கடுமையான வேலைப் பளுவிற்கு நடுவே ஒரு சிறு விளக்கம்.
கவிதைகள் என் வெளிப்பாட்டுத் தளம். என் படைப்புகளை ஏற்றுக்கொள்வதோ, அதிலிருக்கும் அரசியலை விமர்சிப்பதோ வாசிப்பவர்களின் தெரிவு.படைப்புக்கு வெளியே என் மீதான தனிநபர் தாக்குதல்களுக்கோ அவதூறுகளுக்கோ என்னிடம் பதில்கள் இல்லை. செங்கடல் திரைப்படத்தில் நானும் ஊதியம் பெற்றுக் கொண்டு வேலை செய்யும் ஒரு தொழிலாளியே. ஷோபா சக்தி ஊதியம் கூட பெற்றுக் கொள்ளாமல் தான் செங்கடலில் திரைக்கதை, வசன இலாகாவில் வேலை செய்கிறார். படத்தில் பேட்டா பிரசினை என்பது பொய்க்கதை. மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் படம் என்பதால் எல்லோரும் மாதச் சம்பளத்தில் தான் வேலை செய்கிறார்கள்.
இரண்டு நாள் படச் சுருளை எடுத்துக் கொண்டு ஓடிய குற்றத்தை விசாரிக்க நடந்த தகராறில், ஏற்பட்டது தான் போலீஸ், விசாரணை குழப்பம் எல்லாம். யாரும் கைது செய்யப்படவில்லை. தவறான செய்தி வெளியிட்ட தினத்தந்தி, தினமலர் விஷமிகளிடம் ஆதாரங்களை கேட்டுப் பார்த்தால் உண்மை புரியும். எந்த தார்மீகமும் இல்லாமல் சகட்டுமேனிக்கு செய்திகளை வெளியிடுபவர்களும், பரப்புபவர்களும் அந்த பொய்ச் செய்திகளை வைத்து கட்டுரை எழுதுபவர்களும் நாச சக்திகள் என்பதை தவிர என்ன சொல்ல? என்ன வக்கிரமோ , என்ன காழ்ப்போ, மனிதர்களின் கீழ்மைத் தனங்களுக்கு யார் தான் பொறுப்பேற்க முடியும்?
படம் முடிவடைந்து பார்வைக்கு வருவதற்கு முன்னே அதைப் பற்றிய அனுமானங்களும் வெட்டிப் பேச்சும் அநாகரிகமானது. அருவருப்பானது.
பிறகு என்னை காலத்துக்கும் தொடர்ந்து வரும் அவதூறு, நான் ஈழத் தமிழர்களிடம் காசு வேண்டி குறும்படம் செய்தேனென்றும், வேலைசெய்தவர்களுக்கு காசு தரவில்லையென்பதுமான செய்திகள்.. இந்த வதந்திகளை விடாமல் பரப்பி வருபவர்கள் ஆதாரத்தை தந்து நிரூபிக்காமல் பேசுவது அயோக்கியத்தனம். இதுவரை நான் எந்த ஈழத் தமிழரிடமும் காசு வாங்கியதில்லை, என்னோடு வேலை செய்தவர்களோடு ஒவ்வொரு படத்தின் பட்ஜெட்டை பகிர்ந்தே வேலை செய்திருக்கிறேன். ஆரம்ப காலத்தில் அரசு சாரா நிறுவனங்களோடு இணைந்து வேலை செய்தது உண்மை. பலிபீடம், அலைகளைக் கடந்து, பிரேக் தி ஷக்க்லஸ் என்று படங்கள் எடுத்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் ஒப்ப வில்லை என்பதால், நிறுவனங்களோடு வேலை செய்வதை நிறுத்தி விட்டேன். எடிடோரியலாக என்னை சுதந்திரமாக வேலை செய்ய அனுமதிக்கும் சூழலில் மட்டுமே என்னால் இயங்க முடியும்.
