லீனா மணிமேகலையின் எட்டாவது அகத்திணைக் கவிதைகள்
விமர்சனம்: கவிஞர் மனோ. மோகன்
நன்றி: புதுவிசை
முன்கதைச் சுருக்கம்
அதுவொரு காலம். ஆதித்தாயின் அரவணைப்பிலிருந்தது உலகம். அவள் உலகத்தை ஆள்பவளாக இருந்தாள். அவளே உலகமாகவும் இருந்தாள். அப்போதுதான் அது நிகழ்ந்தது.
தன் கண்ணுக்கு முன்னே பிரம்மாண்டமாய்த் தெரிந்த ஒவ்வொன்றின்மீதும் பிரமிப்பு கொண்டிருந்தான் மனிதன். மனிதன் என்பது ஆண் தன்னிலை மட்டும்தான். இங்கே பெண் இல்லை. ஏனென்றால் பெண் அவனுக்கு வெளியே தனியே நின்றாள். அவளின்மீதும் பிரமிப்பு கொண்டிருந்தான் அவன்.
மனிதன் மண்ணையும் நீரையும் கையகப்படுத்த நினைத்தபோதுதான் பெண்ணையும் கையகப்ப்படுத்த நினைத்தான். (இதனை வரிசை மாற்றியும் வாசித்துக் கொள்ளலாம்). ஒரு பெண்ணைத் தனது உடல் பலத்தால் அடக்கியாள்வது எக்காலத்திலும் இயலாத ஒன்று என்பதை அறிந்த கணத்தில் உளவியல் போர்களை நிகழ்த்தினான். அதில் வேடிக்கை என்னவென்றால் அவனெதிரே போர்க்களத்தில் நின்றவளுக்கு அது போர் என்றே தெரிந்திருக்கவில்லை என்பதுதான்.
அவன் பெண்ணைப் போலவே தனக்குப் பிரமிப்புண்டாக்கிய ஒவ்வொன்றுக்கும் பெண்ணின் பெயரை வைத்தான்; பெண்ணுக்குத் தன் இடப் பக்கத்தில் இடம் தந்ததாக அறிவித்தான். (தனது தலையில் இன்னொரு பெண்ணுக்கு இடம் தந்ததாகப் புரளியைப் பரப்பி, பெண்ணின் இருப்புக்குத் தான் கொடுத்த அங்கீகாரத்தையே பகடி செய்து அவன் ரகசியமாய்ச் சிரித்தது வேறு கதை.)
இத்தகைய புனைவுகளின்மூலம் ஒரு நெருப்புப் பிழம்பைக் குளிர்வித்து தன் குளிர்ச்சாதனப் பெட்டிக்குள் வைத்து அதன் வெப்பநிலை மாறாமல் பார்த்துக் கொண்டான் அவன். அதன்பிறகு அவனே உலகத்தை ஆள்பவனாக இருந்தான். அவனே உலகமாகவும் மாறிப்போனான்.
பின்னணி : 1
தமிழில் பெண் தன்னிலையின் உடல் வேட்கை குறித்த பதிவில் முதலில் குறிப்பிடப்பட வேண்டியவள் ஆதி அவ்வை. கவிதைத் தலைவி பொதுவெளியில் பேசுவது மறுக்கப்பட்ட சூழலில் தனது காமத்தையே கவிதைத் தலைவியின் காமமென மொழிந்து பெருவெடிப்பை ஏற்படுத்தியவள் அவள். அதன்பிறகு இத்தைகைய பெருவெடிப்பைக் காண நீண்ட காலம் பயணித்து ஆண்டாளை வந்தடைய வேண்டியிருக்கிறது. இவர்கள் இருவரிடமும் இருக்கும் ஒரு பிரச்சினை தலைவனின் காதல் என்னும் பெயரால் மீண்டும் கலாச்சார ஆதிக்கவாதிகளின் பொதுச் சட்டகத்திற்குள் நின்று ஆண் மையத்திற்குள் அடைபட நேர்ந்ததுதான். என்றபோதும் கால வெளி சூழல்களைப் பொருத்திப் பார்க்கையில் அதுவே இன்றைக்கிருக்கிற எந்தக் கலகத்திற்கும் குறையாத ஒரு கலகமாக அக்காலத்தில் இருந்திருக்கும் என்பது என் உறுதி.
அவ்வைக்கும் ஆண்டாளுக்கும் இடையில் ஏறத்தாழ பத்து நூற்றாண்டுகள் இருக்குமா? அப்படி இருக்குமானால் ஆண்டாளுக்கும் நவீன பெண் கவிகளுக்கும் இடையில் இன்னொரு பத்து நூற்றாண்டு இருக்கும்.
வாசகக் குறிப்பு : 1
தமிழ் நவீன பிரதிகளில் Bisexual என்றழைக்கப்படுகிற இருபால் காதல் குறித்தும் கே (Gay), லெஸ்பியன் (Lesbian) என்று அழைக்கப்படுகிற ஒருபால் காதல்கள் குறித்தும் நான் முதலில் வாசிக்க நேர்ந்தது ரமேஷ் : பிரேமின் கிரணம் எழுத்துக்களில்தான். அதன் பிறகு அவர்களின் ‘அங்குமிங்கும் கதைகள் இங்குமங்கும் உடல்கள்’, ‘மனவெளி நாடகம்’, ‘இருவர்’, ‘கூத்தாண்டவர்’ முதலான புனைவுகளிலும் ‘சொல் என்றொரு சொல்’லிலும் இதனை வாசிக்க நேர்ந்தது. மாலதி மைத்ரியின் ‘மழை போகும் பாதை’ முதலான கவிதைகளை லெஸ்பியன் கவிதைகளாகவே வாசிக்க இயலுமென்றாலும் அவை வாசகரின் தேர்வைப் பொறுத்தது. இத்தகைய பதிவுகளுக்குப் பிறகு முதன்முதலாகத் தமிழில் ஒரு லெஸ்பியன் கவிதைத் தொகுப்பு என்னும் தன்னடையாளத்துடன் வெளிவந்திருக்கிறது அந்தரக் கன்னி.
அந்தரக் கன்னியின் குரல் : 1
ஈர சொப்பனங்கள்
என் விரல்களிலிருந்து
அவளுடையது
வேறொன்றாகத்தான் இருக்கின்றன
அவை வருடும்போதெல்லாம்
மூச்சுக் குழல்கள்
மர்மமாய் இரைகின்றன
எண்கள் குழறுகின்றன
நடுங்கி இறுகும் தசைகளில்
தேங்கிவிடும் குருதி
சிவப்பை இழக்கிறது
இசை பெறும் உடல்
கசிந்து பெருகுகிறது
ஆதிக் கிணறாய் என்னை மாற்றிவிடும்
உயிர்க்குமிழி கோல்களுக்கு
வெறும் விரல்கள் என
யாரடி பெயர் வைத்தது
பக்கம் : 35
பின்னணி : 2
நிறுவனமயப்படும் ஒவ்வொன்றும் அதிகாரம் பொருந்தியதாகத் தன்னை வடிவமைத்துக் கொள்வதன்மூலம் தன்னிலை (Self) மற்றமை (Other) என்னும் இருமை எதிர்வை ஏற்படுத்தி அதைக் காலத்திற்கும் பாதுகாக்கும் விருப்பத்தைக் கொண்டதாக இயங்குகிறது. (அதிகாரம் கையகப் படுகிற ஒவ்வொன்றும் நிறுவனமாகிறது என வரிசை மாற்றியும் இதனை வாசிக்கலாம்). இதன்மூலம் அதுவொரு படிநிலை அமைப்பைக் கட்டமைக்கிறது. படிநிலை அமைப்பென்பது இரண்டுக்கு மேற்பட்ட மற்றமைகளைக் கொண்டதாகக் கூட அமையுமென்றாலும் ஒவ்வொரு மற்றமையுடனான தனது உறவையும் இருமை எதிர்வாகப் பாதுகாக்கவே அதிகாரத் தன்னிலை விரும்புகிறது. அதன்மூலம் தன்னிலைகள் பேசுகின்றவையாகவும் மற்றமைகள் கேட்கின்றவையாகவும் இயங்கும் நிலையை அடைகின்றன. இன்னும் உன்னிப்பாகக் கவனித்தால் தன்னிலைக்கும் மற்றமைக்குமான உறவில் மற்றமை கேட்பதற்கான உரிமையே கூட மறுக்கப்பட்டிருக்கிற பாங்கினையும் உணர முடியும். ஒவ்வொரு விடுதலைப் போராட்டமும் இத்தகைய படிநிலை அமைப்பைக் குலைத்து மற்றமையாக இருக்கும் ஒன்று தன்னிலையாக மாற எத்தனிக்கும் வேட்கையின் வெளிப்பாடாகவே இருந்துவருகிறது.
வாசகக் குறிப்பு : 2
அந்தரக்கன்னி மற்ற கவிகளின் கவிதைகளிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்வது போலவே லீனா மணிமேகலையின் மற்ற தொகுப்புகளிலிருந்தே கூடத் தன்னை வேறுபடுத்திக் கொள்கிறது. இதற்கு முன்வந்த பரத்தையருள் ராணி தொகுப்பு ஆண் தன்னிலையின் வன்முறைகளுக்கெதிரான உக்கிரமான குரலாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதுவொரு போராளி களத்தில் நின்று உரக்கச் சத்தமிட்டுக் கொண்டு வாள் சுழற்றுவது போன்ற உணர்வை ஏற்படுத்தும் தொகுப்பு. ஆனால் அந்தரக் கன்னி உக்கிரம் கூடிய அதே போராளி வீட்டுக்கு வந்து தன் காதல் இணையோடு கலந்திருக்கும் தருணத்தைப் பதிவு செய்கிறது. இதில் குறிப்பிட வேண்டியது காதல் இணையில் எதுவும் களிறில்லை; இரண்டும் பிணைகள்தான்.
காதலின் இதம் கூடிய கவிதைகளாகத் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளும் அதே சமயம் இந்தக் கவிதைகள் போர் நிறுத்தத்திற்கான கவிதைகளாக இல்லை. இது வேறு மாதிரியான தாக்குதல். எதிராளிக்குப் பதிலடி கொடுப்பதை விடவும் பொருட்படுத்தாமல் போவது அதைவிடவும் உக்கிரமானது. ஒரு நபர் தன்னைத் தன்னிலையாக உணரும் கணத்தில் எதிரிலுள்ளவரை மற்றமையாக உணர்வது இயல்பு. அந்தரக்கன்னி தன்னிலையாகவும் மற்றமையாகவும் தன்னையே உணர்வதன்மூலம் (அதாவது கவிதைக்குள் பெண்ணையே தன்னிலையாகவும் மற்றமையாகவும் உணர்வதன்மூலம்) தனது மொழி வெளிக்குள் ஆண் இருப்பை அழித்துவிட்டு உரையாடலைத் தொடர்கிறது. ஆண் தன்னிலையாக இருக்கும்போது பெண் மற்றமையாக இருப்பாள். பெண் தன்னிலையாக இருக்கும்போது ஆண் மற்றமையாக இருப்பான். அந்தரக்கன்னியின் முழுச் சுற்றும் முடியும் கணத்தில் ஆண் தன்னிலையாகவும் இல்லை மற்றமையாகவும் இல்லை.
அந்தரக் கன்னியின் குரல் : 2
மின்னும் நாக்கு
உப்பும் பனியும் மின்னும் நாக்கால்
ஸாப்போவின்* கவிதையொன்றை
உயிருந்தப் பாதையில் பாய்ச்சி
என்னிலிருந்து
சூறையாற்றைப் பிரித்தெடுக்கும் உனக்கு
முப்பத்து மூன்று சிவந்த இதயங்களைப் பரிசாகத் தருகிறேன்
என் ஆலிவ் இலை விரல் அழுத்தங்களில்
தோல் வெள்ளியாய் காய்கிறது
உதிரும் மயிரையெல்லாம் வேட்கையில்
மிச்சமில்லாமல் தின்கிறேன்
மன்மதனைப் பலியிட்ட நாளில்
பறை முழங்குகிறது
நீயும் ரதி நானும் ரதி
* ஸாப்போ – வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த கிரேக்க லெஸ்பியன் கவிஞர்
பக்கம் : 38
பின்னணி : 3
யதார்த்தம் என்பதே புனைவுகளால் கட்டமைக்கப்பட்டதாகத்தான் இருக்கிறது. கலாச்சாரம் முதலாக யதார்த்தத்தை இயக்கும் அரூபக் காரணிகள் யாவும் தனக்கு உரிமையான யதார்த்தத்தையே கட்டமைத்துக் கொள்வதன்மூலம் ஒவ்வொரு தனிமனிதனையும் தனது கண்காணிப்புக்குள் கொண்டுவருவதைச் சாத்தியமாக்கிக் கொள்கின்றன. தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்கள் யாவும் இத்தகைய அரசியலின் உப பிரதிகளாகத்தான் இயங்குகின்றன.
