தனிமொழியா? தீண்டத்தகாத மொழியா?
http://innapira.blogspot.com/2010/06/2_10.html
பெருந்தேவியின் கவிதைகளில் சில எனக்குப் பிடிக்கும். அதை வெளிப்படுத்தவும் நான் தயங்கியதில்லை. எனக்கு உடன்பாடில்லாதவற்றை சுட்டிக் காட்டவும் தயங்கியதில்லை. அதன் விளைவுகள் தான் இந்த விவாதங்கள். ஆனால் அவரோ
//இனி உங்கள் பெயரோ, உங்கள் கவிதைகளோ என் எழுத்தில் வராது. நீங்கள் எழுதும் எதையும் நான் வாசிக்கவும் மாட்டேன்//
என்று அறிக்கை விடுகிறார். நல்லது. ஒதுக்குதல் அல்லது ஒதுங்குதல் என்பது பார்ப்பனீயப் பண்பு என்பார் பெரியார். பெருந்தேவிக்கு என் பிரதி தீண்டத்தகாதப் பிரதியாகியதில் எனக்கு வியப்பேதுமில்லை.
http://www.lumpini.in/a_punaivu-005.html
“பெட்டை நாயின் கூச்சல்” கட்டுரையில் மகாஸ்வேதா தேவியின் கதையில் வரும் காட்சியைக் குறிப்பிட்டது தமிழ்ப் பெண் கவிதையைக் குறித்த குறியீடே தவிர என்னைப் பற்றியதோ, பாலியல் சுதந்திரத்தைப் பற்றியதோ அல்ல. அப்படி பெருந்தேவி திரித்துக் கூறுவதை நம்புவதற்கு வாசகர்கள் முட்டாள்களும் அல்ல.
கீழே குறிப்பிட்டுள்ள கட்டுரையின் பத்தியில் தனிப்பட்ட முறையில் எங்கயும் நான் என்னை முன்னிறுத்திக் கொள்ளவில்லை.
“மகாஸ்வேதா தேவியின் “திரெளபதி” என்ற கதையில் வரும் காட்சியில் ராணுவ அதிகாரி முன்திரெளபதி நிர்வாணமாக நிற்கிறாள். அவள் தொடைகளிலும், முலைகளிலும், அல்குல்லிலுமுறைந்துப் போன ரத்தம். “இவ துணியெல்லாம் எங்க? “என்ற ராணுவ அதிகாரியின் கேள்விக்கு”உடுத்த மாட்டேங்கிறா சார், கிழிச்சுப் போட்டுட்டா” என்கிறார்கள்.மேலும் அதிகாரியின் அருகில்வரும் திரெளபதியின் கரிய உடல் குலுங்க ஆவேசமாக சிரிக்கிறாள். அவளின் குதறப்பட்டெளதடுகளிலிருந்தும் ரத்தம். “துணி என்ன துணி? யாருக்கு வேணும் துணி? என்னைநிர்வாண்மாக்க உன்னால் முடியும், ஆனால் என்னை திரும்ப உடுத்த வைக்க முடியுமா? சீ.. நீ ஒருஆம்பளையா?” என்று கேட்டுவிட்டு ராணுவ அதிகாரியின் தூய வெள்ளை சட்டையில் “தூ” என்று துப்புகிறாள். “நான் பார்த்து வெட்கப்பட வேண்டிய ஆம்பளை இங்க யாருமில்ல, என்மேல்துணியைப் போட எவனையும் விட மாட்டேன். என்ன செய்வே? வா என்னை என்கெளண்ட்டர்பண்ணு” என்று சிதைக்கப்பட்ட முலைகளோடு தன்னை நெருங்கும் நிராயுதபாணியான டார்கெட்முன்னால் அதிகாரி பயப்படுகிறார். அது ஒரு அமானுஷ்ய பயம்.அந்த பயம் தான் ‘பெண்கவிஞர்கள் தம்மை திடுக்கிட்டு திரும்பிப் பார்க்க வேண்டுமென்பதற்காக ஆடையை அவிழ்த்தெறிகிறார்கள்’ என்ற விமர்சனத்தின் அடிப்படையும் காரணமுமாக இருக்க முடியும்”
இதை வாசிப்பவர்கள், யார் பொய் சொல்கிறார்கள்? யார் “பயனிலா சொல்லும்” பண்புடன் இருக்கிறார்கள்? என்பதை புரிந்துக் கொள்ளட்டும்.
போராளி பற்றிய பெருந்தேவியின் புரிதல் வேடிக்கையாக உள்ளது. படைப்பாளிகள் என்பவர்கள் கருத்துப் போராளிகள் தானே? தமிழ்ச் சூழலில் பொதுவாக பெண் கவிஞர்கள் தங்கள் அரசியல் செயல்பாட்டிற்காக வன்முறைக்கும் தாக்குதல்களுக்கும் உள்ளாகிறார்கள் என்ற உருவகத்திற்காக இந்தப் பத்தி எழுதப்பட்டது. பிரதிகளை வாசிக்கும் போது முன் முடிவுகளோடு வாசித்து, இல்லாத குற்றத்தைக் கண்டுபிடிக்கும் இவரின் தந்திரம் எனக்குப் புதிதல்ல. எனது இரண்டு கவிதைகள் பற்றிய “விமர்சனக்” கட்டுரையிலேயே நான் அறிந்துக் கொண்டது தான் .
அதிகாரத்தை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்து வைத்திருக்கும் பெருந்தேவி போன்றவர்களிடம் யாரும் அதிகாரம் செய்ய முடியுமா என்ன? அரசியல் நிலைப்பாடுகளில் இரட்டை வேடம் போடும் இவருக்கு நான் வைப்பது கண்டனங்கள் மட்டுமே. மற்றபடி எந்த தளத்திற்கு வேண்டுமானாலும் அவர் பின்னூட்டம் விடட்டும் , விசுவாசமாயிருக்கட்டும் . எனக்குப் பொருட்டே இல்லை.
மற்றபடி வினவு எழுதும் பொறுக்கித்தனமான, வக்கிரக் குப்பைகளை “இன்டலக்சுவலாக” சகித்துக் கொள்ளும் இவருக்கு “வக்கில்லை” “கூச்ச நாச்சம்” என்ற சொற்களை ஜீரணிக்க முடியாதா என்ன?
மேலும், லும்பினியில் வந்த கட்டுரையில் ‘வினவு’ குறித்த பெருந்தேவி, ஜமாலன் போன்றவர்களின் நிலைப்பாட்டைப் பற்றி பொதுவாக, “பெண் எழுத்து எம்மிடம் கோரி நிற்பவை எவை” என்ற உரையாடலில் முதல் கருத்தாக முன் வைத்திருந்தேன். என் பிரதிகளை வாசிக்க விரும்புபவர்களுக்கு மட்டும் இதை மறுபதிவு செய்கிறேன்.
“மரபிலி பிரதிகளைக் கண்காணிக்கும் அதிகார எந்திரம் தன் ஒழுங்கு நடவடிக்கைகளை பிரதியாளரின் மீது நீட்டித்து தாசி, தேவடியாள், அவிசாரி, பைத்தியக்காரி, முண்டை, வேசி,விபசாரி என்று பெயர்களிட்டுப் பாலியல் ரீதியாக ஒடுக்குவது, பெண் படைப்பாளியை திமிர்பிடித்தவள் என்றும் அவளைப் பலரும் புணர்ந்து தான் ஒடுக்க வேண்டும், யோனி வழியாக மட்டுமன்றி வாய்/குதம் வழியாகவும் புணர்ந்து ஒடுக்க வேண்டும் என்று குரலிடுவது, எழுதுவது போன்ற வன்முறைகளை செய்பவர்களின் மீது பகையை அறிவிக்க வேண்டும். அப்படிப்பட்ட சக்திகளோடு “பெண்” விசயத்தில் தானே அவர்கள் அப்படியிருக்கிறார்கள், மற்ற விசயங்களில் சேர்ந்து செயல்படலாம் என்று உடன்படும் பரந்த மனதுக்காரர்களின் இரட்டை வேடங்களை எழுத்தளவிலாவது தொடர்ந்து தோலுரிக்க வேண்டும். சாதி திமிரோடு இருக்கும் சக்திகளோடு எப்படி சகிப்புத் தன்மையைக் காட்ட முடியாதோ, அதே போல பாலினத் திமிரோடு இருக்கும் சக்திகளோடும் வேறு விசயங்களுக்கான கூட்டு நடவடிக்கைகளையும் மறுக்க வேண்டும். பாலின விழிப்பை முன் நிபந்தனையாக வைத்து பிரதிகளுக்குள்ளும், பிரதிகளுக்கு வெளியேயும் கறாராக இயங்க வேண்டும்.பெண்ணாக இருந்தும் ஆண்நிலைவாதக் குப்பைகளை எழுதுபவர்களும், அவர்களின் பிரதிகளும் இதில் விதிவிலக்கல்ல”
தனிமொழியானாலும், தீண்டத்தகாத மொழியானாலும் இதுவே என் மொழி.