தவிர, தமிழ்க் கவிஞர் இயக்கம் மற்றும் ஈழத் தமிழர் தோழமைக் குரல், லீனா மணிமேகலை என்ற தனிநபர் சார்ந்த இயக்கங்கள் அல்ல. பொறுப்பாளர்கள் குழு, ஒருங்கிணைப்பாளர்கள் குழு, என்று ஒரு பெரிய டீம் அதற்காக வேலை செய்தது. அதில் பங்காற்றியவர்கள் ஒரு குறைந்த பட்ச அரசியல் இணைவு வேலைத் திட்டத்தின் அடிப்படையில் பணி செய்தார்கள். போராட்ட வடிவங்களின் மேல் விமர்சனம் வைப்பவர்கள் ஒட்டுமொத்த குழுவை கேள்வி கேட்க வேண்டும். குழுவின் அங்கத்தினராக நானும் அதற்கு பதில் சொல்வேன். அதை விட்டு கேலி பேசும் கையலாகாதவர்களுக்கு என் நேரத்தை வீணாக்க முடியாது.
இதைத் தவிர என் புகைப்படங்கள் பற்றியோ, என் குடும்ப விவகாரங்கள் பற்றியோ, என் நண்பர்கள் பற்றியோ ஒரு மஞ்சள் பத்திரிக்கை தரத்திற்கு ஆபாசமாக எழுதுபவர்களை என் கால் தூசுக்கு கூட கருத முடியாது.
லீனா மணிமேகலை
இரண்டு கவிதைகள்
1
நான் லீனா
நான் இலங்கையில் இந்தியாவில் சீனாவில் அமெரிக்காவில்
ஆப்பிரிக்காவில் செரோஜெவாவில் போஸ்னியாவில் துருக்கியில்
ஈராக்கில் வியட்நாமில் பொலியாவில் ரெமானியாவில்
வாழ்கிறேன்
என் வேலை
என்னிரு தொடைகளையும் எப்பொழுதும்
பரப்பியே வைத்திருப்பது
நாடு கோருபவ்ர்கள்
ஜிகாத் தொடுப்பவர்கள்
புரட்சி வேண்டுபவ்ர்கள்
போர் தொடுப்பவர்கள்
ராஜாங்கம் கேட்பவர்கள்
வணிகம் பரப்புபவர்கள்
காவி உடுப்பவர்கள்
கொள்ளையடிப்பவர்கள்
நோய் பிடித்தவர்கள்
எவன் ஒருவனும்
வன்புணர்வதற்கு ஏதுவாய்
யோனியின் உதடுகளை அரிந்துப் போட்டு
கருங்குழியென செதுக்கி வைத்துக் கொள்ள
சொல்லித் தந்திருக்கிறார்கள்
அம்மா அம்மம்மா அப்பத்தா அத்தை எல்லாரும் ஒருவரே
அவ்வப்போது
காலக்கெடுவில்
லிட்டர் கணக்கில் சேர்ந்துவிடும் விந்துவை
தூர் வாருவதையும்
படிப்பித்திருக்கிறார்கள்
எனக்கு தெரியும்
அறிவாளி ரோகி ஆசிரியன் கலைஞன்
லும்பன் தரகன் மகாராஜா தளபதி
திருடன் கணிப்பொறிக்காரன் போராளி
போதைப்பொருள் விற்பவன் மருத்துவன்
கூலித்தொழிலாளி மாலுமி விவசாயி
கணவன், தந்தை, சகோதரன், மகன்
எல்லோர் குறிகளும் ஒன்றுபோலிருப்பது எப்படி
என்ற ரகசியம்
எனக்கு மொழி தெரியாது
நிறம் கிடையாது
நாகரிகம் தேசம் கொடி அரசாங்கம்
வரலாறு ராணுவம் சட்டம் நாணயம்
ஏதொன்றையும் முகர்ந்துப் பார்த்தாலும்
என் உதிர வீச்சமடிக்கும்
பிரம்மா விஷ்ணு சிவன் புத்தன்
யேசு அல்லா இந்திரன் வர்ணன்
சூரியன் கருப்பசாமி அய்யனார்
ஆகமங்கள் இதிகாசங்கள் காவியங்கள்
யாவும்
கலைக்க முயன்றும்
என் சூலகத்தில்
தங்கிவிட்ட கருக்கள்
அணுகுண்டோ ரசாயனத்துப்பாக்கியோ
ராக்கெட்டோ கன்னிவெடியோ
எறியப்படும் குண்டுகளுக்கு
உடல் செத்தாலும்
யோனிக்கு சாவில்லை
யோனியிலும் சாவில்லை
2.
