படைப்பும் தடையும்

25/04/2017

லீனா மணிமேகலை, அந்திமழை

ஆங்கிலேயர் காலத்தில் இருந்த தணிக்கை முறைகளின் நீட்சி தான் சுதந்தர இந்தியாவில் சென்சார்போர்டு என்ற வடிவில் தொடர்ந்தது.  எண்பதுகளின் பிற்பகுதியில்தான் சென்சார் போர்டு எதையும் தணிக்கை செய்யக்கூடாது, படங்களில் எந்த வெட்டும் கொடுக்கக்கூடாது என்று விதிமுறையில் மாற்றம் செய்தார்கள். அது வெறும் சான்றிதழ் மட்டுமே தரக்கூடிய அமைப்பாக மாற்றப்பட்டது. சட்டப்படி கலைஞர்களுக்கு கருத்துரிமை வழங்கப்படுகிறது. அத்துடன்  பார்வையாளர்களுக்கு தணிக்கை இன்றி படங்கள் பார்க்கும் உரிமையும் பாதுகாக்கப்படவேண்டும். அதனால்தான் இப்போது சென்ஸார் போர்டை எதிர்த்து நீதிமன்றம் செல்லும் எல்லா இயக்குநர்களுமே வெற்றிபெறமுடிகிறது. அரசியல்சாசனத்தின் 19 ஆம் சட்டப்பிரிவு இதற்கு வழிவகுக்கிறது. ஆனால் என்ன நடக்கிறது? ஆட்சிகள் மாறும்போது பிராந்திய சென்சார் போர்டுகளில் அரசியல்ரீதியில் நியமனங்கள் நடைபெறுகின்றன. இவர்களுக்கும் சினிமாவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. மத்திய சென்சார்போர்ட் தலைவர் பங்கஜ் நிஹ்லானி நேரடியாக மோடியின் கையாள் என்று தன்னைச் சொல்லிக்கொண்டார். அனைவருமே தங்கள் அரசியல் மாஸ்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக செயல்படுகிறார்கள். இதில் யாருமே படைப்பாளியைப் புரிந்துகொண்டவர்கள் கிடையாது. இது ஏன் பூதாகரமாக வெடிக்கவில்லை என்றால் நமது திரைப்பட உலகம் வணிகப் படங்களால் நிறைந்திருக்கிறது. அவர்கள் வெளியீட்டுக்கு நேரம் குறித்துவிட்டு தணிக்கைச் சான்றிதழ் பெறச் செல்லும்போது, பல இடங்களில் வெட்டச் சொல்கிறார்கள். இதில் ஊழல், பேரங்கள் நடைபெறுகின்றன. வணிகப்படம் எடுத்தவர்கள் தணிக்கைச் சான்றிதழ் பெறுவதையே பெரிய சாதனையாக எண்ணி விளம்பரங்கள் கொடுப்பதையும் நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். இந்தமாதிரி போக்கு இருக்கும் ஆட்கள்தான் சினிமாவில் இருக்கிறார்கள். அறுபது வெட்டுகள் கொடுப்பதும் கொஞ்ச காசு உள்ளே போனதும் அது நாற்பதாகக் குறைவதும் நடக்கிறது. இல்லையெனில் கபாலி போன்ற படத்துக்கு யு சான்றிதழ் வாங்க முடியுமா? அமெரிக்காவிலேயே அது யு/ஏ தான்.

