போர் வந்த நாள் – கவிதை
நன்றி – ஆனந்த விகடன்
கவிதை : நிகோலா டேவிஸ் (Nicola Davies)
மொழிபெயர்ப்பு: லீனா மணிமேகலை
போர் வந்த அந்த நாளில்
சன்னல் நிலைகளில் பூக்கள் மலர்ந்திருந்தன
என் அப்பா
என் இளைய சகோதரனை
தாலாட்டுப் பாடி
தூங்கவைத்துக் கொண்டிருந்தார்
என் அம்மா
காலை உணவை சமைத்துவிட்டு
மூக்கில் செல்லமாக உரசி முத்தமிட்டு
பள்ளி வரை வந்து விட்டுச் சென்றார்
அந்த நாளின் காலையில் தான்
எரிமலைகளைப் பற்றி படித்திருந்தேன்
தலைப்பிரட்டைகள் இறுதியில் தவளைகளாக மாறுவதைக் குறித்து
பாடல் ஒன்றைக் கற்றிருந்தேன்
என் உருவ ஒவியத்திற்கு சிறகுகள் வரைந்திருந்தேன்
மதியம் சற்று ஆசுவாசமாக
டால்பின் வடிவிலிருந்த மேகத்தை அண்ணாந்துப் பார்த்துக்
கொண்டிருந்த வேளையில் தான்
போர் வந்தது
ழுதலில் இடியிறங்கிப் பின் ஆலங்கட்டி மழை தெறித்தது போல
இருந்தது
தீயும் புகையும் இரைச்சலுமாய் எனக்கு ஒன்றும் விளங்கவில்லை
போர்
விளையாட்டுத் திடல் தாண்டி
என்
ஆசிரியரின் முகத்திற்கு
வந்தது
வகுப்பின் கூரையில் விழுந்தது
நகரத்தை உடைத்து நொறுக்கியது
ஒரு கறுப்பு ஓட்டையாயப் போன
என் வீட்டைப் பற்றி
எந்த வார்த்தைகளைக் கொண்டு விளக்குவது
போர்
எல்லாவற்றையும் கொண்டு போனது
எல்லோரையும் கொண்டு போனது
ரத்தம் கசியும் தனித்த கந்தை மூட்டையானேன் நான்
ஓடினேன்
லாரிகளுக்குப் பின்
பேருந்துகளில் தொற்றிக்கொண்டு
வயல்களில் சாலைகளில் மலைகளில்
குளிரிலும் மழையிலும் புழுதியிலும்
பொத்தல் படகுகளில்
மூழ்கி
தப்பி
குழந்தைகள் முகம் மணல் கவ்விக்கிடந்த கடற்கரைகளை அடையும் வரை
ஓடினேன்
இனி ஓடவே முடியாத நிலைவரை
எண்ணிட்ட குடிசை வரிசை
கண்ணில் படும்வரை
ஓரு மூலையும்
அழுக்குப் போர்வையும்
காற்றில் முனகும் கதவும்
அகப்படும்வரை
போர்
என் தோலின் அடுக்குகளில்
என் கண்களுக்குப் பின்புறம்
என் கனவுகளில்
என்னைப் பின்தொடர்ந்தது
என் இதயத்தை ஆக்கிரமித்தது
என்னிடம் தங்கிவிட்ட போரைத் துரத்த
நடந்தேன்
நடந்தேன்
போர் போயிராத இடத்தை தேடி
நடந்தேன்
போன பாதைகளில்
அடைக்கப்பட்ட கதவுகளில்
இறங்கிய சாலைகளில்
புன்னகையைத் தொலைத்து
திருப்பிக் கொண்ட முகங்களில்
போர்அப்பியிருந்தது
நடந்து நடந்து
ஒரு பள்ளிக்கூடத்தைக் கண்டுபிடித்தேன்
சன்னல் எட்டிப் பார்த்தபோது
அவர்கள் எரிமலைகளைப் படித்துக்கொண்டிருந்தார்கள்
பறவைகளை வரைந்துக் கொண்டும்
பாடிக்கொண்டும் இருந்தார்கள்
உள்ளே போனபோது
அறையில்
என் அடிச்சுவடுகள் எதிரொலித்தன
கதவைத் தள்ளி திறந்ததில்
பல முகங்கள் என்னை நோக்கி திரும்பின
ஆசிரியரின் முகம் இறுகியிருந்தது
இங்கே வேறு யாருக்கும் இடமில்லை என்றார்
உட்காருவதற்கு நாற்காலி இல்லை
என்றார்
என்னை வெளியேறச் சொன்னார்
போர் அங்கும் வந்துவிட்டது போலும்
குடிசைக்குத் திரும்பி
மூலைக்குத் தவழ்ந்து
போர்வைக்குள் சுருண்டுக்கொண்டேன்
போர் உலகம் முழுவதையும் எடுத்துக் கொண்டுவிட்டதென
நினைத்தேன்
கதவு அடித்தது
காற்று தானென நினைத்தேன்
ஆனால் ஒரு சிறுமியின் குரல் கேட்டது
“இது உனக்காகத் தான் கொண்டுவந்தேன்
நீ இனி பள்ளிக்கு வரலாம்” என்றாள்
அவள் கையில் ஒரு நாற்காலி இருந்தது.
