தமிழ்ச்சூழலில் சுயாதீன சினிமா(Independent Cinema) – மின்மினிப்பூச்சிகளின் கல்லறை
எந்த ஒரு திரைப்படமும் மெய்யான சுதந்திரத்துடன் அடையாளப்படுத்திக்கொள்வது சாத்தியமில்லை. முதலீட்டை ஆதாரமாகக் கொண்ட திரைக்கலையைக் கையிலெடுக்கும் கலைஞர் நிதியாதாரம் என்ற முதல்படியேலேயே தன் சுதந்திரத்தை பேரம் பேசக்கூடியவராக. மாறிவிடுகிறார். சுயாதீனம் என்பதை சரியான அர்த்தத்தில் முழுமைப்படுத்த வேண்டிய பார்வையாளனும் செயலற்ற ஒரு நுகர்வாளனாக ஆக்கப்பட்டிருக்கிறான் ஆக, தணிக்கை,தயாரிப்பு தொடங்கி விநியோகம் வரை திரைப்படக்கலையைச் சந்தைவயப்படுத்தியிருக்கும் பண்பாட்டுச்சூழல்,தொழில் என்ற முறையிலும் சுரண்டலுக்கு ஒப்புக்கொடுத்துவிட்ட வணிகமய திரைப்பட இயல், இதற்கிடையே தன் தனித்துவமான, விட்டுக்கொடுத்தலில்லாத, காத்திரமான வெளிபாட்டிற்காக சதா ஒப்பந்த பேரங்களில் உள்ளேறுவதும் வெளியேறுவதுமாய் தத்தளிக்கும் ஒரு மனநோயாளிதான் சுயாதீன(Independent)சினிமா இயக்குநர்..
போர் ஆயுதங்கள் எப்படி பெண்டகனுக்கு சொந்தமாக இருக்கின்றனவோ அப்படித்தான் திரைப்படக் கருவிகளும், நிறுவனங்களும்,வியாபாரமும், பண்பாட்டு மேலாதிக்கமும், இன்னும் ஹாலிவுட்டிலிருந்தே உற்பத்தியாகின்றன.இன்னும் சொல்லப் போனால் Studio Cinema, Independent Cinema, Auteur Cinema, National Cinema, New wave Cinema என்ற பெயர்களும், விளக்கங்களும் கூட ஹாலிவுட் அகராதியில் பிறந்த சொற்கள் தான். அந்த அகராதியின் படி ஸ்டூடியோ நிறுவனங்களின் காலடியில் வைக்கப்படாத திரைக்கதைகளும், திரைப்படச்சுருள்களும் ”சுயாதீன சினிமா” என்று வரையறுக்கப்பட்டன. அந்த வரையறையில் பார்த்தால், தமிழ்ச்சூழலில் இன்று ’அட்டக்கத்தி’ கூட சுயாதீன சினிமா என்று அடையாளப்படுத்தப் படலாம். திரைவிமர்சகர்கள், ’பாதை தெரியுது பார்’, ’உன்னைப்போல் ஒருவன்’,’ஒருத்தி’, ’வீடு’, ’சந்தியா ராகம்’, ’மெட்டி’, ’பூட்டாத பூட்டுகள்’, ’ஊருக்கு நூறு பேர்’, ’ஏர்முனை’ போன்ற படங்களை தமிழ் சுயாதீன சினிமா “வரலாற்றின்” காயடிக்கப்பட்ட கண்ணிகளாக வர்ணிக்கலாம். வியாபார நெளிவு சுளிவுகளுக்கு கட்டுப்படாத படைப்பாளர்களின் வெளிப்பாடு என்ற வகையில் அந்த பட்டியல் தயாரிக்கப்படலாமே தவிர்த்து, இதில் பெருவாரியான படங்கள் மக்களின் வரிப்பணத்திலோ (NFDC, Films Division), ஏதொ ஒரு கட்டத்தில் நிறுவனங்களின் லெட்ஜர் இடம்பெறுபவையாகவோ தான் சாத்தியப்பட்டிருக்கின்றன. ஜான் ஆப்ரகாமின் தமிழ்ப்படமான அக்ரஹாரத்தில் கழுதை கூட அந்த அடிப்படையில் சுயாதீன சினிமா வகையில் இருத்த முடியாது.அவரின் மலையாளப்படமான ”அம்ம அறியான்” மட்டுமே அரசாங்கத்திலிருந்து, தயாரிப்பு நிறுவனங்களிலிருந்து விடுபட்ட மக்கள் தயாரிப்பு.
