Chichili, சிச்சிலி

கால உறைவிலிருந்து எழுந்து முன்னே வந்ததுபோல நவீன கவிதையின் பாவனைகளையும் முற்றாக உதறி நம் காலத்தின் காதல் கவிதைகளை எழுதியிருக்கிறார் லீனா மணிமேகலை.காதல் உள்ளிட்ட சமகால மனித உறவு நிலைகள் இதுவரையான கவிதையின் சட்டகங்களுக்குள் பொருந்தவியலா அளவுக்குச் சிக்கலை அடைந்துவிட்டனவோ என்ற ஐயம் உண்டு. அந்த வகையில் லீனாவின் இந்த நூறு கவிதைகள் ஒரு தாவலை நிகழ்த்தியிருக்கின்றன. இக்கவிதைகளில் காதல் தன் ஆதிக் குணம் மாறாத பெரு வேட்கையாகவே நிகழ்கிறது. ஆனால் பிரமாணிக்கமாயிருப்பது இங்கு ஒரு பொருட்டல்ல,வலிகளும் துரோகங்களும் பிரிவுகளும் கூடத்தான்.யதார்த்த உலகின் தீவிரமான துயர்களுக்கு மெய்நிகர் உலகின் இளைப்பாறலை,ஆற்றுப்படுத்தலை நோக்கித் தள்ளப்பட்டிருக்கும் இருபத்தியோராம் நூற்றாண்டின் துவக்கப் பத்தாண்டுகளின் மனிதனது உறவு நிலைகள், குறிப்பாக ஆண்-பெண் உறவு, கடும் சிக்கலான வடிவங்களை அடைந்திருக்கையில், அவற்றை நோக்கிய புரிதலை முன்வைத்த கவிதைகளாகவும் லீனாவின் இந்தக் கவிதைகளைப் பார்க்கலாம். டி. எஸ். எலியட்டின் வரியொன்றில் வருவதைப் போல நினைவும் இச்சையும் தீவிரமாகக் கலந்து நிற்கும் வெளியாக இக்கவிதைகள் இருக்கின்றன. மொழியும் வெளிப்பாட்டின் தீர்க்கமும் பாடுபொருட்களும் இக்கவிதைகளை நம் காலத்துக் காதலின் உன்னத சங்கீதங்களாக (Psalms) எண்ண வைக்கின்றன.

– கவிஞர் அசதா
(ஜூலை 2016)

நற்றிணை பதிப்பகம்
விலை 100

பிரதிகளுக்கு, karuvachyfilms@gmail.com என்ற மின்முகவரிக்கு அஞ்சல் செய்யவும்