செய்வாயா – கவிதை
நன்றி -குமுதம்
செய்வாயா?
நாம் மிகச் சமீபத்தில் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தில்
காலக் கடிகாரத்தின் உடைந்த முள்ளொன்று உயிருடன் படுத்துக் கிடந்தது
அதனிடம் விசாரித்தேன்
நாம் பிரிந்திருந்தோமா என்று
நாம் இப்போது இணைந்துவிட்டோமா என்று அது திரும்பக் கேட்டது
சற்று பொறு, முள்ளின் மறுபாதியை தேடி எடுத்து வருகிறேன் என்றேன்
அது உன்னிடமே இருக்கிறது என்றது
என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை
உன்னிடம் ஏதும் இருக்கிறதா மச்சான்?
நாம் பேசிக்கொள்ளாத சொற்களினிடையே கிடக்கிறதா என்று பார்ப்பாயா?
நாம் தந்து முடியாத முத்தங்களில் பதுங்கியிருக்கிறதா எனத் தேடுவாயா?
நாம் எழுதிக்கொள்ளாத கடிதங்களின் மடிப்புகளை சற்று கவனிப்பாயா?
நாம் இணைந்திராத இரவுகளில் களவு போயிருக்கும் என்று நினைக்கிறாயா?
நாம் இழந்ததெல்லாம் நதியாக ஓடிக்கொண்டிருக்கிறது என்று ஒருதடவை
தூர தேசத்து தொலைபேசி அழைப்பில் சொன்னாய்!
எந்த நதி? எந்தக் கடல்? எந்த மழை?
அடுத்த தடவை நாம் சந்திக்கும் முன் அந்த முள்ளின் பாதியைக் கண்டுபிடிக்க வேண்டும்
செய்வாயா?
ரத்த நினைவுகள்
நன்றி - சிலேட் இலக்கிய இதழ்
என் முதல் மாதவிடாய் எனக்கு நன்றாக நினைவிருக்கின்றது. சாரண சாரணியர் சேவைக்காக எனக்கு ஜனாதிபதி விருது வழங்கப்பட்ட நாள். நாள் முழுதும் கொளுத்தும் வெயிலில் அணிவகுப்பு செய்துவிட்டு, நீலக் கலர் சாரணியர் சீருடையில் ரத்தக்கறையோடு வீடு திரும்பினேன். அம்மா ஊரில் இல்லை. வீட்டில் இருந்த அப்பாவிடம் ” என் ஜட்டி முழுக்க ரத்தம், எனக்கு ரத்த நோய் வந்துவிட்டது, என்னைக் காப்பாற்றுங்கள்” என்று ஒரே அழுகை. என் உடலில் அங்கங்கு முளைத்துக்கொண்டிருந்த பூனை முடியும், புதிதாக மொட்டுவிட்டிருந்த முலைகளும் அசூயையும் குழப்பத்தையும் உண்டாக்கி கொண்டிருந்த வயது. காயமே ஏற்படாமல் ஒழுகும் ரத்தமும் சேர்ந்துகொண்டதால் ஒரு புதுவித நோய் என்னை ஆட்கொண்டுவிட்டதாகவே நம்பினேன். அப்பா என் அழுகையைப் பொறுமையாக கேட்டுவிட்டு “வாழ்த்துக்கள் மகளே” என்று மட்டும் சொன்னார்.புதுவகை நோயிற்காகவா, வாங்கி வந்த சாரணியர் மெடலுக்காகவா, எதற்கு அப்பா வாழ்த்து சொல்கிறார் என்று எனக்கு குழப்பம். என் பக்கத்து வீட்டு முஸ்லிம் அத்தை வந்து, ஒரு உள்பாவாடையில் இருந்து கிழித்த பகுதியை சதுரமாக மடித்து ஜட்டிக்குள் வைத்துக் கொள்ள சொல்லிக் கொடுத்தார். பாயை விரித்து நான் அதில் மட்டுமே படுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி விட்டு கழிவறையை வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ள்லாம் என தாராள மனதுடன் அனுமதி தந்தார். “ஏன் அத்தை, நீங்கள் நான் ஜட்டிக்குள் வைத்துக் கொள்ள தந்த துணி ரத்தத்தை உறிஞ்சாதா என்ன? வீட்டுக்குள் சிந்தாத பட்சத்தில் நான் ஏன் பாயில் படுக்க வேண்டும்” என்று கேட்டதற்கு , “இனி நீ “பெரிய” பெண், கேள்விகளைக் குறைத்துக்கொண்டு கீழ்ப்படிய கற்றுக்கொள்ள வேண்டும்” என்று புன்னகைத்தார். அம்மா அடுத்த நாள் மொத்த குடும்பத்தையும் தன்னோடு அழைத்து வந்து மகள் பூப்படைதல் விழாவை அறிவித்தார். இடதுசாரி அரசியல் சார்பு