
சைபர் க்ரைமை கண்டிக்கிறேன்; ஜோதிமணிக்கு ஆதரவு #ISupportJothimani
31/12/2016
லீனா மணிமேகலை, எழுத்தாளர்:
ஜோதிமணியின் மீது நடந்திருக்கும் சைபர் பாலியல் தாக்குதலை கண்டிக்கிறேன். ஆனால் இது முதல் தடவையல்ல. சமூக அரசியல் கருத்துக்களை சுதந்திரமாகப் பதிவிடும் பெண்களை பாலியல் ரீதியாகப் பலாத்காரம் செய்யும் தாக்குதல் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இடது, வலது, தேசியவாதிகள் என அனைத்து சித்தாந்த ரவுடிகள் மட்டுமல்லாது எழுத்தாளர்கள், கவிஞர்கள், செயல்பாட்டாளர்கள், கார்டுனிஸ்டுகள், என அறியப்பட்டவர்களின் “ஆண்மை” ஒன்றுசேரும் புள்ளி பாலியல் வசவு.
தேர்ந்தெடுத்தவர்களுக்கு மட்டும் கூக்குரல் போடாமல், தங்களுக்கு உவப்பில்லாத அரசியல் கருத்துள்ள பெண்கள் தாக்கப்படும்போதும் எல்லோரும் ஒன்றுபட்டு எதிர்ப்பு தெரிவித்தாலன்றி, இந்த வன்முறை நிற்காது. மொட்டை சுவரில் அமர்ந்து விசில் அடிப்பவர்கள், நோ சொல்லும் பெண் மீது ஆசிட் அடிப்பவர்கள், கத்தியால் குத்துபவர்கள் தான் முகநூல் டிவிட்டர் சுவர்களிலும் பொறுக்கி கொண்டிருக்கிறார்கள். இதில் இன்டலக்சுவல் ஆண்களும் விதிவிலக்கல்ல. ஈ ஓட்டிக் கொண்டிருக்கும் சைபர் செல்களும் சைபர் சட்டங்களும் கடுமையாக்கப்பட்டால் ஒருவேளை இந்த வக்கிரத்தை ஒடுக்கலாம். வன்முறையாளர்கள் தொடர்ந்து தில்லாக இயங்குவதற்கு காரணம் நமது கலாசாரத்திலேயே ஊறியிருக்கும் வன்முறை தான். “அடக்கி வாசிக்கலாம்ல!!” “நாய்ங்க குலைச்சிட்டு தான் இருக்கும் அதுக்கெல்லாம் பயப்படலாமா?!” என்று பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இலவச அட்வைஸ் மட்டும் எப்போதும் கிடைக்கும். ஆனால் வன்முறையாளர்களை நோக்கி எல்லா சுட்டு விரல்களும் அறிவுரைகளும் பாரபட்சமில்லாமல் நீளுமா என்றால் கேள்விக்குறி தான். மேற்கில் இருப்பது போல் இங்கே கிடுக்கிப்பிடி பிடித்தால் நம்மூரில் கூடுதல் சிறைகள் தான் கட்ட வேண்டி வரும்.