ஒரு புணர்தலின் உச்சியில் விலகி
அந்தரத்தில் விந்தைப் பீய்ச்சி
தோழர் என்றெழுதினாய்
உடலை உதறி கொண்டு எழுந்து
உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்றார் மார்க்ஸ்
என்று பிதற்றினாய்
கால்களுக்கிடையே தலையை இழுத்தேன்
உபரி என யோனி மயிரை விளித்தாய்
உற்பத்தி உறவுகள் என தொப்புளை சபித்தாய்
லெனின் ஸ்டாலின் மாவோ சி மின்
பீடத்தை ஒவ்வொருவருக்காய் தந்தாய்
முலைகளைப் பிசைந்து சே என்றாய் பிடல் என்றாய்
மனம் பிறழந்த குழந்தை போல மம்மு குடித்தாய்
பிரஸ்த்ரோய்கா, க்ளாஸ்னாஸ்ட் என்று மென்று முழுங்கினாய்
இடையின் வெப்பத்தில் புரட்சி என்றாய்
மூச்சின் துடிப்பில் பொதுவுடைமை என்றாய்
குறியை சப்ப குடுத்தாய்
பெர்லின் சுவர் இடிந்தது
சோவியத் உடைந்தது
எழுச்சி என்றாய்
அமெரிக்கா என்று அலறி ஆணுறை அணிந்தாய்
கீழே இழுத்து
உப்பை சுவைக்க சொன்னேன்
கோகோ கோலா என்று முனகினாய்
மயக்கம் வர புணர்ந்தேன்
வார்த்தை வறண்ட
வாயில் ஒவ்வொரு மயிறாய் பிடுங்கிப் போட்டேன்
இது கட்டவிழ்ப்பு என்றேன்
லீனா மணிமேகலை
நன்றி மணல்வீடு
சூரிய கதிர் நவம்பர் 16, குட்டி ரேவதி பேட்டிக்கான எதிர்வினை
நவம்பர் 16 தேதியிட்ட “சூரிய கதிர்” இதழ் என் கவனத்திற்கு வந்தது. குட்டிரேவதி தன் பேட்டியில் உதிர்த்துள்ள எண்ணற்ற அபத்தங்களில்,என் குறித்த கருத்தும் ஒன்று.
377 சட்டப்பிரிவை நீக்குவதைப் பற்றிய உச்சநீதிமன்றத்தின் பரிந்துரை, அதையொட்டி எழுந்துள்ள ஓரினச்சேர்க்கை குறித்த பரவலான விவாதங்கள் பற்றிய கேள்விக்கு எந்த இடத்திலும் குட்டி ரேவதியிடம் நேரடியான பதில் இல்லை. அதை விட்டுவிட்டு ஊடகங்களுக்கு பொறுப்பில்லை, “உலகின் அழகிய முதல் பெண்” கவிதை தொகுப்பில் இருபாலுமை பேசும் லீனா மணிமேகலைக்கு புரிதல் இல்லை என்று அறிக்கை விடுகிறார்.
“ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது தான் இயற்கையின் நியதி”- அட! குட்டிரேவதி இவ்வளவு பெரிய கலாச்சாரவாதியா? “இயற்கை” என்பதற்கு என்ன வரையறை வைத்திருக்கிறார் ரேவதி?குறியும் யோனியும் நேரடியாக உறவு வைத்துக் கொள்வதையா? இயற்கைxசெயற்கை எதிர்வுகளுக்கு குட்டி ரேவதி பரிதாபமாக பலியாகியிருக்கிறார்.