நன்றி, வணக்கம்
லீனா மணிமேகலை
பதிவுலகின் தரங்கெட்ட பக்கங்கள்
எக்ஸ்கியூஸ் மீ கவிஞர் பெருந்தேவி
எது கவிதை? எது கவிதையல்ல? எது உருப்படியான கட்டுரை, எது உருப்படியான கட்டுரையல்ல என்பதைப் பற்றிய உங்கள் மேலாதிக்க மதிப்பீடுகளுக்கெல்லாம் நான் முகம் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது.
உங்கள் மேலிருந்த மரியாதை எல்லாம், செய்ய வேண்டிய ‘உங்கள் மேலதிக வேலைகளுக்கு மத்தியிலும்’ வினவு மாதிரியான பொறுக்கி அரசியல் செய்துக் கொண்டிருக்கும் இணையதளங்களுக்கு ஓடிப் போய் பின்னூட்டம் விட்டுக் கொண்டிருக்கும் இரட்டை வேடத்தில் காணாமல் போய்விட்டது. பொது வெளியில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணை, அந்த டைரக்டரோடு படுத்தாள், இந்த டைரக்டரோடு கூத்தடித்தாள் என்றெல்லாம் எழுதி, ஒரு கண்டனக் கூட்டத்தில் “தேவிடியாவோடு எல்லோரும் படுங்கடா” என்றெல்லாம் கூப்பாடு போட்ட ஒரு பொறுக்கி கும்பலைக் கண்டிக்கத்தான் உங்களுக்கு வக்கில்லை. அந்த தளத்திற்கு சென்று உங்கள் “இன்டலக்சுவல்” கருத்தை எந்த அடிப்படையில் எழுதுகிறீர்கள்? ஏன் பெருந்தேவி, அதே கும்பல் உங்களையும் “அந்தப் பேராசிரியரோடு போனாள், இந்த எழுத்தாளரோடு கூத்தடித்தாள்” என்று சொல்வதற்கும், பெயர் சொல்லி எழுதுவதற்கும் எவ்வளவு நேரம் ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
நர்சிம் வக்கிரம் என்பதை ஒரு கேடு கெட்ட வக்கிர கும்பலின் இணையதளத்தில் சென்று தான் நீங்கள் பதிவு செய்ய வேண்டுமா? இதில் உங்களுக்குத் தொடர் வண்டி போல பெண்ணியம், பின்நவீனத்துவம், உடலரசியல், கோட்பாடெல்லாம் பேசும் “என்னருமை” தோழர் ஜமாலன் வேறு. அவர் “யாரெ”ன்றே எனக்கு குழப்பம் வந்துவிட்டது. வினவு, கீற்று இன்னும் புற்றீசல் போல பதிவுலகில் பொறுக்கித் தின்றுக் கொழுத்துக் கொண்டிருக்கும் வைரஸ்களுக்கான உங்கள் விசுவாசத்திற்கு நீங்கள் விளக்கம் தந்தாக வேண்டும். பெண்கள் விசயத்தில் கொஞ்சம் அப்படி இப்படி, ஆனால் அவர்கள் மற்றவற்றில் நியாயமாகப் புரட்சி செய்துவிடுவார்கள் என்றெல்லாம் நியாயம் பேசினால் நீங்கள் பேசும் அரசியல், கோட்பாடு,நம்பும் எழுத்து எல்லாவற்றையும் கைவிட்டு விடுங்கள். சும்மா அழுகுணி ஆட்டம் எல்லாம் ஆடக்கூடாது.
என் கவிதை “அரசியல் துண்டுப் பிரசுரமாகவே” இருந்துவிட்டுப் போகட்டுமே?நான் பொதுப் புத்திக்கெதிரான குற்றம் செய்யவே எழுதுகிறேன், திரைப்படங்கள் படைக்கிறேன். நான் நம்பும் விசயங்களை செய்வதற்காக, என் தேர்வுகளுக்காக என் குடும்பம், சாதி,நட்பு, வர்க்கம், மானம் என்று என்ன இயலுமோ எல்லாவற்றையும் பலியிட்டுத் தான் இயங்கிக் கொண்டிருக்கிறேன்.
அறிவு மரபு பற்றிய உங்கள் பார்ப்பனீய வியாக்கியானங்களையெல்லாம் வேறு யாரிடமாவது வைத்துக் கொள்ளுங்கள். விளைவுகளை மட்டுமே நம்புபவள் நான். பாசாங்குகளிலிருந்து இலக்கியத்தை காப்பாற்றுவது முக்கியம் என்பது என் தீர்மானம்.
பிறப்பால் பார்ப்பனியர் என்றால் நான் எழுதுவது பார்ப்பனியப் பிரதியா என்று நீங்கள் எடுக்கும் பால பாடங்கள் ரொம்ப உளுத்துப் போனவை.கொஞ்சமும் கூச்சம் நாச்சம் இல்லாமல் பார்ப்பனிய குழுவூக்குறிச் சொற்களை இலக்கியப் பிரதிகளில் பயன்படுத்தவும் செய்துவிட்டு, அதற்கு வக்காலத்தும் வாங்கும் உங்கள் சொந்த சாதி அபிமானங்களால், இழக்கப் போவது நீங்கள் தான். வேறு யாருமல்ல.ஒரு பிரதியில், ஒரு ஆதிக்க சாதியில் பிறந்தவர் என்ற வகையில், எந்த அடையாளத்தையும் தன்னையறியாமல் கூட பதிந்து விடக் கூடாது என்று அதிகவனமாக இருப்பது தான் சரியான, நியாயமான அரசியல் நிலைப்பாடாக இருக்க முடியும். சொல்லில் என்ன இருக்கிறது? அப்புறம் பூணூலில் என்ன இருக்கிறது, அப்புறம் அக்கிரகாரத்தில் என்ன இருக்கிறது, இந்து மதத்தில் என்ன இருக்கிறது?என்றெல்லாம் சொல்லிக் கொண்டே போனால், மன்னித்துவிடவும். தோழமை, உரையாடல் எதுவும் உங்களிடம் சாத்தியமில்லை. உங்கள் புராதன வார்த்தைகளையெல்லாம் தாண்டி தமிழ் நவீனக் கவிதை வேறு இடத்திற்கு நகர்ந்துவிட்டது.நீங்கள் நலம் பேணும் சொற்களை வரிசைப்படுத்தினால் அதன் நுண்ணரசியல் உங்கள் அடையாள விடுபடலின் உண்மை நிலவரத்தை தோலுரிக்கும்.
தலித்திய அரசியல் எழுச்சிக்குப் பின்னால், எழுத வந்த பார்ப்பனரல்லாத பெண்ணெழுத்து மிகப் பெரிய ஒடுக்குமுறைக்கும், அதை மீறிய விவாதத்திற்கும் வழிவகுத்தது. இன்றளவும் அந்த கொந்தளிப்பு நீள்கிறது. தமிழ்க் கலாசார அசைவுகளில் இது மிக முக்கியமான சலனம். இதைப் புனைவு என்று நீங்கள் சொல்வதிலேயே உங்கள் ஆதிக்க கருத்தியல் நிலைப்பாடு வெட்ட வெளிச்சமாகிறது. என்னங்க ஒரு பத்து வருடமிருக்குமா? இதற்கே இப்படி காய்கிறீர்களே? ஆயிரமாயிரம் வருடமாக அறிவு மரபிலிருந்து ஒதுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட, தலித் சமூகங்கள் எப்படி காய்ந்திருப்பார்கள்?