நான் இனி அதில் அமரலாம்
எரிமலைகளைப் பற்றிப்
பாடம் படித்து
தவளைகளைப் பாடி
என் இதயத்தை அடைத்து கிடக்கும்
போரை விரட்டலாம்
“என்னுடைய நண்பர்களும்
நாற்காலிகள் கொண்டு வந்திருக்கிறார்கள்
இந்த முகாமில் இருக்கும்
எல்லாக் குழந்தைகளும்
பள்ளிக்கு வரலாம்”
அந்த சிறுமிபுன்னகையோடு சொன்னாள்
குடிசைகளில் இருந்து
குழந்தைகள் இறங்கிவர
நாற்காலிகள் நிரம்பிய சாலையில்
கைகோர்த்து நடந்தோம்
நாங்கள் முன்வைத்த
ஒவ்வொரு அடிக்கும்
போர் பின்வாங்கியது
குறிப்பு:
பெற்றோர்களை இழந்த 3000 சிரியக் குழந்தைகளை அகதிகளாக ஏற்கமறுத்த பிரிட்டனை எதிர்த்து, சிறுவர் இலக்கியத்தில் பரந்துப்பட்டு அறியப்படும் எழுத்தாளர் நிக்கோலாடேவிஸ் எழுதி இக்கவிதை வாசிக்கப்பட்ட உடன் ஓவியர் ஜேக்கிமோரீஸ் ஏற்கெனவே எல்லாவற்றையும் இழந்துநிற்கும் குழந்தைக்கு, மறுக்கப்பட்ட நாற்காலியை வரைய, டிவிட்டரில் அது #3000Chairs என்ற பேரியக்கமாக மாறி உலகமெங்கிலுமிருந்து 3000 ஓவியர்கள் நாற்காலிகளை வரைந்து அனுப்பி தங்கள்ஆதரவை தெரிவித்திருக்கிறார்கள்.
திருநங்கையை அல்லது திருநம்பியை காதலிப்பது எப்படி
நன்றி – விகடன் தடம்
கவிதை – கபே மோசஸ் (Gabe Moses)
மொழிபெயர்ப்பு – லீனா மணிமேகலை
குறி, யோனி
முலை, மார்பு
போன்ற சொற்களை கேட்ட மாத்திரத்தில்
விரியும் உங்கள் மனப் பிம்பங்களை
மறந்துவிட துணிய வேண்டும்
மேலும் அச்சொற்களை மெல்லத் திறந்து
ஒரு மருத்துவச்சி போல அவற்றின் மார்புக்கூடுகளை அழுத்தி
புதுரத்தம் பாய்ச்சுவதோடு
அவற்றின் எலும்புகளின் மஜ்ஜையில் கைவிட்டு
அர்த்தங்களை கலைத்துப்போட வேண்டும்.