பாலியல் விருப்பங்களும், தேர்வுகளும் அவரவர் சுதந்திரம். பளிச்சென்று சொல்கிறேன், என்னைப் பொறுத்தவரை குறியுடனான புணர்ச்சி என்பதை விட பாலுறுப்புகளை உரசுவதால் உண்டாகும் கிளர்ச்சியே உச்சத்தை தரும். பாலுறுப்புகளை வருடி,முததமிட்டு எழுச்சி ஏற்படுத்தச் செய்வதற்குரிய விரல்களோ, நாக்கோ ஆண் தோழமையுடையதாய் இருந்தால் என்ன? பெண் தோழமையுடையதாய் இருந்தால் என்ன? ஏன் என்னுடையதாகவே இருந்தால் தான் என்ன? எல்லாமே எனக்கு ஒன்றுதான்,விருப்பம் தான். ஆக இருபாலுமை என்பது என் தேர்வு,உரிமை.
சமூகத்தால் மறு உற்பத்திக்காக கட்டமைக்கப்பட்டிருக்கும் பாலுமை ஒற்றைத்தன்மையை மறுதலிப்பதைப் பற்றி சட்டம் வேண்டுமானால் இப்போதுதான் வாய் திறக்கலாம்.மனித இனம் எப்போதுமே பால்சேர்க்கையில் ஓரினச்சேர்க்கை, எதிர்ப்பாலுறவு, சுயப் புணர்ச்சி, இருபாலுமை என்று பன்மைத் தன்மைகளோடு தான் இருந்திருக்கிறது. வரலாற்றுக்கும் முந்தைய குகை ஓவியங்கள் இதற்கு சாட்சியமளிக்கின்றன.
அப்புறம் ரேவதி என்ன சமூக இலக்கிய கமிசாரா?எங்கள் சமூகப் பொறுப்பு, புரிதல் இவற்றுக்கெல்லாம் அவரிடம் சான்றிதழ வாங்க வேண்டுமா? ஆதிக்க சமூகம் திணிக்கும் அத்தனை பொறுப்புகளையும் மீறுவதாலும், கேள்வி கேட்பதாலும் ” பொறுப்பற்றவள்” என்ற பெயரை விரும்பியே சுமக்கிறேன்.இறுதி வரை சுமப்பேன்.
கலாச்சாரத்தை கொட்டிக் கவிழ்க்கும் படைப்பாளிகள்,குறிப்பாக பெண் படைப்பாளிகள் மீது அவசரமாக விழும் குற்ற்ச்சாட்டு “விளம்பரப் பிரியர்” என்பது தான்..”முலைகள்” தொகுப்பு வந்த போதும்,”சண்டைக்கோழி துப்பட்டா” பிரச்சினை வந்த போதும் குட்டி ரேவதியின் மீது அந்த குற்றச்சாட்டு ஏவப்பட்டது. அதையே என் மீதும் ஏவும் ரேவதி கலாச்சாரவாதிகளின் கைக்கூலியாக எப்போது மாறினார்? பகுஜன் சமாஜ் கட்சிக்குப் போய் வந்ததிலிருந்தா?
பார்ப்பனீயத்தோடு கை கோர்த்து ,தலித்துகளுக்காக என்று பேர் பண்ணிக்கொண்டு கேடு கெட்ட அரசியல் செய்யும் தலைமை மாயாவதி,மக்களின் காசையெல்லாம் தன் ஆளுயர சிலைகளாக மாற்றியதைத் தவிர வேறு என்ன செய்தார்? தேர்தல் நேரத்தில் அந்தக் கட்சியில் இணைந்து தனக்கொரு சிலை வைத்துக் கொள்ள முடியாததால் குட்டி ரேவதி அதிலிருந்து வெளியேறினாரா?