விவசாயக் குடும்பத்தில் பிறந்த நான், என் குடும்பத்தில்,வெளியில் வந்து படிக்கும், வேலை செய்யும் முதல் தலைமுறைப் பெண்.எனக்கு சரியென்றுப் படுவதை செய்வேன். அது எழுத்தா? கலையா? பிரச்சாரமா? இல்லை வெறும் குப்பையா? எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். இயங்குவது மட்டுமே குறிக்கோள்.நான் ஒரு ரவுடி மாணவியாகவே இருந்துவிட்டுப் போகிறேனே? என்ன குடி முழுகிப் போகிறது.
புகைப்படங்கள் எடுத்துக் கொள்கிறேன். பியூட்டிப் பார்லருக்குப் போகிறேன், ஜீன்ஸ் போடுகிறேன், ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றுகிறேன். ஆமாம் இப்ப என்ன? இதற்கும் என் பிரதிகளுக்கும் என்ன தொடர்பு? (அது யாருங்க மினர்வா? வினவுக்கு புரட்சிப்பெண்கள் படையணி, கீற்று ரமேஷுக்கு அவர் மனைவியா? முன்ன பின்ன பார்த்ததில்லையே? என்ன செய்ய? இந்தப் பரிதாபகரமான பெண்களுக்கும் சேர்த்து தான் வேலை செய்ய வேண்டியிருக்கு) இலக்கியத்திற்கான எந்த வாசிப்போ, உழைப்போ, தேடலோ இல்லாத இப்படிப்பட்ட அற்பப் பதர்களின் “பெண்ணிய” “இடதுசாரி”, “பெரியாரிய” கட்டுரைகள் எல்லாம் உங்களுக்கும் ஜமாலனுக்கும் கேவலமான குப்பைகளாகத் தெரியாமல் போனது ஏன்? இதில் பண மோசடி புகார்கள் வேறு. என்னோடு படித்த 63 இன் ஜினியர்களும் உங்களை மாதிரி அமெரிக்காவில், மத்திய கிழக்கில் வேலை செய்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். என்னை மாதிரி குடும்பத்தில் தரித்தரப் பட்டம், ஓடுகாலி பட்டம் வாங்கி வைத்துக் கொண்டு மாதாந்திர பில்களுக்கே சிங்கியடித்துக் கொண்டிருக்கவில்லை. இருத்தலுக்கே இங்கே லாட்டரி, இதில் கவிதை எழுதி, ஆவணப்படங்கள் எடுத்து யாராவது சொந்த வீடு, கல்யாண மண்டபம் கட்டியிருக்கிறார்களா என்ன? உங்கள் “தோழர்களிடம்” முகவரி யிருந்தால் கேட்டுச் சொல்லுங்க. புண்ணியமாப் போகும். தெரிஞ்சுக்கிறேன்.
வினவு வியாபாரிகள் ஆண்குறி வகைமாதிரிகளைக் கேட்டார்கள், நீங்கள் உடல்மொழி வகை மாதிரிகளைக் கேட்கிறீர்கள்! ஒரு கும்பலாகத் தான் கிளம்பியிருக்கிறீர்கள்.
என் இரண்டு கவிதைகளைப் பற்றி நீங்க கட்டுரை எழுதியவுடன் ஏதோ இலக்கிய உந்துதலில் எழுதுகிறீர்கள் என்று ஏமாந்து போன “நான்”(இங்கேயும் சுயமோகம் வந்து தொலைக்கிறதே?) நிச்சயம் நிறைய பேருக்குப் பாடமாக இருப்பேன்.உங்க பாணியில் “கவிதை என்று அறிவிக்கப் பட்டப் பிரதி” என்ன செய்ததோ இல்லையோ, எனக்கு நிறைய பேரை அடையாளம் காட்டிக் கொடுத்து விட்டது.
நான் பிளாக்கர் இல்லங்க. ஏதோ, பத்திரிகைகளில் வெளிவரும் என் படைப்புக்களை சேகரிக்கும் கிடங்காகத் தான் என் பிளாக் இயங்குகிறது. அதனால பதிவுலகம் பற்றி விரிவாக, எதுவும் தெரியாது.என் நண்பர்கள் இந்த லிங்கைப் பாரு, அந்த லிங்கைப் பாரு என்று அனுப்பி வைப்பதைப் படித்துப் பார்ப்பது தான். அப்படி கிராஸ் பண்ணவர் அய்யனார். தனிமையின் இசையோ , பாஷையோ என்னவோ ஒரு பிளாக் வைத்திருக்கிறார் பெருந்தேவி புண்ணியத்துல இந்த அய்யனார் கணக்கையும் முடித்துவிடலாம். இவனுங்களுக்கெல்லாம் தனியா கட்டுரை போட முடியாது. ஏதோ மார்க்ஸ், ஷோபா சக்தி இவர்களோடு சேர்ந்ததால் தான் எனக்கு அறிவு வந்துவிட்டது என்று எழுதுகிறீர்களாமே? அறிவு என்ன தொற்றுநோயா? பற்றிக் கொள்வதற்கு? மார்ச் 2009ல் நீங்கள் இவ்வளவு அழகா? அதுவா? இதுவா? ஆதர்சம் என்றெல்லாம் எழுதிய மெயில்கள் என் இன்பாக்ஸில் தான் இருக்கின்றன.
என்னோடு படித்தப் பசங்க, அவங்க பிட் போடுவதை நிராகரித்தால் கழிவறையில் போய் தப்பு தப்பா படம் போட்டு எழுதுவாங்க.. பரீட்சையில் மார்க் அதிகம் வாங்கிட்டா அதே சுவரில் ஆசிரியரோடு இணைத்து எழுதுவாங்க… போனால் போகிறது என்று சிரித்து வைத்தால், ஓடிப்போய் அவர்களோடேயே சம்மந்தப்படுத்தி எழுதி அல்ப சந்தோசம் பட்டுப்பாங்க. ஒன்று மட்டும் தெளிவாப் புரியுது. இந்தப் பதிவுலகமே இப்படிப்பட்ட கேடுகெட்ட, நோய் முற்றிய அயோக்கியப் பசங்க கும்மியடிக்கிற உலகமா இருக்கு. ஆளை விடுங்க.,வேற வேலைகளைப் பார்ப்போம்.
தொடர்புடைய சுட்டிகள்
http://innapira.blogspot.com/2010/06/1_08.html
http://www.lumpini.in/
லீனா மணிமேகலை
ஒரு பெட்டை நாயின் கூச்சல்
http://www.lumpini.in/a_punaivu-005.html
மகாஸ்வேதா தேவியின் “திரெளபதி” என்ற கதையில் வரும் காட்சியில் ராணுவ அதிகாரி முன் திரெளபதி நிர்வாணமாக நிற்கிறாள். அவள் தொடைகளிலும், முலைகளிலும், அல்குல்லிலும் உறைந்துப் போன ரத்தம். “இவ துணியெல்லாம் எங்க? “என்ற ராணுவ அதிகாரியின் கேள்விக்கு “உடுத்த மாட்டேங்கிறா சார், கிழிச்சுப் போட்டுட்டா” என்கிறார்கள்.மேலும் அதிகாரியின் அருகில் வரும் திரெளபதியின் கரிய உடல் குலுங்க ஆவேசமாக சிரிக்கிறாள். அவளின் குதறப்பட்ட உதடுகளிலிருந்தும் ரத்தம். “துணி என்ன துணி? யாருக்கு வேணும் துணி? என்னை நிர்வாண்மாக்க உன்னால் முடியும், ஆனால் என்னை திரும்ப உடுத்த வைக்க முடியுமா? சீ.. நீ ஒரு ஆம்பளையா?” என்று கேட்டுவிட்டு ராணுவ அதிகாரியின் தூய வெள்ளை சட்டையில் “தூ” என்று துப்பிகிறாள். “நான் பார்த்து வெட்கப்பட வேண்டிய ஆம்பளை இங்க யாருமில்ல, என்மேல் துணியைப் போட எவனையும் விட மாட்டேன். என்ன செய்வே? வா என்னை என்கெளண்ட்டர் பண்ணு” என்று சிதைக்கப்பட்ட முலைகளோடு தன்னை நெருங்கும் நிராயுதபாணியான டார்கெட் முன்னால் அதிகாரி பயப்படுகிறார். அது ஒரு அமானுஷ்ய பயம்.அந்த பயம் தான் ‘பெண் கவிஞர்கள் தம்மை திடுக்கிட்டு திரும்பிப் பார்க்க வேண்டுமென்பதற்காக ஆடையை அவிழ்த்தெறிகிறார்கள்’ என்ற விமர்சனத்தின் அடிப்படையும் காரணமுமாக இருக்க முடியும்.
