`இது பார்க்கத் தகாத தேவதையின் கதை!” – கொரியாவுக்குச் செல்லும் தமிழ்ப்படம்!

‘பார்க்கவும் தகாதவர்களாக’ வாழப் பணிக்கப்பட்டிருக்கும் புதிரை வண்ணார் சமூகத்தின் பதின்ம வயது பெண்ணின் மறுக்கப்பட்ட வாழ்வையும், கனவையும், காதலையும் பேசியிருக்கிறது ‘மாடத்தி’.

தென்கொரியாவின் பூசான் திரைப்பட விழாவுக்குச் செல்கிறது இயக்குநர் மற்றும் எழுத்தாளர் லீனா மணிமேகலையின் படைப்பில் உருவாகியிருக்கும் மாடத்தி. சாதியப் படிநிலைகளில் தீண்டத்தகாதவர்கள் வரை மட்டுமே அறிந்த தமிழ்ச்சமூகத்தில், பார்க்கவும் தகாதவர்களாக இருக்கும் மனிதர்களைப் பற்றி அறிமுகப்படுத்தும் முதல் திரைப்படம். பலகட்டப் போராட்டங்களுக்குப் பிறகு சென்ஸார் போர்டின் அனுமதியும் பெற்றுவிட்ட நிலையில், திரைப்பட விழாவுக்குத் தயாராகிக் கொண்டிருந்தவரிடம் பேசியதிலிருந்து…

லீனா மணிமேகலை

மாடத்தி திரைப்படம் உருவானதற்கான காரணமும் தற்காலத் தேவையும் என்ன?

காரணமும் தேவையும் கருதி உருவாக்கப்படுவது கலை அல்ல. ஆன்ம உந்துதல் மட்டுமே கலைக்கு வித்தாக முடியும். நான் கேட்டு வளர்ந்த தேவதைக் கதைகளால் உந்தப்பட்டு இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறேன். காலத்தால் உறைந்து நிற்பது கதைகள் மட்டுமல்ல, அக்கதைகள் உருவாவதற்குப் பின்னிருக்கும் அநீதியும்தான் என்பது பெருந்துயரம். சாதி அதிகாரத்தால் கட்டப்பட்டிருக்கும் சமூகத்தின் கடைசி அடுக்கில் ‘பார்க்கவும் தகாதவர்களாக’ வாழப் பணிக்கப்பட்டிருக்கும் புதிரை வண்ணார் சமூகத்தின் பதின்ம வயது பெண்ணின் மறுக்கப்பட்ட வாழ்வையும், கனவையும், காதலையும் காட்சிக்குக் கடத்தியிருக்கும் பிரதியே ‘மாடத்தி’ திரைப்படம்.

யார் இந்த மாடத்தி? மாடத்தி தெய்வ வழிபாட்டுக்கும் இந்தத் திரைப்படத்துக்கும் தொடர்பு உண்டா?

நாம் வழிபடும் சிறுதெய்வங்கள் யார்… நம்மிடையே வாழ்ந்த சாதாரண மனிதர்கள்தாம். ஏதோ ஒருவகையில் தான் வாழ்ந்த சமூகத்தால் அநீதி இழைக்கப்பட்டவர்கள். அவர்களின் ரெளத்திரத்திற்கு அஞ்சி அவர்களையே வழிபாட்டுக்குரிய காவல் தெய்வங்களாக மாற்றிக்கொண்டது நம் மரபு, வரலாறு. இன்றும் தமிழக கிராமங்களில் வழிபாட்டுத் தலங்களாக இருப்பவை கழுமரங்களும், நடுகற்களும்தான். நாம் தொழும் அம்மன்கள் நம்மிடையே வாழ்ந்தவர்கள்; நமது கதைகளை நமக்குத் திரும்பத் திரும்பச் சொல்லி நினைவுப்படுத்திக்கொண்டிருக்கும் அடங்காத ஆன்மாக்கள். அநீதி இழைக்கப்பட்ட ஒரு வண்ணாத்திப் பெண்ணின் ஆன்மா சொல்லும் கதையாகப் படைக்கப்பட்டிருக்கிறது ‘மாடத்தி.’

மதராஸ் மாகாணத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் புதிர வண்ணார் என்னும் கண்ணால் பார்க்கக் தகாதவர்கள் என்று ஒரு சாதியினர் இருக்கின்றனர். பகல் பொழுதில் அவர்கள் வெளியே நடமாட அனுமதிக்கப்படுவதில்லை. ஏனென்றால், அவர்களைக் கண்டாலே தீட்டாகி விடுமாம்.

அண்ணல் அம்பேத்கர்

உருவாக்கத்துக்காக நீங்கள் சென்ற களங்கள், சந்தித்த மனிதர்கள் பற்றி?

மாடத்தி

அண்ணல் அம்பேத்கர் புதிரை வண்ணார்களைப் பற்றி பேசியிருக்கிறார்.

