர் சிறுவர் குழு அமைத்து தினமணி சிறுவர் பகுதியில் எங்கள் குழு நடத்தும் நிகழ்ச்சிகள் குறித்து தொடர்ந்து எழுதியதில் தொடங்கியது என் இதழியல் ஆர்வம். என்னுடைய 13 வயதில், ஓவியப் போட்டியில் வென்று சோவியத் யோனியனுக்கு ஒரு மாதம் பயணம் செய்தேன். சரவ்தேச ஆர்தெக் குழந்தைகள் முகாமில் பங்கெடுத்த அனுபவத்தை ஏழு வாரம் “ஜனசக்தியில்” தொடராக எழுதினேன். பொறியியல் கல்லூரி காலங்களில் “சிறகுகள்” என்ற கையெழுத்துப்பிரதி எடிட் செய்தேன். அந்த காலகட்டத்தில் ஆனந்த விகடன் அறிமுகம் செய்த “மாணவர் எடிட்டர்” திட்டத்தில் பங்கு பெற்றதில், சிறகுகளில் எழுதியிருந்த சிவகாசி குழந்தை தொழிலாளர்கள் பற்றிய கட்டுரை விகடனில் வெளியானது. அப்போது நான் அடைந்த மகிழ்ச்சியைப் பார்த்து, என் தாத்தா (அ.வெங்கடசாமி) பொறியியல் படிப்பை விட்டுவிட்டு நான் ஏன் ஜர்னலிசம் படிக்க கூடாது என்று கேட்டார். என் அப்பா(இரா. இரகுபதி) கட்டோடு மறுத்துவிட்டார். விகடன் தந்த உற்சாகத்தில், தினமணிக்கு கூட நடுப்பக்க கட்டுரை எழுதினேன். தாத்தா அதை ஃபிரேம் செய்து வைத்திருந்தார். அதில் அவருக்கு ஒரே பெருமை.
திருமணத்திற்குப் பிறகு, திரைப்பட ஆர்வலர்களாக நானும் ஜெரால்டும் ‘திரை‘ பத்திரிகை என்ற சிறு முயற்சியை செய்தோம். ஏழு இதழ்களுக்கு மேலாக பொருளாதார நெருக்கடி மற்றும் விநியோகம் சந்தை குறித்த போதாமைகளால் தொடர்ந்து நடத்த முடியாமல் நிறுத்திவிட்டோம். ஒரு இலக்கிய வாசகியாக, லும்பினி தோழமையோடு இணைந்து நிறப்பிரிகையின் பதின்மூன்று இதழ்களையும் சேகரித்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்த முயற்சி மனதுக்கு மிகவும் நெருக்கமான தருணம். நிறப்பிரிகை தமிழ் நவீன இலக்கியத்தில் ஒரு அழியா சுனை.
உங்கள் கவிதைகளின் சொல் மற்றும் வரிகளின் அடுக்குகள் அவற்றுக்கென தனிச் சிறப்புடன் ஓர் இடத்தில் அமர்கின்றன. பிரக்ஞையோடு அவற்றை அடுக்குகிறீர்களா? அவை எவ்வகையில் கவிதைக்கு அவசியமாகின்றன?
லீனா மணிமேகலை: கவிதையில் இயங்கும் வார்த்தைகள் அதற்கெனவே கொடுக்கப்பட்ட இடங்களில் வாகாகச் சென்று அமர்வதில்லை. ஒழுங்கு குலைந்த அடுக்குகளில்தான் இடம்பெறுகிறது. அவை வாசிப்பவரின் அர்த்தம் கோரும் நேர்க்கோட்டுத்தன்மையை விட உணர்வுத் தளங்களை அதிகம் கோருகின்றன. வெறும் உணர்ச்சிக் கோர்வைகளா என்று கேட்டுவிட வேண்டியதில்லை. ஆணின் அத்தனை பிரதிகளிலும் உணர்ச்சியற்ற இடத்தில்தானே பெண் வைக்கப்பட்டிருக்கிறாள்? அதனாலேயே கவிதையில் உணர்வுத் தளம் என்பதும் ஒழுங்கற்ற அரசியலாகவே இருக்கின்றது.