குடும்பமாக இருந்ததால், நல்லவேளை பெரிய ஆடம்பர விழாவில் இருந்து தப்பித்தேன். ஆனாலும், குடும்பமும், நட்பும், சுற்றமும் என் மீது மஞ்சள் நீரை ஊற்றி என்னைப் புனிதப்படுத்திவிட்டு சென்றார்கள். புது ப்ராவும், பட்டுத் தாவணியும், ‘இனி சும்மா பசங்களோட திரியக்கூடாது’ என்ற அறிவுரையும் கிடைத்ததை தவிர அந்த விழாவால் பயன்தரக்கூடிய விளைவுகள் எதுவும் இருந்ததாக நினைவில்லை. ஒவ்வொரு மாதமும் ரத்தம் சிந்தி தான் மாதவிடாய் குறித்த புதிர்களை மெல்ல மெல்ல விடுவித்துக் கொள்ள முடிந்தது. உள்ளாடைக்குள் பொழுதுக்கும் ஈரமாகி கொண்டிருக்கும் ஒரு பந்து துணியை வைத்துக் கொண்டு எப்படி இயல்பாக நடப்பது, பள்ளிக்கூட வகுப்பிலோ, பேருந்திலோ, விளையாடிக் கொண்டிருக்கும்போதோ, உடையில் ரத்தக்கறை பட்டுவிட்டால், அவமானத்தில் இருந்து என்னை நானே எப்படி காப்பாற்றிக் கொள்வது, மாதவிடாய் வருவதற்கு முன் மன அழுத்தங்களும், கோபமும், படபடப்புமாய் இருப்பதற்கு காரணமென்ன, ரத்த ஒழுக்கின் போது உடலின் வியர்வையிலும், மூச்சிலும் வித்தியாசமான வாசம் ஏன் வருகிறது, அதை எப்படி அணுகுவது, எப்படி சுத்தமாக வைத்துக் கொள்வது போன்ற பல விஷயங்களை பெற்ற தாய் கூட மகளிடம் பேசுவதற்கான பொருளாக இல்லாமல் இருப்பதால், பெண் பட்டு பட்டு தான் தெரிந்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
மருந்துக்கடைக் காரரிடம் நாப்கின் வாங்கும்போது, ஏற்கெனவே ப்ளாஸ்டிக் கவரால் மூடப்பட்ட பாக்கெட்டை மேலும் ஒரு ந்யூஸ் பேப்பரால் மூடி சரடு சுற்றி தர தேவையில்லை என்று பதின்ம வயதிலேயே சண்டை போட்டிருக்கிறேன். கடைக்காரர் யாருடைய மானத்தைக் காக்கிறார் என்று நினைக்கும்போதெல்லாம் கோபம் தலைக்கேறும். ரோடு சைட் ரோமியோஸ் சீட்டியடிப்பது, சினிமா பாட்டு பாடுவது தவிர, ஒரு நாள் நான் வாங்கிக்கொண்டு போகும் நாபகின் பாக்கெட் ‘பிரட் பாக்கெட்டா’ என்று கிண்டலாக கேட்க , எனக்குள் இருந்த 15 வயது ரௌத்திரக்காரி, ‘வீடு வரைக்கும் வா, ஜாம் வச்சு தரேன், சாப்பிடுவியா’ என்று சொல்லியிருக்கிறாள். காலங்கள் மாறியிருக்கின்றன தான். ஆனாலும் பெண்ணை கேலிக்குரியளாக்க, அவமானப்படுத்த மாதவிடாய் ஒரு எளிய ஆயுதமாகத் தான் இன்று வரை இருக்கிறது.
எனக்கு ஒரு படம் எடுக்கவேண்டும் எனப் பல நாட்களாக திட்டம். ஒரு எக்ஸ்ட்ரா லார்ஜ் நாப்கினை ரத்தத்தில் தோய்த்து ஆணின் பந்துகளுக்கு கீழே வைத்து அவனை நடமாடவிட்டு காமிராவை ஓட விட வேண்டும். உள்ளுறுப்புகளை எந்த வெட்கமும் இல்லாமல் வெட்டவெளியில் சொறிந்துவிட்டுக் கொள்ளும், தெருவோரங்களில் பலர் அறிய ஒன்னுக்கடிக்கும் வெகு நாகரீகமான ஆண்களுக்கு மாத விடாயை மட்டும் இயற்கை பரிசளித்திருந்தால் என்ன நடந்திருக்கும் என கற்பனை செய்துப் பார்த்திருக்கிறேன். அகிலமெங்கும் அலுவலகங்களில் அந்த மூன்று நாட்களுக்கு ஆண்களுக்கு சிறப்பு பணி விடுமுறை கிடைத்திருக்கும். ரத்த ஒழுக்கின் அடர்த்தி மற்றும் ஓட்டத்தை வைத்து ஆண்மையின் வீர்யம் விதந்தோதப்பட்டிருக்கும். சிறப்பு மருத்துவமனைப் பிரிவுகள் முளைத்திருக்கும். ஆண் கடவுளர்களின் ரத்த ஒழுக்கு தரிசனங்களுக்கு வரிசையில் மக்கள் கூடுவார்கள். எழுதும் போதே கிலி பிடிக்கிறது.