வரலாறு என நம்பப்படும் புனைவுகளும்கூட இறந்தகாலம் குறித்ததாக இல்லாமல் அதிகார நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்த வேட்கையிலிருந்து கிளைப்பவையாகவே இருக்கின்றன. இதன்மூலம் இயல்பான பன்மைத் தன்மைக்கெதிராக அதிகாரத் தன்னிலைகள் ஒற்றைத் தன்மை கொண்ட இலக்கு சமூகத்தைக் கட்டமைக்கின்றன. இதன்மூலம் ஒருவித ஃபாசிச இயங்குதன்மை கொண்டவையாக அவை உருமாறுகின்றன. சங்கப் பிரதிகள் உயர்குடிக்கான காமம் என நம்பப்பட்டவற்றை மட்டுமே பேசியதற்கான காரணமாகவும் இதுதான் இருக்கிறது.
அக்காலத்திலும்கூட இத்தகைய போக்குக்கெதிரான கலகக்குரல்கள் பேசப்பட்டே வந்துள்ளன என்றபோதும் அவை தொகுக்கப்பட்ட காலத்திலும் இலக்கணம் வகுக்கப்பட்ட காலத்திலும் வெளியேற்றப்பட்டிருக்கின்றன. இத்தகைய அரசியல் சூழ்ச்சியை வெற்றி கொண்டு காலத்தில் பயணித்த சிற்சில கலகப் பிரதிகளும் மைய நீரோட்டத்தின் நிறத்திலேயே இயங்குவதாகப் பாவனை செய்ததின்மூலமே தமது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன. பாரி மகளிரின் ’அற்றைத் திங்கள்’ பாடல் மேல் பூச்சில் கழிவிரக்கப் பாடலாகவும் உள்பொருளில் இனப் படுகொலைக்கெதிரான குரலாகவும் பதிவு செய்யப்பட்டிருப்பதை இங்கு நினைவில் கொள்ளலாம். பின் நவீன காலத்திற்குள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட நாம் இத்தகைய பிரதிகளின் வாசிக்கப்பட்ட தொனிகளைக் கலைத்துவிட்டு வேறு பல தொனிகளிலும் வாசித்துப் பார்க்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
வாசகக் குறிப்பு : 3
அந்தரக்கன்னி கவிதைகள் யதார்த்தம் என்னும் கலாச்சார ஒழுங்கு அடிப்படையிலான புனைவுகள் பெண் தன்னிலைக்கெதிராக நிகழ்த்தும் தாக்குதல்கள், வரலாற்றுப் புனைவுகளின் மூலம் பெண் தன்னிலை ஆட்கொள்ளப்படுதல் ஆகியவற்றிலிருந்து தனது கலகத்திற்கான தர்க்கக் காரணிகளைக் கைக்கொள்கின்றன. ‘தேவிடியா’ என்று தலைப்பிடப்பட்ட ஒரு கவிதை. தொகுப்பின் முதல் கவிதை அதுதான். ஒரு பழிச்சொல் தனது அர்த்த மதிப்பிற்கும் பயன் மதிப்பிற்கும் இடையில் இயங்கி பெண்ணின் இயக்கத்தை முடக்குவதைப் பதிவுசெய்கிறது அக்கவிதை. இன்னொரு கவிதை பெண் வழிபாட்டில் பின்னால் இயங்கும் வரலாற்றரசியலின் முரண் நகையைப் பதிவு செய்கிறது. கலாச்சார ஒழுங்குகளும் வரலாற்று ஒழுங்குகளும் மற்றமைகளைக் கழுவேற்றியபின் கழுவில் வழிந்த குருதிக் குழம்பென உறைந்திருக்கின்றன இக்கவிதைகள்.
அந்தரக் கன்னியின் குரல் : 3
மந்திரம்
அவள்
தனக்கு இன்னொரு யோனி வேண்டுமென்றாள்
ஊர்
அவளைக் காரி உமிழ்ந்தது
அவள் ஏற்கனவே நனைந்திருந்தாள்
வசை ஒவ்வொன்றும்
அவள் முலைகளில் தெறித்து நொறுங்குகிறது
கல்லால் அடிபட
கைது செய்யப்பட
சித்திரவதைக்குட்பட
சிதைக்கப்பட
சிலுவையில் அறையப்பட
நாடு கடத்தப்பட
கொல்லப்பட
உத்தரவுகளுக்கு வாய்ப்பு வழங்குபவள் போலவே
நித்தியமாய் சொல்லியபடியிருந்தாள்
தனக்கு இன்னொரு யோனி வேண்டுமென
அவள் நிர்வானமாயிருந்ததால்
காதலை அவளிடமிருந்து
வெளியேற்றிவிட முடியவில்லை
இறுதியில் அவளுக்கு
எட்டாவது கன்னி எனப் பெயரிட்ட
ஊர்
கழுவேற்றி முக்குகளில்
காவல் தெய்வமென வைத்து வழிபட தயாராகிறது
யோனியச்சில் செய்யப்பட்ட விளக்குகளின்
நெய்த்திரிகள்
தினமும் ஏற்றப்பட
அவளின் நாவு எரிக்கப்படுகிறது
பக்கம் : 11
வாசகக் குறிப்பு : 4
ஒரு கிராமத்துப் பெண்ணின் மனப்பதிவில் விளையாட்டுக்களும் பாடல்களுமெனப் பதிந்திருக்கும் வாய்மொழிப் பிரதிகளிலிருந்து தனது தொனியைக் கண்டடைகிறது அந்தரக்கன்னி. அதனால் இத்தொகுப்பின் வரிகள் சுருங்கி இறுகுவனவாக இல்லாமல் தளர்ந்து இளகிய நிலையில் இயங்குகின்றன. இது லீனா மணிமேகலையின் முந்தைய தொகுப்புகளில் இல்லாதது.
எழுத்துப் பிரதிகள் தொடர்ந்து கண்காணிப்பிற்குட்படுபவை. வாய்மொழிப் பிரதிகளோ கண்காணிப்பு வளையத்திற்குள் சிக்காமல் தமது மனவெளியை சுயத்தின் அழகியலை அடையாளத்தின் அரசியலை வெகு இயல்பாக நிகழ்த்திக் காட்டிவிடுகின்றன. வார்த்தைகளின் இடைவெளியில் இத்தகைய வாய்மொழிப் பிரதிகளின் தொனியைக் கைக்கொள்ளும் அந்தரக்கன்னி வார்த்தைகளுக்குள் வன மகள் ஒருத்தியின் நினைவிலிருக்கும் பூக்களையும் மரங்களையும் நினைவுகொள்கிறது. ஒரு பெண் தன்னிலையின் உடல்சார் பால்சார் அரசியல் என்னும் தளத்திலிருந்து தனது அரசியல் தள விரிவை இவ்விடத்தில் சாத்தியமாக்கிக் கொள்கிறது அந்தரக்கன்னி.
உப குறிப்புகள் :
Ø சங்கப் பிரதிகளில் இருவேறு பெண் தன்னிலைகள் தங்களை ஒரே உடலாக உணர்கிற கணங்களைத் தலைவி தோழி உறவிலும் தலைவி பரத்தை உறவிலும் காண முடியும். கல்யாணம் மறுக்கப்பட்ட தோழி தலைவியின் இடத்திருந்து தலைவனை எம் தலைவன் என உரிமை கொள்ளும் கணங்களிலும், குழந்தை பெற்றுக் கொள்ள உரிமையில்லாத பரத்தை தலைவியின் இடத்திருந்து அவளது புதல்வனை எம் புதல்வன் என உரிமை கொள்ளும் கணங்களிலும் இவற்றை உணரலாம். ஆனாலும் அவை தலைவனுக்கான பணிவிடை கருதியவை என்ற நிலையிலும் இரண்டு பெண்களுக்கிடையிலான உறவில் தலைவனைத் தவிர்த்த சுயத் தன்னிலைகளாகத் தங்களை உணரும் தருணங்கள் அவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்தன என்னும் நிலையிலும் இருவேறு பெண் தன்னிலைகள் ஒரே உடலாகத் தம்மை உணரும் நிலை இந்தத் தொகுப்பு குறித்த உரையாடலில் ஏதேனும் உதவி செய்யுமா?.
Ø யோனிக் கலகக்காரிகளின் கவிதைகளையும் ஜூன் ஜோர்டனின் கவிதைகளையும் இத்தொகுப்புக்குள் கொண்டுவந்ததை பல்வேறு பெண் தன்னிலைகளோடும் ஒரே உடலாகத் தன்னை உணரும் நிலையின் உச்சமெனக் கொள்ளலாமா?
Ø ஸாப்போவோடும் யோனிக் கலகக் காரிகளோடும் தன்னை ஒத்துணரும் இத்தொகுப்பின் தன்னிலை QUEER கோட்பாட்டுச் சிந்தனையாளர்களோடும் தன்னைப் பொருத்திக் கொள்ளும் திறப்புகளை உடையவளதானோ!
Ø தனது தெய்வம், தாய், விளையாடும் மரப்பாச்சி, சந்திக்கும் ஆட்டிடைச்சி என ஒவ்வொரு பெண்ணின் மீதும் காமம் கொள்ளும் அடங்காத வேட்கை கொண்ட கவிதைத் தலைவி முன்பு அவள்களோடும் இருந்தாள்; அதே சமயம் அவனோடும் இருந்தாள். வாசிக்கும் கணத்தில் அவன் பழைய ஞாபகமாக மட்டுமே எஞ்சுகிறான் அல்லது கவனத்திலேயே அவன் இல்லை. ஆனாலும் முன்பு இருந்தான் என்ற நிலையில் இது லெஸ்பியன் தன்னிலையின் தொகுப்பா அல்லது பைசெக்ஷுவல் தன்னிலையின் தொகுப்பா?
Ø கவிதைக்குள் பட்டியல் அடுக்குவதை லீனா மணிமேகலையின் கவிதைகளில் அதிகமாகவே வாசித்து வந்திருக்கிறேன். அவற்றுள் சில இயங்கு தன்மை கொண்டு என்னைத் தொந்தரவு செய்ததுண்டு. சில தட்டையாகவே என்னைக் கடந்துபோனதுமுண்டு. இத்தொகுப்பில் முத்தத்தின் தருணங்களை அடுக்கும் ‘மச்சக்கன்னி’ கவிதை என்னைத் தொந்தரவு செய்கிறது. கவிதைக்குள் தொந்தரவு என்பதே கொண்டாட்டத்திற்கானதாகவும் இருக்கிறது. இன்னொரு பக்கம் ‘அநிச்சம்’ கவிதை பொருட்கள் தருணங்கள் நிறங்கள் என மாறி மாறிப் பயணிக்கும்போதுகூட எனது வாசிப்பைத் தட்டையாகவே கடந்துபோகிறது.
Ø அந்தரக்கன்னியின் திரவ மொழியைக் கொண்டாடுவதானால் அது லீனா மணிமேகலையின் மற்ற தொகுப்புகளின் கவிதைகளை நான் உவப்பில்லாதவையாகக் கருதுவதாகுமா? ஒருவேளை முந்தைய கவிமொழியின் உறைபனி நிலை எனக்கு உவப்பில்லை என்பதிலிருந்தும்கூட இந்தத் திரவத் தன்மையை நான் கொண்டாடலாம்.
Ø முன்பொரு கணத்தில் லிங்கத்தைக் கோணக் குச்சியாக்கி உறுமி கொட்டிக் கொள்ளும் கவித் தன்னிலை பின்பு தன் தோழியொருத்தியின் விரலை உயிர்க்குமிழி கோலாக உணர்வது லெஸ்பியன் புணர்ச்சியின் வெளிப்பாடுதானா? அல்லது அந்தத் தோழியின் விரல் லிங்கத்தின் பதிலீட்டு உறுப்பாகத்தான் செயல்படுகிறதா?
Ø இறந்துபோன தன் லெஸ்பியன் தோழியுடன் காதலின் பைத்தியத் தன்மையோடு உடலுறவு கொள்ளும் பெண் தன்னிலையின் கவிதையான ‘அதுவொரு காதல் காலம்’ கவிதையும் இடிபஸ், எலெக்ட்ரா செயல்நிலைகளுக்கு வெளியே பெண்ணொருத்தியின் தாயின் மீதான காமத்தை வெளிப்படுத்தும் ‘அம்மா’ கவிதையும் தொகுப்பின் உரையாடலை வேறு பரிமாணங்களுக்குக் கொண்டு செல்லும் கவிதைகள் என்பது என் துணிபு.