ஈழப் பிரச்சனையில் எல்லா படைப்பாளிகளையும் பொத்தாம் பொதுவாக சாடும் இவர், யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில், தன்னை அரசியலாக இணைத்துக் கொண்டு வேலை செய்த தேசியக் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி ஈழம் குறித்து எடுத்த நிலைப்பாடு என்ன என்று கேட்டிருப்பாரா?கேட்டிருந்தால் நமக்கெல்லாம் சொல்வாரா? சமீபத்தில் “இனியொரு” இணையதளத்தில் ஆயுதப் போராட்டத்தை ஃபேண்டசைஸ் செய்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார். குட்டி ரேவதி, குறைந்தப் படசம் ஈழத்திற்கு போய் ஆயுதப் போராட்டத்தில் பங்கு கொண்டிருக்க முடிந்திருக்க வில்லையென்றாலும், இந்தியாவில் நக்சல்பாரி இயக்கத்திலாவது இணைந்து செயல்பட்டிருக்க வேண்டும்.
ஆயுதம் தன் கையில் இருந்தாலும், எதிரியின் கையில் இருந்தாலும் அழிவு அழிவு தான்..
லீனா மணிமேகலை
குறிப்பு : தணிக்கை செய்யப்படாத பிரதி (சூரிய கதிர் ஆசிரியர் குழு வழக்கம் போல தணிக்கையெல்லாம் செய்யமாட்டோம் என்று வாக்குறுதி கொடுத்து எதிர்வினையைப் பெற்றுக் கொண்டு, பதிப்பில் வேலையை காட்டி விட்டார்கள்)
பிரசுரத்திலிருந்து நிறுத்தப்பட்ட குமுதம் நேர்காணல்
4.12.2009 அன்று நிருபர் தேனி கண்ணன் அவர்களும், குமுதம் ஆசிரியர் பிரியா கல்யாணராமனும் எடுத்த நேர்காணல்
செங்கடல் என்ற திரைப்படத்தை உருவாக்கி கொண்டிருக்கிறேன். இயக்குநர் சமுத்திரக்கனி தயாரிக்கிறார். இயக்குநர் ஜெரால்டும், எழுத்தாளர் ஷோபா சக்தியும் திரைக்கதை வசனமெழுதுகிறார்கள். நான் நடித்து இயக்குகிறேன். பரிசோதனை முயற்சி தான். முடியட்டும். விரிவாகப் பேசுவோம்.
உங்கள் சமீபத்திய “உலகின் அழகிய முதல் பெண்” கவிதைத் தொகுப்பில், இருபால் இயல்புடையவள் என்று முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறீர்கள்? ஓரினச்சேர்க்கையை நீங்கள் அதரிக்கிறீர்களா?
என் கவிதைகளில் உடல்களை எழுதியிருக்கிறேன். ஆணுடல், பெண்ணுடல் என்பதை எதிரானதாக என்னால் பார்க்க முடியவில்லை. அடிப்படையில் உடல்கள் தனித்தனி சிறைக்கூடங்களாக இருக்கிறது. அந்த உடல்களை விடுவிக்கும் வழிமுறையாகத்தான் பாலியல் விடுதலையை எழுதுகிறேன்.
உறுதியாக ஒரினச்சேர்க்கையை ஆதரிக்கிறேன்.
இந்தியத் தண்டனைச் சட்ட்ம் 377ஐ நீக்கி டில்லி உயர்நீதிமன்றம் கடந்த ஜூலையில் பதினெட்டு வயது வந்தவர்கள் பரஸ்பரம் சம்மதத்துடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடத் தடையில்லை என்று தீர்ப்பை வழங்கியிருக்கிறது. சட்டம் இப்போது தான் தன் தூக்கத்திலிருந்து விழித்திருக்கிறது.
மனிதர்கள், விலங்குகள் என்று ஜீவராசிகளெல்லாம் பிறக்கும்போது பாலியல் பன்மைத்தன்மையோடு தான் பிறக்கிறார்கள். ஓரினச்சேர்க்கை, எதிர்ப்பாலுறவு, சுயப் புணர்ச்சி, இருபாலுமை எல்லாமே எல்லா காலங்களிலும் இருக்கத் தான் செய்கிறது. நம்ம கோயில் கோபுரங்கள், குளங்கள், தேர்களில் இருக்கிற சிற்பங்களையும், ஓவியங்களையும் கொஞ்சம் நின்று பார்த்தால், நம்ம முன்னோர்கள் எப்படி பாலியல் சுதந்திரத்துடன் வாழ்ந்தார்கள் என்று புரிந்துக் கொள்ளலாம். நமது பெண்கள் விலங்குகளுடன் வைத்திருக்கும் புணர்ச்சி குறித்த சிற்பங்கள், நம்ம சீரங்கம் கோவில் மண்டபத்திலேயே இருக்கிறது.