என் ‘பலிபீடம்’ ஆவணப்படத்திற்காக கம்பளத்து நாயக்கர்கள் சமூகத்தோடு வேலை செய்தபோது , அச்சமூக பெண்கள், மாதவிடாயின் போது கிராமத்திற்கு வெளியே கருவேலங்காட்டில் அமர்த்தப்பட்டிருந்தார்கள். மற்ற சமூகங்களில் வீட்டுக்குள்ளேயே தனியாக பெண்களை உட்கார வைப்பார்கள் பார்த்திருக்கிறேன். அவர்கள் சாப்பிடும் சாமான்கள் எல்லாம் தனியாக கவிழ்த்தப்பட்டிருக்க,கிராமத்திலிருந்து நடக்கும் தூரத்தில் தனியே பெண்களைக் குத்தவைத்திருந்தது எனக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. மாதவிடாய் பெண்களை தீண்டத்தகாதவர்களாக நடத்தும் சமூகம், மாதவிடாய் – கருவுறுதல் – பிள்ளை பெறுதல் போன்ற பெரும்பேறுகள் எதுவும் இல்லாத ஆண்களை அல்லவா தகுதி குறைந்தவர்களாக பார்க்க வேண்டும்! அந்தக் கேள்வியை பலிபீடம் படத்திலும் எழுப்பியிருந்தேன்.
தீட்டுத்துணியை மிகவும் கவனமாக அகற்ற வேண்டும் என்று அம்மா என் சிறுவயதில் சொல்லிக்கொண்டே இருப்பார். கோழி கொத்தினாலோ , நாய் நக்கினாலோ என் அழகெல்லாம் போய்விடும் என்று மிரட்டுவார். அதை நினைத்து மட்டும் பலநாள் என் தூக்கம் தொலைந்திருக்கிறது. ஒவ்வொரு தடவை தீட்டுத்துணியை மாற்றும் போதும், மிக கவனமாக ந்யூஸ் பேப்பர் சுற்றி, அதற்கு மேல் பிளாஸ்டிக் கவர் போர்த்தி, துண்டுக்கு கீழே மறைத்து யாருக்கும் தெரியாமல் பின்கட்டுக்கு எடுத்து சென்று, மண்ணைத் தோண்டி ஆழமாக புதைத்து வைப்பேன். ஆனாலும் நடு இரவில், தூக்கம் இழந்து, பின்கட்டுக்கு வந்து புதைத்த இடத்தை தோண்டிப் பார்த்து, நாய் எதுவும் இழுத்து செல்லவில்லையே என்று சோதித்து பார்த்துக் கொள்வேன். அப்படி எதுவும் நடந்து, காலையில், கோர முகத்துடன் நான் எழுந்துவிடக்கூடும் என்ற பயம் பதின்ம வயது முழுவதும் என்னைத் துரத்திக்கொண்டிருந்தது. ஒரு சமயம் ஆடி மாசத் திருவிழாவில் எங்கள் கிராமத்துப் பண்டாரம் பூசைகளின் போது சாமியை தன் மீது இறங்கவிட்டு ஒருவித மிருகத்தின் உடலசைவோடு ஊரெங்கும் தீட்டுத் துணிக்காக தேடித் திரிவதையும் அதை சாமிக்குப் படைப்பதையும் காணும் வாய்ப்பு கிடைத்தது . தீட்டுத்துணியை தின்றுவிட்டு சாமியே நல்லாயிருக்கும்போது, நாயும் கோழியும் நம்மை என்ன செய்துவிட முடியும் என்று தோன்றியது. என் பயம் கலைந்தது அப்படித்தான். மாதவிடாயின் போது, செய்யக்கூடாது என்று சொன்ன எல்லா விஷயங்களையும் நான் செய்துப்பார்த்திருக்கிறேன். கோயிலுக்குப் போயிருக்கிறேன், துளசி செடிகளைத் தொட்டிருக்கிறேன், சாமிக்கு படையல் செய்யும் பதார்த்தங்களை சாப்பிட்டு இருக்கிறேன், ஏன் கலவி கூட செய்திருக்கிறேன். இதுவரையிலும் என் கண்களை எந்த சாமியும் குத்தவில்லை
என் ஆவணப்படங்க்களுக்காக ஊர் ஊராக சுற்றித் திரிய ஆரம்பித்தபோது, நான் ஆய்வுசெய்த ஆவணப்படுத்திய சமூகத்துப் பெண்களிடம் அவர்களின் மாதவிடாய் சுகாதாரம் பற்றி பேசிப் பார்த்திருக்கிறேன். நாப்கின் வாங்கும் திறன் இல்லாத சூழலில் அவர்கள் பழைய துணிகளை பயன்படுத்துவதையே வழக்கமாக கொண்டிருந்தார்கள். சில வீடுகளில் ஒரு குடும்பத்துப் பெண்கள் எல்லோரும் அதே துணியை துவைத்து மறுசுழற்சி செய்வதையும் பார்த்திருக்கிறேன். வீட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவற்றைப் பத்திரப்படுத்தி வைப்பதும், அதைக்குறித்த உரையாடல்களில் சிமிக்ஞைகளைப பயன்படுத்தி பெண்கள் குறிப்புணர்த்திக் கொள்வதும் சுவாரஸ்யமானவை. எல்லோரும் பயன்படுத்தும் வகையில் பருத்தி சானிடரி நாப்கின்கள் குறைந்த விலைக்கு கிடைக்க செய்யும் நாள் எப்போது வரும் என்று ஆயாசமாக இருக்கும் . கூடவே என்னைப் போன்ற மத்தியதர குடும்பத்து பெண்கள் , நவீனம் என்ற பெயரில் பயன்படுத்தும் சானிடரி நாப்கின் ஒரு பக்கம் பிளாஸ்டிக் கழிவை