பழைய சொற்களை முற்றிலும் துறந்து
‘கிலுக்’ ‘தித்தோ’ என்பது போன்ற
புதிய சொற்களை உருவாக்க வேண்டும்
அவன்
ஆடையின் அடியில் ஆதுரமாய் தடவிக் கொடுக்கும்போது
பற்களுக்குப் பின் கிடுகிடுக்கும் இதயத்துடிப்பு
ஒவ்வொரு அணுவிலும் இரையும் மூச்சு
கலவியில் வளையும் முதுகின் முனகல்
அடுக்கி வைக்கப்பட்ட காகிதக் கோப்பைகளில் நிறையும் மழைநீரென
அவள்
துவாரங்களில் தளும்பும் குளங்களின் சலசலப்பு
அன்பின் உச்சம் ஏற்படுத்தும் சத்தங்களில் கிடைக்கும்
உப்பின் எடை கூடிய புதியசொற்கள்
அவன் உடையின் அடுக்குகளை களையும் போது
நோயாளியின் காயக்கட்டுகளை அவிழ்ப்பது போன்ற பாவனையைக் கைவிடுங்கள்
அறுவை சிகிச்சை செய்துகொண்டாயா என கேட்டு தொலைக்காதீர்கள்
அவன் தொடைகளின் ஊசிமுனைகுத்தியெடுத்த தழும்புகளை காயங்களென கருதாதீர்கள்
நீங்கள் அன்பு செய்யதரப்பட்டிருக்கும் உடல்
சிகிச்சை கத்திகளைக் கண்டிருக்கின்றன
கடவுளின் பலிபீடங்கள் ஏறியிருக்கின்றன
வடுக்களின் திசுக்கள் எல்லை கட்டிய
கவனமாக செதுக்கப்படட அப்புலத்தை
இயற்கையின் வஞ்சனையோடு பார்த்து விடாதீர்கள்
மார்பெலும்புகளை அவள் உங்களுக்குத் தரும்போது
அவற்றில் கிளைத்திருக்கும் ஏக்கங்களை
சதையைவிட கூட தெரியும் திசு திணிப்புகளை
உங்கள் ஸ்பரிசத்தால் பழுக்க விடுங்கள்
கேன்சரிலோ சர்க்கரை நோயிலோ
தொலைப்பதை போன்று
மார்பு பெருக்கத்தை அவள் தொலைத்திருந்தால்
குறைப் பெண்ணாக தெரிய மாட்டாள்
மரபணு விபத்தும்
கார் விபத்து போன்றது தான்
கட்டை விரல் அளவு முளைவிட்டிருக்கும் தசையை
முத்தமிட அவன் தரும்போது
உங்களுக்குள் ஆழ இறக்கி
இதயத்தின் அடிவாரத்தில் அவன் பெயரை கீற விழையும்போது
உங்கள் வாயால், உங்கள் கையால்
உங்கள் இடுப்பின் அடிக்கூட்டுக்குள்
அதை அவ்வாறே பிடித்துக்கொள்ளுங்கள்
அவனுடைய தோல் வெறும் உராய்தலாயில்லாமல்
நீங்கள் நினைத்ததை விட
ஆழமாக உங்களைத் தீண்டும்
நமது உடல்கள் நமது சிறிய பின்னம் தான்
நமது இதயத்தை தாங்கி கொண்டிருக்கும் வினோத வடிவத்திலான நாளங்கள்
உண்மையில் நம்மை முழுமையாக தாங்கிப்பிடித்துக் கொள்ள முடியாதவை
ஒவ்வொரு மூச்சுக்கும் அதன் மூட்டுகள் சிரமப்படுகின்றன
நாம் என்பது
துடிப்பும் வியர்வையும் திசுக்களும் நரம்பின் முடிவுகளும் தாம்
நமக்கு நாமே
அகப்படும் வரை தடவியும் தடுமாறியும் திரிகிறோம்
என்றென்றைக்கும்
உடல்கள் ஒன்றையொன்று வாசித்துக்கொண்டு தான் இருக்கின்றன
பாகங்கள் அடைத்துவைக்கப்பட்ட பைகள் நம் உடல்கள்
