செங்கடல் – காலம் கட்டுரை
செங்கடல்
முப்பது வருடப் போர்!
போரின் தடயங்கள் வேகவேகமாய் மறைக்கப்படுகின்றன
போர் இறந்த காலமென்றால் விடுதலை எப்போது நிகழ்காலமாகும்?
கடுந்துயரின் சாட்சியாய் காலம்
நம்பிக்கை வெறும் வார்த்தை!
இத் திரைச் சித்திரம் உண்மையின் சலனம்!!களம்:
இனச் சுத்திகரிப்புகளாலும் படுகொலைகளாலும் வதைகளாலும் அகதிகளின் ஓலத்தாலும் கருகிப்போன ஈழத்து நிலத்தின் சாம்பல் ‘பாக் நீரிணை‘ யில் மிதந்து வருகிறது. அந்தச் சாம்பலில் செல்லும் தமிழக மீனவர்களின் தோணிகள் கடலில் எரியும் கதைகள் முடிவற்று நீண்டுகொண்டேயிருக்கின்றன. கடல் எரிகிறது. சகல மீட்பர்களாலும் கைவிடப்பட்டிருக்கும் மீனவர்களின் இரத்தமும் கண்ணீரும் இராமேஸ்வரத்தின் கரைகளை நிறைத்துள்ளன.
அப்பாவி மீனவர்கள் கடலின் நடுவே புலிகளெனவும் கடத்தல்காரர்களெனவும் உளவாளிகளெனவும் கொல்லப்படுகிறார்கள். மீனவர்களின் ஓலம் அலைகளின் நடுவே இரகசியமாகப் புதைக்கப்படுகிறது.
கடலைத் தவிர வேறெதையும் அறியாத அந்த மக்கள் மீண்டும் மீண்டும் உயிரைப் பணயம் வைத்து ஒருபிடி உணவுக்காக உப்பு நீரில் இறங்குகிறார்கள். அவர்கள் தமது தோணிகள் செல்லும் பாதையில் மீட்பர்களையோ இரட்சகர்களையோ இதுவரை கண்டதில்லை. ஆனால் ஒவ்வொருநாளும் கொலைகாரர்களை அவர்கள் காண்பதுண்டு.
எப்போதாவது அவர்கள் நடுக் கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கும் ஈழத்து அகதிகளைக் காணும்போது ஒரு துயரப் புன்னகையுடன் அவர்களை வரவேற்கிறார்கள்.
கதை
புயல், நகரின் பெரும்பகுதியைக் கடலில் சுழற்றி எறிய, எஞ்சியிருக்கும் சிதிலங்களையும், அதில் கசியும் உயிர்களையும் ஊரெனத் தாங்கி நிற்கும் தனுஷ்கோடி. இந்தியப் பெருங்கடலும், வங்காள விரிகுடாவும் கலக்கும் அதன் கரையில்,முப்பது வருடங்களாகத் தீராத இலங்கை உள்நாட்டு இனப் போருக்குத் தப்பி ஈழத்து அகதிகள், தங்கள் வாழ்வின் இறுதி நம்பிக்கையைப் பிடித்துக் கொண்டு செத்தோ, உயிரோடோ வந்தவண்ணம் உள்ளனர்.ஆயுதமும், இனவெறியும் நொருக்கிய ஈழத் தமிழர்களின் விடுதலைக் கனவை வரலாறு எட்டி நின்று பார்த்துக் கொண்டிருக்கும் காலக்கட்டம்.