தமிழ்ப் பெண் கவிதையின் தொப்புள் கொடியை சங்க காலத்தின் ரேகைகளிலிருந்து எடுக்கிறார்கள் பெண்ணியல் ஆய்வாளர்கள். பின், சமணம், பெளத்தம் என்று பெருமத காலங்களில் மடிந்து, பக்தி காலங்களில் சைவத்திற்கொரு காரைக்கால் அம்மையார்,வைணவத்திற்கொரு ஆண்டாள் என்று புனிதத்தில் தட்டுப்பட்டு, ஒரு நீண்ட தலைமறைவு காலத்தைக் கடந்து, 1970 களில் அரசல் புரசலாகத் தெரிந்து, 90களில் எழுச்சி பெறுகிறது. இது எழுச்சி அல்ல, சுழற்சி என்று சொல்பவர்கள் உண்டு. நிகழ்கால நோக்கில், பழங்கால இலக்கியங்களை ஆராயும் ஆய்வுகள் அடிக்கருத்தியல் மட்டும் சார்ந்தவையா என்ற கேள்வியும் கூடவே எழுகிறது.சங்ககால பெண்பாற் புலவர்களின் பாடல்களிலிருந்து, அக்காலத்துப் பெண்களின் காதல், பொருளாதார சார்புத்தன்மை, வீடே “வெளியாக” இருத்தல், பரத்தையிடம் சென்று வரும் கணவனையும் ‘கற்பு’ நெறியோடு ஏர்றுக் கொள்ளுதல், உடன் கட்டை ஏறுதல், கைம்மை, காதலனை கையகப்படுத்தும் முயற்சிகள் என்பது போன்ற கருப்பொருள்களை சங்க காலப் பெண்பாற் புலவர்களின் பிரதிகளில் காண முடிகிறது. காமத்தை வெளிப்படுத்துதல், காதல் துணையை தேடிக் கொள்வதில் இருக்கும் தேர்வுரிமை, களவொழுக்கம், போன்றவற்றை சுட்டிக் காட்டி, சங்க காலத்தில் ஆண் பெண் சமத்துவம் நிலவியது போல சில விமர்சகர்கள் குறிப்பிட்டாலும், சங்ககாலச் சூழல் தாய்வழி சமூகத்தின் மிச்ச சொச்சங்களையும், தந்தை வழி சமூகம் வேரூன்ற ஆரம்பித்த காலகட்டைத்தையும் கொண்டிருந்ததாக கணக்கிலெடுக்க முடியும்.
பக்தி இயக்கம் தந்த கவி ஆளுமைகளான ஆண்டாளும், காரைக்கால் அம்மையாரும் புனிதப்படுத்தப்பட்ட பிம்பங்கள். அன்றாட வாழ்வின் பெண் இருப்புக்கும், அவர்களின் பனுவல்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. கருத்து ரீதியில் சமய நம்பிக்கையுடன் தன்னை அடையாளப் படுத்தும் அம்மையாரின் குரலில் மரபு வழிப்பட்ட பார்வையே பொதிந்துள்ளது. வேட்கை, விழைவு, இச்சை என்பனவற்றை முறைப்படுத்தி ஒருவித ஒடுங்கிய மன அமைப்பைத் தோற்றுவிக்கும் பக்தி உணர்வை காம விழைவாக எழுதிய ஆண்டாள் தனித்துவமிக்கவராகத் தெரிகிறார். ஆனால் கடவுளைக் காமுறுதல் என்ற “சலுகையினாலேயே” அவருடைய துய்ப்பும், திளைப்பும், மறுக்கப்படாமல் பெருக்கப் படுகின்றன, சிவனும், திருமாலும் பாலியல் பிரதிமைகளாக(Sexual Icons) மாறி பக்தைகளைப் பித்தாக மாற்றுவதும் லிங்கமையவாதத்தையே நிலை நிறுத்துகிறது.
2003 ல் எழுத வந்த எனக்கு முன் ஒரு நீண்ட பட்டியல் இருந்தாலும், வித்தியாசப்படுத்துதல் என்ற திசை நோக்கிய பயணம் 1990 களுக்குப் பிறகே பெண் கவிதைக்கு சாத்தியப்பட்டிருக்கிறது.
பாலினம் கடந்த எழுத்தை எழுதிவிட வேண்டும், பெண் எழுத்து என்பது மாதிரியான சொல்லாடலைக் கடுமையாக எதிர்க்க வேண்டும், பார்ப்பனியப் பெண்ணெழுத்து, பார்ப்பனியரல்லாதப் பெண்ணெழுத்து, தலித் பெண்ணெழுத்து என்றெல்லாம் பார்க்க கூடாது போன்ற அடையாள மறுப்பு அரசியலில் ஆர்வமும், குறிக்கோள்களும் மிகுந்தாலும், கடுமையான சிக்கல்கள் இருக்கின்றன.சாதி, மத, பாலின, வர்க்க வேறுபாடுகளும், ஏற்றத்தாழ்வுகளும் புரையோடிப் போயிருக்கும் சமூகத்தில், ஒரு தன்னிலை இவை எல்லாவற்றையும் கடந்துவிடும் இருப்பை அடைந்துவிட முடியுமா? அப்படியொரு இருப்பு சாத்தியமாகாதப் பட்சத்தில் எல்லாவற்றையும் கடந்தப் பிரதி மட்டும் எப்படி சாத்தியம் என்ற நெருக்கடி உண்டாகிறது.
உடலுக்கு வெளியே, கலாசாரத்திற்கு வெளியே, நிறுவனங்களுக்கு வெளியே, எல்லைகளுக்கு வெளியே, தேசங்களுக்கு வெளியே தன்னை நிறுத்திக் கொள்ளும் முயற்சியாகத் தான் ஆணும் சரி, பெண்ணும் சரி எழுத வருகிறார்கள். ஆனால் நடைமுறையில் அற்பமாகவும், வரலாற்றில் ஒடுக்கப்பட்டவர்களாகவும் இருக்கும் தன்னிலைகளுக்கு கூடுதல் காரணங்கள் இருக்கின்றன என்பதை ஒத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இனத்தில், வர்க்கத்தில், பாலினத்தில், சாதியில் படிநிலையில் “மேலிருப்பவர்கள்” மீது சந்தேகமும், எச்சரிக்கையும், சுயமரியாதையும் கொண்டிருப்பதும், “கீழிருப்பவர்கள்” முன் குற்ற உணர்ச்சியும், “படிநிலை நீக்கம்” செய்ய விழையும் முனைப்பும், பழியையும் அதற்குரிய தண்டனையையும் கூட ஏற்றுக் கொள்வதுமாகத் தான் “இருப்பை” புரிந்துக் கொள்ள முடிகிறது.கலைச் செயல்பாடும் அதிலிருந்தே தொடங்க முடிகிறது. அந்த வகையில் சலனங்களை ஏற்படுத்தியவை, பொதுப் புத்தியை தொந்தரவு செய்தவை, நிறுவனங்களைக் கேள்வி கேட்பவை, சுரண்டல்களிலிருந்து இருப்பை விடுவிக்க நினைப்பவை, அசலான வித்தியாசங்களின் மீது வினை புரிந்தவை, ‘பெண்மை’ மேலானது – ‘பெண்’ இழிவானவள் அன்ற முரண்பாட்டைத் திருகியவை என்ற வகைகளில் பெண்ணெழுத்து கடந்தப் பத்தாண்டுகளில் தான் வினை புரிந்திருக்கின்றது.