ஆமாம், நான் பிரக்ஞையோடுதான் வார்த்தைகள், அடுக்குகள், வடிவங்கள் வழியாகக் கவிதைகளைத் தயாரிக்கிறேன். அதிக ரொட்டிகளைத் தயாரிப்பதாலேயே என் பெயர் அவற்றில் பொறிக்கப்பட வேண்டியதில்லை என்ற பிரெக்டின் (Brecht) குறிப்பொன்று கூடவே நினைவுக்கு வருகிறது.
எழுதுவதால் அதிகம் விமர்சிக்கப்படுகிறீர்கள். இதை எவ்வாறு எடுத்துக்கொள்கிறீர்கள்?
லீனா மணிமேகலை: ஆசிரியர் இறந்து விட்டார் என்பதை ஏற்கெனவே முன்மொழியப்பட்ட கருத்துருவங்கள் இறந்துவிட்டதாகத்தான் நான் எடுத்துக்கொள்கிறேன். அவ்வகையில் உலகத்தின் மொத்த மூல ஆசிரியப் பிரதிகளும் இறந்துவிட்டன என்று சொல்லலாம் எனக் கருதுகிறேன். கடவுள் உட்பட.
இப்பொழுது எழுதப்படுவது வாசக மறுபடைப்பு பிரதிகள்.
வாசகர் படைப்பாளியாகக் கோரவில்லை. அவர் தன் அரசியல் உரிமையை மீட்டெடுக்கிறார். அவ்வளவில் பிரதி மீதான ஆசிரிய ஆதிக்கம் இல்லாமல் போகிறது. வாசக மறுபதிப்பு பிரதிகளை அடித்தளப் படைப்புகளாகப் புரிந்து கொள்ளும் பட்சத்தில், மூலப்பிரதி என்பது எப்படி எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக, வழிமொழிவதாக இருக்கிறதோ, வாசக மறுபடைப்பு பிரதி எல்லாவற்றிலிருந்தும் வெளியேறி இருப்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம். அந்தப் பாதையில் எனக்கென்ற உலகைப் புதியதாகக் கட்ட முயன்ற அளவில் என் மீதான விமர்சனங்களைப் பொருட்படுத்தியும், கடந்தும் செல்ல எத்தனிக்கிறேன்.
உங்கள் கவிதைக்கான ஆரோக்கியமான விமர்சனங்கள், உரையாடல்கள் தமிழ் சூழலில் நிகழ்ந்துள்ளதா?
லீனா மணிமேகலை: இல்லை.நடந்த உரையாடல்களும் சமூகத்தின் ஆரோக்கியமின்மையையும்,நொய்மையையும் காட்டின. அது குறித்து எனக்கு வருத்தம்தான். சமூகம் என்பது ஒரு புனைவு. அதை நீண்ட காலமாக பழக்கப்படுத்திக் கொண்டவர்கள் ஒழுக்கவாதிகளாக இருக்கிறார்கள். பெண் தன் உடலை, உலகை எழுதும்போது பரத்தமை கால செவ்வியல் பண்புகளில் ஒருவித பதற்றம் ஏற்படுகிறது. இங்கே மத அடிப்படைவாதிகள் வைக்கும் அதே குற்றச்சாட்டைத்தான் மார்க்சியவாதிகளும் வைக்கிறார்கள், எல்லா இசவாதிகளும் வைக்கிறார்கள். பெரும்பாலும் பொறுக்கிகளின் கூடாரமாக இயங்கும் தமிழ் இணையம் அதற்கொரு சாட்சி.
பெண்ணை நிலைகுலைய செய்ய வைக்கும் வார்த்தைகள் இன்னும் ஏராளமாகச் சமூகத்தின் கையிருப்பில் இருக்கின்றன. ஆனால் பொதுவாக அத்தகைய ‘சமூக‘ ஆரோக்கியம் குறித்து நான் கவலைப்படுவதில்லை.