அப்ப, நடுவில தான் கோளாறு நடந்திருக்கிறது.பெருமதங்கள் ஆணாதிக்கத்தை கொண்டுவருகின்றன, ஆணாதிக்கம் கலாசாரம் என்ற ஆயுதத்தைக் கையிலெடுக்கிறது. பெண்களை காலனைஸ் செய்து, குழந்தைகள் பெற்றுக் கொடுக்கும் மெஷினாக மாற்றி வாரிசு, சொத்து,சாதி என்று ஜாம்ஜாமென்று வாழ்கிறது ஆணுலகம்.
“வீட்டுக்கொரு அடுப்பங்கரை, ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு பெண்” என்பது ஒழிக்கப்படனும் என்கிறார் தந்தை பெரியார். கலாச்சாரத்தைக் கொட்டிக் கவிழ்க்கனும்கிற பெரியாரின் வழியே நம்ம எல்லோருடைய விடுதலைக்கான வழி.
பாரம்பர்யமான குடும்ப கட்டமைப்பு கொண்ட நாடு நம் நாடு ஓரினச்சேர்க்கையை ஆதரிக்காதபோது, நீங்கள் அது பற்றி எப்படி தைரியமாகப் பேசுகிறீர்கள்?
கணவன் இறந்தவுடன் மனைவியைத் தூக்கி நெருப்பில் போடுவது தான் நமது பாரமபர்யம். ஆனால் அதை எவ்வளவு அநீதியானது என்பதை இப்போது நாம் உண்ர்ந்திருக்கிறோம். குடும்பம் என்பது ஆணையும், பெண்ணையும் குழந்தைகளையும் “சமமாக” ஏற்று வாழ்கிற அமைப்பாக மாறுகிற வரை சீர்திருத்தங்கள் செய்து தான் ஆக வேண்டும், நானும் குடும்பத்திலிருந்து வந்தவள் தான், குடும்பத்தில் வாழ்பவள் தான். நம் நாடு ஓரினச்சேர்க்கையை ஆதரிக்கவில்லை என்பதை உறுதியாக சொல்லிவிட முடியாது. நாடு என்பது பாராளுமன்றம் மட்டும் அல்ல. உச்ச நீதிமன்றம் ஓரினச்சேர்க்கையை தன் குற்றப்பிரிவிலிருந்து நீக்கியிருக்கிறது அரசிடம் அது கருத்து கேட்டிருக்கிறது. பிரதமரோ, மந்திரி சபையோ அதிகாரப்பூர்வமாக ஓரினச்சேர்க்கைக்கு எதிராக கருத்து கூறவில்லை.
அப்புறம் நியாயத்தைப் பேசுறதுல என்னங்க பயம்?ஆடு, மாடு,கோழி, சொத்து, தங்கம், பெண், வாரிசு என்ற அடிமை ஃபார்முலாவை உருவாக்கி வச்சிருக்கிற ஆணாதிக்கம், அதை வழிமொழியற சாதி, மதம் எல்லாத்தோட ஆதாரம் பாலியல் கட்டுப்பாடு தான். பெண்ணை அடிமைப்படுத்தற ஆண் தன்னைப் பேரடிமைன்னு உண்ர்ந்திட்டான்னா, கலாச்சாரம் என் கிற வார்த்தையையே அழிச்சிடலாம். ஆண்xபெண் என்ற கடுமையான முரண் அதனால உருவாகியிருக்கிற சுரண்டல் அமைப்பு,திருநங்கைகளையும் கீழ்மைப் படுத்தி வைத்திருக்கிறது.பெண்கள் திருநங்கைகளோட நெருக்கமாகனும். அங்கீகரிக்கப்படனும். அதுக்கு ஆண்மை ஒழிக்கப்பட வேண்டும்.
