
டெகீலா
நன்றி – விகடன் தடம்
ஓவியம் – மணிவண்ணன்
ஒவ்வொருமதுபானக்கடையிலும் யாரோ ஒருவன்
தன குவளையில் மிச்சமிருக்கும் மதுவை
வெறித்தபடி அமர்ந்திருக்கிறான்
அந்த மதுவில் எல்லாமும் மிதக்கிறது
சொல்லப்படாத காமம், காதலின் துரோகம்
ஈரம் காயாத கலவி, பிரிவில்லாத பிரிவு,
கைவிடமுடியாத வாக்குறுதிகள் என
எல்லாவற்றிலும் ஏறி நின்றுக்கொண்டு
பரிகசிக்கும் ஏக்கங்கள்
நாற்காலி சரிவது போல தோன்றி
அவன் பதறியதில்
குவளை சற்று ஆடி அசைந்துப் பின் தணிகிறது
அவன் விரல்களில் சிந்திய மதுத் துளிகளை
வாஞ்சையுடன் நக்குகிறான்
சுற்றிலும் ஆரவாரித்துள்ள கூட்டத்திடமும்
உயர்த்தப்படும் போத்தல்களின்
பளிங்கு சிராய்ப்புகளிடமும்
தனக்கு எந்த செய்தியும் இல்லை
என்பது போல காதற்று இருந்தான்
காலி கோப்பைகளை அகற்றிக் கொண்டே
புது திரவத்தை நிரப்பும் மதுவிநியோகன்
இழந்த முகங்களை மேசை தோறும்
அவரவருக்கு திருப்பி தந்தபடி அலைந்தான்
நெற்றியில், கண்களின் ஓரத்தில், கன்னங்களில்
தற்காலிகமாக ரேகைகளை
இடம்மாற்றி வைத்திருந்தது மது
தோல்விகளாலும் குற்ற உணர்வுகளாலும்,
தனிரக்கங்களாலும், புகார்களாலும்,
பெருமைகளாலும், அழகாலும்
பருவம் திரும்புதலாலும், கண்ணீராலும்,
கொண்டாட்டங்களாலும், கதைகளாலும்
கோடைகால ஏரியில் கனம் கொள்ளாமல்
பயணிகளை ஏற்றிச்செல்லும் படகு போல
அந்தக்கடை மெல்ல மிதந்தது
யாரோ தருகிறார்கள் யாரோ பெறுகிறார்கள்
யாரோ சுமக்கிறார்கள்
அவரவர் ஆகாசத்தின் அடியில் அவரவர் வீடு
நடப்பின் எந்த நிழலும் படாமல்
அதோ ஒரு மூலையில் காதலர் இருவர்
முத்தமிட்டுக்கொண்டிருக்கிறார்கள்
எனக்கு இனி வேடிக்கை பார்க்க முடியாது
தாகமாக இருக்கிறது
அருகே ஒரு நாற்காலி காலியாக இருக்கிறது
தயவு கூர்ந்து என்னருகில் வந்து அமரவும்
உங்கள் கோப்பையில் ஊற்றுவதற்கு
என்னிடம் நிறைய நனைந்த வார்த்தைகள் உள்ளன
மதுவை விட காட்டமாக எரியும் அவை
எல்லோருக்கும் தெரிந்த ரகசியங்கள் தான்
ஆனாலும் கவனமாய் கேளுங்கள்
நிதானமாய் இருக்கும் போதே சொல்லிவிடுகிறேன்
உங்கள் தோள்களை தற்காலிகமாவது தாருங்கள்
தேம்பலுக்குள் நான் மூழ்கிவிடுவதற்குள்
பருகுவதற்கு இன்னும் துளிகள் மிச்சமுள்ளன.
– லீனா மணிமேகலை