ஆக, தமிழில் இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பிறகு ஒரு இயக்கமாக உருவாகிக்கொண்டு வரும் ஆவணப்பட முயற்சிகளை மட்டுமே உண்மையில் சுயாதீன சினிமா என்று குறிக்கலாம். இதிலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்,PSBT போன்ற அரச நிறுவனங்களின் நிதி தலையீடு சுயாதீன வெளிப்பாட்டின் வீச்சை, விட்டுக்கொடுத்தலில்லாத வடிவத்தை, கவுச்சி மொழியை சிதைக்கவே செய்கிறது என்பதை என் அனுபவத்திலிருந்தே சொல்ல முடியும். என்.ஜி.ஓ, கார்ப்பரேட், அரசு நிறுவனங்கள் என்று பல கூட்டணிகளில் வேலை செய்து பார்த்திருக்கும் என் பத்து வருட அனுபவத்தை சுய விமர்சனத்தோடு அணுகினால், சொந்த சேமிப்பில்,”தேவதைகள்” ஆவணப்படம் போன்று ”பிராஜக்டாக” செய்யாத சில படங்களில் மட்டுமே முழு சுதந்திரத்தோடு என்னால் செயல்பட முடிந்திருக்கிறது. சொர்ணவேல், அருண்மொழி, ரமணி, அமுதன், ஆர்.ஆர்.சினிவாசன் என்று ஒரு தொடர் ஓட்டம் தொடங்கியிருக்கும் இந்த காலகட்டத்திற்கு, டிஜிட்டல் தொழிற்புரட்சிக்கு பெரும்பங்கிருக்கிறது. சில ஆயிரங்களிலேயே தயாரிப்பு செலவுகளை குறுக்கியிருக்கும் கையடக்க டிஜிட்டல் கேமிராக்களும், எடிட்டிங் மென்பொருளும், டிவிடி விநியோக முறைகளும், ஒரு பைக்கில்,பேக் பேக்குடனும் (Back pack), சட்டைக்காலரில் மைக்ரோ போனுடனும் கிளம்பி சென்று கொரில்லா சினிமாக்களை உருவாக்கக் கூடிய வாய்ப்புகளைத் தந்திருக்கின்றன. சிற்றூர்களிலும், கிராமங்களிலும் திரைப்பட இயக்கங்கள் தோன்றியிருக்கின்றன. பள்ளிகளும், பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும்,மக்கள் இயக்கங்களும் திரையிடல்களை நிகழ்ச்சி நிரலில் சேர்க்கின்றன. ஆரம்ப நாட்களில்,படங்களை டி.வி.டி பிரதிகளாக விற்பனைக்கு வைத்தபோது மக்கள் பிரச்சினைகளை காசாக்குகிறார்கள் என்று விமர்சித்த பார்வையாளர்கள் இன்று சுயாதீன சினிமா இயக்கத்தின் பங்கேற்பாளர்களாக,புத்தகங்கள் வாங்குவது போல காசு கொடுத்து டிவிடிக்களை வாங்கி செல்வதைப் பார்க்க முடிகிறது.NDTV போன்ற தேசிய தொலைக்காட்சி சானல்கள் தணிக்கை விதிகளையகற்றி தொடர்ந்து உரிமம் வாங்கி படங்களை ஒளிபரப்புகிறார்கள். இவையெல்லாம் நிச்சயமாக மாற்றத்தின் அறிகுறிகள் தாம். ஆவணப்பட இயக்குநர்களை ஏதோ இடுப்பில் குண்டு பொருத்திக்கொண்டு அலையும் தீவிரவாதிகள் போல தொடர்ந்து ஒடுக்கும் போலீசும், நிறுவனமயமாகாத தணிக்கை ஏஜெண்டுகளான பிற்போக்கு சக்திகளும், கட்சி குண்டர்களும் கூட சுயாதீன திரைப்பட வெளிப்பாடு தீவிரமடைந்திருப்பதற்கான சாட்சிகள் தாம்.