மனைவி, குழந்தை என்கிற குடும்ப உறவுக்கு ஓரினச்சேர்க்கை எதிராக உள்ளதே?
ஓரினச்சேர்க்கை குடும்பத்திற்கு எதிரானதல்ல. அது மனைவி, கணவன், குழந்தைகள், தெரு, கிராமம், நகரம், சட்டசபை, பாராளுமன்றம் எதற்குமே எதிரானதல்ல. நுட்பமாக யோசித்தால், அது மிகவும் இணக்கமானது, குற்றங்களை குறைப்பது. ஒருவேளை ஒரு ஆணும், ஆணும் யாருக்கும் தொந்தரவில்லாமல் தங்கள் பாலியல் தேவைகளைத் தீர்த்துக் கொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம், பெண்ணின் மீதான பாலியல் வன்முறகள் குறையத்தான் செய்யும். இங்கு ஆணும் பெண்ணும் குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்காக மட்டும் தான் உடலுறவு வைத்துக் கொள்கிறார்களா? அது உண்மையாக இருந்தால் தேவையான் குழந்தைகளைப் பெற்றுக் கொணடபின், பாலியல் உறுப்புகளை நீக்கம் செய்துவிடலாமே? குழந்தை பிறப்பு என்பது உடலுறவின் உப விளைவு அவ்வளவு தான்.
ஓரினச்சேர்க்கை இயற்கைக்கு விரோதமானது இல்லையா?
ஆண் என்பதும், பெண் என்பதும், ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்வது என்பதும் இயற்கையின் நியதி என நாம் நம்புவதெல்லாம் ஒருவகையான மனப் பழக்கமே. நமது “பாரம்பர்யமான குடும்பத்தில்” ஆணுக்கான உடை, பெண்ணுக்கான உடை, வேலைமுறை, சகாயங்கள், கட்டுப்பாடுகள் இவை தான் ஒருவரை ஆணாகவோ, பெண்ணாகவோ உருவாக்குகிறது. எல்லா உடல்களும் இயற்கையின் கொடைகளே. ஒரு ஆற்றின் போக்கைத் திருப்பி அணை கட்டுவதைவிட, ஒரு மரத்தை வெட்டுவதை விட ஓரினச்சேர்க்கை இயற்கைக்கு எதிரானது அல்ல,. அது இயற்கையின் மற்றொரு தேர்வு, மாற்று நீதி.
இதைப் பற்றி பேசும்போது உங்களைச் சுற்றியுள்ள்வர்கள் தவறாகப் நினைப்பார்களே
போற்றுவார் போற்றட்டும், புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும்.
நீங்கள் ஓரினச்சேர்க்கையாளர் என்பதை வெளிப்படையாக ஒத்துக் கொள்கிறீர்களா?
.ஆணும் பெண்ணுமோ, ஆணும் ஆணுமோ, பெண்ணும் பெண்ணுமோ தங்கள் உடல் தேவைகளை நிறைவு செய்வதற்கான தேர்வுகள் மீது தலையிடவோ, தடை செய்யவோ யாருக்கும் உரிமையில்லை, தனிமனிதரோ, சட்டமோ, அதை தடை செய்தால், அது மனித உரிமை மீறல், ஆதலால், நான் ஓரினச்சேர்க்கையை ஆதரிக்கிறேன். அதை தடை செய்தால் அதையும் எதிர்ப்பேன்.