இந்த சமயத்தில் சந்தைக்காக படம் எடுக்காத, சுதந்தரமான திரைக்கலைஞர்களும் இதே சென்சார் போர்டைத்தான் எதிர்கொள்ளவேண்டி இருக்கிறது. என்னுடைய எல்லா படங்களுமே பிரச்னையைத்தான் எதிர்கொண்டன. சண்டை போட்டுத்தான் சான்றிதழ் பெறவேண்டி இருக்கிறது. செங்கடல், இப்போது  எடுத்த ஈஸ் இட் டூமச் டு ஆஸ்க் வரைக்கும் பிரச்னைதான். இந்த படத்தில் திருநங்கைதான் பாத்திரங்கள். சென்சார் ஆட்கள் இது அவனா அவளா என்றே தெரியவில்லை. இதை எப்படி குழந்தைகள் பார்க்க முடியும் என்று கேட்டார்கள்.  அவ்வளவுதான் அவர்களின் புரிதல். தரமான பாலின புரிந்துணர்வு அவர்களுக்கு இருந்திருக்குமேயானால் இன்றைக்கு ஒரு படமும் கூட வெளிவந்திருக்காது. கிட்டத்தட்ட எல்லா படமுமே பெண்களை இழிவு படுத்துவதாகத்தானே இருக்கின்றன?

எந்த சென்ஸிடிவிட்டியும் இல்லாத ஆட்களிடம் தான் நாம் முட்டிமோத வேண்டியிருக்கிறது. நான் முதல்முதலில் என்னுடைய பறை படத்தை சென்ஸாருக்கு எடுத்துச் சென்றேன். இதற்கு முன்னால் நான் எந்த சான்றிதழும் வாங்கியது கிடையாது. ஏன் போனேன் என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

முன்பெல்லாம் திரைப்பட விழாக்கள், பிலிம் சொசைட்டிகளில் படம் திரையிடலுக்கு எந்த சென்சாரும் வேண்டியதில்லை. ஆனால் பாஜக முதல்முதலில் ஆட்சிக்கு வந்த  காலத்தில் திரைப்பட விழாக்களில் கலந்துகொள்ளும் படங்களுக்கு சென்ஸார் தேவை என்று அறிமுகப்படுத்தப்பட்டது. திரைப்படவிழாக்கள் என்பவை படைப்பு சுதந்தரத்துக்கானவை. அங்கும் தணிக்கையா என்று 300க்கும் மேற்பட்ட சுதந்தர படைப்பாளிகள் ஒன்று சேர்ந்து இந்த விதிக்கு எதிராகப் போராடி, இந்த விதியை எடுக்க வைத்தார்கள். ஆனால் இன்றும் தணிக்கைச் சான்றிதழ் இல்லாவிட்டால் இந்தியன் பனோரமாவுக்கு, தேசிய விருதுக்குப் படம் அனுப்ப முடியாது. இந்தியன் பனோரமாவில் தேர்வானால் தேசிய திரைப்பட ஆவணக்காப்பகத்தில் பாதுகாக்கப்படும். அவற்றை அரசுத் தொலைக்காட்சி வாங்கிக்கொள்ளும். இதெல்லாம் திரைப்படக் கலைஞர்களுக்கு பொருளாதார ரீதியில் மிக முக்கியமான அம்சங்கள். ஒரு கட்டம் வரை இந்தியன் பனோரமா தான் தேர்வான படங்களை வெளிநாடுகளில் நடக்கும் விழாக்களுக்கு அனுப்பி வைப்பார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை. இயக்குநர்களே நேரடியாக அனுப்பிக்கொள்ளலாம். இணைய வசதி அவ்வளவு மாற்றங்களை உருவாக்கி உள்ளது. ஐந்தாண்டுகளுக்கு முன் செங்கடல் எடுத்தபோதுமே கூட நான் கொரியர்தான் அனுப்பிக்கொண்டிருந்தேன். இப்போது இணையம் மூலம் அனுப்பினால் போதும்.  ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் பனோராமா மிக முக்கியமானதாக இருந்தது. அதற்கும் படம் அனுப்ப சான்றிதழ் கேட்டார்கள். அதாவது சுதந்தரமான படைப்பாளியாக இயங்கமுடியாமல் இப்படி கட்டுப்பாடுகள் விதித்து வைத்திருந்தார்கள். அப்புறம் இன்றுவரை 35 எம் எம் பிரிண்டை வெளிநாட்டுக்கு அனுப்பவேண்டும் என்றால் சென்ஸார் சான்றிதழ் இல்லாமல் அனுப்பமுடியாது என்ற அபத்தமான விதி உள்ளது. ஆனால் இப்போது இணையம் மூலமாக முழுப்படத்தையும் வெளியே அனுப்பலாம். இந்த சான்றிதழ்கள் எதுவும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நமது நாட்டுக்குள் உங்களுக்கு அங்கீகாரம் வேண்டும் என்றால் உங்களுக்கு சான்றிதழ் முக்கியம்.