சுயாதீன சினிமா என்பது ஒட்டுமொத்த பண்பாட்டு இயக்கமாக, கூட்டுப் பொறுப்புணர்வாக உருமாறாமல் ஒரு தனிப்பட்ட படைப்பாளியால் மட்டும் சாதித்துவிடக்கூடியதல்ல. மக்கள் பங்கேற்பு சினிமாவாக நான் எடுத்த செங்கடல் ஒரு உதாரணம். எழுதப்பட்ட பிரதியை எறிந்து விட்டு, படைப்பு செயல் உறவுகளை மாற்றி, ”நடிகர்களை” நீக்கி, பாதிக்கப்பட்ட மீனவர்களையும், அகதிகளையுமே பங்கேற்பாளர்களாகக் கொண்டு அவர்களின் வாழ்க்கையை, அவர்களின் தலத்திலேயே மறு உருவாக்கம் செயத ”செங்கடல்”, தணிக்கைக்கும் தலை குனியாது உச்ச நீதிமன்றம் வரை சென்று தடை நீங்கி வந்தாலும், தலையீட்டளவில் கடுமையான அடக்குமுறைகளை சந்தித்த ஒரு படைப்பு தான். கதைக்களம் இலங்கை இந்திய எல்லைக் கிராமமான தனுஷ்கோடி என்பதால், காவல் துறை, க்யு பிராஞ்ச், கடற்கரை ரோந்துப்படை, ரயில்வே காவல் துறை, நேவி என்று பொழுதும் கண்காணிப்போடும், அனுமதி விதிமுறைகளோடும் போராடி களைத்த நாட்களும், வானிலை சவால்களும்,சிக்கல் மிகுந்த மக்கள் தொகுதியை ஈடுபடுத்தியதில் இருந்த கடுமையான நடைமுறை சிக்கல்களும் படைப்பின் சாரத்தை பாதிக்கவே செய்தன. சொந்த மீனவர்களைக் காப்பாற்ற திராணியில்லாமல் ஈழக்கூப்பாடு போடும் போலித்தனமான தமிழக அரசியல், ஊடக, விமர்சனக் கோட்பாட்டு அறிவுத் துறைகளும் தயாரிப்பிற்கு முன்னும் பின்னும் படத்தை மோசமாக ஒடுக்கின. மூன்றாம் உலகப்பசியை டிராப்பிகல் சர்ரியலிசமாகப் பார்க்கும் பன்னாட்டு திரைப்பட ரசிகர்களை மட்டுமே சென்று சேர்ந்திருக்கும் செங்கடலின் தலைவிதிக்கு, படைப்பாளி மட்டுமே அவமானப்பட்டுக் கொண்டிருப்பது தான் தமிழ்ப் பண்பாட்டுச்சூழலின் சாபக்கேடு.
ஆனாலும், ”சினிமா, விநாடிக்கு24 பிரேம்ஸ் உண்மை” என்ற கோடார்டைப் படித்து வேட்கையோடு பயிற்சியை தெருவிலிருந்து தொடங்கிய திரைப்பட மாணவி என்ற அடிப்படையில், திரைப்படக்கலை செயல்பாடுகளில் தொடர்ந்து தனித்துவத்தோடு இயங்க முடியும் என்ற நம்பிக்கை இன்னும் எனக்கு மிஞ்சியிருப்பதும் நடந்துக்கொண்டிருக்கும் மாற்றங்களின் விளைவு தான். ஒரு படைப்பாளியாக, நடுநிலை சாதியைச்சேர்ந்த ஆங்கிலம் பயன்ற மத்தியதரவர்க்க நகரத்துப்பெண் என்ற அடையாளத்தை தமிழ் வட்டாரத்திலும், திரைப்படக்கல்லூரிக்கு செல்லாத ஹிந்தி கற்க மறுத்த மதராஸிப்பெண் என்ற இந்திய தேசியத்திலும், மூன்றாம் உலக ஆசியக் கறுப்பு பெண் என்று உலக அரங்கிலும் ஏவப்படும் அடையாள வன்முறைகளை எதிர்த்து மொழி,இனம், சாதி, நிறம், புவியியல் கடந்த தனித்துவமான திரைமொழியைக் கண்டடையும் வேட்கை தீரும் வரை, சுயாதீன திரைப்பட இயக்கத்தின் ஒரு செயலூக்கமுள்ள அங்கத்தினராக இருக்க முடியும் என இந்த தருணத்தில் நினைப்பதும், கூடவே மின்மினிப்பூச்சிகளின் கல்லறைப் படிமமும் தோன்றுவதும் முரண்பாட்டு மெய்ம்மை.
லீனா மணிமேகலையின் ஜன்னல் – குங்குமம் தோழி
இடம் – மியுனிக் (ஜெர்மனி) – தூங்கா நகரம்
ஒரு தொன்மையான பாறையைப் பிளந்தால் பெருகும் ஸ்படிக ஓடையில் மின்னும் வானவில்லாக பழமையும் புதுமையும் பரவசமும் கலந்த ஊர் ம்யூனிக் (Munich). இரண்டு உலகப் போர்கள், மானுடத்தையே உலுக்கிய ஹிட்லர் நாஜி படையின் இனப் படுகொலைகள், இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, சோவியத் யூனியன் என வல்லரசுகளின் ஆக்கிரமிப்பு என்று வரலாற்றின் சிதைவுகளிலிருந்து மறுபடியும் மறுபடியும் பிறந்த ஜெர்மனியின் நகரமான ம்யூனிக் இன்று உலகின் சிறந்த பத்து நகரங்களில் ஒன்று.
