அவள் காதலிக்கிறாள் – கவிதைகள்

நன்றி – ஆனந்த விகடன்

1.

எட்டிவிடும் தூரம் தான்
மேசையின் மறுபக்கம் அமர்ந்திருந்தாய்
சுவரெல்லாம் சன்னல்கள் கொண்ட அறை அது
மஞ்சள் திரைச்சீலைகளில் கசிந்த மாலை சூரியன்
உன்னை ஒளியால் வரைந்த கோட்டோவியமாக்கியது
நீ அணிந்திருந்த நீல நிற சட்டையின் நூலாக
என் இதயம் நெசவுத்தறியில் சுற்றிக் கொண்டிருந்தது
உன் உதடு பிரிந்து மூடுவதை இமை கொட்டாமல் பார்த்திருந்தேன்
நேர்பார்வையில் ஆழ்கடல் தாவரங்கள் நெளிந்தன
வார்த்தைகள் எதுவும் என் காதில் விழவில்லை
காற்றில் சிகை ஒரு கனவுபோல அசைந்தது
ஏதோ நினைத்துக்கொண்டு லேசாய் சிரித்தாய்
அப்படியே அள்ளி அணைத்துக்கொள்ளலாமென
மனம் அடித்துக் கொண்டதில்
தவற விட்டுவிடுவோமென அஞ்சி
இரண்டு கைகளாலும் கோப்பையை தாங்கிப்பிடித்து
தேநீரை அலுங்காமல் பருகினேன்.

2.

காத்திருக்கிறேன்
காத்திருக்க நேரமே இல்லாதவள் போல
காட்டிக்கொள்ள செய்யும் முயற்சிகளில்
பெரும்பாலும் தோற்றுப்போகிறேன்
சந்திப்பின் ஒரு நொடி கூட
நழுவ விடக்கூடாதென்பதில்
பதட்டமாக இருக்கிறேன்
திட்டமிட்ட நேரத்திற்கு முன்பே வருகை தந்து
திட்டமிட்ட இடத்திற்கு சற்று வெளியே உலாத்துகிறேன்
நாளும் பொழுதும் ஒத்திகை
பார்த்ததையெல்லாம்
காத்திருக்கும் கணங்களில்
மறந்துப்போய் விடுவது எப்படி
என்பதறியாமல்
என்னையே நொந்துக்கொள்கிறேன்
கைகளும் கால்களும்
வார்த்தைகளும் பார்வைகளும்
கூந்தலின் அசைவும்
உடையின் சுருக்கங்களும்
அரும்பும் வியர்வையும்
என்னுடையதே ஆயினும்
என் சொல்பேச்சு கேட்பதே இல்லை
சந்திப்பிற்குப் பிறகும்
சந்தித்த இடத்தை விட்டு அகல முடிவதில்லை
எப்போதும் காத்திருக்கிறவளாகவே இருக்கிறேன்.
அவள் காதலிக்கிறாள்.

லீனா மணிமேகலை