மதராஸ் மாகாணத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் புதிர வண்ணார் என்னும் கண்ணால் பார்க்கக் தகாதவர்கள் என்று ஒரு சாதியினர் இருக்கின்றனர். பகல் பொழுதில் அவர்கள் வெளியே நடமாட அனுமதிக்கப்படுவதில்லை. ஏனென்றால், அவர்களைக் கண்டாலே தீட்டாகி விடுமாம். இந்தப் பாவப்பட்ட மக்கள் வளைக்கரடி, கழுதைப்புலி, ஆட்வார்க் என்னும் ஆப்பிரிக்கப் பன்றி ஆகிய விலங்குளைப் போன்று இருட்டிய பிறகே தங்களது வசிப்பிடங்களிலிருந்து வெளியே வரவும் இரவுநேர வாழ்க்கை வாழவும் நிர்பந்தித்திக்கப்பட்டிருக்கிறார்கள்.

எப்படிப்பட்ட இன்னல் அவர்களுடையது, வாழ்வில் எந்தளவுக்கு அவர்கள் கொடுமையை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்! நிச்சயமாக, வரலாற்றில் எந்த நாகரிகமும் இதைவிட மேலான குரூரத்தைப் புரிந்ததாகக் குற்றவுணர்வு கொள்ள முடியாது.

– அம்பேத்கர்.

(நூல் தொகுப்பு 5; அத்தியாயம் 15: நாகரிகம் அல்லது இழிச்செயல்; பக்கம் 139-140)

புதிரை வண்ணார் சமூகத்தின் முதல் தலைமுறை பட்டதாரியாக அரசுப் பணியிலிருந்து தற்போது தாசில்தாராக ஓய்வு பெற்றிருக்கும் மூர்த்தி அய்யாதான் ‘மாடத்தி’யின் ஆதாரம்.

எழுத்தாளர் இமையத்தின் கோவேறு கழுதைகள், பத்திரிகையாளர் ஜெயராணியின் தலித் முரசு கட்டுரை, ஆ.சிவசுப்பிரமணியன், சி, லக்ஷ்மணன், கோ.ரகுபதி மற்றும் தனஞ்செயனின் நூல்கள், கவிஞர் என்.டி.ராஜ்குமாரின் ராப்பாடிகள் பற்றிய கட்டுரை, ஓவியர் சந்துருவின் ஏற்பாட்டின் பேரில் நான் சந்தித்த புதிரை வண்ணார் சமூக மனிதர்கள் என்று மாடத்திக்கான ஆய்வும் வாசிப்பும் விரிவானது. புதிரை வண்ணார் சமூகத்தின் முதல் தலைமுறை பட்டதாரியாக அரசுப் பணியிலிருந்து தற்போது தாசில்தாராக ஓய்வு பெற்றிருக்கும் மூர்த்தி அய்யாதான் மாடத்தியின் ஆதாரம் எனச் சொல்வேன்.

அவருடன் ஒருநூறு கிராமங்கள் சுற்றி, சமூகத்தின் வெவ்வேறு தலைமுறை மக்களைச் சந்தித்துபேசி, பேட்டிகள் எடுத்த அனுபவம்தான் ‘மாடத்தி’க்கு வித்திட்டது. படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அவ்வனுபவங்களிலிருந்தே படைக்கப்பட்டவை. கவிஞர் யவனிகா ஶ்ரீராமுடன் முதல் இரண்டு பிரதிகள் எழுதி முடித்த நிலையில் அதை முழுமையான திரைக்கதையாக மாற்றியவர் வடகரை ரஃபீக் இஸ்மாயில். திரைக்கதை பிரதியை, மூர்த்தி ஐயா வழிநடத்த பாபநாசம், அணவன் குடியிருப்பு, விக்கிரமசிங்கபுரம் மக்களுடனும், முக்கியக் கதாபாத்திரங்களுக்கான நடிகர்களுடனும் பல பட்டறைகள் நடத்தி செம்மைப்படுத்தினோம். வசனப் பயிற்சி, ஒத்திகை படப்பிடிப்பு, சமூகத்துடன் வாழ்ந்து அவர்களின் அன்றாடங்களை படக்குழு கவனித்து பயிலுதல் என்று மாடத்தியின் உருவாக்கம் ஒரு மானுடவியல் பாடமாக, முழுமையான மக்கள் பங்கேற்பு சினிமாவாக அமைந்தது.

பார்க்கத் தகாதவர்கள் (Unseeable) இன்றும், இந்த மண்ணில் இருக்கிறார்களா?

இன்னும் சாதி இருக்கிறதா என்ன என்று கேட்பது போல இருக்கிறது உங்கள் கேள்வி. சுமார் ஒரு லட்சம் புதிரை வண்ணார் குடும்பங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாதியின் அசுரப்பிடிக்குள், தலித்துகளுக்கும் தலித்துகளாக, தீட்டுத்துணிகளையும் மரண வீட்டுத் துணிகளையும் சலவை செய்து கொண்டும், பாடைகள் கட்டிக் கொண்டும், தலைக்கரிசியை வாங்கிக் கொண்டும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்பதுதான் வெட்கக்கேடான உண்மை.