கோதுமையில் தயாரிக்கப்படும் பியருக்குப் புகழ்பெற்றது ம்யூனிக். நகரைச் சுற்றியோடும் இசா நதியில் பியர்தான் ஓடுகிறதோ என்று எண்ணும் அளவுக்கு மக்கள் கொண்டாட்டத்தில் திளைக்கிறார்கள். இசா நதிக்கரையில் பரந்திருக்கும் இங்லீஷ் கார்டன் வெகு நேர்த்தியான பூங்கா. நகரில் இருபதுக்கும் மேற்பட்ட பியர் பூங்காக்கள் இருந்தாலும் மிகப்பெரியதும் அலாதியானதுமாக இருந்தது இங்கிலீஷ் கார்டனில் இருந்த பியர் பூங்கா. ஆயிரக்கணக்கான மக்கள் நதிக்கரையில் கூடி ராட்சச ஜார்களில் மது அருந்தி குதூகலமாக இருப்பதைப் பார்ப்பதே கண்கொள்ளாக்காட்சி. டியர் கார்டன் என்று சொல்லப்படும் விசேஷமான பகுதிகளில் மக்கள் நிர்வாணமாக உலா வருகிறார்கள். தடைகளே இல்லாத அதிகபட்ச இருத்தலை அனுபவிக்க முயற்சிக்கிறார்களோ?
ம்யூனிக்கின் பழமை வாய்ந்த கட்டிடங்களையும் மாளிகைகளையும் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே பராமரித்து வருகிறார்கள். பழமையான கோதிக் (Gothic) கட்டிடக் கலையமைப்பில் இருக்கும் தேவாலயங்களின் மணியோசை நகரத்துக்கு அவ்வப்போது பாடல் சேர்க்கிறது. உலகிலேயே மிகப்பெரிய அரிய ஆர்ட் கலெக்ஷன் வைத்திருக்கிறார்கள். மியூசியம் ஐலேண்ட் என்று அறிவியல், தொழில்நுட்பம், சினிமா, வரலாறு என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே அருங்காட்சியகங்கள் அறிவுச் சாளரங்கள்!
இருபதுக்கும் அதிக ஹிட்லரின் வதைமுகாம்கள் ஐரோப்பா முழுவதும் ஆங்காங்கு பராமரிக்கப்பட்டு வந்தாலும், முதன்முதலில் தொடங்கப்பட்டு போரின் இறுதிவரை செயல்பட்ட ம்யூனிக்கின் டகௌ என்றழைக்கப்படும் வதைமுகாமுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. Work until You are free (சாகும் வரை அல்லது விடுதலையாகும்வரை வேலை செய்) என்ற வாசகம் பொறித்த கதவு நம்மை வரவேற்கும்போதே கிலி பிடித்துக் கொள்கிறது. 1933லிருந்து 45 வரை இரண்டு லட்சத்துக்கும் அதிக யூதர்கள், நாடோடிகள், ஆதிகுடிகள், ஓரினச் சேர்க்கையாளர்கள் என்று அரசியல் கைதிகளை அடைத்து வைத்து அழித்தொழித்த படுபயங்கரமான இடம் இது. கைதிகள் இருந்த படுக்கையறைகள், கழிவறைகள், சுட்டுக் கொல்லப்பட்ட இடங்கள், விஷ வாயுக் குளியலால் சாகடிக்கப்பட்ட இடங்கள், எரிக்கப்பட்ட பிரமாண்ட மார்ச்சுவரிகள், குளிரிலும் வெயிலிலும் பனியிலும் தண்டனை அனுபவித்த மயானங்கள் என்று நினைவுபடுத்தப்பட்டிருக்கும் ஒவ்வொரு சதுர அடியும் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. சட்டென உலகின் வண்ணங்கள் எல்லாம் அழிந்து இருள் கவிந்தது போல உணர்ந்தேன். எண்ணற்ற மக்கள் நாள்தோறும் வந்து மலர்வளையங்களை வைத்துச் செல்கிறார்கள். போரின் ஒவ்வொரு அசைவையும் டாக்குமென்டரி படங்களாக, ஓவியங்களாக, நிழற்படங்களாக, புள்ளிவிவரங்களாக கேலரியில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். என்னுடைய ஜெர்மன் தோழிகளான ஆவணப்பட இயக்குனர் மிஹேலாவிடமும் எழுத்தாளர் சூசனிடமும் இத்தகைய நினைவிடங்கள் இந்த தலைமுறைக்கு எந்தவிதமான அழுத்தத்தைத் தருகிறது என்று கேட்டேன். ‘‘நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் மூதாதையரிடம் இதற்காகக் கோபப்பட்டிருக்கிறோம், வருத்தப்பட்டிருக்கிறோம், குற்ற உணர்ச்சியில் ஆட்பட்டிருக்கிறோம். ஆனாலும், உண்மையை நாம் கையாளத்தான் வேண்டும். வரலாற்றின் சத்தியத்தில் சுடுபட்டால்தான் தவறுகள் மறுபடியும் நேராது’’ என்று அழுத்தமாக பதிலளித்தார்கள். ஜெர்மானியரின் இந்த அசாத்திய தைரியமும் முதிர்ச்சியும் என்னை உறைய வைத்துவிட்டது. பொய்களையே வரலாறுகளாகப் புனைந்து உவந்து சிலிர்த்துக் கொண்டிருக்கும் நம்மை நினைத்து அவமானமாக இருந்தது.