அதிகப்படுத்திக்கொண்டிருக்க, வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் பெண்களின் பயன்பாட்டுமுறை இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத வகையிலும், செலவில்லாமலும் இருப்பதைக் குறித்து ஆச்சர்யமாகவும் இருக்கும் . ஒரு வகையில், பழைய துணியை மறுசுழற்சி செய்யும் முறை குடும்பத்துப் பெண்களிடையே அன்னியோனியத்தை ஏற்படுத்துவதாக எனக்கு தோன்றியது. “என்ன இந்த மாசம் மச்சான் சீக்கிரம் வந்துட்டாரு போலிருக்கு” என்று குறிப்பு சொற்களால் மாதவிடாய் குறித்து கிராமத்துப் பெண்கள் பேசிக்கொள்வதும் அதையொட்டி ஒருவரை ஒருவர் சீண்டி விளையாடுவதும் அப்பெண்களுக்கு மட்டுமே அந்தரங்கமான அழகான உலகம். 2004-5 இல் சுனாமி நிவாரணப்பணிக்காக சில தன்னார்வ அமைப்புகளுடன் சுற்றுப்பயணம் செய்து, மக்களுக்குத் தேவையான சேலை துணிமணி, போர்வைகள், லுங்கிகள், குழந்தைகளுக்கான உடைகள் என்று விநியோகம் செய்துக்கொண்டிருந்தோம்.அப்போது பெண்கள் ‘எங்களுக்கு யார் நாப்கின் தருவாங்க’ என்று கேட்டபோது பொட்டில் அடித்தாற்போல இருந்தது. பெண்களின் அடிப்படை தேவையான நாப்கினை எவ்வளவு வசதியாக எல்லோரும் மறந்துவிடுகிறோம் என்று வெட்கமாக இருந்தது. நூற்றுக்கணக்கான நாப்கின் பாக்கெட்டுகளை ஏற்பாடு செய்துக்கொடுத்த போது நன்றியோடு பார்த்த நாகப்பட்டினப் பெண்களின் கண்கள் என் நினைவுகளிலிருந்து நீங்காதவை.
மாதவிடாயால் மாசுபட்டவளாகப் பெண் கருதப்படுவதால் வழி வழியாக பெண்கள் மீன்பிடித் தொழிலுக்கு அனுமதிக்கப்படுவதில்லை. தேவதைகள் ஆவணப்படத்திற்காக ராமேஸ்வரத்தில் மீன் பிடித்தொழில் செய்யும் சேதுராக்கு அம்மாவை நேர்காணல் செய்தபோது அதைக் குறித்தக் கேள்வியை முன்வைத்தேன். அவர் தீர்மானமாக, நான் வழிபடும் கடவுள் தன்னிடம் தான் மாசுப்படவள் என்று சொல்லவில்லை என்றும், மற்றவர்கள் என்ன பேசுவார்கள் என்பதைக் குறித்த கவலை தனக்கோ, பசிக்கும் தன் வயிற்றுக்கோ இல்லை என்றும் பதில் அளித்தார். மாதவிடாயின் போதும் கூட வலைகளைத் தொடுவதும், சுத்தம் செய்வதும், மீன் பிடிப்பதுமாய்த் தான் இருப்பதாகவும், அதன் காரணமாக தான் ஒன்றும் அழிந்துப் போய்விட வில்லை யென்றும் சொல்லிக் காட்டினார். அவர் சமைத்த மீன்களை நானும் உண்டேன், அவரின் குடும்பமும், ராமேஸ்வர மக்களும் அவர் பிடித்துவரும் மீன்களை தினந்தோறும் உண்கின்றனர். நாங்கள் யாரும் அதனால் சாகவில்லை. புனிதம், புனிதமற்றது என்ற கதையாடல்கள் எவ்வளவு அபத்தமானவை என்பதை சேதுராக்குகள் இந்த செவிட்டு உலகத்திற்கு அறிவித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
மீனவப் பெண்களுடன் செங்கடல் திரைப்பட வேலையாக பல மாதங்கள் தங்கியிருந்தபோது நான் கற்றுக்கொண்ட வார்த்தைகள் இரண்டு. தூமையைக் குடிக்கி, சாண்டையக் குடிக்கி. ஆண்களுக்கு நிகராக கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசும் மீனவப் பெண்களின் துடுக்கும் அழகும் என் மனதை அள்ளும் விஷயங்கள். காமம் சற்று தூக்கலாக தெரியும் இந்த வார்த்தைகள் “கெட்ட” வார்த்தைகளாக ஆனது துரதிருஷ்டம் தான் என்று ஒரு சந்தர்ப்பத்தில் நான் சொன்னபோது அவர்கள் ரகசியமாக சிரித்துக்கொண்டார்கள். மர்ஃபத் மரபை பின்பற்றும் சூஃபி ஃபக்கிர்கள் தங்கள் பெண் துணைகளின் மூன்றாம் நாள் மாதவிடாய் ரத்தத்தை அருந்தி அவர்களின் காதலை ஏற்றுக்கொள்ள சொல்வது வழக்கமாம். இந்த சடங்கு பெண்களோடு தங்களை சமமாக்கி கொள்ள உதவுகிறது என்பது சூஃபி ஃபக்கிர்களின் நம்பிக்கை. பெண்கள் தங்கள் காதலர்களுக்கு இச்சடங்கை பரிந்துரைக்கலாம். தன்னையும், தன் உடலையும், தற்காதலையும் சரியான அர்த்தத்தில் தன்னுணரும் பெண் மட்டுமே ஆணுக்கும் அவற்றை சரியாக உணர்த்த முடியும். என் காதலன் ஒருவனுக்கு நான் அளித்த ஒப்பற்ற பரிசு என் மாதவிடாய் ரத்தத்தில் நான் வரைந்து தந்த ஓவியங்கள் தாம்.