அந்தரக்கன்னியின் குரல் : 4
அதுவொரு காதல் காலம்
அவள் இறந்துதான் போனாள்
இரவு முழுக்க
அணைத்தே இருந்தேன்
ஒரு பொம்மையைப்போல
உயிர்ப்பிழந்த
அவளின்
இமைகளை நாசியை கன்னங்களை
முலைகளை தொடைகளை பாதங்களை
அவளைப்போலவே சுவைத்தேன்
பெருகும் கண்ணீரில் அவள் பிம்பம் தொலைகிறது
கலையும் வண்ணங்கள் அவள் சுண்ணத்தைப் போல
பாலாய் வெளியேறுகின்றன
உள்ளங்கைகளின் ரேகைகள்
துடித்துவிடாதா என வன்மம் கூடி
வெறித்தபடி இருந்தது
நாங்கள் சுகித்திருந்த காலம்
பக்கம் : 37
திணை வரையறுத்தல்
தொல்காப்பியம் ‘கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்’ என்கிறது. ஆனால் சங்க இலக்கியத்தில் நடுவண் ஐந்திணைகள் மட்டுமே பேசப்படுகின்றன. கைக்கிளையும் பெருந்திணையும் சில கலித்தொகைப் பாடல்களின்மூலம் அடையாளம் காணப்பட்டாலும் அவையொன்றும் பெரிய அளவில் மாற்று உரையாடல்களை நிகழ்த்திய பாடல்களாக இல்லை. கைக்கிளையும் பெருந்திணையுமேகூட ஆண் பெண் உறவு என்னும் அங்கீகரிக்கப்பட்ட சட்டகத்திற்குள் இயங்குபவையாகத்தான் இருந்தன. வயது வித்தியாசங்கள், இணையைத் தேர்வு செய்தலில் பொதுவெளியிலிருந்து விலகுதல் என்னும் நிலையில் தான் இவை நடுவண் ஐந்திணைகளிலிருந்து வேறுபட்டியங்கின. மற்றபடி காமத்தின் வேறு பால் நிலை சாத்தியப்பாடுகளெதுவும் தமிழின் செவ்வியல் பிரதிகளில் இல்லை.
தொல்காப்பியம் பெருந்திணைக்குக் குறிப்பிடும் நான்கு பண்புகளில் ‘தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறன்’ என்பதை மட்டும் உரை பிரதிகளை மறுதலித்துவிட்டு வாசித்தால் அவை அங்கீகரிக்கப்பட்ட Heterosexual தன்மையைக் கடந்து வேறு பல காதல் வகை மாதிரிகளைப் பேசுவதற்கான திறப்பு கொண்டிருப்பதை உணர முடியும். அதாவது உயர்குடிகளுக்கான காதலொழிந்த எல்லாக் காதலும் (கே, லெஸ்பியன் உட்பட) இதில் அடங்கும் எனவும் பொருள் கொள்ள முடியும். எது எப்படி இருந்தபோதும் கே, லெஸ்பியன் முதலான காதல்களை அவற்றின் தனித்தன்மையோடும் தீவிரத்தன்மையோடும் புரிந்துகொண்டு அவற்றுடனான உரையாடலை நீட்டித்துக்கொள்ள, பேசப்பட்ட திணை வெளிக்கு அப்பால் அவற்றின் திணையைக் கட்டமைப்பது அவசியமாகிறது. அந்தரக் கன்னியின் கவிதைகள் ஏழு திணைகளுக்கு வெளியே தனது இருப்பை உறுதி செய்யும் கவிதைகள்; அவை எட்டாவது அகத்திணைக் கவிதைகள். அவற்றின் திணையை இனியும் பூக்களின் பெயரால் அழைப்பது சரியல்ல. வேண்டுமானால் யோனியின் பெயரால் அழைக்கலாம்; அதுவும்கூட அந்தத் திணை மாந்தரின் ஒப்புதல் இருந்தால்தான்.
காணாமல் போகடிக்கப்பட்டவர்களின் தேசம்
நன்றி: அந்திமழை
நிலாந்தனின் கவிதை ஒன்று,
அப்பாவுக்குப் பிதுர்க்கடன் கழிக்காத மற்றொரு ஆடியமாவாசை. அவர் காணாமற்போய் இருபது ஆண்டுகளாகிவிட்டன. அவருடைய எடுப்பான வளைந்த மூக்கையும் உறுத்தும் விழிகளையும் சலன சித்தத்தையும் எனக்குக் கொடுத்துவிட்டு கொழும்பு மாநகரின் கடற்சாலையில் அவர் காணாமற் போனார். சூதாடியான ஓரு ஓய்வுபெற்ற முஸ்லிம் படையதிகாரியுடன் அவரைக் கடைசியாகக் கண்டிருக்கிறார்கள். அம்மாவின் கண்ணீரைப்பிழிந்தால் கிடைக்கும் அப்பாவின் கறுப்புவெள்ளைக் கோட்டுருவத்தில் அவர் ஒரு விறுத்தாப்பி, அரைச்சன்னியாசி. ஆனால் எமது சுவர்களில் இன்றுவரையிலும் கொழுவப்படாத ஒரு புகைப்படமாகத் தொங்கும் ஆற்றாமையும் குற்றவுணர்ச்சியும் கலந்த நினைவுகளில் அவர் ஒரு அன்பான தோற்றுப்போன அப்பா. கவிஞர் நிலாந்தனைப்போல இலங்கையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் “காணாமல் போகடிக்கப்பட்ட” தங்கள் உறவுகளுக்காக வருடக்கணக்கில் தேடிக்கொண்டும், காத்திருந்தும் உழல்கின்றனர். கடந்த மூன்று தசாப்தங்களில் காணாமல் போகடிக்கப்பட்டவர்களின் கணக்கின்படி உலக அரங்கில் இலங்கை முதல் இடத்தைப் பிடிப்பதற்கு ஈராக்கோடு போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஐந்து நாளுக்குமொருவர் இலங்கையில் இன்னும் காணாமல் போகடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். விடுதலைப் புலிகள் தலையெடுக்கும் முன்னரே ஆயுதமேந்தி கிளர்ச்சி செய்த ஜே.வி.பி இயக்கத்தினரான சிங்களரை எண்பதுகளில் கூட்டம் கூட்டமாக காணாமல் போகடித்துப் பின் கொன்று புதைத்த கதைகளை ஆங்காங்கே தோண்டி எடுக்கப்பட்ட கொத்து கல்லறைகள் காட்டிக்கொடுத்தன. கடந்த வருடம் தோண்டியெடுக்கப்பட்ட மாத்தளை புதைகுழியில் இருந்த எலும்புக்கூடுகள் தங்கள் பிள்ளைகளுடையவை என்றும், தங்கள் கணவர்களுடையவை என்றும், தங்கள் அப்பாக்களுடையவை என்றும் நீதிமன்றங்களில் வாதாடிக்கொண்டிருக்கிறார்கள் உறவுகள். அவர்களோடு மாத்தளை நீதிமன்றத்தில் ஒரு நாள் கழித்ததில், வாழ்தலுக்கும் சாதலுக்குமிடையே ஊசலாடும் சித்திரவதையை வருடாந்திரமாக இந்த உறவுகள் எப்படித்தான் கடக்கிறார்கள் என்று பதைப்பாய் இருந்தது.
ஸ்பெயின் உள்நாட்டுப்போரை குறித்த கவிதையில், நெரூடா, “என்னை ஏன் கனவுகளை குறித்து, இலைகளைக் குறித்து, எனது நாட்டின் பிரம்மாண்ட எரிமலைகள் குறித்து கவிதை எழுதவில்லை என்று கேட்காதீர்கள். வந்து பாருங்கள், வீதியில் குழந்தைகளின் ரத்தம் ஒடுகிறது, குழந்தைகளின் ரத்தம் போல” என்று எழுதியிருப்பார். ஐ.நாவின் மனித உரிமை ஆணையர் நவிப்பிள்ளை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது யாழ்ப்பாண நூலகத்திற்கு அருகே கவன ஈர்ப்பு போராட்டத்திற்காக கூடிய “காணாமல் போகடிக்கப்பட்டவர்களின்” உறவுகளுடைய கதறல் விவரணைகளுக்கோ, ஆற்றுதலுக்கோ கூட அப்பாற்பட்டது. அடையாள அட்டைகளிலும், கடவுச்சீட்டுகளிலும், புகைப்பட சட்டங்களிலும், தங்கள் உறவுகளின் உயிரை நிழற்படமாக சுமந்துக்கொண்டு பார்ப்பவர்களிடமெல்லாம் திருப்பித் தரச்சொல்லி கேட்கிறது யுத்தம் கூறு போட்ட சமூகம். இலங்கைத் தீவென்பது கடலால் சூழப்பட்டதா கண்ணீரால் சூழப்பட்டதா என்று எண்ணவைத்தது அங்கு ஓங்கி எழுந்த ஒப்பாரி குரல்கள். புகைப்படங்கள் எடுப்பதை நிறுத்திவிட்டு அழும் ஒவ்வொருவரையும் அணைத்துக்கட்டிக்கொள்ளவே எனக்கு தோன்றியது. எவ்வளவு சங்கடமான தருணத்தையும் ஒரு கவிஞர் விளக்கிவிட வேண்டிய கடப்பாடுடையவர் என்று லெனின்கிராட் முற்றுகையிடப்பட்டபோது அன்னா அக்மதோவா சொன்னதாக சொல்வார்கள். எனக்கென்னவோ, இக்கட்டுரைக்கு இறுதிவரிகளை எழுதிவிட முடியாதெனவே தோன்றுகிறது.
பதினைந்து பதினாறு வயது பள்ளிக்கூட சீருடையோடு காணப்பட்ட பிள்ளைகளின் புகைப்படங்களை வைத்துக்கொண்டு தந்தை யானப்பட்டவரோ, தாயானப்பட்டவரோ பேரழுகை அழுதுக்கொண்டிருந்தார்கள் . தம் கணவர்கள் காணாமல் போன தேதி, நேரம், நாள் விவரக் கணக்குகள் சொல்லி சொல்லி மாய்ந்து தேம்பிகொண்டிருந்தார்கள் அரை விதவைமார்கள். சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டவர்கள், வெள்ளைவேனில் கடத்தப்பட்டவர்கள், இயக்கப் போராளிகளாக சாட்சியங்களோடு சரண்டைந்தவர்கள், இயக்கத்தால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு போராளிகளாக்கப்பட்டவர்கள், பத்திரிகையாளர்கள், கார்டூனிஸ்டுகள், பாதிரியார்கள், மெளலாவிகள், கலைஞர்கள், கேள்வி கேட்டவர்கள், கேள்வி கேட்காதவர்கள், மாணவர்கள், மீனவர்கள் என காணாமல் போகடிக்கப்பட்டவர்களின் கதைகளும் காரணங்களும் கொலைகார அரசுக்கு யாரும் தப்பவில்லை என்பதற்கு சாட்சி சொல்கின்றன. கொழும்பு நியூமகசின், வெலிக்கடை, கொழும்பு தடுத்து வைத்தல் சிறை, நீர்கொழும்பு, மகர, அநுராதபுர, திருகோணமலை, மட்டக்களப்பு, பதுளை, கண்டி, யாழ்ப்பாணம், பூசா என எல்லாச் சிறைச்சாலைகளின் கதவுகளையும் தட்டிப்பார்த்தும் . தடுப்பு முகாம்களுக்கும் அலைந்தும் , மனித உரிமை அமைப்புகளுக்கெல்லாம் மனுக்கள் கொடுத்தும் , எந்த துப்பும் கிடைக்காத விரக்தியிலும், யார் அழைத்தாலும் நியாயம் கேட்டுப் போக தயாராகவே இருக்கின்றார்கள் உறவுகளைத் தொலைத்தவர்கள். ராணுவம், போலீஸ் , சி.ஐ.டி என அச்சுறுத்தல்கள் வரும்போதெல்லாம், “நாங்கள் என்ன நாடா கேட்கிறோம். எங்கள் உறவுகள் உயிரோடு இருக்கிறார்களா எனத் தானே கேட்கிறோம்” என்று சுடச்சொல்லி நெஞ்சை காட்டுகிறார்கள். மரணச்சான்றிதழ்களைத் தந்து ஒரு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடும் கொடுத்து ஏற்கச் சொல்லும் அரசாங்கத்திடம் இறுதிச் சடங்குகள் செய்ய பிணங்களையாவது தரச் சொல்லிக் கோரிக்கை வைக்கிறார்கள். பாதுகாப்பு காரணங்களால், எல்லாரையும் சந்திக்க முடியாமல், பதினைந்து பேர் கொண்ட பிரதிநிதித்துவக்குழுவை சந்தித்து மனுக்களைப் பெற்ற நவிப்பிள்ளை அவர்களிடம், “உங்கள் உயிருக்கு அவ்வளவு விலை மதிப்பிருக்கும்போது , எங்கள் உறவுகளின் உயிருக்கு எந்த பதிலும் இல்லாமல் போய்விட்டதா” என்ற கேள்வியை வைக்கிறார்கள். “உயிருடன் இருப்பதற்கான தடயம் அல்லது பிணம்” என்று கேட்டு இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஹேபியஸ் கார்பஸ்(Habeas Corpus) வழக்கு தொடுத்து நீதிமன்றங்களின் படிகளையும் வருடக்கணக்காக ஏறி வருகிறார்கள்.