புத்தகம் – அகாலம் – பெண் போராளியின் யுத்த சாட்சியம்
ஈழத்துக்காகப் பற்றுறுதியோடு போராடி, ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத்தில் முதன்முதலாகச் சிறைக்குச் சென்ற தோழர் புஸ்பராணியின் நினைவுக் குறிப்புகள் ‘அகாலம்’ என்ற புத்தகமாக, ‘கருப்பு பிரதிகள்’ வெளியீடாக வந்துள்ளது. சிதைந்துபோன கனவின் சாட்சியமாக நம்மை துடிதுடிக்க வைக்கும் உயிர்ப்பத்திரம் ‘அகாலம்’. அரசியல் ஈடுபாட்டின் காரணமாக பொதுவெளியில் எழுச்சியடைந்து இயங்கும் ஒரு பெண் அதிகாரத்தரப்பால் சாதி ரீதியாக, இன ரீதியாக, வர்க்க ரீதியாக எப்படி ஒடுக்கப்படுவார் என்பதற்கு தோழர் புஸ்பராணியின் வாழ்வு ஒரு கொடூர உதாரணம். கடக்க வியலா அந்த காலங்களை நேர்மையோடும் நெஞ்சுரத்தோடும் ஒரு அரசியல் வரலாற்று ஆவணமாக பதிவு செய்த அவரின் அர்ப்பணிப்பு அளப்பரியது. முன்னுதாரணமானது.
‘உள்ளத்தில் லட்சியம் இருந்தாலும் கண்களில் நீரும் இருக்கத்தானே செய்கிறது’ என்று முன்னுரையில் கருணாகரன் குறிப்பிட்டுள்ளதற்கேற்ப, மக்களுக்காக தன்னையே கரைத்துக்கொண்ட புஸ்பராணியின் போராட்ட அனுபவங்கள் வாசிக்கும் ஒவ்வொருவரையும் பெருமிதம் கொள்ள வைத்தாலும், துக்கத்தில் உறையவும் வைக்கின்றன. இலங்கைப் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு அனுபவித்த சித்திரவதைகளும், வெலிகட சிறை அனுபவங்களும், அவர் இறக்கி வைத்திருக்கும் காலச்சுமையல்ல. இப்போதும் இனவாத இலங்கை ராணுவத்தின் சிறைகளிலிருக்கும் பெண் போராளிகளின் அவலங்களை, இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழ் சிவில் பகுதிகளில், பசியிலும் பட்டினியிலும் பாலுக்காக கையேந்தி நிற்கும் குழந்தைகளை காலத்தின் நீட்சியாக அறிவுறுத்தும் நெருப்பு வார்த்தைகள். யுத்தத்திலும் போராட்டத்திலும் வன்முறையின் உச்சத்தை அனுபவித்து வரலாறு நெடுகிலும் பெண்களே! தெலுங்கானா, காஷ்மீர், எரித்ரியா, சிலி, மலேசியா, தென் ஆப்பிரிக்கா, சூடான் என்று நீளும் பட்டியலில் இலங்கையில் தமிழ்ப்பெண்கள் பட்ட பாடு மனித நாகரிகம் வெட்கித் தலை குனிய வேண்டிய ஒன்று. மக்களை நம்பாமல், துப்பாக்கிகளையும் பீரங்கிகளையும் மட்டுமே நம்பியிருந்த போராளிகள் இறுதியில் அவற்றை கீழே வைத்துவிட்டு சரணடைந்தபோது காலம் அகாலமாயிருந்தது என்ற புஸ்பராணியின் வரிகள், தோல்வியடைந்து நிற்கும் 40 வருட ஈழ விடுதலைப்போராட்டத்தைப் பற்றிய மீள்பார்வையைக் கோரி நிற்கிறது.