உலகின் அழகிய முதல் பெண் தொகுப்பிற்காக, தீவிரப்பெண்ணிய அரசியல் பேசும் கவிதைகளைப் பிரத்யேகமாக உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்த போது, நிரலில் முன் நின்றது மாதவிடாய் குறித்த கவிதைகள் தான். தன்னிரக்கம் தொனிக்காத கொண்டாட்டக் கவிதைகளாகவும், ஃபேண்டஸியாகவும், இன்னும் வானவியல்-மானுடவியல்-உயிரியல் என்று பல கோணங்களில் எழுதிப் பார்க்கவேண்டுமெனவும் முடிவு செய்தேன். பெண் உடலை எழுத மொழியில் போதாமை இருப்பதாக எனக்குப் பட்டது அந்தக் காலகட்டத்தில் தான். நிகண்டுகளைப் புரட்டுவதும் அகராதிகளை நோண்டுவதுமாய் திரிந்ததில் தூமை என்ற சொல் தட்டுப்பட்டது. சித்தர் பாடல்களில் இவ்வார்த்தை பயன்பட்டிருப்பதும் கவனத்திற்கு வந்தது. சிவவாக்கியர் பாடல் ஒன்று.
தூமை தூமை என்றுளே துவண்டலையும் ஏழைகாள்
தூமையான பெண்ணிருக்க தூமை போனதெவ்விடம்?
ஆமைபோல முழுகி வந்து அனேக வேதம் ஓதுறீர்
தூமையும் திரண்டுருண்டு சொற்குருக்கள் ஆனதே !
தரையினில் கிடந்தபோது அன்று தூமை என்றிலீர்!
துறையறிந்து நீர் குளித்ததன்று தூமை என்றிலீர் !
பறையறிந்து நீர் பிறந்த அன்று தூமை என்றிலீர்!
புரையிலாத வீசரோடு பொருந்துமாற தெங்கனே?
சொற்குருக்கள் ஆனதும் சோதி மேனியானதும்
மெய்க்குருக்கள் ஆனதும் வேண பூசை செய்வதும்
சற்குருக்கள் ஆனதும் சத்திரங்கள் சொல்வதும்
மெய்க்குருக்கள் ஆனதும் திரண்டுருண்ட தூமையே !ஒரு நிகண்டு, தூமைக்கு ‘தூய’ ‘மை’ என்று அர்த்தம் தந்திருந்தது. நிந்தனைச் சொல்லாக வழக்கத்தில் இருக்கும் தூமையின் வேர் தெரிந்தபின் அதைக் கைப்பற்றும் வெறி வந்தது. அந்த வெறியில் எழுதியது தான் தொகுப்பில் இருக்கும் தூமைக் கவிதைகள். தூமை ரத்த ஆற்றின் கரையோரத்தில் சம்மணமிட்டு அமர்ந்து வரலாற்றையும் வேட்கையையும் எழுதிப்பார்த்த கவிதைகள். அக்கவிதைகளின் மூலம் தூமா என்ற காதலனை உருவாக்கி, தூமத்திப்பூ சோலைகளை உருவாக்கி, தூமை ரத்தத்தில் ஓவியம் பழகி, தூமை வாசம் துலங்கும் பலகாரங்கள் செய்து தின்னக்கொடுத்து, மாதந்திர வசந்தமாக தூமையை கொண்டாட அழைத்தேன். தூமை கசியும் யோனியில், கோப்ரோ கேமிராவை நுழைத்துப்பார்த்து என் உடலின் மாயத்தைக் கவிதையின் மூலம் அறிந்துக் கொள்ள முயற்சித்தேன். தூமை மட்டுமல்ல, கிளிட்டோரியஸ், ஜி-ஸ்பாட், ஆர்கசம் என பெண்ணின் வேட்கையை எழுத தமிழில் நிகர்சொற்களை புதிதாக உருவாக்கித் தான் எழுத வேண்டியிருந்தது. Women should occupy desire – பெண்கள் வேட்கையை ஆக்கிரமிக்க வேண்டும். பெண் தன் வேட்கையை தானே நிர்மாணிக்கும் பொறுப்பை ஏற்க வைக்க கவிதையால், கலையால் மட்டுமே முடியும் என்பது என் நம்பிக்கை.
