மாதவிடாய் என்பதால் ‘ஏ’ சர்டிஃபிகேட்!- சர்ச்சையில் மத்திய தணிக்கைக் குழு

https://www.vikatan.com/news/india/92441-phullu-a-film-on-mensuration-taboos-gets-a-from-cbfc-without-even-being-watched-by-the-review-committee.html

மாதவிடாய் பற்றி பேசினால் அந்தத் திரைப்படம் ‘ஏ’ சான்றிதழ் பெறவேண்டுமா? கவிஞர் மற்றும் திரைப்பட இயக்குநர் லீனா மணிமேகலை கூறுகையில், “கேரளா சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிட இருந்த மூன்று படங்களை மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் தடையே செய்தார்கள். சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையாகும் படங்களைத் தடுக்க அவர்களுக்கு எவ்வித அனுமதியும் இல்லை, ஆனால், அவர்களால் தடை செய்ய முடிகிறது. அதனால், இந்த படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்திருப்பதில் ஒன்றும் அதிசயமே இல்லை. முன்பெல்லாம் இயக்குநர்கள் திரைப்படம் எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என்றுதான் யோசிப்பார்கள், தற்போதைய சூழலில் எப்படியெல்லாம் எடுத்தால் படத்தை வெளியிட முடியும் என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். அதிகாரம், கலையைக் கொலை செய்வது நேரடியாகவே நடக்கிறது. அதீத வன்முறை இருக்கும் படங்களுக்கு யூ சான்றிதழ் தரப்படுகிறது. ஆனால், மக்களுக்குச் சென்று சேர வேண்டிய படங்கள் ‘ஏ’ சான்றிதழ் பெற்று கிடப்பில் போடப்பட்டு விடுகின்றன. பனோரமா விருதுபெற்ற திரைப்படங்களைத் தூர்தர்ஷன் பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிற சட்டம் இருக்கிறது. ஆனால், என் ‘செங்கடல்’ திரைப்படத்தைத் தூர்தர்ஷன் பெற்றுக்கொள்ளவில்லை காரணம் அது ‘ஏ’ சான்றிதழ் பெற்றதுதான். சமூக அக்கறையில் வெளிவரும் எந்தக் கலை வழி ஊடகத்தையும் காயடிக்கிறார்கள். மோடியின் அடிமை என்று தன்னை வெளிப்படையாகவே அறிவித்துக் கொண்டவர்தான் தற்போது தணிக்கை குழுவில் இருக்கும் பஹ்லஜ் நிஹ்லானி, உண்மையான கலை மற்றும் சினிமா ஆர்வம் மிக்கவர்கள் ஒன்றிணைந்து அவரைப் பதவி விலகச் செய்ய வைக்க வேண்டும், CBFC என்ற காலனிய அரசு தணிக்கை இயந்திரத்தின் எதேச்சதிகாரத்தைச் செயலிழக்க செய்ய வேண்டும். இல்லையெனில் இது போன்ற பிரச்சனைகள் தொடர்ந்தபடிதான் இருக்கும்” என்கிறார்