தனுஷ்கோடி கம்பிப்பாடு கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வின் துயரத்தைக் கண்டும், அதிகாரத்தால் சுரண்டப்பட்ட கொடூரத்தை கண்டும், சராசரியாக மூன்று மீனவக் குடும்பங்களில் ஒரு விதவையாவது இருப்பதை உணர்ந்தபோதும், செங்கடலை எழுதத் துவங்கினேன் எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். ஒட்டுமொத்த யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பெரும் கூட்டத்தில் நீங்கள் தொட்டிருப்பது மீனவ சமூகத்தை மட்டும் என்பதால் அவர்களின் துயரத்தை நெருக்கமாக உணரும்போது, ஈழம்/யுத்தம் குறித்த உங்களின் மனநிலை எப்படி மாறுபட்டது?
லீனா மணிமேகலை: யுத்தம் என்பது தேசிய அரசாங்கங்களின் பிரச்சினை. தேசியத்திற்கு எதிரான புரட்சி என்பது மக்கள் பிரச்சினை. இடையில் தேசிய வரைவெல்லைகளில் மக்கள் பலியாவார்கள். வளர்ந்த நாடுகளில் குடியமர வேண்டி முன்றாம் உலக நாடுகளிலிருந்து தப்பி எல்லை தாண்ட முயற்சிக்கும் லட்சக்கணக்கான மக்கள் உலகெங்கும் கொடூரமாகக் கொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். சிறிமாவோ பண்டாரநாயக்கா காலத்தில் சிறிமாவோ –லால் பகதூர் சாத்திரி ஒப்பந்தத்தால் லட்சக்கணக்கான மலையக மக்களை இந்தியா திருப்ப பெற்றுக்கொண்டதும் , இந்திரா காந்தி கச்சத் தீவை விட்டுக்கொடுத்ததும் இனப்போருக்கு முன்தானே நிகழ்ந்தது.
இலங்கை என்கிற தீவினுடைய சர்வதேச மதிப்பு பன்னாட்டு கம்பெனிகளுக்கு நன்றாகத் தெரியும்பன்னாட்டுக் கம்பெனிகளுக்குத் தன்னைத் திறந்து விடும் சிங்கள அரசாங்கம் அதை ஏற்று வாழாத, அல்லது எதிர்வினை செய்கிறவர்களை அழித்தது. ஜே.வி.பி. முன்னெடுத்த எழுச்சியின்போது பெரும்பான்மை இனமான சிங்களர்களிலேயே ஒரு லட்சம் மக்களை கொன்றது. பிறகு இன உள்முரண்களை ஊதி சிங்கள தமிழ் இனங்களைப் பிரித்தாண்டு சிறுபான்மை தேசிய இனத்தை ஒழித்தது.
சந்தை மதிப்பு மிக்க மனிதர்கள் தவிர ஒரு நாட்டின் எல்லைக்குள் அதன் சொந்த வருமானத்திற்குப் பயன்படாத அன்னியர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஒரு வேளை மீனவர்கள் வரி கட்டுபவர்களாக, அந்நியச் செலாவணியில் பங்கு கொள்கிறவர்களாக இருந்தால், அரசாங்கங்கள் பதில் சொல்லும். ஆனால், எல்லை தாண்டும் “சர்வதேச குற்றவாளிகளை ” காப்பாற்றுமா என்றால் செய்யாது. பாரம்பரியமாக மீன் பிடிப்பவர்களுக்கு சர்வதேச எல்லைகள் கிடையாது என்பதை தேசிய அரசாங்கங்கள் கையெழுத்துப் போட்டு ஒத்துக்கொள்ளும். ஆனால் நடைமுறையில் எல்லைகளில் கொலைகாரர்களை நிறுத்தும்.ஆகவே மீனவர் பிரச்சினையை மனிதாபிமான பிரச்சினையாகப் பார்க்க முடியாது. அது அரசியல் பிரச்சினை.