சிங்களப் பேரினவாதம், அழித்தொழிக்கப்பட்ட போராளிகள், வீணடிக்கப்பட்ட ரத்தம் உறைந்து நிற்கும் பீரங்கிகள், இன்னும் புதைத்து முடியாத பிணங்கள், வேண்டப்படாத உயிர்களாய் முள்வேலிகளிடையே அடைத்து வைக்கப்பட்ட மனிதவிலங்குப் பண்ணைகள் ,ஒலமிடவும் சக்தியற்று சிதறடிக்கப்பட்ட தமிழினம் மிச்சமுள்ள வாழ்க்கையை வாழ்ந்துவிடும் ஆசையில் ஏதோ ஒரு நாட்டின் எல்லையில் தன் கடைசி ஒரு பிடிமூச்சைத் தாங்கிக் கொண்டு நிற்கின்றது.
கடற் தண்ணீரில் சிங்கள நீரெது? தமிழ் நீரெது? என்ற அச்சத்திற்கிடையே தினமும் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள். விடுதலைப் புலியென்றோ, கடத்தல்காரனென்றோ, உளவாளியென்றோ சந்தேகத்தின் பேரில் சிறிலங்கா எல்லைக் கடற்படையால் நாள்தோறும் அடித்தோ, கொல்லப்பட்டோ, கொள்ளையடிக்கப்பட்டோ துன்புறுத்தப்படுகின்றனர். இருந்தும் அடுத்த வேளை உணவுக்காக கடலில் பாயும் வள்ளங்கள் சுழலுக்கும், புயலுக்கும், மழைக்கும் போலவே குண்டடிகளுக்கும், துப்பாக்கிச்சூட்டுக்கும் அஞ்சாமல், எப்படியும் கரைக்குத் திரும்பி விடும் உறுதியை மீனவ்ர்களுக்கு தருகின்றன.
இந்த சுழலில் தங்கள் இருப்பைத் தக்கவைக்க அலைக்கழிக்கப்படும் மீனவர் முனுசாமி, அகதிகள் நலனுக்கான கிறிஸ்தவ மையத்தில் பணி செய்யும் ரோஸ்மேரி மற்றும் ஆவணப்பட இயக்குனர் மணிமேகலை ஒரு மையப்புள்ளியில் சந்திப்பதும், வெளியேறுவதுமாய் கதையைப் பின்னுகின்றனர். யுத்தத்தாலும்,சதா துரத்தும் மரணங்களாலும் காலத்தையும் வெளியையும் தன் இழுப்புக்கு வளைத்துக் குறுக்குசால் போடும் ஒரு கிறுக்கனாக அறியப்படும் ஈழத்து அகதி சூரி உண்மையின் மயக்கத்தை முன்னறிவித்த தீர்க்கதரிசி.அதிகாரம் அவனின் நாவுகளைத் துண்டித்து எறிகிறது, மணிமேகலையைச் சட்டத்தின் பெயரால் ஒடுக்குகிறது, முனுசாமியைக் கொன்று போடுகிறது, ரோஸ்மேரியை கடவுளின் கையில் பிடித்துக் கொடுக்கிறது. கடவுள் அடிமைகளிற்காகவும் ஏதிலிகளிற்காகவும் செங்கடலை இரண்டாகப் பிளந்தார்.
விடுதலை எங்கே ஒளிந்திருக்கிறது? குருதிச் சகதியில் நொண்டியடித்து மெல்ல நடக்கிறாள் காலதேவதை
உருவாக்கம்
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே விரிந்து கிடக்கும் கடலின் நடுவே வதைபடும் மீனவர்கள் குறித்தும்,இந்தக் கடலைத் தாண்டி உயிரைக் காப்பாற்ற ஓடிவரும் ஈழத்து அகதிகள் குறித்தும் எளியவர்களின் துயரங்களை அசட்டுடையுடன் பார்க்கும் அதிகார வர்க்கம் குறித்தும் செங்கடல் திரைச் சித்திரம் ஒளிவு மறைவுகள் ஏதுமின்றி நேரடியாகப் பேசுகிறது.