(என் தூமைக் கவிதையொன்று )
தூமையின் வயது பதின்மூன்று
என் தூமையின் வயது பதின்மூன்று
உடல் என்ற மந்திரவாதி
வேட்கையின் கணிதத்தை
மாத அட்டவணைக்குள்
கூட்டிக் கழிக்கத்
தொடங்கி
பதின்மூன்று வருடங்களாகிறது
என் பௌதீக தேசத்தில்
முலைகள் அமைச்சாகி
அல்குல் அரியணையேறுவதற்குரிய
தளவாடங்கள்
பருவ சாதகத்தின்
சட்டங்களில்
பயிற்சி பெற்றுவிட்டன
என் தாயின்
தாயின் தாயின் தாயின்
உப்பு திரவியமாக்கி என்னை
மிதக்க வைத்ததில்
மொழியின் துடுப்புகளும்
வயதிற்கு வந்திருந்தன
பனுவல் அகப்பட்டதும்
நினைவுப் பதிவாகப் பெட்டியென
மனதை அடைந்ததும்
வேட்டையின் சங்கேதங்கள்
புலப்பட்டதும்
தூமையைக் குடித்துப் பழகிய
நாட்களில் தான்
நீரகமாக
குடுவையில் நிறைவதும்
உயிரகமாக
ஆகாயத்தில் கலப்பதும்
கரிமமாக
பாறையில் உறைவதுமாய்
தூமத்தியாகி என்னை
வினையாற்றுகிறது வயது
– லீனா மணிமேகலை
பின்பனிக்கால கவிதைகள்
உன்னைக் கொன்ற கத்தியை
நேற்று தான் கண்டெடுத்தேன்
அதில் என் கைரேகைகள் இல்லை
ஆனால் அத்தனை சிறிய கைரேகை
கனவுக்கும் இல்லை
வேறு யாருடையதாக இருக்கும்
உயிருடன் நீ அகப்பட்டப் பிறகும்
இந்தக் கேள்விக்கு என்ன அர்த்தம்
*
உன் சட்டை நுனியை
இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறேன்
கடந்துவிடப் போகும் இறுதி மேகத்தையும்
இழுத்துக் கொண்டிருப்பதைப் போல
பெருமழையை நிறுத்தி விடுபவள் போல
கிளைகளிலிருந்து பறவைகளை
ஒருபோதும் தப்ப விடாதவள் போல
கனன்றுக் கொண்டிருக்கும் தீயின் நீலத்தைப் போல
*
எனது வார்த்தைகளை
உனக்கு இளைப்பாறத் தருகிறேன்
அதில் டால்ஸ்டாய் எங்கே எனக் கேட்காதே
சற்றுப் பொறுமையாகப் பார்
மாங்கன்றுகளை நட்டிருக்கிறேன்
கூடு வைக்க தூக்கணாங்குருவிகளை
அழைத்திருக்கிறேன்
சிறிதுகாலம் கு. அழகிரிசாமி
இளைப்பாறியிருந்தார் தெரியுமா
அப்போதெல்லாம் அவர் கனவில்
கமலாதாஸ் வந்ததாகவும் சொல்லிக்கொண்டிருந்தார்
தன்னுடைய வார்த்தைகளாக மாற்றிக்கொள்ள முடியாததால்
பிரமிள் கோபித்துக்கொண்டு வெளியேறிவிட்டார்
உனக்குப் பிடித்த வார்த்தைகளில் ஊஞ்சலைக் கட்டிவிடுகிறேன்
நித்திரை வை
சிறுவயதில் நீ கடலில் பிடித்து விட்ட நண்டுகள்
திரும்பி வரலாம்
ஃப்ரீடா போல நீ ஆசை ஆசையை வரைந்துப் பார்த்த
முதல் காதலி புன்னகைக்கலாம்
அணைத்துக் கொள்
வார்த்தைகள் உனதாகலாம்
*
நினைவு ஒரு கறுப்பு வெள்ளைப் புகைப்படம்
அதில் வண்ணமடித்துப் பார்க்கிறேன்
மாசாகப் படிகின்றது
சட்டத்திற்குள் அடித்தால்
திரவமாக கசிந்து வெளியேறுகிறது
பரிசாக கைமாற்றினால் காணாமல் போகிறது
பிரதி செய்தால் உருவம் கலைகிறது
பாரம் தாங்காமல் ஒரு பறவையிடம் தந்தேன்
அது
காலமற்ற நிலத்தில்
அதை தவறவிட்டுவிட்டதாக அறிகிறேன்
*
காதல் வேண்டும்
காதலின் முதல் பருவத்துக்
காதல் வேண்டும் குடித்து முடித்தும் தளும்பிக் கொண்டிருக்கும்
திராட்சை ரசம் போல
*
நாம் பயணம் செய்த படகை உனக்கு நினைவிருக்கிறதா
அதன் ஓட்டையை திறந்து விடுவதும்
நீரை இறைத்து வெளியே
ஊற்றுவதுமாய் மாறிமாறி
நாம் விளையாடிக் கொண்டது நினைவிருக்கிறதா
நேற்று கடல் சொல்லிக்காட்டியது
*
காபூலின் மாதுளம்பழக் காடுகளில்
நடந்துக் கொண்டிருக்கும் போது
உனக்கு முத்தமிட்டதாக கனவு கண்டேன்.