வேறு வேறாக அவிழ்த்துப் பார்த்துக் களிப்படைகிறோம்
பற்களை நாக்குகளை
இடுப்பெலும்புகளை
பணிக்கப்பட்ட செயல்களில் இருந்து விலக்கி வேறு பணிக்கிறோம்
மோத விடுகிறோம் வேடிக்கை பார்க்கிறோம்
முயன்றாலும்
ஒருபோதும் இதயத்தின் விதிகளை மட்டும்
நம்மால்
மாற்ற முடிவதில்லை மறக்க முடிவதுமில்லை
டெகீலா
நன்றி – விகடன் தடம்
ஓவியம் – மணிவண்ணன்
ஒவ்வொருமதுபானக்கடையிலும் யாரோ ஒருவன்
தன குவளையில் மிச்சமிருக்கும் மதுவை
வெறித்தபடி அமர்ந்திருக்கிறான்
அந்த மதுவில் எல்லாமும் மிதக்கிறது
சொல்லப்படாத காமம், காதலின் துரோகம்
ஈரம் காயாத கலவி, பிரிவில்லாத பிரிவு,
கைவிடமுடியாத வாக்குறுதிகள் என
எல்லாவற்றிலும் ஏறி நின்றுக்கொண்டு
பரிகசிக்கும் ஏக்கங்கள்
நாற்காலி சரிவது போல தோன்றி
அவன் பதறியதில்
குவளை சற்று ஆடி அசைந்துப் பின் தணிகிறது
அவன் விரல்களில் சிந்திய மதுத் துளிகளை
வாஞ்சையுடன் நக்குகிறான்
சுற்றிலும் ஆரவாரித்துள்ள கூட்டத்திடமும்
உயர்த்தப்படும் போத்தல்களின்
பளிங்கு சிராய்ப்புகளிடமும்
தனக்கு எந்த செய்தியும் இல்லை
என்பது போல காதற்று இருந்தான்
காலி கோப்பைகளை அகற்றிக் கொண்டே
புது திரவத்தை நிரப்பும் மதுவிநியோகன்
இழந்த முகங்களை மேசை தோறும்
அவரவருக்கு திருப்பி தந்தபடி அலைந்தான்
நெற்றியில், கண்களின் ஓரத்தில், கன்னங்களில்
தற்காலிகமாக ரேகைகளை
இடம்மாற்றி வைத்திருந்தது மது
தோல்விகளாலும் குற்ற உணர்வுகளாலும்,
தனிரக்கங்களாலும், புகார்களாலும்,
பெருமைகளாலும், அழகாலும்
பருவம் திரும்புதலாலும், கண்ணீராலும்,
கொண்டாட்டங்களாலும், கதைகளாலும்
கோடைகால ஏரியில் கனம் கொள்ளாமல்
பயணிகளை ஏற்றிச்செல்லும் படகு போல
அந்தக்கடை மெல்ல மிதந்தது
யாரோ தருகிறார்கள் யாரோ பெறுகிறார்கள்
யாரோ சுமக்கிறார்கள்
அவரவர் ஆகாசத்தின் அடியில் அவரவர் வீடு
நடப்பின் எந்த நிழலும் படாமல்
அதோ ஒரு மூலையில் காதலர் இருவர்
முத்தமிட்டுக்கொண்டிருக்கிறார்கள்
எனக்கு இனி வேடிக்கை பார்க்க முடியாது
தாகமாக இருக்கிறது
அருகே ஒரு நாற்காலி காலியாக இருக்கிறது
தயவு கூர்ந்து என்னருகில் வந்து அமரவும்
உங்கள் கோப்பையில் ஊற்றுவதற்கு
என்னிடம் நிறைய நனைந்த வார்த்தைகள் உள்ளன
மதுவை விட காட்டமாக எரியும் அவை
எல்லோருக்கும் தெரிந்த ரகசியங்கள் தான்
ஆனாலும் கவனமாய் கேளுங்கள்
நிதானமாய் இருக்கும் போதே சொல்லிவிடுகிறேன்
உங்கள் தோள்களை தற்காலிகமாவது தாருங்கள்
தேம்பலுக்குள் நான் மூழ்கிவிடுவதற்குள்
பருகுவதற்கு இன்னும் துளிகள் மிச்சமுள்ளன.