சண்டை தீர்ந்தாலும், வழியும் வேதனையும் தீரவில்லை என்று தன் இலங்கைப் பயணம் பற்றிய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் நவிப்பிள்ளை அவர்கள், இலங்கை அரசாங்கத்தின் சர்வாதிகாரப் போக்கை கண்டித்துள்ளார். காணாமல் போனவர்களுக்கான நீதியை துரிதப்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார். சாப்பிடும்போது காணாமல் போன தன கணவனுக்கும் தட்டில் வைத்துவிட்டு சாப்பிடும் பெண்ணுக்கு அரசாங்கம் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறதெனவும் சுட்டிக்காட்டியுள்ளார். ஐ நாவின் காணாமல் போனவர்களைக் கண்டறியும் குழுவை இலங்கைக்குள் செயல்பட அனுமதிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
நீதி காணாமல் போன , தம் குடிமக்களை அரசாங்கமே கொலை செய்யும் அராஜக நடைமுறைகள் மலிந்திருக்கும் நாட்டில் தங்களுக்கு எந்த நியாயமும் கிடைத்துவிடாதென விரக்தியிலிருக்கும் இலங்கைத் தீவின் மக்கள் ஐ.நாவையும் சர்வதேச அழுத்தங்களையுமே மூச்சுக்கு முன்னூறு தடவை இறைஞ்சுகின்றனர். “எங்கள் உறவுகள் கிடைக்கும்வரை எங்களுக்கு போர் முடியவில்லை” என்று முறைப்பாடு செய்யும் இந்த மக்களுக்கு அவர்களின் தீராத வலி மட்டுமே மிஞ்சியிருக்கும் ஆயுதம். குற்றங்களில் எல்லாம் கொடிய குற்றமான உயிர்களைக் காணாமல் அடிக்கும் குற்றத்தை தொடர்ந்து செய்து வரும் இலங்கை அரசாங்கத்தை கூண்டிலேற்ற பாதிக்கப்பட்ட மக்களின் வலியை அக்கறையுள்ள ஒவ்வொருவருக்கும் கடத்துவோம்.
பேசாலையில், தன் கண் முன்னே தன் தந்தையை விசாரணைக்கு வெள்ளை வேனில் அழைத்துச் சென்ற ராணுவம் அவரைத் திருப்பி கொண்டு வந்து விடாததால், அப்பா எங்கேயோ இருப்பார் என்ற நம்பிக்கையோடு அவருக்கு கடிதம் எழுதிக்கொண்டிருக்கும் பெளன்சிகாவிற்கு பதில் சொல்ல மனிதாபிமானம் உள்ள நாம் ஒவ்வொருவரும் கடமைப்பட்டிருக்கிறோம்.
லீனா மணிமேகலை
மக்களுக்கு எஞ்சியிருப்பது இரும்பும் சாம்பலுமே – குங்குமம் நேர்காணல்
நன்றி நா.கதிர்வேலன்
27.09.2013
இப்பொழுது தமிழ் ஈழம் எப்படியிருக்கிறது?
குண்டுகள் வீசப்படவில்லை. ஷெல்லடி இல்லை. கிபிர் பறப்பதில்லை. சாவுகள் இல்லை. ஆனால் மக்கள் இன்னும் பீதியிலேயே வாழ்கிறார்கள். ஒவ்வொரு அரைமைல் தூரத்திற்கும் ராணுவ சென்ற்றி பாயிண்டுகளை நிர்மாணித்து மக்களை சதா இலங்கை அரசாங்கம் கண்காணித்து வருகிறது. எதிர்ப்பு என்ற உணர்வே மக்களின் மனதிலிருந்தும், உடலிலிருந்தும் கிளம்பிவிடாமல் ஒருவித கிலியையும் மிக கவனமாக தக்க வைத்திருக்கிறது . தன் பிரச்சன்னத்தை புத்த வழிபாடே இல்லாத வடக்கெங்கும் அகல நீளமுமாக விகாரங்களாக கட்டியெழுப்பி வெற்றிக்கொடிகளாக பறக்க விட்டிருக்கிறார் ராஜபக்சே. புலிகளின் நினைவுச் சின்னங்களையெல்லாம் ராணுவ வீரர்களின் நினைவுச் சின்னங்களாக மாற்றி அங்கு இரண்டு ராணுவ வீரர்களையும் பாதுகாப்புக்கு நிறுத்தி வைத்திருக்கிறது அரசாங்கம். மன்னாரிலிருந்து, வவுனியா, கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு, மாத்தளன், வட்டுவாகல், பொக்கணை, முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு வரை, பொதுமக்களை விட ராணுவத்தின் நடமாட்டமே அதிகமிருக்கின்றது. வழி நெடுகிலும் இருக்கும் செக்போஸ்டுகள் ஐக்கிய இலங்கை என்னும் மாயையை ஒருபோதும் யதார்த்தமாக்கப போவதில்லை என்று கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கின்றன,
விடுதலைப் புலிகள் கோலோச்ச்சிய ஏ 9 ஹைவே இன்று சைனா காசால் பளபளவென மின்னுகிறது. இந்தியா ஏ 9 இணைக்கோட்டில் கொழுப்பு- யாழ்ப்பாண இரயில்வே தடத்தை நேரடியாகவே களத்தில் இறங்கி நிர்மாணித்து வருகிறது. மொட்டைப் பனைகளும், பச்சை பொய்த்த பெருவெளி நிலங்களும், ஆங்காங்கு கண்ணிவெடி கவனம் என்ற அறிவிப்பு பலகைகள் தொங்கும் பாதுகாப்பு வளையங்களும், மிலிட்டரி நடத்தும் ரோட்டோர காண்டீன்களும், , “வடக்கில் வசந்தம், கிழக்கில் உதயம்” என்ற அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்கள் பற்றிய ராஜபக்சேயின் உருவம் பொதிந்த ஆளுயர விளம்பரத் தட்டிகளும், “ஆஸ்திரேலியாவுக்கு படகில் சென்று சாகாதீர்கள்” அபாய எச்சரிக்கை விளம்பரங்களும், வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான வழிப்பயண காட்சிகள். ஓமந்தை செக்போஸ்ட் மெக்சிகோ – அமெரிக்கா எல்லையை நினைவுபடுத்துகிறது.
விஸ்வமடு – புதுக்குடியிருப்பு – பொக்கணை ஆகிய இடங்களில் பிரபாகரன் வாழ்ந்த பங்கர்களை, கடற்படை – சூசை புழங்கிய இடங்களை, இயக்கத்திடமிருந்து கைப்பற்றிய ஆயுதங்களை – வாகனங்களை – கப்பல்களை – பீரங்கிகளை – சிறைக்கூண்டுகளை ,
“பயங்கரவாதிகள் இருந்த இடங்கள்- பயன்படுத்திய விடயங்கள் ” என்று சிங்களத்தில்/ தமிழில்/ஆங்கிலத்தில் விபரப்பலகைகள் நிறுத்தி மியூசியம் வைத்திருக்கிறார்கள். அவற்றைப் பார்க்க டூரிஸ்டுகள் வந்துப்போய்க்கொண்டிருக்கிறார்கள்.
போரின் வலியை எவ்வளவு தூரம் உணர்ந்து, மறந்து வாழ்கிறார்கள் ?
கவிஞர் நிலாந்தன் எழுதியது போல,
‘மாமிசத்தாலானதும்/சுவாசிப்பதுமாகிய/அனைத்தையும் சுட்டெரித்த பின்/மாமிசத்தாலாகாததும்/துருப்பிடிக்கக் கூடியதுமாகிய இரும்பையெல்லாம்/சேகரித்து உப்புக்களியில் குவித்து வைத்திருக்கிறார்கள்/ மக்களுக்கு எஞ்சியிருப்பது இரும்பும் சாம்பலுமே/
இழவு விழாத குடும்பம் இல்லை. மிஞ்சியிருக்கும் மக்களின் உடல்களில் இன்னும் ஷெல் துண்டுகள், அங்கவீனங்கள், படுகாயங்கள். வேலையில்லை, தொழில் இல்லை, அடிப்படை விசயங்களுக்கு கூட பொருளாதாரம் இல்லை, பிள்ளைகளின் படிப்பை தொடர வசதியில்லை, கடுமையான விலைவாசி, கால்நடையெல்லாம் அழிந்துப்போய் பாலுக்கும் முட்டைக்கும் கூட தட்டுப்பாடு, பொத்தல் வீடுகளில் அரசாங்கம் தந்திருக்கும் தகர ஷீட் களை வைத்து கூரைவேய்ந்து மக்கள் வாழ்கிறார்கள். இந்தியா ஒரு ஐம்பதாயிரம் வீடுகள் கட்டித்தருவதாக அறிவித்து ஆங்காங்கே கட்டுமானப் பணிகள் தெரிகிறது. மிலிட்டரிக்கு அடுத்து என்.ஜி.ஓ போர்டுகள் தான் அதிகம் தெரிகின்றன. கைவிடப்பட்ட வீடுகளில், கட்டடங்களில் எல்லாம் வரவிருக்கும் மாகாணத் தேர்தலுக்கான போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. போரின் அவலங்களைச் சொல்லி கட்சிகள் வாக்குகள் சேகரித்துக்கொண்டிருக்கிறார்கள்,
புலம்பெயர் வாழ்க்கை அநேகமாக முடிந்துவிட்டது. வரப்போக முடியும் சூழ்நிலையை அவர்கள் எப்படி கருதுகிறார்கள்?
சாலைகளில் செவ்விளநிகளை அருந்திக்கொண்டு, தீவின் வெக்கைக்கு பொருந்தாத உடைகளோடு ஐரோப்பா, கனடா, அமெரிக்காவிலிருந்து வந்து போகும் புலம்பெயர் ஈழத்து மக்களை நிறைய காண முடிகிறது. அவரவர் காணிகளைப பாதுகாத்து வரையறுத்து வேலி போட்டு வைத்துவிட்டு செல்பவர்களாகத்தான் பெருபாலானவர்கள் இருக்கிறார்கள். வரப்போக கிடைத்திருக்கும் சூழலை, இலங்கை ரூபாயைக் காட்டிலும் பல மடங்கு மதிப்பு மேலிருக்கும் தங்கள் டாலர்- ஈரோ கரன்ஸி கையிருப்பை யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்காக பயன்படுத்தும் முடிவை அவர்கள் எடுத்தால் இரும்பை சுரண்டி விற்று வாழ்ந்துக்கொண்டிருக்கும் வன்னிப் பகுதி மக்கள் மீள்வதற்கு உதவியாக இருக்கும்.
குறிப்பாக பள்ளிகூடங்கள். குண்டு வீச்சுகளால் பொத்தலாயிருக்கும் சுவர்களைப் பார்க்க நேர்கையில் இதயம் விண்டு போகிறது. கட்டிடங்கள மறு நிர்மாணம் செய்யப்பட வேண்டும். தமிழ்ப் பிள்ளைகள் பள்ளிப்படிப்பு முடித்து கேம்பஸ் அதாவது பல்கலைக்கழகம் போவது அரிதாகிவருகின்றது. இந்நிலை நீடித்தால், வரும் சந்ததியினர்களின் எதிர்காலம் கடும் பாதிப்புக்குள்ளாகும். குழந்தைகளின் மனநலம் கடுமையான சிக்கலுக்குள்ளாகியிருக்கிறது. தொடந்த இடப்பெயர்வுகள், கண்ணுக்கு முன் நடந்த கோர மரணங்கள் என அவர்களின் கண்களில் இருள் அப்பிக்கிடக்கின்றது.
புலம்பெயர் மக்கள் என்றில்லாமல், நாமெல்லோருக்கும் சேர்த்தே சொல்கிறேன்.விடுமுறைக்கு வந்துவிட்டு ஐரோப்பா, அமெரிக்கா. இந்தியா திரும்பியவுடன், ஐந்தாம் கட்ட ஈழப்போர் என்றெல்லாம் கூச்சல் போட்டுக்கொண்டிருக்காமல் ஆக்கப்பூர்வமாக எதாவது செய்யும் வழிகளைப் பார்க்கவேண்டும்.
காணாமல் போன பிள்ளைகள், திரும்பி வர முடியாத கணவர்கள், போரில் ஊனமுற்ற மக்கள், இவர்கள் எவ்வாறு சுமத்தப்பட்ட அமைதியை எதிர்கொள்கிறார்கள் ?
போரே நடக்கவில்லை என்று கூட கூடிய விரைவில் இலங்கை அரசு சொல்லக்கூடும். அந்த வேகத்தில் அடையாளங்கள் அழிக்கப்படுகின்றன. எல்லாவற்றையும் பூசி மெழுகி வெள்ளை அடிக்கப்படுகின்றன. கோகோ கோலாவும், ஏர் டெல்லும், சாட்டிலைட் டிவி டவர்களும், கார்பட் ரோடுகளும் துரிதகதியில் “அபிவிருத்தி” சாயத்தை பூசிக்கொண்டிருக்கின்றன.