கம்பிப்பாடு, இது 1964ல் ஆழிப்பேரலையால் நிர்மூலமாக்கப்பட்ட ஒரு தனுஷ்கோடிக் கிராமம். அது இன்றும் தனது சிதைவுகளுடனும், அந்த மண்ணின் மீனவக் குடும்பங்களுடனும் உயிர்ப்புடன் இருக்கிறது. கடல் வழியே ஈழத்து அகதிகள் வந்து நிறையும் அந்த இடமே செங்கடல் திரைச் சித்திரம் நிகழும் இடமாக இருக்கிறது.
இந்தத் திரைச் சித்திரத்தில் இராமேஸ்வர மீனவர்களும் மண்டபம் முகாமில் தங்கியிருக்கும் ஈழத்து அகதிகளுமே நடித்திருக்கிறார்கள். துணைக் கதாபாத்திரங்களில் கிடாத்திருக்கைக் கிராமத்துக் கூத்துக் கலைஞர்களும், நாடகக் கலைஞர்களும் பங்கெடுத்திருக்கிறார்கள்.
செ்கடலில் நடித்த பலரும் இதற்கு முன் ஒரு படம்பிடிக்கும் கருவியைத் தங்கள் வாழ்வில் எதிர்கொண்டதில்லை. அந்த ஒட்டுமொத்த சமூகமே மீண்டும் மீண்டும் வரிசையாகத் திரைக்கதையை வாசித்தும் நடிப்புப் பயிற்சிப் பட்டறைகளில் கலந்து கொண்டும், ஒத்திகை பார்த்தவண்ணமுமிருந்தனர். கப்பிப்பாடு மீனவர்கள் பெரும்பாலும் எல்லா தயாரிப்புப் பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர். உணவுத் தயாரிப்பு, வாகனப் போக்குவரத்து, கூட்டத்தைக் கட்டுப்படுத்துதல், படப்பிடிப்பின்போது தொழில் நுட்பக் கலைஞர்களிற்கு உதவுவது போன்ற எல்லாவிதமான பணிகளிலும் அவர்கள் உற்சாகத்தடன் தம்மை ஈடுபடுத்திக்கொண்டனர்.
நொடிக்கொருதரம் மாறிக்கொண்டிருந்த காலநிலை, புயல் அறிவிப்புகள், திடீரெனக் கொந்தளித்துப் பெருகும் திடீரென உள்வாங்கும் கடல், மின்சாரமின்மை, தொலைத்தொடர்பு வசதிகளின்மை, சீரற்ற மணல் பாதையில் படப்பிடிப்பு உபகரணங்களுடன் நீண்ட பயணம் போன்றவையே படப் பிடிப்புக் குழு எதிர்நோக்கிய. முதன்மைப் பிரச்சனைகளாயிருந்தன.
ஈழத்து அகதிகள் மண்டபம் அகதி முகாமின் அனைத்து கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்புநடைமுறைகளையும் அனுசரித்தே படத்தில் நடித்தனர். அவர்கள் காலை எட்டு மணிக்குத் தங்கள் அன்றாட வேலைகளுக்காக மட்டுமே முகாமை விட்டு வெளியேற வேண்டும். மேலும் மாலை ஆறு மணிக்கு முன்னதாகவே முகாமின் வருகைப்பதிவேட்டில் கையெழுத்திட திரும்பியாக வேண்டும். இதில் ஏற்படும் ஏதேனும் சிறுபிழைகூட அவர்களை மோசமான சிக்கல்களுக்கும், கேள்விகளுக்கும் இட்டுச்சென்றுவிடும். இத்தனை சிரமங்களுக்கு அப்பாலும் அவர்கள் மனப்பூர்வான ஈடுபாட்டுடன் செங்கடலில் நடித்தார்கள். கடலிலும் தீடையிலும் சுடுமணிலிலும் குழந்தைகள் கூட கடும் சிரமத்துடன் நடித்துக் கொடுத்தார்கள்.