“பெண்ணுடல் என்ற நிலத்தின் மீதே தந்தை வழி சமூகம் நிறுவப்பட்டது. பெண் தன்னிடம் சிதறிக் கிடக்கும் மன ஆற்றல்களையும், உடல் வல்லமையினையும் நோக்கு நிலையினையும் ஒன்றிணைக்க வேண்டுமானால் அவள் சிந்திப்பது உடலினூடாக நிகழ வேண்டும்” என்கிறார் பெண்ணியலாளர் அட்ரியன் ரிச். பெண் பெயரில் கையெழுத்துப் போட்டால் மட்டும் பெண்ணெழுத்து ஆகிவிட முடியாது.பாலின விழிப்புடன் எழுதும் சில ஆண் பிரதிகளிலும் பெண்ணெழுத்து நிகழ்ந்துவிடும் வாய்ப்புகளையும் மறுக்க முடியாது.
90களுக்குப் பிறகானப் பெண்கவிகள் முரணும் உடன்பாடுமாய் வெவ்வேறு தளங்களைத் தொட்டுச் சென்றிருந்தாலும், அவர்களின் பிரதிகளில் இருக்கும் “பிரதானப் போக்குகளை” அவதானிக்கலாம்.பெண் எழுத வந்ததே அரசியல் செயல்பாடு, மறுக்கப்பட்ட குரல்களின் வெளிப்பாடு, எதிர்ப்பின் தடயங்கள் என்ற அடிப்படையில் எழுத வந்த எல்லா பெண் கவிஞர்களையும் பொருட்படுத்த வேண்டும் என்றாலும், ஆணின், அதிகாரத்தின், நிறுவனத்தின் மொழியையே மறுபதிப்பு செய்யும் பிரதிகளை நிராகரித்து விடலாம்.அரசியல் மற்றும் கவித்துவத்தைக் கூட்டுவித்து வாசிப்பாளரை நுகர்வோராக மாற்றாமல் செயலூக்கமுள்ள பங்கேற்பாளராக மாற்றும் குறிக்கோளை ஓரளவு அடைந்திருக்கும் பிரதிகளாய் சிலவற்றை அடையாளங் காணலாம்.
“என் உடலுடன்
நான் உறங்க வேண்டும்
இடது கரத்தால் சிவனைப்
பிய்த்தெறிந்து விட்டு”
என்ற மாலதி மைத்ரியின் கவிதை, பெண்ணின் நினைவு உலகத்தை தன் கட்டுக்குள் கொண்டு வரும் ஆணின் உச்சக்கட்ட அடக்குமுறையை சிதைக்கிறது. ஆணை, அதன் வழியே அதிகாரத்தை வெளியே நிறுத்தும் துணிச்சலை அவர் பிரதிகள் செய்கின்றன. தாய்மை வழியாக குடும்ப அமைப்பை கையகப்படுத்தி சமூகத்தையும் கையகப்படுத்துவதன் மூலம் அதிகாரத்தை தாயை நோக்கி திரட்டிக் கொள்ளும் அரசியலை முன் வைக்கிறார்.மறு உற்பத்தி பெண்ணின் விடுதலைக்கு தடையாய் இருக்கிறது என்பதை மறுத்து தாய் – சேய் உறவை உயிரியல் அம்சமாகப் பார்க்கிறார். ஆண் – பெண் இணை முரணைத் தலைகீழாக மாற்றிப் போட்டு பெண் – ஆண் என்று பெண்ணை முதன்மைப் படுத்தும் செயல்பாடுகளை மாலதியின் கவிதைகள் செய்துப் பார்க்கின்றன.ஆனால் அந்த இணை முரணை, முரண்களாகவே நிறுத்திவிடாமல், சிதைத்துக் கலவையாக்கி விடும் எழுத்துமுறையை, பன்மைத்துவத்தை எழுதிப் பார்க்கும் சவாலை விட்டுவிடுகின்றன. பெண்ணை தனிமைப்படுத்தும் மாலதியின் கவிதைகள், அவளின் சுதந்திர இருப்பிற்கான மாற்று வழிகளை சொல்லத் தவறுகின்றன.
பெண் துறவை வழிமொழியும் ரிஷி, பெண் இருப்பையே வலியாகவும், மனப்பிறழ்வாகவும் வரிக்கும் சுகந்தி சுப்ரமணியன், மத்தியதர வாழ்க்கை, பணியிடம், குழந்தைகள் என்பது போன்ற “நல்ல” கச்சாவை மட்டும் கவிதையாக்கும் வெண்ணிலா, உழைக்கும் பெண்களைக் காட்சிப்படுத்தும் இளம்பிறை, காழ்ப்பையும் கழிவிரக்கத்தையும் அழகியலாக்கும் உமா மகேஸ்வரி என்று பெண்கவிகள் தங்களுக்கென்று அலாதியான உலகங்களை உருவாக்கிக் கொண்டு எழுதி வருகிறார்கள் என்றாலும் சமநிலையை குலைத்துப் போடும் பொறிகளே காலத்தின் தேவையாய் இருக்கின்றன.
பிரமிளிடமிருந்து படிமங்களையும், தேவ தேவனிடமிருந்து ஆன்மிகத்தையும், கோணங்கியிடமிருந்து இடுகுறி சொற்களையும் எடுத்துக் கொண்டு எழுதும் குட்டி ரேவதி, ஆண் மையங்களை குலைக்காமல் அதன் எச்சங்களையே அடுக்குகிறார். ஆணை அறியாதவனாக்கி ” நான் வேறொரு உலகத்தைக் காட்டுகிறேன் வா” என்ற பெண்ணின் அழைப்பை கவிதைகளாக்குகிறார். அதன் மூலம் தன் ஆளுமையை கட்டமைக்கிறார். ஆணின் ஒடிபஸ் காம்ப்ளெக்ஸிற்கு வடிகாலாய் இருக்கின்றன இவரின் பிரதிகள்.அதிகார வடிவங்களை அப்படியே வைத்துக்கொண்டு உள்ளடக்கங்களை மட்டும் மாற்றிவிடுவது, அரசியலாக உடலை முன் வைக்காமல் வெறும் பேச்சாக அதைப் பெருக்குகிறது. அதனாலேயே தயாரிக்கப்பட்ட உடல்களை எப்படி வீழ்த்துவது என்ற கேள்வியை கேள்வியாகவே விட்டுச்செல்கின்றன.
“ரயில் நிலையத்தின் இரு மருங்கையும்
அணைத்துக்கொண்டிருந்த இரவின்
பால்வாசனையுடைய மேனியைத் தீண்டிய் ரயில்
வேகமெடுத்தது
மரத்தின் ரசத்தை உறிஞ்சி ஆடிய இலையொன்று
தன்னைக் கடந்த பருவத்தின் வேகம் நோக்கி
பழுத்து வீழ்ந்தது
முன்பின் பருவங்களின் நினைவுச் சின்னமாய்ப்
பூவின் மகரந்தங்கள் பெருக்கிய உடலை
மரம் சுமந்து நிற்கிறது
பொன்துகள் உதிரும் பலரியின் அழகை
நீயும் காணவேண்டுமென ஏங்குகிறேன்.
கிழவியின் உடலுக்குள் நீந்திய உடலில்
பைத்தியத்தின் குழப்பமற்ற கண்களுடன் தோன்றிய அவனோ
ஏழுகடல்கள் தாண்டி கூடு கட்டிய
மந்திரக்கிளியின் உயிர்தேடிச் சென்றிருக்கிறான்”
என்பது போன்ற இவரின் படிமமொழி தந்திரங்கள் வாசிப்பவரைக் களைப்படையச் செய்பவை.
“எல்லா அறிதல்களுடன்
விரிகிறதென் யோனி”
என்றெழுதும் சல்மாவின் வரிகள் ஒரு சராசரிப் பெண்ணின் எதிர்வினையை மட்டுமே ஆற்றுகின்றன.ஆணின் வஞ்சகத்தைக் காட்டிக் கொடுத்தாலும், அவனிடமே தன்னை ஒப்புக் கொடுத்துவிடும் இயலாமையாய் எஞ்சுகின்றன. ஆணின் விசாரணைக்குள்ளேயே இருந்துக் கொண்டு ஒரு பெண் தன்னை யார் என்று கண்டுபிடித்துவிட முடியாது என்பதை உணர்த்தும் பிரதிகள் இவருடையது. ஆனால் உடைமைவாதிகளான ஆண்களின் “எங்கே பறிமுதல் செய்யப்பட்டு விடுவோமா? எங்கே அடையாளமிழந்துப் போவோமா? ” என்ற பயங்களை மிக நுணுக்கமாக வெளிப்படுத்த சல்மா தவறவில்லை.