இதுவரைக்கும் தேசிய விருதுக்கு என்னுடைய ஒரு படத்தையும் அனுப்பவில்லை. என்னுடைய Goddesses படம் மும்பை சர்வதேச திரைப்பட விழாவில்  தங்கப்பதக்கம் வாங்கியது. அதைக்கூட நான் அனுப்பவில்லை. ஏனெனில் சான்றிதழ் வாங்கவேண்டும். செங்கடலுக்கு வாங்கியும் கூட அந்த சான்றிதழ் தயாரிப்பாளர் பெயரில் வாங்கினோம்.  தயாரிப்பாளர் அதை அனுப்பவே இல்லை!

மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் சான்றிதழ் தேவையில்லை என்று போராடி வெற்றி பெற்றதால் அதற்கு அனுப்ப முடிந்தது.

படம் சென்ஸார் போர்டுக்குப் போனால் அதில் பல வெட்டுகள் கொடுப்பார்கள். அதைச் செய்யமுடியாது என்றால் மறுபரிசீலனை. அதற்கு நாம்தான் பணம் கட்டவேண்டும். இவர்களின் கோமாளித்தனத்துக்கு நாம் செலவழிக்கவேண்டும். இங்கிருந்து மத்திய டிரிபியூனல் போகலாம். அங்கே வழக்கறிஞருக்கு நாம்தான் பணம் கொடுத்து வாதாடவேண்டும். ஆனந்த பட்வர்த்தன் பொன்றவர்கள் இப்படித்தான் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த ட்ரிபியூனலில் ஜெயிக்கவில்லை என்றால் உச்சநீதிமன்றத்தில் போய் வாதாடவேண்டும். செங்கடல் படத்துக்கு முதலில் இங்கே தடை கொடுத்துவிட்டார்கள். எங்கேயும் திரையிட முடியாது. நான் இங்கே மறுபரிசீலனைக் குழுவுக்கெல்லாம் போகவில்லை. அதற்கே 25000 ரூபாய் செலவாகிறமாதிரி இருந்தது. எனவே நேரடியாக ட்ரிபியூனலுக்கே சென்று வழக்காடினோம்.  ட்ரிபியூனலில் சென்ஸார் போர்டுக்கு டைரக்‌ஷன் கொடுத்தார்கள். இதை எடுத்துக்கொண்டு திரும்ப சென்னைக்கு வந்து, டிரைபியூனல் கொடுத்த விதிகள் படி அமைக்கப்படும் சிறப்புக் குழுவுக்கு போட்டுக் காண்பித்துதான் சான்றிதழ் வாங்க முடியும். இது பெரிய வேலை. அப்படித்தான் செங்கடலுக்கு வாங்க முடிந்தது.

இப்போதைக்கு நாங்கள் சொல்வது என்னவென்றால் சென்ஸார் போர்ட் என்பது குப்பையில் தூக்கிப்போடவேண்டிய அமைப்பு என்பதுதான். சுதந்தரமான ஓர் அமைப்பு, அரசால் கட்டுப்படுத்தமுடியாத ஓர் அமைப்பு சான்றிதழ் கொடுக்கலாம்.  இந்த சான்றிதழ் விவகாரத்திலும் ஒரு சிக்கல் உள்ளது. செங்கடலுக்கு ஏ கொடுத்தார்கள். ஏனெனில் அந்த படத்தில் கருணாநிதி, ஜெயலலிதா போன்ற வாழும் தலைவர்களின் பெயர்கள் சொல்லப்படுகின்றன என்று காரணம் சொன்னார்கள்.  நான் இதையும் எதிர்க்கலாம். அதற்கெல்லாம் எனக்கு சக்தி இல்லை என்பதால் விட்டுவிட்டேன்.ஏன் இந்த சான்றிதழ் முக்கியம் என்றால் ஏ சான்றிதழ் இருக்கும் படங்களை பனோரமாவுக்கு தேர்வானாலும் தூர்தர்ஷனில் வாங்க மாட்டார்கள். தூர்தர்ஷன் கொடுக்கும் பணம், அதற்கு  இருக்கும் பார்வையாளர் எண்ணிக்கை ஒரு கலைஞருக்கு மிக முக்கியம்.