தனுஷ்கோடியின் கரை இலங்கையிலிருந்து வெறும் பதினெட்டு கிலோமீட்டர் தொலைவிலிருக்கிறது. தனுஷ்கோடி நிலப்பரப்பு கடலோரக் காவற்படை, காவற்துறை, கடற்படை, மத்திய புலனாய்வுத்துறை, கியூ பிரிவு முதலியவைகளால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருகிறது. கம்பிப்பாடு கிராமத்தின் சிதைவுகளின் நிழலில் இந்திய உளவுத் துறையினர் மறைந்திருக்கிறார்கள்.
செங்கடல் திரைப்படக் குழு நிழல்களைப் படமாக்குவதில் ஆர்வம் காட்டவில்லை. அது உண்மையை மட்டுமே தேடிச் சென்றது …அதைப் படமாக்கியுமிருக்கிறது.
இயக்கம் லீனா மணிமேகலை
தயாரிப்பு கனவுப்பட்டறை
திரைக்கதை சி.ஜெரால்ட்,ஷோபாசக்தி,லீனா மணிமேகலை
வசனம் ஷோபாசக்தி கூடுதல் வசனம் சி.ஜெரால்ட்
ஒளிப்பதிவு எம். ஜே ராதாகிருஷ்ணன்
இசை எல்.வி.கணேசன்
படத்தொகுப்பு மேற்பார்வை ஸ்ரீகர் பிரசாத்
படத்தொகுப்பு துஹினாபோ முஜும்தார்
கலை மாயக்கண்ணன், கே.டி. காந்திராஜன்
ஒலிப்பதிவு ஹரிகுமார் மாதவன் நாயர்
ஒலிவடிவமைப்பு சுபதீப் சென்குப்தா
தயாரிப்பு மேற்பார்வை இளங்கோ ரகுபதி
Film on Fishermen’s lives hits Censor wall
Feature by Gopu Mohan, Indian Express, Jan 15,2011
http://www.indianexpress.com/news/Film-on-fishermen-s-lives-hits-Censor-wall/737142
go to page 9 in this link — http://epaper.indianexpress.com/IE/IEH/2011/01/14/index.shtml
எனது மூன்றாவது கவிதைத் தொகுப்பு “பரத்தையருள் ராணி”
ஒரு சூனியக்காரியின் தொழில் ரகசியங்கள்
முன்னுரையாடல்
(யவனிகா ஸ்ரீராம், செல்மா ப்ரியதர்ஷன், லீனா மணிமேகலை)
உங்களது பிரதியின் மேல் லீனா மணிமேகலை என்ற பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை குறித்த விவாதங்களும், அவதூறுகளும் சேர்த்தே வாசிக்கப்படுகிறது.
பிரதிக்கு வெளியே வேறெதுவும் தனியாக இல்லையா?
அப்படி வாசிக்கப்படுவது பெண் எழுதும் பிரதியை ஒரு பெண்ணாகவே பார்த்து ஏவும் வன்முறை வடிவம். பிரதியைக் குறித்த பேச்சை, பெண்ணைக் குறித்த பேச்சாக மாற்றி ஒருவித அசூயையை, அச்சத்தை ஏற்படுத்த விழையும் நோய்க்கூறு. ஆணதிகாரம் தன் குறியை நீவி விட்டுக் கொள்ளும் சுய இன்பம்.
பிரதிக்கு வெளியே பிரதியாளரைக் குறித்த பேச்சுக்களை பொருட்படுத்த தேவையில்லை. எழுத்தாளர் மேரி எல்மென் குறிப்பிட்டுள்ளதைப் போல “Phallic Criticism embarks, at its happiest, upon an intellectual measuring of busts and hips”
அடிப்படையில் மொழி, மொழியினால் விளையும் பிரதி இரண்டுமே உடலியல் கூறுகள் தாம். அதே சமயம் உடலை மன உயரத்தோடு பார்க்கும் சமூகமாக நமது சமூகம் இல்லை. இந்த முரணுக்கு நடுவே தான் தமிழ்ப் படைப்பாளி வாழ வேண்டியிருக்கிறது, இயங்க வேண்டியிருக்கிறது.