“எலி கீறிய காலில் குருதி கசிகிறது
கரப்பான் எகிறிப் பறக்கின்றன
முதுகில் நடந்து சென்ற புலியின் சுவடுகளை
எப்படி பார்ப்பது”
என்ற சுகிர்தராணியின் எழுத்தில் இருக்கும் களிப்பு ஒரு தாய்வழி சமூகப் பெண்ணிற்கே உரிய மூர்க்கத்திலிருந்து வருவது.போலி ஒழுக்கங்களுக்கு கட்டுப்படாத கச்சாவான எதிர் அழகியலை உருவாக்கியதில் சுகிர்தராணி முக்கியமானப் பங்காற்றுகிறார்..
பண்பாடுxஇயற்கை எதிர்வுகளில் இயற்கையோடு பெண்ணைப் பொருத்திப் பார்ப்பது, கொற்றவை, நீலி, பத்ரகாளி எனத் தொன்மத் தெய்வங்களோடு உருவகப்படுத்திக் கொள்வது, பெருங்கதையாடல்களை புறந்தள்ளி ஒருவித பேகனிஸ்ட்(Paganist) கலகத்தை செய்தாலும், உயர்வு நவிற்சிகள் விட்டில் பூச்சிகள் போல திரும்ப திரும்ப லிங்கமய அழகியலுக்குள்ளேயே விழவைக்கிறது என்ற அபாயத்தைப் புறந்தள்ள முடியாது.
ஒட்டுமொத்தமாகத் தொகுத்துப் பார்த்தால் ஏற்கெனவே கட்டமைக்கப்பட்டப் புனிதங்களின் மீது சந்தேகங்களும் அவற்றின் மேலான ஒரு ரண சிகிச்சையும் பெண்கவிதை உளவியலாக மேற்கொண்டிருக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளலாம்.கலாசார அரசியலில் இது ஒரு குறிப்பிடத்தகுந்த சலனம் என்றாலும் இன்னும் செய்ய வேண்டியவை ஏராளம் இருக்கின்றன.
சமகாலத்தில் ஒற்றையிலையென, உலகின் அழகிய முதல் பெண் என்று இரண்டு தொகுப்புகளை எழுதியவள் என்ற அடிப்படையில், பெண் எழுத்து எம்மிடம் கோரி நிற்பவை எவை என்பதை உரையாடலாக வைக்கிறேன்.இந்த கட்டுரையில் நான் சொல்ல விழைவதெல்லாம் முற்றும் முதலான முடிவுகளல்ல. நான் ‘சொல்வதெல்லாம் சரி’ என்று நிறுவ நான் நிறுவனமும் அல்ல. விவாதங்களுக்கான வாசல்களுடன் தான் என் கருத்துக்களையும் விமர்சனங்களையும் வைக்கிறேன்.
மரபிலி பிரதிகளைக் கண்காணிக்கும் அதிகார எந்திரம் தன் ஒழுங்கு நடவடிக்கைகளை பிரதியாளரின் மீது நீட்டித்து தாசி, தேவடியாள், அவிசாரி, பைத்தியக்காரி, முண்டை, வேசி, விபசாரி என்று பெயர்களிட்டுப் பாலியல் ரீதியாக ஒடுக்குவது. பெண் படைப்பாளியை திமிர் பிடித்தவள் என்றும் அவளைப் பலரும் புணர்ந்து தான் ஒடுக்க வேண்டும், யோனி வழியாக மட்டுமன்றி வாய்/குதம் வழியாகவும் புணர்ந்து ஒடுக்க வேண்டும் என்று குரலிடுவது, எழுதுவது போன்ற வன்முறைகளை செய்பவர்களின் மீது பகையை அறிவிக்க வேண்டும். அப்படிப்பட்ட சக்திகளோடு “பெண்” விசயத்தில் தானே அவர்கள் அப்படியிருக்கிறார்கள், மற்ற விசயங்களில் சேர்ந்து செயல்படலாம் என்று உடன்படும் பரந்த மனதுக்காரர்களின் இரட்டை வேடங்களை எழுத்தளவிலாவது தொடர்ந்து தோலுரிக்க வேண்டும். சாதி திமிரோடு இருக்கும் சக்திகளோடு எப்படி சகிப்புத் தன்மையைக் காட்ட முடியாதோ, அதே போல பாலினத் திமிரோடு இருக்கும் சக்திகளோடும் வேறு விசயங்களுக்கான கூட்டு நடவடிக்கைகளையும் மறுக்க வேண்டும். பாலின விழிப்பை முன் நிபந்தனையாக வைத்து பிரதிகளுக்குள்ளும், பிரதிகளுக்கு வெளியேயும் கறாராக இயங்க வேண்டும்.பெண்ணாக இருந்தும் ஆண்நிலைவாதக் குப்பைகளை எழுதுபவர்களும், அவர்களின் பிரதிகளும் இதில் விதிவிலக்கல்ல.
நடைமுறையில் பெண்வெளிக்கான , சுதந்திர இருப்புக்கான மாற்றுப் புனைவுகளை எழுதும்போது, நாம் வாழ்வதும் புனைவுகளுக்கு மத்தியில் தான் என்று உணரத் தலைப்பட வேண்டும். உண்மைகளையும், யதார்த்தத்தையும் திட்டமிட்டு குழப்பவேண்டும். மானுட சித்தாந்தங்கள் சந்தர்ப்பவசமாக ஏன் ஆண்களாலேயே எழுதப் படுகின்றன என்ற கேள்வியும், அவற்றின் மீது தீராத சந்தேகமும், அதிகார மறுப்பையும் பிரதிகளில் அச்சமில்லாமல் வைக்க வேண்டும்.
ஆண் பெண் ஏற்றத்தாழ்வை இதுவரை வந்துப் போன எந்த சித்தாந்தமும், தத்துவமும், கோட்பாடுகளும், தீர்த்ததாய் வரலாறோ, நிதர்சனமோ இல்லை. பெண்ணினத்தின் மீது ஒரு அறிவிக்கப் படாத போர் நடந்துக் கொண்டே தான் இருக்கிறது என்பதை அரூபமாகவோ, நேரிடையாகவோ பிரதிகளில் வைப்பதை தவறவிடக் கூடாது.
அனுமதிக்கப் பட்ட வெளியில் மட்டுமே பயணிக்கக் கூடிய அபத்தங்களை பெண்மொழி தாண்டிவிட்டதாக கருதினாலும், பெண்ணிய அனுபவங்களை மானுட அனுபவங்களாக மாற்றுவதற்குரிய புத்தொளிகளை, சமூகத் தணிக்கை, அரசுத் தணிக்கை, சந்தைத் தணிக்கை, சுயத் தணிக்கை யெல்லாம் தாண்டி இன்னும் இன்னும் பெண்ணியப் பார்வைப் படாத தளங்களில் பாய்ச்ச வேண்டும்.
ஆணுக்குப் பெண் மேலானவளும் அல்ல, கீழானவளும் அல்ல, வேறானவள் என்ற புள்ளிக்கு பெண்கவிதை நகர்ந்து வந்திருக்கிறது. ஆனால் அந்த வேறானவள் என்பதைப் பன்மைப் படுத்திப் பார்ப்பது அவசியம்.இன்னும் கவிதை தரிசிக்காத பெண் உலகங்களை, அனுபவங்களைக் கண்டெடுக்க வேண்டும்.
நுகர்வு, சந்தை நவீனங்கள் ஏற்படுத்தியிருக்கும் கொடூரமான பொய்மை, ஏமாற்று, ஏற்றத்தாழ்வு, அதிகாரத்துவம் போன்றவையின் நுண் அத்துமீறல்களை, அதன் வடிவங்களை எதிர்க்க சொற்களைப் பழக்கலாம், அல்லது புதிய சொற்களை உருவாக்கலாம்.