ஆனால் வலிந்து சுமத்தப்பட்ட அமைதி, நிறுத்திவிடமுடியாத, மௌனமான, நெஞ்சைப் பிளக்கும் ஒப்பாரியாக இலங்கைத் தீவை கிழித்துக்கொண்டு தான் இருக்கிறது, நடக்கும் சாலைகளிலும், ஓடும் நதிகளிலும் குவிந்திருந்த பிணங்களை சனங்களின் நினைவுகளிலிருந்து அப்புறப்படுத்த முடியவில்லை. மொத்த வடக்கும் ஒரு மூடப்படாத பங்கர் போல பிளந்துக் காட்சியளிக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் ஷெல் துண்டுகளை உடலில் சுமந்துக்கொண்டிருக்கும் மக்கள் காண்பிக்கும் லேசர் ஸ்கான் பிரதிகளைவிட, சரண் அடைந்த கடத்தப்பட்ட மகன்களை, மகள்களை உயிருடன் திருப்பித் தர தாய்மார்கள் கதறும் கதற்லைவிட, மனம்- உடல் பாதிக்கப்பட்டு வருத்தக்காரர்களாக நிற்கும் ஆயிரக்கணக்கான சனக்கூட்டத்தைவிட வேறென்ன போர்குற்றச்சாட்சியங்களை கேட்கிறது இந்த கருணையற்ற உலகம்?
வெளியெ சொல்ல முடியாத போதிலும் பிரபாகரனின் பெயர் இன்னும் எவ்வளவு தூரம் மறக்க முடியாமல் இருக்கிறது?
பிரபாகரனின் சிறு உருவப்படம் கூட இல்லாத, முன்னாள் போராளிகள் தங்கள் அடையாளங்களாக ஒரு நிழற்படம், பேப்பர் கட்டிங் கூட வைத்திருக்க இயலாத சூழல் தான் நிலவுகிறது. சண்டையில் இறந்த முன்னாள் புலிகள் “துயிலும் இல்லங்களை” புல்டோசர் வைத்து சமன்படுத்தி, அதன் மேல் ராணுவ தளங்கள் அமைத்திருக்கிறது அரசாங்கம். பிணங்களைக் கூட அவமதித்து அதன் மூலம் தமிழ்ச்சமூகத்தை தொடர்ந்து அவமானப்படுத்த, காயப்படுத்த முனையும் சிங்களப் பெருந்தேசியம் இருக்கும் வரை தமிழ்த் தேசியம் கொளுந்துவிட்டு எரியத் தான் செய்யும். அதன் எரிபொருளாக பிரபாகரன் இருக்கத்தான் செய்வார். தனிதேசத்தின் தேவைகளை பூகோள ரீதியாக இல்லாமல் ஆக்குவதற்கு எல்லா வேலைகளும் நடந்தேறுகின்றன. வடகிழக்கு மாகாணங்களில் கிழக்கு மொத்தமாகப் பிரிந்துவிட்டது.கிழக்கில் சிங்கள கலப்பும் நடந்து பல் இனங்கள் வாழும் பகுதியாக மாறிவிட்டது. வடக்கிலும் சிங்களக் குடியேற்றம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த எதேச்சதிகாரத்திற்கு மத்தியில் பகைமறப்புக்கு வழியில்லை என்று தான் தோன்றுகிறது. பகைமறப்பு சாத்தியமில்லையெனில் ஐக்கிய இலங்கையும் கேள்விக்குறியே.
தோல்விக்குப்பிறகான, போருக்குப்பிறகான காலகட்டத்தில் சலுகை அரசியல் பேசாமல் உரிமை அரசியல் பேசக்கூடிய குறைந்தபட்ச சனநாயகத்தை தக்கவைத்துக்கொள்ள ஈழத்தமிழ் சமூகம் திண்டாடிக்கொண்டிருக்கிறது. கூடவே , சகோதரக்கொலைகள், துரோகி/ உளவாளி அரசியல் கலாசாரம் இவற்றால் பிளவுண்டிருந்த தமிழ் தேசிய இயக்கங்கள் எல்லாம் இணைந்து ஓரணியில் தேர்தலில் களம் காணும் நிலையை வரலாற்றில் முதன்முதலாக எதிர்கொள்கிறது. ஆனால் “பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்” என்று பொய்க்கதைகள் பேசிக்கொண்டு ஈழப்பிரச்சினையை தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்திக்கொண்டிருக்கும் தமிழக அரசியல்வாதிகளையும், ஒபாமாவையும், ஏகாதிபத்தியங்களையும் தங்களைக் காப்பாற்றச் சொல்லிக் கேட்கும் புலம்பெயர் தமிழர்களின் அரசியல்கோதாக்களையும் ஒரு பொருட்டாக கூட,வன்னி சனம் மதிப்பதில்லை.
புலிகளின் இவ்வளவு போராட்டமும், பட்ட பாடும், வீணாகிவிட்டது பற்றி அங்கே நிலவும் கருத்து என்ன ?
புலிகளின் போராட்டக்குணத்தையும் , தியாகத்தையும் கட்டுக்கோப்பான ராணுவ அமைப்பையும் , நிர்வாகத்தையும், தங்களுக்கு அவர்களுக்கு கீழ் இருந்த பாதுகாப்பையும் நினைவு கூறும் மக்கள், கட்டாய ஆள் சேர்ப்பையும், சகோதரக்கொலைகளையும், மாற்றுக் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளா எதேச்சதிகாரத்தையும், வரலாறு தந்த பல சந்தர்ப்பங்களையும் ஏற்றுக்கொள்ளாமல் ராணுவமார்க்கத்தை மட்டுமே நம்பி மோசம் போனதையும் விமர்சிக்காமல் இல்லை. இன்று இயக்கத்தில் இரண்டாம் கட்ட தலைமையில் இருந்தவர்கள் எல்லாம் அரசாங்கத்தோடு நிற்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல், “படுதோல்வி” இன்னும் எதையெல்லாம் அனுபவிக்கச் சொல்லுமென மனம் குமைந்துக்கிடக்கிறார்கள் மக்கள்
முள்ளிவாய்க்காலின் கடைசி நேர அவலங்களின் சாட்சியங்களை கண்டு உணர்ந்தீர்களா?
முள்ளிவாய்க்காலின் இறுதிநேர அவலங்கள் வாய் மொழி சாட்சியங்களாகவே இன்று இருக்கின்றன. வட்டுவாகல் பாலத்தில் நின்றுக்கொண்டு கிட்டத்தட்ட ஒரு நாள் முழுதும் கடந்துப்போன மக்களை, நந்திக்கடலில் நடந்தது என்ன என்று கேட்டுக்கொண்டிருந்தேன். அவர்கள் கண்ணீரும் விம்மலுமாக பகிர்ந்துக்கொண்ட ஒவ்வொரு சொல்லிலிருந்தும் பிணங்கள் உருண்டு விழுந்தன. எல்லாப்பக்கத்தாலும் கைவிடப்பட்ட அனாதைத்தனம் அவர்களை ஆட்கொண்டிருக்கிறது. ஒரு கவிதையிலோ, புகைப்படத்திலோ, வீடியோவிலோ, பதிந்துவிட முடியாத பயங்கரமது. குண்டு பொழிந்ததில் பொத்தலாய் கிடக்கும் சில கட்டிடங்களும் மரங்களும் துருவேறிய வாகனங்களும் தவிர மற்ற சாட்சியங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. கவிஞர் விஜயலட்சுமி எழுதியது போல, வீடுகளில் சாமி படங்களை விட இறந்தவர்களின் படங்கள் பெருகி கிடக்கின்றன.
நவிப்பிள்ளை வந்துப்போன பிறகு கிடைத்த பலன் என்ன?
இன்று கடவுளுக்கு அடுத்ததாக ஈழ மக்கள் நம்பும் ஒரு பெயர் நவிப்பிள்ளை. இலங்கைக்கு விஜயம் செய்த அவரை விரட்டி விரட்டி மக்கள் தங்களைக் காப்பாற்ற சொல்லி கதறியதும், நவிப்பிள்ளை ஜெனிவா சென்றதும், அம்மக்களை விரட்டி விரட்டி இலங்கை சி.ஐ.டியும் ராணுவமும், போலீசும் அச்சுறுத்தியதும் நடந்தேறியது.
நீதி செத்த நாட்டில் நம்பிக்கை இழந்த மக்கள், ஐ.நா இப்போதாவது தலையிட வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.பிறப்பால் அவர் ஒரு தமிழர் என்பதால் அவர் மீதான தமிழர்களின் எதிர்பார்ப்புக்கள் பெருகி ததும்புகின்றன. அவரும் ஈழ மக்களின் குறைகளை கேட்டுச் சென்றிருக்கிறார்.
ஆனால் நாமெல்லோரும் புரிந்துக்கொள்ள வேண்டிய யதார்த்தம், மனித உரிமை ஆணையாளராக அவர் சிலவற்றை வழிமொழிவார் . அழுத்தமும் தருவார். ஆனால் ஐ.நா.வின் பாதுகாப்பு சபையின் நடவடிக்கைகளில் நேரடியான வகிபாகம் செய்யும் அதிகாரம் ஆணையத்திற்கும் இல்லை, அவருக்கும் இல்லை.
பெரும் திகில் அத்தியாயமாக இருக்கும் காணாமல் போனவர்களின் கதி என்ன? அவர்கள் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம் உண்டா?
அவர்கள் காணாமல் போகவில்லை. காணாமல் அடிக்கப்பட்டவர்கள். போரில் இறந்தவர்களுக்கு அவர்களின் குடும்பம் அஞ்சலி செய்யலாம். அதிலாவது மனசாந்திக்கு வழியுண்டு. ஆனால் கண்முன்னே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களும், ராணுவத்திடம் சரணடைந்தவர்களும் வருடக்கணக்காக வீடு திரும்பவில்லை என்றால், அந்தக்கொடுமையை மக்கள் எப்படி எதிர்கொள்வது. கணவனின் சாரத்தைக் கட்டிக்கொண்டு அழுதுக்கொண்டிருக்கும் அரை விதவைகளுக்கும் , தங்கள் தந்தையோ, தாயோ திரும்பி விடுவார்கள் என்று தினம் வாசற்படி பார்த்துக்கொண்டும், ஒவ்வொரு கேம்பாக கடிதம் எழுதிக்கொண்டுமிருக்கும் குழநதைகளுக்கும், பிள்ளைகளின் புகைப்படங்களைப் பிடித்துக்கொண்டு சிறைச்சாலைகளுக்கும், நீதிமன்றங்களுக்கும் வருடக்கணக்காக அலைந்துக்கொண்டிருக்கும் தாய்மார்களுக்கும் யார் நீதி பெற்றுத் தருவது?
இதை எழுதும் பத்திரிக்கையாளர்களும் காணாமல் அடிக்கப்பட்டும், பாதிக்கப்பட்டவரகள் பக்கம் நிற்கும் நீதிபதிகள் சொல்லாமல் கொள்ளாமல் மாற்றப்பட்டும் தொடரும் சூழலில் கொலைகார அரசாங்கத்தைப் பற்றிய மேல் முறையீடுகளை யாரிடம் வைப்பார்கள் மக்கள்?
இந்தக்கேள்விகள் என்னைப் பேய் போல விரட்ட கடுமையான நெருக்கடிகளுக்கும், உயிராபத்திற்குமிடையே யாழ்ப்பாணம், கொழும்பு, கிளிநொச்சி, வவுனியா, இரணபாலை, முல்லைத்தீவு, மன்னார், புத்தளம், திரிகோணமலை, கொழும்பு, அம்பாந்தோட்டை ஆகிய இடங்களுக்குப் பயணம் செய்து கிட்டத்தட்ட 60 மணி நேரம் படமாக்கித் திரும்பியிருக்கிறேன். அடுத்த ஜெனிவா கூட்டத்தொடர் தொடங்குவதற்குள் ஒரு முழு நீள ஆவணப்படத்தை எடிட் செய்து, படத்தில் சாட்சியம் சொல்லியிருக்கும் கதாபாத்திரங்களையும் அழைத்துசென்று ஜெனிவாவில் திரையிடும் முயற்சியிலிருக்கிறேன். படத்தில் பங்கு கொண்டவர்கள் தங்கள் உறவுகளின் விதியை தெரிந்துக்கொள்வதற்காகவும், தங்கள் போல எண்ணற்ற பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டுக்காகவும், ராணுவத்திற்கும் அரசாங்கத்திற்கும் அஞ்சாது களத்தில் நிற்பவர்கள். அவர்களுக்கும், இலங்கையின் கடுமையான சூழலுக்குள்ளும் மக்களோடு நின்று போராடும் என்னருமை சிவில் இயக்க நண்பர்களுக்கும் இந்த படத்தை அர்ப்பணித்திருக்கிறேன்.
சிங்களப் பொதுமக்களின் மனநிலை எப்படி யிருக்கிறது?