ஓரினச்சேர்க்கையை ஆதரிக்கும் நான் ஓரினச்சேர்க்கையாளராக இருக்க வேண்டிய கட்டாயமில்லை. என்னுடைய பாலியல் ரீதியான் தேர்வு முறைகள் என்னுடைய விருப்பம் சார்ந்தது. அந்தரங்கமானது. பொது சமூகத்திற்கு அறிவிப்பது அரசியல் தேவையென்றால், என் கவிதைத்தொகுப்பில் சொன்னது போல, ஆணுடல், பெண்ணுடல் என்ற பேதம் எனக்கு இல்லை. நான் இருபால் விருப்பமுடையவள்
மூன்று புதிய கவிதைகள்
1
என் முலைகளைப் பிரித்து வைத்தவளைத்
தேடி கொண்டிருக்கிறேன்
நீ தானா அவள்
உன் இரண்டு கைகளுக்கும் வேலை வேண்டுமென்றா செய்தாய்
இல்லை வாய் கொள்ளவில்லையென்றா
இரு குன்றுகளுக்கிடையே தூளி கட்டி விளையாடுவது உன் சிறுவயது கனவு
என் பிள்ளை பால் குடிப்பது கண்டு பொறுக்காமல் தானே பாகம் பிரித்தாய்?
உன் பிள்ளைக்கு அறிவில்லை,அது பால் அல்ல, தேன் என்று வேறு சொல்கிறாய்
வாகை, சித்திரக்கனி, ஊமத்தை, தாழம்பூ, தாமரை, அல்லி, கத்திரி என்று தினம் ஒரு பெயரிட்டு அழைத்து மயக்குகிறாய்
விரட்டவும் முடியவில்லை
உன் நாக்கின் வெப்பத்திற்கு என் காம்புகள் கருவாச்சி தளிர்கள் போல துளிர்க்கின்றன.
பல் தடங்கள் இணைத்து நீ வரையும் சித்திரங்கள் பருவந்தோறும் உயிர் பெறுகின்றன
அவற்றை ஒவ்வொரு நாளும் ஒரு அகழ்வாராய்ச்சியாளன் வந்து வாங்கி செல்கிறான்.
நீ கிழித்து வைத்திருக்கும் ரவிக்கைகளை என்ன்டி செய்வது?
2
அவன் எப்படியிருப்பான்
மடிந்த வரலாற்றுப் பக்கம்
எப்படி தெரிந்துக் கொண்டாய்
அவன் எப்போதும் நிர்வாணமாய் இருந்தான்
அவன் உடல் ஒலித்ததா
ஆம்,நடுக்கடல்
என்ன
நூற்றாண்டு துயில்
உண்மையாகவா
ஆமாம், எனக்குள்ளே, என் கர்ப்பப்பை வாயில்
அவனை சுவைத்தாயா
துயரத்தின் உவர்ப்பு
எப்படி
என் நாக்கின் ரேகைகளை காணவில்லை
சரியாகச் சொல்
நான் தோற்றுப் போனேன்
பின் ஏன்
சுய அழிவு
அவனிடம் ஏதாவது பேசினாயா
இல்லை பேசவில்லை, எனக்குப் பசி
இப்போது எப்படி உணர்கிறாய்
ஒரு அம்பு போல
அவனை எப்படி கண்டுபிடித்தாய்
ஏற்கெனவே கனவில் வந்தவன்
என்ன நினைவு
கடல் புறா
ஏன் அழுகிறாய்
என்னால் மறக்க முடியவில்லை
ஏன் அழுகிறாய்
குஞ்சு முடமாக்கப் பட்டிருந்தது
3.
நீ அகன்ற
அந்தப் பொழுது
என் நிர்வாணத்தை உடைந்த கண்ணாடிக்கு வீசினேன்
காற்றின் அறைகளில் அமிலத்தை கொட்டினேன்
இருத்தலின் துண்டுகளை ஒன்று விடாமல் பொறுக்கித் தின்றேன்
கனவுகளை விற்கும் கலைஞர்களை நாடாப் புழுக்களைப் போல் வல்லாங்கச் சொல்லி நிந்தித்தேன்
கவிதைகளின் புதிர்களை உருவி நாய்களுக்கு போட்டேன்
என் எலும்புகளில் வன்மம் ஏறுகிறது
நீல கரப்பான்
கடலறைந்து பிளக்கும் காகமென் காமம்
பெருமழையில் உன் விந்து நுரைப்பைத் தேடி நீந்துகிறேன்
அகப்படு
லீனா மணிமேகலை