பதிப்பாசிரியர்: ஷோபா சக்தி
(கறுப்பு பிரதிகள், பி74, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, சென்னை&5. மொபைல்: 9444272500)
சினிமா – Circumstance – அன்பெனும் மாய உலகம்
கடந்த மார்ச் மாதம் லண்டனில் ஒரு திரைப்படவிழாவில் பார்த்த Circumstance சமீபத்தில் என்னை பாதித்த சினிமா. இரு இளம்பெண்களின் அன்பாலான உலகத்தை வேட்கையோடு சித்தரிக்கும் படம். ஒரு பால் ஈர்ப்பு உடையவர்களை கிரிமினல்கள் போலவும், நோய் பீடித்தவர்களாகவும், சமூகத்தை மாசுபடுத்துபவர்களாகவும் மத அடிப்படைவாத ஈரான் அரசாங்கம் கருதுகிறது. காவல் துறையையும் மதக்குண்டர்களையும் ஏவி தாக்கவும் செய்கிறது. அப்படிப்பட்ட வன்முறை நிரம்பிய சூழலில் இரண்டு பெண்களின் நேசமும் கனவுகளும் என்னவாகிறது என்பதே படத்தின் மையம். ஷெரீனும் தோழி அதேஃபாவும் மூச்சை கூட சுதந்திரமாக விட்டுக்கொள்ள முடியாத சமூக சூழலில் தங்களுக்கென ஒரு மாய உலகை மனப்படிகளில் உருவாக்கி, அதில் வாழ்ந்துவிட தவிக்கிறார்கள். நாட்டை விட்டு தப்பியோடி, சற்று தளர்வான துபாய் சூழலில் இணைந்து வாழ ஏங்குகிறார்கள். இசையும் நேசமுமான அவர்களின் காதலை ஒரு அபூர்வ ராகமாக படமாகியிருக்கும் இயக்குனரும் ஒரு பெண்தான் என்பது கூடுதல் அழகு!
எப்போதும் இந்த இளம்பெண்களின் நடவடிக்கைகளை, வீட்டிற்குள்ளேயே யாருக்கும் தெரியாமல் சிசிடிவி வைத்துப் பார்த்து தண்டனை வழங்கும் அதேஃபாவின் அண்ணன் கதாபாத்திரம் & அன்பை நசுக்கும் மத அடிப்படைவாதத்தின் கண்காணிப்புக்கும் ஒடுக்குதலுக்கும் மிக நூதனமான குறியீடு. எப்போதும் பெண்களை இவ்வுலகம் கண்ணுக்குத் தெரியாத கேமராக்களை வைத்து கண்காணித்து தன் தீர்ப்புகளையும் தண்டனைகளையும் வழங்கியபடிதானே உள்ளது!
இணையம் – தூமை(http://thoomai.wordpress.com) – மொழியைச் சுத்திகரிக்கும் பெண்ணாற்றல்!
கவிஞர் தர்மிணியும், ஓவியர்–கவிஞர் மோனிகாவும் நடத்தும் ஆதிக்கத்துக்கு எதிரான பெண்களுக்கான வலைத்தளம் & தூமை. பெண்களை இழிவுபடுத்துவதற்காக ஆணாதிக்க சமூகம் கையில் எடுத்திருக்கும் சொல்லைக் கொண்டே அதை எதிர்க்கவும் ஊடறுக்கவும் தலைப்பட்டிருக்கிறது பெண் படைப்புகளுக்கான இந்த வலைத்தளம். கவிதை, கட்டுரை, விமர்சனம், விவாதங்கள் என்று தீவிர பெண் படைப்புகளை இங்கு வாசிக்கலாம்.
மாதாமாதம் குருதி வெளியேறுவதை தீட்டு எனவும், அந்த நாட்களில் விலக்கமும், கடவுள் நிந்தனையும், தீட்டு கழிதலுமென பெண்களை உடல்ரீதியாக மதம் காலம் காலமாக ஒடுக்கி வருகிறது. தமிழ் நிகண்டுகளைப் புரட்டினால், ‘தூமை’ என்பதற்கு தூய்மையான மை(ரத்தம்) என்றே அர்த்தம் வருகிறது. மனித நாகரிகத்தில் பெண்ணின் குருதி வெளியேற்றத்தை வைத்துதான் நிலா நாட்களைக் குறித்தார்கள். தமிழ் மாதங்கள், நாட்காட்டிகள் அப்படித்தான் உருவாயின. ஆதியில் பெண்குருதி வழியாமல் பார்த்துக் கொள்ள கண்டுபிடித்ததுதான் பருத்தி. அதிலிருந்தே உடை உருவானது. இன்னும் தூமையை வைத்துத் தான் கொடிய நோய்களைக் கொல்லும் மருந்துவகைகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். மருந்தாகச் சாப்பிட்டால் தீட்டுப் போய்விடுமா? இப்படி பல சிந்தனைகளைத் தூண்டும் வகையில் தூமை என்ற தலைப்பை வலைத்தளத்துக்கு வைத்திருக்கிறார்கள் இத்தோழிகள்.
சமூகத்தில் வசைச்சொற்கள் எல்லாம் ஏன் பெண்களை இழிவு செய்வதாகவே இருக்கிறது என்று யோசித்துப் பார்த்தால், மொழி எப்படி ஆணாதிக்கத்தின் கையில் சிக்கியிருக்கிறது என்பது புரியவரும். இழிவென்ற அர்த்தத்திலிருந்து பெண்ணுடலை மீட்டு ஆற்றலாக்குவது தான் ஒரே வழி என்பதால் தான் பெண் படைப்பாளிகள் அதை உறுதியோடு செய்துக் கொண்டிருக்கிறார்கள். தூமை அதற்கொரு முன்னோடி.