பாசிச இலங்கை அரசாங்கம் வரலாறு நெடுகிலும் சிங்கள மக்களையும் ஒடுக்கியே வருகிறது. ஆயுத இயக்கமாக உருவெடுத்த ஜே.வி.பி கிளர்ச்சியாளர்களை எழுபதுகளின் ஆரம்பத்திலும், எண்பதுகளின் இறுதியிலும் தன் கொடுங்கரங்களால் நசுக்கியது. கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் சிங்களர்களை காணாமல் அடித்து, எரித்து, வேட்டையாடி குவியல் குவியலாக புதைத்து கொன்றது. மொத்தம் மொத்தமாக எலும்புகூடுகள் தோண்டி எடுக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றன. அதில் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் இருக்கிறார்களா எனப் பார்த்து தரச்சொல்லி நீதினறங்களுக்கு அலைந்துக்கொண்டிருக்கிறது ஆயிரக்கணக்கான சிங்களக் குடும்பங்கள். கடந்த ஆண்டு தோண்டி எடுக்கப்பட்ட மாத்தளை மாஸ் கல்லறையில் ஒன்றாக புதைக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மக்களின் எலும்புக்கூண்டுகள் கண்டெடுக்கப்பட்டிடுக்கின்றன. வில்பிடா, சூர்யகண்டா, யாக்கலமுல்லா, பெமுல்லா என்று தெற்கில் இப்படியான மாஸ் கல்லறைகளுக்கு தனி வரைபடமே இருக்கிறது.
இருபக்கமும் இனவாத அரசியல் மக்களை துருவங்களாக நிறுத்தி ஆதாயம் பார்க்கின்றது. ராணுவ இலக்குகளாக மாற்றிக் அநியாயத்திற்கு கொல்கிறது. இலங்கைத்தீவின் சாபமது!
முள்ளிவாய்க்கால் என்பதை புலிகளின் முடிவாக மக்கள் நினைக்கிறார்களா?
முள்ளிவாய்க்கால் என்பது முடிவல்ல, “விளைவு” என மக்கள் நினைக்கிறார்கள். காரணங்கள் இல்லாமல் தோல்விகள் நடப்பதில்லை. சுய விமர்சனங்களோடு தோல்விகளை அணுகி பாடங்களை படிக்கச் சொல்லி வலியுறுத்துகிறது வரலாறு. திரும்ப ஆயுதம் தூக்கவோ, உயிர்ப்பலிகள் தரவோ, ஈழத்து சனம் தயாராக இல்லை. நீண்ட காலமாக இழப்பையும் துயரையும் மட்டுமே அனுபவித்த மக்கள் இன்னும் பற்றுறுதியோடு “ஒரு நாள் நீதி வெல்லும்” என்ற நம்பிக்கையை தாங்கள் உண்ணும் பாணின் மீதும் சம்பலின் மீதும் எழுதி உண்கிறார்கள்.
லீனா மணிமேகலை
மரணத்தில் நேசித்தவர்களே சீவியத்திலும் மறவாதிருங்கள்..
நன்றி – தீராநதி செப்டம்பர் 2013
யாழ்ப்பாணத்தில் ஜூலை 20, 21 தேதிகளில் நடைபெற்ற 41 வது இலக்கிய சந்திப்பை பற்றிய குறிப்புகளை எழுதும் இந்த தருணத்தில், ”நாங்கள் எல்லா தரப்புகளாலும் விசாரிக்கப்பட்டவர்கள்” என்ற ஐயா சோ.பதம்நாதனின் சொற்கள் தான் நினைவில் மோதுகின்றன. சிங்களப் பேரினவாதமும், ராணுவவாதத்தை மட்டுமே நம்பிய தமிழ்த் தேசிய விடுதலை இயக்கங்களும் குற்றவாளிகளெனவும், துரோகிகளெனவும் வேட்டையாடியது போக இன்னும் மிச்சமிருக்கும் கலைஞர்கள் உண்மைகளை இரத்தப்பலியென எழுத்தில் கழுவிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு சாட்சியாக நிற்கும் புலம் பெயர்ந்த படைப்பாளர்களின் இயக்கமான “இலக்கிய சந்திப்பு” மூன்று தசாப்தங்களைக் கடந்து புலத்தின் கரை சேர, வரலாறு சற்று நெகிழ்ந்து நிற்கிறது.
தேசியம் குறித்த இலக்கிய சந்திப்பின் அரங்கில் பேசிய யதீந்திரா, அல்ஜீரிய சிந்தனையாளர் பிரான்ஸ் ஃபனானின் “தேசியம் என்பது ஒரு வெற்றுக்கூடு” என்ற கூற்றை முன்வைத்து, எப்படி தேசியம் அடிப்படைவாதிகளின் வசமிருந்தால், அவர்களுக்கு சேவை செய்யும், அது இடதுசாரிகள் வசமிருந்தால், இடதுசாரி முகம் காட்டும், அதுவே பயங்கரவாதிகள் வசமிருந்தால் பயங்கர முகம் காட்டும் என தேசியத்தின் பண்பை நாடி பிடித்துக் காட்டினார். இன்று ஈழத்தில் தமிழ்த்தேசியம், ஐக்கிய இலங்கையில் அதிகாரப் பகிர்வு என்ற ஆரம்பகால மிதவாத தேசிய அரசியலுக்கே திரும்பியிருப்பதின் நெருக்குவாரங்களினூடே கலை இலக்கிய செயற்பாட்டாளர்கள் தங்கள் பற்றுக்கோள்களைக் குறித்த விசாரணையில் இறங்கியிருக்கிறார்கள். இன்று கொத்துக்குண்டுகள் விழவில்லையென்றாலும், சிங்களப் பெருந்தேசியம் வடக்கின் ஒவ்வொரு அரைமைலுக்கும் தன் படையணியை நிறுத்தி மக்களை சோற்றுக்கு மட்டுமே வாய்திறக்க அனுமதி கொடுத்து வைத்திருக்கின்றது. சிங்கள காலனியாதிக்கம் – குடியேற்றம், புத்த விகாரங்கள், தாண்டி கல்வி கலாசார தளங்களிலும் ஒருவித மூர்க்கத்துடன் நடந்துக்கொண்டிருக்கிறது. குண்டுகள் துளைத்த வீடுகளையும், காயம்பட்ட பனைகளையும் தென்னைகளையும் விளாத்திமரங்களையும், இன்னும் பிணச்சூட்டில் கொதித்துக்கொண்டிருக்கும் காணிகளையும், உடலில் தங்கிவிட்ட ஷெல்துண்டுகளால் உயிர் பிரிந்தும் பிரியாமல் நடமாடிக்கொண்டிருக்கும் சனங்களையும், சல்லடையாய் நிற்கும் பள்ளிகளையும், காணாமற் போனவர்களுக்காக காத்திருக்கும் நிலப்பாவாடைகளையும், அம்பாரம் அம்பாரமாய நகரும் துயரம்போல ஓடிக்கொண்டிருக்கும் நதிகளையும், அலையற்றுப்போன கடலையும் மீறி ”பகை மறப்பையும், கற்றுக்கொள்ள வேண்டியப் பாடங்களையும்”குறித்து படைப்பாளிகள் பேச விழைந்தது, கவிஞர் கருணாகரனின் கவிதையைப்போல “நடந்து வந்த பாதை நம் காலடியிலேயே முடிந்தது போ” என்ற உணர்வையே தந்தது. ஆனாலும் நம்பிக்கைகளைக் கேட்கின்றது காலம். கடும் சவாலானாலும் படைப்பாளிகள் காலத்தோடு சில பேரங்களை நடத்த தான் வேண்டியிருக்கின்றது.
எரிக்கப்பட்ட யாழ்ப்பாண நூலகம் புனரமைக்கப்பட்டபோது, அன்றைய நாளில் மேயராக இருந்தவர் தலித் என்பதால், அவர் முன்னிலையில் நூலகம் திறப்பு விழா காண்பது தடுக்கப்பட்டது போன்ற சம்பவங்கள் “சாதி” பற்றிய அரங்கில் நினைவுகூறப்பட்டது. யாழ்ப்பாணமும் சாதியமைப்பும் பற்றிய பேசிய தெணியானும், மட்டக்கிளப்பின் சாதியத்தைக் குறித்து விவரித்த குமாரசாமி சண்முகமும், கல்வியில் சாதி ஒடுக்குமுறை நடைமுறைகளை விவாதித்த ஏ.சீ ஜோர்ஜும், சாதிக்கு எதிரான சனநாயக செயற்பாடுகளை டானியல் காலத்திலிருந்து இன்றுவரை பட்டியலிட்ட சீனியர் குணநாயகமும், மொத்தத்தில் நினைவுகூறல்கள் எந்த காப்புறுதிகளையும் தரவல்லவையா என்ற கேள்வியையே எழுப்பினார்கள் இனஒடுக்குமுறைக்கு எதிரான போர், அடைகாத்துக்கொண்டிருந்த சாதிய ஒடுக்குமுறை இன்று குஞ்சுப் பொரித்துக்கொண்டிருக்கிறது என்று அவதானித்த ஐயா தெணியான், விடுதலைப்புலிகளின் அரசியல் விளக்க ஏடு சாதியை பேசக்கூடாது என்று சொன்னதே தவிர சாதிஒழிப்பை முன்னெடுக்கவில்லை என்ற காட்டமான விமர்சனத்தை வைத்தார். தமிழனுக்கு ஈழம் கிடைத்தாலும்,கரையார் தோணி/ வமலர் மத்து/துலுக்கர் தொப்பி/வேதியர் பூநூல்/ காராளர் கலப்பை/வண்ணார் கல்/வேடுவர் வில்லம்பு/வாணிபர் செக்கு/ முற்குகர் எழுத்தாணி/கடையற் கூடை/ கோவிலார் கமல் மலர் /வேந்தர் செங்கோல்/ பண்டாரப்பிள்ளை கைப்பிரம்பு/ வள்ளுவர் மேளம் /திமிலர் பால்முட்டி/ குயவன் குடம் / சேணியர் நூலச்சி /தட்டார் குறடு / அமலர் தேர்க்கொடி/ சாணார் குத்து / அம்பட்டர் கத்திரிக்கோல் / செட்டி தராசு (உதவி திரு.கு.சண்முகம்), என குடிவகுப்புகளுக்குரிய குலவிருதுகளைப் பாடியபடி தான் இருப்பான் போலும். ஆலயப்பிரவேசம், விவாக மறுப்பு போன்ற ஆரம்பபடிநிலையிலேயே சென்றுக்கொண்டிருந்த விவாதநேரமும், இலக்கிய சந்திப்பின் பெரும்பாலான இண்டெலக்சுவல்கள் பெரியாரையும் அம்பேத்காரையும், ஏன் “தலித்” என்ற சொல்லாடலையும் கூட ஏதோ இந்திய இறக்குமதி போன்ற அசூயையுடன் அணுகியதும், சாதி ஒழிப்புக்கான சிந்தனைமட்டமும், வேலைத்திட்டங்களும் இலங்கையில் வெறும் ஆரம்ப படிநிலையிலேயே இருப்பதை உணர்த்தியது. ஆனால், “உங்க ஊரு மாதிரி இங்கே இளவரசன்கள் கொல்லப்பட மாட்டார்கள்” என்ற செய்தி எனக்கு அவசரமாக சொல்லப்பட்டது. பிரதானமாயிருக்கும் இனமுரண் சூழலில் பதுங்கியிருக்கும் சாதிமுரண், இரைதேட புறப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதை என்னால் அரங்கின் கால மட்டறுப்பால் அங்கு பதிவு செய்ய முடியவில்லை.
இந்தியாவிலிருந்து சிறப்பு அழைப்பாளராய் அழைக்கப்பட்ட லிவிங் ஸ்மைல் வித்யா, தாங்கள் தேசமிருந்தும் பாலின அகதிகளாக வாழ்வதைப் பற்றி உரையாற்றியது, “திருநங்கைகள்” தங்கள் அடையாளத்தைக்கூட வெளிப்படையாக சொல்லிவிட முடியாத யாழ்ப்பாண சூழலை உலுக்கிப் போட்டது.”திருநங்கைகளின் அடிப்படை வாழ்வு, உடல், பாலியல் விழைவுகள், அடையாள அரசியல்” என அரங்கிற்குப்பின்னான விவாதக்களத்தில் கேட்கப்பட்ட கேள்விகளும், வித்யா சொன்ன பதில்களும், படைப்பாளிகளிடையே நிலவும் பாலியல் சிறுபான்மையினர் குறித்த அறிதல் போதாமைகளை இட்டு நிரப்பியது. சந்திப்பிற்கு சென்று வந்த அனுபவங்களை “ஆண்களான நீங்கள், ஏன் புடவை கட்டி நிற்கிறீர்கள் என அவமானப்படுத்தி 5 திருநங்கைகளை பேருந்து நிலையத்தில் சுட்டுக்கொன்ற ஒரு தேசத்தில், பெண் தன்மையோடு இருந்ததால் ஏளனப்படுத்தி இயக்கத்தில் சேர்க்க மறுத்த ஒரு தேசத்தில் திருநங்கைகளை குறித்த புரிதலை இயன்ற மட்டில் செய்வது எனது தார்மீக கடமை” என்று முகநூலில் வித்யா பதிவிட, சர்ச்சைகள் கொடி கட்டி பறந்தன. யதீந்திரா சொன்னதுபோல தேசியம் என்ற வெற்றுக்கூடு அப்போது கலாசாரக் காவலர்களிடம் அகப்பட்டுக்கொண்டது.