ஏகாதிபத்தியத்தின் சர்வதேசிய வல்லாதிக்கத்தினை ஏற்றுக்கொள்ளாத எந்த நாடும் தனித்து வாழ முடியாது. அதன் வெளிப்படையான முரண்பாடுதான் யுத்தம். மக்களை சதா சாமானியர்களாக்கி அச்சுறுத்துவதுதான் யுத்தத்தின் வெற்றி. அதற்காகத்தான் அரசாங்கங்கள் தங்கள் ராணுவத் தளவாடங்களில் இரவு பகலாகக் கருவிகளை உற்பத்தி செய்கின்றன.
இதுவே செங்கடல் அனுபவம் எனக்கு கற்றுக் கொடுத்த பாடம்.
தனுஷ்கோடி, ராமேஷ்வரம் மீனவர்களின் வாழ்க்கையை சினிமாவின் (செங்கடல்) மூலம் மீளுருவாக்கம் செய்யும் பணியில் அவர்களின் ஒத்துழைப்பு எப்படி இருந்தது? சினிமாவின் வழி அவர்களின் வாழ்வைப் பதிவாக்கும் முயற்சியில் அவர்களிடம் பழகிய கணங்களில் உங்களுக்குள் ஏற்பட்ட பதிவுகள் பற்றி சொல்லுங்கள்.
லீனா மணிமேகலை: எப்படிக் கடற்கோள் ஒரு நகரத்தை அழிக்கும் என்ற பீதியை ஏற்படுத்தும் காட்சிப் பொருளாக, நாடெங்கிலுமிருந்து பேரழிவின் சின்னத்தைப் பார்த்துவிட்டு போய்விடலாம்என்ற சாடிசத்தோடு வரும் டூரிஸ்டுகளின் வடிகாலாக, பூணூல் போட்ட அய்யர் சாமிகள் இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும் வங்காள வரிகுடாவும் – இந்தியப்பெருங்கடலும் சங்கமிக்கும் புனிதத் தலமாக தனுஷ்கோடி இதுவரை அறியப்பட்டிருக்கிறது. எனக்கு அது ஒரு பராரி நிலம். நடந்து செல்லும் மணல் மேட்டிற்கு கீழே புதைக்கப்பட்டிருக்கும் சடலங்களைக் குறித்த கதைகள் துரத்தும் காடு. உயிர் வாழ்தலை மட்டுமே செய்துகொண்டிருக்கிற அந்த மீனவ சமூகம் என் அலைவுறுதலையும் தன் பாடோடு இனம் கண்டது. குறைந்தபட்ச வாழ்வாதாரங்களோடு தங்கள் இருப்பை நீட்டித்துக்கொண்டிருக்கும் அவர்களை அதிகாரம் குற்றவாளிகளாகப் பார்ப்பதை முறையிட்டது. அதை வெளி உலகத்திற்கு எடுத்துக்காட்டி தங்கள் வாழ்வுரிமைக்கான எளிய நம்பிக்கையை செங்கடல் பெற்றுத் தரும் என்று நம்பியது. அரசாங்கங்களுக்கு எல்லைகள் குறித்தான பிரக்ஞை இருப்பது போல மக்கள் குறித்தான பிரக்ஞை இல்லை. அந்தச் சமூகத்திற்கு நற்செய்தி சொல்லிவிடும் வல்லமை எனக்கில்லை என்பது எனக்கு தெரியும். ஆனால் பொது நீதிக்கும், தன்னிலைக்குமிடையே அவர்கள் படும் போராட்டத்தை மிக நேர்மையாக, உண்மைக்கு நெருக்கமாக என்னால் செங்கடல் மூலம் எடுத்துச் சொல்ல முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. அதை எந்தப் பழுதுமில்லாமல் செய்திருக்கிறேன்.