அப்போதும் மேற்கு தொடர்ச்சி மலைகளில்
மேய்ந்துக் கொண்டிருந்த வரையாட்டின் கண்கள்
நம்மைப் பார்த்துக் கொண்டிருந்தன
*
சுள்ளென அடிக்கும் வெயில் நமது காதல்
அதில் கறுத்து மின்னும் தென்னங்கீற்று நம் உடல்
*
என் ஆன்மாவின் அடிவாரத்தில்
திரவமாக ஓடிக்கொண்டிருக்கிறாய்
உரையாடும் கணம்தோறும்
அதில் சுழியும் வட்டங்களில்
கெண்டை மீ ன்களாக
உன் கண்கள் துள்ளுகின்றன
*
நான் எழுதுவதையெல்லாம்
வாசித்துக் கொண்டிருக்கிறாய்
எனத் தெரியும்
இதோ நான் உண்ணும் வெண்பூசணியின்
துண்டொன்று உனக்கு
அதன் கடித்த வடிவம் உன் நினைவு
*
என் இதயத்தின் கிணறுகளில் சிலவற்றை
நல்மழை கொண்டு நிரப்பினாய்
மற்றவை அதனினும் ஆழமானவை
ஆனாலும் உன் வானம் பார்த்தே கிடக்கிறது என்னுடல்
*
குறிப்பாக
உன்னைப் போதுமான அளவு
முத்தமிடவில்லையென்ற
புகாரில்லாமல்
இறக்க விரும்புகிறேன்
*
நான் தொலைவு
நான் மறதி
நான் பிளந்த மௌனம்
நான் கைவிடல்
குகையின் குறுக்குவெட்டைப் போன்ற
என் மோனம் கண்ணீர் அற்றது
எதிரொலி தொலைத்தது
*
அந்த ஆற்றுப் படுகையில்
என் காதல்களைப் புதைத்து வைத்திருக்கிறேன்
உன் கைகளில் அகப்படும் மண்
உன்னுடையது
நம்முடையது
*
என் பொறாமையைக் கண்டு விசனம் வேண்டாம்
அது பசி தாளாமல் அழும் குழந்தை போன்றது
-லீனா மணிமேகலை
(நன்றி ஆனந்த விகடன், இன்மை டாட் காம்)
21/10/2014
கழுவாய்
நன்றி மணல்வீடு – இதழ் 22
Illustration by Chiara Bautista
1.
கைவிடப்பட்ட ஆன்மாக்களையெல்லாம்
அள்ளிப் போட்டுக் கொண்டு
கொளுத்திப் போட்ட கடலில்
துடுப்பை இழுக்கிறாள்
கால்களைத் துறந்த தேவதை
அவளின் பிரகாசமான இறக்கைகளால்
நீலத்தின் உப்பு, சாம்பல் தீவுகளாய் திரண்டது
அத்தீவுகள் பெயர் தெரியாத மிருகங்களின்
உருவங்களாய்
வாய் பிளந்து தெரிந்தன
தீர்ப்பு நாட்களை ஒத்திப் போடும்படி
கடவுளர்களின் பெயர்களை
உச்சரிக்கப் பணித்தாள் தேவதை
பதிலுக்கு அவரவர் காதலர்களின் பெயரை
முணுமுணுத்த
ஆன்மாக்களை மன்னிக்க மறுத்தாள்
நடப்பதையும் நம்பியதையும் விரும்பியதையும்
இழந்ததையும்
அறிந்துக் கொண்ட
அலைகளின் சன்னதம்
படகை கவிழ்த்தது
கிழிந்த நங்கூரங்கள் சடசடக்க
நாளையற்ற
உலகை குறித்தப் பாடலொன்றை
தேவதை பெருங்குரலெடுத்துப் பாடினாள்
நித்தியத்தை நோக்கிய இந்தப் பயணத்திற்கு
அனுமதி மறுக்கப்பட்ட
’அன்பால் செத்த உடல்கள்’
கரைகளை காவல் காத்தன
Illustration by Chaira Bautista
2.
சாலையின் நடுவில் நிற்கிறோம்
நாமிருவரும் இனி
சேர்ந்துப் படுத்துறங்க முடியாதபடி
வியர்வை மூழ்கடித்த
இடத்திற்கு
குறுக்கு சால் ஓடும்
சாலை அது
கறுத்த பூதங்களையும்
பாம்புகளையும்
நம்மீது நாமே
விரும்பி ஏவிக் கொண்ட
காட்சியின் ஆகச்சிறந்த
நடிகர்கள் நாம்
சற்று அசந்த நேரங்களில்
ஊர் பூசிய சேற்றையும்
தின்று பசியாறினோம்
நிழல் தந்த மரம்
நாம் கண்ணீர் சிந்த மறுத்ததால்
பட்டுப்போன இந்த
நாளில்
விடைபெறுவோம்
நாம் எழுதியதை நிறுத்திக் கொண்ட
ஏடுகளில் ஒரு பக்கத்தை நீ எடுத்துக் கொள்
மறுபக்கத்தை நான் பத்திரப்படுத்துகிறேன்
பார்
நாம் ஒருவரையொருவர்
விடுவித்துக் கொண்டதும்
இரு பக்கமும் கோள் காட்டுகிறான்
சூரியன்
Illustration by Chaira Bautista
3.