“சீமைக்கு போறமுன்னு / சிணுங்காத எம்மவளே /கடல்தாண்டி போறமுனு /கலங்காதடி ராசாத்தி / சிங்களவன் ஊர்போயி /சீக்கிரமா வாருமடி/ ” போன்ற மலையக நாட்டார் பாடல் வடிவங்கள் தான் மலையக இலக்கியத்தின் தோற்றுவாய் என்ற தன் ஆய்வுரையை வாசித்த மல்லியப்பு சந்தி திலகர்,” ‘நீ பார்த்து சலிக்காத/ பொருளென்ன’என்று நீர்/ எனைக் கேட்டால்/ நான் சொல்லும் பதிலிது தான்/ குளிர்மேகம் வாடியிடும் நக்கிள்ஸின் தொடர்கள் தான்/ நான் பார்த்து சலிக்காத பொருள்” என்பேன் நான்” என நீளும் அரு.சிவானந்தனின், 70 களில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட ஒட்டுமொத்த மலையக மக்களின் அழுகுரலாக ஒலிக்கும் “சென்றுவருகிறேன் ஜென்மபூமியே” என்ற கவிதையிலிருந்து தொடங்குகிறது புலம்பெயர் இலக்கியம் என்றார். லெனின் மதிவானத்தின் “ஊற்றுக்களும் ஓட்டங்களும்” திறனாய்வு நூலையும் பேராசிரியர் செ.யேசுராசாவின் கட்டுரைகளையும் சான்றாக முன்வைத்து, மீனாட்சியம்மையை ஈழத்தின் முதல் பெண் கவிஞரெனவும் முன்னிறுத்தினார் திலகர். சிவரமணி தொடங்கி சர்மிளா செய்யித் வரையிலான ஈழப்பெண் படைப்பு வரலாற்றைக் கட்டுடைத்து, “பெண்கள் சொல்லும் சேதிகளைப்” பேசிய சித்ரலேகா மெளனகுரு, ஈழத்தில் துவக்கு தூக்க அனுமதிக்கப்பட்ட பெண்கள் எப்படி அரசியல் விமர்சனம், பாலியல் மதம் போன்ற “விலக்கப்பட்ட” பொருள் குறித்து கவிதைகள் எழுத அனுமதிக்கப்படுவதில்லை என்பதை விவாதித்தார். யுத்த நெருக்குவாரங்களிடையே ”கொலை அரசியல்” விமர்சிக்கப்பட்ட அளவுக்கு ”பாலியல் வன்முறை” அரசியல் பதிவுசெய்யப்பட்டிருக்கிறதா என்ற கேள்விக்கு கிருஷாந்தி, கோணேஸ்வரிகள் என ஒன்றிரண்டு கவிதைகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. சிங்களப் பேரினவாதம், இந்திய அமைதிப்படை, இயக்கப் பூசல்கள் என எல்லா அதிகாரமும் பெண்ணின் உடலை வன்முறைக்கானக் களனாகப் பயன்படுத்தியிருப்பதைப் புள்ளிவிவரங்களால் கணித்துவிடவோ, விசாரணை செய்துவிடவோ முடியாதென்பதே சொல்லப்படாத சேதி.
”அசன்பே சரித்திரம்” ஒரு முஸ்லிமால் எழுதப்பட்டதால், ஈழத்தமிழ் இலக்கிய வரலாற்றின் முதல் புதினமாக அங்கீகரிக்கப்படாமல் மறைக்கப்படுகின்றதா என்று வினவினார் முஸ்லீம் தேசிய இலக்கியம் பற்றிப் பேசிய நவாஸ் செளபி. தொடர்ந்து “முஸ்லீம் பண்பாட்டுருவாக்கங்களும், அண்மைக்கால நெருக்கடிகளும்” என்ற விவாதப்புள்ளியில், இத்ரீஸுடன் இணைந்த அரங்கம், சிங்களப் பேரினவாத அரசாங்கம் பொதுபலசேனா(Bodhu BalaSena) போன்ற அமைப்புகளின் மூலம் இஸ்லாமிய சமூகத்தை தொடர்ந்து அச்சுறுத்தியும் தாக்கியும் வருவதை கண்டனம் செய்தது. இனங்களுக்கிடையே வேற்றுமைகளைக் களைந்து சமரச நடவடிக்கை மேற்கொள்ளும் முயற்சிகள் தொடங்கப்பட்டால் சிங்கள பெரும்பான்மை தமிழர்களிடம் மன்னிப்புக் கோருவதோடு, தமிழர்கள் இஸ்லாமிய சமூகத்திடமும் மன்னிப்பு கோரவேண்டிய வரலாற்றுத் தேவையை அவை ஆமோதித்தது. அரசியல் மற்றும் கலாசார அலகுகளுடன் இன்று உருப்பெற்றிருக்கும் முஸ்லீம் தேசியம் ஈழப்படைப்பிலக்கியத்திலும் தனித்துவத்தைப் பெற்றிருக்கிறது.
பன்மைத்துவத்தை மிக சிரத்தையுடன் நிரல்படுத்திய 41வது இலக்கிய சந்திப்பு, சிங்கள நாவலாசிரியர் லியனகே அமரகீர்த்தியையும், வரலாற்றாளர் நிர்மால் ரஞ்சித் தேவசிறியையும் அழைத்திருந்தது குறிப்பிடத்தகுந்தது. சிங்களப்புனைவிலக்கியத்தில் தமிழ் கதாபாத்திரங்கள் பற்றி பேசிய அமரகீர்த்தி, சிங்களப் படைப்பாளிகளிடையே தென்படும் குற்றவுணர்வென்பது மிக மெல்லியது எனவும், காதலைப் பகிரத் தயாராக இருக்கும் அவர்கள் தேசத்தைப் பகிரத் தயாராய் இல்லை என்ற விமர்சனத்தை வைத்தார். சிங்களப் பொதுமக்களை ராணுவ இலக்குகளாக மாற்றிய புலிகளின் தன்மோகத் தமிழ்தேசியம், சுதந்திரவாத சிங்களப் படைப்பாளிகளையும் எதிர்நிலையில் நிறுத்திவிட்டதெனவும் பதிவு செய்தார். சிங்களப் பெருந்தேசியத்தின் வரலாற்றின் மீது ஆழமான விமர்சனப் பார்வையை வைத்த நிர்மால், இன்று அதன் ஆகக்கோரவடிவமாக உருப்பெற்றிருக்கும் ராஜபக்சேவை வீழ்த்துவது தமிழர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு மட்டுமல்லாமல், சிங்களப் பெரும்பான்மையினருக்கும் அத்தியாவசியமானது என்று பேசினார். சந்திப்பு நடந்த சில வாரங்களில் சிங்களப் பகுதியில் ரப்பர்கையுறைதொழிற்சாலையால்மாசுபடும்நன்னீர் நிலைகளைக்காப்பாற்றக்கோரியும்சுத்தமானகுடிநீர்கோரியும்
போராடிய வெலிவேரியாமக்கள்மீதுஇராணுவம்நடத்தியதுப்பாக்கிச்
சூட்டில் 3 பேர்கள் வரைகொல்லப்பட்டார்கள். வடக்குக்கிழக்கில்மட்டுமல்லமுழுஇலங்கையிலும்இராணுவநீக்கம்அவசியம்என்றநிர்மாலின்கருத்தையே இந்நிகழ்வு உணர்த்துகிறது. இனவாத துப்பாக்கிகளின் அதிகாரத்திற்கெதிராக சிங்கள மக்களும், தமிழர்-முஸ்லீம் –மலையகத் தமிழர் சிறுபான்மையினரும் அணிதிரள்வதை காலம் நிர்ப்பந்திக்கும்.
ஷோபாசக்தியைப் பதிப்பாசிரியராகக் கொண்ட, பன்னிரெண்டு நாடுகளிலிருந்து எழுதப்பட்ட எழுபத்தியைந்துக்கும் மேலான பனுவல்களைத் தொகுத்திருக்கும் குவர்னிகா – 41வது இலக்கிய சந்திப்பு மலர், கருணாகரன், தமயந்தி, பானுபாரதி, நவீன் குழுவினரின் அயரா உழைப்பால் சாத்தியப்பட்டு, கருப்பு பிரதி வெளியீடாக வந்திருக்கிறது.சுல்பிகா, சுமதி ரூபன், அசுரா, தேவதாசன், ராகவன், ஸ்ராலின், விஜி, நிர்மலா என்று ஐரோப்பிவிலிருந்தும் கனடாவிலிருந்தும் வந்திருந்த படைப்பாளிகளும் செயற்பாட்டாளர்களும் இலக்கிய சந்திப்பு என்ற இயக்கம் மிகக்கடுமையான தணிக்கைச் சூழலையும் கடந்து, உயிர்ப்பலிகளையும் தாண்டி இன்று யாழ்ப்பாணத்தில் 41வது பதிப்பாக உரையாடல் களம் பெற்றிருப்பதன் வரலாற்று முக்கியத்துவத்தை உளநெகிழ்ச்சியுடன் பகிர்ந்துக்கொண்டனர். ரியாஸ் குரானா, சுமதி சிவமோகன், குணேஸ்வரன், லெனின் மதிவாணம், சிராஜ் மசூர், சோமேசசுந்தரி, தேவகெளரி, அஷ்ரஃபா நூர்தீன், விஜயலட்சுமி, ஞானசக்தி நடராசா, துஷியந்தினி, என்று கிழக்கிலிருந்தும், தெற்கிலிருந்தும், மலையகத்திலிருந்தும் இலக்கிய சந்திப்பில் பங்குகொண்ட ஒவ்வொருவரும், சந்திப்பை நெறிப்படுத்திய கருணாகரனும், ஒருங்கிணைப்பில் உதவிய திருவரங்கன், அகல்யா என்ற இளைய தலைமுறையினரும், சிவில்சமூகம் மேலெழும்புவதையே வருங்காலத்திற்கான நம்பிக்கையாக மீண்டும் மீண்டும் வெவ்வேறு சொற்களின் மூலம், வாக்கியங்களின் மூலம், கருத்துக்களின் மூலம் முன்வைத்தனர்.
கலை-இலக்கிய-பெண்ணிய- ஊடக –பண்பாட்டு – மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, அனைத்து தரப்புகளாலும் வஞ்சிக்கப்பட்டு, அனாதரவாய் சந்தியில் நிறுத்தப்பட்டிருக்கும் சனத்திற்கு நீதியைப் பெற்றுத்தரும் பொறுப்பை ஏற்கவேண்டிய அவசியத்தை யாழ்ப்பாணத்தில் நடந்த 41வது இலக்கிய சந்திப்பு அறிவித்திருக்கிறது.
லீனா மணிமேகலை
கவிஞர் – இயக்குநர்
தூரத்து தண்ணி ஆபத்துக்குதவாது – கவிஞர் கருணாகரன் நேர்காணல்
கவிஞர் கருணாகரன் யாழ்ப்பாணம் – 41வது இலக்கிய சந்திப்பின்போது தந்த நேர்காணல்
முப்பது வருடப் போர் ஈழத் தமிழர்களை உலகெங்கும் வீசியெறிய, வீட்டையும் நாட்டையும், சொந்தபந்தங்களையும், இழந்தாலும் ஒட்டிக்கொண்டிருந்த உயிரை வைத்துக்கொண்டு படைப்பாளர்களும், கலைஞர்களும் இயங்கிக்கொண்டு தான் இருந்தார்கள். புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய வாசகர்கள் 1988ம் வருடத்திலிருந்து ஐரோப்பாவிலும், கனடாவிலும் நடத்திவந்த இலக்கிய சந்திப்பு நாற்பது தொடர்களைத் தாண்டிய நிலையில், தற்போது வரலாற்றில் முதன் முதலாக நாற்பத்தியொன்றாவது இலக்கிய சந்திப்பை யாழ்ப்பாணத்தில் நடத்தி முடித்திருக்கிறார்கள். வடக்கு, கிழக்குப் பிரதேச படைப்பாளர்களும், முஸ்லீம் தமிழ் எழுத்தாளர்களும், மலையகத் தமிழ் மற்றும் புலம்பெயர் அறிவுஜீவிகளும் துருவ வேறுபாடுகள், இனக்கசப்புகள் கடந்து இலங்கைப் பேரினவாத அரசின் கருத்துச் சுதந்திர அடக்குமுறைகளையும் மீறி, கூடிக் கலந்து பேசி சிந்தனைகளையும் கருத்துக்களையும் எழுத்துக்களையும் பகிர்ந்தது போருக்குப்பின்னான ஒரு அனாதரவான மனநிலைக்கு மருந்தாக அமைந்திருக்கிறது.
