
“துருக்கி ராஜா” கவிதை
தடத்தில் வெளிவந்த “துருக்கி ராஜா” கவிதைகள் வாசித்துவிட்டு யாராவது தொலைபேசிக் கொண்டே இருக்கிறார்கள். 2017-ல் சிச்சிலி கவிதை தொகுப்பு வெளிவந்த பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாய் மிகச்சில கவிதைகளை மட்டுமே எழுதினேன். எனக்கு எப்போதும் என் மனமுடைகள் மொழியை ஆறப்போடும். காத்திருக்க செய்யும். காத்திருப்பின் வலியும் சுகமும் ஆற்றின் கீழ் கிடக்கும் கூழாங்கல்லாய் மொழியைப் பதப்படுத்தும் என்பது என் நம்பிக்கை.
கவிதைகளுக்கு “துலுக்க ராஜா” என்று தான் பெயரிட்டிருந்தேன். கவிஞர் வெய்யில் தலைப்பு வீண் சர்ச்சைகளைக் கிளப்பும் என சொன்னார். “துருக்கி ராஜா” என மாற்றிக்கொடுத்தேன். கி.ரா வின் நாவல்களை வாசித்தவர்கள் துலுக்க ராஜாவை கடந்து வந்திருப்பீர்கள். அவர் நாவல்களில் துலுக்க ராஜா எப்போதும் வில்லன்.
நான் முதன்முதலில் துலுக்க ராஜாவை சந்தித்தது எங்கள் ஊர் திரெளபதி அம்மன் கோவிலில் தான். என் பெரிய மாமா வருடா வருடம் திரெளபதி அம்மனுக்கு தீ மிதிப்பார். அவர் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் என்பது அவருடைய இன்னொரு பக்கம். திரெளபதி கோயிலின் வாயிலில் துலுக்க ராஜா வீற்றிருப்பார். அவருக்கு என்ன காவல் வேலையா என்று கேட்டபோது எனக்கு சொல்லப்பட்ட கதை சுவாரஸ்யமானது. ஏதோவொரு போரில் திரெளபதி கோயிலில் இருக்கும் அம்மன் சிலைக்கு ஆபத்து வந்தபோது துலுக்க ராஜா தான் காப்பாற்றினாராம். அதிலிருந்து அவரை கோயிலிலேயே காவலுக்கு வைத்துவிட்டார்களாம். ஆயிரம் வருடங்களுக்கு முன் நாயக்கர்களும் முகலாயர்களும் ஆண்ட போது நடந்த கதை இது. எந்த மோடி- அமித்ஷா வந்தாலும் எங்கள் பந்தங்களை மாற்ற முடியுமா என்ன? இந்த உலகத்தின் கடைசி காகம் அழியும் வரை எங்கள் கதைகளையும் உறவுகளையும் கரைந்துக் கொண்டே தான் இருக்கும்.