வடிவம், உத்தி,அமைதி, இன்னபிற கவிதைகளுக்கான அம்சங்கள் உங்கள் கவிதைகளில் எவ்வாறு உள்ளன?
வடிவம், உத்தி, அமைதி, இலக்கணம், வரையறை, மதிப்பீடுகள் என்றெல்லாம் சொல்லும் மரபு சார்ந்த பார்வையில் நான் தலையிட விரும்பவில்லை. அந்தப் பார்வை ஒரு இறுகிய வடிவத்தை நிலைநிறுத்த முயல்கிறது. இங்கு பெரிதாய் எந்த முரண்பாடும் இல்லை, எல்லாம் ஒழுங்காக இருக்கிறது, இந்நிலை தொடர்வதே அமைதிக்கு வழி என்கிற பிரமையை வலியிறுத்துகிறது. எனக்கோ அமைதிக்கு மீறி கலகம் தேவைப்படுகிறது. மேற்சொன்னவை என் கவிதையில் ஒழுங்கு குலைந்து தென்படுவது கூட எனக்கு நல்லது தான்.
நீங்கள் அதிகமும் பாலியல் வேட்கை குறித்து எழுதுவதால், பாலியலையும் தவிர்த்து இன்று பொருளாதார ரீதியாக பெண்களுக்கிருக்கும் பிற பாடுகளை மெளனமாக்கியிருக்கிறீர்களா?
முதலில் வந்தது வேலைப்பிரிவினையா? பால் அடிப்படையிலான சமூக ஏற்றத்தாழ்வா?
ஆண் பெண்களுக்கிடையிலான பிரிவினையே முதலில் உருவானதும், அடிப்படையினதுமான வர்க்கப்பிரிவினை என்பதில் யாரும் மாறுபட முடியுமா?
’இருபாலரிடையேயும் உழைப்பு பிரிவினையை நிர்ணயிப்பதற்குரிய காரணங்கள் வேறு, சமுதாயத்தில் இருபாலரிடையே அந்தஸ்தை நிர்ணயிப்பதற்கு உரிய காரணங்கள் வேறு’ என்று எங்கல்ஸ் கூறியதை முற்றிலுமாக புரிந்துக் கொள்ள முயற்சி செய்வோம்.
பொருளாதாரப் பாடுகள் ஆண்களுக்கும் இருக்கிறது, பெண்களுக்கும் இருக்கிறது. பொருளாதார தன்னிறவு பெற்ற பெண்கள் எல்லோரும் விடுதலை பெற்று விட்டார்களா? அதுவும் நமது சாதீய பொருளாதார அமைப்பில் அதெல்லாம் சாத்தியமா என்ன?பெண்ணுடல் மொத்த பொருளாதாரத்திற்கும் கீழே இரண்டாம் பட்சமாகத் தான் வைக்கப்பட்டிருக்கிறது. பாலியல் சொல்லாடல்கள் ஆணின் அர்த்தங்களிலிருந்து பெண்ணின் உடலை வெளியேற்ற உதவுகிறது. ஆக பாலியல் சொல்லாடல் என்பது பெண்நிலை வாத tool. பெண்ணின் பாலியல் வேட்கைகள் x பெண்ணின் பொருளாதாரப் பாடுகள் என்ற எதிர்வை உருவாக்குவது ஒட்டுமொத்த பெண் விடுதலைக்கு எதிரானது.
உண்மையில் நீங்கள் இடதுசாரிகளுக்கு எதிரானவரா?
நிச்சயமாக இடதுசாரித் தன்மைக்கும், அரசியல் பாதைக்கும் எதிரானவள் அல்ல.மூன்றாம் உலக நாடுகளில் அதன் தேவையை உணராதவளும் அல்ல.