– லீனா மணிமேகலை
அவள் காதலிக்கிறாள் – கவிதைகள்
நன்றி – ஆனந்த விகடன்
1.
எட்டிவிடும் தூரம் தான்
மேசையின் மறுபக்கம் அமர்ந்திருந்தாய்
சுவரெல்லாம் சன்னல்கள் கொண்ட அறை அது
மஞ்சள் திரைச்சீலைகளில் கசிந்த மாலை சூரியன்
உன்னை ஒளியால் வரைந்த கோட்டோவியமாக்கியது
நீ அணிந்திருந்த நீல நிற சட்டையின் நூலாக
என் இதயம் நெசவுத்தறியில் சுற்றிக் கொண்டிருந்தது
உன் உதடு பிரிந்து மூடுவதை இமை கொட்டாமல் பார்த்திருந்தேன்
நேர்பார்வையில் ஆழ்கடல் தாவரங்கள் நெளிந்தன
வார்த்தைகள் எதுவும் என் காதில் விழவில்லை
காற்றில் சிகை ஒரு கனவுபோல அசைந்தது
ஏதோ நினைத்துக்கொண்டு லேசாய் சிரித்தாய்
அப்படியே அள்ளி அணைத்துக்கொள்ளலாமென
மனம் அடித்துக் கொண்டதில்
தவற விட்டுவிடுவோமென அஞ்சி
இரண்டு கைகளாலும் கோப்பையை தாங்கிப்பிடித்து
தேநீரை அலுங்காமல் பருகினேன்.
2.
காத்திருக்கிறேன்
காத்திருக்க நேரமே இல்லாதவள் போல
காட்டிக்கொள்ள செய்யும் முயற்சிகளில்
பெரும்பாலும் தோற்றுப்போகிறேன்
சந்திப்பின் ஒரு நொடி கூட
நழுவ விடக்கூடாதென்பதில்
பதட்டமாக இருக்கிறேன்
திட்டமிட்ட நேரத்திற்கு முன்பே வருகை தந்து
திட்டமிட்ட இடத்திற்கு சற்று வெளியே உலாத்துகிறேன்
நாளும் பொழுதும் ஒத்திகை
பார்த்ததையெல்லாம்
காத்திருக்கும் கணங்களில்
மறந்துப்போய் விடுவது எப்படி
என்பதறியாமல்
என்னையே நொந்துக்கொள்கிறேன்
கைகளும் கால்களும்
வார்த்தைகளும் பார்வைகளும்
கூந்தலின் அசைவும்
உடையின் சுருக்கங்களும்
அரும்பும் வியர்வையும்
என்னுடையதே ஆயினும்
என் சொல்பேச்சு கேட்பதே இல்லை
சந்திப்பிற்குப் பிறகும்
சந்தித்த இடத்தை விட்டு அகல முடிவதில்லை
எப்போதும் காத்திருக்கிறவளாகவே இருக்கிறேன்.
அவள் காதலிக்கிறாள்.
லீனா மணிமேகலை
காதல் – கவிதை
நன்றி – குமுதம்
காதல்
உனது கைப்பிடியின்
அந்த சிறுகுகையில்
என்னை ஒளித்துவைத்துக்கொள்
நீ அற்ற நாட்களின்
அனாவசிய வெளிச்சம்
என் கண்களை
கூசச்செய்கிறது
உன் சுவாசத்தின் வழி காற்றையும்
உன் முத்தத்தின் வழி நீரையும்
சுகித்து வாழ்ந்துகொள்கிறேன்
உன் அருகாமை இல்லாத
உலகம்
ஒரு ராட்சச மிருகமாக
மருட்சி கொள்ள வைக்கிறது
இந்த நிமிடத்தில்
என் தலையைக் கோதிவிடும்
உன் விரல்களில்
தஞ்சமடைகிறது என் பிறப்பு
கடவுளின் கருவூலங்கள்
இருண்டு கிடப்பவை
என்னால் அங்கெல்லாம் சென்று
தேடமுடியாது
உன் நெஞ்சின் அடைசலில்
சற்று ஒருக்களித்து படுத்துக்கொள்கிறேன்
எனக்கு வேறு நற்செய்திகள் எதுவும் வேண்டாம்