முதல் உலக நாடுகளில் இங்கிருப்பது போல் சென்ஸார் இல்லை. ஒரு சுதந்தரமான கலைஞனின் படத்தில் கடுமையான சொற்பிரயோகம் இருக்குமெனில் அதை வெட்ட மாட்டார்கள். இதில் இப்படி இருக்கிறது என்று டிஸ்கிளைமர் போடுவார்கள். அவ்வளவுதான். ஒரு படைப்பாளி தன் படத்தில் வெட்டுவிழுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. நீங்கள் ஒரு நாவல் எழுதுகிறீர்கள். பதிப்பாளர் அதை வெட்டிவிட்டுத்தான் பதிப்பிப்பேன் என்றால் ஏற்றுக்கொள்ள முடியுமா? அதேதான். ஆனால் இந்த தார்மீகக் கோபமே இங்கிருக்கும் படைப்பாளிகளுக்கு இல்லையே..

Lipstick Under My Burkha என்று ஒரு படத்துக்கு தடை கொடுத்தபோது நீதிபதி, ‘ ஏன் இப்படி நடந்துகிறீங்க.. உங்கள் வேலை ஏ வா யு வான்னு சான்றிதழ் கொடுக்கிறதுதானே.. ஏன் இப்படி தலைவலி கொடுக்கிறீங்கன்னு’’ வெளிப்படையாகவே கேட்டிருக்கிறார்.

 

இதுவரை நாம் பேசியது  சட்டத்துக்கு உட்பட்ட தணிக்கை. இதை எதிர்த்துப்போராட நமக்கு வழிகள் உள்ளன. நம் உரிமைகளுக்கு சட்டப்பாதுகாப்பு இருக்கிறது. உச்சநீதிமன்றம் வரை போகலாம்.ஆனால் இதற்கு வெளியே கும்பல் தலையிட்டுச் செய்யும் தணிக்கை என்று ஒன்று இருக்கிறது. இதில் யாரையும் எதிர்த்துப் போராட முடியாது. யாரை எதிர்க்கிறோம் என்றே தெரியாமல் போராடவேண்டியிருக்கிறது. இடதுசாரி அமைப்புகளும் அப்படித்தான். ஸ்டாலினியவாதிகளாக இருப்பதால் இவர்களுக்கும் புரிவதில்லை. தணிக்கை என்பது ஓர் அச்சுறுத்தல் அதை எதிர்க்கவேண்டும் என்று இவர்கள் நினைப்பதில்லை.

யாராக இருந்தாலும் உதாரணத்துக்கு ஜோ டி குரூஸ் நூலுக்கும் ஆதரவாக இருக்கவேண்டும். பெருமாள் முருகன் நூலுக்கும் ஆதரவாக நிற்கவேண்டும். ஆனால் தன்னுடைய கொள்கைக்கு ஆதரவாக இல்லாதவர்களைக் கைவிட்டுவிடும் போக்குதான் நிலவுகிறது. இடதுசாரி எழுத்தாளர்களுக்கு மிகவலிமையாக ஆதரவு தெரிவிக்கும் இயக்கங்கள், வலதுசாரி எழுத்தாளனை அம்போவென விட்டுவிடுவார்கள். அவனது படைப்புரிமைக்கும் குரல் கொடுக்கவேண்டும். அதுதான் உண்மையான படைப்புச் சுதந்தரம். தமிழ் தேசிய, ஈழ ஆதரவாளர்களிடமும் இதே கருத்துரிமை எதிர்ப்பு மனநிலைதான் உள்ளது.