மக்கள் கலை இலக்கியக் கழகமும், இந்து மக்கள் கட்சியும் ஒரே நேரத்தில் தடை கோருகிற அளவுக்கு உங்கள் கவிதைகள் என்ன பதட்டத்தை ஏற்படுத்தின?
இந்து மக்கள் கட்சிக்கு, இந்திய தேசத்தின் பெண் வடிவத்தை கலைக்கிறேன் என்ற பதட்டம் ஏற்பட்டிருக்கலாம். இந்துப் பெண் என்ற இடத்திலிருந்து வெளியேறுகிறவளாக நான் இருப்பது உவப்பில்லாததாக இருக்கலாம்.
ம.க.இ.க விற்கு, பெண்களுக்கு நாங்கள் தான் வழிகாட்ட முடியும் என்ற எண்ணத்திலிருந்து அவர்களை அவர்கள் அகற்றிக் கொள்ள முடியவில்லை. புரட்சிக்குப்பின் தங்களை விடுதலை செய்வார்கள் என்று ஆண் தலைமைகள் மீது நம்பிக்கை வைத்திருக்கும் எளிய பெண்களை ஒருங்கிணைத்து அவர்களின் நியாயத்தை குவிப்பதின் மூலம் தீவிர பெண்ணியத்தை தவிர்த்துவிட முடியாது. ஷீலா ரெளபாத்தம் டாக்டர் மார்க்ஸிடம் கேட்ட கேள்விகளுக்கும் இன்னும் பதிலில்லை. லெனினிடம் கிளாரா ஜெட்கின் கேட்ட கேள்விகளுக்கும் இன்னும் பதிலில்லை. சங்கராச்சாரியார் ’வேலைக்குப் போகும் பெண்கள் எல்லாம் வேசிகள்’ என்று சொன்னதற்கு இந்த நாட்டில் புரட்சியெதுவும் நடந்து விடவும் வில்லை.
இடதுசாரிகளின் பொருளாதார சமத்துவத்திற்கு உங்கள் கவிதைகள் எதிரானவையா?
என்னுடைய கவிதைகள் மட்டுமல்ல, உலகத்தில் எந்த மொழியிலும் அதற்கெதிரான ஒரு சொல் கூட இன்னும் பிறக்கவில்லை.
தமிழில் எழுதப்பட்டு வரும் கவிதைகளிலிருந்து எந்த அளவுக்கு உங்கள் கவிதைகள் மாறுப்பட்டிருக்கின்றன?
தமிழ்க் கவிதைகள் பொதுவாகவே தொட மறுக்கும் புள்ளிகளை எனது மொழி அதீதப்படுத்துகிறது. அதன் வழியே பதற்றத்தை உருவாக்குகிறது. நீடித்த அர்த்தங்களை குலைக்கிறது. ஒருவித எதிர் மோதலை உருவாக்குகிறது. பிறகெனக்கு சமூகத்தின் மெளனத்தைக் கலைக்க வேறு வழியில்லை, கவிதையைத் தவிர.
உங்கள் கவிதைகளில் குவிமையம் என்று ஏதேனும் உள்ளதா?
கவிதைகளில் குவிமையப் போக்கு என்பது பல்வேறு மையத்தை உயர்த்தி தூக்கிப் பிடித்துக் கட்டுவது என்று புரிந்துக் கொள்கிறேன். உடலாக இருந்தாலும் சரி, கலாசாரத் தளத்தில் விடுதலையாக இருந்தாலும் சரி, ஒடுக்கப்பட்டவர்கள், மூன்றாம் பாலினராக இருந்தாலும் சரி, மொசைக்கான அரசியல் தளத்திலிருந்து தூக்கி கட்டுவது என்னைப் பொருத்தவ்ரை குவிமையங்கள்.
நான் விளிம்பில் நிற்கிறேன். விளிம்பின் மையத்திலிருந்தும் என் கவிதைகள் வெடித்துச் சிதறுகின்றன.