ராணுவம், காவல் துறை, சுங்க வரித்துறை, உளவுத்துறை என்று அதிகாரம் நசுக்கும் தனுஷ்கோடியின் மீனவ வாழ்வியல் மிக மிக ஆதாரமான உரிமையையே கோருகின்றது. ஆனால் நானும் கூட இரண்டு நாடுகளுக்கான சட்டங்களுக்கு அவர்களைக் கையளித்து விட்டே திரும்ப வேண்டியிருந்தது. அவர்களின் ஆதாரமான வாழ்வின் தோல்வியே என் கலையின் தோல்வியாக இருக்கிறது.என்று நினைக்கிறேன். படம் முடக்கப்பட்ட நிலையில் சட்டங்களை மீறி கூட மீனவர்கள் வாழத்தான் செய்வார்கள் என்ற உணர்வே எனக்குமான உணர்வாக இருக்கிறது.ஆனால், இப்படிப்பட்ட நிலங்களைத்தான் ஒரு காட்சிக் கலைஞராக நான் வாழ்நாள் முழுதும் தேடி கண்டடைவேன் என்ற உறுதி மட்டும் என்னுடன் திண்ணமாக மிஞ்சியிருக்கிறது.
தங்களின் முந்தைய படைப்புகளின் (குறும்படங்கள், ஆவணப்படங்கள்) மீது உங்களுக்கு அவ்வளவு பெரிய ஈர்ப்பு இல்லாததாக ஒருமுறை சொல்லியிருந்தீர்கள். உங்களுடைய முந்தைய குறும்படங்கள், ஆவணப்படங்களின் அடைவுநிலையை எப்படி மீள்பார்வை செய்கிறீர்கள்?
லீனா மணிமேகலை: ஆரம்ப கால படைப்புகளைப் பற்றி யார் கேட்டாலும் எனக்கு நினைவுக்கு வருவது நபகோவின் மேற்கோள் ஒன்று.
“யாராவது தன்னுடைய கோழையையே தட்டில் வைத்து சுற்றுக்கு விடுவார்களா?”
செங்கடலை விட்டே நான் வெளியேறி விட்டேன். நிம்மதி என்பது ஆன்மாவிற்கு இழிவாம் நவீன்.
வெள்ளை வேன் கதைகள் என்ற ஆவணப்படம் உருவான விதம் குறித்து கூறுங்கள்?
லீனா மணிமேகலை: நான் இலங்கைக்கு யாழ்ப்பாண இலக்கிய சந்திப்புக்காக சென்றபோது, படம் எடுக்கும் எந்த தயாரிப்புகளுமற்றுதான் சென்றேன். ராணுவத்தின் பிடியில் இருக்கும் வடக்க மக்களின் ஒவ்வொரு அசைவையும், கண்காணிக்கும் உளவுத்துறையால் நிறைந்த பகுதி. சி.ஐ.டி என்ற வார்த்தை இரண்டு பேர் சந்தித்துப் பேசினாலே சில தடவைகளாவது உச்சரிக்கப்பட்டு விடும். என் பாஸ்போர்ட் விபரங்கள் ஒரு பத்து தடவையாவது வெவ்வேறு செக் போஸ்டில் பதியப்பட்டிருந்தன . இதில் படமெடுப்பதை பற்றி எல்லாம் கிஞ்சிற்றும் எண்ணம் வருவதற்கு வாய்ப்பில்லாமல் இருந்தது.
ஜூலையில் மன்னாரில் இருந்தபோது, நவிப்பிள்ளை ஆகஸ்ட் மாதம் வருவதை முன்னிட்டு காணாமல் போன உறவுகளை, போராட்டத்திற்காக இணைத்துக்கொண்டிருந்த இயக்கத்தோடு நட்பு கிடைத்தது. மன்னாரில் இருந்து முல்லைத் தீவு வரை மறுபடியும் இரகசியமான ஒரு நீண்ட பயணம். கிட்டத்தட்ட 25 கிராமங்களில்,500குடும்பங்களை நேரில் சந்தித்து உரையாடிய அந்த ஆன்ம பயணம் தான் இந்தப் படத்திற்கு உரம்.தன்னார்வளராக ஒளிப்பதிவு பணியை செய்ததோட,சிங்கள மனித உரிமை ஆர்வளர்களும் எங்களுடன் பயணித்ததால், மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினேன். என்னையும், என் ஒளிப்பதிவாளர் அரவிந்தையும் பாதுகாத்து, உணவளித்து, இடமளித்து தங்கள் குடும்பம் போல பார்த்துக்கொண்ட நண்பர்கள் தொடர்ந்து களத்தில் வேலைசெய்துகொண்டிருப்பதால், அவர்களின்பெயர்களைக் குறிப்பிட்டு நன்றி சொல்ல முடியாத துரதிருஷ்டசாலியாக நிற்கிறேன்.