லீனா மணிமேகலை
நன்றி – வள்ளிதாசன்
தீர்ப்பு நாட்கள்
இறுதியில்
தீர்ப்புகளால் திருகியிருந்த
என் உடலின்
பாகங்களை
சரிசெய்ய
ஒரு கனவு தேவைப்பட்டிருக்கிறது
நரைத்த அந்த தாடியைக்கோதி
முத்தமிட்டுக்கொண்டிருந்த வேளையில்
ஜான் ஆப்ரகாமிடம் கேட்டேன்
உங்கள் ஒடஸ்ஸா உண்டியலை எனக்குத் தரமுடியுமா?
உடல் நொறுங்கத் தழுவிய அவர்
இழிசாவை அது தடுக்காது, வேண்டாம் என்றார்
இல்லை, நான் ஏற்கெனவே கொல்லப்பட்டவள் என்றேன்
ஒடஸ்ஸா உண்டியல்
நாணயங்களுக்குப் பதில் உயிர்களையே கேட்கிறதென்றார்.
அப்புவை அழைத்துக் கொண்டு ரேயைத் தேடிப்பிடித்தேன்.
அவர் அப்போதும், கன்னத்தில் கைவைத்து சிந்தித்தபடியிருந்தார்
வெகுநேரம் கடந்தே அவர் புருவம் சற்று நெறித்தார்
அவர் பார்வை திருப்பிய நொடியில் கேட்டேன்
ஏன் நீங்கள்
விளம்பரப்படங்களுக்கு கோட்டோவியங்கள்
வரைந்தீர்கள்
என் தலையைக் கோதிய அவர்
அவை இந்த சமூகத்தின் மேல் நான்
வைத்த விமர்சனங்கள் என்றார்
ஒரு கிராமத்தின் மாட்டுக்கொட்டகையில்
மேக தாக தாராவை திரையிட்டுக்கொண்டிருந்த
ரித்விக் கட்டக்கோடு படம் பார்த்துக் கொண்டிருந்தேன்
உங்களைப்போல படமெடுக்க தூய முதலீடு
சாத்தியமா என்றேன்
ஒவ்வொரு நாணயமும் உன்னுடையதே
ஆனால் உன்னிடம் இல்லை என்றார்
அவர் மேலெறியப்பட்ட கற்களைக் கேட்டு பெற்றேன்
அதில் பெயர்கள் அழிந்திருந்தன
அதனாலேயே படப்பெட்டிகள் கண்ணாடி கூடுகளில்
செய்யப்படுவதில்லை எனவும் சொல்லி சிரித்தார்
குலுக்கிய அவர் கைகளிலிருந்து ரேகைகளைத் திருடிக்கொண்டேன்
அதற்குள்
காப்பகத்திலிருந்து திருடிய கேமிரா
தனக்கு இனி தேவையில்லை
என்று ஹெர்சாக் திருப்பியனுப்பியிருந்த தபாலோடு
திரைப்பட மாணவனொருவன்
என்னை எழுப்பியிருந்தான்
அந்த கேமிராவை எந்த தராசில் வைத்தாலும்
எடைமுள் ஒடிந்தது
லீனா மணிமேகலை
*ஒடெஸா திரைப்பட இயக்கம், இயக்குனர் ஜான் ஆப்ரஹாமால் தொடங்கப்பட்டது. மக்களிடம் உண்டியல் குலுக்கி, அக்ரஹாரத்தில் கழுதை போன்ற திரைப்படங்களைத் தயாரித்து இயக்கினார் ஜான் ஆபரகாம்.
*இன்றைய நவீன உலக சினிமாவைக் கோலோச்சும் வெர்னர் ஹெர்சாக், படமெடுக்க நிதியில்லாமல், திரைப்படக் கல்லூரி காப்பகத்திலிருந்து 35 எம். எம் கேமிராவை திருடிக் கொண்டு போனது வரலாறு.
*ரே என்ற சத்யஜித ரே இந்தியக் கலைசினிமாவின் தந்தை
*ரித்விக கட்டக் இந்திய மாற்று சினிமாவின் ஆன்மா.
