
சூரிய கதிர் நவம்பர் 16, குட்டி ரேவதி பேட்டிக்கான எதிர்வினை
நவம்பர் 16 தேதியிட்ட “சூரிய கதிர்” இதழ் என் கவனத்திற்கு வந்தது. குட்டிரேவதி தன் பேட்டியில் உதிர்த்துள்ள எண்ணற்ற அபத்தங்களில்,என் குறித்த கருத்தும் ஒன்று.
377 சட்டப்பிரிவை நீக்குவதைப் பற்றிய உச்சநீதிமன்றத்தின் பரிந்துரை, அதையொட்டி எழுந்துள்ள ஓரினச்சேர்க்கை குறித்த பரவலான விவாதங்கள் பற்றிய கேள்விக்கு எந்த இடத்திலும் குட்டி ரேவதியிடம் நேரடியான பதில் இல்லை. அதை விட்டுவிட்டு ஊடகங்களுக்கு பொறுப்பில்லை, “உலகின் அழகிய முதல் பெண்” கவிதை தொகுப்பில் இருபாலுமை பேசும் லீனா மணிமேகலைக்கு புரிதல் இல்லை என்று அறிக்கை விடுகிறார்.
“ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது தான் இயற்கையின் நியதி”- அட! குட்டிரேவதி இவ்வளவு பெரிய கலாச்சாரவாதியா? “இயற்கை” என்பதற்கு என்ன வரையறை வைத்திருக்கிறார் ரேவதி?குறியும் யோனியும் நேரடியாக உறவு வைத்துக் கொள்வதையா? இயற்கைxசெயற்கை எதிர்வுகளுக்கு குட்டி ரேவதி பரிதாபமாக பலியாகியிருக்கிறார்.
பாலியல் விருப்பங்களும், தேர்வுகளும் அவரவர் சுதந்திரம். பளிச்சென்று சொல்கிறேன், என்னைப் பொறுத்தவரை குறியுடனான புணர்ச்சி என்பதை விட பாலுறுப்புகளை உரசுவதால் உண்டாகும் கிளர்ச்சியே உச்சத்தை தரும். பாலுறுப்புகளை வருடி,முததமிட்டு எழுச்சி ஏற்படுத்தச் செய்வதற்குரிய விரல்களோ, நாக்கோ ஆண் தோழமையுடையதாய் இருந்தால் என்ன? பெண் தோழமையுடையதாய் இருந்தால் என்ன? ஏன் என்னுடையதாகவே இருந்தால் தான் என்ன? எல்லாமே எனக்கு ஒன்றுதான்,விருப்பம் தான். ஆக இருபாலுமை என்பது என் தேர்வு,உரிமை.
சமூகத்தால் மறு உற்பத்திக்காக கட்டமைக்கப்பட்டிருக்கும் பாலுமை ஒற்றைத்தன்மையை மறுதலிப்பதைப் பற்றி சட்டம் வேண்டுமானால் இப்போதுதான் வாய் திறக்கலாம்.மனித இனம் எப்போதுமே பால்சேர்க்கையில் ஓரினச்சேர்க்கை, எதிர்ப்பாலுறவு, சுயப் புணர்ச்சி, இருபாலுமை என்று பன்மைத் தன்மைகளோடு தான் இருந்திருக்கிறது. வரலாற்றுக்கும் முந்தைய குகை ஓவியங்கள் இதற்கு சாட்சியமளிக்கின்றன.
அப்புறம் ரேவதி என்ன சமூக இலக்கிய கமிசாரா?எங்கள் சமூகப் பொறுப்பு, புரிதல் இவற்றுக்கெல்லாம் அவரிடம் சான்றிதழ வாங்க வேண்டுமா? ஆதிக்க சமூகம் திணிக்கும் அத்தனை பொறுப்புகளையும் மீறுவதாலும், கேள்வி கேட்பதாலும் ” பொறுப்பற்றவள்” என்ற பெயரை விரும்பியே சுமக்கிறேன்.இறுதி வரை சுமப்பேன்.
கலாச்சாரத்தை கொட்டிக் கவிழ்க்கும் படைப்பாளிகள்,குறிப்பாக பெண் படைப்பாளிகள் மீது அவசரமாக விழும் குற்ற்ச்சாட்டு “விளம்பரப் பிரியர்” என்பது தான்..”முலைகள்” தொகுப்பு வந்த போதும்,”சண்டைக்கோழி துப்பட்டா” பிரச்சினை வந்த போதும் குட்டி ரேவதியின் மீது அந்த குற்றச்சாட்டு ஏவப்பட்டது. அதையே என் மீதும் ஏவும் ரேவதி கலாச்சாரவாதிகளின் கைக்கூலியாக எப்போது மாறினார்? பகுஜன் சமாஜ் கட்சிக்குப் போய் வந்ததிலிருந்தா?
பார்ப்பனீயத்தோடு கை கோர்த்து ,தலித்துகளுக்காக என்று பேர் பண்ணிக்கொண்டு கேடு கெட்ட அரசியல் செய்யும் தலைமை மாயாவதி,மக்களின் காசையெல்லாம் தன் ஆளுயர சிலைகளாக மாற்றியதைத் தவிர வேறு என்ன செய்தார்? தேர்தல் நேரத்தில் அந்தக் கட்சியில் இணைந்து தனக்கொரு சிலை வைத்துக் கொள்ள முடியாததால் குட்டி ரேவதி அதிலிருந்து வெளியேறினாரா?
ஈழப் பிரச்சனையில் எல்லா படைப்பாளிகளையும் பொத்தாம் பொதுவாக சாடும் இவர், யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில், தன்னை அரசியலாக இணைத்துக் கொண்டு வேலை செய்த தேசியக் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி ஈழம் குறித்து எடுத்த நிலைப்பாடு என்ன என்று கேட்டிருப்பாரா?கேட்டிருந்தால் நமக்கெல்லாம் சொல்வாரா? சமீபத்தில் “இனியொரு” இணையதளத்தில் ஆயுதப் போராட்டத்தை ஃபேண்டசைஸ் செய்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார். குட்டி ரேவதி, குறைந்தப் படசம் ஈழத்திற்கு போய் ஆயுதப் போராட்டத்தில் பங்கு கொண்டிருக்க முடிந்திருக்க வில்லையென்றாலும், இந்தியாவில் நக்சல்பாரி இயக்கத்திலாவது இணைந்து செயல்பட்டிருக்க வேண்டும்.
ஆயுதம் தன் கையில் இருந்தாலும், எதிரியின் கையில் இருந்தாலும் அழிவு அழிவு தான்..
லீனா மணிமேகலை
குறிப்பு : தணிக்கை செய்யப்படாத பிரதி (சூரிய கதிர் ஆசிரியர் குழு வழக்கம் போல தணிக்கையெல்லாம் செய்யமாட்டோம் என்று வாக்குறுதி கொடுத்து எதிர்வினையைப் பெற்றுக் கொண்டு, பதிப்பில் வேலையை காட்டி விட்டார்கள்)