வடிவம், கூற்றுவகை, உத்தி, அமைதி, போன்ற ஒழுங்குகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்ற கெட்டி தட்டிப் போன மதிப்புரையாளர்களின் அதிகாரங்களைத் தாண்டி பென்ணெழுத்துக்கான விமர்சனத்திற்கென புதிய உபகரணங்களைக்(tools) கோர வேண்டும்.
மார்க்ஸியத்திற்கு உழைப்பு எப்படியோ அப்படித்தான் பெண்ணியத்திற்கு பாலியல்பு என்றார் காதரீன் மக்கின்னென்.உழைப்பை மூலதனமாகக் கொண்ட தொழிலாளர்களை அமைப்பு ரீதியாகச் சுரண்டும் அமைப்பில் வர்க்க வேறுபாடு தொழிற்படுகிறது. அதே போல பெண்ணின் பாலியல்பை அமைப்பு ரீதியாக சுரண்டும் அமைப்பில் பாலின வேறுபாடு தொழிற்படுகிறது. பாலியல்பு குறித்த விவாதம் பெண்ணிய அரசியலின் மையப்புள்ளியாக பெண்ணடிமைத் தனத்தைக் கருதவில்லை. இருபாலருக்குமான பாலியல்பு சுதந்திரத்தைக் கொண்டாடுவது, உடல் வேட்கையைக் கொண்டாடுவதை அங்கீகரிப்பது, இருபாலியல்பு, ஓரினச் சேர்க்கை ஆகியவற்றை தந்தைமை சமூகத்திற்கு சவால் விடும் கண்ணிகளாக அங்கீகரிக்கும் அரசியலைப் பெண்ணெழுத்து முன்னெடுப்பது முக்கியம்.
பெண்களை இணைந்து வேலை செய்ய விடாமல் செய்யும் தந்தைமை ஆதிக்க மதிப்பீடுகளில் உள்ளார்ந்த காலனியத்திற்கு அடிமைப்படாமல், ஆண்களின், ஆண்கள் நடத்தும் நிறுவனங்களின் ஏற்புக்காக நடக்கும் போட்டா போட்டியில் பெண்கள் ஒருவருக் கொருவர் வெறுப்பும், பகையும், பொறாமையும் விட்டொழித்து கவிதா செயல்பாடுகளில், அரசியல் நடவடிக்கைகளில், பொது எதிரிக்கு முன்னாவது இணைவது உத்தமம்.
உண்மையில்,பாட்டாளிகளை விடவும், தலித்துகளை விடவும் பெண் தான் தோல்விகளையே நீண்ட கால அனுபவங்களாக, போராட்ட வரலாறாகப் பெற்றவள். தலித்துகளுக்கு சோசலிச நிர்மாண வழியோ, அல்லது இன்றுள்ள முதலாளியப் பாதையோ திறந்திருக்கின்றன. பாட்டாளி மக்களுக்கு பொதுவுடைமை மார்க்கம் ஒரு இலட்சியமாகக் காட்டப்பட்டிருக்கிறது.ஆனால் விடுதலை பெற விரும்புகிற பெண்ணுக்கு மாற்றுவழி என்ன?
கவிதை சந்தேகமின்றி அதன் பயன்பாட்டு மதிப்புக்காக ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய ஒன்றாக இருத்தல் வேண்டும். எல்லாப் பெரும் கவிதைகளும் ஒரு சரித்திரப் பூர்வமான சாட்சீய மதிப்பீடைக் கொண்டிருக்கின்றன என்கிறார் பிரெக்ட்.
பன்னெடுங்காலங்களாக மானுடத்திற்கான ரொட்டிகளை தயாரிக்கும் பெண்ணுக்கு கவிதைகள் எம்மாத்திரம்.
லீனா மணிமேகலை
(நாகை மாவட்ட “கலை இலக்கியப் பெருமன்றத்தின்” முட்டம் முகாமில் வாசிக்கப்பட்ட கட்டுரை. 16.05.10)
இந்து மக்கள் கட்சியினருக்கு தமுஎகச கண்டனம்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்
மாநிலக்குழு
28/21, வரதராஜபுரம் பிரதான சாலை, தேனாம்பேட்டை, சென்னை-600018
பத்திரிகைச் செய்தி
இந்து மக்கள் கட்சியினருக்கு தமுஎகச கண்டனம்
எழுத்தாளர் லீனா மணிமேகலையின் எழுத்துக்கள் ஆபாசமாக இருப்பதாகவும் சமூக ஒழுங்கைச் சீர்குலைப்பதாகவும் கூறி அவரைக் கைது செய்யுமாறும் அவரது எழுத்துக்களையும் சொத்துக்களையும் முடக்குமாறும் கோரி இந்து மக்கள் கட்சியினர் சென்னைக் காவல்துறை கமிஷனரிடம் புகார் அளித்துள்ளனர். அவரும் அதை ஏற்று சட்டப்பிரிவுக்கு கருத்துக் கேட்டு அனுப்பியுள்ளார்.
ஒருவருடைய எழுத்துக்களின் மீது மாற்றுக் கருத்துக்கள் விமர்சனங்கள் யாருக்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.அதை வெளிப்படுத்துகிற உரிமையும் எவருக்கும் உண்டு.ஆனால் அதற்காக போலீஸ் உதவியுடன் எழுத்தை எழுத்தாளரை முடக்குவதை முடக்க முயற்சிப்பதை தமுஎகச ஒருபோதும் ஏற்காது. இந்து மக்கள் கட்சியின் இந்த அத்துமீறலை தமுஎகச வன்மையாகக் கண்டனம் செய்கிறது. இப்புகாரை நிராகரிக்க வேண்டுமெனக் காவல்துறையைக் கேட்டுக்கொள்கிறோம்.
கலாச்சார போலீஸ் வேலையின் இன்னொரு வடிவமாக வாயளவில் இடது தீவிரவாதம் பேசுகிற ஒரு சிறு குழுவினர் இரவு நேரங்களில் சில எழுத்தாளர்களின் வீடுகளுக்குப் போய் அவர்களின் எழுத்தை முன்வைத்து எழுத்தாளரின் குடும்பத்தினரையும் அண்டை வீட்டாரையும் எழுப்பித் தொல்லை செய்வதும் கலாட்டா செய்து வருவதும் எந்த எல்லைக்கும் சென்று எழுதுவதும் தாக்குவதும் நடந்துள்ளது.எழுத்தாளர் லீனா விஷயத்திலும் அவர்கள் இவ்விதமாகச் செயல்பட்டுள்ளனர்.அதையும் தமுஎகச வன்மையாகக் கண்டனம் செய்கிறது.கலாச்சாரப் போலீஸ்காரர்களாக மாறிக் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக தொடுக்கப்படும் எல்லாவிதக் தாக்குதல்களுக்கும் எதிராக தமுஎகச உறுதியுடன் போராடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எழுத்து சுதந்திரம் என்பது எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்கிற கட்டற்ற நிலை அல்ல. நாம் வாழும் சூழலைக் கணக்கில் கொண்ட சுதந்திரமே சரியானது என்கிற நிலைபாட்டில் நின்றே தமுஎகச இந்தக் கண்டனத்தைப் பதிவு செய்கிறது.