வெள்ளை வேன் கதைகள் என்று சுயாதீனமாக படம் எடுக்க வேண்டும் என்ற பொறி இரணபாலையில் ஜெயா அக்காவை சந்தித்தபோது தான் தட்டியது. இரணபாலை போரால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதி. ஷெல் விழாத இடம் இல்லாததால், பொத்தல் நிலமாக காட்சியளித்த அந்த ஊரில் கூடுதலாக சில நாட்கள் தங்கி ஜெயா அக்காவின் கதையை ஆவணப்படுத்தலாம் என்று முடிவு செய்தேன். காணாமல் போன குடும்பங்களின் நம்பிக்கையும், பேரினவாத அரசாங்கத்தை விடாமல் சவால் விட்டுக்கொண்டிருக்கும் அஞ்சாநெஞ்சமும் என்னையும் தொற்றிக்கொண்டது. இரண்டாவது நாளே ராணுவத்தால் பிடிக்கப்பட்டோம். குண்டடிகளால் துளைக்கப்பட்ட ஒரு ஐஸ் க்ரீம் வண்டியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை ஒரு புதரில் மறைந்து படமெடுத்துக்கொண்டிருந்த எங்களை வசமாகப் பிடித்துக்கொண்டார்கள். மூன்று மணி நேரம் யார் யாரோ வந்தார்கள் விசாரித்தார்கள். உடனடியாக இலங்கையை விட்டு வெளியேற வேண்டும் என்று மட்டும் இறுதியாக உத்தரவு வந்தது. அடுத்த அரை மணி நேரத்தில் கொழும்பு பஸ்ஸில் ஏறி, இந்தியா வந்து சேர்ந்தோம்.
எங்களுக்கு பாதுகாப்பாக இருந்த இலங்கை நண்பர்கள் எல்லோரும் மிகப் பதற்றமாகி விட்டார்கள். இந்தியா வந்தும் எங்களுக்கு இருப்பு கொள்ளவில்லை. நானும் அரவிந்தும் ஒரு வாரம் குமைந்து தீர்த்தோம். மறுபடியும் விசா அப்ளை செய்து பார்த்தோம். கிடைத்தது. நவிப்பிள்ளை வருவதையொட்டி மீடியா நடமாட்டமும் சற்று நெகிழ்ச்சியும் இருந்த காலகட்டம். யாழ்ப்பாணம், கொழும்பு நகரங்களில் நடந்த வரலாற்று சிறப்புமிக்க, காணாமல் போனவர்களின் கவன ஈர்ப்பு போராட்டங்களை ஆவணப்படுத்தினோம். புத்தளம், மன்னார், கிளிநொச்சி, ஹோமாகாமா, நீர்கொழுப்பு, திரிகோணமலை என்று பூகோள ரீதியாகவும் இன ரீதியாகவும் பிரித்தாளப் படுகின்ற மக்களின் வாழ்க்கையை கேமிரா கொண்டு இணைக்க முயற்சி செய்தோம். காணாமல் போன குடும்பங்கள் போர்க்குற்றவாளி ராஜபக்சேவிற்கு தீராத தலைவலியை கொடுத்துக் கொண்டிருப்பவர்கள். சர்வதேச அரங்கில் மிக மோசமான அழுத்தத்தை ராஜபக்சே அரசாங்கம் காணாமல் போனவர்களின் விவகாரத்தில் சந்தித்து வருகிறது. வெள்ளை வேன் கதைகள் காணாமல் போன உறவுகளின் விஷுவல் ஆயுதம்.