இறுதி அத்தியாயத்தை எரித்துவிடலாம் என்றால்
இன்னும் பச்சையத்தில் கவிதைகள்
அழித்ததாய் நினைத்திருந்த விதைகள்
முளைவிட்டு ஆற்றில் இறங்கி
கடவுளையும் தேர்ந்தெடுத்து
தம் பாடல்களை தாமே பாடி
முப்போகம் விளைகின்றன
வேட்கை ஊறிய தோல்
உரித்தாலும் உப்பிட்டாலும்
உடலினும் பெரிதாய் வளர்ந்து
தங்கள் மதகுகள் திறந்து
கிரகணங்களை கிளர்த்துகின்றன
ஒரு கொலை நிகழ்ந்தாலொழிய
ரத்தம் உறையாது
வாக்குறுதியையோ, கனவையோ,
வெறும் வார்த்தைகளென
உதிர்க்க நினைக்கும் உடல்களை
பலி கேட்கிறது பிரிவு
லீனா மணிமேகலை
இன்மை.காம் இணைய இலக்கிய இதழில் வந்த கவிதைகள்
நன்றி – இன்மை.காம் , அபிலாஷ்
பலி
பக்தி நால்வர் என கருதப்பட்டவர்கள்
நேற்றும் இல்லை
நாளையும் இல்லை
நாங்களே கடவுள்
என அறிவித்துக்கொண்டனர்
எழுதப்பட்ட கவிதைகள்
அரசாணைகளாகி விட்டதால்
புத்தகங்களை கடல் கொண்டு போய் விட்டது
உடைக்க ஒரு தேங்காய் கூட வாய்க்காத
கொடுமணல் நிலத்தில்
லிங்கம் முளைத்த அவர்களது உடல்
ஒவ்வொரு புதிய பக்தரையும்
பலி கேட்டது
சதா உதிரம் பெருக்கிக் கொண்டிருந்ததால்
தீட்டென ஒதுக்கப்பட்டவள் மட்டும்
ஊரின் ஒதுக்குப்புறத்தில்
ஆலய மறுப்பு பாடலொன்றை
சுதி தப்பாமல் பாடிக்கொண்டே இருந்தாள்
கழு மேடைகள்
அந்த ஒற்றைக் குரலுக்குமுன்
தோற்றுக் கொண்டிருந்தன
கண்ணன் ராதை
நீ கண்ணனும் இல்லை
நான் ராதையும் இல்லை
நீ என் கவிதைப் புத்தகத்தை
பதிப்பிக்க வேண்டாம்
நீ கண்ணனும் இல்லை
நான் ராதையும் இல்லை
உன் பெண்ணிய நாடகத்தில்
நான் நடிகையாகவும் வேண்டாம்
நீ கண்ணனும் இல்லை
நான் ராதையும் இல்லை
அம்பேத்காருக்கு பூணூலும் வேண்டாம்
பெரியாருக்கு நாமமும் வேண்டாம்
நீ கண்ணனும் இல்லை
நான் ராதையும் இல்லை
போலீஸ் கான்ஸ்டபிள் துப்பறியும்
ஒப்பந்தங்கள் நமக்குள் வேண்டாம்
நீ கண்ணனும் இல்லை
நான் ராதையும் இல்லை
விமர்சனமும் வேண்டாம்
வக்கீல் நோட்டீசும் வேண்டாம்
நீ கண்ணனும் இல்லை
நான் ராதையும் இல்லை
நீ காத்தவராயன்
நான் இசக்கி
நாம் காதல் செய்வோம்
கூடி கலவி கொள்வோம்
கேள்வி பதில் நிகழ்ச்சி
நீங்கள் அங்கையற்கரசு தானே?
….
இருவரா ஒருவரா
ஷ்ஷ்
ஆணா பெண்ணா
ஷ்ஷ்
கேள்வி கேட்டால்
வெளியே தூக்கி எறிவேன்
புகைப்படங்களை வெளியிடுவேன்
அவற்றை அழித்து விட்டேன்
அப்படியென்றால் எழுதுவேன்
என் கையை முறித்தாய் என சொல்வேன்
உங்கள் கைகள் நன்றாகத் தானே இருக்கின்றன
நீ முறித்தது பெண்ணியக் கைகள்
அப்படியென்றால்
நீ பிய்த்தது தலித் நகங்கள்
அய்யய்யோ
நீ சிந்தவைத்தது மார்க்சிய ரத்தம்
எனக்கு கருத்தெல்லாம் புரியவில்லை
சுதந்திரம் வேண்டும்
தவறான முகவரி
நீங்கள் அங்கையற்கரசு தானே?