விஸ்வரூபம் படத்தில் உங்களுக்குப் பிரச்னை என்றால் அதை விமர்சனத்தின் மூலம் அணுகுங்கள். டேம் 999 படத்தில் பிரச்னை என்றாலும் அப்படித்தான் அணுகவேண்டும்.

படைப்பாளிகளுக்கு அரசு தடை விதித்தால் சட்டப்பாதுகாப்பு பெறலாம். போராடலாம். ஒரு இயக்கம் அந்தப் படத்தைப் போடக்கூடாது என்றால் தியேட்டர்களில் போடமாட்டார்கள். இதையாரும் எதிர்கொள்ள முடியாது. வித் யூ வித்தவுட் யூ சிங்களப் படம் வந்தபோது, சிங்கள முன்னாள் ராணுவவீரன் தமிழ்ப்பெண்ணை திருமணம் செய்வதாக எப்படி படம் எடுக்கலாம் என்று இரண்டு திரை இயக்குநர்கள் சீமானும் வ. கௌதமனும்தான் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அந்த படத்தை திரையிட அனுமதிக்கவில்லை.

என்னுடைய    ‘ஒயிட் வேன் ஸ்டோரீஸ்’ படத்துக்கும் இதேதான் நிலை. போலியான பெயரில் அதற்கு எதிராக அறிக்கை வெளியிட வைத்தார்கள். வதந்திகளைப் பரப்பினார்கள். உங்களுக்கு உகந்த கருத்துகளைச் சொல்லவில்லையென்றால் அந்த படைப்பாளியைக் காலி செய்துவிடுவார்கள். அந்த படத்தை ஏழு முறை திரையிடவிடாமல் தடுத்தார்கள். நான் வெறுத்துப்போய்விட்டேன். தமிழ் தேசியம் பேசுகிறவர்கள், முற்போக்கு இயக்கங்கள் எல்லோருக்குள்ளும் தணிக்கைவாதிகள் இருக்கின்றனர். அதைக் களையாமல் இங்கு வீரியமான படங்கள் வரவே முடியாது. இன்றுவரை யூதர்கள் படுகொலை பற்றி படங்களில் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் லட்சக்கணக்கான தமிழர்கள் இடம் பெயர்ந்திருக்கிறார்கள். கடைசிப்போரில் லட்சம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த துயரம் பற்றி எத்தனைப்  படங்கள் வந்திருக்கவேண்டும்? ஆனால் என்ன வந்திருக்கிறது? ஒரு வீரியமான படைப்புமே இல்லை. எதுவுமே வரவில்லை. இதற்கான மொத்த பாராட்டுமே தமிழ்த் தேசியவாதிகளையே சாரும். இவர்களின் ‘கும்பல்’ நாயகமே காரணம்!இவர்கள் இந்தப் படங்களைப் பார்க்கவே மாட்டார்கள். பார்க்காமலேயே எதிர்ப்பார்கள்.  அப்படியே கும்பலாகச் செயல்பட்டு அந்த படங்களை திரையிடவிடாமல், அதைப் பற்றி எழுதவிடாமல் தடுத்து சத்தமே இல்லாமல் அழித்துவிடுவார்கள்.! எப்போதுமே ஒரு படைப்பாளி பாதுகாப்பு மனநிலையிலேயே இருக்கவேண்டும் என்று ஒரு சமூகம் வைத்திருக்கிறது என்றால் அது என்ன சமூகம்? வானத்திலிருந்து எந்த படைப்பாளியும் குதிக்க முடியாது. இந்த சமூகத்திலிருந்துதான் வர முடியும்.

https://youtu.be/aeDjbLOrP6M?si=DDQGjuoBOjWM1slK

சுதந்தரமான படைப்பாளிகளைப் பாதுகாப்பதும் சமூகத்தின் பொறுப்பும்தான். அப்படி ஒவ்வொரு படைப்பாளியுடனும் கொள்கை சார்பு பார்க்காமல் நிற்கவேண்டும். இதுவே படைப்பியக்கத்துக்கு முக்கியமானது.