குறைந்த வசதி, இராணுவ மிரட்டல் இவற்றுக்கு மத்தியில் உங்களால் எப்படி சவால் மிகுந்த கருத்தை முன்வைக்கும் ஓர் ஆவணப்படத்தை எடுக்க சாத்தியமானது? உங்கள் அனுபவதைக் கூறுங்கள்?
லீனா மணிமேகலை: பாதுகாப்பு காரணமாக நாங்கள் லாட்ஜில் எல்லாம் தங்க முடியவில்லை. சில நாட்கள் ராணுவத் தடுப்புகளை வீடியோ எடுப்பதற்காக டாக்சி எடுத்தோமே தவிர, பெரும்பாலும் டவுன் பஸ்ஸில் தான் பயணம் செய்தோம். டேப்புகளைப் பறிமுதல் செய்தல், பல மணி நேரம் விசாரித்தல், படம் எடுக்க விடாமல் தடுத்தல் எல்லாமும்தான் நடந்தது. எப்படியெல்லாம் சமாளித்தோம் என்ற தந்திரங்களை எல்லாம் எழுதினால், நாங்கள் எப்படி மறுபடியும் படமெடுப்பது. ஆட்களையே இராணுவம் ஸ்கேன் பண்ணும்போது கேமிராவை அனுமதிக்குமா என்ன? எப்படியெல்லாம் அதிகாரத்தை ஏமாற்றலாம் என்பதை படத்தைப் பார்ப்பவர்கள் தெரிந்துகொள்ளலாம். இன்று நேற்றல்ல வரலாறு முழுக்க அரசாங்கங்களின் கண்ணில் விரல் விட்டே ஆட்டியிருக்கிறார்கள் கலைஞர்கள்.
வெள்ளை வேன் கதைகள் படத்தின் தற்போதைய பிரதி, ஸ்வீடிஷ் திரைப்படப் பள்ளியின் உதவியோடு ஈழத் தமிழ் போராட்டத்தின் முழு போராட்ட வரலாற்றுப் படமாக உருவெடுக்கவிருக்கின்றது. அதனால் திரையிடல் பணிகள் மட்டுப்படுத்தப்பட்டு பிரதி மறுஉருவாக்கப் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன.
அடுத்தடுத்த படைப்புகள் குறித்த திட்டங்கள் ஏதும் இருக்கின்றனவா?
லீனா மணிமேகலை:Rape Nation என்ற பெண்களுக்கான எதிராக நடக்கும் பாலியல் கொடும்போரைக் குறித்த முழுநீள ஆவணப்படத்தின் படப்படிப்பில் தற்போது ஈடுபட்டிருக்கின்றேன். சட்டிஸ்கர், மணிப்பூர் படப்படிப்பு முடிந்திருக்கும் நிலையில், காஷ்மீர், டில்லி, மும்பை, குஜராத், ஹைத்ராபாத், கயர்லாஞ்சி பகுதிகளில் இந்த ஆண்டு முடியும் வரை படப்பிடிப்பு நடக்கவிருக்கின்றது. அடுத்த வருட ஏப்ரலில் முடிவடையும் என நம்புகிறேன்.
அது தவிர, மலையாளக் கவிஞர் கமலா தாஸ் வாழ்வையும் பிரதிகளையும் மூலமாக வைத்து தயாரிக்கப்படவிருக்கும் மலையாள/ஆங்கில திரைப்படத்தின் எழுத்து வேலைகளை முடித்து தந்திருக்கிறேன். நடிக்கவும் அழைக்கப்பட்டிருக்கிறேன்.
தமிழிலும் அடுத்த படத்திற்கு தயாரிப்பு பணிகள் நடந்துக்கொண்டிருக்கின்றன. அது ஒரு அழகான பீரியட் படம். 2015 இறுதிக்குள் அதை வெளியிடும் வாய்ப்புகள் இருக்கின்றது.
நேர்காணல் : ம. நவீன், கே. பாலமுருகன்