அருணன் ச.தமிழ்ச்செல்வன்
மாநிலத்தலைவர் பொதுச்செயலாளர்
லும்பினி: புதிய இணையதளம்
அ.மார்க்ஸ், ராஜன் குறை, ரமேஷ் பிரேதன், ஹெச்.ஜி.ரசூல், பொதிகைச் சித்தர், கவுதம் நவ்லக்கா, சேனன், லீனா மணிமேகலை, கொற்றவை, ரணஜித் குஹா, யவனிகா சிறீராம், கு. உமாதேவி, த.அகிலன், இளங்கோ கிருஷ்ணன், தர்மினி, கவின் மலர், அசாதி, ஸ்நேகிதன், இசை, ஷோபாசக்தி ஆகியோரின் எழுத்துகளுடன் புதிய இணையதளம்…
http://www.lumpini.in/punaivu.html
லீனா மணிமேகலையின் புதிய கவிதைகள்
1. வரலாறு
அவள் ஒரு கண்ணாடி
அவளருகே சில கற்கள்
அவள் நேசிக்கும் கற்கள்
அவள் வெறுக்கும் கற்கள்
அவள் முன் பின் அறிந்திராத கற்கள்
2. புள்ளிவிவரம்
ஒவ்வொரு மூன்று நிமிடமும்
ஒவ்வொரு ஐந்து நிமிடமும்
ஒவ்வொரு பத்து நிமிடமும்
ஒரு பெண் மானபங்கம்
ஒரு பெண்
சிசுக்கொலை
ஒரு
பெண்
துன்புறுத்தப்படுதல்
மூன்று எங்கே ஐந்து ஏன் பத்து எப்போது
கைகளுக்கு ஏன் பத்து விரல்கள்
கடந்தேன்
சாலை மிக நீளம்
ஒரு சூயிங் கம்மை விட
கடைக்கார கிழவன் தன் மனைவியை
ஒரு முப்பது நிமிடத்திற்குள் அடித்திருப்பானா
பைக்கில் செல்பவன் தன் வீட்டு சிறுமியின்
முலையைப் பற்றியிருப்பானா
நேற்று
சென்ற வாரம்
கைபேசியில் பத்து கிலோ எடை குறைப்புக்கு
பெண்களுக்குப் பத்து சதவிகிதம் தள்ளுபடி
அறிவிப்பு குறுஞ்செய்தி. எடை குறைத்தால்
ஒவ்வொரு பத்து நிமிடம் என்பது
ஒவ்வொரு பதினைந்து நிமிடம் என்று மாறுமா?
வன்புணர்ச்சிக்கும் எடைக்கும் தொடர்பு உண்டா?
இரண்டு பேருந்துகள் தவற விட்டேன்.
படிக்கட்டில் தொங்கிக் கொண்டு போகும்
இளைஞர்களிடமிருந்து
என் பின்புறத்தைக் காப்பாற்றி கொள்ள வேண்டும்.
என்னருகில் இன்னும் இரண்டு பெண்கள்.
அவர்களுக்கும் பேருந்து ஆண்களிடமிருந்து
தற்காத்து கொள்ள ஏதாவது இருக்கலாம்.
நான்கு, ஆறு, எட்டு
ஒன்பதாம் எண் பேருந்தில் ஏறி விட்டேன்
ஒரு சிறுவன், ஏழு வயதிருக்கும்.
சில வருடங்களில்
அவன் யாரையாவது காதலுக்கு வற்புறுத்தலாம்
இல்லை தன் தங்கையின் பொம்மைகளை
இன்று மாலை உடைக்கலாம்
எண்கள் ஏன் வரிசையாக இல்லை
கடிகாரம் ஏன் வட்டமாக இருக்கிறது
மணி அடிக்கும் போதெல்லாம்
ஒரு திராவகம் ஊற்றப் பட்ட கன்னிமையோ
ரத்தப் பெருக்குத் துணியோ
கொதிக்கும் விந்துவோ
தொடை சூட்டுக் காயமோ
கேஸ் சிலிண்டரோ
நினைவுக்கு வந்து தொலைக்கிறது
என் அம்மாவிடம் கேட்க வேண்டும்.
எருக்கஞ்செடிக்கு தப்பியதால் தான்
என் உடல் நீலமாக இருக்கிறதா என்று
என் எழுத்துக்களும் நீலமாக இருப்பதாகத் தான்
புகார் இருக்கிறது
தொலைக்காட்சி விளம்பரம்
ஒரு சிவந்தப் பெண்ணின் புட்டம்
ஒருவேளை சிவப்பழகு கிரீம் வாங்குவதற்காக
உயிருடன் விட்டு வைக்கப்பட்டிருக்கிறேனா
காபி ஆறிக் கொண்டிருக்கிறது
அதில் மிதக்கும் ஆடை
நாளிதழின்
அடையாளம் தெரியாமல் ஆற்றங்கரையில் ஒதுங்கியிருந்த
பெண் பிணத்தின் கலைந்திருந்த ஆடையை ஒத்திருந்தது
பத்தில் ஒரு பெண் எல்லைகளில் கடத்தப் படுகிறாள்
எதிர்ப்படும் பெண்களில் ஒருவரை
நாளை பார்க்க முடியாமல் போய் விடுவேனா
பக்கத்துக்கு வீட்டுக் குழ்ந்தை காணாமல் போய்விடுமா
என்னை யாரவது எண்ணிட்டிருக்கிறார்களா
எனக்கு உனக்கு அவளுக்கு
ஒவ்வொரு பத்து நிமிடமும் ஒவ்வொரு ஐந்து நிமிடமும்
ஒவ்வொரு மூன்று நிமிடமும்
கடந்து செல்லும் ஆண்களின்
சட்டைப் பைகளை சரி பார்க்க வேண்டும்
அதில் நானறிந்த சிறுமியின் வாசனை இருக்கலாம்.
அல்லது ஒரு வன்மையான வார்த்தை
மேலும் ஒரு வயாக்ரா மாத்திரை
யாரையாவது துன்புறுத்தினாயா
சில மணிநேரங்களுக்குள்
சில மாதங்களுக்குள் யாரையாவது காயப்படுத்தினாயா
சில வருடங்களுக்குள்
யாரையாது வன்நுகர்ந்தாயா
கேள்விகள்
தாய்களில், தங்கைகளில், காதலிகளில்
இருக்கும் பெண்களை விடுவிக்கலாம்
சொந்த ஆண்களில் இருக்கும் ஆணைக் கொல்லலாம்
உடனடி காரணமாக அன்பை சொல்லலாம்
அல்லது ஒன்றிலிருந்து பத்து வரை எண்ணிப் பார்க்கலாம்
3. பசி
இறுதியில்
காவல் அதிகாரி
என் கவிதையைப் பிடித்துக் கொண்டு சென்றார்
விசாரணையின் போது அவர்
கண்களைக் கட்டிக் கொண்டிருந்தார்
ஆடையில்லாத என் கவிதையைக் காண
அவருக்கு அச்சமாக இருந்ததாம்.
குற்றங்கள் விளைவிப்பதே
தன் தலையாயப் பணி என்பதை
என் கவிதை ஒத்துக் கொண்டதால்
அபராதம் அல்லது சிறைத்தண்டனை,
பிணை இல்லையென்று ஆணையிட்ட நீதிபதி
தன் கண்களோடு காதுகளையும் பொத்திக் கொண்டிருந்தார்
என் கவிதை பேசிய சொற்களின் புதிய அர்த்தங்கள்
அவரை திடுக்கிடச் செய்தனவாம்
அபராதம் கட்ட பணம் இல்லாததால்
சிறையிலடைக்கப்பட்ட என் கவிதை
கம்பிகளை மீட்டிக்கொண்டு
சதா பாடல்களை இசைத்தபடியிருந்தது
நாளடைவில் மற்ற கைதிகளும்
ஆடைகளை களைந்தனர்
அவர்கள் பேசத் தொடங்கிய புதிய மொழியால்
அதிகாரிகள் மனம் பிறழ்ந்தனர்
சிறைச்சாலைக்குப் பிடித்த பைத்தியம்
மெல்ல நகரமெங்கும் பரவியது
நிர்வாணம் பெற்ற அந்த நகரத்தில்
அதன்பிறகு
அரசும் இல்லை
குடும்பமும் இல்லை
கலாசாரமும் இல்லை
நாணயங்களும் இல்லை
விற்பனையும் இல்லை
குற்றமும் இல்லை
தண்டனையும் இல்லை
4. வேடிக்கை
நீ உன் சொற்களை
என்னை வல்லுறவு செய்ய ஏவினாய்
மலம் மூத்திரம்
கழுவப்படாத கழிப்பறை
அழுகல் அலறல்
செத்த எலி
வீச்சம் நிணம்
ஊசிய மீன்
வலி உதிரம்
கறை இருள்
பிடுங்கி எறியப்பட்ட உன் விதைப்பைகள்
என்னிடமும் சொற்கள் இருந்தன
அவர்களிடமும் சொற்கள் இருந்தன
அவரவர் விதைப்பைகளின் பாதுகாப்பை
சரி பார்த்துக் கொண்டு வாளா விருந்தன