
அந்தரக்கன்னி
அந்தரக்கன்னி மற்ற கவிகளின் கவிதைகளிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்வது போலவே லீனா மணிமேகலையின் மற்ற தொகுப்புகளிலிருந்தே கூடத் தன்னை வேறுபடுத்திக் கொள்கிறது. இதற்கு முன்வந்த பரத்தையருள் ராணி தொகுப்பு ஆண் தன்னிலையின் வன்முறைகளுக்கெதிரான உக்கிரமான குரலாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதுவொரு போராளி களத்தில் நின்று உரக்கச் சத்தமிட்டுக் கொண்டு வாள் சுழற்றுவது போன்ற உணர்வை ஏற்படுத்தும் தொகுப்பு. ஆனால் அந்தரக் கன்னி உக்கிரம் கூடிய அதே போராளி வீட்டுக்கு வந்து தன் காதல் இணையோடு கலந்திருக்கும் தருணத்தைப் பதிவு செய்கிறது. இதில் குறிப்பிட வேண்டியது காதல் இணையில் எதுவும் களிறில்லை; இரண்டும் பிணைகள்தான். அந்தரக்கன்னி கவிதைகள் யதார்த்தம் என்னும் கலாச்சார ஒழுங்கு அடிப்படையிலான புனைவுகள் பெண் தன்னிலைக்கெதிராக நிகழ்த்தும் தாக்குதல்கள், வரலாற்றுப் புனைவுகளின் மூலம் பெண் தன்னிலை ஆட்கொள்ளப்படுதல் ஆகியவற்றிலிருந்து தனது கலகத்திற்கான தர்க்கக் காரணிகளைக் கைக்கொள்கின்றன. கலாச்சார ஒழுங்குகளும் வரலாற்று ஒழுங்குகளும் மற்றமைகளைக் கழுவேற்றியபின் கழுவில் வழிந்த குருதிக் குழம்பென உறைந்திருக்கின்றன இக்கவிதைகள்.அந்தரக் கன்னியின் கவிதைகள் ஏழு திணைகளுக்கு வெளியே தனது இருப்பை உறுதி செய்யும் கவிதைகள்; அவை எட்டாவது அகத்திணைக் கவிதைகள். அவற்றின் திணையை இனியும் பூக்களின் பெயரால் அழைப்பது சரியல்ல. வேண்டுமானால் யோனியின் பெயரால் அழைக்கலாம்; அதுவும்கூட அந்தத் திணை மாந்தரின் ஒப்புதல் இருந்தால்தான்.
– கவிஞர் மனோ மோகன்
(மே 2013)
கனவுப்பட்டறை பதிப்பகம்
விலை 100