ஏழு கோடி மக்கள் வாழும் தமிழ்நாட்டுத் தமிழர்களை விட, சில லட்சங்கள் மக்கள் தொகை கொண்ட ஈழம் தமிழுக்கு செய்த பங்களிப்பு ஏராளம். தமிழின் நவீன உரைநடையை வகுத்த ஆறுமுகநாவலர், தமிழ்ப் பேரகராதியைத் தந்த நா. கதிரவேற்பிள்ளை, தொல்காப்பியப் பொருளதிகாரம் உட்பட பலவற்றை பதிப்பித்த சி.வை.தாதோதரம்பிள்ளை, யாழ்நூலை எழுதிய சுவாமி விபுலானந்தர், தமிழராய்ச்சி மாநாட்டை உருவாக்கிய தனிநாயகம் அடிகளார், தலித் இலக்கியத்தின் முன்னோடி கே.டானியல், மார்க்ஸிய திறனாய்வின் முன்னோடிகள் பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி, நவீன தமிழ் இலக்கியத்தில் பாலியலை விரிவான பேசுபொருளாக்கிய எஸ்.பொ, நவீன தமிழ்க் கவிதையின் பிதாமகர்களில் ஒருவரான தருமு சிவராம், தமிழ் இலக்கியத்தின் புதிய வகைகளான போர்க்கால இலக்கியம் தந்த கருணாகரன், தமிழ்க்கவி, மலரவன், புலம்பெயர் இலக்கியம் படைத்துக்கொண்டிருக்கும் ஷோபாசக்தி, கலாமோகன், தமிழ் நவீன பெண் எழுத்துகளின் முன்னோடிக் கவிதைகளை எழுதிய மீனாட்சி, சிவரமணி, செல்வி, மைத்ரேயி, ஊர்வசி என்று நீளும் பட்டியல் இலக்கிய சந்திப்பையும் தன்னோடு சேர்த்துக்கொள்கிறது.
யாழ்ப்பாண அஞ்சல் நிலையத்திற்கு வந்து சேர்ந்த “பன்னிரெண்டு நாடுகளிலிருந்து எழுதப்பட்ட எழுபத்தைந்துக்கும். அதிகமான படைப்புகளையும் கொண்ட ’குவர்னிகா’ இலக்கிய மலர்” பொதியைப் பிரித்தபடி நம்முடன் பேசினார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கவிஞர் கருணாகரன். கால் நூற்றாண்டுக்கும் மேலான படைப்பனுபவத்தைக்கொண்ட கவிஞர் கருணாகரன் நந்திக்கடலிற்குப் பிறகான ஈழத்துக் கலை இலக்கியப் போக்கிற்கு ஒரு முன்னோடி. தேசியவாதிகள், எதிர்த்தேசியவாதிகள், அதிருப்தியாளர்கள், அவதூறாளர்கள் எல்லோருக்குமாக திறந்திருக்கும் வாசல் அவர்.
லீனா மணிமேகலை
……………………………………………………………..
41வது இலக்கிய சந்திப்பு அரசாங்க ஆதரவாளர்களால் நடத்தப்படுகிறது, இப்படி ஒரு சந்திப்பு நடப்பதால் இலங்கையில் எல்லாம் சரியாகவே இருக்கிறது என்ற பிம்பத்தை நீங்கள் உருவாக்க நினைக்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?
இதை முற்றிலுமாக மறுக்கிறேன். தங்கள் கருத்துக்கு உடன்படாதவர்களை தாம் நிராகரிப்பதுடன், பொது வெளியும் நிராகரிக்க வேண்டும் என்ற புலிகள் மற்றும் தமிழ்ப் பெரும்பான்மையின் கடந்த கால – நிகழ்கால அணுகுமுறையின் வழியாக சிந்திக்கப்பட்டுள்ளது. அந்த வழிமுறையின்படியே குற்றச்சாட்டுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இலக்கியச் சந்திப்பி்ல் யாழ்ப்பாணத்தார், மட்டக்களப்பார், வன்னியார், புலம்பெயர்ந்தோர், மலையகத்தார், ஆண்கள், பெண்கள், மாற்றுப்பாலினத்தவர், இளைஞர்கள், முதியோர் எனப் பல தரப்பினரும் தமிழ்த்தேசியவாதி, முஸ்லிம் தேசியவாதி, இலங்கைத் தேசியவாதி, மலையகத் தேசியவாதி, எதிர்த்தேசியவாதி – புலி ஆதரவாளர், புலி எதிர்ப்பாளர் என வெவ்வேறு அரசியல் தளத்திலிருப்பவர்களும் கலந்து கொண்டதை நீங்கள் பார்த்தீர்கள்.
தனியே ஒரு சாதிப்பிரிவோ, அரசியற் தரப்போ, ஒரு சார்புக்குழுவுக்கான சந்திப்போ இதுவல்ல. அரசியற் சார்புகளோ, விருப்பங்களோ அவரவர்களுக்கென பிரத்தியேகமாக இருக்கலாம். அது வேறு. இலக்கியச் சந்திப்பு வேறு. காயம்பட்ட கடந்த காலங்கள் எம்மை ஒருவரை ஒருவர் நம்பவிடாமல் செய்கிறது. இந்த தீவில் எல்லா சமூகங்களும் கடுமையான மன உளவியல் பாதிப்பில் சிக்குண்டிருக்கிறோம். அரசாங்கமும் அதற்கு விதிவிலக்கல்ல. அரசு அதிகார மையமாக இருப்பதால் படைபலங்களை அனுப்புகிறது கண்காணிக்கிறது. தணிக்கை செய்கிறது. அதிகாரபலம் இல்லாத ஏனைய தரப்பினர் புறக்கணிப்பு செய்கிறார்கள். அதுவும் அரசுக்கு வெளியேயான தணிக்கை செயல்பாடே.
அச்ச உணர்வும், தணிக்கையும் இன்னும் எம்மை ஆட்டிப்படைத்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் முன்போல், அது ஒரு கொலையை உடனே நிகழ்த்தக்கூடியதாக இல்லை.
நாளை என்னையோ, நிகழ்வில் கலந்துக்கொண்டவர்களையோ உளவுத்துறை அழைத்தும் செல்ல வாய்ப்பிருக்கிறது. ஆனால் பயந்தால் முடியுமா? எல்லாவித நெருக்கடிகளுகெதிராக குரல் கொடுப்பவன் தான் கலைஞன். அதற்காகவேனும் நம்பிக்கையின்மையை கடக்க வேண்டியவனும் அவனே.
படுகொலைகள், கடுமையான இழப்புகள், சிதைவுகள் என உங்கள் ”வன்னி மரணக்குறிப்புகள்” கவிதையில் குறிப்பிடுவது போல சாவரங்காக காட்சியளிக்கும் இந்த மண்ணில் இலக்கிய சந்திப்பின் அவசியம் என்ன?
நெருக்கடிகளை வாழ்ந்தும் இயங்கியும் தான் கடக்க வேண்டியிருக்கிறது. இயங்கினால் தான் மீறவும் மீளவும் முடியும். போருக்கு முன்னும் பின்னும் இங்கே இலக்கியம் இருந்துக்கொண்டே தான் இருக்கிறது. விடுதலைப்புலிகளின் அரசியல் பிரசாரங்களை எடுத்துச் செல்லும் இலக்கியமும், அந்த அணுகுமுறையிலிருந்து மாறுபட்டு ஜனநாயக ரீதியிலான கருத்துப்பரவல்களுக்கும் விமர்சன மரபுக்கும் உட்பட்ட இலக்கியமும் வீர்யத்தோடு எம் வாழ்க்கையைப் பிரதிகளாக்கியிருக்கின்றன.
குண்டுகள் சாதி, பால்நிலை, மதம் பார்த்து விழவில்லை. எல்லோர் மேலும் தான் குண்டுகள் விழுந்தன. சாவு சதா எங்கள் கதவுகளைத் தட்டிக்கொண்டிருந்த காலகட்டத்தில், புலிகள் முதலில் இனரீதியான வெற்றியைப் பெற்றுவிட்டு மற்றவற்றைப் பார்க்கலாம் என நம்பினார்கள். துவக்குகள் தூக்க பலம் பெற்றிருந்த நாங்கள், விமர்சனங்களை எதிர்கொள்ளும் பலமற்றிருந்தோம். அதனாலேயே, இஸ்லாம் சமூகத்தினரை, இனசமத்துவத்தில் நம்பிக்கையோடு இருந்த சிங்கள அறிவுஜீவிகளை, பிராந்திய அரசியல் நேச சக்திகளை, சர்வதேச சமூகங்களை என எல்லோரையும் எதிர்நிலையில் நிறுத்தினோம். தன்னைத் தவிர யாரையும் நேசிக்காத விடுதலை இயக்கத்தால், கொத்து கொத்தாக மக்களைக் காவு கொடுத்தோம். ராணுவபலம் மட்டுமே தமிழர்களுக்கு தேசம் வென்று தரும் என்பது பொய்த்துப்போனது. இன்று தொடங்கிய இடத்திலேயே நிற்கிறோம்.
ஒருகணம் நின்று நம்மை நாமே திரும்பி பார்ப்பதில் என்ன தயக்கம்? அப்படி பார்க்கும்போது நமது தவறுகள் புலப்படும். சுயவிமர்சனம் மட்டுமே இப்போதைக்கு கைகொடுக்கும். படைப்பாளிகளின் கடமை தவறுகளை இனம் காண்பதும், அவற்றைக் களைவதும் தான்.
இன்று சூழல் மாறியிருக்கின்றது. புலிகளை வென்று விட்டோம் என கூப்பாடு போடும் அரசாங்கம் இனியும் மக்கள் மீதான் தன் பொறுப்புகளை தட்டிக் கழிக்க முடியாது. ராணுவத்தை மீளப்பெறுவதும், மக்களை மீள்குடியேற்றம் செய்வதும், அடிப்படை வசதிகளை செய்துக் கொடுப்பதும், சட்ட ஒழுங்கை நிலைநிறுத்துவதும், பொருளாதார நிலைகளை சீருக்கு கொண்டு வருவதும், அபிவிருத்திகளை மக்கள் கண்ணோட்டத்தோடு செய்வதுமான கடப்பாடுகள் எங்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கத்திற்கு உண்டு. ஜனநாயக ரீதியாக பல படிகள் இறங்கிவர வேண்டிய கட்டாயத்தை அரசாங்கத்திற்கு ஏற்படுத்த வேண்டும், அதுவே மாற்றங்களுக்கு வழிவகுக்கும். முற்றுமுதலான மாற்றத்தையும், அதிகாரப்பரவலையும் சாத்தியமாக்க, துரிதமாக்க இலக்கிய சந்திப்பு போன்ற உரையாடல் களங்கள் உதவும்.
அப்படியென்றால் தமிழர்களின் அரசியல் வருங்காலம் “ஈழம்” இல்லையா? தமிழ்நாட்டில் மிகச் சமீபத்தில் கூட மாணவர் போராட்டங்கள் அந்தக் கோரிக்கையைத் தானே முன்வைத்தன?
தமிழகத்திலிருப்பவர்கள் யதார்த்ததைப் புரிந்துக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் கடந்த இருப்பத்தைந்து ஆண்டுகளாக எண்ணற்ற ஈழ ஆதரவுப் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. அவற்றால் எங்களுக்கு சிறு பயன் கூட இல்லை. ஈழத்தமிழர்களுக்கான அடிப்படை உரிமைகளைக் பெற்றுத்தருவதில் கூட உதவவில்லை. இனியும் எத்தனைப் போராட்டங்கள் நடத்தினாலும் எமக்குப் பயன் தரப்போவதில்லை. சொல்லப்போனால் நெருக்கடிகளையே தருகிறது.
நாங்கள் தமிழகத்திலுள்ள தமிழ்த் தேசிய கடும்போக்காளர்களைப் போல பவுத்த துறவிகளையும் சிங்கள கலைஞர்களையும் மாணவர்களையும் உதைக்க விரும்பவில்லை. அவர்களுடன் உரையாடவே விரும்புகிறோம்.
ஈழத்தமிழர் பிரச்சினையை தமிழகத்து அரசியல் கட்சிகளும், ஊடகங்களும், சினிமாக்காரர்களும் தங்கள் பிழைப்புக்குத்தான் பயன்படுத்தி வருகிறார்கள். குற்றவுணர்வென்ற பெயரில் நடக்கும் தமிழகத்தின் பொருத்தமற்ற போராட்டங்கள் சுத்த ஏமாற்று நாடகங்கள்.
தூரத்து தண்ணி ஆபத்துக்குவாத கதை தான்.
இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் வருங்காலம் இன்றைய சூழலில் சனநாயக அடித்தளத்தை உருவாக்குவதிலும், அதை வளர்த்தெடுப்பதிலும் தான் இருக்கிறது. நாங்கள் வரலாற்றில் விட்ட தவறுகளை மீள்பார்வை பார்ப்பதில் தான் அரசியல் முன்னேற்றம் சாத்தியம். நேர்ந்துவிட்ட போர்க்குற்றங்களுக்கான நீதியைக்கூட அந்தவகையில் மட்டுமே வெல்ல முடியும். கடும்போக்குகளுக்கான காலம் முடிந்தது. பகை மறப்பும், புதிய பாடங்களை படிப்பதும், நல்லிணக்கமும், பல்நோக்கும், உரையாடலும் மட்டுமே சிதைந்துப் போயிருக்கும் எம் சமூகத்திற்கான நம்பிக்கை பாதை.