கண்(ணன்) காணிப்பின் அரசியல்,வினவும் ஆம்புளைத்தனம்
தமிழ் கவிஞர்களின் இயக்கம், ஈழத்தமிழர் தோழமைக்குரலின் போராட்டங்கள், செங்கடல் திரைப்படம் என என் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் அவதூறுகளாலும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளாலும் இழிவுபடுத்திய காலச்சவடு இன்று என் மேல் தனிப்பட்ட முறையிலும் தாக்கி கட்டுரை வெளியிட்டுள்ளது. காலச்சுவடு என்ற பார்ப்பனீய கார்பொரேட்டின் அருள்பெறாமல் ஒரு உதிரி படைப்பாளியாக இயங்குவதும், அதன் ஆள்காட்டி அரசியலை தொடர்ந்து கேள்விக்குட்படுத்துவதுமான என் உறுதியை, வெறும் வாரிசுரிமையால் எடிட்டரான கண்ணன், கிஞ்சித்தும் அசைத்துவிட முடியாது. காலச்சுவடு இருக்கும் வரை பிரமிள்களும் இருப்பார்கள் !
தேஜஸ்வினி பெண்கள் மேம்பாட்டுத்திட்டத்தில் பயன்பாடு பெற்ற ஆதிவாசிப் பெண்கள், கணவனை இழந்தப் பெண்கள் , கைவிடப்பட்டப் பெண்கள் குறித்த ஆவணப்படத்தை பம்ப்கின் பிக்சர்ஸ்(மும்பை) என்ற தயாரிப்பு நிறுவனத்திற்கும் எடுத்துக் கொடுத்தேன். அதற்கு நிதியுதவி செய்வது டாடா நிறுவனம் தான் என்று தெரிந்து தான் அந்தப் பணியை செய்தேன்..அந்த ஆவணப்படத்தின் பத்து நிமிட, ஐந்து நிமிட, ஒரு நிமிட பிரதிகளை நிறுவனமே எடிட் செய்து விளம்பர படங்களாக பயன்படுத்திக் கொண்டது.இதில் எந்த உண்மைக்குப் புறம்பான செய்திகளையும் நான் படத்தில் சொல்லவில்லை. நேர்மையாகவே, அந்தப் பெண்களின் வாழ்க்கையை விஷுவல் செய்திருந்தேன்.
நமது நாட்டின் ஐ.ஐ.எம். ஐ.ஐ.டி, அறிவிஜீவிகளை உருவாக்கும் Tata Institute of Social Sciences ,ஒலிம்பிக்கிற்கு வீரர்களை அனுப்பும் Tata Sports Academy, என்று எல்லாமே டாடா நிதியுதவி செய்து தானே நடக்கிறது. திறந்த சந்தை பொருளாதாரத்தில் , நிறுவனங்களின் Corporate Social Responsibility செயல்பாடுகளை கவனப்படுத்துவதில் எனக்கு எந்த அரசியல் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. மூலதனம் அனைத்திலும் யார் யார் எப்படி பங்கு பெறுகிறார்கள், அவ்வாறு பங்கு பெறும் போது குறிப்பட்ட நபர் அதை எப்படி பயன்படுத்துகிறார் என்கிற அறிவார்ந்தப் பார்வையைக் கைவிட்டுவிட்டு வெறும் முதலாளித்துவ குற்றத்தினை சுமத்துவத்தின் மூலம், அவரை வர்க்கத்திற்கு காட்டிக் குடுப்பதாக “ஒழுக்க சீலர்கள்” நினைத்துக் கொண்டிருக்கலாம். எந்தப் புரட்சிகர அம்சமும் அதன் உள்நாட்டு பயன்மதிப்பைப் பயன்படுத்தித்தான் வளர முடியும். அதற்கான உழைப்பையும், அதற்கான கூலியையும் பெற உழைக்கும் வர்க்கத்திற்கு உரிமை உண்டு.
ஆதிவாசிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதற்கு எதிராக காலச்சுவடு கண்ணன் எந்த பேரணி, போராட்டத்தை நடத்தினாராம்? இலக்கியம் என்ற போர்வையில், உதிரிகளை உளவு பார்ப்பதை எந்த பத்திரிகை தர்மத்தில் சேர்ப்பது?
இடதுசாரி கார்பொரேட் ஃபேக் ஐ.டி “புரட்சி புகழ்” வினவு, அறுவடை காலத்தில் வயலுக்கு எலி பிடிக்கப் போனவன் கொஞ்சம் நெல்லையும் திருடிக் கொண்டு வந்தானாம் என்கிற கதையாக “இடையில் நான் கொடுத்த பத்து ரூபாயை மறந்து விடாதீர்கள்” என்று ஜோக் அடிக்கிறது. உண்மையான விலாசம், பெயர்களையெல்லாம் சொல்லிவிட்டு புரட்சி பேசுங்கள் வினவு. அதற்கு வக்கில்லாமல் படைப்பாளிகளை அவதூறு செய்வது அறிவு நாணயமல்ல.
மற்றபடி ,இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லும்படி என்னைக் கேட்பவர்கள் , படைப்பாளிகளை கண்காணித்துக் கொண்டு கமிசார்த்தனம் செய்யும் இவர்களை ஏன் விசாரணைக்கு உட்படுத்துவதில்லை?
லீனா மணிமேகலை